சனி, ஆகஸ்ட் 28, 2010

இத்தாலியில் பிறக்காதது ஆனந்த் செய்த பாவமா?


பாரதத்தின் சதுரங்க உலகின் முடிசூடா மன்னன் விஸ்வநாதன் ஆனந்திற்கு அண்மையில் ஏற்பட்ட அவமதிப்பு, தேசபக்தியுள்ள ஒவ்வொரு இந்தியர் மனதிலும் ஆறாத வடுவை உருவாக்கி இருக்கிறது. அவரது குடியுரிமை தொடர்பான சர்ச்சையும், மத்திய அரசு அந்த விவகாரத்தில் நடந்துகொண்ட விதமும், மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்திய செஸ் விளையாட்டுலகில் புது ரத்தம் பாய்ச்சியவர் ஆனந்த். சதுரங்கம் பாரதத்தின் தொன்மையான விளையாட்டாக இருந்தபோதும், ஆனந்த் வெற்றிவீரராக வலம் வரத் துவங்கிய பிறகே, இந்தியாவில் செஸ் விளையாட்டில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. நாட்டின் செஸ் விளையாட்டில் பெரும் புரட்சி ஏற்படுத்திய தனியொரு சாதனையாளராக ஆனந்த் கருதப் படுகிறார்.

நடுத்தர குடும்பத்தில், ரயில்வே அதிகாரியின் மகனாகப் பிறந்த விஸ்வநாதன் ஆனந்த், உலகின் செஸ் மன்னராக வீற்றிருக்க, அவரது அயராத முயற்சிகளே அடிப்படை என்றால் மிகையாகாது. தமிழகத்தின் மயிலாடுதுறையில் 1969 , டிச. 11 -ம் தேதி பிறந்தார் ஆனந்த். ஆறு வயதில் அம்மா சுசீலா மூலமாக செஸ் விளையாட்டின் அறிமுகம் ஆனந்திற்கு கிடைத்தது. பள்ளிகளிலும், உள்ளூர் அளவிலும் அனாயசமாக செஸ் ஆடிய ஆனந்தின் திறமை மெல்ல பரவத் துவங்கியது.

தனது 14 -வது வயதில் (1983), தேசிய செஸ் சாம்பியன் பட்டத்தை அவர் வென்றார் . 1984 - ல் தேசிய கிராண்ட் மாஸ்டர் என்ற தகுதியைப் பெற்றார். அதிவேகமான நகர்த்தல்களால் எதிராளியைத் திணறச் செய்வது ஆனந்தின் பாணி. இதன் காரணமாக, 'மின்னல் பையன்' என்ற பட்டப்பெயரையும் பெற்றார். பெற்றோரின் வழிகாட்டுதல்களால், அவரது வெற்றிப் பயணம் தொடர்ந்தது. 1987 - ல் உலக ஜூனியர் செஸ் சாம்பியன் ஆனார். இந்நிலையை அடைந்த முதல் இந்தியர் ஆனந்த் தான். இதுவே இந்திய செஸ் அரங்கில் பெரும் மறுமலர்ச்சிக்கு வித்திட்டது. அடுத்த ஆண்டே நாட்டின் முதல் கிராண்ட் மாஸ்டர் ஆனார்.

ஆனந்தின் சாதனையைப் பாராட்டி, அர்ஜுனா விருது (1985), பத்மஸ்ரீ விருது (1987), ராஜீவ்காந்தி கேள்ரத்னா விருது (1991) ஆகிய கௌரவங்கள் நாடி வந்தன. உலக அளவில் ஆனந்தின் பயணம் துவங்கியது. ஆனால், சர்வதேச கிராண்ட் மாஸ்டர்கள் கார்போவ், காஸ்பரோவ், விளாடிமிர் கிராம்னிக் உள்ளிட்டோரை வெல்ல ஆனந்த் போராட வேண்டி இருந்தது. அடுத்த பத்தாண்டுகள் ஆனந்திற்கு போராட்டக் காலம்; ஆனந்த் அனுபவத்தை விரிவுபடுத்தி வந்தார்.

2000 - ல் பிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல்முறையாக வென்றார். 2003 - ல் பிடே அதிவேக செஸ் போட்டியிலும் வென்றார். 2007 - ல் மீண்டும் உலக சாம்பியன் பட்டம் வென்றார். தொடர்ந்து 2008 , 2010 ஆண்டுகளிலும் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார். இன்றைய சதுரங்க உலகின் மிக வேகமான வீரராகவும், தொடர் சாதனையாளராகவும் ஆனந்த் விளங்கி வருகிறார். சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்க வசதியாக, ஸ்பெயின் நாட்டின் கொலாடோ மேடியானோ நகரில்,மனைவி அருணாவுடன் ஆனந்த் வசித்து வருகிறார். எனினும் சர்வதேசப் போட்டிகளில் இந்திய வீரராகவே பங்கேற்று வருகிறார்.

பிடே மதிப்பீட்டின் படி தற்போது ஆனந்த் 2,789 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்தில் உள்ளார். உலக சதுரங்க வரலாற்றில் பிடே தரப்பட்டியலில் 2,800 புள்ளிகளைத் தாண்டிய ஐவருள் ஆனந்தும் ஒருவர் (ஏப். 2006, ஏப். 2008). ஆனந்தின் வெற்றிகளுக்கு மகுடம் சூட்டும் விதமாக, பத்மபூஷன் (2000), பத்மவிபூஷன்(2007), சதுரங்க ஆஸ்கார் - (1997, 1998, 2003, 2004, 2007, 2008) பட்டங்களும் விருதுகளும் நாடி வந்தன.

இவர் 1994 -லிருந்து முன்னணி வகிக்கும் செஸ் மூவரில் ஒருவராக விளங்குகிறார். இவ்வாறு செஸ் விளையாட்டின் மூலமாக நாட்டுக்கு பெருமை தேடித் தந்துவரும் ஆனந்திற்கு, இதுவரை சந்தித்திராத அவமானத்தை அண்மையில் மத்திய அரசு ஏறபடுத்திவிட்டது.

குடியுரிமை விவகாரம்:

ஐதராபாத் பல்கலைக்கழகம் அண்மையில் (ஆக. 24 ) சர்வதேச கணிதவியலாளர் மாநாட்டை நடத்தியது. இம்மாநாட்டில் கௌரவ டாக்டர் பட்டத்தை ஆனந்திற்கு வழங்க ஓராண்டுக்கு முன்னரே முடிவெடுத்து, அதற்கு அனுமதி கோரி, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு பல்கலைக்கழகம் அனுப்பியது. இது ஒரு வழக்கமான நடைமுறை. ஆனால், அந்தக் கோப்பு நகரவே இல்லை. மாநாடு நடக்கும் நாள் நெருங்கியும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், ஆனந்திற்கு பட்டமளிக்க ஒப்புதல் அளிக்கவில்லை. இதன் காரணமாக, ஆனந்திற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் விழாவை ஐதராபாத் பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது.

அப்போது தான், ஆனந்தின் குடியுரிமையை விவகாரமாக்கி, பட்டம் வழங்க ஒப்புதல் அளிக்காமல் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இழுத்தடித்தது தெரிய வந்தது. ஆனந்த் தற்போது ஸ்பெயின் நாட்டில் தங்கி இருப்பதால், அவர் இந்தியக் குடிமகனா என்று அமைச்சகம் உறுதிப்படுத்த விரும்பியுள்ளது. அதற்கான ஆதாரமாக, தனது இந்திய பாஸ்போர்ட் நகலை ஆனந்த் சமர்ப்பித்தும் இருக்கிறார். அதை அமைச்கரகத்திலுள்ள எந்த மேதாவியோ ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் தான், கௌரவ டாக்டர் பட்டம் வழங்க முடியாமல் போய்விட்டது என்பது வெளிப்பட்டது.

நடந்த நிகழ்வுகள் ஆனந்திற்கு வருத்தம் அளித்தன. ''ஸ்பெயினில் வசித்தாலும் நான் இந்தியக் குடிமகனே. எனது இந்திய பாஸ்போர்ட் போதாதா எனது குடியுரிமைக்கு?'' என்று கேட்டார் ஆனந்த். நிலைமை விபரீதம் ஆவதை உணர்ந்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல், ஆனந்தை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தார்.

கோப்புகளைக் கையாளும் முறையில் ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல்களால் இந்த பிரச்னை ஏற்பட்டுவிட்டதாக சப்பைக்கட்டு கட்டிய அவர், ஆனந்த் விரும்பும் இன்னொரு நாளில், கௌரவ டாக்டர் பட்டத்தை ஐதராபாத் பல்கலைக்கழகம் வழங்கும் என்று தெரிவித்தார். ஆனால் அதை ஆனந்த் ஏற்கவில்லை.

கௌரவ டாக்டர் பட்டத்தை ஏற்கப் போவதில்லை என்று ஆனந்த் அறிவித்து விட்டார். இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. பா.ஜ.க.வின் ஷாநவாஸ் உசேன் தலைமையில், அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும், ஆனந்திடம் இந்திய அரசு நடந்துகொண்ட முறையை கண்டித்து குரல் எழுப்பினர்.

இதுபற்றி கருது தெரிவித்த ஆனந்தின் மனைவி அருணா, ''கௌரவ டாக்டர் பட்டம் பெறாதது ஏமாற்றம் அளிக்கவில்லை; உண்மையில் எரிச்சலையே ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொருமுறை சர்வதேசப் போட்டிகளில் விளையாடும்போதும் ஆனந்தின் அருகில் இந்திய தேசியக் கொடியைக் காணலாம். இதைவிட வேறு என்ன அத்தாட்சி தேவை? வேறு எப்படி ஆனந்தின் இந்தியக் குடியுரிமையை நிரூபிப்பது?'' என்று கேட்டார். இதற்கு மத்திய அரசிடம் எந்த பதிலும் இல்லை.

நடந்துவிட்ட விரும்பத் தகாத சம்பவத்தால் ஆனந்த் சற்றும் மனம் கலங்கவில்லை. ஐதராபாத் பல்கலையில் மறுநாள் நடந்த கணிதவியலாளர் மாநாட்டில் 39 செஸ் புலிகளுடன் ஒரே நேரத்தில் விளையாடி, தனது நாகரிகத்தை அவர் நிரூபித்தார். ஒரே நேரத்தில் அடுத்தடுத்து 39 செஸ் வீரர்களுடன் அவர் ஆடிய மின்னல்வேக சதுரங்கத்திலும் அவரே வென்றார்.

விவகாரக் குடியுரிமை:

நடந்தது நடந்துவிட்டது என்று இதை விட்டுவிட முடியவில்லை. ஏனெனில், இந்திய அரசியலில் குடியுரிமை விவகாரத்திற்கு நீண்ட பாரம்பரியம் உண்டு. இதில் முதல் ஆளாய் வருபவர் நமது சோனியா அம்மையார் தான்.

இத்தாலியில் பிறந்த அந்தோனியோ மைனோ, இந்தியாவின் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த ராஜீவ்காந்தியை காதல் திருமணம் செய்தது 1968 -ம் ஆண்டு. சோனியா என்ற நாமகரணத்துடன் இந்தியா வந்தது அதற்கு அடுத்த ஆண்டு. ஐந்து ஆண்டுகள் கழித்து கணவரின் மூலமாக இந்தியக் குடியுரிமை பெற அவருக்கு வாய்ப்பிருந்தது. ஆனால், 1983 வரை அவர் இந்தியக் குடியுரிமை பெறவில்லை. இந்தியாவின் பிரதான அரசியல் குடும்பத்தில் மருமகளாக இருந்தபோதும் அவர் இந்தியக் குடியுரிமையை பெறவே இல்லை. ஆனால் பல தேர்தல்களில் (16 ஆண்டுகள்) வாக்காளராக பதிவு செய்யப்பட்டார்.

1984 - ல் ராஜீவ் பிரதமராக வாய்ப்பு பிரகாசம் அடைந்ததைத் தொடர்ந்தே அவர் இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பித்து, முறைப்படி பெற்றார். ஆக, இந்தியாவில் இருந்துகொண்டே இத்தாலி நாட்டின் குடிமக்களாகத் தொடர்ந்தவர் தான் சோனியா அம்மையார். (1992 வரை, இத்தாலியைச் சேர்ந்தவர் வேறு நாட்டில் குடியுரிமை பெற்றிருக்க கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது குறிப்பிடத் தக்கது. தற்போது இத்தாலி குடிமகன்கள் வேறு நாட்டில் இரட்டைக் குடியுரிமை வைத்துக் கொள்ளலாம் என்று சட்டத்தை திருத்திவிட்டனர்). அதே சோனியா தான் தற்போதைய மத்திய அரசின் மூலவிசையாக செயல்படுகிறார்.

மற்றொரு சம்பவம்: இந்து தெய்வங்களை ஆபாசமாக வரைந்ததற்காக சிவசேனையின் மிரட்டலுக்கு ஆளானவர் ஓவியர் எம்.எப்.ஹுசைன். இவர் 2006 - லிருந்தே இந்தியாவை விட்டு வெளியேறி - இந்திய குடியுரிமை வேண்டாம் என்று கூறி - கத்தார் நாட்டில் வசிக்கிறார்.

அந்நாடு அவருக்கு இந்த ஆண்டு கத்தார் குடியுரிமை வழங்கிவிட்டது. அவர் அங்கு இருக்க வேண்டாம்; மீண்டும் இந்தியா திரும்ப வேண்டும் என்று அரசுத் தரப்பிலும், மதச்சார்பின்மையைக் குத்தகைக்கு எடுத்துள்ளவர்களும் தொடர்ந்து அவரிடம் வலியுறுத்தி வருகிறார்கள்.

இன்னொரு சம்பவம்: வங்கதேசத்தில் பெண்ணுரிமைக்கு குரல் கொடுத்த காரணத்தால் மதவெறியர்களால் வேட்டையாடப்பட்டு, தப்பிப் பிழைத்த எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் 1994 - லிருந்து அந்நாட்டை விட்டு வெளியேறி ஜெர்மனி, ஸ்வீடன் நாடுகளில் பத்து ஆண்டுகள் தஞ்சம் புகுந்தார். மொழி அடிப்படையில் வங்காளி என்பதால் இந்தியாவில் வசிக்க அவர் விரும்பினார்.
கடுமையான கட்டுப்பாடுகளுடன் அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட சிறை வாழ்க்கை போல 2004 முதல் 2007 வரை இந்தியாவின் கொல்கத்தா நகரில் வாழ்ந்த அவர் மீண்டும் ஸ்வீடன் சென்றுவிட்டார். அவருக்கு இந்தியாவில் வசிக்க நிரந்தர குடியுரிமை வழங்க இந்திய அரசு மறுத்துவிட்டது.

இவ்வாறாக, இந்தியாவே வேண்டாம் என்று சென்ற எம்.எப்.ஹுசைனை (கத்தார்) வலிய அழைத்துக் கொண்டுள்ளது நமது அரசு. இந்தியாவில் வசிக்க விரும்பியும் தஸ்லிமாவுக்கு (வங்கதேசம்) அதே அரசு அனுமதி அளிக்காமல் தவிர்க்கிறது. இந்தியாவில் 16 ஆண்டுகள் வசித்தபோதும் இந்தியக் குடியுரிமை பெறாத சோனியா (இத்தாலி) மத்திய அரசின் சூத்திரதாரியாக, அதே அரசாலும், காங்கிரஸ் கட்சியாலும் போற்றப்படுகிறார்.

அதே அரசு தான், இந்தியாவுக்கு மாபெரும் பெருமைகளை செஸ் விளையாட்டின் மூலம் பெற்றுத் தந்த தமிழகத்தின் தவப் புதல்வன் விஸ்வநாதன் ஆனந்தை ஸ்பெயின் நாட்டில் வசிப்பதற்காக சோதித்திருக்கிறது.

ஒருவேளை விஸ்வநாதன் ஆனந்த் சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்தவராக இருந்திருந்தால் இந்நிலை அவருக்கு ஏற்பட்டிருக்காது. அல்லது அவரும் சோனியா பிறந்த அதே இத்தாலியில் பிறந்திருக்க வேண்டும். இந்த இரண்டையும் செய்யாதது தான் ஆனந்த் செய்த மகத்தான தவறு என்று கருத வேண்டி இருக்கிறது.
ஆனந்திற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவது, தாமதம் வாயிலாக தவிர்க்கப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக நமது மனசாட்சி தட்டி எழுப்பப்பட்டுள்ளது.
-------------------------------------------------------
காண்க: தமிழ் ஹிந்து
நன்றி: விஜயபாரதம் (24.09.2010)

.

.

வியாழன், ஆகஸ்ட் 26, 2010

இனியவை இருபதும் இன்னா இருபதும் : பகுதி - 2

கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் சிறப்பு அம்சங்களை (இனியவை இருபது) சென்ற பகுதியில் கண்டோம். எந்த ஒரு நாணயத்திற்கும் இரு பக்கங்கள் உள்ளன. அதுபோல, செம்மொழி மாநாட்டின் மறுபுறமான 'இன்னா இருபது' குறித்து இங்கு காண்போம்.

இன்னா இருபது:

1. 'முதல் கோணல் முற்றும் கோணல்' என்ற பழமொழி உண்டு. அது, செம்மொழி மாநாட்டில் உண்மையாயிற்று. இலங்கையில் தமிழர்கள்மீது அந்நாட்டு அரசு கடுமையான போரை நடத்தி விடுதலைப்புலிகளை முற்றிலும் நசுக்கி ஒழித்த சமயம், தமிழகத்தில் உணர்ச்சிகரமான சூழல் இருந்தது. அச்சூழலை மாற்ற, முதல்வர் கருணாநிதி உள்ளத்தில் தோன்றிய சிந்தனைதான் உலகத் தமிழ் மாநாடு. இதுவரை எட்டு உலகத் தமிழ் மாநாடுகள் நடந்துள்ள நிலையில், ஒன்பதாவது மாநாடு நடத்துவதாக தன்னிச்சையாக அறிவித்தார் கருணாநிதி.
ஆனால் இம்மாநாட்டைத் தமிழக அரசு நேரடியாக நடத்த முடியாது என்பதை, உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின் தற்போதைய தலைவரான ஜப்பானைச் சேர்ந்த நொகுருபு கரசிமாவின் எதிர்ப்பு உணர்த்தியது. உலகத் தமிழ் மாநாடு நடத்தும் சூழல் (ஈழத்தில் லட்சக் கணக்கான தமிழர்கள் பலியான நிலையில்) தற்போது இல்லை என்று அவர் கூறிவிட்டார்.
உலகத் தமிழ் ஆராய்சிக் கழகம் நடத்த வேண்டிய மாநாட்டை தமிழக அரசு நடத்துவதாக அறிவித்ததே முதல்வரின் அறியாமையை வெளிப்படுத்திவிட்டது. நொகுருபு கரசிமாவின் நெஞ்சுரம் மிக்க எதிர்ப்பால் தத்தளித்த முதல்வர் கருணாநிதி, வேறு வழியின்றி அறிவித்ததே உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு.
உலகத் தமிழ் ஆராய்சிக் கழகத்தின் கட்டுப்பாடின்றி, முதல்வரின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டதால், மாநாடு முழுமையும் கருணாநிதியின் மற்றொரு கழக மாநாடாக மாற்றப்பட்டது.

2. உலகம் முழுவதிலும் இருந்து தமிழர்கள் இம்மாநாட்டில் பங்கேற்ற போதும், உலக நாடுகளில் தமிழர்கள் சந்திக்கும் இன்னல்களை வெளிப்படையாக முன்வைக்க மாநாட்டில் எந்த ஏற்பாடும் இல்லை. குறிப்பாக இலங்கை, மலேசியா வாழ் தமிழர்கள், பல நிபந்தனைகளுக்கு உட்பட்டே மாநாட்டில் அனுமதிக்கப்பட்டார்கள். எனவே, அம்மக்களின் துயரங்கள் மாநாட்டில் பதிவாகவில்லை.

3. செம்மொழி மாநாட்டில் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்ற போதும், முன்னாள் ஜனாதிபதியும் மக்கள் தலைவருமான அப்துல் கலாம் மாநாட்டிற்கு அழைக்கப்படாதது நெருடலை ஏற்படுத்துகிறது. தமிழகத்தின் மரியாதைக்குரிய தலைமகனை செம்மொழி மாநாடு புறக்கணித்திருக்கக் கூடாது.

4. சிந்துச் சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என்று கூறும் பின்லாந்து அறிஞர் அஸ்கோ பர்போலோவுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. செல்லாக்காசு என மாறிவிட்ட ஆரிய திμõவிட கொள்கைகளை மீட்டுருவாக்க, முயற்சி நடந்தது. பர்போலோவுக்கு வழங்கப்பட்ட விருதின் பெயர் 'கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது'! கருணாநிதியின் சுயபுராண ஆர்வத்துக்கு இதைவிட மோசமான உதாரணம் இருக்க முடியாது. இவ்விருதுக்கு வேறு பெயரே கிடைக்கவில்லையா?

5. திராவிட மாயையில் கருணாநிதி உழன்ற போதும், தென்மாநில ஆட்சியாளர்களில் வேறு எவரும் மாநாட்டில் பங்கேற்கவில்லை. கருணாநிதி கூறும் திராவிடத்திலுள்ள கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநில ஆட்சிப் பொறுப்பிலுள்ள யாரும் இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு அழைக்கப்படவில்லை (கூட்டணி அμசியல்?). முந்தைய உலகத் தமிழ் மாநாடுகளில் பிற மாநில முதல்வர்கள் பங்கேற்றுள்ளனர். இம்மாநாட்டில் முதல்வர் கருணாநிதியே அனைவருமாகத் திகழ்ந்தார்.

6. இந்தியா ஜனநாயக நாடு. பேச்சுரிமை, எழுத்துரிமை, பிரசார உரிமைகள் ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு என்கிறது நமது அμசியல் சாசனம். ஆனால், 'செம்மொழி மாநாடு தேவையா?' என்று துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்த ஆறுபேர் கோவையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மாநாட்டைக் குலைக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு, அவர்கள் மீது கடுமையான பிரிவுகளில் வழக்கு தொடுக்கப்பட்டது. அரசு இயந்திரம் மூலமாக ஜனநாயக உரிமைகளை நசுக்கி, மாநாட்டில் குதூகலிக்க வேண்டிய தேவை என்ன என்ற கேள்வி எழுகிறது.

7. செம்மொழி மாநாட்டுக்காக கோவையில் வளர்ச்சிப் பணிகள் அதிவேகமாகச் செய்யப்பட்டன. இதற்காக கணக்கின்றி செலவிடப்பட்டது. மாநாட்டுக்கு ரூ. 68 கோடி செலவானதாக, முதல்வர் கூறியுள்ளார். உண்மையில் இதைவிட பல மடங்கு நிதி செலவிடப்பட்டுள்ளது. மாநாட்டுப் பந்தலின் தோரண வாயிலே (இது கின்னஸ் சாதனைக்கு அனுப்பப்படுகிறது) பல கோடி செலவில் அமைக்கப்பட்டது.
தவிர, நெடுஞ்சாலைத்துறை (ரூ. 300 கோடி), கோவை மாநகராட்சி (ரூ. 150 கோடி) ஆகியவையும் செலவிட்டுள்ளன. மிகப் பொருட்செலவில், மாநாடு நடத்திவிட்டு, செலவினத்தைக் குறைத்துக் காட்டுவது, தமிழக அரசின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

8. மாநாட்டை முன்னிட்டுச் செய்யப்பட்ட வளர்ச்சிப் பணிகளில் பல, அவசரக் கோலத்தில் தரமின்றி நிறைவேற்றப்பட்டன. சாலைகள் தவிர, பிற பணிகள் எதிலும் நிறைவில்லை. தேவையற்ற இடங்களிலும் நடைபாதை மேடை அமைத்து அரசு நிதி வீணடிக்கப்பட்டது. பூங்கா அமைப்பதாகக் கூறி பல இடங்களில் செயற்கைப் புல்தரைகளும், வேரோடு பிடுங்கி நடப்பட்ட மரங்களும் காட்சி அளிக்கின்றன. இவை 6 மாத காலம் பிழைத்திருந்தாலே அதிசயம் தான். 'வளர்ச்சி'ப் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர்கள் நன்கு வளர்ந்திருப்பார்கள் என்று நம்பலாம்.

9. செம்மொழி மாநாட்டுக்காக முதல்வர் கருணாநிதி எழுதியதாகக் கூறி பிரபலப்படுத்தப்பட்ட பாடல் ஒரு பிதற்றல். தமிழ் இலக்கியங்களில் குறிப்பிட்ட சில வரிகளை இச்சைப்படித் தொகுத்து, 'மாநாட்டின் மையநோக்குப் பாடல்' என்று விளம்பரப்படுத்தியது உச்சகட்ட பகடி. இதற்கு பிரபல இசையமைப்பாளர் ரகுமான் இசையமைத்து, 23 பாடகர்கள் பாடிக் குதறி, இயக்குநர் கௌதம் மேனன் காட்சிப்படுத்தி, அதைக் கண்டு குதூகலித்த மக்களை நினைந்தால், 'நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால்' என்று பாடத் தோன்றுகிறது. சாகாக் கவிதைகளைப் படைத்த வள்ளுவன், கம்பன், பாரதி உள்ளிட்ட அனைவரையும் ஒரே 'கவிதை'யில் கேவலப்படுத்த கலைஞரால் முடிந்திருக்கிறது; வேதனை.

10. செம்மொழி மாநாட்டில் மிக முக்கிய அங்கம் வகித்தவை ஆய்வரங்கங்கள். 23 அரங்குகளில், 55 தலைப்புகளில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் ஆய்வுக் கட்டுரைகளை வாசித்தனர். ஆனால், ஆய்வுஅறிஞர்களைத் தவிர, இதைக் கேட்கவும் ஆளில்லை. மாநாட்டில் கட்டுக்கடங்காத கூட்டம், ஆய்வரங்குகளோ காற்று வாங்கின.
ஆய்வரங்குகளை மக்களை அனுமதிப்பது அரசுக்கு எதிரான பிரசாரத்திற்கு உதவிடும் என்ற உளவுத்துறை எச்சரிக்கையே இதற்கு காரணம். இதன் விளைவாக, ஆய்வரங்குகளை பயன்படுத்தி இருக்கக்கூடிய கல்லூரி மாணவர்களும் வாய்ப்புகளை இழந்தனர்; 'கற்றலின் கேட்டலே நன்று' என்பது பொய்த்துப் போனது.

11. மாநாட்டின் பார்வையாளர்களுக்கான முதல் வரிசையில் முதல்வர் குடும்பத்தினரே ஆதிக்கம் செலுத்தினர். மனைவி, துணைவி, மக்கள் மருமக்கள், பேரன் -பேத்திகள் ராஜபோகமாக அமர்ந்திருந்த காட்சியே கண்கொள்ளாக் காட்சி. ராஜராஜ சோழனும், மதுரை மீட்ட சுந்தர பாண்டியனும் கூட தர்பாரில் இவ்வாறு குடும்பத்தை அமரச் செய்து அழகு பார்த்திருக்க மாட்டார்கள். வாழ்க, மக்களாட்சி!

12. செம்மொழி மாநாட்டின் இரு பெரும் 'சிறப்புக்கள்' என்று, முதல்வரின் பேத்தி எழிலரசி ஜோதிமணியின் வீணை இசை, மற்றொரு பேத்தியாம் கவிதாயினி கயல்விழியின் கவிதை ஆகியவற்றைச் சொல்லலாம். முதல்வரின் வாரிசுகள் என்பதாலேயே, மாநாட்டில் வாய்ப்பு பெற்ற இவர்கள் பூர்வ புண்ணியம் செய்தவர்கள். வாழ்க அனைவருக்குமான மக்கள் நல அரசு!
தவிர, முதல்வரின் மகள் கனிமொழி, அவருடன் மத்திய அமைச்சர் ராசா, மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோர் எல்லா இடங்களிலும் நீக்கமறத் தென்பட்டார்கள். உடன்பிறப்புகள் கைதட்டி மகிழ்ந்தார்கள்.

13. மாநாட்டில் இடம் பெற்ற கவியரங்கங்கள் 'காக்காய்' அரங்கங்களாகவே காட்சி அளித்தன. வைரமுத்து தலைமையிலான 'கிளம்பிற்று காண் தமிழ்ச் சிங்கக் கூட்டம்' கவியரங்கம், முதல்வரை மன்னவன், தென்னவன் எனப் புகழ்ந்தது. வாலி தலைமையிலான 'தமிழுக்கும் அமுதென்று பேர்' கவியரங்கமோ, ஜெயலலிதாவை வசைபாடி கருணாநிதியின் கருணைமழையில் நனைந்தது.
வாலி தலைமையில் நடந்த கவியரங்கில் பாடிய தணிகைச்செல்வன் என்பவர், அயோத்தி ராமனை கேவலப்படுத்தினார் (அயோத்தி ராமன் அயோக்கிய ராமனாம்; அது சீதைக்கும் பெரியாருக்கும் தான் தெரியுமாம்!) வழக்கம் போல கைதட்டியது பகுத்தறிவற்ற கழக ஜால்ரா கூட்டம். வேடிக்கை பார்த்தார், பிற மதங்களை மதிக்கும் முதல்வர் கருணாநிதி.
.
14. தமிழ் செம்மொழி என்ற தகுதியை அடைய பக்தி இலக்கியங்களும் ஒரு காரணமாக இருந்துள்ளன. தொடர் இலக்கிய நீரோட்டத்தை உறுதி செய்ததில், பன்னிரு சைவத் திருமுறைகளுக்கும், வைணவர்களின் நாலாயிர திவ்யப் பிரபந்தத்திற்கும், கம்பராமாயணம், பெரிய புராணம், திருவருட்பா போன்ற அருளாளர்களின் நூல்களுக்கும் பெரும் பங்குண்டு. எனவே, செம்மொழி மாநாட்டில் ஆன்மிக இலக்கியங்களுக்கு இடமளிக்க வேண்டும் என்று இந்து முன்னணி நிறுவனர் ராம. கோபாலன் உள்ளிட்டவர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதனை தமிழக அரசு கண்டுகொள்ளவே இல்லை. மாநாட்டில் 2ம் நாள் நிகழ்ந்த கருத்தரங்கிலும் (சமயம் வளர்த்த தமிழ்) மதச்சார்பின்மை பேணுவதே குறிக்கோளாகக் காணப்பட்டது. பேரூர் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் தலைமை வகித்தும், சிறுபான்மை மதத்தினரே முன்னிலைப்படுத்தப் பட்டனர். இதே போக்கு ஆய்வரங்குகளிலும் காணப்பட்டது. இந்து சமயம் சார்ந்த இலக்கியங்களை முன்னிறுத்தி சிலர் ஆய்வுகளை சமர்ப்பித்தபோதும், அவை தனிப்பட்ட முயற்சிகளே. அரசின் பாராமுகத்தால், அரிய தமிழ் இலக்கியங்கள்- சமயம் சார்ந்தவை என்பதால்- இம்மாநாட்டில் உரிய கௌரவத்தைப் பெறவில்லை.
தமிழ் இலக்கியங்களின் செழுமையான பகுதி, சைவ வைணவ (இந்து என்று மாநாட்டில் குறிப்பிடப்படவில்லை) தாக்கம் பெற்றுள்ள நிலையில், சீறாப்புராணத்தையும் தேம்பாவணியையும் இரட்சணிய யாத்ரீகத்தையும், அவற்றுடன் இணையெனக் கொள்வது அறியாமையல்ல; அரசியல்.
.
15. செம்மொழி மாநாட்டுக்காக தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது தேவையற்றது. அது போலவே அரசு ஊழியர்களுக்கு 3 நாட்கள் தற்செயல் விடுப்புஅளித்தது அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சநிலை. ஜூன் 23 முதல் ஜூன் 27 வரை, தமிழகம் முழுவதும் எந்த அரசு அலுவலகமும் இயங்கவில்லை. இந்த நடைமுறை நல்லதல்ல.

16. செம்மொழி மாநாட்டையொட்டி பெரும்பாலான அரசுத் துறை செயலர்கள், அமைச்சர்கள் கோவையிலேயே ஒருமாத காலத்துக்கு முகாமிட்டனர். இதன் காரணமாக அரசு அலுவல்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அரசுக் கோப்புகள் தேங்கின. ஐந்து நாட்கள் நடைபெறும் ஒரு மாநாட்டுக்காக அரசு இயந்திரம் நிலை குலைந்திருக்கிறது. இது நல்ல முன்னுதாரணம் அல்ல.
செம்மொழி மாநாட்டுடன் நேரடித் தொடர்பு இல்லாவிடிலும், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்ததும், அரசு இயந்திரமே கோவைக்கு மடை மாறியதும் மிக அதீதம்.

17. செம்மொழி மாநாடு நடைபெறும் நாட்களில் மட்டும் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கையும் அரசால் கண்டு கொள்ளப்படவில்லை. மாறாக, மாநாட்டில் குவியும் கூட்டத்தை உத்தேசித்து 'டாஸ்மாக்' கடைகளில் சரக்கு இருப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டது. இதன் விளைவாக, செம்மொழி மாநாட்டின் மாலை வேளைகளில் 'தமிழ்' இளைஞர்கள் உற்சாக பான உலா வந்ததைக் காண முடிந்தது. 'டாஸ்மாக்' கடைகளில் சரக்கு கூடுதல் விலைக்கு விற்றுத் தீர்ந்தது.

18. மாநாட்டில் கூட்டம் அதிகமாகக் காட்டுவதற்காக தி.மு.க.வினர் மாநிலம் முழுவதிலும் இருந்து இலவசமாக அழைத்து வரப்பட்டிருந்தனர். அவர்கள் தங்குவதற்கு திருமண மண்டபங்கள் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டன. கோவையின் அனைத்து தாங்கும் விடுதிகளும் பிரமுகர்களுக்காக அரசு கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்தச் செலவினங்கள் யார் கணக்கு என்பது முதல்வருக்கே வெளிச்சம்.

19. தமிழின் தற்காலத்து முன்னணி எழுத்தாளர்கள் எவரும் மாநாட்டில் பங்கேற்கவில்லை; அவர்கள் அரசால் புறக்கணிக்கப்பட்டனர்; அதே சமயம் மாநாட்டை அவர்களும் புறக்கணித்தனர். நவீனத் தமிழ் இலக்கிய ஆளுமைகளான அசோகமித்திரன், ஞானி, ஜெயமோகன், ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா போன்றவர்களைத் தவிர்த்துவிட்டு, தற்கால இலக்கிய நடையை எவ்வாறு அனுமானிப்பது? செம்மொழி மாநாடு ஜால்ராக்கள் மற்றும் தாசர்களின் ஆய்வுகளையும் அபத்தங்களையும் மட்டுமே பிரகடனப்படுத்தியுள்ளது என்பதற்கு இத்தகு புறக்கணிப்பு சரியான உதாரணம்.
.
20. தி.மு.க. மாநாடாகத் தோற்றம் அளித்துவிடக் கூடாது என்று தொண்டர்களுக்கு ஆணையிட்ட முதல்வர் கருணாநிதி, அந்தக் கட்டுப்பாட்டை தனக்கும் விதித்துக் கொள்ள மறந்துவிட்டார். இதன் விளைவாக, மாநாட்டில் பங்கேற்ற பெரும்பாலோரின் புகழ்மாலைகளில் அவர் மகிழ்வுடன் மிதந்தார். தி.மு.க. என்பது, திருக்குவளை முத்துவேல் ருணாநிதி என்றாகிவிட்ட பிறகு தி.மு.க.வை முன்னிலைப்படுத்துவது வேறு, முதல்வர் கருணாநிதியைப் போற்றுவது வேறல்ல; இது சிறு குழந்தைக்கும் தெரியும்.
போதைகளில் மிக மோசமானது புகழ் போதை. இந்த போதைக் கடலில் முதல்வர் மிதந்தார். அவர் அழைத்து மேடையில் ஏற்றிய எடுபிடிகளும் தங்கள் கடமையைச் செவ்வனே செய்தனர். மாபெரும் இலக்கியங்களைப் படைத்த தமிழ்ப் புலவர்களும் கூடத் தங்களைத் தாங்களே பாராட்டிக் கொண்டதில்லை. அதையும் செய்ய கருணாநிதி தயங்கவில்லை.

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை என்பது உள்ளிட்ட ஆர்ப்பாட்டமான தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப் பட்டுள்ளன. தமிழில் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு அரசு உதவி என்பது போலவே இந்தத் தீர்மானமும் காணப்படுகிறது. மொத்தத்தில் செம்மொழி மாநாடு கருணாநிதியின் புகழ்பாடும் மாநாடாக, அவரது அரசியலுக்கு வலுக்கூட்டும் மாநாடாகவே காட்சி அளித்தது.
---------------------------------------
நன்றி: விஜயபாரதம் (23.07.2010).
--------------------------------------------------------------------------------------------
பெட்டிச் செய்தி

பட்டிமன்றம் முடியும் நேரம்...

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் இனியவை இருபதும் உண்டு; இன்னா இருபதும் உண்டு. எனில் இந்த மாநாட்டின் விளைவுகள் தமிழ்கூறு நல்லுலகம் மீது செலுத்தப்போகும் தாக்கம் என்ன? இக் கேள்வி தவிர்க்க இயலாதது.

நாணயத்தின் இரு பக்கங்களாக மாநாட்டின் சாதக - பாதகங்கள் இருப்பினும், நாணயத்தின் நிகழ்தகவில், ஏதாவது ஒருபுறமே சாத்தியம். 'நாணயமான' தீர்வுகள் ஒருபாற் கோடலில் சாத்தியப்படாது.

இங்கு சமண் செய்து சீர்தூக்கும் துலாக்கோலின் இருபுறமும் அமுதமாகிய 'இனியவை'யும், விஷமாகிய 'இன்னா'வும் இருக்கின்றன. இரண்டும் இணைந்த மாநாட்டில் எது முதன்மை பெற இயலும்?

அமுதமும் விஷமும் கலந்த கலவையை எங்ஙனம் பிரிப்பது? அமுதம் நல்லதே; எனினும் அதில் ஒரு துளி விஷம் சேரிடினும் அனைத்தும் விஷமே. இங்கோ சரிபாதி விஷம். பிறகு, மாநாட்டின் அமுதம் எவ்வாறு நன்மை தரும்?

இதுவே, தமிழக முதல்வர் கருணாநிதி கோவையில் நிகழ்த்திய உலக தமிழ்ச் செம்மொழி மாநாடு குறித்த இறுதி முடிவாக அமையும். இதனை காலம் நிரூபிக்கும்.
.

புதன், ஆகஸ்ட் 25, 2010

இனியவை இருபதும் இன்னா இருபதும் : பகுதி - 1


கடந்த ஆறுமாத காலமாக தமிழகமெங்கும் ஒரே பேச்சு ஒரே மூச்சாக இருந்த, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் கோலாகலமாக நடந்து முடிந்துவிட்டது. மொழியின் மீதான பெருமிதத்தில் உலக அளவில் நடந்தேறிய பிரமாண்டமான மாநாடு இது என்பதில் சந்தேகமில்லை. ஆயினும் அதன் நோக்கங்கள் மற்றும் தாக்கங்கள் குறித்து பரிசீலிக்க வேண்டிய கட்டத்தில் நாம் இருக்கிறோம்.

எந்த ஒரு நிகழ்விலும் ஆக்கப்பூர்வமான அம்சங்களும் எதிர்மறை அம்சங்களும் இணைந்தே இருக்கும்; இது தவிர்க்கவியலாத ஒன்றே. அந்த வகையில், செம்மொழி மாநாட்டுக்கும் சாதக பாதக அம்சங்கள் உள்ளன. அவற்றை சீர்தூக்கி ஆய்வது அவசியம்.

"குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள்
மிகை நாடி மிக்கக் கொளல்''
- என்பது தெய்வப் புலவர் திருவள்ளுவரின் வாக்கு (குறள்- 504).

ஆகவே, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் (ஜூன் 23- 27) சிறப்புக்களையும் (இனியவை இருபது), குற்றங்களையும் (இன்னா இருபது) இங்கு காண்போம்.

இனியவை இருபது:

1. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அறிவிக்கப்பட்டதில் இருந்தே அதை வெற்றிகரமாக நடத்த முதல்வர் மு. கருணாநிதி எடுத்துக் கொண்ட முயற்சிகள் வியக்க வைக்கின்றன. 86 வயதிலும், அனைத்து அரசுத் துறைகளையும் கட்டுக்கோப்பாக இயக்கி, மிக பிரமாண்டமான மாநாட்டை எந்த அசம்பாவிதமும் இன்றி நடத்திக் காட்டியது முதல்வரின் தனிப்பெரும் சாதனை.

2. இம்மாநாட்டில் உலக அளவில் பேராளர்கள் பங்கேற்க வேண்டும் என்பதற்காக, பல விதங்களில் முயற்சி செய்யப்பட்டது. இதன் காரணமாக, 50 நாடுகளைச் சார்ந்த 840 பேர் செம்மொழி மாநாட்டில்பங்கேற்றனர். இவர்களில் 152 பேர் ஆய்வுகளைச் சமர்ப்பித்துள்ளனர். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம், வெளிநாடுகளிலிருந்து வந்த பெரும்பான்மை பேராளர்களும் தமிழை தெய்வீகமானதாகக் கருதியது தான். தவிர, இந்து சமய உணர்வும் பலரிடம் தலைதூக்கி இருந்ததைக் காண முடிந்தது.

3. மாநாட்டின் முதல்நாள் துவக்க நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் பங்கேற்றது சிறப்பு. அரசியல் சார்பற்ற நிலையில் இருப்பவர் என்பதால், கருணாநிதியைப் பாராட்டியதோடு நிறுத்திக் கொண்டு தமிழின் தொன்மையைப் புகழ்ந்து பேசினார். ஜனாதிபதி, தமிழின் அரிய பண்பாட்டுப் பங்களிப்புகளான பரத நாட்டியம், கர்நாடக இசை குறித்து துவக்கவிழாவில் குறிப்பிட்டது அருமை.

4. சிந்துச் சமவெளி நாகரிகத்தைத் தமிழ்ப் பண்பாட்டுடன் ஒப்பாய்வு செய்துவரும் (இது சரியா என்பது இங்கு கேள்வியல்ல) பின்லாந்து நாட்டு அறிஞர் அஸ்கோ பர்போலாவுக்கு 'செம்மொழித் தமிழ்' விருது வழங்கப்பட்டது. சிந்துச் சமவெளி நாகரிகத்தின் பதிவுகளான சைவ இலச்சினைகளை தமிழகத்துடன் அவர் ஒப்பிட்டார். தனது ஆய்வு முழுமை பெறவில்லை என்பதையும் அவர் ஒப்புக் கொண்டார்.

5. துவக்க விழாவில் பேசிய அமெரிக்காவின் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட், இந்தியப் பண்பாட்டின் செழுமைக்கு இந்து மதமும் வடமொழியும் அளித்துள்ள பங்களிப்பு போலவே தமிழும் அரிய பங்களிப்பை நல்கியுள்ளது என்று முதல்வர் முன்னிலையில் பேசினார். மாநாட்டு அமைப்புக்குழு பொறுப்பாளரும் முன்னாள் துணைவேந்தருமான வா.செ.குழந்தைசாமியும் இதே கருத்தை எதிரொலித்தார். 'இந்தியப் பண்பாட்டை வளர்த்தெடுத்தவை வடமொழியும் தமிழுமே. இதில் வடமொழி பெற்ற அங்கீகாரத்தை தமிழும் பெற வேண்டும்' என்றார் அவர்.
ஆய்வரங்க அமர்வில் பேசிய தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவனும் இக்கருத்தை வெளிப்படுத்தினார். 'சிவனின் உடுக்கை ஒலியில், இருபுறமும் பிறந்த மொழிகள் சம்ஸ்க்ருதமும், தமிழும்' என்றார் அவர். முத்தாய்ப்பாக 'வடமொழிக்கு வழங்கப்படும் சிறப்பு சலுகைகளை தமிழுக்கும் வழங்க வேண்டும்' என்று, மற்றொரு நிகழ்வில் கோரினார் முதல்வர் கருணாநிதி.
வடமொழியை தூஷிப்பதையே நோக்கமாகக் கொண்டு வளர்ந்தவர் நடத்திய மாநாட்டில், முதன்முறையாக பிரிவினைக் கண்ணோட்டமின்றி இத்தகைய கருத்துக்கள் வெளிப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

6. துவக்க நாளன்று நடைபெற்ற 'இனியவை நாற்பது' பேரணியில் தமிழின் தொன்மை, தமிழரின் பண்பாட்டு விழுமியங்களைச் சிறப்பிக்கும் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. மனு தர்மத்தை எதிர்ப்பதாக முழங்குபவர் நடத்திய மாநாட்டுப் பேரணியில் இடம் பெற்றவர் மனுநீதிச் சோழன்! தஞ்சைக் கோயிலும் மங்கள நாயகி கண்ணகியும் கிராமிய தெய்வங்களும் அணிவகுத்துவர, இந்துத்துவம் வேறு- தமிழ்ப் பண்பாடு வேறல்ல என்பது தெள்ளத் தெளிவாகப் புரிந்தது.

7. இலங்கைத் தமிழர்கள் ஈழத்தில் அனுபவித்த கொடுமைகளிலிருந்து தமிழகத்தின் கவனத்தை திசை திருப்ப நடத்தப்பட்ட மாநாடு என்றபோதும் ஈழ அறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி, மாநாட்டில் பங்கேற்றார். மேலும் பல இலங்கை அறிஞர்கள் பங்கேற்றபோதும், சிவத்தம்பி வருகை முக்கியத்துவம் பெற்றது. ஏனெனில், தஞ்சையில் (1995) நடந்த எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டில், விடுதலைப்புலி ஆதரவாளர் என்ற காரணம் கூறி, அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
முதலில் செம்மொழி மாநாட்டுக்கு வர மறுத்த அவர், பிற்பாடு தனது கருத்தை மாற்றிக் கொண்டு பங்கேற்றது ஒருவகையில் நன்மையே. இதன் காரணமாகவே ஈழத் தமிழர் நிலை குறித்து கருணாநிதி - மாநாட்டிலும், பிரதமர் மன்மோகன் சிங் - இலங்கை அதிபரிடமும் கண்டிப்பாகப் பேச வேண்டியதாயிற்று. மாநாட்டுத் துவக்க விழாவில், நெற்றியில் திருநீறுடன் சிவத்தம்பி வீற்றிருந்த கோலம் அருமை.

8. செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, கோவையில் "செம்மொழிக் கலைவிழா' என்ற பெயரில், மூன்று நாட்கள் நாட்டுப்புறக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் பத்து இடங்களில் நடத்தப்பட்டன. ஒயிலாட்டம், மயிலாட்டம், காவடியாட்டம், தப்பாட்டம், செண்டைமேளம், பரத நாட்டியம் உள்ளிட்ட பாரம்பரியக் கலைகள் அரங்கேறின. இதன்மூலம் நாட்டுப்புறக் கலைஞர்கள் தெம்படைந்துள்ளனர். மாநாட்டு தினங்களிலும், தினசரி மாலை பாரம்பரியக் கலைகள் அரங்கேறின.

9. மாறிவரும் உலகிற்கு ஏற்ப தமிழும் நவீனமாவது அவசியம். அந்த நோக்குடன், மாநாட்டின் இரண்டாம் நாள் தமிழ் இணையதள கண்காட்சி துவங்கப்பட்டது. இணைய உலகில் தமிழ்மொழி சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ள இக்கண்காட்சி பயனுள்ளதாக இருந்தது. வலைப்பூக்களைத் தொடுக்கும் இளைய தலைமுறைக்கு வழிகாட்டுவதாக இக்கண்காட்சி அமைந்தது. இங்கும் கணினித் தமிழ் குறித்த பல ஆய்வரங்குகள் நடந்தன.
இணைய மாநாட்டு சிறப்பு மலரில் 130 ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இணையத் தமிழைப் பொருத்தமட்டிலும் 'யுனிகோடு' முறையை அரசு ஏற்பதாக இம்மாநாட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது இணையத் தமிழ் தகவல் தொடர்பில் முக்கியமான அறிவிப்பு என்பதில் ஐயமில்லை.

10. மாநாட்டை ஒட்டி, கொடிசியா வளாகம் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டது. அதி நவீன சமையலறை வசதி, குடிநீர், சுகாதார வசதிகள் இவ்வளாகத்தில் செய்யப்பட்டன. சுமார் எட்டு மாதங்களாகச் செய்யப்பட அடிப்படைக் கட்டமைப்புப் பணிகளால் கொடிசியா வளாகம் மெருகேறியுள்ளது. வரும் காலத்தில் இவ்வளாகம் முக்கிய நிகழ்வுகளுக்கு முற்றிலும் தகுதி படைத்ததாகவும், கோவையின் முக்கிய மையமாகவும் மாறியுள்ளது.
மாநாட்டை முன்னிட்டு கோவை நகரில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் சாலை மேம்பாட்டுப் பணிகள் பாராட்டத் தக்கவை. குறிப்பாக, என்.எச்- 45, என்.எச்.47 நெடுஞ்சாலைகள் புது மெருகுடன் காட்சியளிக்கின்றன.
கொடிசியா வளாகத்தில் அமைக்கப்பட்ட ஆய்வரங்கம், கண்காட்சி அரங்கம், தோரண வாயில் ஆகியவற்றிலும் இந்துத்துவ, சைவ வெளிப்பாடுகள் மிளிர்ந்தன. அμங்கைச் சுற்றிலும் அமைக்கப்பட்ட செயற்கைத் தூண்களிலும், நந்தி சிற்பங்களிலும், தமிழின் தொன்மை வெளிப்படுத்தப்பட்டது. அரங்கைச் சுற்றிலும் அமைக்கப்பட்ட செயற்கைத் தூண்களிலும், நந்தி சிற்பங்களிலும் தமிழின் தொன்மை வெளிப்பட்டது.

11. செம்மொழி மாநாட்டை முன்னிட்டு தென்னிந்திய புத்தக விற்பனையாளர் சங்கம் (பபாசி), கோவை தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் புத்தகக் கண்காட்சியை நடத்தியது. முந்தைய உலகத்தமிழ் மாநாடுகளில் நடத்தப்படாத இணைய கண்காட்சியும் புத்தகக் கண்காட்சியும் செம்மொழி மாநாட்டின் சிறப்பாக விளங்கின.
பல பதிப்பகங்கள், மாநாட்டை ஒட்டி புதிய நூல்களை வெளியிட்டன.பல பழமையான நூல்களும் அச்சிடப்பட்டன. ஒவ்வொரு பத்திரிகையும் சிறப்பு மலர்களை வெளியிட்டு வணிகம் பெருக்கின. செம்மொழி மாநாட்டு மலரை தமிழக அரசே வெளியிட்டது. (விலை: ரூ. 600!) இவ்வாறாக பதிப்புத் துறைக்கு புது ரத்தம் பாய்ச்சிய புண்ணியத்தை இம்மாநாடு தேடிக் கொண்டது.

12. செம்மொழி மாநாட்டில் பாமர மக்களும் ஆர்வத்துடன் கண்டு களித்தது, அரும்பொருள் கண்காட்சி. பழமையான கல்வெட்டுக்கள், செப்பேடுகள், பஞ்சலோக சிலைகள், கோயில் கட்டமைப்புகள், மன்னர் கால ஆயுதங்கள், பழங்கால வாழ்க்கை முறையை நினைவுபடுத்தும் அம்சங்கள், நினைவுச் சின்னங்கள், தமிழக இசைக்கருவிகள் என இக்கண்காட்சி, அனைத்துத் தரப்பினரையும் வெகுவாகக் கவர்ந்தது. இதைக் காணவே பல்லாயிரக் கணக்கான மக்கள் மாநாட்டுக்கு வரத் துவங்கினர்.
பலமணிநேரம் 4 கி.மீ. நீல வரிசையில் நின்று இக் கண்காட்சியை மக்களும் மாணவமாணவிகளும் ரசித்தனர். இதற்கு கிடைத்த வரவேற்பால், மாநாடு முடிந்தும் 10 நாட்கள் கண்காட்சி தொடர அரசு ஆணையிட்டது. அப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதேபோல, புத்தகக் கண்காட்சியும் ஜூலை 4 வரை நீட்டிக்கப்பட்டது.

13. மாநாட்டை முன்னிட்டு நான்கு நாட்கள் ஆய்வரங்குகள் நடைபெற்றன. சங்கப் புலவர்களின் பெயர்களில் அமைந்த 23 அரங்குகளில் தமிழ்மொழி தொடர்பான, பிற துறைகளுடன் இயைந்தபொருண்மைகளில் ஆய்வுகள் சமர்ப்பிக்கப்பட்டன. 55 தலைப்புகளில் 913 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இவை ஒன்றாக தொகுக்கப்பட்டு (சுருக்கம்) நூலாகவும் வெளியிடப் பட்டன. இத்தொகுப்பில் ஆய்வாளர்களின் தொடர்பு முகவரிகள் இடம் பெற்றுள்ளது. ஆய்வைத் தொடர விழைவோருக்கு நல்வாய்ப்பு.

14. மாநாட்டில் பொது நிகழ்வாக நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளில் பட்டிமன்றமும் கருத்தரங்கமும் பயனுள்ளவை. பேரா. சத்தியசீலன், அறிவொளி, தெ.ஞானசுந்தரம், சாந்தலிங்க ராமசாமி அடிகளார், வா.செ.குழந்தைசாமி, சரஸ்வதி ராமநாதன், திருப்பூர் கிருஷ்ணன், த.ராமலிங்கம் போன்ற பெரியோர் 'ஜால்ரா' சத்தத்தை மீறி கருத்தரங்குகளிலும் பட்டிமன்றங்களிலும் தமிழ் வளர்த்தனர்.
மூன்றாம் நாள் (ஜுன் 25) நடத்தப்பட்ட "எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்' கருத்தரங்கை முதல்வர் கருணாநிதியே தலைமையேற்று நடத்தினார். இதில் சேதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட்), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்), இல.கணேசன் (பா.ஜ.க), திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள்) உள்ளிட்ட, வெவ்வேறு தளங்களில் இயங்கும் அரசியகட்சித் தலைவர்கள் 20 பேர் பங்கேற்றனர். அரசியலால் மாறுபட்டாலும், ஒரே மேடையில் மொழிக்காக பலர் முழங்கியது வித்தியாசமான காட்சியாக இருந்தது.

15. தினசரி இரவு கொடிசியா வளாகத்திலும் மாநாட்டு வளாகத்திலும் நடந்த கலைநிகழ்ச்சிகள், பாரம்பரியத்துக்கும் நவீனத்துக்கும் பாலமிடுபவையாக இருந்தன. டாக்டர் பத்மா சுப்பிரமணியத்தின் "நிருத்யோதயா' குழுவினர் நிகழ்த்திய பμதநாட்டியம், நடிகை ரோகிணி பங்கேற்ற பாஞ்சாலி சபதம் போன்றவை குறிப்பிடத் தக்கவை. நவீன நாடகங்களும் கவனிப்பைப் பெற்றன.
16. செம்மொழி மாநாட்டுக்குக் கடந்த ஆறு மாதமாகவே பலத்த விளம்பரம் செய்யப்பட்டது. பத்திரிகை, வானொலி, திரையரங்கு, தொலைக்காட்சி, இணையதளம், பொதுக்கூட்டங்கள் என பல வகைகளில் இம்மாநாடு குறித்து விளம்பரப் படுத்தப்பட்டது. இதன் காரணமாகவே, பல லட்சக் கணக்கான மக்களின் பங்கேற்பு சாத்தியமானது. மக்கள் கூட்டம் திரண்டபோதும் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல், தக்க பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காகவே அரசைப் பாராட்டலாம்.

17. செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, பேரணிப் பாதையிலும், பொது இடங்களிலும் உள்ள சுவர்கள், வண்ண ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டன. ஆபாசச் சுவரொட்டிகளையே பார்த்து அருவருத்த கண்களுக்கு இந்த ஓவியங்கள் இனிமை நல்குகின்றன. பாμம்பரியக் கலைகள், பண்பாட்டின் தொன்மையை விளக்கும் இந்த ஓவியங்கள் கோவையை அழகூட்டியுள்ளன.
18. இம்மாநாடு வெற்றிபெற, கடந்த பல மாதங்களாக அனைத்துத் துறை அமைச்சர்களும் அதிகாரிகளும் பம்பரமாகச் சுழன்று பணியாற்றினர். வெளிநாட்டு விருந்தினர்களுக்கான விருந்தோம்பல் குழு, வரவேற்புக் குழு, கண்காட்சி அமைப்புக் குழு, ஆய்வரகுக் குழு உள்ளிட்ட பல குழுக்களை அமைத்த முதல்வர் கருணாநிதி, பணிகளை பங்கீடு செய்தார். அதன் விளைவாக, ஒரே நோக்குடன் அனைவரும் குழு மனப்பான்மையுடன் பணியாற்றினர். அதன் ஒட்டுமொத்தத் வெற்றியே மாநாட்டின் வெற்றி என்றால் மிகையில்லை. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் ம.ராசேந்திரனின் பங்கு அளப்பரியது.

19. மாநாட்டின் நிறைவு நாளில் கால்டுவெல், குமரகுருபர சுவாமிகள், செம்மொழி இலச்சினையில் வள்ளுவர் ஆகிய மூன்று சிறப்பு தபால் தலைகள் வெளியிடப்பட்டன. காசியில் தமிழ் வளர்த்த குமரகுருபரரை தமிழக அரசு புறக்கணிக்க முடியவில்லை. இது மகிழ்ச்சிக்குரிய தகவல். கருணாநிதியிடம் தென்படும் மாற்றம் நம்பிக்கை அளிக்கிறது.

20. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு மற்றொரு தி.மு.க மாநாடாக மாறிவிடுமோ என்ற அச்சம் பலருக்கு இருந்தது. இருப்பினும், தி.மு.கவினர் கட்சிக் கொடிகளைக் கட்டக் கூடாது என்ற முதல்வர் கருணா நிதியின் கட்டளைக்கு 'உடன்பிறப்புக்கள்' கட்டுப்பட்டார்கள். இதன் விளைவாக, கோவையில் எங்கும் தி.மு.கவின் கொடிகளையோ, பிரமாண்ட வμவேற்பு வளைவு கலாசாரத்தையோ காணமுடியவில்லை.
அரசியல் தோற்றம் மாநாட்டுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்ற முதல்வரின் முன்னெச்சரிக்கை நல்ல பலன் அளித்துள்ளது. (மாநாட்டு நிகழுகளின் இடையிடையே எழுந்த 'காக்கை சத்தம்' குறித்து இங்கு எழுத வேண்டாமே!)
கோவையில் எங்கு பார்த்தாலும் திருவள்ளுவர் வானுயர நிற்கும் செம்மொழி மாநாட்டு இலச்சினையுடன் கூடிய கொடிகளே தென்பட்டன. பல மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டபோதும், கட்டுக்கு அடங்காத கூட்டம் கோவையில் அலைமோதியது.

மொத்தத்தில், முதல்வர் கருணாநிதி நிகழ்த்திக் காட்டியுள்ள "அரசியல் சாராத சாதனை' என்று இந்த செம்மொழி மாநாட்டைக் குறிப்பிடலாம்....
('இன்னா இருபது' தொடர்கிறது....)

நன்றி: விஜயபாரதம் (16.07.2010)

.

ஞாயிறு, ஆகஸ்ட் 22, 2010

ஆயிரத்தில் ஒருவன் - ஜடங்களுக்கான சினிமா

கோணல் புத்தியுடன் சினிமா படம் எடுப்பவர்களில் செல்வராகவனுக்கு தமிழ்த் திரையுலகில் குறிப்பான இடம் உண்டு. பாலியல் வக்கிரம் மிகுந்த தனது இச்சைகளை படமாக எடுத்து சாந்தப் படுத்திக்கொள்வது அவரது பாணி. துள்ளுவதோ இளமை, 7 g ரெயின்போ காலனி என இவரது படங்கள் அனைத்தும் பாலியல் சார்ந்தவையாகவே இருந்துள்ளன. இருந்தும், சரித்திரப் படம், யுகம் கடந்த படம் என்றெல்லாம் பலர் 'ஏற்றிவிட்டதை' 'ஆயிரத்தில் ஒருவன்' படத்துக்கு போய்த் தொலைத்துவிட்டேன்.

படம் சோழர்காலத்தில் துவங்குகிறது. சோழ வம்சத்தின் கடைசி மன்னன் தமிழகத்தைவிட்டு கடல்வழியாக தப்பி ஓடுகிறானாம். அவன் அடைக்கலமானது வியட்நாம் அருகிலுள்ள சிறு தீவு. அங்கு சென்ற ஆராய்ச்சியாளர் ஒருவர் காணாமல் போவதுடன் படம் துவங்குகிறது. இந்த இடத்தில், 'இத் திரைப்படம் சோழர், பாண்டியர்களை குறிப்பிடவில்லை' என்று சமத்காரமாக ஸ்லைடு போட்டு விடுகிறார்கள்.

காணாமல் போன ஆராய்ச்சியாளரைத் தேடி, அரசு, அமைச்சர்கள் ஏற்பாட்டில் ஒரு குழு வியட்நாம் செல்கிறது. அதன் தலைவி, கட்டிளம் குமாரியான ரீமா சென். காணாமல் போனவரின் புதல்வி (ஆண்ட்ரியா)வும் கையில் ஒரு ஓலைச் சுவடியுடன் செல்கிறாள். எடுபிடி உதவிக்கு, கதாநாயகன் கார்த்தி செல்கிறார். தமிழ் கதாநாயக இயல்புப் படி, இரு நாயகிகளையும் கலாய்க்கிறார், கார்த்தி. (பாக்கெட்டிலேயே காண்டம் வைத்திருப்பதாக ஒரு வசனம் வேறு).

ஏழு தடைகளைத் தாண்டித் தான் சோழன் வசிக்கும் ரகசிய இடத்தை அடைய முடியுமாம். எல்லாம் அந்த ஓலைச் சுவடியில் இருக்கிறது! கடல் பயங்கரம், நரமாமிசம் உண்ணும் காட்டுமிராண்டிகள், விஷப் பாம்புகள், பயங்கர வீரர்கள், புதைமணல், பசி தாகம் அனைத்தையும் தாண்டினால் தான் அந்த இடத்துக்கு போக முடியுமாம்! போகும் வழியில், உடன் வந்தவர்களை கொசுக்கள் போல சாகக் கொடுத்துவிட்டு மூவர் மட்டும் சோழ ராஜாவின் மயான பூமிக்கு சென்று விடுகிறார்கள். அதற்குள் இரண்டு ஆபாச டூயட் வேறு. (காய்ச்சலுக்கு இதில் புது வைத்தியம் சொல்கிறார் டாக்டர் செல்வராகவன்).

இவர்கள் மூவரும் கஷ்டப்பட்டு செல்வதைப் பார்த்து புளகாங்கிதம் அடையும் நேரத்தில், படத்தின் இறுதியில், ஹெலிகாப்டரில் பாராசூட்களில் இந்திய ராணுவ வீரர்கள் அதே இடத்தில் சாகசமாக இறங்குகிறார்கள்! அவர்கள், இயந்திரத் துப்பாக்கிகளுடன் வெடிகுண்டுகளுடன், சோழ வம்சாவளி மக்களை வேட்டையாடுகிறார்கள். அப்போது தான் தெரிகிறது, சோழர்களின் பரமவைரியான பாண்டியரின் குலச்செல்வி தான் ரீமா என்பது. அவர் அங்கு போவதே அமைச்சர் பாண்டியன் உள்ளிட்ட பாண்டிய வம்சாவளியினரின் திட்டம் தானாம்! அதுவும் பாண்டியரின் குலதெய்வ சிலையை மீட்கத் தானாம். (தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்க்காக இந்த கற்பனைக் காவியத்தைப் படைததிருப்பதாகவும், இதில் லாஜிக் பார்க்கலாமா என்றும் செல்வராகவன் கேட்டிருக்கிறாருங்கோ! )

கிறுக்கல்கள் பார்த்திபனுக்கு, இதில் சோழர்களின் கடைசி மன்னன் வேடம்; 'நிறைவாகவே' செய்திருக்கிறார். மக்களை அடிமைகளாக நடத்துகிறார்; அந்தப்புரத்தில் ஆட்டம் போடுகிறார் (ரீமாவும் அவரை மயக்கி அங்கு சல்லாபிக்கிறார்). அவ்வப்போது தாயகம் திரும்பும் கனவுடன் வசனம் பேசுகிறார். தாயக கனவுப் பாடலும் உண்டு. சோழ மக்கள் பஞ்சைப் பராரிகளாக, முகம் முழுவதும் கரியைப் பூசிக்கொண்டு, இறைச்சிக்காக அடித்துக்கொண்டு செத்து சுண்ணாம்பு ஆகிறார்கள். அவரது லிங்க தரிசன வசனம் போதும், செல்வராகவனை இனம் காட்ட. ராஜராஜ சோழனும் ராஜேந்திர சோழனும் பார்த்திருந்தால், தூக்கு மாட்டி செத்திருப்பார்கள்.

இதில் கதாநாயகன் பல்லிளித்தபடி இரு நாயகிகளிடமும் வழிகிறான்; அடிக்கடி சென்சார் செய்யப்பட 'மௌன' சொற்களை உதிர்க்கிறான். கடைசியில் சோழ இளவரசனோடு மாயமாகிறான். படம் அடுத்த பாகம் வந்தாலும் வரலாம். இந்த அரைவேக்காடுகள் இந்து தொன்மங்களை நினைத்தபடி பயன்படுத்தி இருப்பது, கார்த்தி ரீமாவிடம் வாங்கிய கன்னத்து அறையை விட வலி தருகிறது. இந்த மாதிரி ஒரு படத்தை வேறு மொழிகளில் எடுத்திருந்தால் அங்கு பிரளயமே நடந்திருக்கும். நாம் ஜடங்களாக, வெ(ற்)றிப்படத்தை பார்த்து விசில் அடித்துக் கொண்டிருக்கிறோம்.

சோழனையும் பாண்டியனையும் விட்டுத் தள்ளுங்கள், கற்பனையாகவே இருந்து தொலையட்டும். இந்திய ராணுவம் எவ்வாறு வியட்நாம் சென்று ஆயிரக் கணக்கில் மக்களை சுட்டுத் தள்ளுகிறது? அதுவும், யாருக்கும் தெரியாத ரகசிய ஆபரேசன் என்று வேறு கதைக்கிறார் ரீமா. பக்கத்தில், பத்தடி தூரத்தில் இருக்கும் இலங்கையில் நடக்கும் அட்டூழியத்தை தட்டிக் கேட்காத இந்திய அரசு, ஒரு ஆராயச்சியாளருக்காக படையை அனுப்புமா? அவர்கள் கண்டமேனிக்கு சுட்டுத் தள்ளுவார்களாம்- இந்த இணைய உலகத்தில். லாஜிக் பார்க்கக் கூடாது என்று சொல்லிவிட்டு, எதை வேண்டுமானாலும் அளக்கலாமா? இதை எப்படி சென்சார் போர்டு அனுமதித்தது?

அண்டை நாடான சீனாவிலும் இதே போன்ற சரித்திர கற்பனை தழுவிய படங்கள் வந்துகொண்டிருக்கின்றன. அதில் எங்கேனும் இப்படி பிதற்றல்கள் வந்ததுண்டா? ஹாலிவுட் (அபோகலிப்டா) போன்ற படங்களைப் பார்த்து நகல் எடுக்கும்போது, நம்மூருக்கு பொருந்துவது போலவேனும் செய்ய வேண்டாமா? தமிழ் பண்பாடு பற்றி மேடையில் முழங்கும் 'மானமிகு'க்கள் யாரும் இந்த படத்தின் பைத்தியகாரத் தனமான சித்தரிப்புகளைக் கண்டுகொள்ளாதது ஏன்? சோழனும் பாண்டியனும் எந்த ஜாதி என்று தெரியாமல் போனது தான், கண்டுகொள்ளாததன் ரகசியமா?

ஆயிரக் கணக்கான நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், கலைஞர்களின் ஆற்றல் விழலுக்கு இறைத்த நீராகி இருக்கிறது. அதிலும் வேதனை, வருங்காலத் தலைமுறையை ஏற்கனவே நமது சரித்திரப் புத்தகங்கள் தவறாக வழிநடத்தி வருகையில், இத்தகைய படங்கள் மேலும் தடம் மாற்றுகின்றன. மக்கள் ஜடங்கள் ஆகி வருகிறார்கள் என்பதற்கு, செல்வ ராகவனின் 'ஜடங்களில் ஒருவன்' அற்புதமான சாட்சி.

நன்றி: தமிழ் ஹிந்து (23.01.2010)

.

சனி, ஆகஸ்ட் 21, 2010

முச்சந்தியில் அ.தி.மு.க.


அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்
அஃதுஅறி கல்லா தவர்.
(குறள் 437)
- என்பது, திருக்குறள் பொருட்பாலில், அரசியல் என்ற வகைப்பாட்டில் அறிவுடைமை என்ற அதிகாரத்தில் வள்ளுவர் கூறிய அமுத மொழி.

அறிவுடையவர்களால் எதிர்காலத்தில் நிகழப் போவதை அறிய இயலும்; அறிவில்லாதவர்களால் அவ்வாறு அறிய இயலாது என்பதே இதன் பொருள். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அரசியலார்க்கு வள்ளுவர் கூறிய இலக்கணம் இன்றும் பொருத்தமாகவே உள்ளது.

சென்ற ஜூலை 13ம் தேதி கோவையில் மிக பிரமாண்டமாக அ.தி.மு.க நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தைக் கண்டபோது மேற்கண்ட குறளே நினைவில் வந்தது. கடுமையான விலைவாசி உயர்வு, பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு, மின்வெட்டு, ஸ்பெக்ட்ரம் ஊழல் ஆகியவற்றுக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தை கோவையில் நடத்தியதற்குக் காரணம் உண்டு. கடந்த ஜூன் 23 - 27ல் கோவையில் செம்மொழி மாநாடு நடத்தி, தனது ஆற்றலையும் ஆதரவுத் தளத்தையும் முதல்வர் கருணாநிதி வெளிப்படுத்தி இருக்கிறார். அதற்கு பதிலடியாக, அதை விட அதிகக் கூட்டத்தைக் கூட்டி தனது சக்தியை நிரூபிக்கவே, கண்டன ஆர்ப்பாட்டத்தை கோவையில் அ.தி.மு.க தலைவி நடத்திக் காட்டியுள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாகானாங்களில் தொண்டர்கள் வந்து குவிந்தனர். ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட தொண்டர்கள் குவிந்ததால், கோவை மாநகரம் ஆர்ப்பாட்ட நாளில் திக்கித் திணறியது. காவல் துறை போதிய ஏற்பாடுகளைச் செய்யாததால், கடும்போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
கண்டன ஆர்ப்பாட்டம் நடந்த கோவை வ.உ.சி மைதானம் நிரம்பி, அதன் பக்கவாட்டில் உள்ள சாலைகளும், அவிநாசி நெடுஞ்சாலையும் தொண்டர்களால் வழிந்தது. அந்த வகையில், ஜெயலலிதாவின் திட்டம் நிறைவேறிவிட்டது.

உண்மையிலேயே இது மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் தான். ஆனால், இவ்வளவு பெரியக் கூட்டத்தைத் திரட்டிய அ.தி.மு.க தலைவி, தனது பேச்சில் தொண்டர்களுக்கு சரியான அரசியல் கண்ணோட்டத்தைத் தரத் தவறினார். "கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன், தி.மு.க ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப தேர்தலுக்குத் தயாராகுங்கள்'' என்று ஆர்ப்பாட்டத்தில் முழங்கினார் ஜெயலலிதா.

தனது பேச்சில் தமிழகத்தை ஆளும் தி.மு.கவையும், கருணாநிதி குடும்பத்தையும் மட்டுமே அவர் சாடினார். மத்திய அரசு குறித்து ஒரு வார்த்தை கூட அவரிடமிருந்து வரவில்லை. விலைவாசி உயர்வு, பெட்ரோலியப்பொருட்கள் விலை உயர்வு, ஸ்பெக்ட்ரம் ஊழல், தி.மு.க அரசைத் (மைனாரிட்டி அரசு) தாங்கிப் பிடிக்கும் காங்கிரஸ் போன்ற மத்திய அரசு தொடர்பான எந்த விஷயத்தையும் ஜெயலலிதா விமர்சிக்கவில்லை. இதுஅ.தி.மு.க தொண்டர்களுக்கு குழப்பத்தையே அளித்தது.

தற்போதைய அடிப்படைப் பிரச்சினைகளான இவற்றை விட்டுவிட்டு, மணல் கொள்ளை, கலைஞர் காப்பீட்டுத் திட்டம், செம்மொழி மாநாடு, குடும்ப ஆதிக்கம் பற்றி மட்டுமே விலாவாரியாகப் பேசினார் ஜெயலலிதா. இதன் மூலம், மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் வாய்ப்பை ஜெயலலிதா இழந்துவிட்டார்.

அ.தி.மு.க கூட்டணியில் தற்போது இருப்பதாக நம்பப்படும் ம.தி.மு.க, மா.கம்யூ, இந்திய கம்யூ,கட்சிகளை மரியாதை நிமித்தமாகக் கூட தனது பேச்சில் அ.தி.மு.க தலைவி குறிப்பிடவில்லை. இது முற்றிலும் தி.மு.க ஆர்ப்பாட்டம் என்பதால், அவர்கள் அழைக்கப்படவும் இல்லை. இதன் மூலம் தற்போதைய அ.தி.மு.க கூட்டணியை வலுப்படுத்தும் வாய்ப்பையும் அவர் தவறவிட்டார்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க தொண்டர்கள் பலரும் "அ.தி.மு.க -காங்கிரஸ் கூட்டணிக்கு அம்மா தயாராகி விட்டார்'' என்று பேசிச் சென்றதைக் காண முடிந்தது. தனது நம்பகமான கூட்டணியும், ஊழல்கூட்டாளியுமான தி.மு.கவை கைகழுவி விட்டு அ.தி.மு.கவுடன் காங்கிரஸ் எப்படி கைகோர்க்கும் என்பது புலப்படவில்லை. இந்த ஊசலாட்டத்திற்கு ஜெயலலிதாவே வித்திட்டிருக்கிறார்.

இதற்கு மாறான காட்சியை, திருப்பூரில் ஜூலை 12ம் தேதி நடந்த மத்திய அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் காண முடிந்தது. அதில் பேசிய மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், மத்தியில் ஐ.மு.கூட்டணி ஆட்சி அமைய உதவிய தி.மு.க., ம.தி.மு.க, கம்யூனிஸ்டு கட்சிகளை நன்றியுடன் நினைவு கூர்ந்தார். கூட்டணி சகாவான தி.மு.கவின் திட்டங்களையும் அவர் பாராட்டினார்.
ராஜதந்திரிகள் எதிரிகளையும் நண்பர்களாக்கிக் கொள்கின்றனர்; ராஜதந்திரம் இல்லாதவர்களோ, நண்பர்களையும் எதிரிகளாக்கிக் கொள்கின்றனர். இதற்கு சிதம்பரம், ஜெயலலிதா இருவரின் பேச்சுக்களே உதாரணம்.

மிகப் பிரமாண்டமான ஆர்ப்பாட்டம் நடத்தி, தனது சக்தியைக் காட்டிய அ.தி.மு.க தலைவி, தனதுஅரசியல் மதியூகத்தை அங்கு காட்டத் தவறிவிட்டார். நாளைக்கு கிடைக்கும் பலாவை விட இன்றைய களாக்காயே மேலானது என்பதையும் அவர் மறந்துவிட்டார்.

தி.மு.கவுக்கு உதறல் ஏற்படுத்துவதற்காக காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாடு எடுத்துள்ள ஜெயலலிதா, தனது தற்போதைய கூட்டணிக் கட்சிகளிடையேயும் சஞ்சலம் ஏற்படுத்திவிட்டார். தொண்டர்களுடனும் மக்களுடனும் ஜெயலலிதாவுக்கு நெருங்கிய தொடர்பு இல்லாததன் விளைவாகவே இந்தத் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளதாக எண்ணத் தோன்றுகிறது.

அ.தி.மு.கவின் முன்பு தற்போது மூன்று வழிகள் உள்ளன. ஒன்று, ம.தி.மு.க, கம்யூனிஸ்டு கூட்டணியைத் தொடர்வது; முடிந்தால் பா.ம.க., தே.மு.தி.கவை தன்னுடன் சேர்ப்பது. இரண்டாவது, தேசிய அளவில் பிரதான எதிர்க் கட்சியான பா.ஜ.கவுடன் சேர்வது. மூன்றாவது, தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியை உடைத்து, காங்கிரசுடன் கைகோர்ப்பது. இதில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பது புலப்படாமல் முச்சந்தியில் அ.தி.மு.க தடுமாறுவது தெளிவாகத் தெரிகிறது.
அரசியல் களம் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். ஆனால், கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள் வானம் ஏறி வைகுந்தம் போக முடியாது. இதை ஜெயலலிதாவுக்கு யாரேனும் சொல்வது நல்லது.

வாய்ப்புகளுக்காகக் காத்திருக்காமல் வாய்ப்புகளை உருவாக்குபவனே நல்ல தலைவன். தி.மு.கவுக்கு எதிரான மாற்றுசக்தியாக உள்ள ஜெயலலிதா, தன்னை நம்பியுள்ள மக்களுக்கு நம்பகமான பாதையைக் காட்ட வேண்டும்.
அதை விட்டுவிட்டு, தானும் குழம்பி, மக்களையும் குழப்பினால், வெற்றிக்கனி எட்டாமலேபோய்விடும். அ.தி.மு.கவின் சக்தி விழலுக்கு இறைத்த நீராகிவிடக் கூடாது.

தெரிந்த இனத்தொடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்.
(குறள்: 472)
- என்பதும் வள்ளுவர் வாக்கு (அரசியல் தெரிந்து செயல்வகை).

"ஆராய்ந்து தேர்ந்த இனத்துடன், செய்ய வேண்டிய செயலைத் தேர்ந்தெடுத்து, நன்கு திட்டமிட்டுச் செய்வோருக்கு, கிட்டாத அரிய பொருள் ஏதுமில்லை' என்பதே இதன் பொருள்.

நன்றி: விஜயபாரதம் (30.07.2010)

.

வெள்ளி, ஆகஸ்ட் 20, 2010

காஷ்மீரில் சேவாபாரதி அரிய சேவை

லே பகுதியில் இயற்கைப் பேரழிவு:
ஸ்வயம்சேவகர்கள் மீட்புப்பணி


காஷ்மீர் மாநிலத்தின் லே பகுதி இதுவரை காணாத கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. லே மாவட்டம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 6 -ம் தேதி நிகழ்ந்த இப்பேரழிவில் நிம்மோ, பாஸ்கோ, ஷாபூ, பைங், நே ஆகிய கிராமங்கள் முற்றிலும் நாசமாகிவிட்டன. சொக்லாம்சர், லே நகரங்களும் கடும் பாதிப்புக்கு இரையாகி உள்ளன.

இதுவரை பல நூறு பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். ஆயிரக் கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அழிக்கப்பட்டுவிட்டன. உயிர் பிழைத்தவர்களை கண்டறியும் பணியே சவாலானதாக மாறியுள்ளது. 150 பேர் இறந்ததாகவும், 600 பேர் காணாமல் போனதாகவும் அரசு புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இது வரை 132 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

லே மாவட்ட மருத்துவமனை, பஸ் நிலையம், தொலைபேசி நிலையம் அனைத்தும் வெள்ளத்தில் சிக்கியதால் மீட்புப் பணி சிரமமானதாகி விட்டது. தொலைபேசி சேவை முற்றிலும் செயலிழந்திருப்பதால் தகவல் தொடர்பு அறவே இல்லை. லே பகுதிக்குச் செல்லும் ஸ்ரீநகர் நெடுஞ்சாலை, குலு மணாலி சாலை, கார்கில் நெடுஞ்சாலை, ரோடங் சாலை ஆகியவை நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளன.


போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதால் மீட்புக் குழுக்கள் செல்ல முடியவில்லை. எனவே அரசு நிர்வாகம் மீட்பு, நிவாரணப் பணிகளில் மெதுவாகவே ஈடுபடுகிறது. லே விமான நிலையம் வெள்ளத்தால் ஏற்பட்டால் சேறு நிறைந்து காணப்படுகிறது.

இத்தகைய சூழலில், நம்பிக்கை நட்சத்திரமாக, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள், இயற்கையின் சவாலை எதிர்கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிய சேவைப் பணிகளை செய்து வருகிறார்கள்.


லே அருகில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம் (ஐ.டி.சி) நடந்து வந்தது. அந்த சமயத்தில் தான் வெள்ளச்சேதம் ஏற்பட்டது. உடனடியாக முகாம் ரத்து செய்யப்பட்டு, அங்கிருந்த தொண்டர்கள் அனைவரும் வெள்ளப் பகுதிக்கு விரைந்தனர். அரசு அதிகாரிகளும் காவல்துறையினரும் செல்வதற்கு முன் அங்கு சென்ற ஸ்வயம்சேவகர்கள், யாருக்காகவும் காத்திருக்காமல் மீட்புப் பணியைத் துவங்கிவிட்டனர்.

முதல்கட்டமாக வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணி நடந்தது. மீட்கப்பட்டவர்கள் பொது இடங்களில் முகாம் அமைத்து தங்கவைக்கப் பட்டுள்ளனர். ‘லடாக் சிங்காய் கோஷ்பா’ அமைப்புடன் இணைந்து ‘ஜம்மு காஷ்மீர் சேவாபாரதி’ நிவாரண முகாம்களைத் துவக்கிவிட்டது. இங்குள்ளவர்களுக்கு உணவு, உடை, போர்வைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

லே இயற்கை பேரழிவுக்கான தொண்டுப்பணிகளை ஒருங்கிணைக்க, சேவாபாரதி கூட்டிய அவசரக் கூட்டத்தில் பல்வேறு தன்னார்வ இயக்கங்கள் பங்கேற்றன. அப்போது, அனைவரது ஒப்புதலுடன் 'லடாக் ஆப்த சகாய சமிதி' (எல்.ஏ.எஸ்.எஸ்) துவக்கப்பட்டது. பிரிகேடியர் சுச்சித் சிங் இதன் தலைவராகவும், டாக்டர் குல்தீப் குப்தா செயலாளராகவும், அபய் பிரக்வால் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த சமிதி, லே பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மறுவாழ்வுக்குத் தேவையான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து நடத்துகிறது.

உடனடியாக லே பகுதியில் பணியாற்றும் ஸ்வயம்சேவகர்களுக்கு ஜம்முவில் இருந்து நிதி வசூலித்து அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் அருகிலுள்ள பகுதியில் கிடைக்கும் பொருட்களை வாங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகித்து வருகிறார்கள். இதுவரை (ஆக.12 ) 2000 கம்பளிகளும், 500 குடும்பங்களுக்கு பாத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன.


அருகில் கிடைக்க ஏதுவான நிலை இல்லாதபோதும், 2000 ஆடைகளும் 500 காலணிகளும் வழங்கப்பட்டுள்ளன. காயமடைந்தவர்கள் ஜம்முவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்குத் தேவியான மருத்துவ உதவி வழங்கப்படுகிறது. இப்பணியில் பல நூறு ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.

லே பகுதி மக்களுக்கு உதவ விருப்பமுள்ளவர்கள், இதற்கெனத் துவங்கப்பட்டுள்ள அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கலாம். 'லடாக் ஆப்த சகாய சமிதி' (எல்.ஏ.எஸ்.எஸ்) இதற்காக ஒரு வங்கிக் கணக்கைத் பஞ்சாப் நேஷனல் வங்கியில் துவக்கியுள்ளது (கணக்கு எண்:1948000101057923).


கடுமையான இயற்கைச் சீற்றத்துக்கு ஆளாகித் தவிக்கும் லே சகோதரர்களுக்கு நம்மால் நேரடியாக உதவ முடியாமல் இருக்கலாம். எல்.ஏ.எஸ்.எஸ் அமைப்பும், ஸ்வயம்சேவகர்களும் ஆற்றும் நலப்பணிகளுக்கு நிதி வழங்கி அவர்களுக்கு தோள் கொடுக்கலாமே!
----------------------------------------------------------------------------------
பெட்டிச் செய்தி
என்ன தேவைகள்?


பாதிக்கப்பட்டவர்களுக்கு இப்போது உடனடித் தேவையாக இருப்பது, உணவு, உடை, போர்வைகள் தான். லே பகுதி மிகவும் குளிரான பனிப்பகுதி. எனவே ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறைந்தபட்சம் 4 கம்பளிகள், 4 மெத்தைகள், 4 தலையணைகள், கொட்டகைத் துணி, ஸ்வெட்டர்கள், குளிர் தாங்கும் ஆடைகள், பாத்திரங்கள் உள்ளிட்ட ரூ. 16 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள உடனடியாக வழங்க வேண்டியுள்ளது.

தவிர, வெள்ளச் சீற்றத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் மதிப்பில் இரு அறைகள் கொண்ட சிறு வீடுகள் கட்டித் தரவும் திட்டமிடப்பட்டுள்ளது. 'லடாக் ஆப்த சகாய சமிதி' இதற்கான பணிகளை ஏற்கனவே துவங்கிவிட்டது.

தொடர்பு முகவரி:
SEWA BHARTI JAMMU
SEWA BHARTI ,
VISHNU SEWA KUNJ,
VED MANDIR COMPLEX,
AMPHALLA JAMMU,
J & K.
email: sewabhartijammu@gmail.com
Telephone: 094191109 40,09419758339, 09419143516
----------------------------------------------------------------------------------

காண்க: தமிழ் ஹிந்து
.
.

வியாழன், ஆகஸ்ட் 19, 2010

சாயம் வெளுக்கும் செங்கொடி


கடுமையான விலைவாசி உயர்வு, இதுவரை காணாத லட்சம் கோடி ஊழல், அமெரிக்காவுக்கு நாட்டை விற்கத் தயாராகும் காங்கிரஸ் அரசு, .... என பல்வேறு அரசியல் பிரச்னைகள் நாட்டை அலைக்கழித்துக் கொண்டிருக்க, தங்கள் கட்சியிலிருந்து ஒரு எம்.எல்.ஏ., நீக்கப்பட்டது ஏன் என்று விளக்கக் கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது மா. கம்யூ. கட்சி.

அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தத்தைத் தடுக்க மாபெரும் தியாகம்(?) செய்ததாக முழங்கிய அதே கட்சி, தங்கள் கோட்டையென நம்பிக் கொண்டிருந்த தொழில் நகரம் திருப்பூரில் கிடைத்த அதிர்ச்சியான அனுபவத்தால் நிலைகுலைந்து போய்விட்டது.

திருப்பூர் தொகுதி மா.கம்யூ. எம்.எல்.ஏ கோவிந்தசாமியின் தமிழக அரசு சார்பான நடவடிக்கைகளை அடுத்து, அவர் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். அவரது ஆதரவாளர்களும் நீக்கப் பட்டுள்ளனர். இந்த நீக்கத்துக்கு காரணம் என்ன என்று, ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 4 வரை திருப்பூரில் அரசியல் விளக்கப்பொதுக்கூட்டங்களை நடத்தி இருக்கிறது மா.கம்யூ.

இதுநாள்வரை சகாவாக, தோழராக இருந்த கோவிந்தசாமி மீது, இந்தக் கூட்டங்களில் மா.கம்யூ.தெரிவிக்கும் குற்றச்சாட்டுக்கள், தங்களுக்குத் தாங்களே சகதி பூசிக் கொள்வதாகக் காட்சி தருகின்றன. இந்த விபரீத நிலைக்கு யார் காரணம்? அரசியல் என்பதே சுயநல லாபங்களின் கணக்கீடாக மாறி வரும் நிலையில், மா.கம்யூ. கட்சி மட்டும் விதிவிலக்காகி விட முடியாது. இந்த வீழ்ச்சியில் கோவிந்தசாமிக்கு பங்குள்ளது போலவே, மா.கம்யூ. கட்சிக்கும் சம பங்குண்டு.

திருப்பூரில் சாதாரண பனியன் தொழிலாளியாக இருந்த சி. கோவிந்தசாமி 1968ல் சி.ஐடி.யு தொழிற்சங்கத்தில் சேர்ந்தார். தொழிற்சங்கத்தில் தீவிர ஈடுபாடு காட்டியதன் விளைவாக மா.கம்யூ.கட்சியில் 1974ல் உறுப்பினரானார். தனது கடும் உழைப்பாலும், அனைவருடனும் பழகும் பண்பாலும் கட்சியைத் திருப்பூரில் வளர்த்த கோவிந்தசாமி, கட்சியுடன் தானும் வளர்ந்தார்.

மாவட்டக்குழு உறுப்பினர், மாநிலக்குழுஉறுப்பினர், கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் போன்ற பதவிகள் கோவிந்தசாமியை நாடிவந்தன.1986ல் திருப்பூர் நகராட்சி உறுப்பினர் ஆனார். 1989ல் திருப்பூர் எம்.எல்.ஏ., ஆனார். 2006ல் இரண்டாவது முறையாக வென்று மீண்டும் திருப்பூர் எம்.எல்.ஏ.,ஆனார். அவரது வெற்றிப் பயணம் கட்சிக்கு மகிழ்ச்சியையே தந்து வந்தது. எனவே தான், மா.கம்யூ., எம்.எல்.ஏக்களின் (9 பேர்) சட்டப் பேரவைக்குழுத் தலைவராக அவர் 2006ல் நியமிக்கப்பட்டார்.

அப்போது, தி.மு.கவுடன் நெருங்க, கோவிந்தசாமியை ஒரு கருவியாக மா.கம்யூ பயன்படுத்திக் கொண்டது. அவரது கோரிக்கைகளை தமிழக முதல்வர் உடனடியாக நிறைவேற்றி வந்தார். ''தி.மு.க எம்.எல்.ஏக்களின் கோரிக்கைகளைக் கூட கண்டு கொள்ளாத முதல்வர், மா.கம்யூ எம்.எல்.ஏ கோவிந்தசாமி என்ன கேட்டாலும் செய்து கொடுத்து விடுகிறார். இது பொறாமையாக இருக்கிறது'' என்று திருப்பூரில் நடந்த அரசு விழாவில் மு.க.ஸ்டாலினே கூறும் அளவுக்கு, இந்த உறவுப்பாலம் வலுவடைந்தது.
அதன் விளைவாகவே, திருப்பூர் புதிய மாவட்டம் உருவாக்கம், திருப்பூர் மாநகராட்சியாக தகுதி உயர்வு, அங்கீகாரம் இல்லாத மனைப்பிரிவுகள் வரன்முறையாக்கச் சட்டம் போன்ற பல சாதகமான அம்சங்கள்திருப்பூருக்கு கிடைத்தன. மா.கம்யூ. கட்சியும் இதன் பலனை அனுபவித்தது.

2008ல் இந்நிலை மாறியது. தி.மு.க மா.கம்யூ., உறவில் விரிசல் விழுந்தது. 'ஐயா'வை வெறுத்தால்தான் 'அம்மா'வை நெருங்க முடியும் என்பது தமிழக அரசியல் சாசன விதி என்பதால், கருணாநிதியுடனான நெருக்கத்தை மா.கம்யூ. தலைவர்கள் குறைக்கத் துவங்கினர். ஆனால், முதல்வரின் செல்லப்பிள்ளையாக கோவிந்தசாமி நீடித்தார். அப்போதுதான் முதல் கீறல் விழுந்தது.

கோவிந்தசாமிக்கு சில கைமாறுகளைக் கருணாநிதி செய்து கொடுத்ததாக கட்சிக்குள் பேச்சு எழுந்தது. திருப்பூரில் எட்டு மணிநேரத்துக்கு மேற்பட்ட 'ஓவர்டைம்' வேலை தொடர்பாக சச்சரவு ஏற்பட்டபோது முதலாளிகளுக்கு ஆதரவாக கோவிந்தசாமி செயல்பட்டதாக சலசலப்பு ஏற்பட்டது. இவ்விவகாரத்தில் திருப்பூர் தொழில்துறையினரிடம் ரூ. 25 லட்சம் வசூலித்து, தமிழக அமைச்சரிடம் கோவிந்தசாமி எம்.எல்.ஏ. வழங்கியதாக கிசுகிசுக்கப்பட்டது.

அதையடுத்து, 2008 ஜூன் மாதம் மா.கம்யூ சட்டப் பேரவைக் குழுத் தலைவர் பதவியிலிருந்து கோவிந்தசாமி நீக்கப்பட்டு, பதிலாக, பாலபாரதி நியமிக்கப்பட்டார். கட்சியின் மாநிலக் குழுவில் இருந்தும் கோவிந்தசாமி நீக்கப்பட்டார். அப்போதே கட்சி திருப்பூரில் உடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கோவிந்தசாமி கண்ணியம் காத்தார்.

அன்று முதலாகவே, கட்சிக்குள் அவர் ஒதுக்கப்பட்டு வந்தது, இப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 2 ஆண்டுகள் பொறுமை காத்த கோவிந்தசாமி, சரியான நேரத்தில், தமிழக அரசின் சாதனைகளுக்கு பாராட்டு விழா நடத்துவதாக அறிவித்து, கட்சிக்கு கஷாயம் கொடுத்தார்.

தி.மு.க அரசை எதிர்த்து (இது எதிர்க்கும் பருவம்) அரசியல் போராட்டங்களை நடத்தி வரும் மா.கம்யூ,அ.தி.மு.க கூட்டணிக்கு போயஸ்கார்டன் வாசலில் காத்திருக்கும் நிலையில், கோவிந்தசாமியின் அறிவிப்பு கடும் நெருக்கடியை ஏற்படுத்திவிட்டது. விளைவாக, எச்சரிக்கை அறிவிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து, கோவிந்தசாமியும் அவரது ஆதμவாளர்களும் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர்.

இதை எதிர்பார்த்திருந்த (கட்சியே நீக்கினால் தான் எம்.எல்.ஏ பதவி பறிபோகாது) கோவிந்தசாமியும், தமிழக அரசு ஆதரவாளராக மாறிவிட்டார். தற்போது, 'குறைந்தபட்ச நேர்மை இருந்தால் எம்.எல்.ஏ பதவியை கோவிந்தசாமி ராஜினாமா செய்ய வேண்டும்' என்று மா.கம்யூ. அறிவுறுத்தி உள்ளது. சாத்தான் வேதம் ஓதும் கதை தான் நினைவில் வருகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த கோவிந்தசாமி, ''42 ஆண்டு கட்சிப் பணிக்கு கிடைத்த பரிசாக இதை ஏற்கிறேன். மா.கம்யூ. எம்.எல்.ஏவின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றியது கட்சிக்கு பெருமை அல்லவா அளிக்க வேண்டும்? இதற்காக பாராட்டுவிழா நடத்துவது எப்படி தவறாகும்?'' என்று கேட்டிருக்கிறார். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகும் திருப்பூரில் கோவிந்தசாமிக்கு ஆதரவு பெருகி வருவது, கட்சிக்குள் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதன் விளைவாகவே, கோவிந்தசாமி மீது அவதூறுப் பிரசாரம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. ஆனால், இந்த அவதூறுகள் கட்சியையே கேவலப்படுத்துகின்றன என்று பதிலடி கொடுத்திருக்கிறார் கோவிந்தசாமி. கடந்த பிப்ரவரியில் தற்கொலை செய்துகொண்ட மா.கம்யூ. தலைவர்களுள் ஒருவரான உ.ரா.வரதராஜன் போலவே தானும் நெருக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்டதாக கோவிந்தசாமி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மா.கம்யூ. கட்சிக்கு இந்த விஷயத்தில் தனித்த வரலாறே உண்டு. திரிபுராவின் நிருபன் சக்கரவர்த்தி, கேரளாவின் கௌரியம்மாள், மேற்குவங்கத்தின் சோம்நாத் சாட்டர்ஜி ஆகியோர் மீதான அவதூறு பிரசாரங்களில் செங்கொடித் தோழர்களே முன்னின்றனர் என்பது வரலாறு. அதே நிலைதான் தற்போது திருப்பூரில் காணப்படுகிறது. கம்யூனிஸ்டுகளின் ஜனநாயகம் சந்தி சிரிக்கிறது.

கோவிந்தசாமி செய்தது சரியா, தவறா என்பது இங்கு பிரச்னையல்ல. அதை அக்கட்சி கையாளும் விதம்,ஜனநாயகம் மீதான நம்பிக்கை கொண்டோருக்கு கவலை தருகிறது. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒருவரை எதிர்த்து நடத்தும் விளக்கப் பொதுக் கூட்டத்துக்கு பொதுச்செயலர் பிரகாஷ் காரத்தே வருகிறார் என்பதிலிருந்து, அக்கட்சியின் வன்மம் புரியும்.

"மா.கம்யூ. கட்சியை அழிக்க பிரகாஷ் காரத்தே போதும்' என்று சோம்நாத் சாட்டர்ஜி கூறியிருக்கிறார்.வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெற்றது போல இருக்கிறது இக்கருத்து. மொத்தத்தில் செங்கொடியின் சாயம், 'குறைந்தபட்சம்' திருப்பூரில் வெளுக்கத் துவங்கிவிட்டது.
-----------------------------------------------------------------------
நன்றி: விஜயபாரதம் (13.08.2010)
.

புதன், ஆகஸ்ட் 18, 2010

கான மயிலாட கண்டிருந்த வான்கோழி...


"புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது போல' என்ற ஓர் உவமை உண்டு. தி.மு.க தலைவர் கருணாநிதி கோவையில் நடத்திய (ஆக.2) பொதுக்கூட்டத்தைப் பார்த்தபோது மேற்கண்ட உவமைதான் நினைவில் வந்தது.

செம்மொழி மாநாட்டுக்கு பதிலடியாக, ஜூலை13 அன்று, கோவையில் அ.தி.மு.க தலைவி ஜெயலலிதா நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தி.மு.க வை நன்றாகக் கலங்கடித்துவிட்டது தெரிகிறது. அதற்கு பதிலடியாக, அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடத்திய அதே வ.உ.சி திடலில் தி.மு.கவும் பொதுக்கூட்டத்தை நடத்தி இருக்கிறது.

கோவையில் "டைடல் பார்க்' தகவல் தொழில் நுட்பப் பூங்காவைத் திறந்து வைக்க முதல்வர் கருணாநிதி வந்ததைப் பயன்படுத்திக் கொண்டு, அவசர அவசரமாக பொதுக்கூட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஜெயலலிதாவின் கோவை பொதுக்கூட்டப் பேச்சுக்கு பதிலளிக்கவே இந்த பொதுக்கூட்டம் என்று கிளைகள் வாரியாக தீவிர பிரசாரம் செய்யப்பட்டது.

பொதுக்கூட்டம் நிகழ்ந்த நாளில், அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் பெரும்பாலானவை பொதுக்கூட்டத்துக்குத் தொண்டர்களை அழைத்துவர திருப்பிவிடப்பட்டன. இதனால் பயணிகள் அடைந்த தொல்லைக்கு அளவில்லை. கோவை மாவட்டம் மட்டுமல்லாது மதுரை, தேனி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, உதகை, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களிலிருந்தும் அரசுப் பேருந்துகள் வாயிலாகத் தொண்டர்கள் அழைத்து வரப்பட்டனர்.

அரசு இயந்திரத்தை துஷ்பிரயோகப்படுத்துவது தி.மு.க வுக்குப் புதிதல்ல. மக்களும் வழக்கம் போல தங்களைத் தாங்களே நொந்தபடி அமைதி காத்தனர். இத்தனை ஏற்பாடுகள் செய்திருந்தும், கோவை வ.உ.சி. பூங்காத் திடல் மட்டுமே நிரம்பியது. முன்பு, ஜெயலலிதா நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது திடல் மட்டுமின்றி பக்கவாட்டுச் சாலைகளும் நிரம்பி வழிந்தன; அன்று கோவை மாநகரம் ஸ்தம்பித்துவிட்டது. அத்தகைய மக்கள் கூட்டத்தை தி.மு.க நிகழ்வில் காண முடியவில்லை. அ.தி.மு.க போல வடக்கு நோக்கி மேடை அமைத்தும், தி.மு.கவுக்கு "வாஸ்து' வேலைசெய்யவில்லை. இந்த அதிர்ச்சி, தி.மு.க பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர்களின் வசைபாடலில் எதிரொலித்தது.

சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய தி.மு.க தலைவர், நோக்கத்துக்கு மாறாக ஜெயலலிதாவையே வசைபாடினார். இதன்மூலம், தி.மு.கவின் மாற்று சக்தி, அ.தி.மு.க மட்டுமே என்பதை அவர் காட்டிவிட்டார். அவரது பேச்சில் வழக்கமாகக் காணப்படும் "தெளிவு' குறைந்து, பிதற்றல் அதிகமாகக் காணப்பட்டது.

தி.மு.க கொடி தான் சொத்து:

எனக்கென்று சொத்தாக இருப்பது தி.மு.க கொடி மட்டுமே என்று கருணாநிதி பேசினார். இதை அப்படியே நம்பி கைதட்டினார்கள் கழக உடன்பிறப்புகள். தனது சொத்துக்களை வாரிசுகளுக்கு பிரித்துக் கொடுத்தது போக, கோபாலபுரத்து வீட்டையும் மறைவுக்குப் பின் தானமாக எழுதி வைத்துவிட்டேன் என்று உருக்கமாகப் பேசினார் கருணாநிதி.
அவரே, தமிழகத்தை வளர்க்க வேண்டுமானால் அழகிரியையும் ஸ்டாலினையும் பலிகொடுக்கத் தயாராக இருப்பதாக முழங்கியதுதான் உச்சகட்ட நகைச்சுவை; மனுநீதிச் சோழன் பிறந்த திருவாரூரில் பிறந்தவராம்!மதுரை தினகரன் பத்திரிகை அலுவலகத்தில் வெந்து பலியான சகோதரர்கள் கதை கருணாநிதிக்கு மறந்துவிட்டது போலும்!

செம்மொழி மாநாட்டில் கட்சிக்கொடி கட்டக் கூடாது என்ற உத்தரவால் தொண்டர்கள் பட்ட மனப்புண்ணுக்கு மருந்தாக, இனிவரும் காலங்களில் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் தி.மு.க கொடிகளை நடுங்கள் என்று முழங்கினார் தலைவர். ஏற்கனவே உடன்பிறப்புகளின் சாலையோர ஆக்கிரமிப்பு விளம்பரங்களைத் தாள முடியவில்லை. தி.மு.கவுக்குப் போட்டியாக அ.தி.மு.கவும் களமிறங்கினால், தமிழகத்தின் கதி அதோகதிதான்!

"கலைஞர்' புராணம்

பொதுக்கூட்டத்தில் பேசிய பலர், கருணாநிதியை ஜெயலலிதா "கருணாநிதி' என்றே அழைப்பதாக ஆதங்கப்பட்டனர். பத்திரிகைகள் கூட (விலை போனவை தான்) கலைஞர் என்று எழுதி மகிழ்கையில், ஜெயலலிதா நிமிடத்துக்கு 60 முறை கருணாநிதி என்று சொன்னால் பகுத்தறிவு வாதிகளுக்கு கோபம் வரத்தானே செய்யும்?

இதையும் கருணாநிதி விடவில்லை. இது குறித்த கருணாநிதியின் பேச்சு மரியாதைக் குறைவாக, மட்டரகமாக இருந்தது. ஜெயலலிதாவை ஒருமையில் விளித்த அவர், "நீ, நான் என்று பேசிக் கொள்வதாக கருதிக் கொள்ளாதே. ஏனென்றால் உன் வயது என்ன? என் வயது என்ன? சிறு வயதிலிருந்தே உன்னைத் தெரியும் என்ற காரணத்தால், அந்த மரியாதையுடன் நீ, நான் என்று பேசுவதாக எண்ணிக்கொள். உன் வயதுக்கு 87 வயதான ஒரு முதியவரைப் பார்த்து, நான் அதிகம் படிக்காதவனாக இருக்கலாம், உன்னைப் போல் அறிவாளியாக இல்லாமல் இருக்கலாம் அந்த வயதுக்காவது மரியாதை கொடுக் வேண்டாமா? நான் மரியாதையைத் தேடி அலைகிறேன் என்று யாராவது தயவுசெய்து எண்ணிக் கொள்ளாதீர்கள்'' என்று புலம்பினார், 'கலைஞர்'.

கருணாநிதியைக் கலைஞர் என்று அழைத்துவிட்டால், சர்க்காரியா கமிஷன் அறிக்கையும் ஸ்பெக்ட்ரம் ஊழலும் நள்ளிரவு கைதும் வாக்காளர்களுக்கு மறந்து போகுமா என்ன? இருந்தாலும் "பெரியவரின்' வருத்தம் அறிந்து "அம்மா'வாவது மரியாதை கொடுக்கலாம்.

சாமிகள் மயம்:

தி.மு.கவுக்குத் தாவிய ஈரோடு முத்துசாமி, கரூர் சின்னசாமி, தாவத் தயாராக உள்ள திருப்பூர் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி, ம.தி.மு.கவுக்குத் தாவி பின் தாய்க்கழகத்துக்குத் தாவிய மு.கண்ணப்பன், கோவை மாநகரம் அ.தி.மு.கவுக்குத் தாவக் காரணமான மு.ராமநாதன் போன்றவர்களின் முழக்கங்கள் தொண்டர்களுக்கு உற்சாகமூட்டின. கட்சி தாவும் பிரபலங்கள் முந்தைய தாய்க்கட்சிகளை விமர்சிப்பது புதிதல்ல. தி.மு.கவைப் பிளந்த கோபாலசாமி அளித்த அனுபவத்தை "முதியவர்' மறந்திருக்க மாட்டார். ஆயினும், தனது பங்குக்கு சாமிகளை மேடையேற்றி அழகு பார்த்தார்.

"வருங்கால முதல்வர்' அய்யாசாமி (மு.க.ஸ்டாலினின் இயற்பெயராமே) மட்டுமே பொதுக்கூட்டத்தின் நோக்கமான சாதனை விளக்கத்தை நினைவில் கொண்டு பேசினார். தமிழக அரசின் சாதனைகளைக் கண்டு பிற மாநில முதல்வர்கள் வியப்படைந்து வருவதாக, தனக்குத் தானே சான்றிதழ் அளித்துக் கொண்டார். தி.மு.க அரசின் இலவச கவர்ச்சித் திட்டங்களை அவர் அடுக்கினார். ஒருவருக்கு மீன் கொடுப்பதைவிட மீன்வலை கொடுப்பதே முக்கியம் என்ற அரசியல் தத்துவத்தை அவருக்கு யாரேனும் எடுத்துச் சொன்னால் நல்லது.

மொத்தத்தில், கோவையில் நிகழ்ந்த தி.மு.க., பொதுக்கூட்டம், அரசின் சாதனைகளை விளக்குவதாகக் கூறிக் கொண்டு, ஜெயலலிதாவை வசைபாடி மகிழ்ந்தது. அ.தி.மு.க நடத்திய ஆர்ப்பாட்டத்துக்குப்போட்டியாக பொதுக்கூட்டம் நடத்திய தி.மு.க., "கான மயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் ஆடியது போல' தன் பலவீனத்தை தானே வெளிப்படுத்திவிட்டது.

----------------------------------------------------------------------------


பெட்டிச் செய்தி

"மைனாரிட்டி' பெருமிதம்!

அ.தி.மு.க தலைவி ஜெயலலிதா, தி.மு.க அரசை மைனாரிட்டி அரசு என்று தொடர்ந்து விமரிச்சித்து வருவது தி.மு.கவினருக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உண்மை கசக்கத்தானே செய்யும்? இதற்கும் கோவை பொதுக்கூட்டத்தில் பதில் அளித்தார், செம்மொழி மாநாட்டுத் திலகம் கருணாநிதி.

"மைனாரிட்டி அரசு என்று சொல்வதால் நான் கவலைப்படப் போவதில்லை. சிறுபான்மை சமூகத்தை மைனாரிட்டி என்பார்கள். அதைப் போல தி.மு.க சிறுபான்மையினருக்காக என்றும் பாடுபடக் கூடியது' என்றார் அவர்.

"உலகிலேயே இந்தோனேஷியாவுக்கு அடுத்தபடியாக அதிக முஸ்லிம்கள் வாழும் நாடு இந்தியா. இங்கு 15 கோடி முஸ்லிம்கள் உள்ளனர். முஸ்லிம்கள் அதிகம் வாழும் மாநிலங்களில் 6 சதவீதம் மட்டுமேஅμசு பணிகளில் உள்ளனர். இத்தகைய நிலையிலிருக்கும் சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருப்பது பெருமைதான்'' என்று முழங்கினார், கருணாநிதி. வழக்கம்போல "மெஜாரிட்டி' உடன்பிறப்புகள் கரவொலி எழுப்பி மகிழ்ந்தார்கள்.

மைனாரிட்டி அரசை மெஜாரிட்டி அரசாக்க தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்று கூறவும் கருணாநிதி மறக்கவில்லை. வார்த்தை ஜாலங்களால் தமிழகத்தை தொடர்ந்து ஆளலாம் என்ற இவரது 'மெஜாரிட்டி' மக்களுக்கு எப்போது புரியபோகிறது?

--------------------------------------------------------------------------

நன்றி: விஜயபாரதம் (20.08.2010)

காண்க: தமிழ் ஹிந்து

..

செவ்வாய், ஆகஸ்ட் 17, 2010

மக்களை ஒன்றுபடுத்திய அம்மன் சக்தி

ஈரோடு பெரிய மாரியம்மன்

ஈரோட்டில் பக்தர்களின் போராட்டத்திற்கு வெற்றி!

தமிழகத்தின் பகுத்தறிவுப் புரட்சிக்கு வித்திட்ட ஊர் ஈரோடு என்று கழகக் கண்மணிகள் முழங்குவதுண்டு. அதே ஊரில் ஏற்பட்டுள்ள இந்து ஒற்றுமையின் வலிமையான காட்சியும், ஆன்மிக எழுச்சியும் கண்டு தமிழகமே வியப்பில் ஆழ்ந்துள்ளது. ஈரோடு நகரின் காவல் தெய்வமான பெரிய மாரியம்மன் அருளால், அவளது கோயிலை மையமாக வைத்து கிளர்ந்து எழுந்த போராட்டம், இந்துக்களின் உத்வேகத்திற்கு உரமூட்டியுள்ளது.

பெரிய மாரியம்மன் கோயில் நிலமீட்பு போராட்டம், இதுவரை அசையாமல் இருந்த அரசையும் அதிர வைத்துள்ளது. பக்தர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஒப்புக்கொண்டுள்ளது, பல ஆண்டுகளாக இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏறபடுத்தியுள்ளது. முதல் கட்டமாக, சர்ச்சைக்குரிய 80 அடி சாலை தொடர்பான குறிப்பிடத்தக்க அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது.

முன்கதைச் சுருக்கம்...

தமிழகத்தின் ஜவுளி நகரங்களில் முதன்மையானது ஈரோடு. முற்காலத்தில் கைத்தறிக்கு பேர்போன நகரமாக இருந்த ஈரோடு, தற்போதும் ஜவுளிச் சந்தைகளில் முதன்மையானதாக உள்ளது. இங்கு பழமையான பல கோயில்கள் இருந்தாலும், ஆண்டுதோறும் பங்குனி மாதம் விழாக் காணும் பெரிய மாரியம்மன் கோயில் தான் நகரின் மையக் கோயிலாக உள்ளது. இங்கு பொங்கல் வைத்து வழிபட ஈரோடு மட்டுமல்லாது சுற்றுப்புற பகுதி மக்களும் பல்லாயிரக் கணக்கில் திரள்வர்.

பல நூற்றாண்டுகள் கடந்த பெரிய மாரியம்மனின் முந்தைய பெயர் அருள்மிகு மந்தைவெளி மாரியம்மன். முற்காலத்தில் கால்நடைகள் மேய்ந்த பெருநிலத்தில் மக்களுக்கு காவலாக விளங்கியவள் என்பதால் இப்பெயர் பெற்ற அம்மன், கால ஓட்டத்தில் 'பெரிய மாரியம்மன்' என்று பெயர் பெற்றாள். 1,200 ஆண்டுகளுக்கு முன், கொங்குச் சோழர்களால் பெரிய மாரியம்மனுக்கு கோயில் கட்டப்பட்டதாக ஈரோடு மாநகராட்சி இணையதளத்தில் குறிப்பு காணப்படுகிறது.

பங்குனி விழாவில், பெரிய மாரியம்மன், கச்சேரி வீதி நடு மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோயில்களில் (பெரிய மாரியம்மன் கோயில் வகையறா) விசேஷ ஆராதனைகள் நடக்கும். அந்த சமயத்தில் கண்டிப்பாக மழை பொழியும் என்பது பக்தர்களின் நம்பிக்கை மட்டுமல்ல, உண்மையும் கூட.

வாரந்தோறும் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளிலும், அமாவாசை நாட்களிலும் இக்கோயிலில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் கூட்டம் அலைமோதும். ஆனால், வழிபட போதிய இடம் இல்லாததால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். கோயிலுக்கு சொந்தமான இடம் கிறிஸ்தவர்களால் ஆக்கிரமிக்கப் பட்டதால்- அந்த அநியாயத்தை முந்தைய தலைமுறையினர் கண்டுகொள்ளாமல் விட்டதால்- வந்த வினை இது.

முற்காலத்தில், நாற்பது ஏக்கர் பரப்பில் நடுநாயகமாக இருந்த பிரமாண்டமான கோயில், தற்போது, 'பிரப் ரோடு' என்று அழைக்கப்படும் மாநில நெடுஞ்சாலையில், குறுகிய புறம்போக்கு நிலத்தில் அமைந்துள்ளது காலத்தின் கோலம் தான்.

பெரிய மாரியம்மன் கோயிலுக்குப் பின்புறம் 250 மீட்டர் தூரத்தில் அருள்மிகு பிடாரியம்மன் (பட்டத்தம்மன்) கோயில் இருந்தது. அந்தக் கோயிலும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கிறிஸ்தவர்களால அகற்றப்பட்டு, அந்த அம்மன் சிலை தற்போதைய பெரிய மாரியம்மன் கோயிலிலேயே வைக்கப்பட்டது.

விழாக் காலத்தில் 10 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் வழிபட வரும் இக்கோயிலின் தற்போதைய நிலை வருத்தம் அளிப்பதாக உள்ளது. இதற்கு காரணம், ஆங்கிலேயர் ஆட்சியின் போது, கோவையில் ஆட்சியராக இருந்த கிறிஸ்தவ வெள்ளைய அதிகாரியின் துணையுடன், அம்மன் கோயில் நிலங்கள் ஆக்கிரமிக்கப் பட்டது தான்.

ஆக்கிரமித்த ஆதிக்கவாதிகள்:

1804 - ம் ஆண்டு வரை ஈரோடு வட்டத்தின் தலைநகரமாக பவானி இருந்தது. 1864 -ல் தான் இந்நிலை மாறியது. அப்போது ஈரோட்டில் அரசு அலுவலகங்கள் (கச்சேரி என்று அந்நாளில் அழைப்பர்), மந்தைவெளி மாரியம்மன் கோயில் இருந்த மந்தைவெளியை ஒட்டி அமைக்கப்பட்டன. அப்போது ஆங்கிலேய ஆட்சி நிலவியது. அவர்கள் வைத்தது தான் அந்நாளில் சட்டம். அந்நிலையில், அரசு அலுவலகங்களைச் சுற்றியுள்ள மந்தைவெளிப் பகுதியை, ஆங்கிலேய கிறிஸ்தவ அதிகாரிகளின் துணையுடன் கிறிஸ்தவ மிஷனரிகள் ஆக்கிரமித்தனர். ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் தேவாலயமும் மருத்துவமனையும் கிறிஸ்தவர்களால் கட்டப்பட்டன.

அப்போது ஒருங்கிணைந்த கோவை மாவட்டம் இருந்தது. அதன் ஆட்சியராக அப்போது இருந்தவர் திரு. ஆர்.ஹெச்.ஷிப்லே. அவர்தான் கோயில் நிலத்தை லண்டன் மிஷனரியைச் சேர்ந்த ஆயர் திரு. பாப்ளி என்பவருக்கு தாரை வார்த்துக் கொடுத்தவர். மந்தைவெளி மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் 12.66 ஏக்கர் நிலம், ஈரோட்டில் நிலைகொண்ட லண்டன் சொசைட்டிக்கு, வெறும் ரூ.12.11.0 அணாவுக்கு வருடாந்திர வாடகைக்கு கையளிக்கப்பட்டது (நாள்: 12.8.1905).

கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது என்ற பழமொழி அங்கு உண்மையானது. தவிர இதிலும் குழப்பம் உள்ளது. இதே நிலத்தை ரூ. 12 ,910 – க்கு விற்பனை செய்ததாகவும் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது (ஈரோடு சார்பதிவாளர் அலுவலக ஆவணம் எண்: 306 /1907; நாள்: 19.1.1906). இந்தப் பத்திரத்தின் உண்மைத்தன்மை (ஆவணங்களின் நாட்களைக் கவனியுங்கள்) கேள்விக்குறியாகவே உள்ளது.

இடிக்கப்பட்ட கோயில்களில் இருந்த அம்மன் சிலைகள், அதே நிலத்தின் வட பகுதியில், சர்வே எண்: 583-ல் பெருந்துறை சாலையில் புறம்போக்கு நிலத்தில் (தற்போதைய பிரப் ரோடு) வைக்கப்பட்டு வழிபாடுகள் தொடர்ந்தன. அதுவே இன்றைய அருள்மிகு பெரிய மாரியம்மன் கோயில்.

இக்கோயிலுக்கு மகாகவி பாரதியார் 1921-ல் வந்து தரிசனம் செய்திருக்கிறார். 1931-ல் கோயிலுக்காக நடந்த போராட்டம் காவல்துறையால் நசுக்கப்பட்டது. அப்போது, கோயில் பூசாரி உள்பட நான்கு பக்தர்கள் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.

தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ.) அமைப்பினர் இந்த இடத்தை தங்கள் பெயருக்கு 1965 -ல் பெயர்மாற்றம் செய்துகொண்டனர். (ஈரோடு சார்பதிவாளர் அலுவலக ஆவணம் எண்: 1175 / 1965 ; நாள்: 14.4.1965). அந்த இடத்தில் பள்ளி, கல்லூரிகளையும் நிறுவிக் கொண்டனர்.

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம், கிறிஸ்தவர்கள் இப்பகுதியில் அனுபோகம் செய்துவரும் நிலப்பகுதியின் பரப்பளவு 27.84 ஏக்கர். (அவர்களிடமுள்ள ஆவணங்களின் படியேகூட 12 .66 ஏக்கர் நிலம் மட்டுமே அவர்களுக்கு உரிமையானது! ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அரசு அலுவலகங்கள் இயங்கிய பல கட்டடங்கள் இன்றும் சி.எஸ்.ஐ.கட்டுப்பாட்டிலேயே உள்ளன).

இவ்வாறாக அம்மன் கோயிலுக்கு உரிமையான நிலத்தை ஆங்கிலேய ஆட்சியின்போது ஆக்கிரமித்த கிறிஸ்தவர்கள், அப்பகுதியில் தங்களை வலுவாக நிலைநிறுத்திக் கொண்டார்கள். ஈரோட்டின் காவல் தெய்வமான அருள்மிகு பெரிய மாரியம்மனோ, குறுகிய இடத்தில், சிறிய கோயிலில்! ஆண்டுதோறும் விழாக் காலங்களில் அம்மன் பக்தர்கள் இங்கு வந்து வழிபட பல சிரமங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது.

பக்தர்களின் விழிப்புணர்வு:

தற்போது வணிகவரித்துறை உள்பட பல அரசு அலுவலகங்கள் உள்ள இடம், முந்தைய காலத்தில் அம்மன் கோயிலுக்கு உரியவையாக இருந்தவையே. கிட்டத்தட்ட 40 ஏக்கர் நிலம் கொண்ட அருள்மிகு பெரிய மாரியம்மன் கோயில், தற்போது, அரசு புறம்போக்கு நிலத்தில், நெருக்கடியான இடத்தில் இருப்பது பக்தர்கள் மனதைப் புண்படுத்தியது. 1993-ல் கோயில் நிலத்தை மீட்க இந்து முன்னணி முயற்சி மேற்கொண்டது.

இது தொடர்பான கோரிக்கை மனுக்களை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இதை அடுத்து சென்னை உயர்நீதி மன்றத்தில் ரிட்மனு (20224/1998) தாக்கல் செய்யப்பட்டது. மேற்படி ரிட்மனுவை விசாரித்த நீதிமன்றம், உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஈரோடு மாவட்ட நிர்வாகத்திற்கு ஆணையிட்டது.

அதையடுத்து அப்போதைய மாவட்ட ஆட்சியர் திரு.கருத்தையா பாண்டியன் விசாரணை நடத்தினார். 12.66 ஏக்கர் நிலத்துக்கு மட்டுமே தங்களிடம் ஆவணங்கள் இருப்பதாக சி.எஸ்.ஐ. நிர்வாகம் தெரிவித்தது. கோயில் நிலம் சம்பந்தப்பட்ட அனைத்து விபரங்களும் 1414/39 எண்ணுள்ள அரசு கோப்பில் உள்ளதாக இந்து அறநிலையத் துறை பதிவேடுகளில் காணப்படுவதாகவும், அந்த ஆவணம் தற்போது காணப்படவில்லை; அழிக்கப்பட்டிருக்கலாம் என்றும், ஆட்சியர் தனது அறிக்கையில் தெரிவித்தார்.

12.66 ஏக்கர் நிலத்திற்கான ஆவணங்கள் மட்டுமே இருப்பதாக சி.எஸ்.ஐ. நிர்வாகமே கூறியபோதிலும், அதைவிட அதிகமாக 27.84 ஏக்கர் நிலம் எவ்வாறு அவர்களது பயன்பாட்டில் உள்ளது என்று அரசுத் தரப்பில் கேள்வி எழுப்பப்படவே இல்லை. அவர்கள் குறிப்பிட்ட ஆவணங்கள் சரியானவையா என்பதும் ஆராயப்படவில்லை. காணாமல் போன அறநிலையத் துறை ஆவணத்தைக் கண்டறியும் முயற்சியும் செய்யப் படவில்லை. சிறுபான்மையினர் மீதான அச்ச உணர்வு காரணமாக, சி.எஸ்.ஐ. நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை தனியார் நிலம் என்று ஆட்சியர் தவறான தகவலை நீதிமன்றத்துக்கு தெரிவித்தார்.

இதிலிருந்து கிறிஸ்தவ ஆக்கிரமிப்பு சக்திகளுக்கு அரசு துணை போனது மக்களுக்கு தெளிவானது. இதையடுத்து, கோயில் நிலத்தில் இந்துக்களின் உரிமையை நிலைநாட்ட, பல போராட்டங்களை இந்து முன்னணி நடத்தியது. ஒவ்வோராண்டும், பங்குனி விழாவின்போது, ஆக்கிரமிப்பு இடத்தில் பொங்கலிட முயன்று இந்து முன்னணியினர் கைதாகி வந்தனர்.

இந்து முன்னணியின் தொடர் போராட்டம் மக்களிடையே விழிப்புணர்வைப் பெருக்கிவந்த நேரத்தில், இந்தப் போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்ற புதிய சிந்தனை உதயமானது. எல்லாம் அந்த பெரிய மாரியம்மன் அருள் தான் போலும்!

இதை அடுத்து, 2009-ல் 'ஈரோடு ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கம்' துவங்கப்பட்டது. ஈரோடு தொழிலதிபரும், மாவட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவருமான திரு ஈ.ஆர்.எம்.சந்திரசேகர் தலைமையில், ஈரோட்டின் முக்கிய பிரமுகர்கள் பலர் இணைந்த குழு கோயில் நில மீட்புக்காக அமைக்கப்பட்டது. அதையடுத்து, போராட்டம் பல கட்டங்களாக துடிப்புடன் மேற்கொள்ளப்பட்டது. இன்றும் போராட்டம் தொடர்கிறது.

தொடர் போராட்டங்கள்:

கோயில் நில மீட்பு இயக்கம் துவங்கிய பின், அனைத்துத் தரப்பினரையும் போராட்டத்தில் ஈடுபடச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அம்மன் பக்தர் என்ற முறையில், அனைத்து சமூகத்தினரையும் ஒருங்கிணைக்க அதிக கவனம் கொடுக்கப்பட்டது. அதற்கு பலனும் கிட்டியது.

கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை, செங்குந்தர் மகாஜன சங்கம், பசும்பொன் தேவர் மக்கள் இயக்கம், நாடார் இளைஞர் சங்கம், தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கம், தமிழ்நாடு மருத்துவர் சமூகநலச் சங்கம், செட்டியார் சங்கம், தமிழ்நாடு பிராமணர் சங்கம், உப்பிலிய நாயக்கர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சமூக இயக்கங்கள் கோயில் நில மீட்பு இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்தன.

அனைத்து வியாபாரிகள் சங்கம், ஜவுளி வியாபாரிகள் சங்கம், சுமை தூக்குவோர் சங்கம், ஆட்டோ ஓட்டுனர் சங்கங்கள், வாகன பழுது பார்ப்போர் சங்கம் உள்ளிட்ட பல தொழில் சார்ந்த இயக்கங்களும், மக்கள் சக்தி இயக்கம், கிராமப் பூசாரிகள் பேரவை, பாரதீய கிசான் சங்கம், வழக்கறிஞர்கள் சங்கம், அருள்நெறி திருக்கூட்டம், பல்வேறு கோயில் கமிட்டிகள் உள்பட 40 -க்கு மேற்பட்ட அமைப்புகள், அம்மன் கோயில் நிலத்தை மீட்க வேண்டும்; கோயிலைக் காக்க வேண்டும் என்ற நோக்கில் ஓரணியில் சேர்ந்தன.

ஆக்கிரமிப்பில் உள்ள அம்மன் கோயில் நிலங்களை மீட்க கையெழுத்து இயக்கம் துவக்கப்பட்டது (26.12.2008 ). தொடர்ந்து இரண்டு மாதங்கள் நடந்த இந்த இயக்கத்தில், 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களிடம் கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டன. இதன் மூலம், மக்களிடையே கோயில் நிலம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அந்த ஆண்டு பங்குனிப் பெருவிழாவின்போது (1.4.2009), இந்து முன்னணி அமைப்பு, தடையை மீறி ஆக்கிரமிப்பு இடத்தில் பொங்கல் வைத்து வழிபடப்போவதாக அறிவித்தது. இதில் 500 -க்கு மேற்பட்டோர் பங்கேற்று, ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோயிலில் துவங்கி, ஊர்வலமாக வந்து கோயில் அருகே கைதாகினர். ஒவ்வோர் ஆண்டும் பத்து பேர் மட்டுமே இவ்வாறு கைதான நிலையில், இந்த ஆண்டு மக்களின் விழிப்புணர்வு அதிகரித்தது போராட்டத்தில் வெளிப்பட்டது.

அடுத்து, ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் பேரணியாகச் சென்று மனு கொடுக்க தீர்மானிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி 9.9.2009 அன்று நடந்தது. பெரிய மாரியம்மன் கோயில் முன்பிருந்து துவங்கிய பேரணியில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக இருந்தது. இறுதியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் கோயில் நில மீட்பு குழுவினரால் மனு கொடுக்கப்பட்டது. ஆனால், மனு கண்டுகொள்ளப்படவில்லை.

இதையடுத்து, பக்தர்களின் கோரிக்கையை வலியுறுத்தி, ஈரோடு தொலைபேசி நிலையம் முன்பு, கண்டன ஆர்ப்பாட்டம் (22.1.2010) நடத்தப்பட்டது. இதில் 400-க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர். கோயிலை ஒட்டியுள்ள பல பகுதிகளின் குடியிருப்போர் நலச் சங்கங்களும் இப்போராட்டத்தில் இணைந்தன.

இந்த ஆண்டு பங்குனிப் பெருவிழாவில், கோயில் நில மீட்பு இயக்கமே, தடையை மீறி பொங்கலிடப் போவதாக அறிவித்தது. அனைத்து இந்து இயக்கங்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தன. 31.3.2010 அன்று கோட்டை ஈஸ்வரன் கோயிலில் துவங்கிய மாபெரும் பேரணியில் 2000-க்கு மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். கோயிலுக்கு சொந்தமான, சி.எஸ்.ஐ. ஆக்கிரமிப்பில் உள்ள இடத்தில் பொங்கலிட அவர்கள் முயன்றனர். காவல்துறை தடுத்து, 700-க்கு மேற்பட்டோரை கைது செய்தது.

கொந்தளித்த மக்கள்:

இந்த சமயத்தில், ஈரோடு நகரில் காந்திஜி சாலையும் பிரப் சாலையும் இணையும் இடத்தில் (பன்னீர்செல்வம் பூங்கா) சாலை மேம்பாலம் கட்டும் பணி அறிவிக்கப்பட்டது. இந்த மேம்பாலம் மாரியம்மன் கோயில் முன்புறம் சென்று அருகிலுள்ள சிவரஞ்சனி ஓட்டல் வரை அமையும் என்பதும், மேம்பாலப் பணிக்காக அம்மன் கோயிலின் முன்பகுதி இடிக்கப்படும் என்பதும் தெரிய வந்தன. இதனால் பக்தர்களின் கோபம் அதிகரித்தது. கோயில் இடத்தை மீட்கப் போராடி வரும் நிலையில், தற்போது இருக்கும் கோயிலுக்கே ஆபத்து என்றால் பக்தர்கள் வேடிக்கை பார்ப்பார்களா?

இந்த நேரத்தில், ஈரோடு நகரமைப்பு ஆணையத்தால் 1970-ல் வடிவமைக்கப்பட்ட 80- அடி திட்டச் சாலை மக்களுக்கு நினைவில் வந்தது. தற்போது சி.எஸ்.ஐ. ஆக்கிரமிப்பில் உள்ள நிலம் வழியாக செல்லும் இந்த திட்டச் சாலையை சுவரால் தடுத்துவைத்துள்ளனர். இந்த திட்டச் சாலையை திறந்துவிட்டால், மேம்பாலத்துக்கு அவசியமே இருக்காது என்று கோயில் நில மீட்பு இயக்கம் அரசுக்கு தெரிவித்தது.

பக்தர்களின் எதிர்ப்பை கண்டுகொள்ளாமல் மேம்பாலப் பணி துவக்கப்பட்டது. இதையடுத்து, பக்தர்களின் உணர்வை மதிக்காத அரசைக் கண்டித்தும், 80 அடி திட்டச் சாலையைத் திறக்க கோரியும் மாபெரும் ஒருநாள் உண்ணாவிரதம் (13.4.2010) ஈரோடு மின்வாரிய அலுவலகம் முன்பு நடத்தப்பட்டது. இதில், 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர். இதில், பல இயக்கங்களும், நகரின் முன்னணி பிரமுகர்களும் கலந்துகொண்டு, பக்தர்களின் கோரிக்கைக்கு வலுச் சேர்த்தனர்.

அடுத்த கட்டமாக, மேம்பாலப் பணியால் கோயில் பாதிக்கப்படக் கூடாது என்று கோரியும், கோயில் நில மீட்பை வலியுறுத்தியும், 80 அடிச் சாலையைத் திறக்க வேண்டியும், கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு ஈரோடு நகரம் செவிசாய்த்தது. 28.5.2010 அன்று ஈரோட்டில் கடையடைப்பு முழுமையாக (நூறு சதவீதம்) நடைபெற்றது. ஆட்டோ ஓட்டுனர்களும் இதில் பங்கேற்றனர். வெற்றிகரமாக நடந்த கடையடைப்பு, பக்தர்களுக்கு மேலும் உற்சாகத்தை அளித்தது.

அன்று (28.5.2010) காலை, கோட்டை ஈஸ்வரன் கோயிலில் துவங்கிய 1008 பால்குட ஊர்வலத்தில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, கோயில் நிலத்தை மீட்க சபதம் ஏற்றனர். 'பிரப் சாலையில் கட்டப்படும் மேம்பாலத்தால் கோயிலுக்கு எந்த இடையூறும் வராது; கோயிலின் எப்பகுதியும் இடிக்கப்படாது' என்று மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார். ஆயினும், கோயில் நில விவகாரத்தில் அரசு மௌனம் சாதித்தது.

எனவே, பெரிய மாரியம்மன் கோயில் நிலத்தை மீட்க, காலவரையற்ற (சாகும் வரை) உண்ணாவிரதம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. 8.7.2010 அன்று கோயில் அருகே உண்ணாவிரதம் இருக்க 200-க்கு மேற்பட்டோர் திரண்டனர். காவல்துறை அனுமதி மறுத்தது.

தடையை மீறி உண்ணாவிரதம் இருந்த 30 பக்தர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நீதிமன்றக் காவலில் கோவை மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டனர். அங்கும் அவர்கள் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்ததால், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப் பட்டனர். அங்கும் உண்ணாவிரதம் தொடர்ந்தது.

உண்ணாவிரதம் இருந்தவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, மறுநாள் (9.7.2010) ஈரோடு மாவட்டம் முழுவதும், பெருந்துறை, கோபி, புளியம்பட்டி, சத்தியமங்கலம், அந்தியூர், பவானி ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் ஒவ்வொரு பகுதியிலும் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்றனர்.

கோயில் நிலத்தை மீட்க வலியுறுத்தி, 10.7.2010 அன்று ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன்பு மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பெண்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொண்டனர். மொத்தம் 2000 பேர் பங்கேற்று அரசுக்கு எதிராக முழங்கினர். சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 700 பேர் மட்டும் கைது செய்யப்பட்டனர்.

உண்ணாவிரதம், சாலை மறியலால் ஈரோட்டில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை உன்னிப்பாகக் கவனித்த அரசு, வழிக்கு வந்தது. மாவட்ட நிர்வாகத்திலிருந்து கோயில் நில மீட்பு இயக்கத்தினர் தொடர்பு கொள்ளப்பட்டனர். கோயில் நில மீட்பு இயக்கத்தினர், அதன் தலைவர் திரு ஈ.ஆர்.எம்.சந்திரசேகர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் திரு. சுடலைக்கண்ணனை நேரில் சந்தித்தனர் (ஜூலை 10 இரவு). ஆட்சியரால் சில உறுதிமொழிகள் அளிக்கப்பட்டன. 80 அடி சாலை, ஆக்கிரமிப்பில் உள்ள நிலம் மீட்பு தொடர்பாக 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார். சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் அன்றிரவே விடுவிக்கப்பட்டனர்.

மாவட்ட ஆட்சியரின் உறுதிமொழியை அடுத்து, சிறையில் இருந்தவர்கள் உண்ணாவிரதத்தைக் கைவிட்டனர். அவர்கள் காவல் நிலையப் பிணையிலேயே, ஜூலை 13 -ல் விடுதலையாகி, ஈரோடு திரும்பினர். அவர்களுக்கு அன்றிரவு கோயில் அருகே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஒன்றுபட்ட மக்கள் சக்தி:

இதுவரை அரசு பக்தர்களை கிள்ளுக்கீரையாக நினைத்திருந்தது. பக்தர்களின் தொடர் போராட்டத்தால், ஈரோட்டில் சூழல் மாறியுள்ளது. தற்போது, 80 அடி திட்டச் சாலை குறித்த ஈரோடு உள்ளூர்த் திட்டக் குழும ஆய்வு தொடர்பாக தமிழக அரசு அரசாணை (VI(1)267/2010) வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டச் சாலை உள்ள இடங்கள் தொடர்பாக மாற்றுக் கருத்துக்களை எதிர்ப்பாளர்கள் பதிவு செய்ய 60 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை கண்டும் காணாமல் இருந்த இக் கோரிக்கை அரசால் பரிசீலிக்கப்பட்டிருப்பதே, பக்தர்களின் வெற்றி தான். பக்தர்களின் இதர கோரிக்கைகளும் அரசால் ஏற்கப்படும் நாள் விரைவில் உருவாகும். மாவட்ட ஆட்சியர் அளித்த உறுதிமொழி நிறைவேற்றப் படுகிறதா என்பதை எதிர்பார்த்து அம்மன் பக்தர்கள் காத்துக் கொண்டுள்ளனர். இனிமேலும் பக்தர்களைக் காக்க வைக்க முடியாது என்பது அரசுக்கு ஏற்கனவே உணர்த்தப்பட்டுள்ளது.

எல்லோர் மனதிலும் நின்று ஆட்டுவிக்கும் அருள்மிகு பெரிய மாரியம்மனே அரசுக்கு நல்வழி காட்டுவாள் என்ற நம்பிக்கையுடன், அடுத்தகட்டப் போராட்டத்துக்கு 'ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் நில மீட்பு இயக்கம்' தயாராகி வருகிறது.


ஒன்றுபடுத்தியது அம்மன் பக்தி; வென்று காட்டும் அம்மன் சக்தி!


-----------------------------------------------------

நேர்காணல்

அம்மன் அருளால் அம்மன் கோயிலைக் காப்போம்!

-ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோயில் நில மீட்பு இயக்கத்தின் தலைவர் திரு.ஈ.ஆர்.எம்.சந்திரசேகர்.

ஆரம்பித்த இரண்டு ஆண்டுகளில் ஈரோடு மக்களின் ஒட்டுமொத்த ஒத்துழைப்பை சாத்தியமாக்கி, அரசை யோசிக்க வைத்துள்ளது ஈரோடு ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோயில் நில மீட்பு இயக்கம். இதன் தலைவர் திரு. ஈ.ஆர்.எம்.சந்திரசேகரிடம் சில கேள்விகள்...

கே: கோயில் நில மீட்பு இயக்கம் ஆரம்பித்ததன் நோக்கம்...

ப: ஈரோடு நகரின் காவல் தெய்வம் அருள்மிகு பெரிய மாரியம்மன். அம்மனது கோயில் நிலத்துக்காக 1993 முதலாகவே பற்பல போராட்டங்கள் நடந்து வந்துள்ளன. இந்து முன்னணி இதற்காக பல்வேறு முயற்சிகளைச் செய்துள்ளது. எனினும், இப் போராட்டம் ஏதோ சிலரது தனிப்பட்ட விருப்பம் போல இதுவரை சித்தரிக்கப்பட்டது. மதவெறுப்பை பிரசாரம் செய்வதாகக் கூறி, நமது கோரிக்கைகளை உதாசீனம் செய்ய அரசு முயன்று வந்தது. இந்நிலையை மாற்ற வேண்டும் என்று முடிவெடுத்தோம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோயில் நில மீட்பு இயக்கம் ஈரோட்டில் துவக்கப்பட்டது. அப்போதே, அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பை பெறுவது என்று தீர்மானித்தோம்.

கே: உங்கள் முயற்சிக்கு மக்களின் ஒத்துழைப்பு எப்படி சாத்தியமானது?

ப: அடிப்படையில் ஈரோடு மக்கள் பக்திபூர்வமானவர்கள்; பாரம்பரியம் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்கள். மக்களுக்கு இந்து இயக்கங்கள் மீது ஏற்கனவே நல்ல மரியாதையும் இருந்தது. எனவே, நாம் புதிய இயக்கம் துவக்கியபோது எந்த சிரமமும் இருக்கவில்லை. ஏற்கனவே அம்மன் கோயில் நிலம் தொடர்பான பிரசாரம் மக்களிடம் சென்றிருந்தது. எனவே அனைவரும் நமது அழைப்பை ஏற்று உடனடியாக ஒருங்கிணைந்தனர்.

குறிப்பாக, கொங்கு வேளாளர் பேரவையின் ஆதரவு எங்களுக்கு வலுவைக் கூட்டியது. இந்த அமைப்பின் ஈரோடு மாநகரத் தலைவர் திரு. ஜெகநாதன், வடக்கு மாவட்டத் தலைவர் திரு. பி.டி.ராஜமாணிக்கம், தெற்கு மாவட்டத் தலைவர் திரு. கே.கே.சி.பாலு ஆகியோர் சுறுசுறுப்புடனும் உள்ளார்ந்த ஈடுபாட்டுடனும் நம்முடன் இணைந்து பணியாற்றினார். செங்குந்தர் மகாஜன சங்கத்தின் தலைவராக இருந்த அமரர் திரு. ஜெ.சுத்தானந்தன் அவ்வப்போது நமக்கு ஆலோசனைகளும் ஆதரவும் தந்து வழி நடத்தியதை மறக்க முடியாது.

அதையடுத்து, திரு. கமுதி பாண்டியன் மூலமாக பசும்பொன் தேவர் பேரவை நம்முடன் இணைந்தது. நாடார் பேரவையும் திரு. சின்னத்தம்பி வாயிலாக தொடர்பில் வந்தது. இவ்வாறு பல்வேறு சமூக இயக்கங்கள் ஒரே அணியில் வந்தன.

ஆன்மிக விஷயத்தில், ஈரோடு அருள்நெறி திருக்கூட்டத்தின் நிர்வாகிகள் திரு. கயிலைமணி முனுசாமி முதலியார், திரு. சென்னியப்ப முதலியார், திரு. கதிர்வேல் கவுண்டர் ஆகியோர் வழிகாட்டி உதவினர். சட்ட ரீதியாக வழக்கறிஞர் திரு. என்.பி.பழனிசாமி உள்ளிட்டோர் உதவினர். தங்களை முன்னிறுத்திக் கொள்ளாமல் மேலும் பலர் தங்களது பங்களிப்பால் நில மீட்பு இயக்கத்திற்கு உதவியுள்ளனர்.

இந்நிலையில், நமது போராட்ட வழிமுறைகளை காலத்துக்கு ஏற்றவாறு மாற்றவேண்டிய தேவையை உணர்ந்தோம். நம்முடன் இணைந்த புதிய நண்பர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பணியாற்றினார்கள். அடுத்து, பெண்களின் பங்களிப்பை உறுதிப்படுத்த திட்டமிட்டோம்.

இதற்கென நடத்திய கையெழுத்து இயக்கத்தில் பெண்களின் ஆர்வம் உற்சாகம் அளிப்பதாக இருந்தது. ஆண்களைவிட பெண்கள் அதிக வேகமாகவும், உத்வேகத்துடனும் பணியாற்றினர். நாம் நடத்திய பேரணிகள், 1008 பால்குட ஊர்வலம், உண்ணாவிரதம் அனைத்திலும் பெண்களின் பங்கேற்பு, பிரமிக்கச் செய்தது. அம்மன் மீதான பக்தி அவர்களை ஒருங்கிணைத்தது.

கே: கோயில் நில மீட்பு இயக்கத்தில் திடீரென்று 80 அடி திட்டச் சாலை நுழைந்தது எப்படி?

ப: இந்தக் கோரிக்கையும் பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டது தான். பிரப் சாலையில் மேம்பாலத்தை அரசு கட்டத் துவங்கிய போது, அதனால் கோயிலுக்கு ஏற்படவுள்ள ஆபத்து உணரப்பட்டது. அதன் விளைவாக, ஏற்கனவே இருந்த கோரிக்கை முன்னிலைப் படுத்தப்பட்டது. உண்மையில் இந்த திட்டச் சாலை நடைமுறைக்கு வந்தால், ஈரோடு நகரின் போக்குவரத்து நெருக்கடி வெகுவாகக் குறையும்; தற்போது கட்டப்படும் மேம்பாலமே தேவைப்படாது.

கே: உங்கள் இயக்கத்தின் போராட்டங்களை திட்டமிடுவது யார்?

ப: நாங்கள் ஒரு குழுவாக இயங்குகிறோம். நகரின் முன்னணி பிரமுகர்கள், சமுதாயத் தலைவர்கள், ஆன்மிகப் பெரியவர்களின் ஆலோசனை பெற்று, அனைவரும் ஒன்றாக ஆலோசித்தே முடிவுகளை எடுக்கிறோம். அம்மன் அருள் தான் எங்களை ஒன்றிணைத்துள்ளது என்று எண்ணுகிறேன்.

கே: உங்கள் போராட்டத்தால் அரசின் நிலையில் எந்தவகையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது?

ப: இதுவரை இந்து பக்தர்களின் கோரிக்கைகளை அரசோ, மாவட்ட நிர்வாகமோ கண்டுகொண்டதில்லை. அந்நிலை இப்போது மாறியிருக்கிறது. நாம் பல மட்டங்களிலும் அரசுடன் தொடர்பு கொண்டுள்ளோம். தனிப்பட்ட முறையில் நமது கோரிக்கைகளை ஆதரிக்கும் அரசியல்வாதிகள் பலரும், அரசியல் காரணங்களுக்காக நம்மை எதிர்க்கின்றனர் என்பதை தனிப்பட்ட சந்திப்புகளில் உணர்ந்தோம். தற்போது அவர்களது பார்வையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அம்மன் பக்தர்களும் வாக்குவங்கியாக மாற முடியும் என்பதை அனைவரும் தற்போது அறிந்துள்ளனர். ஈரோட்டில் நாம் நடத்திய கடையடைப்புக்கு கிடைத்த மாபெரும் வெற்றி பலரை யோசிக்கச் செய்துள்ளது.

உண்ணாவிரதம், பேரணிகளில் பல சமூக இயக்கங்கள் அம்மனுக்காக நம்முடன் கைகோர்த்தன. இது முன்பு கண்டிராத காட்சி. அரசு தற்போது சிந்திக்கத் துவங்கியுள்ளது என்பதற்கு அடையாளம் தான், 80 அடி திட்டச் சாலை தொடர்பாக வெளியிட்டுள்ள அரசாணை.

இந்த நேரத்தில் கிறிஸ்தவ சகோதரர்களுக்கு ஒரு வேண்டுகோள்: மாரியம்மன் பக்தர்களின் உணர்வுகளை மதித்து, அவர்கள் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் செய்த ஆக்கிரமிப்பு நியாயமானதல்ல என்பதை ஏற்று, கோயில் நிலத்தை அவர்களாகவே முன்வந்து தர வேண்டும். ஈரோடு மக்களில் அவர்களும் அங்கம் என்ற அடிப்படையில், 80 அடி திட்டச் சாலை நிறைவேறவும் அவர்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.

கே: உங்கள் அடுத்தகட்டப் போராட்டம் எப்போது?

ப: கடைசியாக நமது செயல்வீரர்கள் 30 பேர் இருந்த காலவரையற்ற உண்ணாவிரதத்திற்குப் பிறகு அரசின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. அரசுக்கும் பல்வேறு நிர்பந்தங்கள் உள்ளன என்பதை நாம் அறிவோம். எனவே அவர்கள் நல்ல முடிவை அறிவிக்க சில நாட்கள் காத்திருப்போம். அதன் பிறகு, இயக்கத்தின் செயற்குழு கூடி அடுத்தகட்ட நடவடிக்கையை முடிவு செய்யும். இப்போதைக்கு, ஏற்கனவே நடத்திய கையெழுத்து இயக்கத்தை மேலும் வேகமாக நடத்தி, விரைவில், மாவட்ட ஆட்சியரிடம் அவற்றை ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளோம்.

சுமை தூக்குவோர், ஆட்டோ ஓட்டுநர்கள், வியாபாரப் பெருமக்கள், பெண்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், பல சமூக இயக்கங்களின் பங்களிப்பால் தான், அம்மன் கோயில் நில மீட்பு இயக்கம் சாதிக்க முடிந்துள்ளது. அவர்கள் அனைவரது ஒத்துழைப்புடனும், ஆலோசனைகளுடனும் நமது அடுத்தகட்டப் போராட்டம் நடக்கும். அதற்குள் அரசு நல்ல முடிவு அறிவிக்கும் என்றே நான் நம்புகிறேன்.

ஏனெனில், இந்தப் போராட்டம், மதப் போராட்டமல்ல; மண்ணுக்கான போராட்டம். அருள்மிகு பெரிய மாரியம்மன் கோயில் நிலத்தை மீட்பதற்கான போராட்டம். இந்தப் போராட்டத்தை அம்மனே இதுவரை வழிநடத்தி உள்ளாள். இனியும் அவளே நமது பாதையைக் காட்டுவாள். அம்மன் அருளால், அம்மன் கோயில் நிலத்தை மீட்க நமது போராட்டம் தொடரும்.


பெட்டிச் செய்தி

80 அடி திட்டச் சாலையின் முக்கியத்துவம்

பெரிய மாரியம்மன் கோயில் நில மீட்பு போராட்டத்தால் ஈரோடு மக்களுக்கு கிடைத்த கூடுதல் நன்மையில் ஒன்று 80 அடி திட்டச் சாலை. இந்தச் சாலை அமையுமானால், பிரப் சாலையிலிருந்து ரயில்நிலையச் சாலைக்கு நேரடியாகச் செல்ல முடியும். இதனை, 1970-ல் நகரமைப்பு ஆணையம் திட்டமிட்டது. ஏற்கனவே இருந்த பிடாரியம்மன் கோயிலுக்கு செல்லும் வழியே 80 அடி திட்டச் சாலையாகத் திட்டமிடப்பட்டது. இதற்கு 1978-ல் அரசு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ஈரோடு நகரமன்றமும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது (எண்: 266/28.2.2007).

தற்போது இச்சாலையின் பாதிப் பகுதி உபயோகத்தில் உள்ளது. சி.எஸ்.ஐ. ஆக்கிரமிப்பில் உள்ள மீதி சாலையின் இறுதியில் சிலுவை நாட்டு தடுக்கப்பட்டுள்ளது. அரசு நினைத்தால், ஆக்கிரமிப்பை ஒரே நாளில் அகற்றி போக்குவரத்தை சீராக்க முடியும். ''நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக பல இந்து கோயில்களை எந்த விசாரணையும் இன்றி அகற்றும் அரசால், அரசு திட்டச் சாலையில் உள்ள இடையூறுகளை அகற்ற முடியாதா?'' என்று கேட்கிறார், இந்து முன்னணியின் மாநில துணைத் தலைவரும், கோயில் நில மீட்பு இயக்கத்தின் துணைத் தலைவருமான, திரு. பூசப்பன்.

பெட்டிச் செய்தி ... 2

மக்கள் பிரதிநிதிகளும் பக்தர்கள் பக்கம்.

பெரிய மாரியம்மன் கோயில் நில மீட்புக் குழுவினர், ஈரோடு மாநகர் மன்ற உறுப்பினர்கள் அனைவரையும் தனித்தனியே சந்தித்து, தங்கள் கோரிக்கைகளை விளக்கினர். இதன் விளைவாக, 29.6.2010-ல் நடத்தப்பட்ட மாநகர் மன்ற கூட்டத்தில் பங்கேற்ற 45 உறுப்பினர்களில் 32 பேர் மேம்பாலத்திற்கு எதிராகவும், 80 அடி திட்டச் சாலைக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தனர். குறிப்பாக, மாநகர மேயர் திரு குமார் முருகேசன் (தி.மு.க), துணை மேயர் திரு.பாபு வெங்கடாசலம் (காங்கிரஸ்) இருவரும், பக்தர்கள் கோரிக்கைக்கு ஆதரவாகப் பேசினர். இதுகுறித்து துணை முதல்வர் கவனத்திற்கு கொண்டுசெல்வதாக மேயர் உறுதியளித்தார்.

அரசியல் கட்சிகளின் ஆதரவு:

ஸ்ரீ மாரியம்மன் கோயில் நில மீட்பு இயக்கத்தில் ஆரம்பம் முதற்கொண்டே பாரதீய ஜனதா கட்சி பக்தர்களுக்கு ஆதரவாக இருந்து வருகிறது. அக்கட்சியின் அனைத்து நிலை தலைவர்களும் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிற கட்சியினரும் கூட வெளிப்படையாக இப்போராட்டத்தை எதிர்க்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியம் சாமி, பக்தர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். தமிழக அரசின் தலைமை செயலாளர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு அவர் தந்தி கொடுத்தார். தவிர, மேம்பாலத்துக்காக மாரியம்மன் கோயிலை அப்புறப்படுத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். அப்போது, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அளித்த உறுதிமொழியை அடுத்து, மனு கைவிடப்பட்டது.----------------------------------------------------------------------------------------------


-ஈரோடு சு.சண்முகவேல் உதவியுடன்.

(படம்: விசு வீடியோஸ், ஈரோடு)


நன்றி: விஜயபாரதம் (06.08.2010)..