செவ்வாய், செப்டம்பர் 14, 2010

ஒரு கண்ணுக்கு வெண்ணெய்; மறு கண்ணுக்கு...?

மதானி கைது செய்யப்பட்டபோது எடுத்த படம்
.
அண்மையில் புதுதில்லியில் நடந்த மாநில காவல்துறை தலைவர்கள் மாநாட்டில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், நாட்டில் காவி பயங்கரவாதம் தலையெடுத்து வருவதாக எச்சரித்தார். நாடு முழுவதும் நக்சல் பயங்கரவாதமும் இஸ்லாமிய பயங்கரவாதமும் கொடிய முகத்தைக் காட்டிவரும் வேளையில், மதச்சார்பின்மையைக் காப்பதற்கென்றே பிறப்பெடுத்த காங்கிரஸ் கட்சியின் குரலாக, பயங்கரவாதத்தை மதரீதியாக சமண் செய்யும் விதமாக இக்கருத்தை அவர் கூறியிருக்கிறார்.

கற்பனையான புனைவுகளின் அடிப்படையில் சில வழக்குகளில் பெண் துறவி பிரக்யா சிங் தாகுர் மற்றும் சில ராணுவ அதிகாரிகளை கைது செய்து, அதையே காரணமாகக் காட்டி காவி பயங்கரவாதம் நாட்டில் வளர்ந்து வருவதாக ப.சிதம்பரம் பூச்சாண்டி காட்டியிருக்கிறார். இதே காலகட்டத்தில், பெங்களூரு தொடர் குண்டுவெடிப்பில் கேரளாவின் அப்துல் நாசர் மதானி கைது செய்யப்பட்டிருப்பது சில முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. அவரை கைது செய்ய கேரளா, கர்நாடகா மாநில அரசுகள் நடத்திய பகீரதப் பிரயத்தனமும், அப்போது, இதே சிதம்பரம் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சி நடந்துகொண்ட விதமும், அக்கட்சியின் உண்மையான முகத்தை தோலுரிக்கின்றன.

பெங்களூரு குண்டுவெடிப்புகள்:

2008 , ஜூலை 25- ம் தேதி கர்நாடகா மாநிலத்தில், பெங்களூரு நகரில் ஏழு இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில், இருவர் பலியாகினர்; 20 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய மாநில காவல்துறை, டி.நசீர் என்ற சிமி இயக்க பயங்கரவாதியை கைது செய்தது. இவன், கேரளாவில் செய்யப்பட்ட இஸ்லாமிய சேவக் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவன். காஷ்மீரில் இயங்கும் லஸ்கர்- ஏ-தொய்பா எனும் பாக். ஆதரவு அமைப்பின் தளபதியாக செயல்பட்டவன். இவனிடம் நடந்த விசாரணையில், கேரளாவின் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும் இஸ்லாமிய சேவக் சங்க நிறுவனருமான அப்துல் நாசர் மதானிக்கு பெங்களூரு குண்டுவெடிப்பில் தொடர்பிருப்பது தெரியவந்தது.

கர்நாடகாவை ஆளும் பா.ஜ.க. அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தவே இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஆயினும், மதானியைக் கைது செய்ய கர்நாடகா அரசு அவசரம் காட்டவில்லை. வழக்கில் மதானி பெயர் சேர்க்கப்பட்டபோதும், சட்டரீதியான நடைமுறைகளில் கர்நாடகா அரசு கவனம் செலுத்திவந்தது. அதற்குள், முன்பிணை பெறும் முயற்சிகளில் மதானி ஈடுபட்டார். அவரது மனுக்கள் பல்வேறு நீதிமன்றங்களில் நிராகரிக்கப்பட்டன. இறுதியாக உச்ச நீதிமன்றத்திலும் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. கர்நாடகா நீதிமன்றம், மதானியைக் கைது செய்ய கேடு தேதி நிர்ணயித்த பிறகே, அவரை கைது செய்ய அம்மாநில காவல்துறை முனைப்பு காட்டியது.

மதானியைக் கைது செய்ய கர்நாடக காவல்துறையின் ஒரு குழு, அவரது சொந்த ஊரான அனவரசேரி சென்றது. ஆனால், அவரை கைது செய்ய உள்ளூர் காவல்துறை ஒத்துழைக்கவில்லை. ‘மதானியை கைது செய்தால், சட்டம் ஒழுங்கு பாதிக்கும்’ என்று மாநில உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் வெளிப்படையாகவே அறிவித்தார். கேரள காவல்துறையின் அனுமதி. ஒப்புதல் இல்லாமல் மதானியை கைது செய்ய இயலாது என்பதால், எட்டு நாட்கள், கொல்லத்தில் கர்நாடகக் குழு காத்திருந்தது.

கேரளாவில் உள்ள காங்கிரஸ் கட்சியினர், இந்த நிகழ்வைப் பயன்படுத்திக்கொண்டு, இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு- மதானியை கைது செய்யக் கூடாது என்று நெருக்குதல் கொடுத்தனர். போதாக்குறைக்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் ஆக. 12 ம் தேதி கேரளா வந்ததால், மதானியைக் கைது செய்வதை மாநில அரசு தவிர்க்க விரும்பியது. கேரளத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மத்திய மந்திரிகள், இந்த தடுமாற்றத்தில் குளிர் காய்ந்தனர். காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகள் இரண்டுமே முஸ்லிம் வாக்கு வங்கி பறிபோய்விடக் கூடாது என்ற சிந்தனையிலேயே இப்பிரச்சினையை அணுகின.

அதற்குள், நீதிமன்றத்தில் சரண் அடைந்து, கைதாவதிலிருந்து தப்ப மதானி முயன்றார். மார்க்சிஸ்ட் அரசு கர்நாடக பா.ஜ.க. அரசுக்கு உதவும் வகையில் மதானியை கைது செய்ய ஒத்துழைப்பதாக காங்கிரஸ் கட்சியினர் கேரளாவில் பிரசாரம் செய்தனர். இதையடுத்து, மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் விளக்கம் அளித்தார். '' பா.ஜ.க-வின் சிறுபான்மையினர் விரோதப்போக்குக்காக மதானி கைது செய்யப்படவில்லை. குற்ற வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படியே அவர் கைது செய்யப்படுகிறார். அதற்கு சட்ட ரீதியாக கேரளா அரசு உதவ வேண்டியுள்ளது'' என்றார் அவர். அதன் பிறகே, மாநில அரசும் கர்நாடக காவல்துறைக்கு ஒத்துழைப்பு தந்தது .

ஒருவழியாக, 17.08.2010 அன்று மதானியை கர்நாடகா காவல்துறையினர் கைது செய்தனர். அவருக்கு உரிய அனைத்து மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டன. அன்றிரவே நீதிமன்றம் கொண்டுசெல்லப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். மிகவும் மரியாதையாக அவர் நடத்தப்பட்டார். இதற்கே தமிழகத்தின் பல பகுதிகளிலும் கேரளாவிலும் இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன.

மதானி, 1998 கோவை குண்டுவெடிப்புகளில் குற்றம் சாட்டப்பட்டவர். காவல்துறையினர் வழக்கை சரியாக நிர்வகிக்காததால், சாட்சியமில்லை என்று கூறி அந்த வழக்கில் இருந்து மதானி விடுவிக்கப்பட்டார். அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. கோவை குண்டுவெடிப்பு வழக்கிற்காக, கோவை சிறையில் 9.5 ஆண்டு விசாரணைக் கைதியாக அவர் இருந்தபோது, சிறையில் அவருக்கு ராஜ உபசாரம் செய்யப்பட்டது.

ஆனால், சிறையில் மதானி கொடுமைப் படுத்தப்படுவதாகக் கூறி கேரளாவில் கலமச்சேரி என்ற இடத்தில் தமிழக அரசு பஸ் (2005) எரிக்கப்பட்டது. அவ்வழக்கில் மதானியின் மனைவி சூபியா குற்றவாளி. அவ்வழக்கில் சூபியாவை கைது செய்ய தமிழக காவல்துறையால் முடியவில்லை. பலத்த முயற்சிக்குப் பிறகே சூபியா 19.12.2009 அன்று கைது செய்யப்பட்டார். அவ்வழக்கு இன்னும் முடியவில்லை; அவர் பிணையில் வெளியே நடமாடுகிறார். இந்த பஸ் எரிப்பு வழக்கில் மற்றொரு குற்றவாளி தான் டி.நசீர். அவர் தான் பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி.

இவ்வாறாக, 2008 - ல் பெங்களூரில் நடந்த குண்டுவெடிப்புக்கு மதானியின் தூண்டுதல் இருப்பது தெரிந்தும் அவரை கைது செய்ய இரண்டு ஆண்டுகள் ஆனது, கர்நாடகா அரசுக்கு. மதானி கைதை தவிர்க்கவே கர்நாடகா அரசும், கேரளா அரசும் முயன்றன. ஏனெனில், அவர் கைது செய்யப்பட்டால், நாட்டில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் என்ற அச்சம்.

நாடாளுமன்றம் மீதான தாக்குதலுக்காக (2001) தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட (2008) முகமது அப்சல் குருவுக்கு தண்டனை நிறைவேற்றாமல் காலம் கடத்தப்படுவதை இங்கு நினைவு கூரலாம். ‘அப்சலை தூக்கில் போட்டால் புதுடில்லியில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட வாய்ப்புள்ளது’ என்று அம்மாநில துணைநிலை ஆளுநர் தேஜெந்திர கன்னா கூறியதை, கொடியேறி பாலகிருஷ்ணனின் கருத்தோடு ஒப்பிடலாம். இந்த நேரத்தில், 2006 - இல் நடந்த மாலேகான் குண்டுவெடிப்புகளுக்காக ஹிந்து பெண் துறவி ஒருவர் எவ்வாறெல்லாம் சித்ரவதை செய்யப்பட்டார் என்பதை எண்ணிப் பார்த்தால், நமது அரசுகளின் லட்சணம் புரியும்.

மாலேகான் குண்டுவெடிப்பு:

2006 , ஆகஸ்ட் 29-ம் தேதி, மகாராஷ்டிரா மாநிலத்தின் மாலேகான் நகரில் நடந்த குண்டுவெடிப்பில் ஆறு பேர் கொல்லப்பட்டனர்; 100 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த பயங்கர நிகழ்வுக்கு சிமி அமைப்பே காரணம் என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்தது.
ஆனால், குண்டு வைக்கப்பட்ட சைக்கிளை விற்றவர் என்ற காரணம் காட்டி, பெண் துறவி பிரக்யா சிங் தாகுர் கைது செய்யப்பட்டார். அவருடன் லெப்.கர்னல் பிரசாத் புரோஹித் உள்ளிட்ட சில ராணுவ அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர். அபிநவ பாரத சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி முஸ்லிம்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட சதித் திட்டம் தீட்டியதாகவும் இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இவ்வழக்கில் பிரக்யா சிங் தாகுர் கைது செய்யப்பட்டது 10.10.2008 அன்று. ஆனால் அவரை சட்டவிரோதமாக காவல்நிலையத்திலேயே வைத்து, சித்ரவதை செய்தனர், மகாராஷ்டிர காவல்துறையினர். கைது செய்யப்பட்டவுடன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைக்க வேண்டும்; நீதிமன்ற அனுமதி பெற்றே விசாரணை நடத்த வேண்டும் என்ற விதி அங்கு அப்பட்டமாக மீறப்பட்டது. பல தரப்பிலும் கண்டனங்கள் எழுந்த பிறகே, மகாராஷ்டிர மாநில திட்டமிட்ட குற்றங்கள் தடுப்பு சட்டத்தின் (MCOCA) கீழ் 23.10.2008 அன்று பிரக்யா சிங் தாகுர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்.
அந்த 13 நாட்களும் பெண் துறவி என்றும் பாராமல் அவரை சிறப்பு புலனாய்வுத் துறையினர் கடுமையாக சித்ரவதை செய்தனர். அவருக்கு எந்த மருத்துவ வசதியும் செய்து தரப்படவில்லை. அவர் சமுதாயத்தின் உயர்ந்த (மதானி போலவே) நிலையில் உள்ள துறவி என்றபோதும், அவர் கீழ்த்தரமான குற்றவாளி போல நடத்தப் பட்டார். அதன் விளைவாக தற்கொலை செய்யும் அளவுக்கு மனம் பேதலிக்கப்பட்டார்.

பிரக்யா சிங் தாகுர் கைது செய்யப்பட நாள்: அக். 10; அவர் மீது முறையான வழக்கு பதிவு செய்யப்பட்ட நாள்: அக். 23. இவரும் உடன் கைது செய்யப்பட்டவர்களும் பிணையில் வெளிவந்துவிடக் கூடாது என்பதற்காக தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆயினும், அவர்கள் மீது எந்த ருசுவான சாட்சியத்தையும் மகாராஷ்டிரா சிறப்பு காவல்படையால் காட்ட இயலவில்லை. இறுதியில், சரியான சாட்சியங்கள் இல்லாததால், இவர்கள் மீதான தடுப்புக் காவலை 2009 ஜூலையில் விலக்கிக் கொள்ள வேண்டியதாயிற்று.

என்றபோதும், ராஜஸ்தானின் ஆஜ்மீர் (2007), ஆந்திரப் பிரதேசத்தின் ஐதராபாத் (2007), குஜராத்தின் மொடாசா(2008) ஆகிய இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் பிரக்யா சிங் தாகுர் குழுவினருக்கு தொடர்பிருப்பதாகக் கூறி வழக்கிற்கு மேல் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில், பெண் துறவி மட்டுமின்றி புரோகித் உள்ளிட்ட பல ராணுவ அதிகாரிகள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு அரசு இழைத்த இன்னல் கொஞ்சநஞ்சமில்லை.

'ராணுவமும் காவித் தீவிரவாதிகளின் கூடாரமாகி வருகிறது' என்றும் மத்திய அரசால் பிரசாரம் செய்யப்பட்டது. இதுவரை, இவர்களுக்கு எதிரான எந்த அடிப்படை ஆதாரமும் மத்திய அரசாலோ, மாநில அரசாலோ முன்வைக்கப்படவில்லை. ஆனால், பிணையில் (அதற்கு சட்டப்படியான உரிமை இருந்தும்) இவர்களால் வெளிவர முடியவில்லை.

தற்போது, உச்சநீதிமன்றத்தில், பெண் துறவியை சட்டவிரோதமாக 13 நாட்கள் வைத்து மகாராஷ்டிர காவல்துறை நடத்திய சித்ரவதையை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் வெளிவரும் விபரங்கள், மகாராஷ்டிரா மாநில காவல்துறைக்கு மட்டுமல்லாது, மத்திய அரசிற்கும் சிக்கலை ஏற்படுத்தத் துவங்கியுள்ளன.

சிந்திக்க வேண்டியது யார்?

இருவேறு மாநிலங்கள்; இரு வேறு சம்பவங்கள்; இருவேறு வழக்குகள்; இரண்டிலும் அந்தந்த மாநில அரசுகள் நடந்துகொண்ட நடத்தையை இதுவரை பார்த்தோம். பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மதானி மீது உறுதியான ஆதாரங்கள் இருப்பதால் தான் அவருக்கு முன்பிணை வழங்க அனைத்து நிலை நீதிமன்றங்களும் தவிர்த்தன. ஆனால், அவரை கைது செய்ய கர்நாடகா மாநில அரசு அவசரப்படவில்லை. மதானிக்கு உள்ள சட்ட உரிமைகளைப் பயன்படுத்திக்கொள்ள தேவையான அவகாசம் வழங்கப்பட்டது. கைதுக்குப் பிறகும் அவர் கௌரவமாகவே நடத்தப்படுகிறார். அந்த பா.ஜ.க.அரசு மீது தான் மதவெறியுடன் செயல்படுவதாக 'மதச்சார்பற்றவர்கள்' குற்றம் சுமத்துகின்றனர்.

மாலேகான் குண்டுவெடிப்பில் ஆரம்பகட்டத்தில் சிமி இயக்கத்தைச் சேர்ந்த 20 பேர் கைது செய்யப்பட்டனர். பிறகு என்ன காரணத்தாலோ வழக்கின் திசை மாற்றப்பட்டு, இரண்டு ஆண்டுகள் கழித்து, அபிநவ பாரத சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மீது வழக்கு திணிக்கப்பட்டது. புனையப்பட்ட இவ்வழக்கில் பல கேள்விகளுக்கு மகாராஷ்டிரா மாநில காவல்துறையிடம் பதிலில்லை. அதே சமயம், வழக்கு தொடர்பான தகவல்கள் என்ற பெயரில், ஊடகங்களுக்கு விசாரணை குறித்த தவறான தகவல்கள் கசியவிடப்பட்டன.

ஊடகங்களும் போட்டியிட்டுக்கொண்டு அவற்றை வெளியிட்டு, நாட்டில் இந்து பயங்கரவாதம் பரவிவருவதாகக் கூறி தங்கள் பங்கிற்கு நாட்டுநலத்திற்கு வேட்டு வைத்தன. அந்த செய்திகள் பல பொய் என்பது இப்போது தெரிய வந்தபோதும், உண்மையை ஏற்க எந்த ஊடகங்களும் இதுவரை முன்வரவில்லை. இதன் விளைவாகவே பெண் துறவி பிரக்யா சிங் தாகுர் உள்ளிட்டோர் தங்கள் மீதான கொடூர அடக்குமுறையை நிராயுதபாணிகளாக சந்திக்க வேண்டியதானது.

'ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது' என்பதே குற்றவியல் சட்டத்தின் மகிமை. நமது நாட்டிலோ, குற்றம் செய்தவர்களுக்கு முதல்மரியாதை. மதானியை கைது செய்ய எட்டு நாட்கள் காத்திருந்த அதே காவல்துறை தான், பிரக்யா சிங் தாகுரை கைது செய்து 13 நாட்கள் தகவல் தெரிவிக்காமல் மறைத்தது.

மாநிலங்கள் மாறலாம்; அதிகார வர்க்கமும் அரசியலும் மாறுவதில்லை என்பதற்கு இதுவே உதாரணம். மதானியோ, பிரக்யா சிங் தாகுரோ- அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வது அவர்களது உரிமை. இவர்கள் வழக்கில் இருந்து விடுபடுவதும் தண்டிக்கப்படுவதும் காலத்தின் கரங்களில் இருக்கிறது. ஆயினும், ஒரு கண்ணுக்கு வெண்ணெய்; ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு என்ற நடைமுறை இங்கு காணப்படுவதால், நீதி கிடைக்குமா என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
.
..
------------------------------------
நன்றி: விஜயபாரதம் (17.09.2010)
முழு கட்டுரையைக் காண்க: தமிழ்ஹிந்து

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக