வெள்ளி, மார்ச் 25, 2016

தராசில் சிக்கல்பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மேடையில் பேசுகையில், “மங்கை சூதகமானால் கங்கையில் முழுகலாம்; கங்கையே சூதகமானால் எங்கு முழுகுவது?” என்று அரசியலை விமர்சிக்கையில் குறிப்பிடுவது வழக்கம். அது தான் தற்போதைய நீதித்துறையைக் காண்கையில் நினைவுக்கு வருகிறது.

சாமானிய மக்கள் முதல் உயர்குடியினர் வரை அனைவரின் நம்பிக்கை ஆதாரமாக இருப்பது நீதித்துறை. நியாயம் வெல்லும் என்ற நம்பிக்கையை காப்பது நீதித்துறையின் பிரதானப் பணி. ஆனால், நாட்டின் அனைத்துத் துறைகளிலும் ஏற்படுள்ள சீரழிவின் தாக்கம் நீதித்துறையையும் விட்டுவைக்கவில்லை என்பது அவ்வப்போது தெரிய வருகிறது.

பொதுவாக, நீதித்துறையின் மாண்பைக் காப்பதற்காக அதன் மீதான விமர்சனங்கள் தவிர்க்கப்படுகின்றன. சில நேரங்களில் நீதித்துறையை விமர்சிப்பவர்கள் மீது அந்தத் துறையே தானாக முன்வந்து கடும் நடவடிக்கை எடுத்த நிகழ்வுகளும் உண்டு. அதனால் ஏற்படும் அச்சம் காரணமாக, நீதித்துறையின் சீரழிவுகளை யாரும் வெளியே பேசுவதில்லை. அதுவே, பல தவறுகளுக்கும் காரணமாகி விடுகிறது. இதற்கு மிகச் சரியான அண்மைக்கால உதாரணம், மேலூர் நீதிமன்ற நடுவர் (மாஜிஸ்திரேட்) மகேந்திர பூபதியின் வீழ்ச்சி.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே செயல்பட்ட கிரானைட் குவாரிகளில் நடைபெற்ற மோசடிகள் 2012-இல் வெளியானபோது தமிழகம் முழுவதும் பெருத்த அதிர்ச்சி அலைகள் எழுந்தன. அங்கு கிரானைட் வெட்டியெடுக்க உரிமம் பெற்ற பி.ஆர்.பழனிசாமி என்ற கிரானைட் குவாரி அதிபர், பெருமளவில் கிரானைட் பாறைகளை உரிமக் காலத்தில் வெட்டியெடுத்து, அவற்றை கீழையூர் பகுதியில், நெடுஞ்சாலையின் இருபுறமும் பல சதுர கி.மீ. பரப்பில் குவித்து வைத்திருந்தார். இது கனிமவளச் சட்டத்தை மீறுவதாகும். குறிப்பாக ஒரு பெரும் மலையே சரிபாதி வெட்டியெடுக்கப்பட்ட நிகழ்வு, கிரானைட் குவாரிகளின் மோசடியை அம்பலப்படுத்தியது.

இதுதொடர்பான புகார்களை அடுத்து, ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையிலான விசாரணைக் குழுவை அமைத்து, கிரானைட் மோசடி குறித்து விசாரிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டு, அவரும் தீவிர ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார். அதில், கிரானைட் மோசடி குறித்த பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு முன்னதாகவே, இந்த மோசடியால் அரசுக்கு ரூ. 1,600 கோடி அளவுக்கு இழப்பு நேரிட்டிருப்பதாக, 2012-இல் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த அன்சுல் மிஸ்ரா நடவடிக்கை எடுத்தார். அதன் காரணமாக, பி.ஆர்.பழனிசாமி மீதும், அவரது கிரானைட் நிறுவனம் மீதும் 90 வழக்குகள் பதியப்பட்டன. மேலூர் நடுவர் நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் நடைபெற்று வந்தன.

இதனிடையே, வழக்கை விசாரித்த நடுவர் மகேந்திரபூபதி நடுநிலையின்றிச் செயல்படுவதாக, அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் ஷீலா, ஞானகிரி ஆகியோர், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் புகார் செய்தனர். ஆதையடுத்து, உயர்நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாசம், நீதித்துறை நடுவர் மகேந்திரபூபதி மீது துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டார்.

இந்த நிலையில், கிரானைட் மோசடி வழக்கில் கடந்த மார்ச் 29-இல் அதிரடியான தீர்ப்பை நடுவர் மகேந்திரபூபதி வழங்கி, மாநிலத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

அவர் தனது தீர்ப்பில், “குற்றம் சாட்டப்பட்ட பி.ஆர்.பழனிசாமி கனிமவளச் சட்டப்படியும் குற்ர விசாரணை சட்டப்படியும் பெரிய குற்றம் எதையும் இழைக்கவில்லை. வெறும் ரூ. 25,000 அபராதம் விதிக்கக்கூடிய குற்றத்துக்காக, பி.ஆர்.பழனிசாமி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, அவரைஉயும் அவர்து மகன் செந்தில்குமார், பங்குதாரர் சகாதேவன் ஆகியோரையும் வழக்குகளிலிருந்து விடுவிக்கிறேன். இந்த வழக்கை தொடுத்த ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா, வழக்கறிஞர்கள் ஷீலா, ஞானகிரி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கபும் உத்தரவிடுகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை என்பது பழமொழி. பி.ஆர்.பி. கிரானைட்ஸ் நிறுவனத்தின் மோசடிகள் அனைவராலும் அறியப்பட்டவை. மேலூர் சாலையில் செல்லும் எவரும் அந்த நிறுவனத்தின் மோசடியின் விஸ்தீரணத்தை உணர்வர். இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களை நிரபராதி என்றும், குற்றம் சாட்டிய அரசுத்தரப்பை குற்றவாளிகளாகவும் சித்தரித்து தீர்ப்பு வழங்கிய நீதித்துறை நடுவர் மகேந்திரபூபதியின் செயல் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

சகாயம் குழுவினரின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவசர அவசரமாக பி.ஆர்.பி.யை வழக்கிலிருந்து விடுவித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பணம் பாதாளம் வரை பாயும் என்பதைத் தான் இந்த வழக்கு நிரூப்பிக்கிறதா? தன் மீது துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், அதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டிய நடுவர் மகேந்திரபூபதி அவசரமாக செயல்பட்டிருப்பது முறையானதல்ல.

இதனால் நீதித்துறைக்கு களங்கம் ஏற்பட்டிருக்கிறது. எனவேதான், மதுரை மாவட்ட முதன்மை நீதிபதி பஷீர் அகமதுவும், தலைமை குற்றவியல் நீதிபதி சரவணனும் உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுப்படி, மேலூர் நடுவர் நீதிமன்றம் வந்து மகேந்திர பூபதியிடம் வழக்கு தொடர்பாக 2 மணிநேரம் விசாரணை நட்த்தினார்கள். இறுதியில், சர்ச்சைக்குள்ளான நீதித்துறை நடுவர் மகேந்திரபூபதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவருக்குப் பதிலாக பாரதிராஜா என்பவர் பொறுப்பேற்றிருக்கிறார்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணனின் செயல்பாடுகளால் ஏற்கனவே தமிழக நீதித்துறையின் லட்சணம் சந்தி சிரித்த நிலையில், இப்போது நடுவர் மகேந்திர பூபதியும் தன் பங்கிற்கு நீதித்துறையை விமர்சனத்துக்கு உள்ளாக்கி இருக்கிறார். ஊழல் கரையானுக்கு நீதித்துறையும் விலக்கல்ல என்பது மீண்டும் ஊர்ஜிதம் ஆகிருக்கிறது.

நீதித்துறையின் மாண்பு காக்கப்பட வேண்டுமானால், அதிலுள்ள கறுப்பு ஆடுகள் களையப்பட வேண்டும். அதற்கு தார்மிக நியாயமும் அசாத்திய நேர்மையும் கொண்டவர்கள் அத்துறையை வழிநடத்த வேண்டும்.

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க்கு அணி.

(குறள்- நடுநிலைமை- 118)

-என்பது தமிழுக்கு பெருமை அளிக்கும் திருவள்ளுவரின் வழிகாட்டுதல். திருவள்ளுவரையும் மனுநீதிச் சோழனையும் நீதிமன்றத்தில் படமாகவும் சிலையாகவும் வைப்பதுடன் நமது கடமை முடிந்துவிடவில்லை என்பதை நீதித்துறையின் உயர்மட்டத்தில் உள்ளோர் உணர்ந்தால் இந்தப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். இல்லாவிடில், நீதித்துறை மீதான நம்பிக்கை மக்களிடம் குலைவதைத் தவிர்க்க இயலாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக