தமிழக தே.ஜ.கூட்டணி அறிவிப்புக் கூட்டத்தில்… |
அதாவது தே.ஜ.கூட்டணியின் வெற்றி வாய்ப்பு சதவிகிதம் 60 சதவிகிதத்தையும் தாண்டியுள்ளது. இதே நிலை தேர்தல் வரை நீடித்தால் பாஜக தலைமையிலான கூட்டணி 300-க்கு மேற்பட்ட இடங்களில் வெல்லும் என்பது உறுதி.
மார்ச் 20-ம் தேதி சென்னையில் நடைபெற்ற தே.ஜ.கூட்டணி தொகுதிப் பங்கீட்டு அறிவிப்பு விழாவில், ‘கேப்டன்’ விஜயகாந்த், மருத்துவர் அன்புமணி ராமதாஸ், வைகோ, கொங்கு ஈஸ்வரன் உள்ளிட்ட தலைவர்கள் ஒரே மேடையில் அமர்ந்து ஊடகங்களின் ஹேஸ்யங்களை முறியடித்தபோது மோடி புயலின் விளைவை உணர முடிந்தது. இதைவிட பல அரிய அரசியல் நிகழ்வுகளை நாடு முழுவதும் காண முடிகிறது.
தலித் தலைவர் உதித்ராஜின் வருகை |
மகராஷ்டிராவில் ராஷ்ட்ரீய சமாஜ் பக்ஷா, சுவாபிமானி பக்ஷா ஆகிய கட்சிகளும் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளன. ஏற்கனவே இங்கு சிவசேனை வலுவான தோழமைக் கட்சியாக உள்ளது. போதாக்குறைக்கு, சிவசேனாவில் இருந்து பிரிந்து மகராஷ்டிர நவநிர்மான் சேனாவை நிறுவிய ராஜ்தாக்கரே, மோடி பிரதமராவதற்கு தனது கட்சி உதவும் என்று அறிவித்துள்ளார். பாஜக போட்டியிடும் பல தொகுதிகளில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும் அக்கட்சி அறிவித்துள்ளது.
பாஜக ஆளும் கோவாவில், மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி ஏற்கனவே கூட்டாளியாக உள்ளது. இங்கு மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாஜக அரசு மீதான நல்லெண்ணமும் பாஜகவின் வெற்றிக்கு உதவும்.
தெலுங்கானா பிரச்னையால் காங்கிரஸ் கட்சி நிலைகுலைந்துள்ள ஆந்திரப் பிரதேசத்திலும் தே.ஜ.கூட்டணி நல்ல நிலையில் உள்ளது. இங்கு பாஜகவுடன் கூட்டணி அமைக்க சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசமும், ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசும் போட்டி போட்டன. இறுதியில் தெலுங்குதேசம் கூட்டணியில் ஐக்கியமாக உள்ளது. இக்கட்சி ஏற்கனவே வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது தோழமைக் கட்சியாக இருந்தது. அதேபோல, தெலுங்கானா பகுதியில், தனி மாநிலத்திற்காகப் போராடிய தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் சந்திரசேகர ராவ் மோடி அணியில் இணையப் போவதாகத் தகவல். தவிர, சீமாந்திராவில், நடிகர் சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண் துவங்கியுள்ள ஜனசேனா கட்சியும், ஜெயபிரகாஷ் நாராயணனின் லோக் சதா கட்சியும் கூட தே.ஜ.கூட்டணியில் சேர உள்ளன. மொத்தத்தில் சென்ற முறை காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்க பெருமளவில் உதவிய ஆந்திராவில் இப்போது பாஜக அலை வீசுகிறது. ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியும் கூட, தேர்தலுக்குப் பிறகு மோடியை ஆதரிக்க வாய்ப்புள்ளது.
என்.டி.டி.வி. தேர்தல் கருத்துக் கணிப்பு |
தமிழகத்தில் மதிமுக, பாமக, தேமுதிக, இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி, தேசிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை பாஜகவுடன் தேர்தல் கூட்டணி கண்டுள்ளன. பாண்டிசேரியில், மாநில முதல்வர் ரங்கசாமியின் அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தே.ஜ.கூட்டணியில் அங்கமாகிவிட்டது. தமிழகத்தில் மேலும் பார்வர்டு பிளாக் (வல்லரசு), புதிய மார்க்சிஸ்ட் கட்சி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல சிறிய கட்சிகள் பாஜகவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளன.
கேரளத்திலும் கூட, கேரள புலைய மகா சபா பாஜகவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது. நாராயணகுருவின் வழிவந்த எஸ்.என்.டி.பி. இம்முறை தனது அரசியல் சாரா நிலைப்பாட்டை (காங்கிரஸ் சார்பு) மாற்றிக்கொள்ளும் என்றும் தெரியவருகிறது. எல்லாம் மோடி செய்யும் மாயம்.
ஹரியானாவில் பஜன்லாலின் ஹரியானா ஜன்ஹித் காங்கிரஸ் கட்சியும் தே.ஜ.கூட்டணியில் உள்ளது. தவிர, சௌதாலாவின் இந்திய தேசிய லோக்தளம் கட்சி பாஜகவின் நட்புக் கட்சியாக உள்ளது. பஞ்சாபில் நெடுநாள் கூட்டாளியான சீக்கிய மக்களின் ஆதரவு பெற்ற சிரோமணி அகாலிதளம் பாஜகவின் நமபகமான துணைவனாக உள்ளது.
வடகிழக்கு மாநிலங்களிலும் இம்முறை மோடி சூறாவளி பலனைத் தரத் துவங்கியுள்ளது. மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி பாஜகவின் கூட்டணிக் கட்சியாக இருக்கிறது. தவிர பி.ஏ.சங்மா (தேசியவாத காங்கிரஸ்) தேர்தலுக்குப் பிந்தைய நட்புக் கட்சியாக மாறவும் வாய்ப்புள்ளது.
நாகலாந்தில் நாகா மக்கள் தேசிய முன்னணி தே.ஜ.கூட்டணியில் சேர்ந்துவிட்டது. மேற்கு வங்கத்தில் கூர்க்கா மக்கள் விடுதலை முன்னணி பாஜகவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது. அருணாசல பிரதேசத்தில் முன்னாள் முதல்வர் கெகாங் அபாங் காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்திருப்பது நல்ல அறிகுறி. மணிப்பூர், மிசோரம், திரிபுரா மாநிலங்களிலும் பழங்குடியினரின் கட்சிகள் சில பாஜக பக்கம் சாய்கின்றன.
அஸ்ஸாமில் அஸாம் கணபரிஷத் தலைவர்கள் பலர் கூண்டோடு பாஜகவில் சேர்ந்து வருகிறார்கள். அங்கு இப்போது காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக பாஜக உருவெடுத்துள்ளது. அஸ்ஸாம் கணபரிஷத் கட்சியும் தே.ஜ.கூட்டணியில் சேர பேச்சு நடத்துகிறது.
அயோத்தி நாயகனின் மறுபிரவேசம் |
உத்தரகண்ட், ஜார்க்கண்ட் மாநிலங்களிலும் பாஜகவின் நட்புக் கட்சிகள் கூடியுள்ளன. ஒடிசாவில் ஆளும் நவீன் பட்நாயக்கிற்கு எதிராக புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தில்லியில் அகில பாரதீய பாசி சமாஜ் பாஜகவில் ஐக்கியமாகி உள்ளது. ஜம்மு காஷ்மீரில் லடாக் மக்கள் கட்சியும் காஷ்மீர பாந்தர் கட்சியும் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணித் தோழர்களாக மாறும் வாய்ப்புள்ளது.
இவ்வாறாக, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, அருணாசலம் முதல் குஜராத் வரை தே.ஜ.கூட்டணி வலிமை பெற்று வருகிறது. நாடு முழுவதிலும் எங்கு பார்த்தாலும் மோடி அலை வீசுவது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. பாஜகவின் எதிரிக் கட்சிகளிலிருந்து விலகி விபீஷண சரணாகதி அடையும் தலைவர்களின் பட்டியலும் நீண்டுவருகிறது. பீகாரில் லாலுவின் வலக்கரமான ராம்கிருபால் யாதவும், அஸ்ஸாமில் பிரபுல்லகுமார் மொகந்தாவின் வலக்கரமான ஹிதேந்திர கோஸ்வாமியும் சில உதாரணங்கள். தமிழகத்தில் திமுக தலைவரின் மகன் மு.க.அழகிரி வெளிப்படையாக மோடியை ஆதரிப்பதாக அறிவித்துவிட்டார்.
நாட்டிற்கு நல்லகாலம் பிறந்துவிட்டது. அதன்விளைவாகவே, பாஜகவின் வலுவை அதிகரிக்கும் நிகழ்வுகள் தொடர்கின்றன. இதற்கு மோடி அலையும் முக்கிய காரணமாகியுள்ளது. 1998- 2004–இல் அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 23 கட்சிகள் அங்கம் வகித்தன. 2014-இல் அந்த எண்ணிக்கை இருமடங்காகும் நிலைமை காணப்படுகிறது.
எங்கும் வீசும் காவி அலை! |
-----------------
விஜயபாரதம்
காண்க: தமிழ் ஹிந்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக