திங்கள், டிசம்பர் 24, 2012

குஜராத் வெற்றியும் இமாச்சல் தோல்வியும்


நாடு முழுவதும் எதிர்பார்த்த குஜராத் தேர்தல் முடிவு வெளிவந்துவிட்டது. அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட முடிவே என்றாலும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் தொடர் வெற்றி, தேசிய அரசியலில் புது ரத்தம் பாய்ச்சுவதாகவே   அமைந்திருக்கிறது. எனினும் இமாச்சலில் பாஜகவின் தோல்வி, வெற்றிக் கொண்டாட்டங்களை மட்டுப்படுத்தி விட்டது.

நமது தேசத்தின்  துரதிர்ஷ்டமோ, பாஜகவின் துரதிர்ஷ்டமோ தெரியவில்லை. பாஜக  இரண்டு அடி ஏறினால் ஓரடி சறுக்குகிறது. இதனால் தான் பாஜகவின் தேசிய அளவிலான  வெற்றி பவனி தள்ளிப்போய்க் கொண்டிருக்கிறது. இமாச்சலில் ஒவ்வொரு  தேர்தலில் ஆட்சி மாற்றம் சகஜமே என்றாலும், குஜராத்தில் சாதிக்க  முடிந்த பாஜகவால் இமாச்சலில் ஏன் சாதிக்க முடியவில்லை என்ற கேள்வி  எழுவது  இயற்கையே.

முதலில் குஜராத்தில் பாஜக பெற்ற வெற்றியின் காரணிகளைக் காண்போம். அப்போது இமாச்சல் தோல்வியின் காரணங்கள் நமக்கு தெளிவாகவே  புலப்படும்.

குஜராத்தில் பாஜக தொடர்ந்து ஐந்தாவது முறையாக வென்றிருக்கிறது. இதில் மோடி மட்டுமே  முதல்வராக மூன்றாவது முறையாக வெற்றிவாகை சூடி இருக்கிறார். அங்கும் அரசுக்கு எதிரான அதிருப்தி அலை சிறிது இருக்கவே செய்தது. இமாச்சல் போலவே அங்கும் பாஜவுக்குள் கோஷ்டிப்பூசல் இருந்தது. சொல்லப்போனால் முன்னால் முதல்வர் கேஷுபாய் படேல் துவங்கிய குஜராத் பரிவர்த்தன் கட்சி பாஜகவின் வெற்றிவாய்ப்புகளை  மழுங்கடித்துவிடும் என்றே நம்பப்பட்டது. இந்த அதிருப்தி அலைகளைத் தாண்டித் தான், மோடி தனது தனிப்பட்ட செல்வாக்கை நிரூபித்து பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தி இருக்கிறார்.

இதற்குக் காரணம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற மோடியின் தீவிர முனைப்பும் துடிப்புமே என்றால் மிகையில்லை. இது பாஜகவில் பிற தலைவர்களிடம் குறைவாக உள்ளது என்பதையே இமாச்சல் தோல்வி காட்டுகிறது.

கடந்த ஓராண்டாகவே குஜராத் முதல்வர் மோடி, வேறு மாநில நிகழ்சிகளுக்கோ தேசிய அளவிலான நிகழ்சிகளுக்கோ செல்லவில்லை. அவரது கவனம் முழுவதும் குஜராத் மீதே குவிந்திருந்தது ஒரு நாளுக்கு குறைந்த பட்சம் 16 மணி நேரம் மாநில அரசியல், மக்கள் பிரச்னை குறித்தே அவர் சிந்தித்தார். அதற்கான திட்டங்களை செயல்படுத்தினார். அவரை ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் வில்லனாக சித்தரித்து வசை பாடிக் கொண்டிருந்தபோது அவர் கருமமே கண்ணாக மக்கள் நலத் திட்டங்களில் கவனம் கொடுத்துக் கொண்டிருந்தார். தவிர தனக்கே உரித்தான ராஜ தந்திரங்களைப் பயன்படுத்தி தன்னை எதிர்த்த ஊடக வட்டத்திலும் ஊடுருவினார். அவரது சமூக வலைத்தள பங்கேற்பு அதற்கான சாத்தியங்களை உருவாக்கியது.

மாற்று ஊடகமான இணையத்தை, குறிப்பாக டிவிட்டரையும் இணைய தளத்தையும், வலைப்பூவையும் அவர் திறம்படக் கையாண்டார். தன்னை எவரும் மின்னஞ்சலில் எளிதாகத் தொடர்பு கொள்ள முடியும் என்ற நிலையை ஏற்படுத்தியதால், இளைய தலைமுறையிடம் அவரால் மிகவும் நெருங்க முடிந்தது. இணைய சேவையை ஆட்சி நிர்வாகத்திலும் மக்கள் தொடர்பிலும்  சிறப்பாகப் பயன்படுத்திய ஒரே முதல்வர் மோடியாகத் தான் இருப்பார் . இந்த மாற்று ஊடகத்தில் அவர் செலுத்திய செல்வாக்கே பிற பாரம்பரிய ஊடகங்களை சிந்திக்கச் செய்து, அவர்களது திசை மாற்றத்தைத் தடுத்தது. இதுவரை அவரை வசை பாடிய ஊடகங்கள், அவரது மேதா விலாசத்தைப் புரிந்துகொள்ள முயன்றன. அதற்கேற்ப அவரது ஆட்சியும் பல சாதனைகளை நிகழ்த்தியது.

குஜராத் மாநிலத்தில் மோடி நிகழ்த்தியுள்ள சாதனைகள் பல. சாலை உள்கட்டமைப்பு வசதி பெருகியது,  தடையற்ற மின்சாரம் வழங்கியது,  மாநிலத்துக்குள் பாயும் நதிகளை இணைத்தது, வறண்ட கட்ச் பகுதிக்கு குடிநீர் வழங்கியது, உலக அளவிலான  பல  நிறுவனங்களை குஜராத்தில் முதலீடு செய்ய வைத்தது, தொழில்துறையில்  மாபெரும்  முன்னேற்றம் - எனப் பல சாதனைகளை சொல்லிக்  கொண்டே  போகலாம். மொத்தத்தில்  தொழில் துறையினருக்கு இணக்கமான  அரசாகவும் மக்களுக்கு நலம்  விளைக்கும் அரசாகவும், வெளிப்படையான, ஊழலற்ற   அரசாகவும் மோடியின் தலையிலான பாஜக அரசு திகழ்ந்தது.  அதன் விளைவை மக்கள் தேர்தலில் காட்டி இருக்கின்றனர்.

இத்தனைக்கும் 'மரண  வியாபாரி', 'பொய்யர்', மோசடிப் பேர்வழி’ என்றெலாம்  காங்கிரஸ்  தலைவர்களால் அவர் வசை பாடப்பட்டார். சிறுபான்மையினரின்  வாக்குகளைக்  கவர்ந்து, மக்களைப் பிளவுபடுத்தி ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தீவிரமாக முயன்றது. இலவச அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன.  ஆனால், மோடி நிலைகுலையவில்லை. தன மீதான எதிரிகளின்  ஏச்சுக்களை  நாசூக்கான கேலி, கிண்டல் மூலமாகத்  தாண்டினார். தான் செய்த பணிகளே தன்னைப் பற்றிப் பேசும் என்ற தன்னம்பிக்கையுடன் அவர்  மக்களை அணுகினார். ''குஜராத்தின் ஆறு கோடி மக்களே தனது  எஜமானர்கள்''  என்றார். அதன் விளைவு தேர்தல் களத்தில் தெளிவாகவே தெரிந்தது.

தேர்தல் பிரசாரத்தில் மோடிக்கு எதிராக சரிநிகராக  நிற்கும் எவரும் குஜராத்தில் தென்படவில்லை. டில்லியிலிருந்து வந்த பிரதமர் மன்மோகனும்  காங்கிரஸ் தலைவி  சோனியாவும் அவரது புதல்வர் ராகுலும் மோடி மீது வீசிய அம்புகள் முனை மழுங்கி  மலர்களாயின. குஜராத் மாநிலம் 16 அடி பாய்ச்சலில்  சென்று கொண்டிருப்பதை மக்கள் உளப்பூர்வமாக உணர்ந்திருந்த நிலையில், அங்கு சென்று குஜராத் மக்கள்  ஏமாற்றப்படுவதாக பிலாக்கணம் பாடிய சோனியா கும்பலை மக்கள்  கண்டுகொள்ளவே  இல்லை. அவர்கள் சோனியா கும்பலின் பேச்சை  நகைச்சுவையாகவே எடுத்துக் கொண்டனர். அவர்கள் பார்வையில் மோடியின் மதிப்பு  மேலும் உயர்ந்தது. இவ்வாறு தான் குஜராத்தில் பாஜக வசமானது வெற்றி.

ஆனால், இமாச்சலில் நல்லாட்சி செய்தும் பிரேம் குமார் துமல் தோற்றிருப்பது அரசியலை புரியாத புதிர் ஆக்கி இருக்கிறது. உண்மையில் இமாச்சல் அரசு மீது ஊழல் புகார்களும் இல்லை. அங்கு கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் பாஜக பல சாதனைகளை செய்திருக்கிறது. இருப்பினும் ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அலையில் இருந்து துமலால் மீள முடியவில்லை. இதற்கு மோடி போன்ற செல்வாக்கான ஆளுமையாக மாநில முதல்வர் துமலால் மாற முடியவில்லை என்பதையே காரணமாகச் சொல்லலாம். ஏனெனில் ஊழல் புகார்கள் பல சுமத்தப்பட்ட வீரபத்திர சிங்கால் அம்மாநில மக்களின் நம்பிக்கையைப் பெற முடிகிறது; ஊழல் புகார்கள் அற்ற  பிரேம் குமார் துமல்   ஆட்சியை இழக்கிறார் எனும்போது, பாஜகவின் செயல்முறையில் தான் குறைபாடு இருக்க வேண்டும்.

குஜராத்தில் பாஜக பெற்ற வெற்றி நரேந்திர மோடி என்ற தனி மனிதரின் வெற்றி. அவரை உருவாக்கியது ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் பாஜகவும் தான். ஆனால், தனது தனிப்பட்ட வளர்ச்சியால் தான் சார்ந்த இயக்கங்களுக்கு அவர் வலுக் கூட்டி இருக்கிறார். இதைத் தான் பிரேம் குமார் துமல், வசுந்தரா  ராஜே, அர்ஜுன் முண்டா  போன்றவர்களால் செய்ய முடியவில்லை. இது குறித்து கட்சி ஆராய வேண்டும்.

மோடியின் வளர்ச்சிக்கு பின்னணியில் அவரை சுதந்திரமாக இயங்க அனுமதித்த கட்சி இருந்தது. கட்சியை மீறி மோடி வளர்ந்தாலும் தனது வெற்றி பாஜக தொண்டர்களின் வெற்றி என்றே குறிப்பிட்டிருப்பதை இங்கு நினைவு கூர்வது நல்லது. இதே நிலையை  அனைத்து மாநிலங்களிலும் பாஜக அனுமதிக்க வேண்டும். ஒவ்வொரு  மாநிலத்திலும்  தகுதியான தலைவரைத் தேர்வு செய்து  ஒப்படைத்து விட்டால்,  அங்கு  நிகழும் அனைத்து சாதக பாதகங்களுக்கும் அவரையே பொறுப்பாக்கி ஒரு ஐந்தாண்டு  காலத்துக்கு  அவரை சுயமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். அப்போது தான் 1990 காலகட்டத்தில் இருந்த நிலையை பாஜக அடையும்.

‘பாஜகவில் தலைவர்களுக்கு பஞ்சமில்லை; தலைமை  தாங்கும் பண்பு தான் குறைந்து விட்டது’ என்று பலரும் விமர்சிக்கும் நிலையில், இது ஒன்றே வழி. ஏனெனில்,  மூத்த தலைவர்  அத்வானியால் ஏற்கனவே வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்ட முறை இது.

வெற்றியில் கூத்தாடுவதும் தோல்வியில் இடிந்துபோவதும் நல்ல செயல்வீரர்களுக்கு இலக்கணமல்ல. அந்த வகையில் தற்போதைய தேர்தலில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பை தலை வணங்கி ஏற்று, முன்னெப்போதையும் விட தீவிரமாக களப்பணி  புரிய பாஜக தயாராக வேண்டும்.

''இப்போதும் கூட காங்கிரஸ் தான் வென்றிருக்கிறது'' என்று ப.சி.யும், ''காங்கிரஸ் வளர்கிறது; பாஜக தேய்கிறது'' என்று மு.க.வும் கூறி இருப்பது எதனால் என்று  பாஜக சிந்திக்க வேண்டும்.  சரித்திரம் வெற்றியாளர்களையே நினைவில் வைத்திருக்கும்- மோடி போல. இப்போது மோடியை பிரதமர் பதவிக்கான தகுதியான நபராக பலர் முன்னிறுத்திவரும் சூழலில், பாஜகவின் தயக்கம் அல்லது முடிவு எடுக்க முடியாத தன்மை, கட்சிக்கு நல்லதல்ல. இதுகுறித்து கட்சியோ, மோடியோ தெளிவான அறிவிப்பை விரைவில் வெளியிடுவது அனைவருக்கும் நல்லது. இதுவும் குஜராத், இமாச்சல் தேர்தல் முடிவுகள் அளிக்கும் பாடம் எனில் மிகையில்லை.

---------------------------
விஜயபாரதம் (04.01.2013)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக