புதன், மார்ச் 12, 2014

தமிழகத்தில் அமைந்தது மாற்று அணி!


எண்ணியிருந்தது ஈடேறுகிறது!

தமிழகத்தில் இரு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக பாஜக தலைமையில் புதிய மாற்று அணி உருவாக வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதமே எழுதி இருந்தேன். அநேகமாக, இந்தக் கண்ணோட்டம் அப்போது புதிய சிந்தனையாகவே இருந்தது.


பாஜகவின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் நரேந்திர மோடிக்கு மக்களிடம் பெருகிவரும் செல்வாக்கைப் பயன்படுத்தி தமிழ்கத்தில் தேமுதிக,  மதிமுக, பாமக கட்சிகளை ஒருங்கிணைத்து பாஜக தனி அணி அமைக்க வேண்டும் என்று நாம் வலியுறுத்தினோம்.


இன்று நாம் எதிர்பார்த்த கூட்டணி அற்புதமாக அமைந்துவிட்டது. சில தொகுதிப் பங்கீட்டுச் சிக்கல்கள் இருந்தபோதிலும், வெற்றிவாய்ப்பு, நாட்டின் எதிர்காலத் தலைமை, தமிழக அரசியலின் திசைமாற்றம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இப்போது மாற்று அணி அமைந்துவிட்டது. இத்ற்கு பாடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

தமிழ்ஹிந்து இணையதளத்தின் அரசியல் பார்வையை வாசகர்கள் அறிவர். நாடு நலம் பெற நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு அமைய வேண்டும். தமிழகத்தில் அமைந்துள்ள இந்தப் புதிய கூட்டணியை அதற்கான அச்சாரமாகவே காண்கிறோம். நாடு நல்ல தலைமையைப் பெற எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும்!
இந்தக் கட்டுரை முந்தைய இரு கட்டுரைகளின் தொடர்ச்சியே.

***

.

மும்முனைப் போட்டியில் தமிழக தேர்தல் களம்

நாட்டின் 16-வது லோக்சபா தேர்தல் ஏப்ரல் 7-இல் துவங்கி மே 12-இல் முடியும் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. 9 கட்டங்களாக நடைபெற உள்ள இத்தேர்தலின் முடிவுகள் மே 16-இல் வெளியாகிவிடும். நாடு முழுவதும் தேர்தல் பரபரப்பு தொற்றத் துவங்கிவிட்டது.

தமிழகம் (39 தொகுதிகள்) மற்றும் பாண்டிச்சேரியில் (ஒரு தொகுதி) 6-வது கட்டமாக, ஒரே நாளில் ஏப்ரல் 24-இல் லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. வழக்கம்போல ‘நாற்பதும் நமதே’ என்ற முழக்கத்துடன் தமிழக அரசியல் கட்சிகள் களம் இறங்கிவிட்டன. ஆனால், இதுவரை நடைபெற்ற எந்தத் தேர்தலிலும் காணாத வேறுபாட்டை இத்தேர்தலில் காண முடிகிறது. இந்த மாற்றத்தை நிகழ்த்திக் காட்டியுள்ளது தமிழக பாஜக.

தமிழக தேர்தல் களம் இதுவரையிலும் திமுக- அதிமுக ஆகிய இரு கட்சிகளின் துருவச் சேர்க்கை கூட்டணிகளிடையிலான மோதலாகவே இருந்துவந்துள்ளது. சட்டசபைத் தேர்தல்களில் இவ்விரு கட்சிகளும் மாறி மாறி வெற்றி பெற்று, தமிழகத்தை ஆண்டு வருகின்றன. லோக்சபா தேர்தலிலும் கூட, இவ்விரு கட்சிகளின் தலைமையிலான கூட்டணிகளே தேர்தல் முடிவுகளைத் தீர்மானித்துவந்தன. இந்த யதேச்சதிகார நடைமுறைக்கு இந்த்த் தடவை முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக தேர்தல் களம் இம்முறை அதிமுக அணி, திமுக அணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தனித்து விடப்பட்ட காங்கிரஸ் (ஐக்கிய முற்போக்கு கூட்டணி?), இடதுசாரிகள் அணி ஆகியவற்றுக்கு இடையிலான போட்டிக்களமாகவே இருக்கப் போகிறது. இந்தக் களத்தில் வெல்லும் வாய்ப்பு யாருக்கு?

வெற்றி- தோல்விகள் துல்லியமாகக் கணிக்க முடியாதவை. இனிவரும் நாட்களில் நடைபெறும் பிரசாரமும் நிகழ்வுகளுமே தேர்தலின் பாதையைத் தீர்மானிக்கும். எனினும், அரசியல் கட்சிகளின் ஆயத்தப் பணிகள் அவற்றின் விளைவுகளை ஓரளவு சுட்டிக்காட்ட வல்லவை.

அந்தவகையில், தமிழக அரசியல் கட்சிகளின் தேர்தல் ஆயத்தப் பணிகள், கூட்டணி முன்னேற்பாடுகள், தொகுதிப் பங்கீடுகள், வேட்பாளர் தேர்வுகள், தேர்தல் அறிக்கைகள், தலைவர்களின் பிரசாரம் ஆகியவை புதிய தேர்தல் முடிவுகளை வழங்கக் காரணமாகும். இப்போதைக்கு, தமிழக அரசியல் கட்சிகளின் தேர்தல் ஆயத்தப் பணிகளை ஒரு பருந்துப் பார்வையில் காணலாம்….
.
கனவுலகில் அதிமுக அணி:
ஆசை இருக்கிறது பிரதமராக....
ஆசை இருக்கிறது பிரதமராக…
.
தமிழகத்தில் ஆளும்கட்சியாக உள்ள அதிமுக, அதிகாரப்பூரவமான தேர்தல் பணிகளைத் துவக்கியதில் முந்திக்கொண்டது. இடதுசாரிக் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என்று அறிவித்து, தமிழகம் முழுவதும் மார்ச் 3 முதல் வலம்வரத் துவங்கிவிட்டார், அதிமுக தலைவியும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா. முன்னதாக தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் போட்டியிடும் 40 அதிமுக வேட்பாளர்களின் பட்டியலையும் அவர் அறிவித்துவிட்டார்.
இந்த அறிவிப்பால் நிலைகுலைந்துபோன இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் மார்க்சிஸ்டு கட்சியும் அதிமுக தலைமையிடம் மன்றாடிப் பார்த்தன. இவ்விரு கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதி மட்டுமே கொடுக்க முடியும் என்ற ஜெயலலிதாவின் நிலைப்பாடு இடதுசாரி கட்சிகளுக்கு ஏற்படுத்திய நெருக்கடியால், அவை வேறுவழியின்றி மார்ச் 6-இல் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தன.

இப்போதைக்கு தனியரசின் கொங்கு இளைஞர் பேரவை, சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, செ.கு.தமிழரசனின் இந்திய குடியரசு கட்சி, சேதுராமனின் அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகம், மற்றும் சில உதிரிக் கட்சிகளே உள்ளன. இவை பெயரளவில் மட்டுமே கூட்டணியில் உள்ளன. இக்கட்சிகளுக்கு வேட்பாளர் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

சென்ற சட்டசபைத் தேர்தலில் அதிமுக அணி மிகவும் பலம் பொருந்தியதாக இருந்தது. தேமுதிக, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்டு கட்சி, புதிய தமிழகம், ஃபார்வர்ட் பிளாக், கொங்கு இளைஞர் பேரவை, சமத்துவ மக்கள் கட்சி, இந்திய குடியரசு கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளின் ஒருங்கிணைப்பால் அதிமுக அபார வெற்றி பெற்றது.

இம்முறை அதிமுக-வின் பாராமுகம் காரணமாக, புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை கூட்டணியிலிருந்து வெளியேறி திமுக கூட்டணியில் அங்கமாகிவிட்டன. தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட சிக்கலால், இரு இடதுசாரி கட்சிகளும் இப்போது அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி உள்ளன. தேமுதிக-வோ, நீண்ட யோசனைக்குப் பிறகு, பாஜக கூட்டணியில் இடம் பெற முடிவு செய்துவிட்ட்து. ஆக, அதிமுக அணி தற்போது கூட்டணி என்ற முறையில் பலம் குறைந்தே காணப்படுகிறது.

எனினும், எதைப் பற்றியும் கவலைப்படாமல், தமிழகம் முழுவதும் பிரசாரப் பயணத்தைத் துவக்கிவிட்டார் ஜெயலலிதா. இலவசப் பொருள்களையும் ‘விலையில்லா’ திட்டங்களையும் வாரி வழங்கியதாலும், அம்மா உணவகம், அம்மா குடிநீர் போன்ற நலத் திட்டங்களாலும் மக்களிடையே தனக்கு சாதகமான அலை வீசுவதாக நம்பி, தேசிய அளவிலான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, பிரசாரம் செய்துவருகிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

தமிழக தேர்தல் களத்தில் முன்னிலையில் இருப்பது ‘அம்மா’ தான். இதை மறுக்க முடியாது. ஆனால், நாற்பதிலும் அவர் ஜெயம் காண முடியாது என்பதை தேர்தல் முடிவுகளில் காணத் தான் போகிறார். அவரை, சொந்தக் கட்சியினர் சீவிவிட்ட பிரதமர் பதவி ஆசை என்ற கொம்பு படாத பாடுபடுத்துகிறது. ஆசை யாருக்குத் தான் இல்லை? அதுதானே அனைத்துத் துன்பங்களுக்கும் காரணம் என்கிறார் புத்தர்?
.
எழ முயலும் திமுக அணி:

தோல்வியிலிருந்து மீண்டால் போதும்...
தோல்வியிலிருந்து மீண்டால் போதும்…

கடந்த 2011 சட்டசபை தேர்தலில் கடும் தோல்வியுற்று, எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வசமான பிறகு, பரிதாப நிலையில் இருந்தது திமுக. இப்போது அக்கட்சிக்கு தன்னை மீட்டுருவாக்கிக்கொள்ளக் கிடைத்த வாய்ப்பாக லோக்சபா தேர்தல் வந்திருக்கிறது. அதன் முதுபெரும் தலைவர் கருணாநிதி, ஆரம்பத்திலேயே காங்கிரஸ் கட்சியைக் கழற்றிவிடுவது என்பதில் தெளிவாகிவிட்டார். தவிர புதிய கட்சிகளை தனது அணியில் சேர்ப்பதன் அவசியத்தையும் உணர்ந்துவிட்டார்.

தமிழகத்தில் நிலவும் தீவிரத் தமிழ் உணவாளர்களின் ஈழ அரசியல், இலங்கை அரசால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களின் பிரச்னை, காவிரி, முல்லைப் பெரியாறு விவகாரம், ராஜீவ் கொலையாளிகளின் தண்டனை ரத்து விவகாரம் போன்றவற்றில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு திமுகவுக்கு பெரும் சேதாரத்தை ஏற்படுத்திவிட்டது. இனியும் அக்கட்சியுடன் தோழமை கொண்டிருந்தால் தமிழகத்தில் மீடேற முடியாது என்பது அரசியல் சாணக்கியரான கருணாநிதிக்குத் தெரியாமல் இருந்தால் தான் ஆச்சரியம்.

ஆயினும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் வசமாக சிக்கியுள்ள திமுக, காங்கிரஸ் கட்சியின் ஏவல் நாயான மத்திய புலனாய்வு அமைப்புக்கு (சிபிஐ) அஞ்சி இத்தனைநாளும் அமைதி காத்தது. கொண்டவளும் பெற்றவளும் கராக்கிரஹம் ஏகக் காரணமாகிவிடக் கூடாது என்ற அதீத எச்சரிக்கை உணர்வுடன், காங்கிரஸுக்கு போக்குக் காட்டி, கடைசியில் அதற்கு ‘பெப்பே’ காட்டியிருக்கிறார் கலகார்.

இக்கூட்டணியில் இருந்த பாமக, ஏற்கனவே பிரிந்துசென்று சமுதாயக் கூட்டமைப்பை உருவாக்கி தனி அணியாக ஆவர்த்தனம் செய்து, இப்போது பாஜக அணியில் சங்கமித்துவிட்டது. மற்றொரு கூட்டணிக் கட்சியான கொமுக சிதறி, அதன் ஓர் அங்கமான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (ஈஸ்வரன் தலைமையிலானது) பாஜக கூட்டணியில் சேர்ந்துவிட்டது.

ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்றக் கழகம், தனபாலனின் பெருந்தலைவர் மக்கள் கட்சி, முஸ்லிம் லீக் ஆகியவை அக்கூட்டணியில் தொடர்கின்றன. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், கருணாநிதியின் அணுக்கத் தோழராக இருந்தபோதும், அக்கட்சிக்கு ஒரே தொகுதி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டதால் ஏற்பட்ட அதிருப்தி இப்போது புகைந்து அடங்கியது. அவருக்கு மேலும் ஒரு தனித்தொகுதியை தாரைவார்த்து புகைச்சலை அடக்கினார் கருணாநிதி.
இந்நிலையில், கருணாநிதி, அவரது புதல்வர் ஸ்டாலின் ஆகியோரின் முயற்சியால், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய தேசிய லீக், கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் ஆகியவையும் திமுக கூட்டணிக்கு இடம் பெயர்ந்துள்ளன. இக்கட்சிகளுக்கு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுவிட்டன.

கிடைக்கும் எந்த வாய்ப்பையும் இழக்க விரும்பாமல், அதிமுக-வால் அவமதிக்கப்பட்ட இரு கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும் எந்த மனக் கிலேசமும் இன்றி வரவேற்பிதழ் வாசித்தார் கருணாநிதி. ஆனால், கம்யூனிஸ்டுகள் திமுக அணியில் சேர்ந்தால் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்குமே என்பதால் தயங்கினார்கள். தவிர இத்தனை நாட்கள் அதிமுக அணியில் இருந்துவிட்டு திடீரென திமுக அணிக்கு மாறினால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் என்றும் அஞ்சினார்கள். இரண்டு நாட்கள் பொறுத்துப் பார்த்த கருணாநிதி இப்போது திமுக போட்டியிடும் 35 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள அறிவித்திருக்கிறார்.

மொத்தத்தில், சட்டசபைத் தேர்தலில் இழந்த கௌரவத்தை மீட்க தனது கூட்டணியை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறது திமுக. ஆனால், புதிய வரவான மோடி அலையில் பயணிக்கும் பாஜக கூட்டணிக்கு அடுத்த இடமே தமிழகத்தில் திமுக கூட்டணிக்குக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்பது பரவலான கருத்தாக உள்ளது.

எனினும், இம்முறை புத்திசாலித்தனமாக ஒரு பெரும் சுமையை (காங்கிரஸ்) கழற்றிவிட்ட திருப்தியுடன், தேர்தலுக்குப் பிந்தைய புதிய கூட்டாளிகளைக் கவரத் தேவையான இடங்களில் வெல்லும் துடிப்புடன் திமுக கூட்டணி களம் இறங்கிவிட்டது.
.
நம்பிக்கையூட்டும் பாஜக அணி:

மோடி அலையில் அமைகிறது  மாற்று அணி!
மோடி அலையில் அமைகிறது மாற்று அணி!

எப்போதும் திமுக அல்லது அதிமுக கட்சிகளையும், அக்கட்சிகளின் முதுகில் சவாரி செய்யும் கூட்டணிக் கட்சிகளையுமே பார்த்துவந்த தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு இம்முறை வித்யாசமான காட்சி தென்படுகிறது. ஒருகாலத்தில் இவ்விரு கட்சிகளின் முதுகில் காங்கிரஸ் போலவே சவாரி செய்த கட்சி தான் பாஜக-வும். ஆனால், மாறியுள்ள தேசிய அரசியல் சூழலில் பாஜக-வின் பெறுமதிப்பும் ஆளுமையும் தமிழகத்திலும் கூட அதிகரித்துள்ளது. அதன் விளைவே, பாஜக தலைமையில் அமைந்துள்ள புதிய கூட்டணி.

சொல்லப்போனால், இக்கூட்டணிக்காக கடந்த 4 மாதங்களாக தமிழக பாஜக தீவிர முயற்சிகளை மேற்கொண்டுவந்தது. ஆரம்பத்தில் அதிமுக-வுடன் கூட்டணி சேர பாஜக மத்திய தலைமை முயன்றபோதும், ஜெயலலிதா தானே பிரதமராவது என்று தீர்மானித்துவிட்டதால், பாஜக தப்பிப் பிழைத்தது!

அப்போதுதான், இரு திராவிடக் கட்சிகளுக்கும் எதிராக வலிமையான ஒரு கூட்டணியை உருவாக்குவது என்று பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் திட்டமிட்டார். திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளாலும் பாதிக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட கட்சிகள் கைகோர்த்தால் மாற்றம் நிகழும் என்பதை அவர் கண்டுகொண்டார். அதற்கான முயற்சிகள் அதிகாரப்பூர்வமற்ற முறைகளில் தொடர்ந்து நிகழ்ந்தன.

இதில் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியனின் பணி பேரிடம் வகித்தது. அவரது தீவிர முயற்சியாலும், நாடு நெடுகிலும் உருவாகிவரும் மோடி அலையின் அனுபவத்தாலும், தமிழக பாஜக தலைவர்களின் நாகரிகமான செயல்பாடுகளாலும், தொடர்ந்த விடாமுயற்சியாலும் புதிய கூட்டணித் தோழர்கள் பாஜக-வுக்குக் கிடைத்திருக்கிறார்கள்.

திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளாலும் பந்தாடப்பட்ட வைகோ தலைமையிலான மதிமுக, இயற்கையாகவே பாஜக-வின் நலம்விரும்பியாக அமைந்தது. அக்கட்சியின் வருகை பாஜக-வுக்குத் தெம்பூட்டியது. அடுத்து, பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சி, ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஏ.சி.சண்முகத்தின் புதியநீதி கட்சி, தேசிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (மதச்சார்பின்மை முத்திரை பிற கூட்டணிகளுக்கு மட்டும் ஏகபோக உரிமையா என்ன?) ஆகியவை தே.ஜ.கூட்டணியில் இணைந்தன.

இருப்பினும், வாக்குகள் சிதறுவதைத் தடுக்க, தேமுதிக-வும் பாமக-வும் இக்கூட்டணியில் இடம் பெற வேண்டும் என்று தீவிர முயற்சிகள் நடந்தன. இவ்விரு கட்சிகளும் தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட சிக்கலால் தங்கள் முடிவைத் தெரிவிக்க தாமதித்தன. இதனிடையே, விஜயகாந்த் காங்கிரஸ் பக்கமும் திமுக பக்கமும் ஊசலாடிவிட்டு, இறுதியில் பாஜக பக்கம் திரும்பினார். பாமக-வும் தேர்தல் தேதி அறிவித்தவுடன் சுதாரித்துக்கொண்டு தே.ஜ.கூட்டணியில் சங்கமிக்கத் தயார் என்று அறிவித்தது. எனினும், இக்கட்சிகளை கூட்டணியில் சேர்க்க, பல தியாகங்களை பாஜக செய்தாக வேண்டிய நிலை ஏற்பட்டது. குறிப்பாக, பாஜக தான் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்ள நேரிட்டுள்ளது.

தேர்தல் கூட்டணி என்பதே ஒன்றைக் கொடுத்து ஒன்றைப் பெறுவது தான். ஒத்த சிந்தனையுடன், விட்டுக் கொடுத்து, அணியாக அமைந்து பணிபுரிவதன் மூலமாக அணியில் உள்ள அனைவருக்குமே நலம் விளையும் என்பதே கூட்டணியின் மகத்துவம். அதற்கு சிறந்த முன்னுதாரணமாக மதிமுக தலைவர் வைகோ செயல்பட்டது பாராட்டுக்குரியது. தேமுதிக-வும் பாமக-வும் கூட நிதர்சனத்தை உணர்ந்து சிலவற்றில் விட்டுக் கொடுத்து, தமிழகத்தில் தே.ஜ.கூட்டணியை உருவாக்கி உள்ளன. பாஜக-வின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி என்ற அரசியல் பேருரு இதற்கு அடிப்படையாக அமைந்துள்ளதையும் மறுக்க முடியாது.

2014 பாஜக-வின் ஆண்டு. நாடு முழுவதிலுமே, பாஜக-வை நாடி புதிய கூட்டணித் தோழர்கள் வந்துகொண்டுள்ளனர். ராம்விலாஸ் பஸ்வானின் லோக்ஜனசக்தி, ராம்தாஸ் அதவாலேயின் இந்திய குடியரசு கட்சி போன்ற சமூக முக்கியத்துவம் வாய்ந்த கட்சிகளின் இணைப்பால் தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுப்பெற்று வருகிறது. தவிர, பாஜக-விலிருது விலகி தனிக்கட்சி துவங்கிய கல்யாண்சிங், எடியூரப்பா, ஸ்ரீராமுலு, கேசுபாய் படேல், கோர்தன் ஜடாஃபியா போன்ற தலைவர்களும் தாய்க்கட்சியில் சேர்ந்துள்ளனர். தலித் தலைவர் உதித்ராஜ், முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங், இசை அமைப்பாளர் பப்பி லஹரி போன்றவர்களின் வரவால் பாஜக புத்தெழுச்சி பெற்றுள்ளது. மாற்றுக் கட்சிகளிலிருந்து பாஜகவில் சேரும் என்.டி.ஆரின் மகள் புரந்தரேஸ்வரி, காஷ்மீரத் தலைவர் இஸ்தியாக் வானி போன்ற பிரமுகர்களின் எண்ணிகையும் அதிகரித்துள்ளது.

இவ்வாறாக, நாடு முழுவதிலுமே மோடி அலையும் பாஜக ஆதரவு நிலையும் பரவி வருகின்றன. இந்நிலையில் தமிழகம் மட்டும் அதிலிருந்து விதிவிலக்காக இருக்க முடியாது என்பதையே, இங்கு உருவாகியுள்ள புதிய கூட்டணி காட்டுகிறது.

திமுக- கடந்த 17 ஆண்டுகளாக மத்தியில் அதிகாரத்தை சுவைத்த கட்சி. இருப்பினும் அக்கட்சியால் தமிழக உரிமைகள் காக்கப்படவில்லை என்பதை தமிழக மக்கள் உணர்ந்துள்ளனர். அதிமுக அரசின் மக்கள்நலத் திட்டங்கள் பல இருப்பினும், மாநிலத்தின் அடிப்படைக் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் அக்கட்சி தோல்வியுற்றிருப்பதை மறுக்க முடியாது. தவிர, அதிமுக வெல்வதால் தேசிய அளவில் எந்தப் பயனும் இல்லை என்பதை விஷயஞானம் உள்ள அனைவருமே அறிந்துள்ளனர். இத்தகைய சூழலில் பாஜக உருவாக்கியுள்ள புதிய அணி பல சாகசங்களை நிகழ்த்திக் காட்டும் வல்லமையுடன், நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது.
.
நான்காவது இடத்தில் மூன்றாவது அணி:

வெற்றுக் காகிதமாகிவிட்ட  இடதுசாரிகளின் கனவு...
வெற்றுக் காகிதமாகிவிட்ட இடதுசாரிகளின் கனவு…

தேசிய அளவில் காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றாக இடதுசாரிகள் ஏற்பாடு செய்த மாற்று அரசியல் அணி என்று நாமகரணம் சூட்டப்பட்ட மூன்றாவது அணி தமிழகத்தில் முளையிலேயே கருகிவிட்டது. அதிமுக தலைவி பாஜக பக்கம் சாயாமல் இருப்பதற்காக மிகவும் அவசரமாக அக்கட்சியுடன் கூட்டணி அமைத்த இடதுசாரிகள், இப்போது நிர்கதியாகத் தவிக்கிறார்கள். தேசிய அளவிலான முன்றாவதுஅணி துவங்கி ஒரு மாத்திற்குள் பிளவுபடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரிணாமூல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜியுடன் ஜெயலலிதா நெருக்கம் காட்டுவது பிரகாஷ் காரத்திற்கு எரிச்சல் ஊட்டியிருக்கிறது.

எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமலே இதுவரை திமுக முதுகில் சவாரி செய்துவந்த காங்கிரஸ், இப்போது யாரும் சீண்டுவதற்கு லாயக்கற்ற கட்சியாக தனித்துவிடப்பட்டுள்ளது. தேர்தலில் எந்த ஒரு தொகுதியிலும் முன்வைப்புத்தொகையைப் பெறும் வாய்ப்பு கூட இல்லாமல் போகும் நிலை, மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டிருக்கிறது.

நாடு முழுவதும் 300 இடங்களில் போட்டியிடப் போவதாகக் கூறும் ஆம் ஆத்மி கட்சி தமிழகத்தில் இருக்கும் இடமே தெரியவில்லை. கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் இக்கட்சியில் இணைந்திருப்பது மட்டுமே குறிப்பிடத் தக்க செய்தி. உதயகுமார், புஷ்பராயன் போன்றவர்களின் வரவால், ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் நிலைப்பாடு தெளிவாக்கப்பட்டுள்ளதும் நல்லதே. இவையல்லாத சிறு கட்சிகளின் இருப்பால் எந்த விளைவும் தமிழக தேர்தல் களத்தில் ஏற்பட வாய்ப்பில்லை.

இதுவரையிலும், அரசியல் களத்தில் தீண்டத் தகாத கட்சியாக இருந்த பாஜக, இம்முறை, இரு பிரதான அரசியல் கட்சிகளுக்கும் சவால் விடும் வகையில் புதிய அணியை ஏற்படுத்தி இருக்கிறது. மாறாக, இதுவரை பாஜக-வை ஏளனம் செய்துவந்த காங்கிரஸும் இடதுசாரிகளும் பரிதவிக்கும் நிலையில் இருக்கிறார்கள்.

மொத்தத்தில் தமிழக அரசியல் களம் இப்போது தெளிவடைதிருக்கிறது. சுமைக் கட்சிகள் விக்கித்து நிற்க, உண்மையான மக்கள் ஆதரவுள்ள கட்சிகள் மூன்று அணிகளாகப் பிரிந்து நிற்கின்றனர். இது தேர்தலுக்கு முந்தைய நிலை மட்டுமே. தேர்தலுக்குப் பிந்தைய நிலையில், தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் எவர் வென்றாலும், அவர்கள் மோடிக்குப் பின் அணிவகுக்கவே வாய்ப்புள்ளது என்பதையும் சொல்லியாக வேண்டும்.
எனவே தான்,  ‘மோடி எனது நண்பர்’ என்று இப்போதே கூறிவைக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி. மோடியின் நண்பராக அனைவராலும் அறியப்பட்ட ஜெயலலிதா தனது பிரசாரத்தில் எங்குமே பாஜக-வை மறந்தும்கூட வசைபாடுவதில்லை. அதேபோல, மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களும் கூட பிரசாரத்தில் காங்கிரஸை மட்டுமே விமர்சிக்கின்றனர்.

பாஜக அணியில் உள்ள தேமுதிக, பாமக, மதிமுக ஆகியவை இரு திராவிடக் கட்சிகளையும் எதிர்த்து அரசியல் நடத்தியாக வேண்டிய நிலையில் உள்ளன. ஆனால், பாஜக-வோ, இரு பிரதான கட்சிகளையும் நட்புறவுடன் கூடிய எதிராளிகளாகவே காண்கிறது. இத்தகைய தேர்தல் களம் தமிழகத்திற்குப் புதியது. யாரையும் வசை பாடாமல், மக்களின் ஆதரவை ஆக்கப்பூர்வமான பிரசாரத்தின் மூலமாகப் பெறுவதில் இந்தத் தேர்தல்களம் புதிய திசை காட்டுவதாக அமைந்துள்ளது. இதேநிலை தான் மகாராஷ்டிரம், ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம், அசாம், ஜம்மு காஷ்மீரம் போன்ற மாநிலங்களிலும் காண முடிகிறது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கப் போனால், பாஜக-வின் செங்கோட்டையை நோக்கிய பாதை தெளிவாகச் செப்பனிடப்படுகிறது. அடுத்தடுத்த வரும் கருத்துக் கணிப்புகளும் பாஜக-வின் முன்னிலையை வெளிப்படுத்தி வருகின்றன. தமிழகத்திலும் கூட, இம்முறை பாஜக அமைத்துள்ள புதிய கூட்டணி பல அதிசயங்களை நிகழ்த்த வாய்ப்புள்ளது. ஆளும் கட்சியான அதிமுக தொகுதிகளை வெல்வதில் முதலிடத்தில் இருந்தாலும், வெற்றிவாய்ப்பில் திமுக-வைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாமிடம் பிடிக்கும் நிலையில் தே.ஜ.கூட்டணி உள்ளது. வரும் நாட்களில் இந்த மூன்று அணிகளுக்கு மத்தியில் மட்டுமே போட்டி நிலவும்.

-----------
விஜயபாரதம்
காண்க: தமிழ் ஹிந்து 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக