ஞாயிறு, செப்டம்பர் 19, 2010

காற்றின் திசை தெரியாமல் கப்பல் ஓட்டலாமா?

சீட்டாட்டத்தில் ' கோமாளி' தனித்து எதுவும் செய்ய முடியாமல் இருக்கலாம். ஆனால், ஆட்டத்தின் போக்கை நிர்ணயிப்பதில் அதன் பங்கு அனைவரும் அறிந்தது தான். அதுபோல, தமிழக அரசியல் களத்தில் தே.மு.தி.க.வின் நிலை தேர்தல் முடிவைத் தீர்மானிப்பத்தில் பெரும் பங்கு வகிப்பதாக உள்ளது.

எனவேதான், தமிழகத்தில் தேர்தல் பரபரப்பு தொற்றியதிலிருந்தே, தே.மு.தி.க.வின் அடுத்தகட்ட நகர்வு எப்படி இருக்கும் என்பது குறித்த ஹேஷ்யங்கள் கிளம்பத் துவங்கிவிட்டன. தமிழகத்தை மாறி மாறி ஆண்டுவரும் இரு திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக வேறு கட்சி வேண்டும் என்ற தமிழக மக்களின் உள்ளக் கிடக்கையை நிறைவேற்றும் விதமாக இருப்பதால்தான், தே.மு.தி.க.வுக்கு மக்கள் ஆதரவு குவிந்தது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதே சமயம், மிதமிஞ்சிய தற்பெருமையால், தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் இடம்பெறும் வாய்ப்பை அக்கட்சி தற்போது தவற விட்டுவிடக் கூடாது.

தமிழகத்தில் என்று காங்கிரஸ் ஆட்சி வீழ்த்தப்பட்டதோ, அன்றே மாநிலத்தின் கேடு துவங்கிவிட்டது. இதையே, ''தமிழகத்தில் விஷக்கிருமிகள் நுழைந்துவிட்டன'' என்று கூறினார் அன்றைய முதல்வர் பக்தவத்சலம். அன்று துவங்கி, இன்று வரை, தமிழகம் கவர்ச்சிகரமான வேஷங்களுக்கும், பிரிவினை கோஷங்களுக்கும் கொடி பிடித்து வீணாகப் போனது. தி.மு.க.வும், அ.தி.மு.க.வும், மாறி மாறி ஆண்டாலும், இந்நிலையில் பெருத்த மாற்றம் ஏற்பட்டுவிடவில்லை. இரு கட்சிகளும் ஒருவரை ஒருவர் பழிப்பதிலும் ஒழிப்பதிலும் செலுத்திய கவனத்தை மாநில நலனுக்காக காட்டவில்லை.

இதன் காரணமாகவே, 2005 -ல் நடிகர் விஜயகாந்த் துவக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இளைஞர்களிடையிலும் பொதுவான வாக்காளர்களிடமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது; பல அரசியல் கட்சிகளிலிருந்து விலகி ஆயிரக் கணக்கானோர் தே.மு.தி.க.வில் சேர்ந்தனர். இந்த அதிரடியை கருணாநிதியும் ஜெயலலிதாவும் எதிர்பார்க்கவில்லை.

கட்சி ஆரம்பித்த புதிதிலேயே 2006 -ல் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வந்தது. அதில் விஜயகாந்த் எடுத்த முடிவால், அ.தி.மு.க.வின் வெற்றி பறிக்கப்பட்டது. ''எந்தக் கட்சியுடனும் கூட்டில்லை; அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டி'' என்ற அவரது அறிவிப்பால், தே.மு.தி.க.வினர் உற்சாகமாக களம் இறங்கினர். மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட தே.மு.தி.க. ஒரு தொகுதியில் மட்டுமே வென்றது. அதுவும் கட்சித் தலைவர் விஜயகாந்தின் விருத்தாசலம் தொகுதி மட்டுமே. ஆயினும் அத்தேர்தலில், 27.64 லட்சம் வாக்குகள் பெற்று, மொத்த பதிவு வாக்குகளில் 8.38 சதவீதம் பெற்றது தே.மு.தி.க; வாக்குகள் சிதறியதால் சுமார் 40 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றிவாய்ப்பை இழந்தது.

வாக்குகள் பிளவுபட்டதால், தமிழகத்தில் முதல்முறையாக சிறுபான்மை அரசு அமையும் சூழல் ஏற்பட்டது; கருணாநிதி ஐந்தாவது முறையாக முதல்வரானார். இதன்மூலம், தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தி என்பதை நிரூபித்த தே.மு.தி.க, அடுத்து வந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் தனித்து களம் கண்டது. தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிட்ட தே.மு.தி.க., இம்முறை 30 லட்சம் வாக்குகள் பெற்றது. அதன் வாக்கு விகிதம், பதிவான மொத்த வாக்குகளில் 10 சதவீதமாக உயர்ந்தது; பல தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணியின் தோல்விக்கும் காரணமானது.

அக்கட்சி ஒரு லட்சத்திற்கு மேல் வாக்குகள் பெற்ற மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 9. அதன்மூலமாக, தனது இருப்பை மேலும் உறுதிப்படுத்திக் கொண்ட விஜயகாந்த், இரு திராவிட கட்சிகளுக்கும் ஒரே மாற்று தான் மட்டுமே என்று முழங்கினார். அதில் ஓரளவு நியாயம் இருக்கவே செய்கிறது.

தொடர்ந்து இரு தேர்தல்களில் கிடைத்த வரவேற்பால், விஜயகாந்த் உற்சாகம் அடைந்து இரு கட்சிகளையும் சமதூரத்தில் வைத்து விமர்சித்து வருகிறார். இது அவரது அரசியல் பாணி. 2009 தேர்தலின்போது, ''மக்களுடன் மட்டுமே கூட்டணி'' என்று அவர் முழங்கினார். அதற்கு அவருக்கு பலன் கிடைத்துள்ளது. அவர் தனது பாதை சரி என்று நம்புகிறார். அதில் தவறில்லை. அதே சமயம் நாட்டுநடப்பை கூர்ந்து கவனிக்காமல் அரசியல் நடத்துவது, காற்றின் திசை அறியாமல் கப்பல் ஓட்டுவது போன்றதாகிவிடும். இதை ‘கேப்டன்’ ஏனோ உணர மறுக்கிறார்.

கடந்த இரு தேர்தல்களிலும் தே.மு.தி.க. தனித்து போட்டியிட்டதே தி.மு.க.வின் திட்டப்படி நடந்த அரசியல் விளையாட்டு என்ற யூகங்கள் உண்டு. தி.மு.க. மீதான மக்களின் அதிருப்தி, பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வுக்கு சாதகமாகிவிடக் கூடாது என்பதற்காக மாறன் சகோதரர்கள் நிகழ்த்திய ராஜதந்திர நடவடிக்கையே அது என்று அப்போதே பேச்சு எழுந்தது. தே.மு.தி.க. தனித்து போட்டியிட்டதால் பலன் அடைந்த கட்சி தி.மு.க.வே என்பதால் இந்த யூகங்கள் ஓரளவு உண்மையாகவே காட்சி அளித்தன.

இந்நிலையில், தற்போது தமிழகத் தேர்தல் களத்தில் மீண்டும் தே.மு.தி.க.வின் முக்கியத்துவம் பெருகி உள்ளது. இதுவரை, விஜயகாந்த் குறித்து உதாசீனமாகப் பேசிவந்த ஜெயலலிதா கூட, கூட்டணிக்கு தயார் என்று பச்சைக்கொடி காட்டிவிட்டதாக தகவல். நடிகர் கட்சி என்று ஏளனம் பேசிய மருத்துவர் ராமதாசும் கூட, விஜயகாந்த் கட்சியுடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு மழுப்பலான பதில் கூறி இருக்கிறார். ஆனால், விஜயகாந்த் உச்சாணிக் கொம்பில் அமர்ந்துகொண்டு இறங்க மறுக்கிறார்.

தமிழகத்தின் 14-வது முதல்வர் ஆவதற்கு விஜயகாந்திற்கு ஆசை இருக்கிறது. அவரது அதிர்ஷ்ட எண் ஐந்தாம்! அவரது மைத்துனரும், கட்சியின் பொதுச்செயலாளருமான சுதீஷ் கூறியிருக்கிறார். ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால், தமிழகத்தின் தற்போதைய நிலையை சிறிதேனும் விஜயகாந்த் உணர வேண்டாமா?

திராவிட அரசியலில் முக்குளித்த பண்ருட்டி ராமசந்திரன் அவைத்தலைவராக உள்ள நிலையில், மாநிலம் எதிர்நோக்கும் தற்போதைய தேவை என்ன என்பதை அவராவது சுட்டிக் காட்டியிருக்க வேண்டும். மாறாக அவரும், ''தனித்து போட்டி'' என்று கொம்பு சீவி விடுகிறார். இதனால் பலன் அடையப் போவது கண்டிப்பாக கருணாநிதி மட்டுமே.

வாரிசு அரசியலின் உச்ச நிலை, கடும் விலைவாசி உயர்வு, இதுவரை உலகம் காணாத ஊழல், அனைத்து துறைகளிலும் ஒரு குடும்ப ஆதிக்கம், இலங்கைத் தமிழர் பிரச்னையில் அநீதி, தமிழகத்தின் உரிமைகள் தரைவார்க்கப்படுவது என்று, தற்போதைய 'மைனாரிட்டி' தி.மு.க. அரசின் பாதிப்புக்களை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். அனைத்திற்கும் மேலாக, தமிழகத்தையே நாசமாக்கிவரும் 'டாஸ்மாக்' மது வியாபாரம், இலவச திட்டங்கள், வாக்குக்கு கையூட்டு என்று - இதுவரை கண்டிராத சீரழிவுகளை தமிழகம் சந்தித்துவரும் நிலையில், கருணாநிதிக்கு சாதகமாக 'கருப்பு எம்.ஜி.ஆர்' வாக்குகளைப் பிரித்துவிடக் கூடாது.

இதனிடையே விஜயகாந்தை மிரட்டும் வகையில், அவர் கருப்புப்பணம் வைத்திருப்பதாக கருணாநிதி பேசியது புரிந்த புதிர். எதிர்க்கட்சிக் கூட்டணியில் விஜயகாந்த் சேர்ந்துவிடக் கூடாது என்பதை மறைமுகமாக வலியுறுத்தவே இந்த எச்சரிக்கை என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். இதற்கு விஜயகாந்த் சரியான பதிலடி (கருணாநிதி குடும்பத்தினர் எடுக்கும் திரைப்படங்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது?) கொடுத்தார். கடைசியாக ''மக்கள் விரும்பும் கூட்டணி அமைப்பேன்'' என்று சற்றே இறங்கி வந்திருக்கிறார், விஜயகாந்த்.

தற்போது தமிழக அரசியலில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளும் வாய்ப்பு காணப்படுகிறது. இந்த அணியில் தனிப்பட்ட விருப்பங்களை மறந்து அனைவரும் ஒன்றுபட்டால், தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வாய்ப்பு ஏற்படும். அதிகார துஷ்பிரயோகம், பணபலம், அரசு ஊழியர் உதவி ஆகியவற்றை மீறி தி.மு.க.வை வெல்ல வேண்டுமானால் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டாக வேண்டும். ''தனித்து போட்டியிட்டு, தி.மு.க.வுக்கு விஜயகாந்த் துணை போகக் கூடாது'' என்று எச்சரித்திருக்கிறார் பா.ஜ.க. மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் .

அதற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக, ''முப்பது- நாற்பது தொகுதிகளுக்காக கூட்டணி அமைக்க மாட்டேன்'' என்று முழங்குவது விஜயகாந்த்திற்கு விவேகம் ஆகாது. ''தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் மக்களுக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை. அவ்வாறு செய்திருந்தால் நான் ஏன் புதிய கட்சியைத் துவங்க வேண்டும்?'' என்றும் அவர் கேட்டிருக்கிறார். உண்மைதான். அதே சமயம் தற்போதைய தீமையில் எது பெரிய தீமை என்று எடை போட்டுப் பார்த்து, அதை விலக்க வேண்டிய நிலையில் தமிழகம் உள்ளது என்பதை தே.மு.தி.க. தலைவர் உணர வேண்டும். அதை விடுத்தது வீராவேசமாக முழங்குவது ‘குறுக்குசால்’ ஓட்டுவதாகவே ஆகிவிடும்.

அடுத்துவரும் ஆண்டுகள் தமிழக அரசியலில் பெரும் மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ள ஆண்டுகள். இரு திராவிடக் கட்சிகளும் தங்கள் சுயத்தை இழத்து, ஆதரவுத்தளத்தை குறுக்கிவரும் நிலையில், தே.மு.தி.க.வுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. அதற்கு ஆயத்தமாக, வரும் தேர்தலில் கூட்டணி அமைத்து, அனுபவமும் வெற்றிகளும் பெற வேண்டிய காலகட்டம் இது. குறுகிய லாபங்களுக்காக அதனை விஜயகாந்த் இழந்துவிடக் கூடாது.

இப்போது விஜயகாந்த் முன்னுள்ள அரிய வாய்ப்பு, அ.தி.மு.க. கூட்டணியில் சரியாக பேரம் பேசி அதிக தொகுதிகளைப் பெறுவதே ஒழிய, தனித்து போட்டியிடுவதல்ல. அங்கு ஏற்கனவே உள்ள ம.தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள், சில உதிரி கட்சிகள், எதிர்காலத்தில் சேர வாய்ப்புள்ள பா.ம.க. ஆகியவற்றை உத்தேசித்து சரியாக சீட்டுகளைக் கோர்த்தால், அரசியல் வெட்டாட்டத்தில் அவர் வெல்லலாம். அதை விடுத்து வீம்புக்கு அல்லது சுயலாபத்திற்கு செயல்பட்டால், 'சீட்டாட்ட கோமாளி' என்ற நிலையிலிருந்து 'அரசியல் கோமாளி' என்ற நிலைக்கு அவர் தரம் தாழ்ந்துவிட நேரலாம்.
------------------------------------------------------------
பெட்டிச் செய்தி

காங்கிரசுடன் கூட்டணி?


காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் விஜயகாந்தை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறியதும் பல அரசியல் கணக்கீடுகளை உருவாக்கியது. ஆயினும், தற்போதைய நிலையில் நெருங்கிய ஊழல் கூட்டாளியான தி.மு.க.வை விட்டு விலக காங்கிரஸ் முன்வருமா? காங்கிரஸ் கட்சியில் இளங்கோவன் நிலையே திரிசங்கு சொர்க்கமாக உள்ள நிலையில், அவரது சந்திப்பு பத்திரிகை விற்பனையைப் பெருக்க உதவும் பரபரப்பு செய்திகளுக்கு வேண்டுமானால் பயன்படலாம்.

பொதுவாகவே காங்கிரஸ் மீது விஜயகாந்திற்கு ஒரு பிடிப்பு மூப்பனார் காலந்தொட்டே உள்ளது என்கிறார்கள். போதாக்குறைக்கு தற்போது மத்தியில் அக்கட்சி அதிகாரத்திலும் உள்ளது. எதற்கு வீண்வம்பு என்பதற்காகவே காங்கிரஸ் ஆதரவு பொன்மொழிகளை அவர் உதிர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து திமு.க.வை நீக்கினால் காங்கிரசுடன் கைகோர்க்க தயார் என்று அவர் கூறியிருப்பதாகவும், அதை காங்கிரஸ் மேலிடம் ஆறப் போட்டிருப்பதாகவும் தகவல். இது உண்மையா? கருணாநிதியே அறிவார்!
------------------------------------------------------------
நன்றி: விஜயபாரதம் (24.09.2010)

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக