சனி, செப்டம்பர் 18, 2010

தரித்திர நாராயண நம:

'நான் கடவுள்' படத்தின் விமர்சனம்

பிச்சைக்காரர்களும் பாம்பாட்டிகளும் வாழும் நாடு தான் இந்தியா என்ற தோற்றம் உண்டு. இந்தியாஅடிமைப்பட்டிருந்த காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட சித்திரம் அது. இந்தக் கண்ணோட்டம் முற்றிலும் உண்மையானது அல்ல என்றாலும் புறக்கணிக்க முடியாதது.

இந்தியா இப்போது வளர்ந்துவிட்ட தேசம்; அணு ஆயுத நாடாகவும், சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் நாடாகவும் வளர்ந்துவிட்ட தேசம். கிராமப்புறங்கள் எல்லாம் நகர்ப்புற பவுடர் பூசிவரும் நிலையில் பாம்புகள் அருகி வருகின்றன. இனிமேல் பாம்பாட்டிகளை நினைவுகூர முடியுமா என்பது சந்தேகம் தான்.

ஆனால், பிச்சைக்காரர்கள் இன்னும் இருக்கிறார்கள்; அதிகரித்தபடியே இருக்கிறார்கள்; இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இருக்கிறார்கள்; பொருளாதார வல்லரசுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனாவிலும் இருக்கவே செய்கிறார்கள். ஆயினும் இந்தியாவை 'பிச்சைக்காரர்கள் தேசம்' என்று வர்ணித்து மகிழ்கிறார்கள்.

ஹாலிவுட் இயக்குனர் 'ஸ்லம்டாக் மில்லியனர்' படம் எடுத்து, இந்த அற்ப சந்தோஷத்தையே வெளிப்படுத்தினார். அதற்கு இசை அமைத்த ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருதுகள் கிடைத்ததற்காக நெஞ்சு நிமிர்த்தி 'ஜெய்ஹோ' முழக்கமிடுகிறோம்.

உண்மையில் பிச்சைக்காரர்கள் எங்கிருந்து உற்பத்தி ஆகிறார்கள்? அவர்களுக்கும் சிரிப்பு வருமா? அவர்களுக்கும் மற்றவர்கள் வாழும் வாழ்க்கையை வாழ உரிமை உள்ளதா? இந்தக் கேள்விகளுக்கு மௌனமே பதிலாகக் கிடைக்கிறது.

இச்சூழலில் தான், தமிழ்த் திரையுலகில் புதிய வெளிச்சமாக வெளிவந்திருக்கிறது ' நான் கடவுள்' - அஹம் பிரம்மாஸ்மி! இயக்குனர் பாலாவின் துணிச்சலான இம்முயற்சி, ஹாலிவுட் திரைப்படமான 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தை விட மேலானது.

ஹாலிவுட் படம் இந்தியாவை கேவலமாக சித்தரித்து அவல நகைச்சுவையுடன் அற்புதத்தைச் சேர்த்து கோடிக் கணக்கில் டாலர்களை அள்ளியது; சினிமாவின் சகலவித சாகசங்களுடன் அறுசுவை விருந்து அளித்தது.

'நான் கடவுள்' அப்படியான படம் அல்ல. நம்மிடையே உள்ள கீழ்த்தரமான புல்லுருவிகளையும், வாழ்வதற்கான துடிப்புடன் 'தர்மம்' கோரும் பரிதாபத்திற்குரியவர்களையும் நமக்கு தரிசனம் செய்துவைக்க முயற்சிக்கும் படம் இது. விளிம்புநிலை மனிதர்களான பிச்சைக்காரர்களையே கதாநாயகர்கள் ஆக்குவதும், அந்த கதாநாயகர்கள் வாழ்வின் துயர்களை விழுங்கியபடி சமுதாயத்தைக் காண்பதும் புதுமை. இயக்குநர் பாலாவுக்கு வாழ்த்துக்கள்.

****

பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய 'ஏழாவது உலகம்' புதினத்தின் தாக்கத்தால் உருவான படம் இது. சமூக நிராகரிப்பால் உருவாகும் பிச்சைக்காரர்கள் அதே சமூகத்தால் தான் வாழவைக்கப் படுகிறார்கள்.

பெற்றோரால் கைவிடப்பட்டவர்கள், பெற்ற பிள்ளைகளால் விரட்டப்பட்டவர்கள், உடல் ஊனமுற்றோர், மனம் பேதலித்தவர்கள், பால்பேதம் கொண்டவர்கள், நோயாளிகள்,... இவர்களுக்கெல்லாம் வாழ்க்கை உள்ளது.

வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள், கடைத்தெருக்கள், ரயில்கள்,... எல்லா இடங்களிலும், ஏக்கம் மிளிரும் கண்களுடன் திரியும் இவர்களை நாம் கடந்திருக்கலாம்; செல்லும் வழியில் மனம் தடுமாறி சில்லறைக் காசுகளை வீசிவிட்டுச் சென்றிருக்கலாம். நாம் வள்ளல்தன்மையுடன் வழங்கிய ஒரு ரூபாய் நாணயம் யாசகனின் வாழ்வை உயர்த்தி விடுமா?

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே, தெய்வப் புலவர் திருவள்ளுவர், பிச்சை எடுப்பது பற்றி இரண்டு அதிகாரங்கள் எழுதி இருப்பது தான் (இரவு, இரவச்சம்) நினைவில் வருகிறது. 'இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்' என இறைவனுக்கே சாபமிட்டதன் காரணம் புரிகிறது.

'நான் கடவுள்' படத்தில் ஆசான் ராமப்பனாக வரும் கவிஞர் விக்கிரமாதித்தன், அவர் பராமரிப்பில் இருந்த குழந்தை குருவியை சமூக விரோதிகள் பறிக்கும்போது கெட்ட வார்த்தையில் அர்ச்சிப்பார். அங்கு புலப்படுவது மேற்காணும் குறள் அல்லவா?

***

குற்றவாளிகளைப் போலவே பிச்சைக்காரர்களும் - உருவாவதில்லை- உருவாக்கப்படுகிறார்கள். வாழ நாதியற்றுத் தவிக்கும் குரூபிகளையும் யாசகர்களையும் 'உருப்படி' எண்ணிக்கையாகக் கொண்டு தொழில் நடத்தும் முதலாளி தாண்டவன்; அவனுக்கு ஒத்தாசையாக உதவும் காவல்துறை; பணக் கற்றைகளை வீசி 'உருப்படி'களை கேரளா கடத்தும் மலையாளி; குருட்டுப் பிச்சைக்காரியை விலைபேசும் அகோரமுகம் கொண்டவன்; தாண்டவனுக்கு ஊழியம் செய்யும் ஏஜென்ட் முருகன்- இப்படியாகப் பட்டவர்களிடையே சிக்கி சின்னாபின்னமானாலும், உவகையுடன் உலகை எதிர்கொள்ளும் யாசகர்கள்.

செல்போன் விற்கும் அம்பானியை கூனன் சக யாசகனுக்கு அறிமுகம் செய்கிறான். அதுவும் அவலச்சுவைதான். ஆனால் கீழ்த்தரமானதல்ல- ஆக்கப்பூர்வமானது. மருதமலைப் படிகளில் திணறியபடி ஏறும் யாசகர்களை வரவேற்கிறது 'மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க' பாடல்.

பிச்சைக்காரர்கள் எடுக்கும் பிச்சையில் வாழ்வதால் ஏற்படும் கழிவிரக்கம் ஏஜென்ட் முருகனை (நடிகர் கிருஷ்ணமூர்த்தி) வாட்டுகிறது. சாராயம் வாங்கி ஊற்றிக் கொடுக்கிறார். பார்வையாளர்களின் கண்கள் கலங்குகின்றன.

தாண்டவனின் பாதாள அறையில் காசுகள் எண்ணப்படுவதில்லை; தராசில் நிறுக்கப்படுகின்றன. குரூபிகளைக் கொண்டு தொழில் நடத்தும் தாண்டவனுக்கும், குரூபிகளை இரக்கமின்றிக் கடக்கும் மனிதர்களுக்கும் வித்யாசம் இருப்பதாகத் தெரியவில்லை.

ரயிலில் பாட்டுப் பாடி பிச்சை எடுக்கும் குருடி அம்சவல்லி (நடிகை பூஜா) போலீஸ் உதவியால் தாண்டவனிடம் வந்து சேர்கிறாள். விதிவசத்தால் மலையாள ஏஜென்ட் கண்களில் அவள் விழ, அவளது வாழ்க்கை துயரச் சுழலில் சிக்குகிறது. தாண்டவனால் கோரப்படுத்தப்பட்டபின், அம்சம் இழந்த வல்லியின் வசனங்கள் இதயத்தில் கத்தியைச் செருகுகின்றன. வாழ விருப்பமில்லை என்று மன்றாடும் அவளுக்கு ருத்ரன் மோட்சம் (வரம்) அளிக்கிறான். முன்னதாக புல்லுருவிகளுக்கு மரணம் (தண்டனை) அளிக்கிறான்.

படம் நெடுகிலும், இத்தகைய காட்சிகள் பரவலாகக் கிடைக்கின்றன. ஜெயமோகனின் கூர்மையான, நையாண்டி வசனங்களும், ஆர்தர் வில்சனின் உயரிய ஒளிப்பதிவும், கிருஷ்ணமூர்த்தியின் கலையும் நம்மை ஆக்கிரமிக்கின்றன. 'ஓம் சிவோஹம்' என்று படத்தின் துவக்கத்தில் கிளர்ந்தெழுந்த இசை, படம் முடியும்வரை நம்மை மறக்கச் செய்கிறது. இளையராஜாவுக்கும் ஜெயமோகனுக்கும் மேலும் வல்லமையை ருத்ரன் அருளட்டும்.

***

'பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்' பாடல் நெஞ்சைப் பிழிகிறது. ருத்ரனை (நடிகர் ஆர்யா) விசாரிக்கும் நீதிமன்றக் காட்சிகள் களிப்பூட்டுகின்றன. 'சாட்சி பல்டியை விட பெரிய பல்டி அடிப்பதாக' நீதிபதி இன்ஸ்பெக்டரிடம் கூறும்போது திரையரங்கம் கரவொலியால் அதிர்கிறது.

காசியின் கங்கை நதிதீரக் காட்சிகளும், மயான தரிசனங்களும், மலைக்கோட்டையில் நடமாடும் பக்தர்களும் கண்களைவிட்டு அகன்றிட மறுக்கின்றன. மலையாள ஏஜென்டைக் கண்டு ஓடி ஒளியும் அனுமான், அம்சவல்லி கடத்தப்படுவதைக் கண்டு பதைக்கும் கடவுள்கள் போன்ற காட்சிகளின் ஊடாக, நமது சிந்தைக்கு பல கண்ணோட்டங்கள் கிடைக்கின்றன.

தமிழ் சினிமாவில் துறவிகளும் அலிகளும் கேவலமாகச் சித்தரிக்கப்படுவது மரபாகிவிட்டது. அந்த மரபையும் தகர்த்துள்ளது 'நான் கடவுள்'. பிச்சைக்காரர்களை தனது குழந்தைகளாக பாவிக்கும் திருநங்கை (நடிகை டிம்பிள்), யாருக்கும் அஞ்சாத, கட்டற்றவர்களான அகோரி சாமியார்களைப் பார்க்கும்போது பெருமிதம் வருகிறது.

தமிழ் சினிமாவின் கனவு நாயகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினியைச் சித்தரிக்கும் காவல்நிலையக் காட்சி- அற்புதமான நையாண்டி. ஆபாச நடனமாடும் நயன்தாராவின் மூலமாக, வக்கிர சிந்தனை மிகுந்த நமது திரையுலக மேதைகளுக்கு சாட்டையடி விழுகிறது. இனியேனும் திரைக் கவிமணிகள் சிந்திப்பார்களா?

படம் முழுவதும் தினவெடுத்த தோள்களுடன், பற்றி எரியும் கண்களுடன், தாடியும் மீசையுமாக மிரட்டுகிறார் ஆர்யா. அழுக்கு கந்தல் ஆடைகளுடன் பரிதாபத்தை அள்ளுகிறார் பூஜா. ஆர்யாவுக்கும் பூஜாவுக்கும் சிறந்த நடிப்பாற்றலுக்கான விருது இந்த ஆண்டு நிச்சயம் உண்டு.

***

நாம் இதுவரை கண்டும் காணாமல் இருந்த பிச்சைக்காரர்களையும், காசியில் வாழும் அகோரி சாமியார்களையும் கவனமாகப் பின்னி அமைத்த திரைக்கதை நம்மை மிரட்டுகிறது. ஒன்றிரண்டு இடங்களில் மிகையாகத் தோன்றினாலும், செயற்கையில்லை. சென்சார் கத்தரிதான் பல இடங்களில் நெருடல்.

சமூகத்தால் உருவாக்கப்பட்டு, துவைத்தெடுக்கப்படும் யாசகர்களின் ஒட்டுமொத்தக் குரலாக அம்சவல்லியின் ஆங்காரமான கேள்வி எழுகிறது. ''எல்லாப் புகழும் இறைவனுக்கேன்னு சொல்ற அல்லா சாமி கூட என்னை மாதிரி கண் தெரியாத பிச்சைக்காரிய கஷ்டப்படுத்தத் தான் விரும்புதா? ஏசுசாமி என்னைக் கைவிட்டிருச்சு. தெருவுக்குத் தெரு இருக்கிற பிள்ளையார், காளியாத்தா, மாரியாத்தா ஒரு சாமிகூட என்னைக் காப்பத்தலியே? நீ தான் சாமி என்னைக் காப்பாத்தணும்'' - என்று தன்னையே கடவுளாகக் கூறிக் கொள்ளும் ருத்ரனிடம் சரண் புகுகிறாள் அம்சவல்லி. இதுவே திரைப்படத்தின் உச்சம். அவளுக்கு நேரும் அவல முடிவு பார்வையாளர்களுக்கு நிம்மதி தருகிறது. இதுவே படத்தின் வெற்றி.

அம்சவல்லியின் கேள்விகள் கடவுளுக்கானவை மட்டுமல்ல; இந்த சமுதாயத்தை நோக்கியவை. வாழத் துடிக்கும் நாதியற்றவர்களுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்?

இந்தக் கேள்வி ஒலிக்கிறது; ஒலித்துக் கொண்டே இருக்கிறது. 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தைவிட மேலான படம் இது என்பதன் காரணம் புரிந்திருக்கும். ''யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி'' - திருமூலரின் பாடலும் நினைவில் வருகிறது.

-----------------------------------

நன்றி: ஓம்சக்தி (மாத இதழ்) ஏப்ரல் 2009.

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக