திங்கள், ஜனவரி 31, 2011

கருத்துக் கணிப்புகளும் கருத்துத் திணிப்புகளும்- 2


தேர்தல் கருத்துக் கணிப்புகளின் பின்னணியிலுள்ள அம்சங்களில் சிலவற்றை முந்தைய பகுதியில் கண்டோம். இதர அம்சங்கள் இப்பகுதியில்...

எதிர்பார்ப்புடன் இயங்கும் கணிப்புகள்:

எந்த ஒரு மனிதருக்கும் தனிப்பட்ட எதிர்பார்ப்புகள் இருக்கும். நோக்கங்கள் கணிப்பை நூறு சதவிகிதம் பாதிக்கும் எனில், விருப்பங்கள் கணிப்பை ஐம்பது சதவிகிதம் பாதிக்கின்றன. அதேபோல, எதிர்பார்ப்புகள் கணிப்பை இருபத்தைந்து சதவிகிதம் பாதிக்கும். பெரும்பாலான தமிழக பத்திரிகையாளர்கள் தி.மு.க. தலைவரை கருணாநிதி என்று குறிப்பிடுவதில்லை; 'கலைஞர்' என்றே குறிப்பிடுவர். பத்திரிகையில் பட்டப் பெயர்களுக்கு இடமில்லை என்றபோதிலும், தமிழக பத்திரிகையாளர்கள் தொடர்ந்து இந்தத் தவறைச் செய்து வருகின்றனர். இதற்குக் காரணம் அவர்களது கலைஞர் மீதான உளச்சார்பு. இத்தகைய உளச்சார்பு இருப்பவரால், அ.தி.மு.க.வுக்கு ஆதரவான அலையை ஆமோதிக்க முடியுமா?

இன்று நாடு முழுவதும் வெட்டவெளிச்சமாகிவிட்ட ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக தமிழக ஊடகங்களில் வெளியான செய்திகளைப் பார்த்தாலே பத்திரிகையாளர்களின் ஒருசார்பு தெள்ளெனப் புரியும். உயிர்மை என்ற மாதப் பத்திரிகை, எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனால் நடத்தப்படுகிறது. அதன் டிசம்பர் மாத தலையங்கம் 'குற்றத்தின் எல்லை' என்ற தலைப்பில், ஸ்பெக்ட்ரம் ஊழலைக் கண்டித்துள்ளது. ஆனால், அதில் கருணாநிதி குறித்து ஒரு வரி வருகிறது. 'ஸ்பெக்ட்ரம் விவகாரம் முடிந்துவிட்டது' என்று டில்லி பத்திரிகையாளர்களிடம் (2009) கருணாநிதி கூறியது அவரது கள்ளமற்ற குழந்தை உள்ளத்தையே காட்டியது என்று குறிப்பிடுகிறார் மனுஷ்யபுத்திரன்.
எது கள்ளம்? ஸ்பெக்ட்ரம் ஊழலில் பல்லாயிரம் கோடி மோசடி செய்த ராசாவை கடைசி வரை காப்பாற்றிய கருணாநிதியின் உள்ளமா? அது தெரிந்தும் மு.க.வை குழந்தை உள்ளமாகச் சித்தரிக்கும் மனுஷ்யபுத்திரனின் உள்ளமா?

மனுஷ்யபுத்திரனுக்கு எதிர்பார்ப்புகள் இருக்கலாம். அவரது உயிர்மை பதிப்பகம் மு.க.வால் லாபம் பெறலாம். இதுபோன்ற அணுகுமுறை பெரும்பாலான ஊடக நண்பர்களிடம் காணப்படுகிறது. எதிர்பார்ப்புகளே, முன்கூட்டிய தீர்மானங்களுக்கு (PRE JUDJE / PRE JUDICE) அவர்களை அழைத்துச் செல்கின்றன. இத்தகையவர்கள், தங்களுக்கு சாதகமானவர்கள் வெல்ல முடியும் (CAN WIN) என்று நம்புவார்கள். தங்களுக்குப் பிடிக்காதவர்களை தோற்கடிக்க தங்களால் முடியும் (CAN DEFEAT) என்பதும் இவர்களது நம்பிக்கை. இவர்களது கருத்துக் கணிப்புகளில் நடுநிலைமை தவறாதவர்கள் போல புள்ளிவிபரங்கள் அலசி ஆராயப்படும். இறுதியில் இவர்களது இலக்கை, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல நாசூக்காக அடைந்து விடுவார்கள்.

பெரும்பாலான ஆங்கிலச் செய்தி சானல்கள் (என்.டி.டி.வி, டைம்ஸ் நியூஸ், சி.என்.என்) இவ்வாறுதான் இயங்குகின்றன. சில சமயங்களில் இவர்களது கணிப்புகள் 60 சதவிகிதம் பலிக்கின்றன. 1998 ல் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தபோது அடல் பிகாரி வாஜ்பாய்க்கு ஆதரவாக கார்கில் அலை வீசியது. ஆயினும், அதை மறைக்கும்விதமாக பலவாறான தந்திரங்களை ஆங்கில செய்தி சானல்கள் கையாண்டன. சவப்பெட்டி ஊழல் குறித்து ஓயாமல் சேதி வெளியிட்டு எஜமான சேவகம் செய்த சானல் ஒன்று, காங்கிரஸ் வெல்வது உறுதி என்றே முழங்கியது. ஆனால், அந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்று, வாஜ்பாய் மீண்டும் பிரதமாரானார்.

அதே ஊடகங்கள் 2004 ல் மீண்டும் தங்கள் கைவரிசையைக் காட்டின. காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற உள்ளக் கிடக்கையை வெளிப்படையாகவே அறிவித்த கணிப்பாளர்களும் இருந்தனர். குஜராத் கலவரம் அவர்களது பாடுபொருளாயிற்று. ஆளும் கூட்டணியைச் சிதைப்பதிலும் ஊடகங்களின் பங்களிப்பு (உதாரணம்: ஒரிசா) அப்பட்டமாகத் தெரிந்தது. வாஜ்பாய் அரசின் 'இந்தியா ஒளிர்கிறது' பிரசாரம் குறித்து நையாண்டியும் செய்யப்பட்டது. இறுதியில் அவர்கள் எதிர்பார்த்தது போலவே தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு வீழ்ந்தது.

2009 நாடாளுமன்றத் தேர்தலில் ஆங்கில ஊடக அறிஞர்கள் எப்படி செயல்பட்டிருப்பார்கள் என்பதற்கு, தேர்தல் முடிவுக்குப் பிந்தைய நீரா ராடியா பேச்சின் ஒலிப்பதிவுகளே சாட்சி. என்.டி.டி.வி. யின் பர்கா தத்தும், ஹிந்துஸ்தான் டைம்ஸின் வீர் சாங்க்வியும் அமைச்சரவை உருவாக்கத்தில் காட்டிய முனைப்பு அவர்களது சாயத்தை அம்பலப்படுத்தியுள்ளது. இத்தகையவர்களின் கருத்துக் கணிப்புகள் 2009 தேர்தலில் எப்படி இருந்திருக்கும்? அவை மக்களிடம் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தின? இவை எல்லாம் ஆராய வேண்டியவை. அதற்கு நமது மக்களுக்கு நேரமுமில்லை.

உண்மையில் நோக்கம், விருப்பம் ஆகியவற்றின் அடிப்படையில் இயங்கும் கணிப்புகளை விட, உண்மைக்கு அருகில் இருப்பது போலத் தோன்றும், எதிர்பார்ப்பின் அடிப்படையில் இயங்கும் கணிப்புகள் ஆபத்தானவை. இவையே மக்களை திசை திருப்புவதில் வெற்றி காண்கின்றன.

மதிப்பீட்டுடன் இயங்கும் கணிப்புகள்:

இப்போதுதான் உண்மையான கருத்துக் கணிப்பின் அருகில் எட்டிப் பார்க்கிறோம். உண்மையில் கணிப்பு என்பதே ஒரு யூகம் (ASSUMPTION) தான். ஒரு நாணயத்தைச் சுண்டினால் தலை விழுமா, பூ விழுமா என்று கேட்டால் இரண்டும் சாத்தியமே என்பதுதான் பதிலாகக் கிடைக்கும். பத்து முறை சுண்டியதில் ஆறு முறை பூவும் நான்கு முறை தலையும் விழுந்ததெனில், அதன் நிகழ்தகவு 6:4. கருத்துக் கணிப்புகளும் இத்தகைய புள்ளிவிபரங்களின் அடிப்படையில் மதிப்பிடப்படுபவையே. அதனால் தான் கணிப்புகள் பெரும்பாலும் நிச்சயமற்ற எதிர்கால வினைச் சொற்களால் (MAY WIN / MAY DEFEAT ) குறிப்பிடப்படுகின்றன.

சென்ற தேர்தலில் மக்களின் மனநிலை எப்படி இருந்தது? தற்போதைய நிலையில் மக்கள் மனநிலை எப்படி இருக்கும்? என்ற ஒப்பீட்டில், கிடைத்துள்ள தரவுகளின் ஆதாரம் மீது மதிப்பீடுகளைக் கட்டியமைத்தால், இறுதியில் ஒரு தீர்மானத்திற்கு வர முடியும். இதற்கு திரட்டப்படும் புள்ளிவிபரங்களின் (DATA) துல்லியமும், ஆராய்ச்சி நெறியும் (RESEARCH METHODODLOGY) நடுநிலையும் (IMPARTIALITY) அத்தியாவசியம். ஆனால், நமது ஊடகங்களிடம் ஒன்றிருந்தால் இன்னொன்றில்லை என்ற அளவிலேயே மேற்கூறிய அம்சங்கள் காணக் கிடைக்கின்றன.

60 கோடி வாக்காளர்களைக் கொண்ட நமது நாட்டில், மக்களின் மனநிலையை வெறும் ஆயிரம் தரவுகளின் ஆதாரத்தில் கணிப்பது துல்லியமாக இருக்க முடியாது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற வகையிலேயே நமது கணிப்புகள் இதுகாறும் இருந்துள்ளன. ஆனால், பிராந்திய வேறுபாடுகளும், அரசியல் வேறுபாடுகளும் வாழ்க்கைச் சூழலில் உள்ள பெரும் மாற்றங்களும் நாடு முழுவதும் ஒரே சீராக இல்லாதபோது, இந்த அணுகுமுறை உதவாது.

உதாரணமாக, கடந்த தேர்தலில் காங்கிரசுக்கு எதிரான எண்ணச்சூழலை நாடு முழுவதும் கண்டபோதும், தமிழகம், ஆந்திரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், அசாம், டில்லி ஆகிய மாநிலங்களில் நிலவிய பிரத்யேக அரசியல் சூழல்களால் தேர்தல் முடிவுகள் மாறிவிட்டதைக் கண்டோம். காங்கிரசுக்கு எதிரான அலையை மக்களிடம் கொண்டுசெல்ல ஆங்கில ஊடகங்கள் தவறியபோதிலும், காங்கிரஸ் வெல்வதில் அவற்றுக்கு சந்தேகங்கள் இருந்ததை கருத்துக் கணிப்புகள் பூடகமாகக் காட்டின. ஆயினும், தேர்தல் முடிவுகள் முற்றிலும் மாறுபட்டதாக வெளிவந்து கணிப்பாளர்களின் இயலாமையை வெளிப்படுத்தின. குஜராத்தில் பா.ஜ.க. வீழ்ச்சி அடையுமென்ற கணிப்பு இம்முறையும் பொய்த்தது.

கணிப்புகள் விஞ்ஞானபூர்வமாக இருப்பினும், அடித்தளத்திருந்து பெறப்படும் தரவுகள் உண்மையானவையாக இல்லாவிட்டால், கணிப்புகள் கற்பனைக் கோட்டையாகவே மாறிவிடும். தரவுகள் சரியாக இருப்பினும், உள்நோக்கத்துடன் அமர்ந்துள்ள கணிப்பாளரிடம் நடுநிலையான ஆய்வு நெறிமுறை இல்லாதபோது, முடிவுகளும் குழப்பத்தையே தோற்றுவிக்கும்.

சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் கணிப்பாளர்களின் முடிவுகள் சில இடங்களில் வென்றன; சில இடங்களில் தோற்றன. ஆக, தங்கள் கணிப்பின் இயல்பை ஐம்பது சதவிகித வெற்றி என்று அவர்களால் கொண்டாட முடியும். துரதிருஷ்டம் என்னவென்றால், அரைக் கிணறு தாண்டுவதால் பயனில்லாதது போலவே, ஐம்பது சதவிகித துல்லியமான (?) கணிப்புகளாலும் பயனில்லை.

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு:

இதுவரையிலும், நான்கு மனநிலைகளின் அடிப்படையில் இரு சாத்தியங்களின் ஊடாக எட்டு விதமான கணிப்புகள் எவ்வாறு அமைகின்றன என்று கண்டோம். புள்ளியியல் ஆதாரத்தில் அமையும் கணிப்புகளில் மனோவியல் எவ்வாறெல்லாம் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பதையும் கண்டோம். இப்போது தேர்தல் கருத்துக் கணிப்புகள் தேவையா என்ற கேள்விக்கு வருவோம்.

நமது நாடு ஜனநாயக நாடு. இங்கு மக்களின் கருத்தை கட்டியமைப்பதிலும், ஒருங்கிணைப்பதிலும் பிரசாரம் பெரும் பங்கு வகிக்கிறது. இன்னும் நமது ஆட்சி அமைப்பின் நிலையையே அறியாத கோடிக் கணக்கான மக்கள் வாழும் நாடு நமது நாடு. நாட்டு விடுதலைக்கு பாடுபட்ட காந்தியின் காங்கிரசுக்கும், குவத்ரோசியைத் தப்பவிட்ட சோனியா காந்தியின் காங்கிரசுக்கும் வேறுபாடு தெரியாதவர்கள் இன்னும் இருக்கிறார்கள். சாயும் பக்கமே சாயும் மனநிலையும் பெரும்பாலோரிடம் காணப்படுகிறது. அதாவது தான் அளிக்கும் வாக்கு வீணாகிவிடக் கூடாதாம்! வெற்றியாளரையே பூஜிக்கும் மரபும் இங்குண்டு. இப்படிப்பட்ட நிலையில், நமது கருத்துக் கணிப்பு அறிவுஜீவிகளும் தங்கள் பங்கிற்கு குட்டையைக் குழப்புகின்றனர்.
அப்படியானால், கருத்துக் கணிப்புக்கு தடை விதிப்பதுதானே நியாயம்?
இக்கேள்வி நமது கருத்து சுதந்திரத்தின் அடிப்படை அறியாதவர்கள் எழுப்புவது. கண்ணில் தூசி விழுந்துவிட்டதற்காக கண்ணைத் தோண்டி எறிய வேண்டியதில்லை; மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்தக் கூடாது. இதுவே கருத்துக் கணிப்பு எதிர்ப்பாளர்களுக்கான பதிலாக இருக்க முடியும்.

நமது அதிகார வர்க்கம் என்றுமே ஆளும்கட்சிக்கு சாதகமான கருத்தையே முன்வைக்கும். உண்மையில், ஆள்பவர்களால் ரகசியமாக முன்மொழியப்பட்டு வழிமொழியப்படுபவையே அதிகாரவர்க்கத்தின் கருத்துக்கள். நமது தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் தேர்தல் கணிப்புகளை தடை செய்ய வேண்டும் என்று கூறி இருப்பது, அவரது கருத்து என்று யாரேனும் நினைத்தால் அவருக்கு காங்கிரஸ் கலாசாரம் தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். தொடர்ச்சியான பல லட்சம் கோடி ஊழல்களால் முடைநாற்றமெடுக்கும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிரான அலைகள் நாடெங்கும் நீறுபூத்த நெருப்பாக எழுந்துள்ள நிலையில், மக்களின் கருத்துகளை ஒருங்கிணைப்பதை கண்டிப்பாக காங்கிரஸ் விரும்பாது. எனவே தான், காங்கிரஸ் சார்பாக குரேஷி முழங்கி இருக்கிறார்.

இந்த ஆலோசனையை முற்றிலும் நிராகரிக்க வேண்டும். ஊடகங்களின் ஒருபக்கச்சார்பு வெளிப்பட்டுள்ள நிலையில் கணிப்புகளை அவர்கள் மடை மாற்றினால் நல்லதுதான். அவர்கள் தங்களது தலையிலேயே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ளக் கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பை குரேஷி ஏன் தடுக்க வேண்டும்? தற்போதைய தேர்தல் ஆணையர் குரேஷி முந்தைய ஆணையர் நவீன் சாவ்லா போல நடுநிலை தவறக் கூடாது.

நமது ஜனநாயகம் பல பலவீனங்களுடன் இயங்குவது தான். அதற்காக ஒட்டுமொத்த தேர்தல் அமைப்பே தவறு என்று மறுதலிக்க முடியாது. உலக அளவில் நாம் மட்டுமே வளர்ந்துவரும் ஒரே ஜனநாயக நாடு. தவறு செய்வதன்மூலமாக அவற்றைத் திருத்திக் கொண்டு முன்னேறிவரும் நாடும் நமதே.

நமது மக்கள் விவரம் குறைந்தவர்கள் தான். அதற்காக அவர்களை முட்டாள்கள் என்று யாரும் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. நாடு முழுவதும் எதிர்க்கட்சியினரை சிறையில் அடைத்துவிட்டு தேர்தல் நடத்திய இந்திரா காந்தியை வீட்டுக்கு அனுப்பியவர்கள் (1977) நமது மக்கள். அவர்களை எக்காலத்திற்கும் ஏமாற்ற முடியாது.

நமது மக்கள் லாலு போன்ற பல தவறான நபர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அதே சமயம் நாணயமான நல்லவர்களையும் அவர்களே தான் தொடர்ந்து வெற்றி பெறச் செய்கிறார்கள். குஜராத்தின் நரேந்திர மோடியும், பிகாரின் நிதிஷ் குமாரும் பெற்றுள்ள வெற்றி தான் நமது நம்பிக்கை; மக்களை கணிப்புகளால் குழப்ப முடியாது என்ற நம்பிக்கை.

'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என்பது தான் ஜனநாயகத்தின் அடித்தளம். நமது தேர்தல் கணிப்புகள் மக்களை சிலகாலம் குழப்பலாம். ஆனால், குழப்பத்திற்குப் பிறகு இறுதியில் தெளிவு கிடைத்தே தீரும். இது கணிப்பல்ல. நடைமுறை யதார்த்தம்.

(நிறைவு)
------------------------------
நன்றி: விஜயபாரதம் (11.02.2011)
.

சனி, ஜனவரி 29, 2011

கருத்துக் கணிப்புகளும் கருத்துத் திணிப்புகளும்- 1

தேர்தல் கருத்துக் கணிப்புகளை தடை செய்ய வேண்டும் என்று அண்மையில் சென்னை வந்த தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி கூறிச் சென்றிருக்கிறார். இது குறித்து ஆணையர் ஏன் திடீரென்று முழங்கி இருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால், பல்லாண்டு காலமாகவே பல்வேறு அரசியல் கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது அனைவரும் அறிந்ததே.

பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் கருத்துத் திணிப்புகளாக இருப்பதால், உண்மையான முடிவுகளை அவை பிரதிபலிப்பதில்லை. ஆனால், மின்னணு ஊடகங்களுக்கு கணிப்புகள் வெளியிடுவதென்பது, ஒரு அற்புதமான வசூல் வாய்ப்பு. விளம்பரம் வாயிலாக மட்டுமின்றி, கட்சிகளின் கவனிப்பாலும் தேர்தல் சமயங்களில் கணிப்பு ஊடகங்கள் லாபமடைகின்றன. அரசியலில் நேர்மை , தேர்தலில் நாணயம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் கட்சி வழக்கம்போல, இந்த ஊடகங்களால் மூன்றாமிடத்திற்குத் தள்ளப்படும். இப்போதும்கூட, கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதிக்கக் கூடாது என்று ஊடக அரங்கிலிருந்தே தீனமான குரல்கள் கேட்டுக் கொண்டுதான் உள்ளன.

தேர்தல் கருத்துக் கணிப்பு என்பது ஒரு ஜனநாயக நாட்டில் மக்களின் கருத்தை அறியச் செய்யும் வழிமுறையே. உலக நாடுகள் பலவற்றில் இம்முறை வெகுவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வல்லரசு நாடான அமெரிக்காவில் அதிபரின் செல்வாக்கு உயர்வு- சரிவு குறித்து அவ்வப்போது கணிப்புகள் வெளியாவதுண்டு. அரசின் கொள்கைகள் - அதன் விளைவுகள் குறித்தும்கூட கருத்துக் கணிப்புகள் அங்கு வெளியிடப்படுகின்றன. ஒருவகையில் அரசினை இத்தகைய கணிப்புகள் திருத்தி, வழிநடத்துகின்றன.

ஆனால், நமது நாட்டில் ஊடகங்கள் பத்திரிகை தர்மப்படி செயல்படுகின்றனவா என்ற கேள்வி எழுகிறது. தனிப்பட்ட விருப்பு- வெறுப்பு, சுயநல நோக்கம், வர்த்தக தந்திரம், அச்சம் போன்ற காரணங்களால் தடுமாறும் இந்திய ஊடகங்களிடம் நடுநிலையான கருத்துக் கணிப்பை எதிர்பார்ப்பது, முட்டாள்தனமானது.

தேர்தல் கருத்துக் கணிப்புகளை அரசியல் கட்சிகளும், தங்களுக்கு சாதகம் என்றால் ஏற்பதும், பாதகம் என்றால் எதிர்ப்பதும் வாடிக்கை. ஆனால், சில ஊடகங்கள் வெளியிடும் கணிப்புக்கள் தேர்தல் முடிந்தபிறகு முற்றிலும் தவறாக இருக்கும். அதைப் பற்றி மக்கள் கவலைப்படுவதில்லை. பொய்த்துப்போன கருத்துக் கணிப்பை வெளியிட்ட ஊடகங்களைக் கண்டிக்க வேண்டிய நுகர்வோரான வாசகர்கள் கண்டுகொள்ளாததால், ஒவ்வொரு தேர்தலிலும், இத்தகைய முட்டாள்தனமான கணிப்புகளும் தொடர்ந்து வெளிவருகின்றன.

விழிப்புணர்வற்ற சமுதாயத்திற்கு, திட்டமிடலுக்கு உதவும் அரிய சாதனமான கருத்துக் கணிப்புகளை பயன்படுத்தத் தெரிவதில்லை. எனவே தலைமை தேர்தல் ஆணையர் கூறியுள்ளது போல, கணிப்புகளுக்கு முழுமையாக தடை விதிப்பதே சரியாக இருக்கும் என்பது நாட்டுநலனில் அக்கறை கொண்டோரின் கருத்தாக உள்ளது. எனினும் ஆணையர் கூறியுள்ளதாலேயே, அவரது யோசனையை எதிர்த்தாக வேண்டியுள்ளது.

கணிப்பு என்பது என்ன?

நாட்டு மக்களின் எண்ணம் என்னவாக இருக்கிறது என்பதை குறிப்பிட்ட மாதிரி (SAMPLE) அளவில், கேட்டறிந்து, அந்தப் புள்ளிவிபரங்களின் (STATISTICS) அடிப்படையில் அரசியல் காற்று வீசும் திசையை ஆவதானிப்பதே தேர்தல் கணிப்பு. ஒவ்வொரு முக்கிய அரசியல் கட்சியும், பிரத்யேக கணிப்பாளர்களைக் கொண்டு இத்தகைய கணிப்புகளைப் பெற்று, அதன் அடிப்படியில் தங்கள் செயல்பாடுகளை வடிவமைக்கின்றன. அவை பெரும்பாலும் ரகசியமானவை என்பதால், அவற்றால் எந்த சர்ச்சையும் ஏற்படுவதில்லை. பொதுஜன ஊடகங்களில் வெளியாகும் கருத்துக் கணிப்புகளே சர்ச்சைகளைக் கிளப்புகின்றன.

பொதுவாக, கணிப்பு என்பது முன்னறிவிப்பு, நிர்ணயம், கணக்கீடு, மதிப்பீடு, கருத்து என பல பொருள்களில் அணுகப்படுகிறது (நன்றி: க்ரியாவின் தமிழ் அகராதி) உரிய புள்ளிவிபரங்களின் அடிப்படையில் நடுநிலையுடன் மதிப்பிட்டு, தெளிவான முடிவுகளை நிர்ணயிப்பதும், மதிப்பீடுகளை உருவாக்குவதும், மக்களுக்கு முன்னறிவிப்பதும், கருத்து தெரிவிப்பதும் கணிப்பின் கடமை. ஆனால், நமது ஊடகங்களின் கணிப்புகள் நடுநிலை இன்றி செயல்படுவதால் அவற்றின் முடிவுகள் ஏமாற்றம் அளிப்பது தவிர்க்க இயலாததாகி விடுகிறது.

நமது ஊடகங்களின் கணிப்புகளை, அடிப்படையில் இரு பிரிவாகப் பிரிக்கலாம். ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி வெற்றி பெறும் / தோல்வி பெறும் (WIN / DEFEAT) என்பதே கணிப்பின் ஆதாரம். இது மட்டுமே பெரும்பாலான மக்கள் அறிந்திருப்பது. ஆனால், இதற்குள் நான்கு வகையான உட்பிரிவுகளும் அதன் அடிப்படையில் எட்டு விதமான முடிவுகளும் இருப்பது யாருக்கும் தெரிவதில்லை. அவற்றைத் தெரிந்துகொண்டால், என்.டி.டி.வி.யோ, அவுட்லுக்கோ வெளியிடும் கருத்துத் திணிப்புகள் கண்டு நீங்கள் ஆயாசம் அடைய மாட்டீர்கள்.

எந்த ஒரு கணிப்பிற்கும் பின்புலத்தில் நோக்கம், விருப்பம், எதிர்பார்ப்பு, மதிப்பீடு ஆகிய நான்கு நிலைகள் இருக்கின்றன. இந்த நான்கு நிலைகளின் அடிப்படையில் ஒரு கட்சியின் வெற்றி அல்லது தோல்வி கணிக்கப்படும்போது அவை எட்டு வகையான முடிவுகளைத் தரலாம். அவற்றை நாம் இங்கு ஒவ்வொன்றாகப் பார்ப்போம்..

நோக்கத்துடன் இயங்கும் கணிப்புகள்:

ஒரு தி.மு.க. தொண்டரிடம் சென்று, அடுத்த சட்டசபை தேர்தலில் யார் ஜெயிப்பார்கள் என்று கேட்டுப் பாருங்கள். உங்களை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு, அடுத்த நிமிடமே ''கலைஞர் தான் அடுத்த முதல்வர்'' என்பார். வேறு பதிலை அவர் சொன்னால்தான் அதிசயம். அதாவது தி.மு.க. தொண்டரைப் பொருத்த வரை, திமு.க. வெல்லும் என்பது அவரது நம்பிக்கை மட்டுமல்ல, நோக்கமும் கூட.

அவரிடமே அ.தி.மு.க.வின் நிலை பற்றிக் கேட்டுப் பாருங்கள். ''அக்கட்சிக்கு முன்வைப்புத் தொகைகூடக் கிடைக்காது'' என்பார். அதாவது நோக்கத்துடன் கூடியவரின் கணிப்பு, ஒரு கட்சி வெல்ல வேண்டும் அல்லது தோற்க வேண்டும் (MUST WIN / MUST DEFEAT) என்பதாகவே இருக்கும்.

நமது ஊடகங்களின் கணிப்புகளிலும் இத்தகைய அணுகுமுறையை நீங்கள் கண்டிருக்கலாம். நக்கீரன் வாரஇதழ் வெளியிடும் கணிப்புகள் பெரும்பாலும் இப்படி அமைபவையே. சென்ற சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க வெல்லும் தொகுதிகள் என்று நக்கீரன் அறிவித்த தொகுதிகளில் அக்கட்சி ஜெயித்திருந்தால், தி.மு.க அரசுக்கு 'மைனாரிட்டி அரசு' என்ற அவப்பெயர் ஜெயலலிதாவால் சூட்டப்பட்டிருக்காது.

சென்ற குஜராத் சட்டசபை தேர்தலிலும் இதே போன்ற அணுகுமுறையை ஆங்கில ஊடகங்கள் வெளிப்படுத்தின. நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு மீண்டும் அமைந்துவிடக் கூடாது என்பதை ஒரு பிரசார இயக்கமாகவே அவை முன்னெடுத்தன. அவற்றின் கணிப்புகளிலும், ‘மோடி மண்ணைக் கவ்வுவார்’ என்றே குறிப்பிட்டன. ஆனால், ஊடகங்களின் முகத்தில் கரியைப் பூசி, மீண்டும் வென்று, கணிப்பாளர்களை மண் கவ்வச் செய்தார் மோடி.

தமிழகத்தில் நக்கீரன் வெளியிட்ட கருத்துக் கணிப்பு திமு.க. வெல்ல வேண்டும் (MUST WIN) என்ற அடிப்படையிலானது. குஜராத்தில் ஆங்கில ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்பு பா.ஜ.க. தோற்க வேண்டும் (MUST DEFEAT) என்ற அடிப்படையிலானது. இந்த இரண்டு வகையான கணிப்புகளும் மக்கள் மன்றத்தால் நிராகரிக்கப்பட்டன. ஆயினும், தேர்தல் சமயத்தில் இந்த கணிப்புகள் ஏற்படுத்திய உளவியல் தாக்கங்களையும் நெருக்கடிகளையும் சிந்தித்துப் பாருங்கள். ஊடகங்களின் அதர்மம் புரியும்.

விருப்பத்துடன் இயங்கும் கணிப்புகள்:

ஏதாவது ஒரு தமிழக அரசு ஊழியரிடம் சென்று, வரும் தேர்தலில் தி.மு.க. தோற்றுவிடும் என்று சொல்லிப் பாருங்கள். அடுத்த நிமிடமே, தி.மு.க வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை பட்டியலிடத் துவங்கி விடுவார். வானவில் ஊழலால் தனிப்பட்ட வகையில் குடிமகன் யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லை என்றுகூட அவர் சொல்லக்கூடும் (எனது அனுபவம் இது). தங்களுக்கு அள்ளி வழங்கிய கலைஞர் மீண்டும் முதல்வராவார் (SHOULD WIN) என்பது அரசு ஊழியர்களின் விருப்பம். அதுவே அவர்களது கருத்திலும் கணிப்பிலும் எதிரொலிக்கும்.

அடுத்ததாக, ஒரு முஸ்லிம் குடியிருப்பிற்குச் சென்று அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் அத்வானி பிரதமர் ஆவாரா அன்று கேட்டுப்பாருங்கள். உங்களுக்கு இது ஒரு சோதனை. என்ன பதில் கிடைக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? உண்மையிலேயே அத்வானி பிரதமர் ஆக வேண்டும் என்று விரும்பும் இஸ்லாமியரும் கூட, அதை தனது குடியிருப்பில் கருத்துக் கணிப்பின்போது வெளிப்படையாகச் சொல்வார் என்று எதிர்பார்க்கிறீர்களா?

பெரும்பாலான சிறுபான்மையினர், பா.ஜ.க.வின் எதிரிகள் நடத்திவரும் துஷ்பிரசாரத்தால், அக்கட்சியை எதிரியாகவே அனுமானிக்கிறார்கள் என்பது ரகசியமல்ல. சென்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவித்தவர்களில் சிறுபான்மையினரின் உட்பிரிவு சதவிகிதம் இரட்டை இலக்கத்தை தாண்டவில்லை என்பது இந்தியா டுடே கணிப்பில் தெரியவந்தது. அதாவது, அதிகப்படியான சிறுபான்மையினரின் தேர்வு 'அத்வானி பிரதமராகக் கூடாது' (SHOULD NOT WIN) என்பதாக இருந்துள்ளது.

எதிர்காலத்தைக் குறிக்கும் துணைச் சொல்லான 'SHALL' என்பதன் உறுதிப்படுத்தப்பட்ட வடிவமே 'SHOULD'. அதாவது நமது யூகம் விருப்பத்தின் அடிப்படையில் அமையும்போது, அது உறுதிப்படுத்தப்பட்ட கணிப்பாகவே வெளிப்படுகிறது. அரசு ஊழியர் தி.முக. வெல்லும் (SHOULD WIN ) என்கிறார்; இஸ்லாமியர் பா.ஜ.க. வெல்லாது (SHOULD NOT WIN) என்கிறார். இவை இரண்டுமே விருப்பத்தை அடித்தளமாகக் கொண்டவை.

விருப்பங்கள் தேர்தல் முடிவுகளில் வெளிப்படலாம். அதற்காகத்தான் கருத்துக் கணிப்புகள் நடத்தப்படுகின்றன. ஆனால், கணிப்பாளரே விருப்பத்தின் அடிப்படையில் செயல்படக் கூடாது.

சென்ற சட்டசபைத் தேர்தலில் குமுதம் ரிப்போர்ட்டர் வெளியிட்ட கணிப்புகள், தி.மு.க. சார்ந்த திணிப்புகளாகவே இருந்ததற்குக் காரணம், அதன் அடித்தளத்தில் இயங்கிய விருப்பங்கள் தான். சென்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது துக்ளக் கூறிய ஹேஷ்யங்கள் பலிக்காமல் போனதும், பா.ஜ.க. சார்ந்த துக்ளக்கின் அணுகுமுறைதான்.

நோக்கத்துடன் கூடிய கணிப்புகள் போலவே விருப்பத்துடன் கூடிய கணிப்புகளும் தோல்வியில் முடிகின்றன. ஆனால், தேர்தல் காலத்தில் கட்சிகளுக்கு பின்பலமாக இவை உதவுகின்றன. கட்சிகளின் கொள்கைகள் மீதான அபிமானம், அரசுகளின் செயல்முறை மீதான நாட்டம், நன்றியுணர்வுடன் கூடிய ஆசை போன்றவை விருப்பக் கணிப்புகளுக்கு காரணமாக இருக்கலாம். எப்படியாயினும், இத்தகைய அணுகுமுறை வாசகர்களை குறிப்பிட்ட அளவில் முட்டாளாக்கி அவர்களை தவறாக வழிநடத்துகிறது என்பது உண்மை.
.
இக்கட்டுரையின் தொடர்ச்சி... பகுதி 2
---------------------------------------
காண்க: தமிழ் ஹிந்து
நன்றி: விஜயபாரதம் (04.02.2011)

.

வெள்ளி, ஜனவரி 28, 2011

மானம் கெட்ட மத்திய அரசு

மத்திய ஊழல் கணிப்பு ஆணையராக பி.ஜே.தாமஸ் பதவியேற்ற நிகழ்ச்சியில் நாட்டின் உயரதிகார பீடங்களுடன் அளித்த தரிசனம்.

நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழிசெல்வத்
தேட்டில் விருப்புங்கொண்டே - கிளியே
சிறுமை அடைவாரடீ

(நடிப்புச் சுதேசிகள்- மகாகவி பாரதி)

-நூறு ஆண்டுகளுக்கு முன் நிதானக் கட்சியார் எனப்படும் காங்கிரஸ் மிதவாதிகளைக் கண்டித்து மகாகவி பாரதி எழுதிய இப்பாடல் இன்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கும் பொருத்தமாக இருப்பது, காலத்தின் கோலமா? மகாகவியின் தீர்க்கதரிசனமா?

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் (சி.வி.சி) நியமன விவகாரத்தில், எதிர்க்கட்சித்தலைவரின் எதிர்ப்பை மீறி ஊழல் கறை படிந்த தாமஸை நியமித்துவிட்டு, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறும் தொடர் பொய்கள், மத்திய அரசுக்கு சிறிதும் வெட்கமும் மானமும் இல்லை என்பதையே காட்டுகின்றன.

கேரளாவில் 1992 ல் பி.ஜே.தாமஸ் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக, உணவுத்துறை செயலாளராகப் பணியாற்றியபோது அம்மாநில சிவில் சப்ளை கார்ப்பரேசன் விதிமுறைகளை மீறி, கூடுதல் விலையில் 15 ஆயிரம் டன் பாமாயிலை மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்தார்; அதனால் அரசுக்கு ரூ. 23.2 கோடி இழப்பு ஏற்பட்டது என்பதுதான் குற்றச்சாட்டு. இது தொடர்பான வழக்கு இன்றும் நடந்து வருகிறது.
.
இதே தாமஸ் தான் ஆண்டிமுத்து ராசா அமைச்சராக இருந்தபோது தொலைதொடர்புத் துறை அமைச்சராக இருந்தவர். ராசாவின் தெருவிளையாடலால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ. 1.76 லட்சம் கோடி என்று மத்திய தணிக்கை ஆணையம் (சி.ஏ.ஜி) அறிவித்த பின் நாடு முழுவதும் ஊழலுக்கு எதிரான போராட்டம் கூர்மை அடைந்துள்ளது.

இந்த இரு ஊழல்களிலும் தொடர்புடைய பி.ஜே.தாமஸை, அவசர அவசரமாக சி.வி.சி பதவியில் அமர்த்தியது மத்திய அரசு. இதற்கான தேர்வுக்குழுவில் இடம் பெற்றிருந்த எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜின் எதிர்ப்பை மீறி, பிரதமர் மன்மோகனும், உள்துறை அமைச்சரும் தாமஸை பிடிவாதமாக தேர்வு செய்தனர். அவரும் செப். 6 ல் பதவி ஏற்றார். இதை எதிர்த்து வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தொடுத்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் தற்போது மத்திய அரசின் பொய்களை அம்பலப்படுத்தி, பிரதமரை முச்சந்தியில் நிறுத்தி இருக்கிறது.

துவக்கத்தில், தாமஸ் மீது எந்த ஊழல் வழக்கும் இல்லை என்று மத்திய அரசு சாதித்து வந்தது. இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் கேட்ட தர்ம சங்கடமான கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல், ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான விசாரணையில் தாமஸ் தலையிட மாட்டார் என்று டிசம்பரில் உச்சநீதி மன்றத்தில் விளக்கம் அளித்தது மானம் கெட்ட மத்திய அரசு.

ஆயினும், உச்சநீதி மன்றம் மத்திய அரசின் பதிலால் திருப்தி அடையவில்லை. அண்மையில் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தனது நிலைப்பாட்டை விளக்கி தாமஸ் உச்சநீதி மன்றத்தில் அளித்த மனுவில், ''அரசியல் சண்டையில் என்னை பலிகடா ஆக்கிவிட்டனர். கருணாகரனுக்கும் அச்சுதானந்தனுக்கும் இடையிலான அரசியலில் நேர்மையாளரான (?) என்னை சிக்க வைத்து விட்டனர்'' என்று கூறி இருக்கிறார். அரசுப் பதவி எப்படி அதிகாரிகளையும் பொய்யர்களாக்கி இருக்கிறது என்பதை தாமஸின் மனு வெளிப்படுத்தி விட்டது.

இதனிடையே, சி.வி.சி நியமனத்தில் '' சரியான நடைமுறை பின்பற்றப்பட்டதா? தாமஸ் மீது ஊழல் வழக்கு இருப்பது தேர்வுக் குழுவுக்கு தெரியாதா? பிரதமர் கவனத்திற்கு இவ்விவகாரம் கொண்டுசெல்லப் படவில்லையா?'' என்றெல்லாம் உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.எச்.கபாடியா அரசுத் தரப்பிடம் வினவினார்.

''சி.வி.சி. போன்ற உயர்பதவிக்கு ஒருவரைத் தேர்வு செய்யும்போது என்னென்ன ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டன? எந்த அணுகுமுறை கடைபிடிக்கப்பட்டது? வழிகாட்டு நெறிமுறைகள் இம்மி பிசகாமல் கடைபிடிக்கப்பட்டனவா? என்று அறிய விரும்புகிறோம்'' என்று நீதிபதிகள் பென்ச் வலியுறுத்தியது.

அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வாஹன்வதி, ''பாமாயில் வழக்கு விவகாரமே மத்திய அரசுக்குத் தெரியாது'' என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். ஊழல் வழக்கு குறித்து தேர்வுக்குழு தெரிந்தேதான் தாமஸை தேர்வு செய்ததா என்ற கேள்விக்கு பதிலளித்த வாஹன்வதி, அற்புதமான பொய்யைக் கூறி மத்திய அரசை இக்கட்டில் இருந்து தற்காலிகமாகக் காப்பாற்றி இருக்கிறார்.

இந்தப் பொய்யை தேர்வுக்குழுவில் இடம் பெற்றிருந்த சுஷ்மா கண்டித்திருக்கிறார். இது தொடர்பான வழக்கில் தன்னை இணைத்துக்கொண்டு விளக்கம் அளிக்கப்போவதாக அவர் அறிவித்திருக்கிறார்.

ஒரு பேச்சுக்கு, வாஹன்வதி சொல்வது உண்மை என்றே வைத்துக் கொண்டாலும், ''இதுகூடத் தெரியாத மத்திய அரசு பதவில் இருக்க தகுதி உள்ளதா?'' என்ற கேள்வி எழுகிறது. உளவுத்துறைகளை கைவசம் வைத்துள்ள பிரதமருக்கு இது தெரியவில்லை என்றால், அவருக்கு அப்பதவியில் இருக்க அருகதை இல்லை என்றாகிறது. தாமஸின் ஊழல் குறித்து தேர்வுக் குழுவில் சுட்டிக்காட்டிய சுஷ்மாவின் எதிர்ப்பு புறக்கணிக்கப்பட்டது ஏன் என்ற கேள்விக்கும் மத்திய அரசிடம் பதில் இல்லை.

உச்சநீதி மன்றத்தில் வரும்நாட்களில் நிகழவுள்ள வாத பிரதிவாதங்கள், மத்திய அரசின் பித்தலாட்டங்களை மேலும் தோலுரிக்க வாய்ப்புள்ளது. ஒரு பொய்யைக் காப்பாற்ற பல நூறு பொய்களை சிருஷ்டிக்க வேண்டிய அவலநிலையில் காங்கிரஸ் கட்சி தள்ளாடுகிறது. இத்தனைக்கும் காரணமான இத்தாலிய அன்னையோ, எதிலுமே சம்பந்தம் இல்லாதவர் போல நடமாடுகிறார்.

நூறு ஆண்டுகளுக்கு முன் நிதானக் கட்சியாரின் பித்தலாட்டங்களை அம்பலப்படுத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய திலகர் தலைமையிலான தீவிரக் கட்சியாரைப் போல இன்று பாரதீய ஜனதா கட்சி காங்கிரசுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறது. உண்மை வெல்லும் என்ற நம்பிக்கையுடன் மக்கள் காத்திருக்கிறார்கள்.

-------------------------------
நன்றி: விஜயபாரதம் (11.02.2011)
.

வெள்ளி, ஜனவரி 21, 2011

பொங்கல் பைகள்: தி.மு.க.அரசின் நல்ல திருப்பம்


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசால் அனைத்து ரேஷன்அட்டை தாரகளுக்கும் இலவச பொங்கல் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கான பையில் தி.மு.க.வின் சின்னமான உதயசூரியன் இடம்பெறும் வகையில் பொங்கல்விழா படம் சமத்காரமாக வரையப்பட்டிருந்தது.

இதுகுறித்து சட்டசபையில் (ஜன. 11) பேசிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கமணி, 'மக்களின் வரிப்பணத்தில் செய;படுத்தப்படும் இலவச அரசு திட்டத்தில் தி.மு.க. சின்னம் அச்சிட்டது சரியல்ல' என்று குற்றம் சாட்டினார்.

இதற்கு, 'பொங்கல் பையஈருக்கும் சூரியன் வேறு, பொங்கல் திருநாளன்று சூரியனை வழிபடுவதற்காக தமிழர்கள் பொங்கல் வைக்கிறார்கள். அதை நினைவுபடுத்தும் வகையில், குடும்பத்தோடு சூரியனை வழிபடும் காட்சிதான் பொங்கல் பையில் அச்சிடப்பட்டுள்ளது' என்று அமைச்சர் வ.வேலு விளக்கம் அளித்துள்ளார் (தினமணி- 12.01.2011).

எது எப்படியோ, தமிழர்கள் சூரியக் கடவுளை வழிபடுபவர்கள். இந்து மதத்தின் ஓர் அம்சமான சூரிய வழிபாட்டை (சௌரம்) ஏற்றிருப்பவர்கள் என்பதை தி.மு.க. ஒப்புக் கொண்டிருகிறது. பொதுவாக அறுவடைத் திருநாள் வாழ்த்துக்களும், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களும் கூறுவதுதான் மு.க.வின் மரபு. ஆனால், பொங்கல் பையில் தனது கட்சிச் சின்னம் அச்சிட்டுவிட்டு பிரச்னையானவுடன், அது கடவுள் படம் என்று தப்ப முயற்சிக்கிறது தி.மு.க. தனக்கு வசதியாக இருப்பின் தி.மு.க. என்ன வேண்டுமானாலும் செய்யும் என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம்.

இந்த இலவச பொங்கல் பொருள்களை வழங்க ரூ. 90 கோடி செலவிட்டுள்ளது தமிழக அரசு. தமிழகத்திலுள்ள 1.90 கோடி ரேஷன் அட்டைதாரகளுக்கும் இவை வழங்கப்பட்டுள்ளன. இந்தப்பையில் போனகலிடத் தேவையான அரை கிலோ பச்சரிச்சி, அரை கிலோ வெல்லம், 100 கிராம் பாசிப்பருப்பு, 10 கிராம் முந்திரி, 5 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலம் ஆகியவை இருந்தன.

இந்த பொங்கல் பரிசுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்காக, பொங்கல் பையிலுள்ள உதயசூரியனுக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்று திமு.க. நம்பினால் நம்பட்டும். இந்துக்களின் வாக்குகளுக்கும் மதிப்புண்டு என்று தி.மு.க. ஏற்றுக் கொள்வது நல்லதுதானே?

-----------------------------
நன்றி: விஜயபாரதம் (28.01.2011)
.

வியாழன், ஜனவரி 20, 2011

அப்பாடா... குழப்பம் அகன்றது!


ஒருவழியாக, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்திருக்கிறார் அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா (ஜன. 19). காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு வைப்பேன் என்று நான் எப்போது சொன்னேன் என்றும் அவர் பத்திரிகையாளர்களிடம் கேட்டிருக்கிறார். மக்கள் மறதியே தலைவர்களின் மூலதனம். உண்மைதான்.

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிக்கு அவர் முயற்சிக்கவில்லை என்பதை தி.மு.க. காரரே நம்ப மாட்டார். தொண்டர்கள் விரும்பும் கூட்டணி அமைப்பதாக பூடகமாக முழங்கிவந்த ஜெயலலிதாவை, தி.மு.க.வின் ஊழல் கூட்டாளியான காங்கிரஸ் கண்டுகொள்ளவே இல்லை. வேறு வழியின்றி, ஞானோதயம் பெற்றவர் போல, காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று இப்போது நவின்றிருக்கிறார் ஜெ. எப்படியோ, தமிழகம் தப்பியது.

நாடு முழுவதும் மக்களிடையே கோபத்தைக் கிளப்பியிருக்கும் வானவில் ஊழலில் தொடர்புடைய முக்கிய கூட்டாளிகள் தி.மு.க.வும் காங்கிரசும் தான். இவர்கள் இணைந்திருப்பதுதான் அக்கூட்டணிக்கு எதிராக மக்களை திரட்ட உதவும். இதற்கு மாறாக ஜெயலலிதா சிந்தித்து வந்ததால், தமிழகத்தில் அரசியல் கூட்டணி அமைப்பதில் குழப்பம் நிலவி வந்தது. இப்போது அந்தத் தடை அகன்றுள்ளது. இனிமேல், ஜெயலலிதாவை நம்பி, ம.தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள் துணிவுடன் தேர்தல் களமிறங்கலாம்.

அதே பேட்டியில், தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு 'நோ கமென்ட்ஸ்' என்று கூறி இருக்கிறார் ஜெயலலிதா. விஜயகாந்திற்கு கூடும் மக்கள்திரளைக் கண்டும் அ.தி.மு.க. தலைவி பிடிவாதம் பிடிப்பது, தி.மு.க.வுக்குத் தான் உதவும். காங்கிரஸ் விஷயத்தில் தடுமாறியது போல தே.மு.தி.க. விஷயத்தில் அவர் தடுமாறக் கூடாது.

வெண்ணெய் திரண்டுவரும் வேளையில் அவரே தாழியை உடைத்துவிடக் கூடாது.
-------------------------------
நன்றி: விஜயபாரதம் (04.02.2011)

திங்கள், ஜனவரி 17, 2011

மக்களை முட்டாளாக்கும் புத்திசாலி மந்திரி

பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் பிணம் தின்று தான் ஆக வேண்டும் என்ற பழமொழியை அறிந்திருப்பீர்கள். 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிக்கொண்டு மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி நடத்தும் நாடகங்கள் இந்தப் பழமொழியையே நினைவு படுத்துகின்றன.

ஆண்டிமுத்து ராசாவை பின்னணியில் இருந்து இயக்கிய பெரு முதலாளிகளும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் அரசுக்கு ஏற்பட்ட இழப்புக்கு அடிப்படையான பல்லாயிரம் கோடி லஞ்சப் பணத்தைப் பெற்ற ஊழலின் வேரான தலைவர்களும், கடப்பாறையை விழுங்கியவர்கள் போல அமைதி காக்கிறார்கள். ஆனால், ராசாவுக்குப் பின் தொலைதொடர்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள வழக்கறிஞர் சிகாமணியான கபில் சிபலோ, 'ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எந்த முறைகேடும் நடக்கவில்லை' என்று முழங்கி வருகிறார். என்னதான் திறமையான வழக்கறிஞராக இருத்தாலும், தப்பு செய்த கட்சிக்காரரைத் தப்புவிக்க எல்லா கோமாளி வேலைகளையும் செய்து தானே ஆக வேண்டும்?

மத்திய தணிக்கைத் துறையின் (சி.ஏ.ஜி) நேர்மையான அணுகுமுறை காரணமாகவே ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளிச்சத்திற்கு வந்தது. அதையடுத்து உச்சநீதி மன்றம் இவ்விவகாரத்தை கிளறத் துவங்கியது. மத்திய அரசையும் பிரதமரையும் உச்சநீதி மன்றம் கேட்ட தர்ம சங்கடமான கேள்விகளால் தான், மத்தியப் புலனாய்வுத் துறை (சி.பி.ஐ) இவ்விவிகாரத்தில் வேறு வழியின்றி விசாரணையை முடுக்கியது. இறுதியில், கள்ளத்தனம் செய்த அமைச்சர் ராசா பதவி விலக வேண்டியதாயிற்று.

அப்போது, இத்துறை மீண்டும் தி.மு.க. வசமே வேறு ஒருவருக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு மாறாக, அறிவியல் துறை அமைச்சர் கபில் சிபலிடம் கூடுதல் பொறுப்பாக தொலைதொடர்புத் துறை ஒப்படைக்கப்பட்டது. உடனே, நமது ஊடகங்கள், ‘தி.மு.க.வுக்கு அடிபணியாத சோனியா’ என்று புளகாங்கிதத்துடன் செய்திகளைத் தீட்டின. இப்போது கபில் சிபல் நடத்திவரும் நாடகங்கள், ராசாவை விஞ்சுவதாக உள்ளபோது, அதே ஊடகங்கள் அர்த்தமுள்ள மௌனம் சாதிக்கின்றன.

பதவி இழந்த ஆ.ராசா, ''எனக்கு முன் அமைச்சராக இருந்தவர்களின் வழியிலேயே ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்தேன். இது குறித்து பிரதமருக்கு எல்லாமே தெரியும். இதில் எந்த ஊழலும் நடக்கவில்லை. இதனால் எந்த இழப்பும் அரசுக்கு ஏற்படவில்லை'' என்றே கடைசிவரை கூறி வந்தார்; இப்போதும் கூறி வருகிறார். தற்போது ராசாவை குப்புறத் தள்ளி அவரது பீடத்தில் அமர்ந்திருக்கும் கபில் சிபலும் அதையேதான் கூறுகிறார். பிறகு எதற்காக ராசாவை அவசரமாக பதவி விலகுமாறு காங்கிரஸ் நிர்பந்தம் செய்தது?

இதில் வேடிக்கையான ஒற்றுமை என்னவென்றால், ஆ.ராசாவும் கபில் சிபலும் வழக்கறிஞர்கள் என்பதுதான். இருவருமே, ஊழலை மறைக்க எடுத்துவைக்கும் வாதங்கள், சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்த விழைபவையாகவே தோன்றுகின்றன.

வரும் பிப். 10 ம் தேதிக்குள் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்துள்ள ஊழல் குறித்து விசாரித்து அறிக்கையை உச்சநீதி மன்றத்தில் சி.பி.ஐ தாக்கல் செய்ய வேண்டும். அநேகமாக, அந்த அறிக்கை தாக்கலின்போது, ராசா கைது செய்யப்படாதது குறித்து கேள்வி எழுப்பப்படலாம். இப்போதே, ராசாவை கைது செய்ய வேண்டும் என்று கோரி மற்றொரு வழக்கினை சுப்பிரமணியம் சாமி தொடுத்திருக்கிறார். இந்நிலையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எந்த இழப்பும் ஏற்படவில்லை என்று கபில் சிபல் கூறியிருப்பது, முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாக இருக்கிறது.

கபில் சிபல் தொலைதொடர்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், 'ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் இழப்பு ஏற்பட்டிருந்தால் அவை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் வசூலிக்கப்படும்' என்றார். அதன்படி, பல தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு நோட்டீஸ்களும் அனுப்பப்பட்டன. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற சில நிறுவனங்கள் விதிமுறைப்படி சேவையைத் துவக்காமல் தாமதிப்பது குறித்து கேட்டபோது, அவை மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிபல் சொன்னார். பரவாயில்லையே என்று சிபலை பாராட்டிய நேரத்தில், ஓர் அதிரடியை நிகழ்த்தினார் கபில்.

உச்சநீதி மன்றத்தின் தொடர் கண்டனங்களை திசை திருப்ப, நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையில் தனிநபர் விசாரணைக் குழுவை அமைத்துள்ளதாக, கபில் சிபல் (டிச. 10) அறிவித்தார். 2009 முதலாக மட்டுமல்லாது, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக் காலமான 2001 முதற்கொண்டே இக்குழு விசாரணை நடத்தும் என்றும் அவர் அறிவித்தார். எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற கூட்டுக்குழு (ஜே.பி.சி) விசாரணையைக் கோரிவரும் நிலையில், உச்சநீதி மன்றம் சி.பி.ஐ.இடம் கிடுக்கிப்பிடி போட்டுவந்த நிலையில், சிபல் இவ்வாறு அறிவித்தார்.

அதாவது, ராசா மட்டும் ஊழல் செய்யவில்லை; அதற்கு முன்னரே பா.ஜ.க. அமைச்சர்கள் காலத்திலும் ஊழல் நடந்திருக்கிறது என்பதுதான் சிபலின் கருத்தாக இருந்தது. எனினும், தனி நீதிபதி விசாரணையை முழு மனதுடன் வரவேற்பதாக பா.ஜ.க. அறிவித்தது; அதே சமயம், ஜே.பி.சி கோரிக்கையை முனை மழுங்கச் செய்ய மாட்டோம் என்று அருண் ஜெட்லி அறிவித்தார்.

அடுத்து, மீண்டும் முருங்கை மரம் ஏறினார் சிபல். தொலைதொடர்பு அமைச்சகத்திற்கு தொலைதொடர்பு நிறுவன உரிமையாளர்கள் சுனில் மிட்டல் (ஏர்டெல்), ரத்தன் டாடா (டாடா டெலிசர்வீஸ்), அணில் அம்பானி (ரிலையன்ஸ் கம்யூனிகேசன்) ஆகியோரை (டிச. 23) அழைத்துப் பேசிய அமைச்சர் சிபல், இந்த விவகாரத்தால் தொழில்துறை பாதிக்கப்படாமல் இருக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார். மேற்குறிப்பிட்ட மூவருமே, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியவர்களாக குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள். அவர்களையே அழைத்துப் பேசியதன் மூலமாக சிபலின் சுயரூபம் வெளிப்பட்டுவிட்டது. நமது விழிப்புணர்வுள்ள ஊடகங்கள் தான் இதனை கண்டுகொள்ளவில்லை. பெரு நிறுவனங்களின் விளம்பரங்கள் நிறுத்தப்பட்டுவிட்டால் ஊடக உரிமையாளர்கள் எவ்வாறு கோடி கோடியாக சம்பாதிப்பதாம்?

வழக்கில் தொடர்புடையவர்களையே அமைச்சர் அழைத்துப் பேசிய பிறகு, ஸ்பெக்ட்ரம் வழக்கில் அரசின் நிலையை சி.பி.ஐ.யோ, தனி நீதிபதியோ புரிந்துகொள்வது கடினமான ஒன்றல்ல.

இதனிடையே, வாஜ்பாய் பிரதமராக இருந்த காலகட்டத்தில் பின்பற்றப்பட்ட 'முதலில் வந்தவருக்கே முன்னுரிமை' என்ற கொள்கையால் அரசுக்கு ரூ. 1.50 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் முழங்க ஆரம்பித்தனர். மதிய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சி. ஆகியோரைத் தொடர்ந்து கபில் சிபலும் அதே முழக்கத்தைத் தொடர்ந்தார். ஒரு பொய்யை பல முறை சொனால் அது உண்மையாகிவிடும் என்ற 'கோயபல்ஸ்' தந்திரம் இது. நமது ஊடகங்கள் கொஞ்சமும் தாமதிக்காமல் இந்தப் பொய்களை வெளியிட்டு பத்திரிகை தர்மம் காத்தன. ஒரு பத்திரிகையேனும், இத்தனை நாட்களாக இதனை ஏன் அரசு கண்டுகொள்ளாமல் இருந்தது? என்று கேட்கவில்லை.

பா.ஜ.க.வை மட்டம் தட்டக் கிடைக்கும் எந்த சந்தர்ப்பத்தையும் தவறாமல் பயன்படுத்தும் காங்கிரஸ், கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ரகசியத்தை ஏன் சொல்லவில்லை? ஜே.பி.சி கோரும் எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்தவும், ஊழலில் தான் மட்டுமா ஈடுபட்டேன் என்று நியாயப்படுத்தவுமே இந்த பொய்க் குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் தலைவர்கள் முன்வைத்து வருகின்றனர்.

சி.பி.ஐ.யும் தனது வழக்கப்படி, அரசியல் எஜமானர்களின் உள்ளக்கிடக்கைகளைப் புரிந்துகொண்டு, 1998 முத்தாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து விசாரிக்க குற்றப்பத்திரிகை பதிவு செய்தது. ராசா பதவியில் இருந்த (2004) காலத்திற்கு விசாரணையைக் கொண்டுவர, ஆறு ஆண்டுகள் அவகாசம் கிடைக்கும் என்று சி.பி.ஐ. கணக்கிட்டிருக்கலாம்.

இந்நிலையில், சி.ஏ.ஜி.யின் கணக்கீடே தவறு என்று முழங்கியிருக்கிறார் கபில் சிபல் (ஜன. 9). குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆ.ராசா தரப்புக்கான வழக்கறிஞராக இதன்மூலம் அவதாரம் எடுத்திருக்கிறார் அமைச்சர் சிபல். அவரது வாக்குமூலம் இதோ...

"2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஏற்பட்ட இழப்பை கணக்கிடுவதற்கு தலைமை தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரி பின்பற்றிய வழிமுறை வேதனை அளிக்கிறது. அவர் குறிப்பிட்ட இழப்பு தொகைக்கு எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை.

அந்தப் புள்ளிவிவரம் முற்றிலும் தவறானது. உண்மையில் இந்த விவகாரத்தில் அரசு கஜானாவுக்கு எந்தவித இழப்பும் ஏற்படவில்லை. இழப்பு தொடர்பாக ஊகமான புள்ளி விவரங்களை அவர் வெளியிட்டு இருக்கக் கூடாது. இதன்மூலம் அரசுக்கும் நாட்டு மக்களுக்கும் தர்மசங்கடத்தை அவர் ஏற்படுத்திவிட்டார்.


கணக்கு தணிக்கை அதிகாரி தனது மனச்சாட்சிக்கு அநீதி இழைத்துவிட்டார். எதிர்க்கட்சிகள் நாட்டின் சாமானிய மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டனர். மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பதுபோல், இழப்புக்கு காங்கிரஸ் காரணம் அல்ல. தொலைத் தொடர்பு துறையில் உரிமம் வழங்குவதற்கு, 'முதலில் வருகிறவர்களுக்கு முன்னுரிமை' என்ற கொள்கை பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில்தான் அறிமுகம் செய்தது.

கடந்த 1999-ம் ஆண்டில், அவர்களுடைய ஆட்சியின்போது நிலையான உரிமக் கட்டண முறை, வருவாயில் பங்கு அடிப்படையிலான கட்டண முறை கொள்கையாக மாற்றப்பட்டதால் ஏற்பட்ட வருவாய் இழப்பு மட்டும் ரூ. 1.5 லட்சம் கோடியாகும். கடந்த 2002-ம் ஆண்டின் 10-வது ஐந்தாண்டுத் திட்ட அறிக்கையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்கு வருவாய் மட்டுமே அடிப்படை அளவுகோல் அல்ல என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதே கொள்கையைத்தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பின்பற்றியது.

ஆயினும், 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் சில மனித தவறுகள் நடந்து இருக்கலாம். அது இயல்புதான். அதற்காகத்தான் தொலைதொடர்பு துறை சார்பில் ஒருநபர் கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் அறிக்கை வந்தவுடன், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறி இருக்கிறார் கபில் சிபல்.

திருடனின் கூட்டளியிடமே லாக்கப் சாவியைக் கொடுத்தது போல இருக்கிறது, கபில் சிபலின் பேச்சு.

சிபலின் கருத்துக்கு சி.ஏ.ஜி மறுப்பு தெரிவித்துள்ளது. 'ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை சரியானது என்ற நிலையில் நாங்கள் 100 சதவீதம் உறுதியாக உள்ளோம்' என்று சிஏஜி செய்தித் தொடர்பாளர் தில்லியில் அறிவித்திருக்கிறார்.

நாடாளுமன்ற பொது கணக்குக் குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷியும் சிபல் கருத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். ''பொது கணக்கு குழு விசாரணையிலுள்ள சி.ஏ.ஜி. அறிக்கை குறித்து தொலைதொடர்புத் துறை அமைச்சர் வெளிப்படையாக கருத்து கூறுவது விசாரணையின் திசையை மாற்றும் முயற்சியாகும்.

தொலைத்தொடர்புத்துறையின் செயலர் ஆர். சந்திரசேகர் பொதுக் கணக்குக் குழுவின் முன்பாக ஆஜரானபோது, வருவாய் இழப்பு குறித்த சிஏஜி தகவல் தவறானது என்று கூறவில்லை. எனவே, கபில் சிபலின் கருத்துதான் தவறானது.அவருக்கு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் பொது கணக்கு குழு முன் ஆஜாராகி தனது கருத்தை தெரிவிக்கலாம்'' என்றார் அவர்.

கபில் சிபல் கருத்தை ஏற்க முடியாது என்று உச்சநீதி மன்ற நீதிபதிகளும் அறிவித்துள்ளனர். அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் ஜன. 10 ல் வந்தபோது, பொதுநல வழக்கு மையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், கபில் சிபல் கருத்தைச் சுட்டிக்காட்டினார். ஆனால், நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.எஸ். கங்குலி ஆகியோர் கபில் சிபல் கருத்தை நிராகரித்துவிட்டனர். ‘உண்மையான இழப்பு என்பதை அரசுதான் தெரிவிக்க வேண்டும்’ என்று கூறினர்.

நாடு முழுவதும் கபில் சிபல் கருத்திற்கு எதிர்ப்பு கிளம்பியவுடன், காங்கிரஸ் தனது வாலைச் சுருட்டிக்கொண்டு, அடக்கமாக காட்சி தருகிறது. இவ்வளவு அவசரமாக கபில் சிபல் கருத்து தெரிவித்தது ராசாவைக் காப்பாற்ற மட்டுமல்ல என்பது அனைவரும் அறிந்த உண்மை. அவர் யாரைக் காக்க முற்படுகிறார்? ராசா மூலமாக ரூ. 30 ஆயிரம் கோடி லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் காங்கிரஸ் தலைவி சோனியாவையா? இனிமேலும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி புளுகிக் கொண்டிருப்பதை நம்ப, நாட்டு மக்கள் தயாரில்லை. காங்கிரஸ் கட்சிக்கு வக்காலத்து வாங்கும் ஊடகங்கள் வேண்டுமானால் அக்கட்சியுடன் சேர்ந்து தமது பங்கிற்கு புளுகட்டும்.

அரசியல் சாசன அமைப்புகளான நாடாளுமன்ற பொது கணக்குக் குழு, உச்சநீதி மன்றம், மத்திய புலனாய்வு அமைப்பு ஆகியவை விசாரித்துவரும் ஸ்பெக்ட்ரம் ஊழலை மூடி மறைக்க தொலைதொடர்புத் துறை அமைச்சர் போடும் வேடங்கள், ஆ.ராசாவை விட கேவலமாக உள்ளன. அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்திருக்கிறார் சுப்பிரமணியம் சாமி. பிரதமர் மன்மோகன் உண்மையிலேயே நேர்மையானவராக இருந்தால், கபில் சிபலை உடனடியாக பதவியிலிருந்து நீக்க வேண்டும்.

ஆனால் ஒன்று. உண்மைக்கு யாரும் காப்பாளர் தேவையில்லை. உண்மைக்கு தன்னைத் தானே காத்துக் கொள்ளும் திறன் உள்ளது. பொய் மட்டுமே, தன்னைக் காக்க மேலும் மேலும் பொய்களை உற்பத்தி செய்யும்.

காங்கிரஸ்காரர்கள் நடத்தும் நாடகங்கள் இதனையே உறுதிப்படுத்துகின்றன. ஆயினும் இறுதியில் சத்தியமே வெல்லும். இது நமது அரசின் முத்திரை வாக்கியம். இதை நமது மௌன சாமியார் பிரதமர் மறந்துவிடக் கூடாது.

பெட்டிச்செய்தி
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகள் ரத்து ஆகுமா?

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தை முற்றாக ரத்துசெய்யக் கோரும் மனு தொடர்பாக ஜன. 10 ல் மத்திய அரசு மற்றும் தொலைதொடர்பு அமைச்சகத்துக்கு நோட்டீஸ் உச்சநீதி மன்றம் அனுப்பியுள்ளது.2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழலே நடக்கவில்லை என்று சாதிக்க ஆரம்பித்துள்ளார் மத்திய தொலைத் தொடர்புத்துறைக்கு கூடுதலாக பொறுப்பு வகிக்கும் கபில் சிபல். இன்னொரு பக்கம், அபராதமாக ஒரு தொகை பெற்றுக் கொண்டு, முறை தவறிய நிறுவனங்களை அனுமதிக்க ஆரம்பித்துள்ளது அரசு. இவற்றுக்கு முட்டுக்கட்டை போடும் விதத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமைந்துள்ளது.

ஆ.ராசா காலத்தில் நடந்த ஒட்டுமொத்த 2 ஜி அலைக்கற்றை ஏலத்தையுமே ரத்து செய்துவிட்டு, மீண்டும் புதிதாக ஏலம் விட வேண்டும். அரசுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் சரி செய்யப்பட வேண்டும்' என்று கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதி மன்றம், 'ஆ.ராசா காலத்தில் வழங்கப்பட்ட உரிமங்கள் உள்பட 122 லைசென்ஸ்களையும் ஏன் ரத்து செய்யக் கூடாது?' என்று கேட்டு மத்திய அரசுக்கும் மத்திய தொலைதொடர்புத் துறைக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த சுப்பிரமணிய சாமி, "குறிப்பிட்ட சில நிறுவனங்களின் உரிமங்களை மட்டும் ஏன் ரத்து செய்ய வேண்டும்? ஒட்டுமொத்த ஒதுக்கீடுமே முறையற்றது என தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியே கூறியுள்ளார். அதனால்தான் 122 லைசென்ஸ்களையுமே ரத்து செய்யச் சொல்கிறோம்" என்றார்.
-------------------------------
காண்க: தமிழ் ஹிந்து
நன்றி: விஜயபாரதம் (28.01.2011)


.

திங்கள், ஜனவரி 10, 2011

புளித்துப்போன பழைய கதையும்... ஆசை அடங்காத கிழட்டு நரியும்...

ஒரே ஒரு ஊரில் ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது. அந்த தோட்டத்திற்குள் ஒரு புத்திசாலி நரி நுழைந்தது. நரிக்கு திராட்சைப் பழங்கள் மீது கொள்ளை ஆசை. குதித்துக் குதித்து பழங்களைப் பறிக்க முயன்றது; கடைசிவரை எட்டவில்லை.
வேறு வழியின்றி நரி சொன்னது: ‘சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்’.

இந்தக்கதை பாலர்வகுப்பில் படித்தது. இதே கதையின் மற்றொரு ‘பின் நவீனத்துவ வடிவம்’ உள்ளது. ஏமாந்த புத்திசாலி நரி ஓநாயாக வேடம் போட்டு அதே திராட்சைத் தோட்டத்தில் நடத்திய நாடகம் பலரும் அறியாதது.
.
திராட்சையை ருசிக்க வேண்டுமானால் ஓநாயாக ஓலமிடத் தெரிய வேண்டும் என்பதை தாமதமாக உணர்ந்தாலும், கனகச்சித்தமாக மாற முடிந்தது கிழட்டு நரிக்கு. ஏனெனில் இது அரசியல் நரி. திராட்சைக் கனி கைக்கு எட்டும் தூரத்தில் தெரியும்போது, நரிக்கு உரித்தான புத்திசாலித்தனத்தை விட ஓநாய்க்கே உரிய ஆவேசம் தான் முக்கியம்.

திராட்சைத் தோட்டத்தில் நுழைந்த கிழட்டு நரியாக நமது மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை சிறிது கற்பனை செய்து பாருங்கள். இந்தக் கதை எதற்கு என்பது புரியும்.

தற்போதைய காங்கிரஸ் கட்சி பழுத்துக் குலுங்கும் அதிகார திராட்சைத் தோட்டமாகவே காட்சி தருகிறது. இந்தக் கனிகள் மக்கள் ருசிக்க அல்ல; தோட்டத்தைக் காவல் காக்கும் நரிகள், ஓநாய்களுக்கானவை. கனிகளை ருசிக்க ஒரே தகுதி தோட்டக்காரியின் ஜென்மவைரியை முடிந்தவரை கடுமையாக தூஷித்து ஓலமிடுவதுதான். அதிகமாகத் தூஷிக்கும் ஓநாய்களுக்கு திராட்சைக்கனிகள் தாமாகவே கிடைக்கும். அதை சாப்பிடும்போதுதான் இது புளித்த திராட்சை அல்ல; மதுபோதை வீசும் அரிய கனி என்பது தெரியும்....

- நவீன பஞ்சதந்திரக் கதைகள் - வானவில் ஊழல் தொகுதி

*****

தற்போதைய மத்திய அரசில் சர்வரோக நிவாரணியாக இருப்பவர் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. கட்சி எல்லை கடந்த அரசியல் நாகரிகம் தெரிந்தவர், மிகவும் திறமையான அரசியல் சாணக்கியர், அடக்கத்தின் திருவுருவம், இனிய சொல்லர், பிரச்னைகளைத் தீர்ப்பதில் கில்லாடி, நாட்டின்மீது உண்மையாகவே அக்கறை கொண்ட தலைவர், அனுபவம் வாய்ந்த நாடாளுமன்ற நாவலர், நிதித்துறையில் வல்லுநர், மக்கள் பிரச்னைகளை நன்கு அறிந்து செயல்படுபவர்... என்றெல்லாம் நம்பப்படுபவர் முகர்ஜி.

தற்போது 75 வயதைக் கடக்கும் பிரணாப் முகர்ஜி சாதாரண ஆளில்லை. இவரது தந்தை வங்கத்தின் சிறந்த விடுதலைப் போராட்ட வீரரான கமதா கிங்கர் முகர்ஜி, நாட்டிற்காக பத்தாண்டுகள் சிறைப்பட்டவர். தேர்ந்த அரசியல் குடும்பத்திருந்து வந்த பிரணாப் முகர்ஜி, இந்திரா காந்தியின் நம்பிக்கைக்குரிய தளகர்த்தர். 1969 ல் மாநிலங்களவை உறுப்பினரான முகர்ஜியின் அரசியல் பயணம், 1984 வரை ஏறுமுகமாக இருந்தது. தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர், இந்திரா அமைச்சரவையில் வருவாய் மற்றும் வங்கித் துறையின் இணை அமைச்சராக இருந்தார்.

நெருக்கடிநிலைக் காலத்தில் இந்திரா காந்தியின் நிழலாகக் கருதப்பட்ட சஞ்சய் காந்தியின் அதிகார அத்துமீறல்களுக்கு உதாரணமான மாருதி கார் நிறுவனத்திற்கு அப்போதைய நிதியமைச்சர் சி.சுப்பிரமணியத்தின் எதிர்ப்பை மீறி பொதுத்துறை வங்கியின் நிதியை (ரூ. 75 லட்சம்) மடைமாற்றியவர் முகர்ஜி. இதற்காக ஜனதா ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட ஷா கமிஷனால் விசாரிக்கப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர் முகர்ஜி.
.
அதிர்ஷ்டவசமாக, இந்திரா மீண்டும் பிரதமரானதால் ஷா கமிஷன் அறிக்கை குப்பைக்கூடையில் எறியப்பட்டது. அவரது பணிக்கு பரிசாக நிதியமைச்சர் பதவி இந்திராவால் வழங்கப்பட்டது (1982 -84 ) இது பலர் அறியாத முகர்ஜியின் மற்றொரு முகம்.

1984 ல் இந்திரா மறைவுக்குப் பின், ராஜீவ் காந்தியால் புறக்கணிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜி, அதிருப்தி காரணமாக ராஷ்ட்ரீய சமாஜ்வாதி காங்கிரஸ் கட்சியை மேற்கு வங்கத்தில் துவங்கி, அம்மாநிலத்தில் காங்கிரஸ் வீழ்ச்சிக்கு காரணமானார். பிறகு ராஜீவுடன் சமரசமாகி, 1989 ல் காங்கிரசில் இணைந்தார்.

ராஜீவ் மறைவுக்குப் பின், நரசிம்ம ராவ் ஆட்சியில் பிரணாபின் முக்கியத்துவம் பெருகியது. 1991 ல் மத்திய திட்ட கமிஷனின் துணைத் தலைவரான அவர், 1995- 96 ல் வெளிவிவகாரத் துறை அமைச்சரானார். அதன் பிறகு மீண்டும் ஏறுமுகம். அடுத்த காங்கிரஸ் அமைச்சரவைகளில் பாதுகாப்பு, நிதி, கப்பல் போக்குவரத்து, தரைவழிப் போக்குவரத்து, தகவல் தொடர்பு, பொருளாதார விவகாரம், வர்த்தகம், தொழில்துறைகளில் அமைச்சர் பொறுப்பு வகித்த முகர்ஜி, இயல்பாகவே அதிகாரபீடத்தின் இரண்டாம் நிலைக்கு உயர்ந்தார். 2004 முதல் மக்களவை உறுப்பினராகவும் பதவி வகிக்கிறார்.

காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் கோஷ்டிப் பூசல், கூட்டணிக் கட்சிகளின் நெருக்குதல், பெருமுதலாளிகளின் தலையீடுகள் நேரும்போதெல்லாம் சமய சஞ்சீவியாக கைக்குக் கை கொடுப்பவர் பிரணாப் முகர்ஜி தான். இந்திரா காலத்திலிருந்து இயங்கிவரும் அரசியல்வாதிகளில் இன்றும் துடிப்புடன் செயல்படுபவர் இவர் மட்டுமே. ஆயினும், பிரதமர் பதவி இவரை மீறி கட்சியில் எந்த அடித்தளமும் இல்லாத மன்மோகன் சிங்கிற்கு சென்றது முகர்ஜிக்கு ஏமாற்றமே.

சஞ்சய் காந்தியின் விசுவாசியாக முற்காலத்தில் இருந்த பாவத்தால் (அன்னை சோனியா அறியாத ரகசியமா?), பிரதமர் பதவி என்ற உச்சபட்சப் பதவி அவருக்கு இன்னும் கனவாகவே உள்ளது. ஆனால், மனம் தளாராமல், 'கடமை'யாற்றி வருகிறார் - முகர்ஜி, என்றாவது ஒருநாள் பிரதமர் ஆவோம் என்ற கனவில்.

*****

சமீப காலமாக முகர்ஜியின் பேச்சுக்கள் அனைத்தும் சர்ச்சையை ஏற்படுத்துபவையாக மாறி வருகின்றன. அரசியல் நாகரீகம் மறந்து பிரதான எதிர்க்கட்சியை வசை பாடுவதில் மற்ற காங்கிரஸ் கட்சித் தலைவர்களுடன் போட்டியிடுகிறார் முகர்ஜி. அண்மையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், காவித் தீவிரவாதம் குறித்து முகர்ஜி தீர்மானம் கொண்டுவந்தபோது, அவர் ஏதோ தீர்மானித்துவிட்டது தெரிந்தது. அலட்டல் பேர்வழியான திக்விஜய் சிங்கையும், அதிபுத்திசாலி ப.சி.யையும் இந்த தீர்மானம் மூலமாக முந்தினார் முகர்ஜி.

அடுத்து, வானவில் ஊழலில் தடுமாறும் கட்சியைக் கரைசேர்க்க, ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் பா.ஜ.க. ஈடுபடுவதாக அங்கலாய்த்து, கட்சியினருக்கு புது விளக்கம் கொடுத்தார். வாஜ்பாய் ஆட்சியிலேயே அலைக்கற்றை மோசடி துவங்கிவிட்டதாகக் கூறி அதனால் ஒரு லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக அறிவித்தார் முகர்ஜி. இது வாயாடும் அமைச்சர் கபில் சிபலை வெல்லவே என்பதை சொல்லத் தேவையில்லை.

இத்தனைநாள் இந்த ரகசியத்தை ஏன் முகர்ஜி சொல்லவில்லை என்று எந்த ஊடக மேதாவியும் கேட்கவில்லை; முகர்ஜியும் சொல்லவில்லை. ஆயினும் முகர்ஜி சொன்னால் மறுப்பேது? இனி ஸ்பெக்ட்ரம் ராசாவை விட்டுவிட்டு மறைந்த பிரமோத் மகாஜன் மீது வழக்கு போட வேண்டியதுதானே மத்திய புலனாய்வு அமைப்பின் கடமை? சொன்னது சொன்னபடி செய்தி வெளியிட்டு ‘காங்கிரஸ் சேவகம்’ செய்வதுதானே ஊடகங்களின் கடமை?

அடுத்து, ‘நாடாளுமன்ற பொது கணக்குக் குழு முன் ஆஜராக தயார்’ என்று பிரதமர் மன்மோகன் சிங் உணர்ச்சிவசப்பட்டு (?) காங்கிரஸ் மாநாட்டில் அறிவித்ததைக் கண்டித்திருக்கிறார் முகர்ஜி. வானவில் ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையைக் கோரும் எதிர்க்கட்சிகளை முடக்க மன்மோகன் விடுத்த விண்ணப்பத்தையும் கூட, அவரைவிட அதிகாரம் படைத்தவர் போல விமர்சித்திருக்கிறார் முகர்ஜி.

இது தொடர்பாக பிரதமர் தன்னிடம் கலந்தாலோசித்திருந்தால் வேண்டாம் என்று கூறி இருப்பாராம். ஏனெனில் பிரதமர் நாடாளுமன்றத்திற்கு மட்டுமே பதில் கூற கடமைப்பட்டவராம். பொது கணக்குக் குழுவுக்கும் கூட்டுக் குழுவுக்கும் நாடாளுமன்றத்துடன் தொடர்பில்லை என்பதுபோல புது விளக்கம் அளித்திருக்கிறார் பிரணாப். வாய் பேசாத பிரதமர் மன்மோகன், வழக்கம்போல வாய்பேசவில்லை.

''நாடாளுமன்றக் கூட்டுக்குழு என்ன வானத்தில் இருந்தா குதித்தது?'' என்றும் அற்புதமான கேள்வியையும் எழுப்பி இருக்கிறார்- குதர்க்க செய்தி தொடர்பாளர் சதுர்வேதிக்கு போட்டியாக- முகர்ஜி. ''நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் காங்கிரஸ் தான் பொறுப்பு வகிக்கும். அதில் என்ன உண்மையை எதிர்க்கட்சிகள் கண்டுபிடிக்கும்?'' என்றும் வினா எழுப்பினார் முகர்ஜி. சிக்கலான நேரத்திலும் உண்மையை மனம்திறந்து சொல்ல மனத்துணிவு வேண்டும். அது தன்னிடம் இருப்பதை முகர்ஜி நிரூபித்திருக்கிறார்.

இப்போதைக்கு காங்கிரஸ் கட்சிக்குள் முட்டாள்தனமாக பேசுவதில் வல்லவர் யார் என்ற போட்டி நிலவுகிறது. இதில் முதலிடம் பெறுபவருக்கே அன்னை சோனியாவின் அருள் கிடைக்கும். விரைவில் மன்மோகன் சிங் பதவி விலகலாம் (அவர் மானஸ்தராம்!) என்ற யூகங்கள் கிளம்பியுள்ள நிலையில், இந்தப் போட்டியில் முன்னணி வகிக்கிறார் முகர்ஜி. பொதுத்துறை வங்கி நிதியை அதிகாரபீடத்தின் விருப்பத்திற்காக மடை மாற்றியதில் அனுபவம் வாய்ந்த முகர்ஜிக்கு விரைவில் உச்சபட்ச பதவி கிடைக்கக் கூடும். அதற்காகத் தானே இந்த நாடகம் எல்லாம் நடத்துவது?

இதனிடையே, மேற்கு வங்க மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ்- திரிணமூல் காங்கிரஸ் கூட்டணி வென்றால் பிரணாப் முகர்ஜி தான் முதல்வர் என்று செய்திகள் கசியவிடப்படுகின்றன. இது முதல்வர் கனவில் இருக்கும் மம்தாவை முடக்கவா? பிரதமர் கனவில் இருக்கும் முகர்ஜியை முடக்கவா? அன்னை சோனியாவுக்கே வெளிச்சம்.

------------------------------
நன்றி: விஜயபாரதம் (21.01.2011)

செவ்வாய், ஜனவரி 04, 2011

தேர்தலுக்கு ஆயத்தமாகும் கழகங்கள்

அருமனையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் ஜெயலலிதா .

வானவில் மோசடியில் நாடே பற்றி எரிந்துகொண்டிருக்கும் சூழலில், தமிழகத்தில் அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளில் ஆரவாரமின்றி இறங்கிவிட்டன, இரு கழகங்களும். வழக்கம் போல
இதனைத் துவக்கி வைத்திருப்பவர், திமு.க. தலைவர் கருணாநிதி தான். கடந்த டிசம்பர் மாதம், அவரைப் பொருத்த வரை, அள்ளி வழங்கிய மாதமாகிவிட்டது.

டாஸ்மாக் மதுக்கடை ஊழியர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக வேலைநிறுத்தம் செய்து தங்கள் சக்தியை காட்டியவுடன், டிச. 17 ம் தேதி டாஸ்மாக் ஊழியர்களே எதிர்பாராத வகையில் அவர்களுக்கு திடீர் சம்பள உயர்வை அறிவித்தார் கருணாநிதி. அதன்மூலமாக ஒவ்வொரு டாஸ்மாக் ஊழியரும் குறைந்தபட்சம் ரூ. 500 ஊதியம் அதிகமாகப் பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தவிர, மேலும் பல சலுகைகளை அவர்களுக்கு அள்ளி வழங்கியுள்ளார், தமிழக முதல்வர். தமிழக கருவூலத்தையும் சொந்தக் கருவூலத்தையும் நிரப்பும் அமுதசுரபிகள் டாஸ்மாக் ஊழியர்கள் அல்லவா? ஆயினும் பணி நிரந்தரமே தங்கள் இலக்கு என்று கோருகிறார்கள், டாஸ்மாக் ஊழியர்கள். தேர்தல்கால வாக்குறுதியாக அநேகமாக இது இடம் பெறலாம்.

அடுத்து, அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கும் திடீர் சம்பள உயர்வை அறிவித்தார், அமைச்சர் நேரு (டிச. 22). அதன்படி, ஒவ்வொரு அரசு போக்குவரத்துக் கழக ஊழியரும் குறைந்தபட்சம் ரூ. 2,000 சம்பளம் அதிகம் பெறுவார். ஒட்டுமொத்தமாக 40 சதவிகித சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். அரசு போக்குவரத்துக் கழகங்கள் அனைத்தும் திவால் நிலையில் திண்டாடிக் கொண்டிருந்தாலும், தேர்தல் நேரத்தைக் கருத்தில் கொண்டு, கருணைமழையைப் பொழிந்திருக்கிறார், கருணாமூர்த்தி.

மூன்றாவதாக, நியாயவிலைக் கடை ஊழியர்கள் மீது தமிழக முதல்வரின் திடீர்ப் பாசமழை பொழிந்திருக்கிறது. காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்று உணர்ந்த கூட்டுறவு நியாய விலைக்கடை ஊழியர் சங்கம் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நாள் குறித்தது. அதற்கு முந்தைய நாளே, சம்பள உயர்வு அறிவிப்பு வந்துவிட்டது (டிச. 28 ). இதன்படி, நியாயவிலைக் கடை ஊழியர்கள் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ரூ. ஆயிரம் சம்பளம் அதிகம் பெறுவர். மேலும் பல சலுகைகளும் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

அடுத்ததாக ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்படலாம். ஏனெனில் தற்போதுதான், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் கேட்டு அவர்களும் தொடர் போராட்டங்களில் இறங்கி இருக்கிறார்கள். இனிவரும் மாதங்களில் அரசு ஊழியர்களின் போராட்டங்களையும், தமிழக அரசின் சலுகை அறிவிப்புக்களையும் அதிகமாகவே எதிர்பார்க்கலாம்.

ஒட்டுமொத்த வாக்காளர்களில், விவரமுள்ள, நன்றியுள்ள, உறுதியான ஆதரவாளர்களான அரசு ஊழியர்களை குஷிப்படுத்துவது தானே ராசதந்திரம்? சாமானியனின் வீட்டில் அடுப்பு எரியத்தான் ஒரு ரூபாய் அரிசியும் இலவச கேஸ் அடுப்பும் இருக்கிறதே. போதாக்குறைக்கு 70 சதவிகித வீடுகளில் இலவச தொலைக்காட்சிப்பெட்டியும் வழங்கியாயிற்று. ஸ்பெக்ட்ரம் ஊழலாவது, மண்ணாவது என்ற கணக்கில் இருக்கிறார், கருணாநிதி.

இந்த மாதிரி தடாலடி அறிவிப்புகளை வெளியிட முடியாவிட்டாலும், அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதாவும் தேர்தலுக்கு ஆயத்தமாகி விட்டார். கூட்டணியில் எப்படியாவது குழப்பம் ஏற்படுத்தி 'ஊழல் கூட்டாளி'களைப் பிரித்துவிட அவர் நடத்திய நாடகங்கள் இதுவரை வெற்றி பெறவில்லை என்பது உண்மைதான். ஆனால், கருணாநிதிக்கு உள்ளூர நடுக்கத்தை ஜெயலலிதா ஏற்படுத்தி இருப்பது நிஜம். அதற்கு ஏற்றாற்போல, கருணாநிதியின் ஆரம்பகால வைரியான சம்பத்தின் இளவல் இளங்கோவன் தி.மு.க. மீது தொடுத்துவரும் தாக்குதல்கள் அமைந்திருப்பது தி.மு.க. தலைமைக்கு எரிச்சலூட்டி இருக்கின்றன.

காங்கிரஸ் தலைமை இளங்கோவனைக் கண்டிப்பதில்லை என்பதும் உண்மை. ‘கூட்டணி மாறாது’ என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் திவிவேதி அறிவித்திருப்பதும் உண்மை. இந்த இரண்டில் இறுதி உண்மை எதுவோ, இத்தாலி அன்னைக்கே வெளிச்சம்.

பிப்ரவரி மாதம் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான நடவடிக்கை அறிக்கையை மத்திய புலனாய்வு அமைப்பு உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்தாக வேண்டும். அப்போது ஆண்டிமுத்து ராசா கைது செய்யப்பட்டிருக்க வேண்டிய நிலை ஏற்படலாம். அப்போது ஊழல் பிசினால் ஒட்டப்பட்ட காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி உடையலாம் என்று அ.தி.மு.க. தலைவி கணக்கு போடுகிறார். இவரை நம்பி கூட்டணிக்குக் காத்திருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் ம.தி.மு.க.வும் தான் பரிதாபமாகத் திணறுகின்றன.

இந்நிலையில், தேர்தலுக்கு தொண்டர்களை தயார்ப்படுத்த அ.தி.மு.க. பொதுக்குழுவை டிச. 30 ல் கூட்டிய ஜெயலலிதா, ‘தொண்டர்கள் விரும்பும் கூட்டணியைக் கண்டிப்பாக அமைப்பேன்’ என்று பூடகமாகவே பேசினார். அவருக்கு இன்னும் காங்கிரஸ் மீது கண்மூடித்தனமான பாசம் இருப்பது இதிலிருந்து தெரிகிறது. கட்சிக்குள் நிலவும் உட்பூசலை மறந்து தேர்தலில் வெல்ல ரத்தத்தின் ரத்தங்கள் தயாராக வேண்டும் என்ற அவர், விலைவாசி உயர்வும் மின்வெட்டும் மக்களுக்கு ஏற்படுத்தியுள்ள சிரமத்தை பிரசாரம் செய்யுமாறு உத்தரவிட்டார்.

இதனிடையே, தமிழகத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக, தலைமை தேர்தல் ஆணையர் குரேஷியும் சென்னை வந்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்திச் சென்றிருக்கிறார். தமிழகம் முழுவதும் ஒரே நாளில் தேத்தல் நடத்த வேண்டும்; வாக்கிற்கு லஞ்சம் தருவதைத் தடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள்- அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையரிடம் முன்வைத்தவற்றில் முக்கியமானவை.

தேர்தல் கூட்டணி தொடர்பாக சிறு கட்சிகள் சிலவற்றுடன் ஏற்கனவே அ.தி.மு.க உடன்பாடு கண்டுவிட்டது. பா.ம.க தங்கள் வலையில் விழாது என்பதும் ஜெயலலிதாவிற்கு தெரிந்துவிட்டது. எனவே விஜயகாந்தின் தே.மு.தி.க.வுடன் அ.தி.மு.க. தூதர்கள் தொடர்பு கொண்டிருப்பதாக தகவல். அவரும் கூட்டணிக்கு உறுதியாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆயினும், வருமானவரித் துறையை கைவசம் கொண்டுள்ள மத்திய அரசை இப்போதைக்கு பகைத்துக்கொள்ள வேண்டாம் என்று அவர் நிதானிப்பதாகவும் வதந்தி.

இப்போதைய நிலையில், ‘ராசா புகழ்’ ஊழல் தொடர்பான கட்சிகளின் சங்காத்தமே வேண்டாம் என்று அவரிடம் நெருங்கிய வட்டாரங்கள் ஓதி இருப்பதாகவும், தேர்தல் வரை குழப்பமான அறிவிப்புகளையே தொடர அவர் திட்டமிட்டிருப்பதாகவும், நெருப்புக்கோழியார் கூறுகிறார் (மற்ற பறவைகள் வேறு பத்திரிகைகளுக்கு உளவு சொல்லச் சென்று விட்டதால், நெருப்புக்கோழியைத் தான் விஜயபாரதம் வாசகர்கள் நம்ப வேண்டும்).

கூட்டணி முயற்சிகளைத் தவிர, சிறுபான்மையினரை தாஜா செய்யும் பணியிலும் ஜெயலலிதாவே முன்னிற்கிறார். குமரி மாவட்டம், அருமனையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் தலைமை விருந்தினராகப் பங்கேற்ற அவர், அங்கு கூடியிருந்த கிறிஸ்தவர்களே ஆச்சரியப்படும் வகையில் கிறிஸ்துவக் கதைகளைக் கூறி கைதட்டல்களைப் பெற்றார். சென்னை ஹோலி ஏஞ்சல் பள்ளியில் பயின்றபோது மதிய உணவு இடைவேளையில் புனித பைபிள் படிப்பாராம் கோமளவல்லி (அப்போது அதுதானே அவரது பெயர்?). இதை ஜெயலலிதா சொன்னபோது, "இவரா கரசேவையை ஆதரித்தார்?' என்று அங்கிருந்த கிறிஸ்தவ பெண்கள் தங்களைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டதையும் காண முடிந்தது.

கிட்டத்தட்ட கிறிஸ்தவ மாநாடு போலவே நடத்தப்பட்ட அந்த விழாவில், தானும் வாக்கு வங்கியைத் துரத்தும் அரசியல்வாதிதான் என்பதை ஜெயலலிதா காட்டினார். ''இஸ்லாமியர்கள் புனிதப் பயணம் செல்வதற்கு இருக்கும் சலுகைபோல் இஸ்ரேலுக்கு கிறிஸ்தவர்கள் புனித யாத்திரை செல்வதற்கான கோரிக்கையை மீண்டும் நான் ஆட்சிக்கு வந்தால் உறுதியாக நிறைவேற்றுவேன். கிறிஸ்தவ தேவாலயங்கள் கட்டுவதற்கு உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று வலியுறுத்தினீர்கள்.
.
அவரவர்களுக்கு சொந்தமான இடத்தில் தேவையானதை கட்ட தடையே இல்லை. ஆகையால் தேவாலயங்கள் கட்டலாம். கர்த்தரின் அருளால் ஆட்சி அமைந்தால் அது நிறைவேற்றப்படும். சமயத்தின்பேரால் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் ஆதிதிராவிடர்களை மீண்டும் ஆதிதிராவிடராக ஆக்கவேண்டும் என்ற கோரிக்கையும் கர்த்தரின் அருளால் கழக அரசு அமைந்தால் நிறைவேற்றப்படும்'' என்றெல்லாம் முழங்கினார்.

அதே நாளில் கருணாநிதியும் சென்னையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில், கிறிஸ்தவர்களை மயக்க உருகி உருகிப் பேசினார். என்ன இருந்தாலும் திரை நடிகை ஜெயலலிதாவுடன் அரசியல் நடிகர் கருணாநிதியால் இவ்விஷயத்தில் போட்டியிட முடியவில்லை. ''நீங்கள் ஆட்டுவித்தால் ஆடுவேன். உங்கள் நலனுக்காக போர்க்கோலமும் பூணுவேன்'' என்று அவரும் செப்பிப் பார்த்திருக்கிறார். என்ன காரணமோ, இதுவரை தி.மு.க.வின் முன்னணி கிறிஸ்தவ பாதிரியாராக விளங்கிய ஜெகத் கஸ்பரை அந்த நிகழ்ச்சியில் காண முடியவில்லை. என்ன காரணம்? மத்திய புலனாய்வுத் துறையிடம் தான் கேட்க வேண்டும்.

இந்த கிறிஸ்துமஸ் விழாவுக்குப் பிறகு, 'மதச்சார்பின்மையை குத்தகைக்கு எடுத்தது யார்?' என்ற வழக்கமான விவாதத்தை பத்திரிகைகள் வாயிலாக கருணாநிதி துவக்கியுள்ளார். மதமாற்றத் தடை சட்டம் கொண்டு வந்தது யார்? என்ற அவரது கேள்விக்கு, அதை தானே ரத்து செய்ததாக ஜெயலலிதா கூறி இருக்கிறார். மக்கள் மறதிதான் அரசியல்வாதிகளுக்கு மூலதனம் என்று தெரியாமலா சொன்னார்கள்?

அடுத்து இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை ஜெயலலிதா எதிர்த்தார் என்று கிளப்பி இருக்கிறார் திராவிட சூரியன். இதற்கு எதிர்ப்பாட்டு பாட அம்மையாரும் தயாராகி வருகிறார். மொத்தத்தில் தேர்தல் அறிவிக்கப்படும் முன்னரே தமிழக மக்கள் தங்கள் முட்டாள்தனத்தை மூட்டை கட்டி பரணில் போட வேண்டியதுதான் போலிருக்கிறது.

அரசு ஊழியர்கள் ஒவ்வொரு பிரிவினருக்கும் அள்ளி வழங்கி அவர்களது வாக்குக்களைப் பொறுக்க முதல்வரே முன்னிற்கிறார். சிறுபான்மையினரிடம் கெஞ்சிக் கொஞ்சி வாக்கு வேட்டையாட இரு கழகத் தலைமைகளும் கிளம்பிவிட்டன. அரசு ஊழியராகவும் சிறுபான்மையினராகவும் இல்லாத மக்களின் நிலை தான் பரிதாபம். ஒருவேளை அவர்களுக்கு வாக்குப்பதிவு நாளுக்கு முந்தைய தினம் அதிர்ஷ்டக் காற்று வீட்டுப்பக்கமே வீசக் காத்திருக்கிறதோ என்னவோ...?

----------------------------
நன்றி: விஜயபாரதம் (14.01.2011)

.