ஞாயிறு, செப்டம்பர் 26, 2010

பேரவைத் தேர்தல் முன்கூட்டியே வருமா?


வறண்டு பாலையாகக் காட்சியளித்த நிலம், மழைத்துளி விழுந்தவுடன் பசுமைக்கு மாறுவதுபோல, தமிழக அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது. எல்லாப் பெருமையும் ஜெயலலிதாவுக்கே!

திருச்சியில் ஆக.14ல் ஜெயலலிதா நடத்திக் காட்டிய அ.தி.மு.க கண்டன ஆர்ப்பாட்டம், பலரையும் பலவிதமாக யோசிக்கச் செய்துள்ளது என்றால் மிகையில்லை.

தி.மு.க அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து, மாவட்டம் தோறும் அ.தி.மு.க கண்டன ஆர்ப்பாட்டங்-களை நடத்தியபோது, தமிழக ஊடகங்கள் கேலியாகப் பார்த்தன. ஒவ்வொரு பகுதியிலும் நிலவும் பிரத்யேகப் பிரச்சினைகளை முன்னிறுத்தி அ.தி.மு.கவினர் அந்தந்தப் பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளாகவே ஆர்ப்பாட்டம் நடத்தி வந்துள்ளனர். அப்போதெல்லாம், எதிர்க்கட்சி என்பதற்காகவே வீம்புக்கு போராட்டம் நடத்துவதாக ஜெயலலிதாவை பத்திரிகைகள் விமர்சித்ததுண்டு.

இப்போது காலம் மாறிவிட்டது. ‘காலம் என்பது கங்கெனச் சுழன்று கீழ் மேலாகும்; மேல் கீழாகும்’ என்ற தத்துவம் புரியத்துவங்கிவிட்டது. குறிப்பாக, அ.தி.மு.க தலைவி ஜெயலலிதாவே கோவையில் நடந்த (ஜூலை 13) கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னின்று நடத்தியபோது, அ.தி.மு.க வினரின் அமைப்பு வலிமையும், கடந்த 2 ஆண்டுகளாக ஆர்ப்பாட்டம் நடத்திப் பெற்ற பயிற்சியும் தெரியவந்தன. ஆட்சி மீதான அதிருப்தி இல்லாமல், இவ்வளவு மக்கள் கூடுவது சாத்தியமல்ல என்பதும் நிதர்சனம்.

கோவையில் கூடிய கூட்டம், செம்மொழி மாநாட்டு மிதப்பில் இருந்த தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு நெற்றியடியாக இருந்தது. இதற்கு பதிலடி கொடுக்க ஆக.2ல் தி.மு.க.வினர் நடத்திய சாதனை விளக்கப் பொதுக்கூட்டம், எதிர்பார்த்தபடி மக்களைத் திரட்ட முடியாமல், சோதனை விளக்க கூட்டமாகிவிட்டது.

இந்நிலையில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, திருச்சியிலும் (ஆக.14) மிகப் பிரமாண்டமான கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி, தமிழக அரசை மிரட்டியிருக்கிறார் ஜெயலலிதா. புறநகர்ப் பகுதியான பொன்மலையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம், மாபெரும் மாநாடு போல மாறிவிட்டது. நிகழ்ச்சி நடந்த நாள் முழுவதும் திருச்சி ஸ்தம்பித்தது; பிரதான சாலைகளில் போக்குவரத்து சீராக மறுநாள் காலை ஆகிவிட்டது.

இந்த அளவு கூட்டத்தை ஜெயலலிதாவே எதிர்பார்த்-திருக்கவில்லை என்பது, அவரது பேச்சில் தெரிந்தது. “28 ஆண்டு காலமாக நான் அரசியலில் இருக்கிறேன். இதுவரை என் வாழ்நாளில் இதுபோன்ற கூட்டத்தைக் கண்டதில்லை” என்று பேசிய ஜெயலலிதா, ‘தமிழகத்தைப் பாழ்படுத்தும் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுங்கள்’ என்று அறைகூவினார்.

இதன்மூலம், தமிழகத்தில் ஸ்தாபன ரீதியாக வலுவான பெரிய கட்சி அ.தி.மு.கவே என்பது நிரூபணமாகி இருக்கிறது. ரத்தத்தின் ரத்தங்கள் புத்துணர்வுடன் தேர்தலுக்கு ஆயத்தமாகிவிட்டனர். திருச்சியிலும் பதிலடி கொடுக்கத் துடித்த உடன்-பிறப்புகளை அமைதிப்படுத்தி இருக்கிறது கழகத் தலைமை. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு?

மதில் மேல் பூனைகளாகத் தத்தளிக்கும் பல்வேறு கட்சிகளை, திருச்சி நிகழ்வு சிந்திக்கச் செய்துள்ளது. ஏற்கனவே, புதிய தமிழகம், த.மு.மு.க கட்சியினர். ஜெயலலிதாவைச் சந்தித்துவிட்டனர். ம.தி.மு.க, இந்திய கம்யூ, மார்க்சிஸ்டு கட்சிகள் தற்போது அ.தி.மு.க கூட்டணியில் உள்ளன. மருத்துவர் ராமதாசும், கேப்டன் விஜயகாந்தும் இப்போது ஜெயலலிதா பக்கம் நெருங்கி வருவதாக, கழுகுகளும் ஆந்தைகளும் பிரசன்னம் பகரத் துவங்கி இருக்கின்றன.
பா.ம.க தலைவர் ராமதாஸ், வெளிப்-படையாகவே தி.மு.க அரசைச் சாடத் துவங்கிவிட்டார். விரைவில் அன்புச் சகோதரியை சந்தித்து ‘ராக்கி’ கட்டுவதற்கான நாள் கூடி வருகிறது.

இரு கழகங்களையும் சமநிலையில் பார்ப்பதாகக் கூறிவந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தும் தடுமாற்றத்தில் இருப்பதாகத் தகவல். அவரது கட்சியில் பொறுப்புகளில் இருப்பவர்-கள் பலரும் கூடுவிட்டு கூடு பாய்ந்தவர்கள்தான். அவர்களது சக்தியை உறிஞ்சித்தான் விஜயகாந்த் வலம் வருகிறார். அ.தி.மு.க பலம் பெறுவதால், தே.மு.தி.க கூடாரம் காலியாகக் கூடும் என்று, அவரது நெருங்கிய சகாக்கள் எச்சரித்திருப்பதாக குருவியார் கூறுகிறார்.

தி.மு.கவை விட்டு விலகி வந்தால் காங்கிரசுடன் கை கோர்க்க அவர் தயார். (வருமானவரி இலாகா எதற்கு இருக்கிறதாம்?) அப்படி கூட்டணியை காங்கிரஸ் முறிக்குமானால், அ.தி.மு.கவுக்காக முறிக்குமா? தே.மு.தி.கவுக்காக முறிக்குமா? இதற்கான எளிய பதில் விஜயகாந்திற்கு தெரியாமல் இருக்காது.

காங்கிரசிலும் அ.தி.மு.க ஆதரவுக் குரல்கள் ஒலிக்கத் துவங்கிவிட்டன. “எத்தனை நாட்களுக்கு பல்லக்கு தூக்குவது?” என்ற ஆயாசம் அவர்களுக்கு. அடுத்தடுத்து கூட்டணிக் கட்சிகளை அரியணை ஏற்றுவதற்கா அரசியல் நடத்துவது என்று காங்கிரஸ் கட்சியின் இளைய தலைமுறை கேள்வி எழுப்பத் துவங்கி இருப்பது நல்ல சகுனம் தான். ஆனால், தமிழகத்தைப் பொருத்த மட்டிலும் ‘சாறுண்ணி’யாகவே வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம் காங்கிரசுக்கு.

இருப்பினும், வரும் தேர்தலில் காங்கிரசை சமாளிப்-பது கருணாநிதிக்கு சிரமமாகவே இருக்கும். இப்போதே 78 சீட் வேண்டும் என்று கொடி பிடிக்கும் காங்கிரஸ்-காரர்களை, பாம்பென்று அடிக்கவும் முடியாமல், பழுதென்று மிதிக்கவும் முடியாமல் தவிக்கிறார் செம்மொழி கொண்டான். போதாக்குறைக்கு “ஆட்சியை மாற்ற ‘கை’ கோர்க்கத் தயார்!” என்று முழங்கி வயிற்றில் புளியைக் கரைக்கிறார் புரட்சித்தலைவி. 87 வயது முதியவர் என்ன தான் செய்வார்?

ஜெயலலிதாவின் ராஜதந்திரப் பேச்சால் கருணாநிதி நெளிவது போலவே, கூட்டணித் தோழர்களான வைகோ, நல்லக்கண்ணு, ராமகிருஷ்ணன் ஆகியோரும் நெளி-கின்றனர். அவரவர் பாடு அவரவர்களுக்கு. இதுபற்றி ஜெயலலிதா கவலைப்படுவதாகத் தெரியவில்லை. தற்போதைய தமிழக அரசியலில் கூட்டணிக் குழப்பமில்லாத ஒரே கட்சி பா.ஜ.க மட்டும்தான் போலிருக்கிறது.

கோவை, திருச்சியைத் தொடர்ந்து மதுரை, நெல்லை, சென்னையிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களை ஜெயலலிதா நடத்தக் கூடும் என்ற உளவுத் தகவலால், தி.மு.க வட்டாரம் திகைப்பில் உள்ளது. அடுத்த சட்டப் பேரவைத் தேர்தல் 2011 மே மாதத்திற்குள் நடத்தப்பட வேண்டும். அதுவரை காலம் தாழ்த்தி, அ.தி.மு.க பலத்தை அதிகரிக்க வாய்ப்பு உருவாக்கி விடக் கூடாது என்ற எண்ணமும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

எனவே, இதுவரை காணாத சலுகை அறிவிப்புகளை உடனடியாக வெளியிட்டு, முன்-கூட்டியே தேர்தலை நடத்த தி.மு.க தலைமை திட்டமிடுவதாகவும் தகவல். வாக்காளர் சேர்க்கை, திருத்தப் பணிகள் அவசரமாக நடத்தப்பட்டிருப்ப-தையும், “முன்கூட்டியே தமிழகத்தில் பேரவைத் தேர்தல் வராது” என்று புதிய தேர்தல் அதிகாரி கூறியிருப்பதையும் பார்க்கும்போது, தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் டிசம்பர் அல்லது ஜனவரியில் நடத்தப்பட வாய்ப்புள்ள-தாகவே தோன்றுகிறது.

திருப்பூரில் அரசுக்கு பாராட்டுவிழா நடத்தியதற்காக மார்க்சிஸ்டு கம்யூ. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எல்.எல்.ஏ கோவிந்தசாமி, தி.மு.கவில் ஆதரவாளர்க-ளுடன் இணைவது, இந்த சந்தேகத்தை வலுப்-படுத்துகிறது. முன்கூட்டியே தேர்தல் வரலாம் என்ற கணக்கீட்டுடன் அ.தி.மு.கவும் காய்களை நகர்த்தத் துவங்கிவிட்டது.

இப்போதைக்கு, காங்கிரஸ் கூட்டணி கைநழுவிப் போகாது என்று கருணாநிதி நம்பிக்கையோடு இருக்கிறார்- சோனியா அம்மையார் மீதான நம்பிக்கையில். கருணாநிதி காலை வார மாட்டார் என்றுதான் அன்று வாஜ்பாயும் நம்பிக்கையுடன் இருந்தார். சரித்திரம் மாறலாம்; அப்போது சரித்திரப் புத்தக பாடத்தில் இடம் பெறுவது மட்டுமல்லாது, சரித்திரம் கற்பிக்கும் பாடத்தையும் கற்றாக வேண்டியிருக்கலாம்.

மத்தியில் தற்போது நிலவும் நக்சலைட் பிரச்சினை, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல், காஷ்மீர் பிரிவினை கோஷம் போன்றவற்றிலிருந்து மீள முடியாமல் தத்தளிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு, தமிழக அரசியலில் ஆர்வம் காட்ட நேரமில்லை. எனவே தான் இங்கு ஒவ்வொரு காங். கோஷ்டியும் ஒவ்வொரு விதமாக முழங்கி, தங்கள் இருப்பை நிரூபித்துக் கொண்டுள்ளன.

‘கூட்டணியை பாதிக்கும் விதமாக யாரும் பேசக் கூடாது’ என்று தங்கபாலு எச்சரித்திருப்பது ஆக.17ஆம் தேதிய நிலவரம். அரசியலில் எதுவும் நிகழலாம் என்பது கருணாநிதியின் கலவரம்.

நாளை நடப்பதை யாரறிவார்? இப்படி நடக்கும் என்று அனுமானிப்பவன் அரசியல் விமர்சகன்; நடத்திக் காட்டுபவர்கள் அரசியல்வாதிகள் தானே?
.
-------------------------------
நன்றி: விஜயபாரதம் (03.09.2010)


.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக