திங்கள், செப்டம்பர் 20, 2010

தாக்குதல்களையும் நமது வளர்ச்சிக்கான வாய்ப்புக்கள் ஆக்குவோம்!


இந்து முன்னணியின் நிறுவனர் ராம.கோபாலன் நேர்காணல்:

கோவையில் இந்த ஆண்டு பல இடங்களில் விநாயகர் சிலை வைக்க முஸ்லிம் இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனவே?

முஸ்லிம் இயக்கங்கள் இந்த முறை திட்டமிட்ட ரீதியில் பல இடங்களில் பிரச்னை செய்தது உண்மை தான். தற்போதுள்ள தி.மு.க அரசில் தங்கள் கரம் ஓங்கியுள்ளதைக் காட்ட ஒவ்வொரு முஸ்லிம் இயக்கமும் துடிப்பதன் வெளிப்பாடு தான் இது. தாங்கள் நினைத்ததைச் செய்ய முடியும் என்று அவர்கள் நிரூபிக்க முயன்றிருக்கிறார்கள். அவர்களுக்கு சரியான பதிலடியை இந்து மக்கள் கொடுத்திருக்கிறார்கள்.

காவல்துறையும் கூட பல இடங்களில், ஏற்கனவே விநாயகர் சிலை வைத்த இடங்களிலும் அனுமதி மறுத்துள்ளதே?

அரசு சாதகமாக இல்லாதபோது காவல்துறையால் சுதந்திரமாக செயல்பட முடியாது. இந்நிலையிலும் கோவையில் பல இடங்களில் காவல்துறை நேர்மையாகவே செயல்பட்டுள்ளது என்று கருதுகிறேன். என்னிடம் தனிப்பட்ட முறையில் பேசிய பல அதிகாரிகள், அரசின் பாரபட்சமான அணுகுமுறை குறித்து வருத்தம் தி.

செல்வபுரம்- கல்லாமேடு பகுதியில் முஸ்லிம்களின் எதிர்ப்பையும் மீறி அங்கு விநாயகர் சிலை வைத்த அப்பகுதி ஏழை மக்கள், போலீசாரின் கைது நடவடிக்கையையும் துணிந்து சந்தித்தார்கள். குனியமுத்தூர், மதுக்கரை பகுதிகளிலும், நிலைமை பாதகமாக இருந்தபோதும் ரத்தம் சிந்தி நமது சகோதரர்கள் உரிமையை நிலைநாட்டி இருக்கிறார்கள். அவர்களைப் பாராட்டுகிறேன். செல்வபுரத்தில் காவல்துறையை வீரமாக எதிர்கொண்ட தாய்மார்கள் இருக்கும் திசைக்கு எனது வணக்கங்கள்...

ஒவ்வோர் ஆண்டும் இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றனவே. இதைத் தவிர்க்க வழி என்ன?

இப்படி நடக்கும் என்பது நாம் எதிர்பார்த்தது தான். இந்து சமுதாயம் முழுவதும் விழிப்புணர்வு அடையாதவரை, இத்தகைய பாதிப்புக்களை சந்தித்துத் தான் ஆகவேண்டும். இதன் மூலமாகவே நமது மக்களை தயார் செய்ய வேண்டும். மக்களே எதிர்விளைவு காட்டத் தயாராகும்போது முஸ்லிம்கள் நிதர்சனத்தை உணர்வர். அது மட்டுமல்ல, காவல்துறையும் அடக்கி வாசிக்கும்.

இந்த நாடு இந்து மக்களின் சொந்த நாடு. இங்கு வழிபாட்டு உரிமைக்கு யாரிடமும் நாம் யாசகம் கேட்க வேண்டிய அவசியமில்லை. நமது வழியில் தொடர்ந்து, சோதனைகளைத் தாண்டி பயணிப்போம்.

தற்போது 1998 குண்டுவெடிப்புக்கு முந்தய சூழலுக்கு கோவை சென்று கொண்டிருப்பதாக உணர்கிறேன். எனவே நாம், அனைத்து ஜாதி சங்கங்களையும் இந்து என்ற அடிப்படையில் ஒருங்கிணைக்க வேண்டும்.
ஒவ்வொருவரும் தமது பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய காலகட்டம் இது. தங்கள் பகுதியைக் காக்க அவரவர் பகுதிகளில் விழிப்புணர்வுக் குழுக்கள் அமைப்பது மட்டுமே கோவையை பயங்கரவாதிகளிடமிருந்து காக்கும். இதற்கான பணிகள் ஏற்கனவே பல இடங்களில் துவங்கிவிட்டன.

சரவணம்பட்டி காவல்நிலைய ஆய்வாளர் சிவகுமார் அத்துமீறி செயல்பட்டுள்ளது குறித்து...

இதுகுறித்து கோவையில் நடந்த பொதுக்கூட்டத்திலேயே பேசினேன். அவருக்கு வீரசக்ரா போன்ற ஏதேனும் விருதுகளை தமிழக அரசு தரலாம் என்று அப்போது பரிந்துரைத்தேன். சமூக விரோதிகளைக் கட்டுபடுத்த கையாலாகாத இவர், அப்பாவி இந்து முன்னணித் தொண்டர்களை அதிகாரபலத்துடன் கடுமையாகத் தாக்கி இருக்கிறார். அதற்கான பலனை அவருக்கு இறைவன் நிச்சயமாகத் தருவார். அந்த வழக்கை இந்து முன்னணி சட்டரீதியாக சந்திக்கும்.

இதே போன்ற சூழல் கன்னியாகுமரி மாவட்டத்திலும் 30 ஆண்டுகளுக்கு முன் நிலவியது. அதனால் தான் அங்கு இந்து விழிப்புணர்வு ஏற்பட்டது. அமரர் தாணுலிங்க நாடார் இந்து முன்னணியை ஆரம்பிக்க அத்தகைய சூழலே காரணமானது. ஆகவே கோவையில் நிகழ்ந்துள்ள அத்துமீறல்களை, நான் நமது பலவீனமாகக் கருதவில்லை.

மதுக்கரையில் விநாயகர் சிலை வைக்க உதவிய காரணத்திற்காக ஹிந்து வியாபாரி ஆறுமுகம் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளது குறித்து...

அவரை இந்து முன்னணி நிர்வாகிகள் பாதுகாப்பார்கள். தற்போது கொலைவெறித் தாக்குதலில் தப்பி சிகிச்சை பெற்றுவரும் அவருக்கு அரசு இலவச உயர் சிகிச்சை அளிக்க வேண்டும். சூறையாடப்பட்ட அவரது கடைக்கு நஷ்டஈடாக ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன். ஆறுமுகத்தையும் அவரது குடும்பத்தையும் இன்றைய துயரகரமான நிலையில் காப்பது அனைத்து இந்துக்களின் கடமை.

குனியமுத்தூரில் காவல் உதவி ஆய்வாளர் காசி பாண்டியன் முஸ்லிம் இயக்கங்களால் தாக்கப்பட்டதை காவல்துறையினர் மறைக்கின்றனரே?

இதுவும் புதிதல்ல. 1997-லேயே கோவை இத்தகைய சம்பவங்களைப் பார்த்துவிட்டது. போக்குவரத்துக் காவலர் செல்வராஜ் படுகொலை செய்யப்படுவதற்கு முன்னரே, கோவை பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறிவிட்டதை அவர்கள் உணர்ந்தே இருந்தார்கள். ஆனால் அப்போதும் பூசி மெழுகினார்கள். அரசு எப்படியோ, அதன்படி அவர்கள் செயல்படுகிறார்கள். மேலிடத்திலும் ஆதரவு இல்லாத நிலையில், அவர்கள் எப்படி,, தங்களது சக அதிகாரி முஸ்லிம்களால் தாக்கப்பட்டதை ஒப்புக் கொள்வார்கள்?

கோவையில் குண்டுவெடிப்பு நடப்பதற்கு முன் இங்கு பணியில் இருந்த தென் தமிழகத்தைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் ஓய்வு பெற்ற பிறகு சென்னையில் குடியேறினார். அப்போது, தனது சொந்த ஊரிலிருந்து ஆட்களை அழைத்துவந்து தனது பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்து கொண்டார். காவல் உயரதிகாரியாக இருந்த ஒருவருக்கே இந்நிலை என்றால், பணியில் இருக்கும் சாதாரணக் காவலரின் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இஸ்லாமியர்களின் ஒட்டுமொத்த வாக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக 'ஓட்டுவங்கி' அரசியல் நடத்தும் கோழைத்தனமான, சுயநல தி.மு.க. அரசு தான் காவல்துறையின் செயலின்மைக்கு காரணம். அதையும் மீறி கோவையில் காவல்துறை செயல்படுகிறது என்பதே எனது நம்பிக்கை.

ஹிந்து இயக்கங்கள் பல பெயர்களில் பிரிந்து செயல்படுவது ஒற்றுமையை பாதிக்கிறதே?

இதை தவிர்க்க இயலாது. கட்டுக்கோப்பான இஸ்லாமிய சமுதாயத்தில் உள்ள இயக்கங்களிலேயே பிளவும் போட்டியும் காணப்படுகிறது. எந்த அடிப்படைக் கட்டுமானமும் இல்லாத ஹிந்துக்கள் - நெல்லிக்காய் மூட்டைகளாக கருதப்பட்டவர்கள்- ஒன்றுபட்டதே இறைவன் திருவருள் தான். எனினும் இயக்கக் கட்டுப்பாடுகளை மீறும்போது அதை அனுமதிப்பது இயக்கத்தைக் குலைத்துவிடும். எனவே தான் சுயநலவாதிகளால் பிரச்னை ஏற்படும்போது அவர்கள் வெளியேற்றப் படுகிறார்கள். ஒத்த கருத்து இல்லாதவர்கள் விலகுவதும் நல்லதே.

அதே சமயம், பல இயக்கங்களாக இருந்தாலும், அனைவரும் ஹிந்து உணர்வுடன், விநாயகர் மீதான பக்தியுடன் செயல்படுவது மகிழ்ச்சிக்குரியது. இந்து முன்னணி மட்டும் விநாயகர் சிலைகள் வைத்தால் இவ்வளவு சிலைகளை வைத்திருக்க முடியாது. இயக்கங்கள் பல இருப்பதால், விநாயகர் சிலைகளின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்துள்ளது. இது ஆக்கப்பூர்வமானது தானே?

எனினும், அனைத்து ஹிந்து இயக்கங்களையும் ஒருங்கிணைக்க வேண்டியது அவசியம் அல்லவா?

உண்மைதான். அதற்கான காலநேரம் வரும்போது அதுவும் சாத்தியம் ஆகும். அதே சமயம், அதிருப்தியாளர்களை ஊக்குவிப்பதாக நமது நடவடிக்கைகள் அமைந்துவிடக் கூடாது. தற்போதுள்ள நிலையில் அவரவர் தங்கள் வழியில் பயணிப்பதே பொருத்தமாக இருக்கும்.

மக்கள் ஆதரவு விநாயகருக்கு இருப்பதால் தான், அனைவரும் விநாயகர் சிலைகளுடன் ஊர்வலம் வருகிறார்கள். இதைப் பயன்படுத்தி சிலர் தங்களை வளர்த்துக் கொளவதையும் காண்கிறோம். எனவே இந்த விஷயத்தை மிகவும் நிதானமாகவே அணுக வேண்டும். எதிர்காலத்தில் அனைத்து ஹிந்து இயக்கங்களும் ஓரணியில் திரளும் காலம் கண்டிப்பாக வரும்.

சென்ற ஆண்டை விட அடக்குமுறை அதிகமாக இருந்தும், கோவை மாநகரில் மட்டுமல்லாது மாவட்டம் முழுவதுமே விநாயகர் சிலைகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது குறித்து...

எல்லாம் அந்த விநாயகப் பெருமானின் அருளே. இந்த ஆண்டு கோவையில் நடந்த விசர்ஜன ஊர்வலத்தில் எட்டாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டதாக உளவுத்துறையினர் கூறுகின்றனர். சென்ற ஆண்டை விட இது இருமடங்கு அதிகம். குறிப்பாக பெண்கள், இளைஞர்களின் பங்கேற்பு மிகுந்த உற்சாகம் அளிப்பதாக உள்ளது. இதுவே நமக்கு மிகுந்த செயலூக்கத்தையும் தன்னம்பிக்கையையும் அளிக்கிறது. நமக்கு வரும் சவால்களையும் சாதகமாக்க முடியும் என்பதற்கான நிரூபணம் இது.

தடைகளைத் தாண்டி ஓடும் நதி போல, நமது பணி நாட்டுநலனை மட்டுமே கருத்தில் கொண்டு தொடர வேண்டும். தற்போதைய எதிர்த்தரப்பினரின் தாக்குதல்களையும் நமது வளர்ச்சிக்கான வாய்ப்புக்கள் ஆக்குவோம். இன்று எதிரிகளாக இருப்பவர்களும், நம்மை கிள்ளுக்கீரைகளாக நினைப்போரும் மனம் திருந்தும் காலம் வரும். கோவை ஹிந்து மக்கள் நிரூபித்துள்ள உண்மை இதுவே.
--------------------------------------------------------------------
காண்க: தமிழ்
நன்றி: விஜயபாரதம் (08.10.2010)
உடன் படிக்க வேண்டியது: எல்லாப் புகழும் விநாயகனுக்கே!

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக