வெள்ளி, மார்ச் 18, 2016

இஷ்ரத் வழக்கு மீண்டும் விசாரிக்கப்படுமா?

இஷ்ரத் ஜஹான் உள்ளிட்டோர் சுட்டுக் கொலை


குஜராத் மாநிலத்தில் 2004-இல் போலிசார் நடத்திய அதிரடி வேட்டையில் மூன்று பயங்கரவாதிகளும் அவர்களுடன் தொடர்புடைய இஷ்ரத் ஜஹான் என்ற பெண்ணும் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால், இந்த நடவடிக்கை போலி மோதல் (என்கவுண்டர்) என்றும், சுட்டுக் கொல்லப்பட்ட இஷ்ரத் ஓர் அப்பாவி என்றும் சர்ச்சை எழுந்தது.

அதன் அடிப்படையில் அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, அப்போதைய மாநில உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு எதிராக பெரும் பிரசாரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. அப்போதைய மத்திய அரசான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இஷ்ரத் விவகாரத்தைக் கொண்டு மோடியின் அரசை நிலைகுலைய வைக்க முயன்றது. மத்தியப் புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.) மூலமாக வழக்குப் பதிவு செய்து, இஷ்ரத் உள்ளிட்ட நால்வர் கொலை குறித்து விசாரித்தது. பல காவல் துறை அதிகாரிகள் பதவி இழக்கவும், சிறை செல்லவும் அவ்வழக்கு காரணமானது.

உண்மையில், மத்திய உளவுத் துறை (இன்டெலிஜென்ஸ் பீரோ- ஐ.பி.) குஜராத் மாநில அரசுக்கு அளித்த தகவலின் அடிப்படையில் தான் அந்த என்கவுண்டர் நடத்தப்பட்டது. மாநில முதல்வர் மோடியைக் கொல்ல தற்கொலைப்படையாக நால்வர் ஊடுருவியுள்ள தகவலை ஐ.பி. தான் அளித்தது.

ஆயினும், தற்கொலைப்படைத் தீவிரவாதிகள் நால்வரும் சுட்டுக் கொல்லப்பட்டவுடன், மத்திய அரசு திடீரென குட்டிக்கரணம் போட்டது. குஜராத் மாநில காவல்துறையால் ஆமதாபாத்தில் (2004, ஜூன் 15) கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹான் ராஸா (19), ஜாவேத் குலாம் ஷேக் என்கிற பிரானேஷ் பிள்ளை, அஜ்மத் அலி ராணா, ஜீஷன் ஜோஹர் ஆகியோருக்கு எதிராக குற்றம் சாட்ட வலுவான ஆதாரங்கள் இல்லை; தவிர இதில் கொல்லப்பட்ட ஒரே பெண்ணான இஷ்ரத் ஜஹான் ஓர் அப்பாவி என்று காங்கிரஸ் பிரசாரம் செய்தது.

அப்பாவித்தன்மான முகத்துடன் இஷ்ரத்தின் படங்கள் ஊடகங்களில் வளையவந்தன. மத்திய அரசுக்கு உறுதுணையாக ஊடகங்களும் தங்களால் இயன்ற அளவுக்கு ‘இணை புலன் விசாரணை’ செய்து இஷ்ரத் ஓர் அப்பாவி என்று தீர்ப்பு எழுதின.

இதனிடையே, சி.பி.ஐயைக் கொண்டு, போலி மோதல் படுகொலையாக இதனை சித்தரித்து, காவல்துறை அதிகாரிகள் பலரை கைது செய்தது மத்திய அரசு. டி.ஐ.ஜி. தனஞ்ஜெய் வன்சாரா, உதவி ஆணையர் கிரிஷ் லக்‌ஷ்மண் சிங்கால், என்.கே.அமின், ஜே.சி.பார்மர், தருண் பாரட், மோகன் கலஸ்வா, அனஜு ஜிமர் சௌத்ரி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதியப்பட்டு, கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் பணியிலிருந்தும் விலக்கப்பட்டார்கள்.

இது தொடர்பான வழக்கு 2009-இல் விசாரணைக்கு வந்தபோது, கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் தான் என்று முதலில் பிரமாணப் பத்திரம் மத்திய உள்துறையால் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அரசியல் நெருக்கடிகளை அடுத்து, திருத்தப்பட்ட பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் தான் அந்த வழக்கின் விசாரணை நடைபெற்று, காவல் துறை அதிகாரிகள் தண்டிக்கப்பட்டனர். அதுமட்டுமல்ல, மோடி மீதும், பாஜக மீதும் வெறுப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ள ஒரு கருவியாகவே இவ்வழக்கு பயன்படுத்தப்பட்டது.

உண்மை சாகாது:

ஆனால், அழுத்தி வைக்கப்பட்டாலும் உண்மை என்றாவது ஒருநாள் வெளிப்பட்டே தீரும் என்பது மீண்டும் உண்மையாயிற்று. 2008 மும்பை குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியான டேவிட் ஹேட்லி என்கிற தாவூத் சையத் கிலானி , பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர் எ தொய்பா (எல்.ஈ.டி). பயங்கரவாத அமைப்பின் உளவாளி. அவர் தற்போது அமெரிக்க சிறையில் வேறொரு குற்ற வழக்கில் இருக்கிறார். மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் அமெரிக்க சிறையிலிருந்தபடியே சாட்சியம் அளித்த ஹேட்லி, பாகிஸ்தானில் செயல்படும் எல்.இ.டி. அமைப்பே மும்பை குண்டுவெடிப்புக்கு பின்னணியில் இருந்தது என்று கூறினார். அது மட்டுமல்ல, குஜராத் முதல்வர் மோடி, பாஜக தலைவர் அத்வானி ஆகியோரைக் கொல்ல எல்.இ.டி.யால் அனுப்பப்பட்ட நான்கு பயங்கரவாதிகளில் இஷ்ரத் ஜஹான் தற்கொலைப்படைத் தீவிரவாதி ஆவார் என்றும் அவர் சொன்னார் (பிப். 2016).

இதனால் மீண்டும், இஷ்ரத் ஜஹான் வழக்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஹேட்லி கூறிய தகவல் ஒன்றும் புதியதல்ல. ஏற்கனவே, 2010, அக்டோபரில் இதுகுறித்து ஹேட்லி கூறியதை தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) உள்துறைக் குறிப்புரையாக அனுப்பி இருக்கிறது.

ஐ.பி.யின் தலைவராக இருந்த ஆசிஃப் இப்ராஹிம், 2013-இல் அரசுக்கு அனுப்பிய குறிப்பில், மோடி, அத்வானி ஆகியோரைக் கொல்ல பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஒரு குழு வந்திருப்பதாகவும், அதில் இஷ்ரத் என்ற பெண் உள்ளதாகவும் ஹேட்லி கூறியதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால், பாஜகவை எப்படியேனும் சிக்கலில் மாட்டிவிட முயன்ற ஐ.மு.கூட்டணி அரசு, இந்த விவரங்களை எல்லாம் மூடி மறைத்து, சி.பி.ஐ. மூலமாக முதல்வர் மோடி அரசை நிலைகுலையச் செய்ய தீவிரமாக முயன்றது.

இந்த நிலையில் தான் தேசிய அரசியலில் பெருத்த மாற்றங்கள் ஏற்பட்டு, குஜராத் முதல்வராக இருந்த மோடி பாஜகவின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்று அவர் பிரதமரும் ஆகிவிட்டார்.

மத்தியில் ஆட்சி மாறியவுடன், முந்தைய அரசின் கள்ளத்தனங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன. அவற்றில், இஷ்ரத் ஜஹான் வழக்கில் முந்தைய ஐ.மு. கூட்டணி அரசு நடத்திய திருகல் வேலைகளும் வெளிப்பட்டு வருகின்றன.

ஐ.பி.யின் குஜராத் பிரிவு நிவாகியாக இருந்த ராஜேந்தர்குமார் தான், இஷ்ரத் குறித்த உளவுத் தகவலை முதன்முதலில் குஜராத் காவல்துறைக்கு அளித்தவர். அவருடன் இணை இயக்குநர் எம்.கே.குப்தா, டி.எஸ்.பி. ராஜீவ் வாங்கடே, மிட்டல் ஆகிய உளவுத் துறை அதிகாரிகளும் இருந்தனர். இவரகளது திறமையான உளவு சேகரிப்பால் தான் பெரும் நாசம் தவிர்க்கப்பட்டது.

மோடியை சிக்கவைக்க எண்ணிய முந்தைய மத்திய அரசு, தனது உள்துறையின் கீழ் இயங்கும் இந்த அதிகாரிகளையே கைது செய்ய முயன்றது. ஆனால், ஐ.பி. தலைவர் ஆசிஃப் இப்ராஹிமின் பலத்த எதிர்ப்பால் அம்முயற்சி கைவிடப்பட்டது.

மாறியுள்ள அரசியல் சூழல் அளித்த துணிவில் இப்போது அரசு அதிகாரிகளும் உண்மைகளை பிட்டுப் பிட்டு வைக்கத் துவங்கியுள்ளனர். ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது, உள்துறை துணைச் செயலாளராக இருந்தவர் ஜி.கே.பிள்ளை. இவர், இஷ்ரத் வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் மாற்றப்பட்டு, இரண்டாவது முறையாக தாக்கல் செய்யப்பட்டது என்ற உண்மையை வெளிப்படுத்தி இருக்கிறார். முதலில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், இஷ்ரத் உள்ளிட்ட நால்வரும் பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டிருந்ததாகவும், திருத்தப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், இஷ்ரத் அப்பாவி என்று குறிப்பிடப்பட்டதாகவும் அவர் கூறி இருக்கிறார். இந்தக் கோப்பு அமைச்சர் ப.சி.யால் நேரிடையாக திருத்தம் செய்யப்பட்டதாகவும், தன்னிடம் அந்தக் கோப்பு வரவே இல்லை என்றும் அவர் கூறி இருக்கிறார் (பிப். 25, 2016).

மற்றொரு உள்துறை துணை செயலாளரான ஆர்.வி.எஸ். மணி, இரண்டாவது திருத்தப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திடுமாறு தான் நிர்பந்திக்கப்பட்டதாக பேட்டி அளித்தார் (மார்ச் 1, 2016). இஷ்ரத் வழக்கை விசாரித்த சி.பி.ஐயின் விசாரணை அதிகாரி சதீஷ் வர்மா, தன்னை சிகரெட்டால் சுட்டு அச்சுறுத்தியதாகவும் அவர் கூறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுக்களை ப.சி. மறுத்தார். ஆனால், தனது உள்துறை அமைச்சகத்துக்கு கீழ் வரும் ஐ.பி, சி.பி.ஐ. ஆகிய அமைப்புகளை ஒன்றுக்கொன்று மோதவிட்டது ஏன் என்று அவர் விளக்கம் அளிக்கவில்லை.

இதனிடையே, குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு முக்கிய காங்கிரஸ் தலைவரின் நெருக்கடியால் தான் (அகமது படேல்) இஷ்ரத் வழக்கில் மத்திய அரசு திசை திரும்பியது என்று ஐ.பி. அதிகாரி ராஜேந்தர் குமார் (பிப். 12, 2016) தெரிவித்திருக்கிறார். அது மட்டுமல்ல, தனது உளவுக் குறிப்புகளில் மோடிக்கு எதிரானாதாக இருக்கும் வகையில் திருத்தம் செய்தால் பல பயன்கள் கிடைக்கும் என்று ஆசை காட்டப்பட்டதாகவும், மிரட்டப்பட்டதாகவும், அவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒரு முதல்வரைக் களங்கப்படுத்துவதற்காக, தனது சுய அரசியல் ஆதாயத்துக்காக, காங்கிரஸ் எந்த அளவுக்கு கீழ்த்தரமாக இயங்கி இருக்கிறது என்பது இப்போது புலப்பட்டிருக்கிறது. எல்லாவற்றையும் செய்துவிட்டு இஞ்சி தின்ற குரங்கு போல விழிக்கிறது காங்கிரஸ்.

நீதி கிடைக்குமா?

இப்போது, அரசியல் சதி விளையாட்டில் காங்கிரஸ் ஈடுபட்டது தெரிய வந்துவிட்டது. இதனால், இவ்வழக்கால் பாதிக்கப்பட்ட குஜராத் காவல்துறை அதிகாரிகளுக்கு என்ன லாபம்? அவர்கள் பதவியும் பணியும் கௌரவமும் இழந்து சிறைப்பட்ட கொடுமை மாறவா போகிறது?

பயங்கரவாதிகளை வேட்டையாடிய குற்றத்துக்காக அவர்கள் தங்கள் வாழ்க்கையை இழந்துள்ளனர். அவர்களுக்கு தற்போதைய மத்திய அரசு என்ன செய்யப்போகிறது?

நாங்கள் அரசியல் சதி விளையாட்டில் பலிகடா ஆக்கப்பட்டுவிட்டோம் என்று டி.ஐ.ஜி. வன்சாரா (மார்ச் 1, 2016) கூறி இருக்கிறார். இஷ்ரத் வழக்கை பயங்கரவாதக் கண்ணோட்டத்தில் விசாரிக்காமல் மனிதநேயக் கண்ணோட்டத்தில் விசாரிக்குமாறு என்.ஐ.ஏ. நெருக்கடி தந்ததாக, உள்துறை முன்னாள் அதிகாரி ஏ.கே.ஜெயின் (மார்ச் 3, 2016) கூறி இருக்கிறார்.

சுட்டுக் கொல்லப்பட்ட நான்கு பயங்கராவதிகளின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் திருத்தங்கள் செய்யுமாறு வலியுறுத்தப்பட்டதாக, எய்ம்ஸ் மருத்துவமனை தலைமை தடயவியல் மருத்துவர் டாக்டர் டி.ஜி.டோக்ரா (மார்ச் 2, 2016) தெரிவித்திருக்கிறார்.

இவ்வழக்கை ஆரம்பத்தில் விசாரித்த சிறப்பு விசாரணைக்குழு காவல்துறை அதிகாரி சத்யபால் சிங், இஷ்ரத் ஓர் அப்பாவி என்ற முடிவை விசாரணை வெளிப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசில் சிலர் நிர்ப்ந்தித்தனர் என்று கூறி இருக்கிறார்.

மேற்கண்ட வாக்குமூலங்கள் யாவும் சாதாரணமானவை அல்ல. இஷ்ரத் வழக்கில் தொடர்புடைய முக்கியமான அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளின் வாக்குமூலங்கள் இவை.

இவை வெறும் பத்திரிகை செய்திகளாக இருந்துவிடக் கூடாது. இவற்றை முறையான நீதிமன்ற வாக்குமூலமாக மாற்றினால் மட்டுமே, இவ்வழக்கால் பாதிக்கப்பட்ட காவல்துறையினருக்கு நியாயம் கிடைக்கும். இஷ்ரத் வழக்கை மறு விசாரணை செய்ய நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது. எனவே, மாறியுள்ள சூழலில், ஐ.பி. அதிகாரிகள், உள்துறை முன்னாள் அதிகாரிகளின் வாக்குமூலங்களைப் பதிவு செய்து, இவ்வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்.

நமது கேள்வி என்னவென்றால், ப.சி. போன்ற அறிவுஜீவிகளுக்கு, ஐ.பி.யையும் சி.பி.ஐ.யையும் மோதவிடுவது சரியானதா என்பது தெரியாதா என்பதுதான். இதில் சி.பி.ஐ.க்கு ஆதரவாக என்.ஐ.ஏ.வும் களமிறக்கப்பட்டுள்ளது. இத்தகைய நிலையில் உண்மையான உளவுத் தகவல்களை ஆட்சியாளர்களுக்கு ஐ.பி.யால் எவ்வாறு வழங்க முடியும்?

உளவு அமைப்புகளை முடக்குவது, அவர்களை குற்றவாளி ஆக்குவதன் மூலமாக அரசு நிறுவனங்களின் நம்பகத் தன்மையை கேள்விக் குள்ளாக்குவது,  புலனாய்வு அமைபுகளை மோத வியுவது, மத்திய புலனாய்வுத் துறையால் மாநில காவல் துறையினர் பழி வாங்கப்படுவது எனப் பல விபரீதமான செயல்பாடுகளின் கூட்டணியை ஐ.மு.கூட்டணி அரசு அரங்கேற்றி இருக்கிறது. அரசிப் பின்னிருந்து வழிநடத்திய சோனியாவின் வழிகாட்டுலின்றி இவை நடந்திருக்காது.

எனவே, இவ்வழக்கில் சதியாளர்களாக, அகமது படேல், ப.சி. சோனியா ஆகியோர் சேர்க்கப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும். ஏனெனில், இது தேசப் பாதுகாப்பு தொடர்புடைய அதிமுக்கியமான வழக்காகும்.

இது நாட்டின் இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் விடப்பட்ட சவாலாகும். இந்தக் குற்றத்தைப் புரிந்தவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்காவிட்டால், டி.ஐஜி. வன்சாரா உள்ளிட்ட போலிசார் இழந்த வாழ்க்கைக்கு எந்தப் பொருளும் இருக்காது

-விஜயபாரதம்

.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக