புதன், மே 04, 2011

‘தமிழ் ஹிந்து’வுக்கு மனமார்ந்த நன்றி

அன்பு நண்பர்களுக்கு
வணக்கம்.


பெரியவர் வெங்கட் சாமிநாதனுக்கு விழா எடுப்பதும் அவர் குறித்து புத்தகம் வெளிவருவதும், தமிழகம் புத்துணர்வு பெற்று வருவதன் அறிகுறியாகவே தெரிகிறது. ஒருபுறம், ஜெயமோகனின் ஆற்றல் மிகுந்த தலைமையில் சத்தமின்றி இலக்கிய விழிப்புணர்வு ஏற்பட்டு வருவதும் கண்கூடாகத் தெரிகிறது. இடதுசாரி பார்வை, திராவிட பார்வைகளிலிருந்து தமிழ் மீண்டு வருவதன் அறிகுறிகள் இவை. ஜடாயு, அரவிந்தன் நீலகண்டன் போன்ற நண்பர்கள் இந்த விழிப்புணர்வு இயக்கத்தில் இருப்பது பெருமை அளிக்கிறது.


காலமும் சிந்தனையும் மாறிக்கொண்டே இருப்பவை. இதே தமிழகத்தில் சங்க இலக்கிய பிரவாகம் பாய்ந்திருக்கிறது; காவியங்களின் ஆளுமைகளால் மக்கள் தங்களை மறந்திருக்கிறார்கள்; பக்தி இலக்கிய அருவி கொட்டி இருக்கிறது; இலக்கணம் கூட இலக்கிய வடிவிலேயே படைக்கப்பட்ட சிறப்பும் இங்கு நிகழ்ந்திருக்கிறது. நீதிநூல்களும் சிற்றிலக்கியங்களும் சமுதாயத்தை வளப்படுத்தி இருக்கின்றன. இங்கு கூறப்படுபவை அனைத்துமே, காலவெளியில் நிலைபெற்ற பேறுடையவை. அவை நிலைபெறக் காரணம், அவற்றின் உள்ளார்ந்த இலக்கியத் தன்மையும் அவற்றில் இழையூடு பாவாய் அமைந்த சமுதாய உணர்வும் தான்.


சமுதாயத்திற்கு நன்மை விளைவிப்பதற்காக நிகழ்த்தப்படும் எந்தக் கலையும் இலக்கியமும் காலங்களை வென்று வாழும். ஏனெனில், அவற்றின் பிறப்பில் அறமும் நீதியும் நிலவும். அதனால் தான் நமது முற்கால இலக்கியகர்த்தர்கள் ரிஷிகளாக வணங்கப்படுகிறார்கள். ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்; குரங்கேற்றுக் கொள்ளாத கொம்புண்டோ?; நெற்றிக்கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே!’- என்றெல்லாம் நமது முந்தைய படைப்பாளிகள் கர்வம் தெறிக்க முழங்கியதன் பின்னணியில் அவர்களது தன்னல மறுப்பும் சமுதாயம் குறித்த சிந்தனை வீச்சும் இருந்தன. அதே பாவனையின் தொடர்ச்சியாகவே பெரியவர் வெங்கட் சாமிநாதனைக் காண வேண்டும்.


எந்த ஒரு மொழியும் பல வளர்ச்சிநிலைகளையும் சில தேக்கங்களையும் சந்திப்பது இயற்கை. ஏனெனில் மொழியும் சமுதாயமும் இணை பிரியாதவை. சமுதாய வீழ்ச்சியின்போது மொழியின் சரிவும் தடுக்கப்பட முடியாதாது. ஆயினும், சமுதாயம் மறுமலர்ச்சி அடையும்போது மொழி புத்தெழுச்சி கொள்ளும். கடந்த நூற்றாண்டில் தமிழ் மொழியில் ஏற்பட்ட மாற்றங்களில் சமூக மாற்றங்களும் பின்னிப் பிணைந்துள்ளன. உரைநடை இலக்கியம், புதின இலக்கியம், நாடக இலக்கியம், விமர்சன இலக்கியம், என மொழியின் கலை வடிவங்கள் பல்கிப் பெருகின. மொழிபெயர்ப்பிலும் உலகளாவிய சிந்தனைப் போக்குகளுடன் தமிழ் கைகோர்த்தது. அதே சமயம், சமுதாயத்தின் அரசியல் வீழ்ச்சி இலக்கிய சீரழிவுக்கு வித்திட்டது. அந்தக் கறையைப் போக்கும் தருணம் தற்போது துவங்கிவிட்டது.


எதையும் சுயநலத்துடன் கூடிய விமர்சனக் கண்ணோட்டத்தில் அணுகும் மோசமான வழக்கம் தமிழ் இலக்கிய அரங்கில் அரசியல் தலையீட்டால் நிகழ்ந்துள்ளது (இதே போக்கு பிற இந்திய மொழிகளிலும் ஏற்பட்டிருப்பதாகவே கூற முடியும்). இந்த விமர்சன உலகில் நாட்டை கூறுபோடும் சதியாளர்களின் கையூட்டுத் தொடர்புகளும் உண்டு. இத்தகைய நிலையில், ‘உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வார்த்தையில் தெளிவுண்டாகும்’ என்ற மகாகவி பாரதியின் வாக்கிற்கு ஏற்ப, பாரம்பரியம், நாட்டுநலன், சமுதாய உணர்வுடன் சிறு கலகக் குரல் கேட்டாலும் அதுவே சமுதாயத்தின் குரலாகும். அதிகார பலம், பணபலம், சித்தாந்த பலத்தால் சமுதாயத்தின் தீனமான குரலை அடக்கிவிட முடியாது. வெங்கட் சாமிநாதனுக்கு எடுக்கப்படும் பாராட்டுவிழா, சத்தியத்தின் மனசாட்சிக்கு எடுக்கப்படும் விழா.


விதைகளை மண்ணில் புதைத்துவைத்து விட்டால், அந்த விதைகளின் பாரம்பரியத்தை அழித்துவிடலாம் என்று கனவு காணும் ஆதிக்கவாதிகள் தான் இப்போதைய இலக்கிய உலகில் முன்னணியில் தெரிகிறார்கள். மண்ணில் விதைகளைப் புதைக்க முடியாது- விதைக்கவே முடியும் என்பது வெங்கட் சாமிநாதன் போன்றவர்களின் இருப்பால்தான் வெளிப்படுகிறது. எந்த சார்பும் அற்றவர் என்பதே வெ.சா.வின் பலம். அவரது அணியில் இளைய தலைமுறை அணிவகுக்கத் துவங்கி இருப்பது நம்பிக்கை அளிக்கிறது. இப்பணியில் இணைந்துள்ள ‘தமிழ் ஹிந்து’வுக்கு மனமார்ந்த நன்றி.


- சேக்கிழான்


---------------------------------------------------


குறிப்பு: 'தமிழ் ஹிந்து' இணையதளத்தில் வெளியான, நண்பர் ஜடாயுவின் வெங்கட் சாமிநாதன் குறித்த கட்டுரை-க்கு அளிக்கப்பட பின்னூட்டம் இது.


காண்க: கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன்


.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக