சனி, செப்டம்பர் 11, 2010

பாரதியை நினையுங்கள்!

எனது நண்பர் ஒருவர் பத்திரிகையாளர். அவர் சொன்ன, திருப்பூரில் நடந்த சம்பவம் இது. காவலர்கள் நடத்திய வாகனப் பரிசோதனையின் போது, சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் பிடிபட்டுள்ளார். அவரிடம் விசாரித்தபோது, ''புலனாய்வுப் பத்திரிகை ஒன்றின் நிருபர்'' என்று பந்தாவாக சொல்லி இருக்கிறார். அவருடன் வந்த இன்னொருவரை தனியாக 'கவனித்து' விசாரித்ததில், ஒரு பெரிய கொள்ளைக் கும்பலுடன் அவர்களுக்கு தொடர்பு இருந்தது தெரிய வந்தது.

பத்திரிகையாளர் என்ற அடையாளத்தைப் பயன்படுத்திக்கொண்டு, காவல்துறையிலேயே ஊடுருவி, பல மாதங்களாக அந்த 'நிருபர்' இந்த படுபாதகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இப்போது இருவரும் இருப்பது கோவை சிறையில்.

மற்றொரு சம்பவம். இதுவும் திருப்பூரில் நடந்தது தான். 'press' என்ற ஒட்டுவில்லை ஒட்டிக்கொண்டு இருசக்கர வாகனம் ஒன்று சென்றுள்ளது. அதன் முன்புறம் பெருமளவில் காகித பண்டல்கள் இருந்துள்ளன. அவரை நிறுத்திய காவலர்கள், போக்குவரத்து விதிமுறைக்கு மாறாக இவ்வாறு சரக்குகளைக் கொண்டுசெல்வது விபத்திற்கு வழிகோலும் என்று எச்சரித்திருக்கிறார்கள். ஆயினும், அவர் தொடர்ந்து இவ்வாறு சரக்கு கொண்டு சென்றுள்ளார். 'press' என்று ஒட்டிய வாகனம் என்பதால், காவலர்களும் வம்பு எதற்கு என்று கண்டுகொள்ளாமல் இருந்தனர். ஒருநாள் சாயம் வெளுத்துவிட்டது.

புதிதாக வந்த காவல்துறை அதிகாரி ஒருவர், இருசக்கர 'press' வாகனத்தை வழிமறித்து, ''நீங்கள் எந்த பத்திரிகை?'' என்று கேட்டுள்ளார். வாகன ஓட்டியோ, திருத்திரு என்று விழித்தபடி, திருப்பூரில் இயங்கும் ஒரு அச்சகத்தின் (printing press) பெயரைச் சொல்லி இருக்கிறார். அவருக்கு அடுத்து என்ன கிடைத்திருக்கும் என்று நீங்களே யூகித்துக் கொள்ளலாம்.

'press' என்ற ஒட்டுவில்லைக்கு இப்போது கிராக்கி. யார் வேண்டுமானாலும் வாகனங்களில் ஒட்டிக் கொள்கிறார்கள். பத்திரிகையில் பணி புரியும் நிருபர்கள், ஊடகப் பணியாளர்கள் செய்தி சேகரிக்கச் செல்லும்போது இடையூறு இன்றி செல்ல வசதியாக செய்யப்பட இந்த ஏற்பாடு, இப்போது அனைவராலும் துஷ்பிரயோகப்படுத்தப்படுகிறது. பத்திரிகை நிறுவனத்தில் பணியாற்றும் அலுவலக உதவியாளர் முதல் மேலாளர் வரை, அனைவரும் 'press' என்பதன் அர்த்தம் தெரியாமலோ, அல்லது அதன் மரியாதையைப் பெற வேண்டியோ, இவ்வாறு செய்கிறார்கள்.

இந்த துஷ்பிரயோகத்தைத் தவிர்க்க, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பிரத்யேக 'press' ஒட்டுவில்லைகள் வழங்குகிறது. ஆனாலும், 'press' மீதான அபிமானத்தை சுயநலவாதிகள் விடுவதில்லை.

கோவையில் நடந்தது...

கோவையில் பணிபுரியும் பத்திரிகையாளர் ஒருவர் கூறிய உண்மைச் சம்பவம். ஒரு நிறுவனத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடக்கிறது. தங்கள் நிறுவனத்தின் புதிய திட்டம் குறித்து விளக்கிய பிறகு, அனைவரது கரங்களிலும் ஒரு சிறிய கைப்பையைக் கொடுத்தார், அதன் பொறுப்பாளர். அதனுள் ரூ. 500 நோட்டுகள் இரண்டும், ஒரு எலக்ட்ரானிக் டிஜிட்டல் டைரி ஒன்றும் இருந்துள்ளன.

தாமதமாக வந்த சிலர், அந்தக் கைப்பையைப் பெற நடத்திய ஆர்ப்பாட்டம் கண்டு, அந்த நிறுவனத்தின் மேலாளரே அசந்துபோனார். பத்திரிகையாளர் சந்திப்பிற்குப் பிறகு, சிலர் அவரை தனியே சந்தித்து தங்களுக்கு 'வெறும் தேநீர் உபசாரம்' போதாது என்று கூறினார்களாம்! அதன்படி அவர்களுக்கு மட்டும் மேற்படி உற்சாகபான விருந்து படைக்கப்பட்டது!

இந்த உற்சாகபானம் உள்ளே சென்றவர்கள் எங்கே தங்கள் நிறுவனத்தின் செய்தியை பத்திரிகை அலுவலகம் கொண்டுசென்று சேர்க்கப் போகிறார்கள் என்று அந்த நிறுவன மேலாளர் யோசிக்கவே இல்லை. எதற்கு வம்பு என்று, கேட்டபடி பணத்தை தண்ணீராய் (தண்ணீருக்கு) செலவழித்தார்.

நாட்டைக் காக்கும் நான்காம் தூணான பத்திரிகையாளர்களையும் லஞ்சம் அரிக்கத் துவங்கிவிட்டது என்று அந்த பத்திரிகையாள நண்பர் வருத்தத்துடன் சொன்னார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றால், அங்குள்ள ஐம்பது பேரில் முப்பது பேர் போலி பத்திரிகையாளர்களாகத் தான் இருக்கிறார்கள் என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.

ஏதாவது ஒரு பத்திரிகையின் பெயரைச் சொல்லிக்கொண்டு, கட்டப்பஞ்சாயத்து முதல் தரகர் வேலை வரை பலர் செய்கிறார்கள். அவர்களுக்குத் தான் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் முன்னுரிமை கொடுக்கிறார். எந்த நிகழ்விலும் இவர்களது ஆதிக்கமே அதிகம். ஆனால், இவர்கள் கொடுக்கும் செய்தி எந்தப் பத்திரிகையிலும் வெளிவருவதில்லை- என்று அவர் சொன்னார்.

ஈரோட்டில் நடந்தது...

ஈரோட்டில் முக்கிய பத்திரிகை ஒன்றில் பணிபுரியும் நிருபர் அவர். காலையில் எழுந்தவுடன் தான் பணியாற்றும் பத்திரிகையை பத்து பிரதிகள் வாங்கிக் கொள்வார். அதை எடுத்துக் கொண்டு, பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்திகளில் தொடர்பு உள்ளவர்களை நேரில் சென்று பார்ப்பார். அநேகமாக அவர்கள் விழிப்பதே இவர் முகத்தில் தானாக இருக்கும். பிறகு, அந்நாளைய பத்திரிகையில் வந்துள்ள செய்தி, படத்தைக் காட்டுவார். அது பிரசுரமாக தான் பட்ட கஷ்டத்தை ஒரு நிமிடம் விளக்கிவிட்டு, தலையைச் சொறிவார். பிறகென்ன? அவர் எதிர்பார்த்து வந்தது (ஒரு செய்திக்கு ரூ. 500 மட்டுமே) கிடைத்தவுடன், அடுத்த நபரைக் காணக் கிளம்பி விடுவார்.

இந்த யாசக மூர்த்தி குறித்து அந்தப் பத்திரிகைக்கு தகவல் சொன்னாலும் கூட, பயனில்லை. ஏனென்றால், இதற்கு முன் இருந்தவர் இதைவிட வசூலித்தவராம். ஈரோட்டில் ஜவுளிச் சந்தையில் பணி புரியும் நண்பர் சொன்ன கதை இது.

எல்லா இடங்களிலும் நடப்பது...

இது தான் தற்போதைய பத்திரிகை உலகின் நிலை. ஒரு காலத்தில், பத்திரிகைகளில் பணிபுரிய ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். இப்போதும் அதே நிலைதான். தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இத்துறைக்கு கிடைப்பதில்லை என்று சென்னையில் உள்ள மூத்த பத்திரிகையாளருமான எனது நண்பர் ஒருவர் வருத்தப்பட்டார். ஆனால், பித்தலாட்டப் பேர்வழிகளுக்கு இத்துறை எளிதில் கைவசமாகி விடுகிறது.

சமுதாயத்தில் பத்திரிகையாளர்களுக்கு கிடைக்கும் வரவேற்பும் புகழும்-
பலரும் அஞ்சும் காவல்துறை, மற்றும் அரசு அதிகாரிகளிடம் பத்திரிகையாளர்களுக்கு கிடைக்கும் மரியாதையும்- பெருத்த ஆசைக்காரர்களையே இத்துறைக்கு அதிகம் ஈர்த்துள்ளது. அல்லது, இத்துறையில் சேரும் நல்ல மனிதரும் கூட, கால ஓட்டத்தில் கரைந்து போலிகளுடன் சமரசம் செய்து கொள்கிறார்கள். ஊர் முழுவதும் அம்மணமாய்த் திரியும்போது கோவணம் கட்டியவன் கோமாளி தானே?

கையெழுத்திட லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள், தீர்ப்பை மாற்றி எழுதும் நீதிபதிகள், ஓட்டுக்கு பணம் கொடுக்கும் அரசியல்வாதிகள், பதுக்கி விலை ஏற்றும் வியாபாரிகள், நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க கோடிகளைக் கேட்கும் மக்கள் பிரதிநிதிகள், காவல்நிலையத்தில் கற்பழிக்கும் காவலர்கள், விளம்பரம் தரும் நிறுவனமும் அரசும் என்ன குற்றம் செய்தாலும் கண்ணை மூடிக்கொள்ளும் பத்திரிகை நிறுவனங்கள்,.. என்று எல்லாத் துறைகளிலும் ஏற்பட்டுள்ள சீரழிவு ஊடகத் துறையிலும் படர்ந்திருப்பதை மாபெரும் குற்றம் என்று சொல்ல முடியாது தான்.

ஆனால், நாட்டு விடுதலைக்காக ஆங்கிலேயனை எதிர்த்து பல பத்திரிகைகளை நடத்திய மகாகவி பாரதி வாழ்ந்த மண்ணில் இந்த அவலங்கள் தொடரலாமா? மறுவேளை சோற்றுக்கு உத்தரவாதம் இல்லாத நிலையிலும், மாறுவேடத்தில் காவல்துறை ஒற்றர்கள் பின்தொடர்ந்த போதிலும், மனம் கலங்காமல், பராசக்தி மீது பாரத்தைப் போட்டுவிட்டு அவர் எழுதிய தமிழ் எழுத்துக்களின் மீதல்லவா தற்போதைய பத்திரிகை உலகம் நின்று கொண்டிருக்கிறது?

சுயநலனுக்காக கை ஏந்துவதும், பத்திரிகை பேரைச் சொல்லிக் கொண்டு வயிறு வளர்ப்பதும், அரசியல்வாதிகளை குளிரூட்டி காரியம் சாதிப்பதுமாக மாறிவிட்டது, நமது பத்திரிகை உலகம்.

அரசு வழங்கும் 3 சென்ட் இலவச நிலத்திற்காக மனசாட்சியை விற்க பத்திரிகையாளர்கள் தயாராவது அதைவிட கேவலம். இந்த நிலத்தைப் பெற கோவையில் பல பத்திரிகை அலுவலகங்களில் பயங்கரப் போட்டி நடந்ததாக அறிகிறபோது, மேலும் வருத்தம் ஏற்படுகிறது. செம்மொழி மாநாட்டின்போது, பத்திரிகையாளர்களை குஷிப்படுத்த தமிழக முதல்வர் அறிவித்த திட்டம் இது. இலங்கையில் கொல்லப்பட்ட லட்சக் கணக்கான சகோதர சகோதரிகளின் உடல்கள் புதைக்கப்பட்ட நிலங்கள் நமது பத்திரிகையாளர்களுக்கு நினைவு வரவில்லையா?

நாட்டில் எங்கு அக்கிரமம் நடந்தாலும் தட்டிக் கேட்க பத்திரிகைகளும் ஊடகங்களும் உள்ளன என்று இன்னமும் மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிகை உலகிலும் நேர்மையானவர்கள் பலர் பிழைக்கத் தெரியாமல், நாட்டுநலன் கருதி உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களைக் கருத்தில் கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை, நாட்டிற்கு விடுதலையும், பத்திரிகை உலகுக்கு எளிய தமிழ்நடையும் வழங்கிச் சென்ற அந்த மகத்தான கவிஞன் பாரதியை நினைவில் கொண்டேனும், தற்போதைய 'press' காரர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.

மகாகவி பாரதியின் 89-வது நினைவுநாளான இன்று, பத்திரிகையாளர்களுக்கு எனது பணிவான வேண்டுகோள் இது.
..

1 கருத்து: