வெள்ளி, மே 25, 2012
நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை?
தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு அமைந்து ஓராண்டு நிறைந்துவிட்டது. இதையொட்டி, 'நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை' என்ற தலைப்பில் பல்வேறு நாளிதழ்களில் 4 பக்க அளவில் விளம்பரம் வெளியாகி இருக்கிறது. இந்த விளம்பரங்கள் அரசு செய்த சாதனைகளைக் கூறுகின்றன. அவை சிறிது உயர்வு நவிற்சியுடன் சொல்லப்பட்டிருக்கலாம். அதில் குறிப்பிட்டுள்ள அனைத்தையும் விட முக்கியமானது, தமிழகத்தை ஊழல் மிகுந்த திமுக அரசிடம் இரு காப்பாற்றியதாகத் தான் இருக்க முடியும்.
கரை கடந்த ஊழல்கள், ஊழலுக்கு வெட்கப்படாத போக்கு, குடும்ப அரசியல், வாக்குகளை விலைக்கு வாங்கும் அரசியல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என்று திமுக அரசு நடத்திய களேபர ஆட்சியில் இருந்து விடுபட ஏங்கித் தவித்த தமிழக மக்கள், தேர்தலில் பெருவாரியான ஆதரவுடன் ஜெயலலிதாவை முதல்வராக்கினார்.
முன்பு இருமுறை (1991 - 1996 , 2001 - 2006 ) இருந்தது போலல்லாமல் இம்முறை சிறந்த ஆட்சியை ஜெயலலிதா வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு மக்களுக்கு அதிகமாகவே இருந்தது. அதற்கேற்பவே ஜெயலலிதாவின் ஆரம்பகால நடவடிக்கைகளும் இருந்தன. தேர்தல் வாக்குறுதிகளில் அறிவித்தது போல இலவச மின்விசிறி, கிரைண்டர், மிக்சி ஆகியவற்றை அவர் வழங்கினார். இத்திட்டம் இப்போது மாநிலத்தின் பல பகுதிகளில் படிப்படியாக அமலாகி வருகிறது.
இவை மட்டுமல்லாது, பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, சூரிய சக்தியுடன் பசுமை வீடுகள், ஏழைகளுக்கு இலவச ஆடு, மாடுகள், வளர் இளம்பெண்களுக்கு இலவச நாப்கின்கள், பெண்களின் திருமணத்துக்கு தாலிக்கு 4 கிராம் தங்கம் ஆகிய இலவசத் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. பெண்களின் திருமணத்துக்கு தங்கத்துடன் ரூ. 25,000 நிதி உதவியும் அளிக்கப்படுகிறது.
இவை அனைத்தையும் விட முக்கியமானது குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் வழங்கப்படும் இலவச அரிசி திட்டம் தான். இதன்மூலமாக 1.86 கோடி பேர் பயன் பெறுவதாக தமிழக அரசின் விளம்பரம் கூறுகிறது. இத்திட்டங்கள் அனைத்தும் 'விலையில்லா' திட்டங்கள் என்று நாமகரணம் சூட்டப்பட்டிருக்கின்றன.
இத்திட்டங்களால் மக்கள் பலன் அடைகிறார்கள் என்பது உண்மையே. எனினும், மக்களை காலகாலத்துக்கும் இலவசத்தை நாடுபவர்களாக வைப்பது முறையல்ல என்பது தான் தமிழகத்தின் வளர்ச்சியில் நாட்டம் கொண்டவர்களின் கருத்தாக இருக்க முடியும். ஒருவனுக்கு மீன் பிடித்துக் கொடுப்பதை விட, மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பதே சிறப்பானது. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதை நிறைவேற்ற வேண்டும் என்ற அளவில் முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளை வரவேற்றாலும், நீண்ட கால நோக்கில், இந்தத் திட்டங்களுக்கு ஓர் வரைமுறை அவசியம் என்று சுட்டிக் காட்ட வேண்டி உள்ளது.
அடுத்ததாக, சென்ற ஆட்சியில் ஆளும்கட்சியினர் நடத்திய அடாவடியால் நிலங்கள் பறிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு காண உருவாக்கப்பட்ட நில அபகரிப்புத் தடுப்புப் பிரிவை முக்கியமானதாகச் சொல்லலாம். மாநிலம் முழுவதும் 39 நில அபகரிப்பு சிறப்பு காவல் பிரிவுகள் உருவாக்கப்பட்டன. இவற்றில் 34,703 புகார்கள் பெறப்பட்டு, 1,299 நில அபகரிப்பாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இதன் மூலமாக ரூ. 758 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்காக 25 சிறப்பு நீதி மன்றங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அதிகார மமதையில் எளியவர்களை மிரட்டி அவர்களது சொத்துக்களைப் பறித்தோருக்கு இந்த நடவடிக்கைகள் எச்சரிக்கையாக அமைந்தன. இதிலும் அரசியல் காரணங்களுக்காக திமுகவினர் மீது வழக்குகள் பதியப்படுவதாக புகார்கள் உள்ளன. காவல்துறையினர் நடுநிலை தவறாமல் இயங்கினால் இத்தகைய புகார்கள் எழாது.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காகவே ‘சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை’ உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. முதியோர், கைம்பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட மாத உதவித் தொகையை ரூ. 500 லிருந்து ரூ. ஆயிரமாக உயர்த்தியதும் பாராட்டிற்குரியது. மீன்பிடி தடைக் காலத்தில் மீனவர்களுக்கு வழங்கும் உதவித் தொகையை ரூ. ஆயிரத்திலிருந்து ரூ. 2,000 ஆக உயர்த்தியுள்ளதும் சரியான முடிவு. இத்திட்டத்தின் பயனாளிகள் தகுதியானவர்களா என்பதை ஆய்வு செய்து உதவித் தொகை வழங்குவது அவசியம்.
தமிழகத்தில் சிறப்பான பொருளாதார வளர்ச்சியை உருவாக்க, 'தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம்- 2023' என்ற திட்டத்தை ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். முதல்வராக உள்ளவர்கள் இத்தகைய தொலைநோக்குச் சிந்தனையுடன் தான் செயல்பட வேண்டும். ஆனால், வெறும் காகித அறிவிப்பாக நில்லாமல், இதனை நடைமுறைப்படுத்தும் பொறுப்பும் முதல்வருக்குண்டு. இத்திட்டத்தின் படி, ரூ. 15 லட்சம் கோடி மதிப்பில் தமிழகத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி ஆதாரம் குறித்து அரசு கவனம் செலுத்த வேண்டும்.
உலமாக்கள் ஊதியம் உயர்வு- ஓய்வூதியம் உயர்வு, கிறிஸ்தவர்கள் ஜெருசலம் சென்று வர நிதி உதவி, கைலாய யாத்திரை செல்லும் ஹிந்துக்களுக்கு நிதி உதவி- போன்ற அறிவிப்புகள், அரசின் மத பாகுபாடற்ற பார்வையைக் காட்டுகின்றன. பெரும்பாலான அரசியல் கட்சிகளும் சிறுபான்மையினரை குஷிப்படுத்தி பெரும்பான்மையினரை நோகடித்துவரும் நிலையில், அனைவரையும் சமமாக பாவிக்கும் முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்கள் பிற கட்சிகளுக்கு முன்னுதாரணமாக உள்ளன.
காலி பணியிடங்களை நிரப்புவது என்பது அரசின் நடவடிக்கைகளை முதன்மையானது. அரசு நிர்வாகம் முடங்காமல் இருக்க தகுதியானவர்களைத் தேர்வு செய்வதும், அதில் ஒளிவு மறைவற்ற தன்மை உறுதிப்படுத்தப்படுவதும் அவசியம். வேலைவாய்ப்புத் துறையில் இந்த அரசு கவனம் செலுத்துவதற்கு சரியான உதாரணம், தமிழ்நாடு அரசு பொது தேர்வாணையத்துக்கு (TNPSC) தலைவராக முன்னாள் டி.ஜி.பி. நடராஜ் நியமிக்கப்பட்டிருப்பது தான். முந்தைய ஆட்சியில் இந்த அமைப்பில் நிலவிய ஊழல்களை முற்றிலும் சரிப்படுத்தி வருகிறார் புதிய தலைவர் நடராஜ். சரியான, திறனுள்ள, நேர்மையான அதிகாரியை இத்துறையில் நியமித்ததன் மூலமாக முதல்வர் ஜெயலலிதா தனது தலைமைப் பண்பை நிரூபித்திருக்கிறார். இதன்மூலமாக வேலைக்குக் காத்திருக்கும் லட்சக் கணக்கான இளைஞர்களின் மனதில் நம்பிக்கை ஒளி ஏற்றி இருக்கிறார்.
கோவில் யானைகளுக்கு முதுமலையில் மீண்டும் புத்துணர்வு முகாம், புதிய பெரும் தொழிற்சாலைகள் அமைப்பதற்கான ஒப்பந்தங்கள், கேபிள் தொழிலில் நிலவிய ஏகபோகத்தைக் கட்டுபடுத்த கேபிள் டிவி நிறுவனம் அமைப்பு, எளிய மக்களும் தரமான மருத்துவ வசதி பெறும் வகையிலான முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டம், எனப் பல திட்டங்கள் அதிமுக அரசால் நடைமுறைப்படுத்தப்படுவது பாராட்டிற்குரியது.
எனினும், ஒருவரை மதிப்பிடும்போது, அவரது பலங்களை மட்டுமல்லாது பலவீனங்களையும் மதிப்பிடுவது இன்றியமையாதது. அப்போது தான் குறைகளைத் திருத்திக் கொண்டு, யாரும் முன்னேற முடியும். அந்த வகையில் அதிமுக அரசின் குறைபாடுகளையும் சுட்டிக்காட்டுவது நமது கடமையாகிறது.
இந்த அரசின் மீதான முதல் குற்றச்சாட்டு, முன்னறிவிப்பற்ற அதிகப்படியான பேருந்துக் கட்டண உயர்வு. போக்குவரத்துக் கழகங்களை நஷ்டத்திலிருந்து மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று அரசு விளக்கம் அளித்தாலும், மக்களை இது அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. அடுத்து பால் விலை உயர்வு. இதுவும், பால் உற்பத்தியாளர்களான விவசாயிகளுக்கு பலன் அளிக்கவில்லை; அதே சமயம் சாமானிய மக்களை வேதனைப் படுத்தி இருக்கிறது. புதிதாக அறிவிக்கப் பட்டுள்ள மின்கட்டண உயர்வின் தாக்கம் அடுத்துவரும் மாதங்களில் தான் தெரியவரும்.
அடுத்து, தமிழகத்தில் சுமார் 8 மாதங்களாக நிலவிய மின்வெட்டு, மாநிலம் முழுவதும் பலத்த அதிருப்தியை உருவாக்கி இருக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு, தொழில்துறை முடக்கம், மாணவர்களின் கல்வி பாதிப்பு ஆகியவை அரசு பெற்றிருக்க வேண்டிய மதிப்பெண்களைக் குறைத்துவிட்டன.
இந்நிலையில், கூடங்குளம் அணு உலை விஷயத்தில் தெளிவான முடிவெடுக்காமல் முதல்வர் மூன்று மாதங்கள் தாமதித்தது, ஜெயலலிதாவைப் பற்றிய 'இரும்புப் பெண்மணி' என்ற தோற்றம் மறையவும் காரணமாகிவிட்டது. அதன் விளைவாக தேசவிரோத சக்திகள் அணு உலை எதிர்ப்பு பிரசாரத்தை வேகப்படுத்திவிட்டன. இப்போதும் கூட, அணு உலை எதிப்பாளர்களிடம் மென்மையான போக்கையே தமிழக அரசு பேணி வருகிறது.
மின்வெட்டைத் தொடர்ந்து, வங்கிகள், நகைக்கடைகளில் நடந்த தொடர் கொள்ளைகள் அரசின் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டை கேள்விக்குறி ஆக்கின. இன்னமும் கூட கோவை உள்ளிட்ட பல பகுதிகளில் சில பிரிவினை இயக்கங்கள் தீவிரமாக செயல்படுகின்றன. அவற்றை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறை, தேசநலன் விரும்பும் அமைப்புகளின் ஊர்வலத்தை தடுப்பதில் தான் ஆர்வம் காட்டுகிறது. காவல்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்வர், தேவையான உறுதியான நடவடிக்கைகளை எடுப்பது உடனடித் தேவை.
அடிக்கடி அமைச்சர்களை மாற்றுவது அரசின் நம்பகத் தன்மையைப் பாதித்துவிடும் என்பதையும் முதல்வருக்கு சொல்ல வேண்டிய நேரம் இது. ஆருயிர்த் தோழி சசிகலாவை தோட்டத்திலிருந்து வெளியேற்றியது நல்ல முடிவு. ஆனால், மீண்டும் அவருடன் உறைவைப் புதுப்பிப்பது முதல்வரின் மதிப்பை குலைக்கிறது. சசிகலா உறவினர்கள் அரசில் தலையிடாமல் தடுப்பது ஒன்றே ஜெயலலிதாவின் துணிவை எடுத்துக்காட்டும்.
தானே புயல் நிவாரண நடவடிக்கைகளில் நிலவிய குழப்பங்களும் அரசுக்கு சற்று சறுக்கலே. அதே போல, முந்தைய அரசு அமைத்தது என்பதற்காகவே புதிய தலைமை செயலகம், செம்மொழி நூலகம் ஆகியவற்றை கடாசி இருப்பது, ஜெயலலிதாவுக்கு புகழ் சேர்க்கவில்லை.
மத்திய- மாநில உறவில் சீர்குலைவை ஏற்படுத்தும் மத்திய அரசின் முயற்சிகளுக்கு அவ்வப்போது கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஜெயலலிதா, நாடு முழுவதும் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் முதல்வராக மாறி இருக்கிறார். அவர் தனது தேசிய முக்கியத்துவத்துவத்தை உணர்ந்து, தமிழகத்தில் தனது ஆட்சியின் குறைகளை நிவர்த்தி செய்துகொண்டால், அரசு விளம்பரத்தில் கூறியுள்ள பல புள்ளிவிபரங்கள் நூறு சதவீதம் உண்மையாகும். அதுவே தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.
--------------------------------------------
விஜயபாரதம் (01.06.2012)
லேபிள்கள்:
அரசியல்,
கூடங்குளம்,
தமிழகம்,
விஜயபாரதம்,
ஜெயலலிதா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கோவை பதிவர்கள் குழுமத்தில் உள்ள உங்களோடு இணைவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்.
பதிலளிநீக்குஇணைவோம் இணையத்திலும்...இதயத்திலும்...
இவண்
உலகசினிமா ரசிகன்,
கோவை