செவ்வாய், மே 03, 2011

சேவைகளில் வாழும் பாபாதன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயிர் எல்லாம் தொழும்

(குறள்- 268)


பொருள்: தவ வலிமையால் தன்னுயிர், தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் அவனுடைய பெருமையை உணர்ந்து வணங்கும்.

'தவம்' என்ற தலைப்பில் தெய்வப்புலவர் திருவள்ளுவர், தபஸ்விக்கு அளித்துள்ள விளக்கம் இது. இந்த இலக்கணத்திற்கு சான்றாக வாழ்ந்து வழிகாட்டி மறைந்திருக்கிறார், பகவான் சத்யசாயி என்று அனைவராலும் அன்புடன் வணங்கப்பட்ட சத்ய சாய்பாபா.

ஆந்திர மாநிலத்தில் புட்டபர்த்தி என்ற சிற்றூரில் ஓர் எளிய குடும்பத்தில் எட்டாவது குழந்தையாகப் பிறந்த சத்ய நாராயண ராஜு, பாபா ஆனது தெய்வீக மகிமை. சிறு வயதிலேயே தனது முற்பிறப்பின் (ஷீரடி பாபா) ரகசியத்தை வெளிப்படுத்திய அவர், தனது சித்து விளையாட்டுகளால் பிரபலம் அடைந்தார். அதன்மூலமாக பெரும் பக்தர் குழாமை உருவாக்கிய அவர், அந்த பக்தர்களின் சக்தியை நாட்டு நலனுக்கும் எளியவருக்கான சேவைக்கும் அர்ப்பணித்தார்.

பாரதம் மட்டுமல்லாது, உலகின் பல பாகங்களிலிருந்தும் பக்தர்கள் புட்டபர்த்தி நோக்கி வந்தனர். அந்த கிராமத்தை பாரதத்தின் பெருமை மிகு நகரமாக மாற்றினார் பாபா. கல்வி, மருத்துவம், முதியோர் சேவை, குடிநீர் வசதி, என பாபாவின் சேவைகள் அங்கிருந்து தான் பல்கிப் பெருகின. பாபா அளித்த நம்பிக்கையால் வாழ்வைப் புதுப்பித்துக் கொண்ட பக்தர்கள் பல கோடி. பாபா அளித்த உத்வேகத்தால் சேவை ஆற்றிய பக்தர்களின் எண்ணிக்கை பல கோடி. பாபாவின் அருளாசியால் உயர்ந்த பக்தர்களின் எண்ணிக்கை பலகோடி.
அக்னியானது தன்னை நெருங்கும் எதனையும் ஆகுதியாக்கிக் கொண்டு அதனையும் அக்னியாக ஆக்குவது போல, பாபாவின் தவ வாழ்க்கை அமைந்திருந்தது. அந்த அக்னி ஜுவாலை உலகம் முழுவதும் ஆன்மிக நேயத்தை அருட்கதிராக வளர்த்துக் கொடுத்துவிட்டு, தனது கடமையை முடிந்துவிட்டு இறைவன் தாளில் ஐக்கியமாகி விட்டது.

***


பாரதத்தில் ஹிந்து சந்நியாசி ஒருவர் உலகப்புகழ் பெற்று வருவது கண்டு அதிர்ந்த கத்தோலிக்க அமைப்பு, பாபாவின் பின்னணியை அறிந்துவர இத்தாலி நாட்டு பாதிரியார் டான் மரியோ முசாலினி என்பவரை 1970 களில் அனுப்பியது. அவரும் புட்டபர்த்தி வந்து பாபாவின் ஆசிரமத்தில் பக்தராகச் சேர்ந்தார். பாபாவைப் பின்தொடர்ந்து உளவறிய வந்த அவர், பாபாவின் அருளாசியால் ஈர்க்கப்பட்டார். பாபாவை பின்தொடர்ந்து அவரது ரகசியம் அறிய வந்த முசோலினி, பாபாவின் மெய்யடியாராக மாறிவிட்டார். பூவோடு சேரும் நாறும் மணம் பெறுவதுபோல, முசோலினியின் மனம் பக்குவம் அடைந்தது. கிறிஸ்தவ வெறியுடன் வந்த அவர், மதம் கடந்த அருளாளரின் அன்பால் கட்டுண்டார். பின்னாளில் அவர் பாபாவின் வெளிநாட்டு பக்தர்களில் பிரதான இடம் பெற்றார்.

அவர் தனது அனுபவங்களை 'CATOLIC PRIEST VISIT BABA' என்ற புத்தகமாக எழுதி இருக்கிறார். அதில் பாபா தனது மனத்தில் ஏற்படுத்திய மாற்றங்களை விளக்கமாக எழுதி இருக்கிறார். உளவறிய வந்தவரின் மனத்தைத் தான் பாபா மாற்றினாரே ஒழிய, அவரது மதத்தை மாற்றவில்லை. இதுவே பாபாவின் தனிப்பெருமை. 'இறைவனை எப்பெயரிட்டு அழைத்தாலும் இறைவன் ஒருவனே' என்ற சாமானிய ஹிந்துவின் நம்பிக்கையே பாபாவிடமும் பிரதிபலித்தது. பாரத மகிமையும் பாபாவின் பெருமையும் உணர்ந்தார் முசோலினி.


***


புட்டபர்த்தியில் பாபாவின் பக்தர்கள் வழங்கிய பலகோடி நிதியில் பிரமாண்டமான அதிநவீன மருத்துவமனை கட்டப்பட்டு இயங்கி வருகிறது. பெங்களூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் கூட சாயி சேவா சமிதியின் மருத்துவமனைகள் உள்ளன. இந்த மருத்துவமனைகளில் தினமும் பல நூறு பேருக்கு அரிய அறுவை சிகிச்சைகள் இங்கு அளிக்கப்படுகின்றன. இந்த சிகிச்சையை சேவையாக அளிக்க உலகம் முழுவதிலுமிருந்து பிரபல மருத்துவர்கள் பலர் வந்து சென்று கொண்டே இருக்கின்றனர்.

இந்த மருத்துவமனைகளில் மருத்துவர், தாதிகள், சுகாதாரப் பணியாளர்களாக சாயி பக்தர்கள் தன்னார்வலர்களாக குறிப்பிட்ட காலம் தங்கி பணியாற்றுவர். அதன் மூலமாக சாயி பக்தர்கள் மன நிறைவு பெறுவர். இந்த ஏற்பாடு பாபாவின் தன்னிகரற்ற தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்துகிறது. தன்னிடம் ஆசி வேண்டி பக்தராக வந்த மக்களை மானுட சேவைக்கு மடை மாற்றும் திறம் அவரிடம் இருந்தது. ‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்பதை எளிமையாக தனது பக்தர்களுக்கு பாபா புரியச் செய்தார்.

சத்யசாயி மருத்துவமனைகளில் நோயாளி யார், அவருடைய மதம் என்ன, ஏழையா பணக்காரனா என்றெல்லாம் பார்க்காமல் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சைக்குப் பிறகு மதம் மாற்றும் பிற மதங்களின் சேவை அமைப்புகளுக்கு நேர் மாறாக, எந்த பிரதிபலனும் பாராமல், வலதுகை கொடுப்பது இடது கைக்கு தெரியாத வகையில், எந்தக் கட்டணமுமின்றி, எந்த நிபந்தனையுமின்றி, எந்த உள்நோக்கமும் இன்றி சேவை செய்து வருகின்றன, சாயி சேவா சமிதி மருத்துவமனைகள்.


பல லட்சம் செலவாகும் சிக்கலான அறுவை சிகிச்சைகள் முதற்கொண்டு சாதாரண காய்ச்சல் வரை இலவச சிகிச்சை அளிப்பது சாயி மருத்துவமனைகளின் தனிச்சிறப்பு. அநேகமாக உலகில் வேறு எங்கும் இத்தகைய முற்றிலும் இலவச சேவை (அரசு மருத்துவமனைகளில் கூட) கிடையாது என்றே சொல்லலாம். இதிலும் சிபாரிசு, பிரபலங்களுக்கு முன்னுரிமை என்ற எந்த சலுகையும் கிடையாது.


முதியோர் காப்பகங்களையும் பசு காப்பகங்களையும் சாயி பக்தர்கள் நடத்துகின்றனர். ஆரம்பப் பள்ளி முதல் உயர்கல்வி வரை பாபாவின் அறக்கட்டளை செயல்பாடாத கல்வித்துறையே இல்லை எனலாம். குழந்தைகளிடையே தேசபக்தியையும் தெய்வ பக்தியையும் வளர்க்க பாபா உருவாக்கிய 'பால விகாஸ்' அமைப்பு இளைய தலைமுறைகளிடையே நன்னெறிகளை வளர்க்கிறது. உதவி தேவைப்பட்டோருக்கும் உதவும் நல்லுள்ளம் கொண்டோருக்கும் ஓர் இணைப்புப் பாலமாகவும் பாபா விளங்கினார். பாபாவின் ஆசியுடன் துவங்கப்பட்ட சேவை அமைப்புகள் ஏராளம். அதில் பலனடைந்தோர் பலகோடி.


***


கடந்த பிப்ரவரி மாதம் கர்நாடகா மாநிலம், மங்களூரில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் அகில பாரத பிரதிநிதி சபா நடைபெற்றது. அதன் முடிவில், புட்டபர்த்தி சென்று சாயிபாபாவை சந்தித்து ஆசி பெற சங்கத்தின் தலைவர்கள் திட்டமிட்டனர். அதன்படி புட்டபர்த்தி சென்ற சங்கத்தின் அகில பாரத அதிகாரிகள் அனைவருக்கும் பிரத்யேக சந்திப்புடன் அருளாசி வழங்கினார், பாபா. அந்த சந்திப்பின்போது நாட்டைப் பற்றிய கவலைகளைப் பகிர்ந்து கொண்டார் பாபா.

விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் மீது பாபாவுக்கு அலாதி பிரியமுண்டு. பல முக்கியமான விஷயங்களில் சிங்கால் பாபாவின் வழிகாட்டுதல்களைப் பெற்றிருக்கிறார். சிங்கால் ஒருமுறை கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். இதனை அறிந்த பாபா, சிங்கால் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனைக்கே தொடர்புகொண்டு நலம் விசாரித்தார்; அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவரிடமும் ஆலோசனை வழங்கினார். பாபாவின் அன்பை வெளிப்படுத்தும் இதுபோன்ற பல தனிப்பட்ட நெகிழ்ச்சியான நிகழ்வுகள் பல உண்டு.


சத்ய சாய்பாபாவின் மதம் அன்பு மட்டுமே. அது பாரதத்தின் சனாதன தர்மத்திலிருந்து திரட்டப்பட்ட ஞானத்தால் விளைந்தது. அவர் ஒருபோதும் தனது பிற மத பக்தர்களை இந்து மதத்திற்கு மாற்ற முயலவில்லை. அதனால் தான் உலகம் முழுவதிலுமிருந்து பல கோடி பக்தர்கள்- மதத் தளைகளை மீறி - அவரை நாடி வந்தனர். ஆயினும் தனது பக்தர்களுக்கு பாபா அருளிய பொன்மொழி நாடு, மதம், மொழி ஆகியவற்றில் பிடிப்புடன் இருக்குமாறு வழிகாட்டுகிறது. சாயி சமிதி நடத்திய மாணவர் விடுதியில் படித்த மாணவர்களிடம் பேசிய பாபா, ''படிப்பில் மட்டுமின்றி நமது நாடு, மொழி, மதம் மீதும் பற்றும் மரியாதையும் கொள்வது அவசியம். அதுவே நமக்கு நம்பிக்கையை வளர்க்கும்'' என்றார்.

குருட்டுத்தனமான மதவெறி, மொழிவெறியைக் கண்டித்த பாபா, அதே சமயம் பாரம்பரியம் மீதான பற்று அவசியம் என்பதையும் தனது உபதேசங்களில் வலியுறுத்தினார். ''அனைவரையும் நேசியுங்கள்; அனைவருக்கும் சேவை செய்யுங்கள்; எல்லோருக்கும் உதவுங்கள்; எவரையும் வெறுக்காதீர்கள்'' என்பதே பாபாவின் பிரதான உபதேசம். இந்த பரந்த மனப்பான்மையே அரசியல் வேறுபாடுகளை மீறி நாட்டின் அனைத்து அரசியல் தலைவர்களையும் அவரிடம் ஈர்த்தது.


***


நாட்டில் சுனாமி, வெள்ளச்சேதம், நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்கள் தாக்கிய காலங்களில் சாயி அமைதியின் சேவை அளப்பரியது. மறுசீரமைப்புப் பணிகளில் அரசு ஈடுபடுவதற்கு முன்னதாகவே பாபாவின் அறக்கட்டளை அங்கு ஈடுபடுவது வழக்கமாகவே இருந்து வருகிறது. ஆந்திராவின் அனந்தப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கும் தமிழகத்தின் சென்னைக்கும் குடிநீர் அளித்த பாபாவின் சேவை பெரிதாகப் பேசப்படுகிறது.


உண்மையில் இவற்றைவிட பல ஆயிரம் மடங்கு அதிகமான சேவைப்பணிகளை சாய்பாபா பக்தர்கள் செய்து வருகிறார்கள். வனவாசி மக்களின் மேம்பாட்டிற்காகவும், தாழ்த்தப்பட்ட மக்களின் உயர்வுக்காகவும் ஆரவாரமின்றி பணி புரியும் ஆயிரக் கணக்கான பாபா பக்தர்கள் உண்டு. பாபாவின் பக்தர்கள் தங்கள் இயல்பான நடைமுறையால் தீண்டாமையை ஒழித்திருக்கிறார்கள். பாபாவின் பக்தர்களிடையே எந்த அடிப்படையிலும் ஏற்றத் தாழ்வுகளே இல்லை.

மானிட வாழ்வின் பயன் மானுடம் பயனுற வாழ வைப்பதே. இது பாரதத்தில் பிறந்த அனைத்து மகான்களின் அமுத மொழி. அனைவரையும் இறைவனின் சொரூபமாக உணரும் ஆற்றல் அத்வைத சித்தாந்தத்தால் விளைவது. அதனையே பாபா பிரசாரம் செய்தார். தனது சத்யசாயி சேவா சமிதியின் இலச்சினையில் பல மதங்களின் சின்னங்களை இடம்பெறச் செய்த பாபா, அன்பே சமயங்களின் அடிநாதம் என்பதை வெளிப்படுத்தினார்.

மூத்தோரையும் நீத்தாரையும் வழிபடுவது நமது மரபு. ஆன்மிக அருளாளர்களை வணங்குவதும் நமது மரபு. அந்த மரபில் சாய்பாபாவையும் பகவானாக வழிபடுகின்றனர், அவரது பக்தர்கள். அவர்களைப் பொறுத்தவரை, பாபா நித்யவாசமாக அவர்களது மனத்தில் இருந்து வழிகாட்டுவார். ஆன்மாவுக்கு அழிவில்லை; பாபாவின் பிரேமைகளுக்கும் அளவில்லை.

--------------------------------------------

குறிப்பு: சாய்பாபா மகா சமாதியான தினம்: 24.04.2011

விஜயபாரதம் (13.05.2011)

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக