சனி, ஏப்ரல் 09, 2011

‘கிரிக்கெட்’டில் விளையாடாதீர்கள்!இலங்கை அணியை இந்திய அணி எதிர்கொண்ட அன்று எனக்கு ஒரு எஸ்.எஸ்.எஸ் வந்தது. ''நிற வெறியரை (ஆஸ்திரேலியா) வெற்றி கண்டோம்; மத வெறியரை (பாகிஸ்தான்) வெற்றி கண்டோம்; இப்போது இன வெறியரையும் (இலங்கை) வெற்றி காண்போம்: ஜெய்ஹிந்த்!' என்று அதில் இருந்தது.


இன்னொரு எஸ்.எம்.எஸ்.சில் வந்த நகைச்சுவைத் துணுக்கு: ''இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு பாக் பிரதமர் கிலானி அனுப்பிய எஸ்.எம்.எஸ்.சில் உள்ள தகவல்: மாப்பு, இந்தியாவுக்குப் போகணுமா? கொஞ்சம் யோசி. வைச்சிருவாங்க ஆப்பு''


இப்படி எஸ்.எம்.எஸ்.கள் வலம் வந்துகொண்டிருந்த அதே நேரத்தில் ஊடகங்கள் கிரிக்கெட்டை அக்குவேறு ஆணி வேறாக அலசிக் கொண்டிருந்தன. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி என்பது வாராது வந்த மாமணியாகச் சித்தரிக்கப்பட்டது. ஒரு பத்திரிகை எழுதியது: இதுவரை இந்திய அணி பங்கேற்ற முக்கியமான அனைத்து ஆட்டங்களும் 'M' என்ற எழுத்தில் துவங்குவதாக (மொஹாலி, மும்பை) இருந்துள்ளன; அது இந்தியாவுக்கு ராசி. எனவே இறுதிப்போட்டியில் இந்தியா வெல்லும்.


நாடு முழுவதும் ஐந்து மாநிலங்களில் நடந்த தேர்தல் பிரசாரமே இந்த கிரிக்கெட் போட்டிகளால் கடுமையாக பாதிக்கப்பட்டது. பிரசாரக் களம் செல்ல வேண்டிய தலைவர்கள் அதைவிட முக்கியமானதாக கிரிக்கெட் போட்டிகளைக் கண்டு களிப்பதை ரசிகர்களுக்கு உறுதிப்படுத்தினர்.


காங்கிரஸ் தலைவி சோனியா, பாஜக தலைவர் அத்வானி என நாட்டின் முன்னணி அரசியல் பிரமுகர்கள் கூட கிரிக்கெட் போட்டியைக் காண்பது ஜென்ம சாபல்யம் என்பது போல மைதானத்தில் வீற்றிருந்தனர். அவர்களை (குறிப்பாக சோனியா, ராகுலை) ஆங்கில தொலைகாட்சி ஊடகங்கள் அடிக்கடி காட்டி, புளகாங்கிதம் அடைந்தன.


திரைப்பட நட்சத்திரங்களும் இதில் சளைக்கவில்லை. தென்னகத்தின் ரஜினிகாந்தும் பாலிவுட்டின் அமீர்கானும் ஒரே இடத்தில் தேசியக் கொடியுடன் ஆரவாரம் செய்தது கண்கொள்ளாக் காட்சி.


இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த அரையிறுதிப் போட்டியின் போதும் (மார்ச் 30), இலங்கையுடன் மோதிய இறுதிப் போட்டியின்போதும் (ஏப்ரல் 2), நாடு முழுவதும் அறிவிக்கப்படாத ஊரடங்கு போலக் காட்சி அளித்தது. இந்த நாட்களில் எந்த அலுவலகத்திலும் பணிகள் ஒழுங்காக நடக்கவில்லை. பலர் விடுப்பு எடுத்துக்கொண்டு கிரிக்கெட் போட்டிகளைக் கண்டு களித்தனர்.


நாட்டைக் காக்கும் (?) அரசியல்வாதிகளே கிரிக்கெட் மைதானத்தில் தவம் கிடக்கையில், சாமானியனைக் குற்றம் சொல்ல முடியாது. அதிமுக தலைவி ஜெயலலிதா தனது பிரசாரத்தையே போட்டி நாளன்று மாலை 5 மணியுடன் முடித்துக் கொண்டார். திமுக தலைவர் கருணாநிதியோ, பொதுக்கூட்டத்தை தாமதமாகத் துவங்கி சமாளித்தார். அந்த அளவிற்கு கிரிக்கெட் நாடு முழுவதும் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தியது.


பல பத்திரிகைகள் இதுதான் தருணமென்று பிரத்யேக 'டீம் இந்தியா' விளம்பரங்களை வெளியிட்டு காசு பார்த்தன. கடந்த 30 ஆண்டுகால உலகக் கோப்பைப் போட்டிகளை ஒப்பிட்டு தொலைகாட்சி அலைவரிசைகள் தங்கள் ரேட்டிங்கை உயர்த்திக்கொள்ள படாத பாடுபட்டன. அவற்றுக்கு விளம்பரங்கள் தந்து தங்கள் தொழிலை உயர்த்த பெரு நிறுவனங்கள் முண்டியடித்தன.


இறுதிப்போட்டி நடந்த அதே நாளில்தான் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கில் மத்திய புலனாய்வு அமைப்பு 80 ஆயிரம் பக்கங்களைக் கொண்ட குற்றப் பத்திரிகையை (இது முன்னோட்டம் மட்டுமே; இதன் இரண்டாம் பாகம் விரைவில் வரும்) நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதுவும் கிரிக்கெட் களேபரத்தில் பத்தோடு பதினொன்றாகி விட்டது. நாட்டையே ஏமாளியாக்கிய குற்றவாளிகள் மீது நமது அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது பற்றிய கவலையை விட கிரிக்கெட் வெற்றியே முக்கியமானதாகி விட்டது.


இதையெல்லாம்விட பைத்தியகாரத்தனம், மொஹாலியில் நடந்த அரையிறுதிப் போட்டியைக் காண வருமாறு பாகிஸ்தான் பிரதமர் கிலானிக்கு நமது பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்தது. கிரிக்கெட் போட்டிகளை இருநாட்டுப் பிரதமர்களும் அருகருகே அமர்ந்து ரசிக்கவும் செய்தனர். மும்பையிலும் நாடாளுமன்றத்திலும் பாகிஸ்தான் அரசின் ஆதரவுடன் கொடூரத் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை வசதியாக மறந்துவிடலாம்; இருநாட்டு நல்லுறவுக்கு கிரிக்கெட் பாலம் அமைத்துவிடும். இதனை 'கிரிக்கெட் டிப்ளமசி' என்று பாராட்டி மகிழ்ந்தன நமது அறிவுஜீவி ஊடகங்கள்.

பிரதமரே இவ்வாறு நினைக்கும்போது நாட்டின் சாமானிய ரசிகன் எஸ்.எம்.எஸ் அனுப்பாமல் என்ன செய்வான்?


இறுதிப்போட்டியில் இலங்கை அதிபர் ராஜபக்ஷே நமது ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுடன் ஒருங்கே அமர்ந்து கிரிக்கெட் போட்டியை ரசித்ததே அற்புதமான காட்சி. இலங்கையில் அந்நாட்டு ராணுவம் நடத்திய அராஜகத் தாக்குதல்களில் உயிரிழந்த லட்சக் கணக்கான ஈழத் தமிழர்களின் ஆத்மா சாந்தி அடைந்திருக்கும்.


பாகிஸ்தான் அணியை வென்று பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டியாகி விட்டது. இலங்கை அணியையும் வென்று பாடம் புகட்டியாகி விட்டது. சீனாவும் இந்த கிரிக்கெட் மன்றத்தில் சேர்ந்தால் தொல்லை விட்டது. அதனையும் ஒரு போட்டியில் வென்று 1962 போர் தோல்விக்கு எளிதாக பழி தீர்த்துக் கொள்ளலாம்.


இதே பாணியில் ஊழலையும் விலைவாசி உயர்வையும்கூட மிக எளிதில் முறியடிக்க முடியும். ‘ஊழல்’ என்ற பெயரில் ஒரு அணியை உருவாக்கி (அதில் நமது அரசியல்வாதிகளை இடம்பெறச் செய்யலாம்) அதனுடன் தோணி தலைமையிலான இந்திய கிரிக்கெட் (பிசிசி) அணியை மோதச் செய்து வெற்றி கண்டுவிட்டால் போதும், ஊழலை நாம் வெற்றி கண்டாற்போலத் தான். இது தெரியாமல் காந்தீயவாதியும் சமூக சேவகருமான அண்ணா ஹஸாரே ஊழலை எதிர்த்து சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கிறார்.


கிரிக்கெட் வீரர்கள் பயன்படுத்தும் மட்டையில் ‘விலைவாசி’ என்று எழுதி ஒட்டி, வேகமாக அடித்து ஆடி மட்டையை முறித்துவிட்டால், விலைவாசியின் உக்கிரத்தை அடக்க முடியாதா? இதனை தேர்தலில் ஒரு பிரச்னையாக முன்வைத்து பிரசாரம் செய்ய வேண்டுமா?

நமது நாட்டில் கிரிக்கெட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் வேறு எந்த விளையாட்டிற்கும் கொடுக்கப்படுவதில்லை. ஆசிய விளையாட்டில் தங்கங்களைக் குவிக்கும் கபடி வீரர்களோ, ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களைக் குவிக்கும் தடகள வீரர்களோ, டென்னிஸ், செஸ் விளையாட்டுகளில் வாகை சூடும் இந்திய வீரர்களோ, ஒரே வெற்றி மூலமாக கதாநாயகர்கள் ஆவதில்லை. 2011 உலகக் கோப்பையைக் கைப்பற்றியதன் மூலமாக இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அனைவரும் ஒரே நாளில் பல கோடிகளுக்கு அதிபதிகளாகி இருக்கிறார்கள். இது தவிர விளம்பரத் தூதுவர்களாக - பெரு நிறுவனங்களின் மாடல்களாக இருக்கப்போகும் வாய்ப்பால் கிடைக்கும் வருமானம் தனிக்கணக்கு.

‘இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மதம்; டெண்டுல்கர் கிரிக்கெட்டின் கடவுள்’ என்று மெய் சிலிர்க்கின்றன ஊடகங்கள். இப்போது மூலவராக டெண்டுல்கரை அமர்த்திவிட்டு தோணி உற்சவராக உருவாக்கப்பட்டிருக்கிறார். இதே தோனியின் ராஞ்சியிலுள்ள வீடு, ஒரு போட்டியில் இந்தியா தோற்றபோது ரசிகர்களால் தாக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் சகஜம். விளையாட்டு என்பதே மனித மன உணர்வுகளை மேம்படுத்தவும், உற்சாகப்படுத்தவும் ஏற்படுத்தப்பட்ட பொழுதுபோக்கு தான். ஆனால், வெற்றி பெற்றால் தலையில் வைத்துக்கொண்டு கூத்தாடுவதும் தோற்றால் சூறையாடுவதும் பண்பாடல்ல. அதைத்தான் இந்தியா, கிரிக்கெட்டில் கற்றிருக்கிறது.

இப்போது நாட்டின் வெளிவிவகாரத் துறையிலும் ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கு கிரிக்கெட் வளர்ந்துவிட்டது. இனிமேல் யுத்தங்கள் தேவையில்லை; இரு நாட்டு கிரிக்கெட் அணிகளை மோதச் செய்து வெற்றி தோல்விகளை தீர்மானித்துக் கொள்ளலாம். அதனை தொலைக்காட்சியில் ஒளிபரப்பி வருமானம் ஈட்டி பற்றாக்குறை பட்ஜெட்களை சரிப்படுத்தலாம்.

அரசியல்வாதிகளும் திரைத் தாரகைகளும் தங்களை கிரிக்கெட் ரசிகராக காட்டிக்கொள்ள நடத்தும் அபத்த முயற்சிகள், ரசிகர்களின் கிரிக்கெட் பித்தை மேலும் அதிகரிக்கின்றன. மொத்தத்தில் அழகிய, நேர்த்தியான, இயல்பான ஒரு விளையாட்டு, அதற்கு கொடுக்கப்படும் அதீத முக்கியத்துவத்தாலும், அதனுடன் சேர்க்கப்படும் அரசியல் மசாலாவாலும் நாசமாகிறது. இனிமேலும் அதனை 'ஜென்டில்மேன்களின் விளையாட்டு' என்று சொல்ல முடியுமா?

டெண்டுல்கருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என்று உபதேசிக்கின்றன ஊடகங்கள். வழங்க வேண்டியதுதான். தமிழகத்தின் ‘கலைமாமணி’ பட்டம் போலாகி விட்டது, நமது அரசு வழங்கும் 'பத்ம' விருதுகளின் நிலைமை. அதற்கு டெண்டுல்கர் எவ்வளவோ பரவாயில்லை.

இதெல்லாம் போகட்டும் என்று விட்டுவிடலாம். இறுதிப்போட்டியின் இறுதியில் இந்திய அணி பெற்று ஆரவாரித்த கிரிக்கெட் உலகக் கோப்பையே உண்மையானதல்ல என்ற சர்ச்சை வேறு, இரண்டு நாட்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தியது. உண்மையான உலகக்கோப்பை சுங்கவரித்துறை வசம் உள்ளதாகவும் சுமார் ரூ. 22 லட்சம் வரி கட்டாததால் முடக்கிவைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாயின. அதனை கிரிக்கெட் கவுன்சில் மறுத்துள்ளது. எனினும் சுங்கவரித்துறை வசம் இருப்பது மாதிரி உலகக் கோப்பையா? நமது வீரர்கள் பெற்றது மாதிரி உலகக் கோப்பையா என்பது ரசிகர்களுக்கு புரியாத புதிர் தான்.

ரசிகனைப் பொருத்த வரை, இதுபோன்ற சர்ச்சைகளில் ஆர்வம் காட்டுவதில்லை. அவனது விருப்பம் நிறைவேறிவிட்டது. சுங்கவரித் துறை வசமுள்ள கோப்பை எதுவானாலும் மீட்பது, பல கோடிகள் புரளும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பொறுப்பு. எதற்கெல்லாமோ வரிவிலக்கு அளிக்கும் இந்திய அரசு (உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக மட்டும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு ரூ. 45 கோடி வருமானவரி விலக்கு அளித்துள்ளது இந்திய அரசு), இதற்கும் விலக்கு அளித்து தனது கிரிக்கெட் பக்தியை வெளிக்காட்டலாம்.

நாட்டில் ஒருவேளை உணவு கூடக் கிடைக்காதவர்களின் எண்ணிக்கை பல கோடியாக இருக்கும் தேசத்தில், கிரிக்கெட்டை மேம்படுத்துவதுதானே ஒரு மக்கள் நல அரசின் பிரதான கடமையாக இருக்க முடியும்?


-------------------------

விஜயபாரதம் (22.04.2011)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக