வெள்ளி, மே 11, 2012

புத்துணர்ச்சி பெறும் பாஜக...


2009 நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற அதிர்ச்சித் தோல்வியிலிருந்து பாஜக முழுமையாக மீண்டுவிட்டது, பல்வேறு மாநிலங்களில் அக்கட்சியின் செயல்பாடுகளில் இருந்து தெரிய வருகிறது. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் காங்கிரஸ் போலல்லாமல் அக்கட்சி ஸ்திரமாகவே நிலை கொண்டிருக்கிறது.

இன்றைய நிலவரத்தில் பாஜக தனித்து 6 மாநிலங்களிலும் கூட்டணியாக 3 மாநிலங்களிலும் ஆட்சிப் பொறுப்பில் உள்ளது. குஜராத் (26), .பி. (29), சட்டீஸ்கர் (11), கர்நாடகா (28), இமாச்சல் (4), கோவா (2) ஆகிய மாநிலங்களில் தனித்து ஆட்சி செலுத்தும் பாஜக, ஜார்க்கன்ட் (14) மாநிலத்தில் ஜார்க்கன்ட் முக்தி மோர்சாவுடன் இணைந்து ஆட்சி செய்கிறது. தவிர, பிகாரில் (40) ஐக்கிய ஜனதாதளத்துடனும், பஞ்சாபில் (13) அகாலிதளத்துடனும் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கிறது. நாகலாந்தில் (1) தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள நாகா மக்கள் முன்னணி ஆட்சியில் உள்ளது. இந்த மாநிலங்கள் அனைத்திலும் சேர்த்து உள்ள மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை: 168. இவற்றில் சென்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கோட்டணி பெற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 108 .

மேற்கண்ட மாநிலங்களில் பாஜக, மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் செல்வாக்கு முன்னரை விட கூடியே உள்ளது. குறிப்பாக குஜராத், .பி, பிகார், பஞ்சாப், கோவா, சட்டீஸ்கர், இமாச்சல் மாநிலங்களில் முன்னர் பெற்ற வெற்றிகளை விட அடுத்த தேர்தலில் வெற்றி விகிதம் அதிகமாகவே இருக்கும். இம்மாநிலங்களில் எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு சிறிய நம்பிக்கை வெளிச்சமும் தட்டுப்படவில்லை. கர்நாடகா, ஜார்க்கன்ட் மாநிலங்களில் பாஜகவுக்குள் நிலவும் பூசல்கள், ஆட்சிக் குழப்பங்களால் அங்கு காங்கிரஸ் கட்சி சற்று நிம்மதி கொண்டிருக்கிறது. ஆனால், அக்கட்சி தேர்தலில் வெல்ல அது போதுமானதாக இராது.

கர்நாடகாவில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் அதிருப்திக் குரல் இப்போதைக்கு அடங்கி இருக்கிறது. தற்போதைய முதல்வர் சதானந்தா கவுடா மீது பெரிய அளவில் அதிருப்தி எழவில்லை. இங்கு தேவே கவுடாவின் மதச் சார்பற்ற ஜனதாதளம், காங்கிரஸ், பாஜக என்ற மும்முனைப் போட்டி வருமானால், பாஜகவுக்கே ஆதாயம். தேர்தலுக்குள் காங்கிரசும் தேவே கவுடா கட்சியும் கட்டி அணைத்துக் கொண்டாலும், பாஜகவுக்கு பிரசாரத்தில் நல்ல விஷயங்கள் பேசக் கிடைக்கும்.

ஜார்க்கண்டில் ஜார்க்கன்ட் முக்தி மோர்ச்சாவை கட்டி ஆள்வது பாஜகவுக்கு சிரமமாகவே இருக்கிறது. அண்மையில் நடந்த மாநிலங்களவை தேர்தலில் ஜே.எம்.எம் கட்சியின் அரசியல் விளையாட்டு வெளிப்பட்டது. ஆனால், இப்போதைக்கு வேறு வழியில்லை என்று பாஜக அடக்கி வாசிக்கிறது. மாநில முதல்வர் அர்ஜுன் முண்டா மீது எந்த புகாரும் இல்லை. முன்னாள் முதல்வரும் ஜார்க்கன்ட் விகாஸ் மோர்ச்சா தலைவருமான பாபுலால் மராண்டியை பாஜக சரிப்படுத்தினால், அவரை பழையபடி கட்சிக்குள் கொண்டுவந்தால், பாஜகவுக்கு நல்லது. மற்றபடி, இங்கு காங்கிரஸ் கட்சி தமிழக காங்கிரஸ் போல வலுவிழந்து கிடக்கிறது.

அடுத்ததாக, காங்கிரஸ் கூட்டணி ஆளும் மாநிலங்கள் சிலவற்றிலும் பாஜக கூட்டணி முன்னேறி வருவதைக் குறிப்பிட வேண்டும். ராஜஸ்தான் (25), உத்தரகான்ட் (5), டில்லி (7), மகாராஷ்டிரா (48), அசாம் (14), ஹரியானா (10) ஆகிய மாநிலங்களில் ஆளும் காங்கிரஸ் கோட்டைக்கு எதிராக பாஜக கூட்டணி நன்றாக வேர் கொண்டுள்ளது. இம்மாநிலங்களில் உள்ள மொத்த மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை: 109. சென்ற தேர்தலில் இம்மாநிலங்களில் தே..கூட்டணி வென்ற இடங்கள் மிகக் குறைவு (36). இம்மாநிலங்கள் தான் காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைக்க ஏணிப்படியாக அமைந்தன. ஆனால் இன்றைய நிலைமை தலைகீழாக இருக்கிறது. இம்மாநிலங்களில் இரட்டை இலக்கங்களில் காங்கிரஸ் கூட்டணி வெல்வதே அடுத்த தேர்தலில் குதிரைக் கொம்பாக இருக்கும். பாஜக கூட்டணிக்கு இம்மாநிலங்களில் நல்ல மீட்சி புலப்படுகிறது. குறிப்பாக மகாராஷ்டிராவிலும், ராஜஸ்தான், டில்லி, ஹரியானாவிலும் காங்கிரஸ் மண்ணைக் கௌவப் போவது நிச்சயமாகவே தெரிகிறது.

காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி ஆளும் இதர மாநிலங்களான ஜம்மு காஷ்மீர் (6), அருணாச்சல் (2), மேற்கு வங்கம் (42), ஆந்திரா (42), கேரளா (20), மேகாலயா (2), மணிப்பூர் (2), மிசோரம் (1) மாநிலங்களில் உள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை: 117 . இம்மாநிலங்களில் தான் பாஜக பலவீனமாக உள்ளது. சென்ற தேர்தலில் இம்மாநிலங்களில் பாஜக வென்ற இடம் ஒன்றே ஒன்று! காங்கிரஸ் வலுவாக உள்ள இப்பகுதியிலும் அடுத்த தேர்தலில் மாற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தோன்றுகின்றன. குறிப்பாக ஆந்திராவின் தெலுங்கானா பகுதியில் பாஜக - டி.ஆர்.எஸ். கூட்டனி அமோக வெற்றி பெறுவது உறுதி. ஜம்மு காஷ்மீரிலும் மேற்கு வங்கத்திலும் குறிப்பிடத் தக்க வெற்றிகளை பாஜக பெற வாய்ப்புள்ளது. மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா என்பதைப் பொறுத்தே அமாநிலத்தின் நிலவரத்தை தெளிவாக கூற இயலும்.

இவை அல்லாது, அதிமுக ஆளும் தமிழ்நாடு (39), பிஜு ஜனதா தளம் ஆளும் ஒடிசா (21), மார்க்சிஸ்ட் ஆளும் திரிபுரா (2), சமாஜ்வாதி ஆளும் .பி (80) ஆகிய மாநிலங்கள் அடுத்த தேர்தலில் முக்கியத்துவம் பெறுபவையாக உள்ளன. இங்குள்ள மொத்த மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை: 142 . இப்பகுதியில் பாஜக சென்ற தேர்தலில் வென்ற இடங்கள் 10 மட்டுமே. இம்மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி சென்ற தேர்தலில் பெற்ற அறுவடையை இம்முறை பெற வழியே இல்லை. இம்மாநிலங்களில் கூட்டணியை வலுப்படுத்துவதன் மூலமாகவே காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளும் பலன் பெற முடியும். குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் அமையும் கூட்டணியைப் பொறுத்தே அரசியல் நிலையை அளவிட முடியும். இன்னும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகள் உள்ளதால் (இடைக்காலத்தில் தேர்தல் நடக்கும் வாய்ப்புள்ளதை மறுக்க முடியாது) அதுவரை வேடிக்கை பார்ப்பதே சிலாக்கியம்.

நிலைமை எப்படி இருப்பினும், 2009 நாடாளுமன்றத் தேர்தலில் இருந்த நிலையை விட பாஜக கூட்டணி இப்போது தெம்பாகவே காட்சி அளிக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு சறுக்கல்கள் துவங்கிவிட்டன. அடுத்த ஆண்டு நடைபெறும் குஜராத், மகாராஷ்டிரா, டில்லி மாநிலத் தேர்தல்களில் பாஜ கூட்டணியின் கரம் ஓங்கும்போது, நாடாளுமன்ற இடைத் தேர்தலை நடத்த வேண்டிய நிலைமை வரக்கூடும். அப்போது காங்கிரசை நம்பி களம் இறங்கு கூட்டணிக் கட்சிகளின் எண்ணிக்கையும் குறையவே வாய்ப்புள்ளது. தமிழகத்தில் முந்தைய திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்தாலும் உடைந்தாலும் பலன் பெறப்போவது அதிமுக கூட்டணியாகவே இருக்கும். அந்தக் கூட்டணிக்குள் பாஜகவுக்கு இடமும் இருக்கும்.

அரசியல் என்பது ஜோதிடர்களின் கட்டுக்குள் அடங்காதது. மக்கள் மனநிலையை துல்லியமாகக் கூறக் கூடியவர்கள் உலகில் இல்லை. ஆனால், காற்று வீசும் திசையில் ஓடம் செலுத்துபவர் இலக்கை அடைய முடியும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. காற்றுக்கு எதிர்த்திசையில் வீம்புடனும் மமதையுடனும் ஓடம் செலுத்தும் காங்கிரஸ் கட்சியை விட, கரையோரம் தயாராக அமர்ந்திருக்கும் பாஜகவுக்கு வாய்ப்பு கூடுதலாகவே இருக்கிறது. இப்போதைய நிலைமையில் நாடாளுமன்றத்தில் 250 இடங்களை நெருங்கும் தூரத்தில் பாஜக கூட்டணி இருக்கிறது. இதை வெற்றிகரமாக்குவது பாஜகவின் பொறுப்பு.


---------------------------------------------


பெட்டிச்செய்தி - 1

முதல்வர்களில் முந்தும் மோடி

நாடு முழுவதும் உள்ள முதல்வர்களுள் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆளுமையிலும் ஆட்சி நிர்வாகத்திலும் முன்னணி வகிக்கிறார். அவரது தனிப்பட்ட சாதனைகள் பாஜகவின் சாதனைகளாக மாறி வருகின்றன. அவரை அடியொற்றி பாஜக ஆளும் பிற மாநிலங்களும் செயல்படத் துவங்கி உள்ளதால் அம்மாநிலங்களிலும் வளர்ச்சியின் வீச்சு அதிரித்திருக்கிறது.

உலக அளவில் மோடி இப்போது கவனம் ஈர்த்து வருகிறார். அநேகமாக அடுத்த இந்தியத் தேர்தலில் பாஜகவின் பிரதம வேட்பாளராக மோடி இருப்பார் என்று வெளிநாட்டுப் பத்திரிகைகள் கட்டியம் கூறுகின்றன. இதைப் பொறுக்காமல், காங்கிரஸ் ஆதரவு ஊடகங்கள் பாஜகவுக்குள் உட்பூசல் என்று கதை அளக்கத் துவங்கி இருக்கின்றன.

நாட்டின் திறமையான முதல்வர்கள் பட்டியலில் மோடி தொடர்ந்து பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்து வருகிறார். பிகார் முதல்வர் நிதிஷ் குமாரும் சட்டீஸ்கர் முதல்வர் ரமண சிங்கும் .பி. முதல்வர் சிவராஜ் சிங் சவ்கானும் கூட இப்பட்டியலில் முன்னணி வைக்கின்றனர். நாடு எத்திசையில் செல்ல வேண்டும் என்பதைத் தீர்மானிப்பவர்களாக பாஜக கூட்டணி முதல்வர்கள் இருப்பது நாட்டிற்கு அனுகூலம்.


------------------------------------------------


பெட்டிச்செய்தி - 2

குஜராத்தின் அசுர வளர்ச்சி

20 ஆண்டுகளுக்கு முன்ன்னர் நாட்டின் பிற மாநிலங்கள் போலவே பின்தங்கி இருந்த குஜராத் இப்போது பல துறைகளிலும் முத்திரை பதிக்கிறது. ஒரே காரணம், மாநில முதல்வர் நரேந்திர மோடி. இதோ சில புள்ளிவிபரங்கள்:

1. நாட்டின் தொழில்துறை வளர்ச்சி சுணங்கிக் காணப்படுகையில் குஜராத்தின் தொழில் வளர்ச்சி 13 சதவீதமாக உள்ளது.

2. குஜராத்தின் விவசாயத் துறை வளர்ச்சி கடந்த ஐந்தாண்டுகளில் 12.8 சதவீதம். பிற மாநிலங்களில் விவசாயம் நசிந்துவரும் நிலையையே நாம் காண்கிறோம்.

3. குஜராத் மாநில மக்களின் தனிநபர் வருமானம் 13.8 சதவீதம் உயர்ந்துள்ளது.

4. நாட்டின் ஏற்றுமதியில் 22 சதவீதத்தை குஜராத் மட்டும் பூர்த்தி செய்கிறது.

5 . உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதில் குஜராத் 30௦ சதவீதம் பங்களிக்கிறது.

6 . 24 மணிநேரமும் தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கப்படும் மாநிலம் குஜராத்.

7 . பிற மாநிலங்களுக்கு மின்சாரம் விற்கும் மாநிலமும் குஜராத் மட்டுமே.

8 . மாநிலத்தில் பாயும் நதிகளை இணைத்துள்ள ஒரே மாநிலமும் குஜராத் தான்.

9 . ஊழல் குறைவாக உள்ள, அரசு கட்டுப்பாடுகள் குறைவாக உள்ள மாநிலம் என்று தொழில்துறையால் போற்றப்படும் மாநிலம் குஜராத்.

10 . 'பஞ்சாம்ருத யோஜனா' என்ற ஐந்து அடிப்படைத் திட்டங்கள் (கல்வி, மின்சக்தி, நீர் பயன்பாடு, மக்கள் சக்தி, பாதுகாப்பு) வாயிலாக குஜராத்தை முன்னுதாரண மாநிலம் ஆக்கி இருக்கிறார் மோடி.


------------------------------------

விஜயபாரதம் (18.05.2012)

.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக