தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ஏற்பட்ட வெள்ளச்சேதம் உலக அளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. பருவநிலை மாற்ரமே இதற்குக் காரணம் என்று சூழலியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். எது எப்படியோ, இயற்கையின் முன் மனித சக்தி முடங்கிப்போகும் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
இந்த வெள்ளத்தில் ஆயிரக் கணக்கானோர் வீடுகளை இழந்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் கூவம், அடையாறுகளின் கரைகளில் வசித்தவர்கள். எப்போது மழை வெள்ளம் வந்தாலும் இவர்கள் பாதிக்கப்படுவது வழக்கமான ஒன்றாகவே இருந்து வருகிறது. ஆனால், இந்த முறை கடந்த நூறு ஆண்டுகளில் பெய்யாத கனமழையால், மாடிவீட்டு ஏழைகளை இயற்கை உருவாக்கிக் காட்டி இருக்கிறது. மாடி வீடுகளில் வசித்தவர்களும், நடுத்தர வர்க்கத்தினரும் கூட, வெள்ளத்தில் சிக்குண்டு வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்தார்கள்.
இந்த வெள்ளச் சேதத்துக்கு இயற்கை காரணமா, மனிதத் தவறுகள் காரணமா என்ற விவாதமும் துவங்கி இருக்கிறது. மழையால் ஏற்பட்ட வெள்ளச் சேதத்தைவிட, சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரியான செம்பரம்பாக்கம் ஏரி முன்னெச்சரிக்கையின்றித் திறந்துவிடப்பட்டதே பேரழிவுக்குக் காரணம் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. அரசைக் குற்றம் சாட்டுவதையே நோக்கமாகக் கொண்டவர்கள் வெள்ளத்திலும் சுயலாப மீன் பிடிக்கவே முயல்கிறார்கள். இந்த ஆண்டு பெய்த அடைமழையின் போக்கைக் கண்ணுறும் எவரும், ஒற்றைப்படையான முடிவுக்கு வர மாட்டார்கள்.
தமிழகத்தில் வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் வட கிழக்கு பருவமழை பொழியும். ஐப்பசி அடைமழை என்பது பொதுவான பழமொழி. ஆனால், கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழகம் முழுவதிலுமே அதிக மழைப்பொழிவு நவம்பர் 10 முதல் டிசம்பர் 10 வரையிலான நாட்களில் பதிவாகி இருக்கிறது. ஆண்டு முழுவதும் பெய்யும் மழை அளவையே இந்தக் காலகட்ட மழை விஞ்சிவிட்டது. குற்இப்பாக, சென்னை, திருவள்ளூஊர், காஞ்சிபுரம், கடலூர், நாகை மாவட்டங்களில் இயல்புநிலையை விட பல மடங்கு மழை பெய்தது.
இத்தகைய மழைபெய்யும் என எவரும் எதிர்பார்க்கவில்லை. அரசும் ஆயத்தமாக இல்லை. அதுவே மழைவெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களின் அளவு அதிகரித்ததன் காரணம். கடந்த 15 ஆண்டுகளாக சரிவர மழை பெய்யாததால் ஏரி, குளப்பகுதிகளை ஆக்கிரமித்து மனைப்பிரிவாக்கிய புண்ணியவான்களுக்கும் இதில் பெரும் பங்குண்டு. நீர்நிலைகளை முறைப்படி பராமரிக்காமல் வெற்றுக் கணக்கு எழுதிய பொதுப்பணித் துறைக்கும், கண்ணை மூடிக்கொண்டு மனைப்பிரிவுகளுக்கு அனுமதி வழங்கிய உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நகரமைப்புத் திட்ட அதிகாரிகளுக்கும் இந்த வெள்ளச் சேதம் இப்போது உண்மையை உணர வைத்திருக்கும். நீர்நிலைப் புறம்போக்கு என்றாலே, ஆளும் கட்சியினர் ஆக்கிரமிக்கத் தோதான இடம் என்ற எண்ணத்தையும், அரசு கட்டடங்கள் எழுப்பக் கிடைத்த இடம் என்ற அரசின் எண்ணத்தையும் தவிடுபொடி ஆக்கியிருக்கிறது இந்த மழை.
நீர்நிலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த முதல்வர் காமராஜ் ஆட்சி தமிழகத்தில் எப்போது முற்றுப் பெற்றதோ, அப்போதே நீர்நிலைகளுக்கு கெட்டநேரம் துவங்கிவிட்டது. பெருமழையின் வடிகால்களாக விளங்கிய ஏரிகள் பலவும் பரப்பளவில் சுருக்கப்பட்டன. ஏரி, குளசம், கோயில் தெப்பக்குளங்களுக்கு நீர் வரும் வாய்க்கால்களும் அடைக்கப்பட்டன. வேகமான நகரமயமாதலின் விளைவாக ஏற்பட்ட இந்தச் சீரழிவின் அடையாளமே, தண்ணீர் தேங்க இடமின்றி, பல இடங்களை வெள்ளக் காடாக்கிய காட்சிகள்.
இம்முறை பருவமழை நவ. 9-இல் துவங்கியது. அன்று முதல் தொடர்ந்து டிச. 10 வரை தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து கொண்டே இருந்தது. இதில் மிக அதிக மழைப்பொழிவால் முதலில் பாதிக்கப்பட்டது கடலூர் மாவட்டம். நெய்வேலியில் டிச. 9-இல் பெய்த பெருமழையால் நிலக்கரிச் சுரங்கங்களும் மூழ்கின; கடலூர் வெள்ளக்காடானது. பண்ருட்டி அருகே விசூர் என்ற கிராமமே வெள்ளத்தில் அழிந்துபோனது.
நவ. 12-ல் சென்னை, திருவள்ளூர், காஞ்சி மாவட்டங்களை பதம் பார்த்தது மழை. இந்த முதல் மழையிலேயே தலைநகரம் திண்டாடிப்போனது. நவ. 16 வரையிலான ஒருவாரத்தில் மட்டும், வழக்கத்தைவிட 82 சதவீதம் அதிகமாக (910 மி.மீ) மழை தமிழகம் முழுவதும் பதிவானது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிக மூன்று மாதங்களில் பெய்யும் மழை இந்த ஒரே வாரத்தில் பெய்து தீர்த்தது. இதனால், சென்னை அருகே வேளச்சேரி, செம்மஞ்சேரி ஏரிகள் உடைந்தன; காஞ்சி மாவட்டத்திலும் 8 ஏரிகள் உடைந்தன. இதனால் மாநிலம் முழுவதும் 108 பேர் பலியாகினர்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் அனைத்துமே நவ. 16-லேயே நிரம்பிவிட்டன. இதனால், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 10,000 கன அடி நீர் அடையாற்றில் திறந்துவிடப்பட்டது. அதன் தாக்கம் சென்னை மாநகரில் எதிரொலித்தது.
அதேசமயம், அண்டை மாநிலமான ஆந்திரத்தில் பெய்த கனமழையால், அங்கிருந்து உற்பத்தியாகும் குசஸ்தலை, ஆரணி, பாலாறு ஆகிய ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டோடியது. கூவத்தின் இணைப்பான பக்கிங்ஹாம் கால்வாயிலும் நீர் வரத்து அதிகரித்து, சென்னை மக்களை மிரட்டியது.
இதனிடையே, நவ. 24-இல் மீண்டும் பலத்த மழை சென்னையை நிலைகுலைய வைத்தது. சென்னை நகரில் உள்ள 36 சுரங்கப்பாதைகளில் பெரும்பாலானவை மூழ்கியதால் போக்குவரத்து முடங்கியது. கொரட்டூர் ஏரி நிரம்பி வழிந்ததில், வில்லிவாக்கம், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற்பேட்டைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மாநில அரசின் வேண்டுகோளை ஏற்று மத்தியக் குழு தமிழகத்தைப் பார்வையிட வந்து மூன்று நாட்கள் ஆய்வு செய்தது.
மழை இடைவிடாது மிரட்டிக் கொண்டிருந்தது. குசஸ்தலை ஆற்றுப்பாலம், புதுசத்திரம் கூவம் பாலம் ஆகியவை உடைந்தன. சென்னையின் பல புறநகர்ப்பகுதிகளில் முதல் மழையின் வெள்ளமே வடியாத நிலையில் இரண்டாவது மழை நிலைமையை மேலும் சிக்கலாக்கியது. பள்ளிக்கரணை, முடிச்சூர், நங்கநல்லூர், குரோம்பேட்டை, வளசரவாக்கம், வேளச்சேரி பகுதிகளில் பாதிப்பு அதிகமாக இருந்தது. பல வீடுகள் முதல்மாடி வரை நீரில் மூழ்கின. அங்கிருந்த வசதியான மக்கள் பலரும் உயிரைக் காக்க அதுவரை சம்பாதித்த அனைத்தையும் விட்டுவிட்டு ஓடிவர வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ராணுவம் சரியான நேரத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டு பல்லாயிரக் கணக்கானோரை மீட்டது.
இந்த நிலையில் மூன்றாவது பெருமழை டிச. 1-இல் துவங்கியது. அதன் விளைவாக செம்பரம்பாக்கம் ஏரி முழுமையாக நிரம்பி உடையும் நிலை ஏற்பட்டதால், விநாடிக்கு 30,000 கன அடி திறக்கப்பட்டதால் அடையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சைதாப்பேட்டை பாலம் மூழ்கிய காட்சி இன்னமும் பல ஆண்டுகளுக்கு சென்னைவாசிகளுக்கு மறக்காது.
பெருங்களத்தூர், அனகாபுத்தூர், மனப்பாக்கம், ஜாபர்கான் பேட்டை போ
ன்ற பல பகுதிகள் வெள்ளத்தின் சீற்றத்தால் தத்தளித்தன. பல்லாயிரம் வீடுகள் நாசமாயின. லட்சக் கணக்கானோர் அகதிகள் ஆயினர். சென்னை விமான நிலைய ஓடுதளங்களை வெள்ளம் மூழ்கடித்து விமான சேவையை நிறுத்தச் செய்தது. தண்டவாளங்கள் பாதிப்பால் ரயில் சேவையும் முடங்கியது. நகரில் சாலைகள் எங்கும் வெள்ளம் பாய்ந்த நிலையில் பேருந்துப் போக்குவரத்தும் நின்றுபோனது. கலியுகத்தின் கடைசி ஊழிக்காலம் எப்படி இருக்கும் என்பதற்கான சிறு மாதிரியாக இந்த காட்சிகள் அமைந்தன.
இந்த வெள்ளத்தால் இதுவரை சுமார் 10,000 வீடுகள் நாசமாகி இருப்பதாக அரசு கூறுகிறது. உண்மை நிலவரம் இதைவிட பல மடங்கு இருக்கலாம். வெள்ளப்பகுதிகளிலிருந்து மீட்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை மட்டுமே 16.97 லட்சம். அவர்களுக்காக அரசு சார்பில் நடத்தப்பட்ட நிவாரண மையங்களின் எண்ணிக்கை 6,081. கிட்டத்தட்ட 1.13 கோடி பேருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இவையல்லாமல், ஆர்.எஸ்.எஸ். போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உடனடி நிவாரண உதவி தனிக் கணக்கு.
வெள்ளத்தால் சிக்கியவர்களை மீட்க 1,200 ராணுவ வீர்ர்கள், 600 கப்பல் படை, விமானப்படை வீரர்கள், 10-க்கு மேற்பட்ட ஹெலிகாப்டர்கள், 1,920 தேசிய பேரிடர் மீட்புப் படையினர், 30,000 காவல் துறையினர், 1,400 தீயணைப்புப் படையினர், 45,000 அரசுத் துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர். இது ஒரு மாபெரும் மீட்புப் பணி.
டிச. 10-இல் மழை நிற்கும் வரை, மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றன. இப்ப்போது வெள்ளத்தால் அனைத்தையும் இழந்து நிற்பவர்களின் மறுவாழ்வுக்கான நிவாரண நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் குறித்து வருவாய்த்துறையினர் கணக்கெடுக்கிறார்கள். இந்த மழை, வெள்ளத்தால் தொழில் துறைக்கு ரூ. 30,000 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கும் என்றும், மக்களின் இழப்பு லட்சம் கோடியைத் தாண்டும் என்றும் மதிப்பிடப்படுகிறது.
எனவே, தமிழக வெள்ளச் சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ஏற்கனவே வெள்ளச்சேதத்தை நேரில் வந்து பார்வையிட்ட பிரதமர் மோடி, உடனடி உதவியாக அறிவித்த ஆயிரம் கோடியும், அதற்கு முன் அறிவித்த ரூ. 939 கோடியும் தமிழகத்தின் பாதிப்புக்கு ஈடாகாது.
தற்போது நிவாரணப்பணியில் கண்ணும் கருத்துமாக ஈடுபட வேண்டிய நேரம். இதில் அரசியல் செய்யக் கூடாது. ஆளும் கட்சியினர் அதீத ஆர்வத்தால் ஜெயலலிதாவின் படங்களை நிவாரணப் பொருள்களில் ஒட்டுவது போலவே, எதிர்க்கட்சியினரின் வசைபாடல்களும் அதீதமாகத் தான் இருக்கின்றன. இத்தகையை இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்ள நமக்கு இதுவரை போதிய பயிற்சி இல்லை என்பதே இந்த வெள்ளச் சேதத்தால் தெரிய வந்த சேதி.
மழையின் சக்தியை எதிர்பார்க்காத சுயநலவாதிகளின் ஆக்கிரமிப்பு சேதத்தை அதிகப்படுத்திவிட்டது. இதற்கு தனிப்பட்ட யாரையும் குற்றம் சொல்ல முடியாது. ஏரிப்பகுதி என்று தெரிந்திருந்தும் அங்கு வீடு கட்டிய மக்கள் முதல் அனைவருக்குமே இதில் பொறுப்புண்டு.
தலைநகர் சென்னையில் ஏற்பட்ட பாதிப்பில் கடலூர் பாதிப்பும் பிற மாவட்ட பாதிப்புகளும் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன. அங்கும் நிவாரண நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த இடர்மிகு தருணத்தில் அரசை நிலைகுலையச் செய்யாமல், அனைவரும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள நிவாரண அறிவிப்புகள் ஏழை மக்களுக்கானவை. நடுத்தர மக்கள் பலர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அவர்களின் உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்களின் நலனையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும். கல்வி நிலையங்கள் சுமார் ஒருமாத காலம் சென்னை, திருவள்ளூர், காஞ்சி மாவட்டங்களில் இயங்கவில்லை. எனவே, நடப்புக் கல்வியாண்டின் நிகழ்ச்சிநிரல்களை அரசு மாற்றி அமைக்க வேண்டும்.
இந்த வெள்லத்தால் மாநிலம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் ஹெக்டேர் விவசாய விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு உரிய கடனுதவி, நிவாரண உதவிகளும் முக்கியமானவை. இந்நேரத்தில் தன்னார்வ அமைப்புகளும் அரசும் இணைந்து செயல்படுவது மக்களின் துயரைக் குறைக்கும். மக்கள் இந்த மாபெரும் தியரிலிருந்து முதலில் மீளட்டும். அதன் பிறகு வெள்ளச் சேதத்தின் பின்புலங்களை தீர்க்கமாக ஆராயலாம்.
விஜயபாரதம் (18.12.2015)
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக