சனி, மே 12, 2012

கேரளாவில் முஸ்லிம்லீக் ஆதிக்கம்- ஒரு விளக்கம்


அன்புள்ள
ஆர்வி மற்றும் அவருக்கு பதில் அளித்த நண்பர்களுக்கு,

வணக்கம்.

கேரளாவில் மாறிவரும் மக்கள்தொகை மாற்றத்தின் (Demography)அபாய அறிகுறியாகவே அந்த மாநில அமைச்சரவையில் நிகழ்ந்துள்ள மாற்றங்களை நான் காண்கிறேன். 1947 க்கு முன்னர் இதே போன்ற நிலைமை காணப்பட்ட லாகூரும் டாக்காவும் இன்று நம்முடன் இல்லை. அதே நிலை கேரளாவிலும் நேரிடக் கூடாது என்பதே எனது கவலை. அந்த அடிப்படையில் தான் தமிழ் ஹிந்து தளமும் இக்கட்டுரையைப் ( கேரளம் – மீண்டும் சரித்திரம் திரும்புகிறதா? ) பிரசுரித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் சிறுபான்மையின மதங்கள் பெரும்பான்மை பெற்றவுடன் அங்கிருந்த ஹிந்து பண்டிட்கள் அக்கிரமமான முறையில் துரத்தப்பட்டார்கள் (1985 -1990). அவ்வாறு துரத்தப்பட்டவர்கள் இன்றும் நாட்டின் பல பகுதிகளில் அகதிகளாக வாழ்கிறார்கள். அதே போன்ற நிலை கேரளாவிலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதையே எனது கட்டுரை பிரதிபலிக்கிறது. அதைப் புரிந்துகொள்ளாமல், திரு. ஆர்வி, வழக்கம் போல குதர்க்கம் பேசுகிறார். தூங்குபவர்களை எழுப்பலாம்; தூங்குவதுபோல நடிப்பவர்களை எழுப்ப முடியாது.

நமது அரசுகளின் அமைச்சரவைகளில் பெரும்பாலும் ஜாதிவாரி பிரதிநிதித்துவம் உள்ளதை அனைவரும் அறிவர். மண்டல் கமிஷன், இட ஒதுக்கீடு (Reservation) ஆகியவை கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பானவை. அது கண்டிப்பாக தேவை உள்ளவரை தொடர வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. அதே சமயம் திறமைக்கு மதிப்பளிக்கும் வகையில், இடஒதுக்கீடு ஐம்பது சதவீதத்தைத் தாண்டக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவையும் நான் ஏற்கிறேன்.

இடஒதுக்கீடு என்பது காலம் காலமாக நசுக்கப்பட்ட தலித் சகோதரர்களுக்கு கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும். ஆனால், அதன் பயனை பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதியினரும் சிறுபான்மையினரும் தூக்கிச் சென்றுவிடக் கூடாது. மேல்ஜாதி என்று கூறப்படும் பல ஜாதிகளிலும் பலர் ஏழ்மை நிலையில் உள்ளனர். அவர்களை பொருளாதார அடிப்படையில் கைதூக்கிவிடுவதாகவும் இட ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்ற சிந்தனையை பலர் கூறி வருகின்றனர். இதுவும் எனக்கு ஏற்புடையதே.

மற்றபடி இடஒதுக்கீட்டையும் அமைச்சரவையில் செல்வாக்கு செலுத்துவதையும் ஒன்றாகக் குழப்பக் கூடாது. கேரளாவில் சிறுபான்மையினர் திறமை அடிப்படையில் அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தால் நான் அதை எதிர்த்திருக்க மாட்டேன். ஆனால், அங்கு நடந்தது அரசியல் பேரம்; நாட்டை அழிவுக்குள்ளாக்கும் பேரம். எனவே தான் அதை நான் எதிர்க்கிறேன்.

பாஜக ஆளும் மாநிலங்கள் உள்பட அனைத்து மாநிலங்களிலும் சிறுபான்மையினருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. அது அனைத்து சமூகத்தினரையும் இணைப்பதற்கான சமரசமான அரசியல் ஏற்பாடு. அதே சமயம், தங்கள் வாக்கு வங்கி பலத்தாலும், கூட்டணியில் செலுத்தும் ஆதிக்கத்தாலும், கேரளாவில் முஸ்லிம் லீக் கட்சி நிர்பந்தம் செய்து செல்வாக்கை உயர்த்திக் கொண்டுள்ளது. இது பிற மாநிலங்களிலும் பரவினால், இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது.

-சேக்கிழான்


காண்க: கேரளம் – மீண்டும் சரித்திரம் திரும்புகிறதா?

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக