வெள்ளி, நவம்பர் 20, 2015

மியான்மரில் நம்பிக்கை ஒளிக்கீற்று


அண்டை நாடான மியான்மரில் (பர்மா) ஜனநாயகம் மீட்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கு, அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூகியின் தியாகமயமான வாழ்க்கையே காரணமாகி உள்ளது. மியான்மரில் ராணுவ ஆட்சி மாறி ஜனநாயக ஆட்சி அமைவதற்கான புதிய நம்பிக்கை ஒளி தோண்டியிருப்பது இந்தியாவுக்கு மிகவும் நல்லது.

இந்தியாவுக்கும் பர்மாவுக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு. புவியியல் ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் இந்தியாவுடன் மிகவும் ஒருங்கிணைந்த நாடு பர்மா. இரு நாடுகளுமே ஆங்கிலேயக் காலனியாதிக்கத்தால் பாதிக்கப்பட்டவை. இந்தியா சுதந்திர பெற்று சிறிது காலம் கழித்தே (1948 ஜனவரி 4) பர்மா சுதந்திரம் பெற்றது. அதற்காக பிரிட்டாஷாருடன் போராடியவர் தான் ஜெனெரல் ஆங் சான். அவர் நவீன பர்மிய ராணுவத்தை உருவாக்கியவர். பிரிட்டீஷ் ஆட்சியின்போது பர்மியப் பிரதமராக இருந்த ஆங் சான் 1947-இல் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மகள் தான் இப்போது மியான்மர் மக்களின் நம்பிக்கை ஒளியாக உருவாகியுள்ள ஆங் சான் சூகி.

பர்மா விடுதலை பெற்ற பிறகு பிரிட்டாஷாரின் உதவியுடன் அங்கு ராணுவ ஆட்சி அமைக்கப்பட்டது. பிறகு நாட்டின் பெயரும் மியான்மர் என்று மாற்றப்பட்டது. அன்றுமுதல் இன்றுவரை அங்கு ராணுவ ஆட்சியாளர்களின் கரமே ஓங்கி இருக்கிறது. இதை எதிர்த்துப் போராடியதற்காக பல்லாண்டுகள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார் சூகி.

1945, ஜூன் 19-இல் பிறந்த ஆங் சான் சூகி, தனது பள்ளிப்படிப்பு, இளநிலை கல்லூரிப் படிப்புகளை தில்லியில் (1964)  நிறைவு செய்தார். அப்போது அவரது தாய் இந்தியாவுக்கான மியான்மர் தூதராக தில்லியில் இருந்தார். பிறகு லண்டன் சென்ற சூகி ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலையிலும் லண்டன் பல்கலையிலும் படித்தார். அரசியல், பொருளாதாரம், இலக்கியம் ஆகிய துறைகளில் பட்டம் பெற்ற சூகி, திபெத்திய பண்பாட்டு ஆய்வாளராக இருந்த மைக்கேல் ஆரிஸ் என்ற பிரிட்டன் குடிமகனை திருமணம் (1972)  செய்துகொண்டார். அவர்களுக்கு இரு மகன்கள் பிறந்து பிரிட்டன் குடிமகன்களாகவே வளர்ந்தனர்.

1988-இல் தனது தாய் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டபோது தாய்நாடு திரும்பிய சூகி, அங்கு ராணுவ ஆட்சியால் நாடு தவிப்பதைக் கண்டு, ஜனநாயகத்துக்கான போராட்டத்தில் இறங்கினார். தாயின் மறைவை அடுத்து, தேசிய ஜனநாயக லீக் என்ற மியான்மர் நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியின் தலைவரானார்.

சூகியின் அரசியல் பிரவேசம் மியான்மரில் பெருத்த கொந்தளிப்பை ஏற்படுத்தியதால், அவரை வீட்டுச்சிறையில் வைத்தனர் ராணுவ ஆட்சியாளர்கள். 1989, ஜூலை 20 முதல், வீட்டுச்சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 2010, நவம்பர் 13 வரையிலான 21 ஆண்டுகளில் இடையிடையே சில காலங்களைத் தவிர்த்து, சுமார் 15 ஆண்டுகள் வீட்டுச்சிறையிலேயே வைக்கப்பட்டு, அவரது வெளியுலகத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.

இதனிடையே 1990-இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சூகியின் கட்சி, போட்டியிட்ட 485 இடங்களில் 395 இடங்களில் வென்றது. ஆனால், அவரை அதிபராக்காமல் சிறையில் வைத்தது ராணுவம். அதற்கு உலக அளவில் எதிர்ப்பு எழுந்தபோதும், ராணுவத்தின் பிடியிலிருந்து சூகியும் மியான்மரும் விடுபட முடியவில்லை.

மியான்மர் ஆட்சியாளர்களுக்கு சீன அரசின் பின்புலம் இருப்பதால், அங்கு ஜனநாயகக் குரல்கள் எடுபடவில்லை. ஆயினும் சூகி தளராமல் ஜனநாயகத்துக்காகப் போராடி வந்தார். 1991-இல் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதைப் பெற வெளிநாடு செல்லவும் அவர் அனுமதிக்கப்படவில்லை. 1999-இல் தனது கணவர் ஆரிஸ் இறந்தபோதும் அவர் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்குச் செல்ல சூகி அனுமதிக்கப்படவில்லை.

மியான்மரில் தொடரும் ராணுவ ஆட்சிக்கு எதிராக உலக நாடுகளில் கண்டனங்கள் எழுந்தன. ஐக்கிய நாடுகள் சபையும் அங்கு ஜனநாயகம் திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தி வந்தது. 1996-இல் சூகி பயணம் செய்த கார் மீது கொலைவெறித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. அதிலிருந்து அவர் தெய்வாதீனமாகத் தப்பினார்.

இதனிடையே, வெளிநாட்டவரை மணந்தவர்களும் வெளிநாட்டுக் குடியுரிமை கொண்டுள்ள குழந்தைகளைப் பெற்றவர்களும் மியான்மர் தேர்தலில் வென்றாலும் அதிபராக முடியாது என்று 1998-இல் முக்கியமான சட்டத் திருத்தம் ராணுவ ஆட்சியாளர்களால் கொண்டுவரப்பட்டது. இது சூகியின் அதிகாரத்தை நோக்கிய பயணத்தைத் தடுக்கவே என்பது அனைவரும் அறிந்தது தான்.

ஆயினும் ஆக் சான் சூகியின் அஹிம்சை வழியிலான தொடர் போராட்டம் காரணமாகவும், ராணுவ ஆட்சிக்கெதிராக மக்களை விழிப்புணர்வுடன் வைத்திருந்த அவரது தலைமை காரணமாகவும், உலக நாடுகளின் நிர்பந்தத்தால் அங்கு அண்மையில் ஜனநாயக ரீதியான தேர்தல்கள் நடத்தப்பட்டன. ராணுவத்தின் ஆதிக்கத்தையும் மீறி, மொத்தமுள்ள 3 கோடி வாக்காளர்களில் 80 சதவீதத்தினர் வாக்களித்தனர். இந்த இடத்தில் மியான்மர் தேர்தலின் சிக்கலான சூழலை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மியான்மர் அரசில் ஆட்சியை நிர்வகிக்க இரு அவைகள் உள்ளன. மக்கள் பிரதிநிதிகளின் அவையில் 440 பேரும் மேலவையில் 224 பேரும் இருந்தாக வேண்டும். இவர்களுள் 25 சதவீதம் ராணுவத்தினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது, பிரதிநிதிகள் அவையில் 110 பேரும், மேலவையில் 56 பேருமாக மொத்தமுள்ள 664 உறுப்பினர்களில் 166 பேர் ராணுவத்தினராக நியமனம் செய்யப்படுகின்றனர். இந்த இடங்கள் தவிர்த்த பிற இடங்களுக்கே (498) அங்கு தேர்தல் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி நவம்பர் 8-இல் நடைபெற்ற தேர்தலில் 498 இடங்களில் 348 இடங்களில் சூகியின் தேசிய ஜனநாயக லீக் வென்றது. தவிர, அக்கட்சி வென்ற வாக்குவிகிதத்தின் அடிப்படையில் மேலும் 21 இடங்களை தேர்தல் ஆணையம் அளித்தது. சூகி தான் போட்டியிட்ட காஹ்மு தொகுதியில் மாபெரும் வெற்றி பெற்றார்.

ஆளும் கட்சியான ஒற்றுமைக் கட்சி, ராணுவத்தால் இயக்கப்படுவது. அக்கட்சிக்கு 134 இடங்களே கிடைத்துள்ளன. இந்தியாவைப் போலவே மியான்மரிலும் அரசியல் கட்சிகள் அதிகம். அங்கு தேர்தலில் 90 கட்சிகள் போட்டியிட்டன. பல இடங்களில் ராணுவத்தினரும் ஆளும் கட்சியும் தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டும் சூகியை வெல்ல முடியவில்லை. அந்நாட்டு மக்கள் அதிகார மாற்றத்துக்கு வாக்களித்துள்ளனர்.

ஆனால், ராணுவம் இன்னமும் ஆட்சியின் பிடியை விட்டுக்கொடுக்கத் தயாரில்லை. 2008 சட்டத் திருத்தத்தை காரணம் காட்டி, சூகி அதிபராக முடியாது என்று, தேர்தலுக்கு முன்னமே ராணுவம் அறிவித்துவிட்டது. இந்த நிலையில் தற்போதைய ஆட்சியாளரான தேய்ன் செய்னே மீண்டும் அதிபராவார் என்று ஆங் சான் சூகி அறிவித்திருப்பது அவரது ராஜதந்திரமாகக் கருதப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றபோதும், ஆட்சியில் தற்போது அமர முடியாத சூழல் உள்ளதால், ராணுவ ஆட்சியாளரான தேய்ன் செய்னே அதிபராகத் தொடர்வார் என்றும், அவரை ஜனநாயக முறைப்படி ஆளும்கட்சித் தலைவியாக தான் வழிநடத்துவேன் என்றும் சூகி அறிவித்திருக்கிறார். மிக விரைவில், இடைக்காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்தை மாற்றி அமைக்க முடியும் என்பது சூகியின் நம்பிக்கை.

தவிர, வெற்றிக்களிப்பில் தோற்றவர்களை விமர்சிக்க வேண்டாம்; பழைய காயங்களைக் கிளற வேண்டாம் என்று தனது ஆதரவாளர்களுக்கு சூகி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், நாடாளுமன்றத் தலைவரைச் சந்தித்த சூகி, தேசிய சமரச ஆட்சி நடத்த வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார். இவை அவரது தலைமைப்பண்பையும் பெருந்தன்மையையும் வெளிப்படுத்தியுள்ளன.

மியான்மரில் நிகழ்ந்துள்ள அரசியல் மாற்றங்களை இந்தியா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. தேர்தலில் வென்ற ஆங் சான் சூகி அதிபராக அந்நாட்டு ராணுவ ஆட்சியாளர்கள் வழிவிட வேண்டும் என்று இந்திய அரசு வலியுறுத்தியுள்ளது. 2014 நவம்பரில் பிரதமர் நரேந்திர மோடி மியான்மர் சென்றிருந்தபோது, அங்கு ராணுவ ஆட்சியாளர்களையும் ஆங் சான் சூகியையியும் சந்தித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

அப்போது மோடி, “ஜனநாயகத்தின் சின்னம் ஆக் சான் சூகிஎன்று புகழ்ந்துரைத்தார். சூகியும், ”இந்தியா எனது இரண்டாவது தாய்நாடு’’ என்று உணர்ச்சி ததும்பக் குறிப்பிட்டார்.
அண்டை நாடு அமைதியாக இருந்தால்தான் நமது நாட்டிலும் நிம்மதியாக இருக்க முடியும். அந்த வகையில் மியான்மரில் நிகழ்ந்துள்ள ஆட்சி மாற்றத்துக்கான காட்சிகள் ஆரோக்கியமானவையாக உள்ளன. அந்நாட்டு ராணுவ ஆட்சியாளர்கள் மக்களின் கருத்தை மதித்து, சூகியை அதிபராக்க வேண்டும். மியான்மரில் ஜனநாயகம் திரும்புவது என்பது, இந்தியாவுக்கும் நல்லது.

முந்தைய பர்மாவின் ரங்கூனிலும் மாண்டலேயிலும் சிறைகளில் வாடிய திலகர் போன்ற உத்தம விடுதலை வீரர்களால் தான் இந்தியா ஜனநாயக சுதந்திரம் பெற்றது. இன்று அதை யாங்கூன் (ரங்கூன்) வீட்டுச் சிறையிலிருந்தபடியே சாதித்துக் காட்டி இருக்கிறார் ஆங் சான் சூகி. அவரை நெஞ்சார வாழ்த்துவோம். ஜனநாயகம் மீள வாக்களித்த அந்நாட்டு மக்களையும் பாராட்டுவோம்!


காந்தியத்தின் உபாசகர்

மியான்மரில் பெரும் மாற்றத்தை அமைதியான முறையில் நிகழ்த்தியுள்ள, 70 வயதாகும் ஆங் சான் சூகி, மகாத்மா காந்தியின் அஹிம்சைக் கோட்பாட்டில் மிகவும் ஈடுபாடு கொண்டவர்; தானே ஒரு பௌத்தர் என்பதால், புத்தர் பெருமானின் அமைதி தவழும் தன்மை கொண்டவராகவும் உள்ளார்.
இடைக்காலத்தில் அவருக்கு அமைச்சர் பதவி அளிப்பதாக ராணுவ ஆட்சியாளர்கள் ஆசை காட்டியபோது, அதை வன்மையாக மறுத்தவர் சூகி. “அதிகாரமல்ல, அச்சமே மோசடிகளுக்கும் ஊழலுக்கும் வித்திடுகிறதுஎன்றார் அவர்.
அச்சத்திலிருந்து விடுதலை, பர்மாவிலிருந்து கடிதம்ஆகிய இரு நூல்களை (1991) சூகி எழுதி இருக்கிறார். உலக அளவிலான பல விருதுகளைப் பெற்றுள்ள இவர், எப்போதும் இந்தியாவின் நண்பராக தன்னைக் காட்டிக்கொள்பவர்.


-விஜயபாரதம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக