செவ்வாய், மே 15, 2012

தமிழ் ஹிந்து அன்பர்களுக்கு வேண்டுகோள்


அன்புள்ள
தமிழ் ஹிந்து நண்பர்களுக்கு,

மதுரை ஆதீனம் தொடர்பான கட்டுரை வெளியான உடனேயே நான் நினைத்தது, இதற்கு எந்த எதிர்வினையும் காட்டக் கூடாது என்பது தான். அதனால் தான் இத்தனை நாட்களாக அமைதியாக இருந்தேன். ஆனால், இனிமேலும் பேசாமல் இருப்பது நல்லதில்லை என்ற எண்ணம், இங்கு வந்த சில பின்னூட்டங்களால் ஏற்பட்டுவிட்டது.

நித்யானந்தா – சன் டிவியில் ‘பிரபலமானபோது’ கடுமையாக அவரை விமர்சித்தவர்களுள் நானும் ஒருவன். அதே சமயம், மதுரை ஆதீனத்தின் இளைய பீடாதிபதியாக அவர் பொறுபேற்ற உடன் (அது விலைக்கு வாங்கப்பட்டதாகவே இருக்கட்டும்) அப்பாடி, மதுரை ஆதீனம் அருணகிரியாரிடம் (தற்போதைய ஆதீனம்) இருந்து தப்பித்தது என்றே நான் நினைத்தேன். அதற்கு பல காரணங்கள் உண்டு. அது பற்றி விரிவான கட்டுரை எழுத திட்டமிட்டிருக்கிறேன்.

ஆனால், திரு. தஞ்சை கோபாலன் என்ன நோக்கத்தில் கட்டுரை எழுதினாரோ, அது நமது அன்பர்களின் ஜாதிச் சண்டையால் வீணாகி விட்டது. இங்கு பின்னூட்டம் இட்ட பலரும் தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளை முதன்மைப்படுத்துவதையே காண்கிறேன். மதுரை ஆதீனம் விஷயத்துடன் சங்கர மட விவகாரத்தை இழுத்திருக்க வேண்டியதில்லை. இது ஏற்கனவே புகையும் சிலருக்கு சாம்பிராணி போட்டது போலாகி விட்டது. இரண்டும் வெவ்வேறானவை என்ற அடிப்படைப் புரிதல் கூட இல்லாமல், ஜெயேந்திரரை வம்புக்கு இழுத்து தமிழ் ஹிந்துவின் நோக்கத்தையே சிதிலப்படுத்தி இருக்கிறார்கள் சில அன்பர்கள். அந்த அன்பர்களுக்கு பதில் சொல்லக் கிளம்பிய வேறு சில அன்பர்கள் மேலும் பிரச்னையை பெரிதாக்குகிறார்கள். பரமாச்சாரியரும், சிருங்கேரி பீடாதிபதியும் கூட அவர்களிடம் தப்பவில்லை. மொத்தத்தில் இந்தப் பின்னூட்டங்களில் நமது ஒற்றுமையின்மையே வெளிப்படுகிறது.

இதுகுறித்து திருவாளர்கள் ஜடாயு, கோபாலன், சிவஸ்ரீ விபூதிபூஷன் போன்றவர்கள் நாசூக்காக எச்சரித்தும், இந்த விவாதம் இதே திசையில் தொடர்வது நல்லதாகத் தெரியவில்லை. எனது சந்தேகம் என்னவென்றால், ஹிந்து பெயருடன் நமது எதிரிகள் இந்த விவாதங்களில் பங்கேற்று பிரச்னையை ஊதிப் பெரிதாக்குகிறார்களோ என்பது தான். ஆகவே, உலகம் முழுவதும் உள்ள தமிழ் ஹிந்து மக்களுக்கு தமிழக நிலவரத்தை வெளிப்படுத்த வேண்டிய நமது தளம் நமது மன மாச்சரியங்களை வெளிப்படுத்தக் காரணமாகிவிடக் கூடாது என்று அஞ்சுகிறேன். பின்னூட்டங்களை மட்டுறுத்தல் செய்வதன் அவசியம் குறித்து தள நிர்வாகிகள் சிந்திப்பது நல்லது.

தமிழகத்தில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக திராவிட இயக்கத்தால் பரப்பப்பட்ட பிரிவினை நஞ்சு இன்னும் முறிந்துவிடவில்லை என்பதையே இந்தப் பின்னூட்டங்கள் காட்டுகின்றன. உணர்ச்சிகரமான நேரத்தில் அறிவுப்பூர்வமாக செயல்படவேண்டும். அறிவு ஸ்தம்பிக்கும் நிலையில் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும். அப்போதுதான் நியாயமான முடிவுகளை எடுக்க முடியும். நாமோ, எதிரிடையாக செயல்படுகிறோம். இது வருத்தம் அளிக்கிறது.

நமது சமுதாயம் ஒரே சீருடையை அனைவரும் அணியுமாறு கட்டாயப்படுத்துவதல்ல. ஹிந்துத்துவத்தின் சிறப்பே இதன் தன்னிகரற்ற சுதந்திரமும் சுய கட்டுப்பாடும் தான். பல சம்பிரதாயங்கள் சேர்ந்தது தான் ஹிந்து மதம் . இதில் ஒரு சம்பிரதாயத்தை இழிவுபடுத்துவது என்பது ஒட்டுமொத்த ஹிந்து மதத்தையும் இழிவு படுத்துவதாகவே அமையும். வானை நோக்கி காறி உமிழ்ந்தால் யார் மீது எச்சில் தெறிக்கும்?

ஆகவே , தமிழ் ஹிந்து அன்பர்கள் அனைவரும் தங்கள் வேற்றுமையை மறந்து, ஹிந்து சமுதாய நன்மையைக் கருதி விவாதத்தில் கருத்துக்களை தெரிவிக்க வேண்டுமாய், ஒரு சகோதர ஹிந்துவாக கரம் கூப்பி வேண்டுகிறேன்.

”வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே”

-திருஞான சம்பந்தர்

என,
சேக்கிழான்

.

1 கருத்து:

  1. நடுநிலையான...பக்குவப்பட்ட...பதிவு...பின்னூட்டங்களை எழுதும் முன்...முன்னோட்டமாக பலமுறை சிந்திப்பது நல்லது..என்பது வரவேற்கத்தக்கது, எஸ்.ஆர்.சேகர்

    பதிலளிநீக்கு