அன்புள்ள இதய நாயகன் அமீர் கானுக்கு…
2001-ஆம் ஆண்டு வெளியான ‘லகான்’ திரைப்படத்தைப் பார்த்து உங்கள் ரசிகன் ஆனவர்களுள் நானும் ஒருவன். 2007-ல் வெளியான ’தாரே ஜமீன் பர்’ படமும், 2009-ல் வெளியான ‘3 இடியட்ஸ்’ படமும் உங்கள் ரசிகன் என்பதில் என்னை பெருமிதம் கொள்ளச் செய்தன. தமிழில் கமலஹாசன் போல ஹிந்தி திரையுலகில் பல பரீட்சார்த்தங்களை நிகழ்த்தியவர் நீங்கள். அதனாலேயே இந்திய திரையுலகில் முக்கியமான ஆளுமையாக மாறி இருக்கிறீர்கள். என்னைப் போன்ற லட்சக் கணக்கான ரசிகர்களின் அன்பும் ஆதரவும் தான் உங்களை இந்த நிலைக்கு உயர்த்தின என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன்.
சென்ற ஆண்டு வெளியான உங்கள் ‘பி.கே’ படம் தான் உங்களைப் பற்றி முதலில் சற்று ஐயத்தை ஏற்படுத்தியது. அதில் நீங்கள் நான் வழிபடும் கடவுள்களை கேவலமாக சித்தரித்திருந்தீர்கள். அப்போதும் கூட, உங்கள் படத்தை எதிர்த்தவர்களிடம், கருத்துரிமைக்காக நான் வாதிட்டிருக்கிறேன். ஏனெனில் கலைஞர்களின் கருத்து சுதந்திரமே நாட்டின் ஜனநாயகத்தைப் பிரதிபலிக்கிறது என்பதில் நம்பிக்கை கொண்டவன் நான். அதே காரணத்தால் தான் பாஜக மூத்த தலைவர் அத்வானி ‘அந்தப் படத்தை விமர்சிக்கலாம்; தடுக்காதீர்கள்’ என்று அறிவுறுத்தினார்.
ஆனால், கடந்த நவம்பர் 24-ம் தேதி தில்லியில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் நடத்திய சிறந்த பத்திரிகையாளருக்கு விருது வழங்கும் விழாவில் நீங்கள் தெரிவித்த கருத்துக்கள் உங்கள் மீதிருந்த நல்லெண்ணத்தையும் அபிமானத்தையும் போக்கிவிட்டன என்பதை வேதனையுடன் இங்கு பதிவு செய்கிறேன். ”நாட்டில் பாதுகாப்பின்மை உணர்வு அதிகரித்து வருவதால் குழந்தைகளுடன் இந்தியாவை விட்டு வெளியேறிவிடலாமா?’’ என்று உங்கள் மனைவி கிரண் கேட்டதாகக் கூறிய நீங்கள், நானும் அதையே உணர்கிறேன் என்று சொன்னீர்கள். அப்போதுதான் நீங்களும் அடிப்படைவாதத்துக்கு அடிபணிந்த முஸ்லிம் என்று புரிந்துகொண்டேன்.
உங்களுக்கு ஓர் அரசியல் பார்வை உண்டு என்பதை பல நிகழ்வுகளில் நான் ஏற்கனவே கண்டு வந்திருக்கிறேன். அதுவே இயல்பும் கூட. குஜராத் மாநில அரசின் நர்மதை அணைத் திட்டத்தை சமூக சேவகர் மேதா பட்கர் எதிர்த்துப் போராடியபோது அவருடன் இணைந்து நீங்களும் குரல் கொடுத்தீர்கள். பிறகு சபனா ஆஸ்மி, தருண் தேஜ்பால், டீஸ்டா செதல்வாட் போன்ற இடதுசாரி அறிவுஜீவிகளுடன் பல மேடைகளில் பங்கேற்றீர்கள். அதுவும் ஜனநாயக உரிமையே.
கலைஞர்கள் தங்கள் பிழைப்பைக் கவனிக்கும் அதே நேரத்தில் ஏதாவது ஒரு கொள்கைக்காகவும் சமூகத்துக்காகவும் குரல் கொடுப்பதை நான் ஆதரிக்கிறேன். அதுவும் உங்களைப் போன்ற பிரபலமான ஒருவரின் சொல்லுக்கு மக்களிடம் செல்வாக்கு அதிகம். அதனால் தான் ஸ்டார் டி.வி.யில் நீங்கள் நடத்திய ‘சத்தியமேவ ஜெயதே’ மக்களின் ஆரவாரமான வரவேற்பைப் பெற்றது. நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு ஒரு வடிவம் கொடுப்பதாக அந்த நிகழ்ச்சி அமைந்தது. உங்கள் சமூக சேவை செயல்பாடுகளும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் திரைத்துறையைத் தாண்டி சிந்திக்கும் நல்ல குடிமகனாக உங்களை அடையாளம் காட்டின. ஆனால், அவை அனைத்தையும் உங்கள் ஒரே நேர்காணலில் வீணடித்து விட்டீர்கள் என்பது தான் எனது வருத்தம்.
குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி அந்த மாநிலத்தில் பல சாதனைகளை நிகழ்த்தியதால் தேசிய அரசியலுக்கு வந்தார். அவரை பிரதமர் வேட்பாளராக பாஜக முன்னிறுத்தியது. திரைத்துறையில் நீக்கள் என்னைக் கவர்ந்தது போலவே அரசியலில் அவர் என்னைக் கவர்ந்தார். நாட்டின் மக்களில் பெருவாரியானவர்களும் அதே கருத்தைத் தான் கொண்டிருந்தார்கள் என்பதை சென்ற ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் காட்டின. அவர் பிரதமரும் ஆகிவிட்டார்.
ஆனால், எனது விருப்பத்துக்குரிய அமீர் கான் மோடி பிரதமராவதை விரும்புபவர் அல்ல என்பது, உங்கள் பேச்சுகளிலிருந்து தேர்தலுக்கு முன்னமே தெரிய வந்தது. அதை நான் பொருட்படுத்தவில்லை. அது உங்கள் உரிமை. நீங்களும் உங்கள் சகாக்களும் மதச்சார்பின்மை என்ற பெயரில் நிகழ்த்திய பிரசாரத்தை மக்கள் ஏற்கவில்லை. 2003-ல் குஜராத்த்தில் நடைபெற்ற மதக் கலவரத்தைக் காட்டி மக்களைப் பலவாறாக அச்சுறுத்தியும் கூட, மக்கள் அதை ஏற்கவில்லை. ஏனெனில் மதச்சார்பின்மை என்பது அறிவுஜீவிகளின் இந்து மதச்சார்பின்மையே என்பதும், இந்து விரோதம் தான் என்பதும் அவர்களுக்குப் புரிந்துபோனது. இதை அறிவுஜீவிகளால் ஏற்க முடியவில்லை.
மோடி பிரதமரானது முதலே, அவரை எப்படி வீழ்த்தலாம் என்பதிலேயே அவர்கள் குறியாக இருந்தார்கள்; இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் பாஜகவின் வளர்ச்சியில் அச்சம் கொள்ள நியாயம் இருக்கிறது. அவர்கள் மோடியை ஆதரித்தால் தான் ஆச்சரியம். ஆனால், அறிவுஜீவிகள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்களும், இடதுசாரி செல்வாக்குள்ள எழுத்தாளர்களும், கலைஞர்களும் ஆரம்பத்திலிருந்தே மோடியை எதிர்த்து வந்தார்கள். இது நமக்கு ஜனநாயகம் கொடுத்த கருத்துரிமை. ஆனால், பாஜக ஆட்சியில் கருத்துரிமை பறிபோவதாக அவர்கள் கூக்குரலிட்டார்கள்.
ஆரம்பத்தில் அதை மக்கள் கேட்கவில்லை. ஆனால், ஒரே கருத்தை திரும்பத் திரும்பச் சொன்னால் அது கொஞ்சமேனும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்த அவர்கள் தங்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தினார்கள். அதற்கு எப்போதும் பாஜகவை எதிர்க்கும், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான ஆங்கில ஊடகங்கள் சாமரம் வீசின. ஆட்சியாளர்களின் உறுதிப்பாட்டைக் குலைப்பதே அவர்களின் எண்ணமாக இருந்தது. நீங்களும் அவர்களின் வரிசையில் சேர்வீர்கள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. நான் உங்களிடம் சற்று நிதானத்தையும் பக்குவத்தையும் எதிர்பார்த்தேன்.
நரேந்திர மோடி பிரதமர் ஆனதிலிருந்தே பலத்த விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். காய்த்த மரம் கல்லடி படத்தான் செய்யும். அதையும் மீறி பல முக்கியமான திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார். ஊழலுக்கு அவரது அரசு நெருப்பாகவே இருக்கிறது. நாட்டின் பொருளாதாரத்திலும் மீட்சி தென்படுகிறது. உலக அளவிலும் இந்தியாவின் செல்வாக்கு கூடி இருக்கிறது.
இதையெல்லாம் அவரது அரசியல் எதிரிகள் ஜீரணிக்க முடியாமல் தவிப்பதற்கு காரணம் உண்டு. ஏனெனில் மோடியின் அரசு ஒவ்வொரு படி உயரும்போதும் அவரது அரசியல் எதிரிகளின் எதிர்காலம் ஆட்டம் காண்கிறது. எனவே இந்த அரசு நல்லது செய்தாலும் கூட அவர்கள் விமர்சித்துக் கொண்டுதான் இருப்பார்கள். ஆனால், கலைஞர்களும் எழுத்தாளர்களும் கல்வியாளர்களும் அரசியல் சாயமற்றவர்களாக இருக்க வேண்டும். அதையே மக்களும் விரும்புகிறார்கள். அரசு தவறு செய்தால் அதை நடுநிலைமையுடன் தட்டிக் கேட்கும் திராணி அவர்களுக்கே உண்டு.
அந்தக் கடமையை அவர்கள் நிறைவேற்ற வேண்டுமானால், அவர்கள் எந்தப் பக்கமும் சாராதவர்களாக இருக்க வேண்டும். ஆனால், நமது அறிவுஜீவிகளில் பெரும்பாலோர் முன்முடிவுகளுடன் கூடிய பிரசாரத்தை எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாகவும் மோடிக்கு எதிராகவும் நடத்தி வந்திருக்கிறார்கள்.
மோடி பிரதமரானால் நாட்டை விட்டே வெளியேறி விடுவதாக முழங்கிய பலர் உண்டு. அவர்கள் இப்போதும் இந்தியாவில் தான் இருக்கிறார்கள். அவர்கள் தான் சகிப்புத் தன்மை நாட்டில் குறைந்துவிட்டதாக மீண்டும் சர்ச்சையைக் கிளப்பினார்கள். உ.பி. மாநிலத்தின் தாத்ரி என்ற இடத்தில் ஒரு முஸ்லிம் சகோதரர் பசுவதை செய்தார் என்பதற்காகக் கொல்லப்பட்டார் என்பது, அவர்களின் வெறும் வாய்க்கு மெல்லக் கிடைத்த அவலானது.
அதேபோல, காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் இரு எழுத்தாளர்கள் கொல்லப்பட்ட பழைய நிகழ்வுகளையும் அத்துடன் கோர்த்துக் கொண்டார்கள். நாட்டில் சகிப்பின்மை அதிகரித்து விட்டது, சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நேரிட்டு விட்டது என்று தங்கள் யுத்தத்தைத் தொடங்கினார்கள். இந்த புதிய வகை யுத்தத்தில், பல எழுத்தாளர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட சாஹித்ய அகாடமி விருதுகளை திருப்பி அளித்து பிரபலம் ஆனார்கள். இந்த யுத்தம் பிகார் சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வியுற்றவுடன் காணாது போய் விட்டது என்பதையும் சொல்லியாக வேண்டும்.
இந்திய எக்ஸ்பிரஸ் விருது வழங்கும் விழாவில் உங்களிடம் சிறப்பு நேர்காணல் நடத்தப்பட்டது. மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, நஜ்மா ஹெப்துல்லா, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் போன்ற பிரபலங்களின் முன்னிலையில் நிகழ்ந்த அந்த நேர்காணலில் அற்புதமான பல நல்ல கருத்துகளையும் நீங்கள் குறிப்பிட்டீர்கள். ”என்னை இஸ்லாமியனாகப் பார்க்காதீர்கள்; நான் இந்தியனாகவே கருத்து தெரிவிக்க விரும்புகிறேன்” என்று நீங்கள் சொன்னபோது மிகவும் மகிழ்ந்தேன். அதேபோல, “அப்பாவி மக்களை மதத்தின் பெயரால் கொல்பவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல; திருக்குர்ஆன் அவ்வாறு செய்யச் சொல்லவில்லை; ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளின் காட்டுமிராண்டித்தனத்தை என்னால் ஏற்க முடியாது” என்று சொன்னபோதும், புளகாங்கிதம் அடைந்தேன்.
’பயங்கரவாதத்துக்கு மதம் கிடையாது’ என்று அண்மையில் மலேசியாவில் பிரதமர் மோடி சொன்ன கருத்தையே உங்கள் நேர்காணலில் நீங்களும் சொன்னீர்கள். அதுவரை சரிதான். ஆனால், சகிப்பின்மை விவகாரம் வந்தவுடன் உங்கள் பேச்சு மாறிவிட்டது. “நாட்டில் பாதுகாப்பின்மை நிலவுவதாக கருதுவோருக்கு தங்கள் விருதுகளை திருப்பி அளித்து அஹிம்சை முறையில் போராட உரிமை உண்டு” என்று கூறிய நீங்கள், ”எனது மனைவியும் கூட பாதுகாப்பின்மையை உணர்கிறார்’ என்றீர்கள். அதனால், இந்தியாவை விட்டு வெளியேறலாமா என்று மனைவி கேட்டதாகவும் கூறினீர்கள். அதாவது மோடி ஆட்சியில் நாட்டில் நிம்மதியாக வாழ முடியாத சூழல் நிலவுவதாக, யதார்த்தத்துக்கு மாறான கருத்தை முன்மொழிந்தீர்கள்.
நாட்டில் உண்மையிலேயே அப்படிப்பட்ட சிக்கலான நிலை காணப்படுகிறதா?
வெடிகுண்டுகளுடன் சகஜமாக நடமாடியவர்கள் இப்போது முடங்கிக் கிடக்கின்றனர். மற்றபடி சாதாரண முஸ்லிம் சகோதரர்கள் வாழ்வில் என்ன இடையூறு ஏற்பட்டது மோடியின் ஆட்சியில்? மதமாற்றத்துக்கும் இந்திய விரோத பிரசாரங்களுக்கும் வெளிநாடுகளிலிருந்து தடையில்லாமல் வந்துகொண்டிருந்த கள்ளப்பணம் தடுக்கப்பட்டிருக்கிறது மோடியின் ஆட்சியில். மற்றபடி எந்த சிறுபான்மையின சகோதரரின் இயல்பு வாழ்க்கையை பாஜக அரசு பாதிக்கச் செய்தது? தன்னை எதிர்த்தவர் என்று தெரிந்தும் தானே, உங்களையும் கமலஹாசனையும் சசி தரூரையும் தூய்மை பாரத இயக்கத்தின் விளம்பரத் தூதராக பிரதமர் மோடி அறிவித்தார்?
நாட்டுக்கு விரோதமாக செயல்படுவோருக்கு இந்த ஆட்சியில் பல தடைகள் உள்ளன என்பது உண்மை தான். இத்தனை நாட்களாக கல்வித் துறையிலும் கலாசாரத் துறையிலும் ரத்தம் உறிஞ்சும் அட்டைகள் போல ஒட்டி இருந்தவர்கள் அகற்றப்பட்டார்கள் என்பதும் உண்மைதான். முந்தைய ஆட்சி போலல்லாது சுயநலவாதிகளின் ஊழல் குற்றங்களையும் சிறுபான்மையினரின் மத அடிப்படைவாதக் குற்றங்களையும் கண்டுகொள்ளாமல் இருக்க மோடி அரசால் முடியாது. அதேசமயம், பெரும்பான்மையினர் என்பதற்காக ஹிந்துக்களே தவறு செய்தாலும் அதைக் கண்டிக்காமல் இந்த அரசு இருக்காது. குஜராத் கலவரத்திற்காக சிறையில் தள்ளப்பட்ட ஹிந்துக்களின் எண்ணிக்கை புள்ளிவிவரங்களிலிருந்தே இந்த உண்மையை உணர முடியும். அதாவது மோடியின் அரசு சட்டம் ஒழுங்கைப் பொருத்த மட்டிலும் மதரீதியான பாகுபாட்டை அனுமதிப்பதில்லை.
ஆயினும் எந்த ஒரு ஜனநாயக இயக்கத்திலும் உள்ளிருந்து பலவகைப்பட்ட குரல்கள் ஒலிக்கவே செய்யும். மக்களவையில் பெரும்பான்மை பெற்றும் பசுவதை தடை சட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை, ராமர் கோயில் கட்ட முடியவில்லை என்ற ஆதங்கங்கள் இருக்கவே செய்கின்றன. அதை சிலர் வெளிப்படுத்துகிறார்கள். தவிர, மதச்சார்பின்மை என்ற பெயரில் சீண்டப்படும்போது, பாஜகவினர் சற்று அதிகமாகவே பதிலடி கொடுக்கிறார்கள். அதற்காக, சில அதிதீவிர இந்துத்துவரகள் ஆற்றாமையால் பேசுவதே அரசின் குரல் என்பதுபோல எடுத்துக்கொள்ள முடியுமா?
அரசு நிர்வாகத்தில் பாரபட்ச அணுகுமுறை காணப்பட்டால் அதைக் கண்டிப்பது நாட்டுநலம் விழைவோரின் கடமை. இந்த அரசு முந்தைய காங்கிரஸ் அரசுகள் போல சிறுபான்மையினரை தாஜா செய்யும் நடவடிக்கையில் இறங்கவில்லை என்பது உண்மை. அதேசமயம், அரசியல் சட்டத்துக்கு அப்பாற்பட்டு மக்களை பெரும்பான்மை- சிறுபான்மை என்று பிரித்து பாகுபாடு காட்டிய காங்கிரஸ் ஆட்சி போல மோடி ஆட்சி செயல்படவில்லை என்பதும் உண்மை.
தாத்ரியில் நிகந்த கொடூரத்துக்கு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியவர் உ.பி. முதல்வர் (சமாஜ்வாதி) என்பதும், கல்புர்கி கொலை வழக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டியவர் கர்நாடக முதல்வர் (காங்கிரஸ்) என்பதும், சிறுபிள்ளைக்கும் தெரியும் . இங்கு எதற்கு பிரதமரை வம்புக்கு இழுக்க வேண்டும்? மத்திய உள்துறை அமைச்சர் என்ற முறையில் இவ்விரு சம்பவங்களிலும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ராஜ்நாத் சிங் உத்தரவிட்டது, அறிவுஜீவிகள் கவனத்துக்கு வரவில்லையா?
நிலைமை இவ்வாறிருக்க, நாட்டில் ஏதோ நடக்கக்கூடாத 1975-ம் வருடத்திய நெருக்கடிநிலை அல்லது 1984-ம் வருடத்திய சீக்கியர் படுகொலை போன்ற அசம்பாவிதங்கள் நடந்துவிட்டது போல நீங்கள் ஏன் பேசினீர்கள்? உங்களை இவ்விஷயத்தில் பின்னிருந்து காங்கிரஸ் கட்சி தான் இயக்குகிறது என்று பாஜக தலைவர் ஷாநவாஸ் உசேன் கூறியிருப்பதை நம்பாமல் இருக்க முடியவில்லை.
அரபு நாடுகளில் உள்ள முஸ்லிம் ரசிகர்களை திருப்திப்படுத்தவே நீங்கள் இவ்வாறு பேசியதாகவும், நிழல் உலக தாதா ஒருவரின் சமிக்ஞைப் படியே நீக்கள் இவ்வாறு பேசினீர்கள் என்றும் சமூக ஊடகங்களில் உங்கள் ரசிகர்களே கொந்தளித்தார்கள். அதை நான் நம்பவில்லை. இது உங்கள் திரையுலக வர்த்தக தந்திரம் என்றும் கூட கமஹாசனால் (அவரும் இப்படித்தான் ’விஸ்வரூபம்’ படத்துக்கு பயங்கரவாதிகளால் மிரட்டல் வந்தபோது நாட்டை விட்டு வெளியேறுவதாகச் சொன்னார்;. இப்போதும் சென்னையில் தான் இருக்கிறார்) அனுபவம் பெற்றவர்கள் சொல்கிறார்கள். உங்களை அந்த அளவுக்கு கீழ்த்தரமானவராக என்னால் நினைக்க முடியவில்லை.
பிற்பாடு எதிர்ப்பு எழுந்தவுடன், “இந்தியாவை விட்டு நானோ எனது குடும்பமோ வெளியேறப்போவதில்லை. இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். எனக்கு யாருடைய சான்றிதழும் தேவையில்லை” என்று பல்டி அடித்தீர்கள். இந்த அளவுக்கு மக்களிடம் எதிர்ப்புக் கிளம்பும் என்பதை நீங்கள் எதிர்பார்க்கவில்லை என்பது உங்கள் விளக்கத்தில் தெரிய வந்தது. உங்கள் விளக்கத்துக்கு நெஞ்சார்ந்த நன்றி.
ஆனால், உங்கள் குழந்தைகளை இதியாவில் பாதுகாப்பாக வளர்க்க முடியாது என்று தோன்றியபோது வேறெந்த நாட்டுக்கு குடி பெயரலாம் என்று நீங்கள் நினைத்தீர்கள்? அதைக் குறிப்பிட்டால், எனக்கும் அப்படிப்பட்ட சூழல் வந்தால் தப்பியோடி வர வசதியாக இருக்கும். நான் உங்களைப் போல கோடீஸ்வரன் அல்ல என்பதால், இப்போதே சொன்னால் தான் பத்து வருடங்கள் கழித்தேனும் இந்தியாவில் இருந்து தப்ப வசதியாக இருக்கும்.
நீங்கள் அல்குவைதாவையும், தலிபான்களையும் வளர்த்துவிடும் பாகிஸ்தானுக்குப் போக நிச்சயம் விரும்ப மாட்டீர்கள் என்று எனக்கே தெரியும். இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட அமெரிக்காவுக்கோ, நிறவெறி தாண்டவமாடும் ஆஸ்திரேலியாவுக்கோ, அண்மையில் குண்டுகள் வெடித்த பெருமைக்குரிய பிரான்ஸுக்கோ, எப்போது குண்டு வெடிக்குமோ என்ற பீதியில் நாடு முழுவதும் கோட்டை போல அரண் அமைத்து நடுங்கிக்கொண்டிருக்கும் பெல்ஜியத்துக்கோ போக நீங்கள் நிச்சயம் விரும்ப மாட்டீர்கள்.
இஸ்லாமிய நாடு எதற்கேனும் பொக நீங்கள் விரும்பினாலும், போகோஹரம், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் போன்ற பலநூறு மதவெறிக் குழுக்கள் சக இஸ்லாமியரையே கொல்லும் காட்சிகள் தினந்தோறும் அரங்கேறுவதால் அந்த நாடுகளை உங்கள் மனைவி ஆதரிக்க மாட்டார் என்று நினைக்கிறேன். சீனா செல்லலாம் என்றால் அங்கு இஸ்லாமியர் என்றாலே கம்யூனிஸ அரசுக்கு வேப்பங்காயாகக் கசக்கிறது. ரஷ்யாவில் போய் வாழலாம் என்றால் சிரிய பயங்கரவாதிகளால் புடினுக்கும் இஸ்லாமியர்கள் மேல் ஆத்திரமாக இருக்கிறது.
எந்த ஐரோப்பிய நாட்டுக்குச் சென்றாலும் உங்கள் பெயரின் பின்னோட்டான ’கான்’ என்ற சொல்லால் அவதிப்பட நேரும் என்பதால் (ஷாரூக் கானின் அனுபவம் உங்களுக்கும் நேரலாம்) அதை உங்கள் மகன்களான கான்கள் இருவரும் விரும்ப வாய்ப்பில்லை. பிறகு வேறெந்த நாட்டுக்கு நீங்கள் செல்ல உத்தேசித்தீர்கள் என்பதை அடுத்த நேர்காணலிலேனும் தெளிவாகக் குறிப்பிடுங்கள். உங்கள் ரசிகர்களுக்கும் பிற்காலத்தில் அது உதவும்.
அதேபோல, அரவிந்த் கேஜ்ரிவால், ராகுல், யெச்சூரி போன்ற அரசியல்வாதிகள் உங்கள் கருத்தை ஆதரிப்பதாக நம்பி அவர்கள் பின்னே சென்று விடாதீர்கள். நீங்கள் இந்தியாவை விட்டு செல்ல எண்ணியது தான் இந்த நீளமான கடிதம் எழுத என்னைத் தூண்டிவிட்டது. அதைவிட, உங்கள் கருத்து அரசியலாக்கப்படும் அபாயம் தெரியாமல் இப்படி கள்ளம் கபடம் இல்லாதவராக நீங்கள் இருக்கிறீர்களே என்பதும் என் கவலை.
\ மற்றபடி உங்கள் அடுத்த திரைப்படத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். அதிலாவது ‘பி.கே’ படத்தில் செய்தது போன்ற மத உணர்வுகளைக் காயப்படுத்தும் காரியங்களை செய்து விடாதீர்கள் என்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
உங்கள் அன்பு ரசிகன்
சேக்கிழான்
சில தன்மானக் குரல்கள்:
ராம்கோபால் வர்மா (முன்னணி திரைப்பட இயக்குநர்):சகிப்பின்மை குறித்து சில பிரபலங்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறார்கள். சகிப்பின்மை அதிகரித்துவிட்டதாக அவர்களால் குறிப்பிடப்படும் இந்த நாட்டில்தான் அவர்கள் பிரபலமாக வளர்ந்தார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.
அனுபம் கெர் (மூத்த நடிகர்):அமீர்கான், இந்த நாடுதான் உங்களை இந்த உச்சத்தில் அமர்த்தி அழகு பார்த்திருக்கிறது. இதைவிட்டு நீங்கள் எந்த நாட்டுக்குச் செல்ல முடியும்? பல மோசமான தருணங்களிலும் கூட இந்த நாட்டில் தான் நீங்கள் வாழ்ந்து வந்தீர்கள். அப்போதெல்லாம் ஏன் வேறு நாட்டுக்குச் செல்ல வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றவில்லை?உன்னதாமன் இந்தியா உங்களுக்கு எப்போது சகிப்பற்ற இந்தியாவாக மாறியது?
ரவீணா தாண்டன் (பிரபல நடிகை):யாரெல்லாம் மோடி பிரதமராகக் கூடாது என்று விரும்பினார்களோ, அவர்கள் தான் இந்த அரசு வீழ வேண்டும் என்று நினைக்கிறார்கள். அரசியலுக்காக நாட்டைக் களங்கப்படுத்துகிறார்கள்…. மும்பையின் இதயப்பகுதியில் குண்டுகள் வெடித்தபோதோ, 26/11 நிகழ்வில் நமது பாதுகாப்பு நடைமுறைகள் தகர்க்கப்பட்டபோதோ, இவர்கள் ஏன் பாதுகாப்பின்மையை உணரவில்லை?... மோடி பிரதமரானதிலிருந்து தாங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்று தைரியமாகச் சொல்ல முடியாதவர்கள் தான் நாட்டின் பெயரை சீர்குலைக்கிறார்கள்…. உண்மையிலேயே உங்களுக்கு துணிவு இருக்குமானால், யாரை எதிர்க்கிறீர்களோ அதை தெளிவாகச் சொல்லுங்கள். அதற்காக ஒட்டுமொத்த நாட்டின் மீதும் பழி சுமத்தாதீர்கள்….
ரிஷி கபூர் (மூத்த நடிகர்):அமீர்கானுக்கும் அவரது மனவிக்கும் எனது வேண்டுகோள். சில விஷயங்கள் உங்களுக்கு மாறானதாகத் தோன்றினால், அதை மாற்ற முயலுங்கள். அமைப்பில் திருத்தம் செய்யப் பாடுபடுங்கள். அதை விடுத்து தப்பியோடக் கூடாது. ஒரு கதாநாயகனுக்கு இது அழகல்ல!
-விஜயபாரதம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக