வெள்ளி, ஏப்ரல் 15, 2011

தேர்தல் ஆணையத்திற்கு கோடி நன்றி!

எந்த ஒரு செயலும் யாரால் பாராட்டப்படுகிறது அல்லது தூற்றப்படுகிறது என்பதைக் கொண்டே, அந்தச் செயலின் அவசியத்தையும் தன்மையையும் அறிய முடியும். தமிழகத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் கடைபிடித்த கட்டுப்பாடுகள் அரசியல்வாதிகளின் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளன.
குறிப்பாக, மூத்தத் தலைவரும் முதல்வருமான கருணாநிதி தேர்தல் ஆணையம் மீது மத்திய அரசிடம் புகாரே செய்தார். தேர்தல் ஆணையம் அளவுக்கு மீறி சென்றுகொண்டிருப்பதாகவும், இந்த நிலைமையை மத்திய அரசு மாற்ற வேண்டுமெனவும், தமிழக முதல்வர் கருணாநிதி (ஏப். 10) கூறினார். கடலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் திருவாளர் கருணாநிதி பேசியது:

''எதற்கும் ஓர் அளவு இருக்கிறது. நரிக்கு நாட்டாண்மை கிடைத்தால், கிடைக்கு 2 ஆடுகள் கேட்கும் என்பது ஒரு பழமொழி. அதேபோல தங்களுக்கு கிடைத்த அதிகாரத்தை நரிக்கு கிடைத்த நாட்டாண்மைபோல் கிடைக்கு 2 ஆடுகள் கிடைக்காதா என்று அந்த அதிகாரத்தை செலுத்திக்கொண்டிருப்பவர்களை- நான் உச்சத்தில் இருப்பவர்களை சொல்லவில்லை- உச்சத்தில் இருப்பவர்களுக்கு அடுத்து இருப்பவர்களை சொல்கிறேன். இவர்கள் செய்கிற அதிகாரத்தை பார்க்கிற போது என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

நான் மத்திய சர்க்காருக்கு சொல்கிறேன். தேர்தல் கமிஷன் நினைத்தால் பிரதமரைக்கூட கண்டிக்கலாம். பிரதமர் கூட தேர்தல் கமிஷனுக்கு அடங்கி நடக்க வேண்டியது தான், அதன் விதிமுறை அது தான். ஆனால் அப்படிப்பட்ட விதிமுறைகளை அப்படிப்பட்ட அதிகாரங்களை அப்படிப்பட்ட கட்டுப்பாடுகளை பெற்று இருக்கிற ஒரு மகத்தான நிறுவனம், புனிதமான நிறுவனம், என்று சொல்லப்படுகின்ற, அந்த தேர்தல் கமிஷனை எப்படி அமைப்பது? யார்- யாரைக்கொண்டு அமைப்பது, எந்த வகையில் அமைப்பது, அதற்குரிய அதிகாரங்களை எப்படி அமல்படுத்துவது என்பதையெல்லாம் கொண்ட ஒரு நிலையை இனியாவது ஏற்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்''

தமிழக முதல்வரின் பேச்சு வழக்கம் போல தெளிவில்லாதது போல இருந்தாலும் தேர்தல் ஆணையத்தைக் கண்டிப்பதில் தெளிவானது; குழப்பமாகத் தெரிந்தாலும், மக்களைக் குழப்புவதுதான் இதன் நோக்கம். கருணாநிதி தேர்தல் ஆணையத்தை வன்மையாகக் கண்டிக்கிறார் என்றாலே, அந்த அமைப்பு ஏதோ நியாயமான செயலில் ஈடுபடுகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. திட்டமிட்டபடி வாக்காளர்களுக்கு பணத்தை தண்ணீராக பட்டுவாடா செய்ய முடியாமல் தடுத்துவிட்ட தேர்தல் ஆணையம் மீது அவர் கோபம் கொள்வது இயல்பானதே.

இதற்கு மாறான காட்சியை எதிரணி முகாமில் காண முடிந்தது. அதிமுக, தேமுதிக, பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை வரவேற்றன. அவதூறு பிரசாரம் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்திற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டபோது மட்டுமே அதிமுகவும், தேமுதிகவும் ஆணையம் மீது அதிருப்தி தெரிவித்தன. அதற்கும் காரணம் உண்டு. விஜயகாந்தை விமர்சித்து கேவலமான பிரசாரம் செய்த நடிகர் வடிவேலுவைக் கண்டிக்க ஆணையம் ஆரம்பத்தில் நடவடிக்கை எடுக்காதது அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு ஏமாற்றம் அளித்திருந்தது. அதே சமயம் கருணாநிதி குடும்பம் குறித்த அவதூறு பிரசாரத்திற்காக எதிரணிக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

அவதூறு பிரசாரத்தைப் பொறுத்த மட்டிலும், அரசியல் கட்சிகள் நாணயமாகவும் நாகரிகமாகவும் நடப்பது அக்கட்சிகளின் பண்பட்ட தன்மையை வெளிப்படுத்தும், இதில் திராவிடக் கட்சிகளும் அதன் கூட்டாளிகளும் தோல்வியுற்றனர். வெற்றி ஒன்றே இலக்கான பின், எதிரணியை எந்த அளவிற்கு வசை பாட முடியுமோ, அந்த அளவுக்கு வசை பாடுவது வழக்கமாகி விட்டது. இதற்கு இரு கழகங்களின் பிரசார கருவிகளாக சன் டிவி குழுமம், ஜெயா டிவி குழுமம், கலைஞர் டிவி குழுமங்கள், கேப்டன் டிவி ஆகியவை பயன்படுத்தப்பட்டன. ஊடக உரிமை என்ற பெயரில் இந்த தொலைகாட்சி அலைவரிசைகள் நடத்திய அரசியல் பிரசாரத்தை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாதது ஏமாற்றம் அளிக்கிறது.

எனினும் வாக்காளர்களுக்கு லஞ்சப் பணம் பட்டுவாடாவை வெளிப்படையாக செய்ய விடாமல் முட்டுக்கட்டை போட்டதில் ஆணையத்தின் செயல்பாடு சிறப்பாகவே இருந்தது. ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் கணக்கின்றி பணம் கொண்டுசெல்வதை கட்டுப்படுத்த தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் நடத்திய சோதனை நடவடிக்கைகளின்போது பல கோடி பணம் பறிமுதல் ஆனது. இந்த சோதனைகளை ரூ. 33.11 கோடி பணமும் ரூ. 12.58 கோடி மதிப்புள்ள பரிசுப்பொருள்களும் பரிமுதலானதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறி இருக்கிறார். இதன் மூலமாக திமுகவினர் லஞ்சப்பணம் கொடுத்து வாக்காளர்களை வலைக்குள் சிக்க வைக்கத் திட்டமிட்டதை முளையிலேயே கிள்ளியது ஆணையம். எனினும் பணம் பட்டுவாடா நடக்காமல் இல்லை. ஆனால், ரகசியமாக ஒளிந்திருந்து இதைச் செய்ய வேண்டியதாகிவிட்டது. அந்த அளவில் தேர்தல் ஆணையம் தனது முதல் வெற்றியை ஈட்டிவிட்டது.

பணம் பட்டுவாடாவில் திமுகவினர் அளவிற்கு இல்லாவிட்டாலும் அதிமுகவும் பல இடங்களில் 'விரலுக்கு தகுந்த வீக்கம்' என்ற அளவில் பணம் விநியோகம் செய்தது. அதுவும் ரகசியமாகவே செய்யப்பட்டது. பணம், பரிசுப் பொருள்கள் வழங்கியபோது பிடிபட்ட அரசியல் கட்சியினர் மீது இம்முறை 975 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் நேர்மையாக நடத்தப்பட்டால், பலர் தண்டிக்கப்பட வாய்ப்புள்ளது. தேர்தலில் வெல்பவர் மீது இந்தக் குற்றம் உறுதியானால், அவரது வெற்றியே செல்லாததாக அறிவிக்கப்படவும் முடியும். அந்த அளவிற்கு தேர்தல் ஆணையம் வழக்கில் தீவிரம் காட்டுவதாகத் தெரியவில்லை. இப்பணியில் ஈடுபடுவோர் அனைவரும் சிறப்புப் பணியாக தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் என்பதே இதற்கு காரணம்.

ஆனால், வழக்கம் போல தேர்தல் அதிகாரிகள்; கருணாநிதியின் வசைகளுக்கு ஆளாகினர். திருச்சியில் (மார்ச் 25) பேசிய 'தமிழினத் தலைவர்' ''உயர்நீதி மன்றம் கண்டிக்கும் அளவுக்கு தேர்தல் ஆணையம் நடந்துகொள்கிறது என்றால் அது வருந்தத்தக்க ஒன்று. தேர்தல் ஆணையம் மிகவும் கண்டிப்பான தேர்தல் ஆணையமாகச் செயல்பட்டு வருவது மகிழ்ச்சிதான். அதிலும் எதிர்க் கட்சியை ஆளும் கட்சியாக்க வேண்டும் என்பதில் மிகவும் அக்கறை காட்டி வருகிறது. ஏனெனில், தேர்தல் ஆணையத்தில் உறுப்பினர்களாக, அதிகாரிகளாக இருப்பவர்கள் அப்படி,” என்றார்.

''பெரியாரால் வளர்க்கப்பட்ட தமிழ்நாடு; அண்ணாவால் வளர்க்கப்பட்ட தமிழ்நாடு. கேரளத்தில் மகாபலி மன்னன் கொல்லப் பட்டதைப் போல, தமிழ்நாட்டிலும் ஒரு ஓணம் பண்டிகையைக் கொண்டாட முற்படுகின்றனர். நான் முதல்வராக வரக் கூடாது என்று கூறுவதற்கு ஒரே காரணம், ஒரு பகுத்தறிவாளன், மறுமலர்ச்சியை விரும்புகிறவன், இன உணர்வு கொண்டவன் முதல்வராக வரக் கூடாது என்பது மட்டும்தான். உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கைக்குப் பிறகாவது தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயல்படவேண்டும்'' என்றார்.

தனக்கு சிக்கல் வரும் போதெல்லாம் இனஉணர்வு இவருக்கு பொங்கி வழிவது வாடிக்கை. இலங்கையில் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் நிராயுதபாணியாகக் கொல்லப்பட்டபோது பொங்கிவராத ஆவேசத்துடன் ஆணையத்தை முதல்வர் ஒரு பிடி பிடித்தார். இதனாலேயே தேர்தல் ஆணையத்தின் சில நடவடிக்கைகள் கோமாளித்தனமாக இருந்தபோதும் அதை ஆதரித்தாக வேண்டிய நியாயத்தை கருணாநிதி உண்டாக்கினார்.

உதாரணமாக, தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் வாகனங்களில் பணம் கணக்கின்றி கொண்டுசெல்வதை தடுத்த ஆணைய நடவடிக்கைகளால், வர்த்தகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆனால், அரசியல் கட்சிகளின் அட்டகாசத்தைத் தடுக்க இதைத் தவிர வேறு வழியில்லை என்பதால் ஏற்க வேண்டியதாகிவிட்டது.

வழக்கமாக தேர்தல் காலத்தில் மும்முரமாகக் காணப்படும் சுவரெழுத்து பிரசாரம், கட்சிக்கொடிகள், சுவரொட்டி, துண்டுப்பிரசுரம், விளம்பரப் பதாகைகள் உள்ளிட்டவை மூலமாக லட்சக் கணக்கான தொழிலாளர்கள் பயன் பெற்று வந்தனர். இம்முறை ஆணையத்தின் கெடுபிடிகளால் இவை குறைந்தன. பல இடங்களில் தேர்தலுக்கான அறிகுறியே இல்லாது காணப்பட்டது. தேர்தலுக்கு உரித்தான அந்த அழகிய பரபரப்பு இல்லாததும், தேர்தல் நேரத் தொழிலாளிகள் அடிபட்டதும் சற்று ஏமாற்றம் அளிக்கின்றன. ஆனால், ஆளும் கட்சியினரின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்த இதைவிட வேறு வழியில்லை என்று மக்கள் அமைதி காத்தனர்.

இந்த தேர்தலில் சில் அதிகாரிகள் நடத்திய அதிரடி நடவடிக்கைகள் பாராட்டத் தக்கவை. திருச்சி மேற்கு தொகுதியின் தேர்தல் அதிகாரியான கோட்டாட்சியர் சங்கீதா, தனியொருவராக சென்று, அமைச்சர் நேருவின் உறவினர் ஒருவர் ஆம்னி பஸ்ஸில் பதுக்கி வைத்திருந்த ரூ. 5.11 கோடி ரொக்கத்தை (ஏப். 4) பறிமுதல் செய்தார். இது களத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வு. தனி ஒருவராகச் சென்ற அதிகாரி சங்கீதாவுக்கு காவல்துறை போதிய ஒத்துழைப்பு தரவில்லை என்பது கூடுதல் தகவல். இதுபோல பல சம்பவங்கள் மாநிலம் முழுவதும் நடைபெற்றன. பெரும்பாலான சம்பவங்களில் சிக்கியவர்கள் திமுகவினரே.

டீக்கடைகள், ஹோட்டல்கள், வாகனங்கள், வீடுகளில் மட்டுமல்லாது காவல்துறை வாகனங்களிலேயே பணம் கடத்தப்படுவதாக தகவல் வந்தபோது ஆணையம் அதிர்ந்தது. இது குறித்த வாதங்கள் நீதிமன்றத்திலும் ஆணைய அதிகாரிகளால் முன்வைக்கப்பட்டன. அதன் பிறகே, ஆணையத்தைக் கண்டிக்கும் நீதிமன்றத்தின் உத்தரவுகள் நெகிழ்ந்தன.

மாநில காவல்துறை தலைவர் (டிஜிபி) மாற்றப்பட்டது, உளவுத்துறை ஏடிஜிபி கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டது, வெளிமாநில அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக வந்தது, வாக்குச்சாவடிகளில் வெப் காமிரா பொருத்தியது, மத்திய போல்லீசாரை தேர்தல் பணியில் ஈடுபடுத்தியது, மாவட்ட ஆட்சியர் மீது பொய்ப்புகார் செய்த அதிகாரி மீது நடவடிக்கை எடுத்தது, ... என பல நடவடிக்கைகள் மூலம் தங்கள் திறனையும் செயல்வேகத்தையும் நிரூபித்தது தேர்தல் ஆணையம். தேர்தல் ஆணையர் குரேஷியும் மாநில தேர்தல் அதிகாரி பிரவீன் குமாரும் பாராட்டுக்குரியவர்கள் என்பதில் சந்தேகமில்லை.

தலைமை சரியாக இருந்தால் அரசு இயந்திரம் ஒழுக்கமாகச் செயல்படும் என்பதற்கான சான்றுகள் இவர்கள். வழக்கமாக அரசுப் பணியில் அசட்டையாக இருக்கும் அதிகாரி கூடம் தேர்தல் பணியில் நெஞ்சு நிமிர்த்திக்கொண்டு பணி புரிந்தனர். அவர்களுக்கு தங்கள் பணியின் இன்றியமையாமை புரிய வைக்கப்பட்டது தான் இந்த வெற்றிக்குக் காரணம். தவிர இம்முறை வாக்காளர்களுக்கு அளிக்கப்பட 'பூத் ஸ்லிப்' வாக்காளர் அடையாள அட்டை போலவே துல்லியமான விபரங்களுடன் புகைப்படத்துடன் இருந்தது, வாக்காளர்களுக்கும் தாங்கள் வாக்களிப்பது குறித்த பெருமித உணர்வை அளித்தது.

இம்முறை தேர்தல் அதிகாரிகளில் அளவுக்கு அதிகமாக தூஷிக்கப்பட்டவர் மதுரை ஆட்சியர் சகாயம். நாமக்கல்லில் இருந்து ஆணைய உத்தரவால் மதுரைக்கு இடம் மாற்றப்பட்ட அவர் ஆரம்பத்திலிருந்தே அழகிரி கும்பலில் மிரட்டலுக்கு அஞ்சாமல் பணியாற்றியதால் பல வழக்குகளை சந்திக்க வேண்டியதானது. அனைத்திலும் அவர் விடுவிக்கப்பட்டார். சகாயம் மீது வழக்கு தொடுக்க அவருக்கு கீழ் பணிபுரிபவரையே பயன்படுத்தவும் திமுகவினர் தயங்கவில்லை. ஆனால், ஆணையம் வளைந்து கொடுக்காமல், ஆட்சியர் மீது பொய்ப்புகார் கூறிய மதுரை கோட்டாட்சியர் சுகுமாரனை தற்காலிக பணிநீக்கம் செய்தது. மத்திய அமைச்சர் அழகிரி மீது பொய்வழக்கு போடுமாறு தூண்டியதாக நமசிவாயம் மீது குற்றம் சாட்டப்பட்டபோது, மதுரை மக்கள் சிரித்துக் கொண்டனர். அவர்களுக்குத் தானே மதுரையில் என்ன நடக்கிறது என்பது தெரியும்?

கல்லூரி ஒன்றில் நடந்த தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சகாயம் பேசியதும் சர்ச்சைக்குள்ளானது. தேர்தல் மூலம் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று அவர் பேசியதாகவும் அது திமுகவுக்கு எதிரானது என்றும் கூறி வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி இதனை ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்தார். ''மனுதாரர் கூறுவது போல மதுரை ஆட்சியர் எந்த இடத்திலும் பேசவில்லை. 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க வேண்டும். பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என்றுதான் ஆட்சியர் பேசி உள்ளார். மாணவர் சமுதாயம் மூலம் இந்த மாற்றம் வர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இது தவறல்ல'' என்று நீதிபதிகள் கூறி, இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

இம்முறை தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக, அனுமதியின்றி சுவர் விளம்பரம், அனுமதியின்றி வாகனம் இயக்கியது போன்ற அத்துமீறல்கள் தொடர்பாக வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் வரை, 61,020 புகார்கள் பதிவாகின. தேர்தல் பிரசாரத்திற்கு வரும் தலைவர்கள் முன்அனுமதி பெறுவதை முறைப்படுத்தியது மாநில தேர்தல் அலுவலகம். அதேபோல, பொதுக்கூட்டத்திற்கு பொது கம்பத்திலிருந்து மின்சாரம் திருடப்படுவதையும் தடுத்தது ஆணையம். உள்ளூர் மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக இணைப்புக்கு பணம் செலுத்தினால் மட்டுமே மின்சாரத்தைப் பயன்படுத்த முடியும் என்ற சூழல் ஏற்படுத்தப்பட்டது.

இது முழுமையாக அமலாகவில்லை என்றாலும், இந்த முறைதான் இந்த உத்தி அறிமுகமானது. எனவே பல அரசியல் கட்சிகள் ஜெனரேட்டர் பயன்படுத்தி இப்பிரச்னையை சமாளித்தன.

மொத்தத்தில், தமிழக சட்டசபை தேர்தலில் இம்முறை கதாநாயகன் ஆனது தேர்தல் ஆணையம் எனில் மிகையில்லை. எனினும் 'கதாநாயகி' என்ற பெயரில் லஞ்சம் போல தருவதாகக் கூறப்படும் இலவச பொருள்கள் குறித்த தேர்தல் அறிக்கை மீது ஆணையம் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்தது. இது தனது எல்லைக்குள் வராதது என்று ஆணையம் நினைத்திருக்கலாம். எதிர்காலத்தில் இத்தகைய இலவச அறிவிப்புகளை தேர்தல் அறிக்கையிலும் பிரசாரத்திலும் தடை செய்வது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிப்பது நல்லது.

தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி ‘’தமிழகத்தில் தேர்தல் நடத்துவது சவாலானதாக மாறியுள்ளது’’ என்று கூறியது சாதாரண வாக்குமூலம் அல்ல. தமிழ்க் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமாரும் ‘'முறைகேடு நடந்தால் தேர்தல் ரத்து'' என்று எச்சரித்தார். அதிகாரிகள் முதுகெலும்பு உள்ளதை உணர்ந்து செயல்பட்டால், அரசியல்வாதிகள் தங்கள் வாலைச் சுருட்டிக்கொள்வார்கள். அதையே தமிழக தேர்தல் களம் காட்டுகிறது. கடும் அரசியல் நிரபந்தம், மன அழுத்தம், ஆசை காட்டுதல், ஒருசார்பு ஆகியவற்றை மீறி செயல்பட்ட தேர்தல் ஆணைய அதிகாரிகளால், கோடிகளைக் கொட்டி வாக்காளர்களை விலைபேசுவது ஓரளவிற்கேனும் தடுக்கப்பட்டது. இது தமிழகத்தின் மானத்தைக் காத்துள்ளது. ஆணையத்திற்கு கோடி நன்றி.

ஆளும் கட்சியைப் புலம்பச் செய்ததும், எதிர்க்கட்சிகள் அச்சமின்றி செயல்பட வழிவகுத்ததும் தேர்தல் ஆணையத்தின் சாதனை. அந்த வகையில் தன் கடமையை சரிவர நிறைவேற்றியது ஆணையம். இது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைக் கையாள்வதிலும் வாக்குப்பதிவு எண்ணிக்கையிலும் தொடர வேண்டும். ப.சி. போன்ற அதிகாரப் பசி கொண்டவர்கள் எந்த எல்லைக்கும் எந்த நிலையிலும் (வாக்கு எண்ணிக்கையின்போதும் கூட) செல்லத் தயங்காதவர்கள். அதனை தேர்தல் ஆணையம் மனதில் கொண்டு விழிப்புடன் செயல்பட வேண்டும்.


-------------------------

விஜயபாரதம் (29.04.2011)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக