திங்கள், மார்ச் 03, 2014

இலக்கு 40: யாருக்கு?

 
பாஜக மடத்தில் இடம்பிடிக்க இப்போதே துண்டுபோட உதவும் படம்


நாடாளுமன்ற லோக்சபா தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் பணியைத் துவக்கிவிட்டது அதிமுக. தேசிய அளவில் கடந்த 5 மாதங்களாக தேர்தலை முன்னிறுத்திய பிரசாரத்தில் பாஜக இருந்தாலும், வேட்பாளர் அறிவிப்பில் அதிமுக முந்திக்கொண்டுவிட்டது. இதில் அதிர்ந்து போயிருப்பவர்கள், அதிமுக-வுடன் கூட்டணி வைத்துள்ள இடதுசாரித் தோழர்கள் தான்.

பாஜக-வுடன் அதிமுக சேர்வதைத் தடுப்பதற்காக, காலில் விழாத குறையாக ஜெயலலிதாவுடன் கூட்டணிக்கு முயன்ற தோழர்களுக்கு எத்தனை இடம் என்பதை அறிவிக்காமலேயே, அனைத்துத் தொகுதிகளிலும் தனது கட்சி வேட்பாளர்களை அறிவித்திருக்கிறார் ஜெயலலிதா. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தக்கள் தகுதிக்கு மேல் -அதாவது தலா ஒரு தொகுதி- கேட்டதால் அதிருப்தி அடைந்த அதிமுக தலைவி, அவர்களை வழிக்குக் கொண்டுவரவே 40 தொகுதிகளிலும் தனது  வேட்பாளர்களை நிறுத்தி இருப்பதாகச் சொல்கிறார்கள்.

தொடர்ந்து பேச்சுவார்த்தை நடப்பதாகவும், கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டணி உறுதியானவுடன், அக்கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் விலகிக் கொள்வார்கள் என்றும் ஜெயலலிதா கூறியிருப்பினும், தேசிய கட்சிகளான் கம்யூனிஸ்ட் கட்சிகள், கோபத்தை வெளிப்படுத்த முடியாமல் மென்று விழுங்குகின்றன.

நாடு முழுவதும் தேசியக் கட்சியாகத் திகழ வேண்டுமானால், பல மாநிலங்களில் தேர்தலில் வென்றாக வேண்டும். போன தேர்தலிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய அந்தஸ்து கேள்விக்குறியாகிவிட்ட்து. எனவே, இம்முறை எப்பாடுபட்டாவது தனது அந்தஸ்தைத் தக்கவைத்துக் கொண்டாக வேண்டிய நிலையில் உள்ள இடதுசாரிக் கட்சிகளுக்கு ஜெயலலிதாவைச் சரணடைவதைத் தவிர வேறுவழியில்லை.

அதிமுக-வின் கொள்கைப் பரப்பு செயலாளராகவே மாறிவிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா. பாண்டியன்,  “எங்களுக்கு எந்தத் தொகுதியும் கொடுக்காவிட்டாலும் கூட, கூட்டணி தொடரும்’’ என்று கூறி இருக்கிறார். அதிமுகவை முறைக்கப்போய், அவர் தேர்தலுக்குப் பிறகு மோடியுடன் கைகோர்த்துவிட்டால் என்ன செய்வது என்ற கவலை அவருக்கு. இது புரியாமல், அவரை அவரது கட்சித் தோழர்களே கர்ணகடூரமாக முறைக்கிறார்கள்!

இந்த லட்சணத்தில் தான் 11 கட்சிகள் சேர்ந்து ‘மாற்று அணி’ என்ற பெயரில் மூன்றாவது அணி அமைத்துள்ளதாக அறிவித்திருக்கிறார்கள். நிதிஷின் ஐக்கிய ஜனதாதளம், 4 இடதுசாரி கட்சிகள், அதிமுக, முலாயமின் சமாஜ்வாதி கட்சி உள்ளிட்டவை அங்கம் வகிக்கும் இக்கூட்டணியில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் ம்ம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸும் இனைய முடியாது. காங்கிரஸுடன் கைகோர்க்கவுள்ள லாலுவின் ஆர்ஜேடி கட்சியும் இதில் சேராது. மொத்தத்தில் காங்கிரஸ், பாஜக-வுக்கு மாறாக முன்வைக்கப்பட்டுள்ள இக்கூட்டணி, ஆண்டிகள் கூடி மடம் கட்டிய கதை தான்.

அதிமுக-வுடன் கூட்டணிக்கு ஆரம்பத்தில் பாஜக முயன்றது. ஆனால், அங்கிருந்து சாதகமான பதில் வராததால், மாற்று ஏற்பாடுகளில் இறங்கியது. இப்போது, மதிமுக, இந்திய ஜனநாயக கட்சி, கொமுதேக, புதிய நீதி கட்சி உள்ளிட்ட சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்துவிட்ட்து பாஜக. விஜயகாந்தின் தேமுதிக, ராமதாஸின் பாமக- ஆகியவற்றுடனும் கூட்டணி அமைக்க தீவிர முயற்சிகள் நடந்துவருகின்றன.

அநேகமாக, இந்த இதழ் வாசகர் கையில் கிடைக்கும்போது, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி உருவாகி இருக்கும். கட்சிகளிடையே தொகுதிகளைப் பங்கிடுவதில் ஏற்படும் சிக்கலே இக்கூட்டணியின் தாமத்த்திற்குக் காரணம் என்று தெரிய வருகிறது.
தேசிய அளவிலும் கூட, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேரும் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ராம்விலாச் பஸ்வானின் லோக்ஜனசக்தி கட்சி பாஜக-வுடன் சேர்ந்திருப்பது முக்கியமான அறிகுறி. அநேகமாக, இம்முறை தேஜகூட்டணியில் சேரும் கட்சிகளின் எண்ணிக்கை 30-ஐத் தாண்டக்கூடும். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது தேஜகூட்டணியில் 23 கட்சிகள் அங்கம் வகித்ததை இங்கு நினைவுகூரலாம்.

அதிமுகவின் பிரதான எதிரியான முன்னாள் ஆளும்கட்சியான திமுக, இம்முறை காங்கிரஸைக் கழற்றிவிடுவதில் தீர்மானமாக இருக்கிறது. இப்போதைக்கு திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், மமக, முஸ்லிம் லீக் ஆகியவை மட்டுமே உறுதியாகி உள்ளன. காங்கிரஸ் கிட்டத்தட்ட தனிமரமாகி நிற்கிறது. மதவாதக் கட்சியென்று கூறி பாஜக-வை தீண்ட்த் தகாத கட்சியாக சித்தரித்துவந்த காங்கிரஸ் கட்சியின் நிலைமை தமிழகத்தில் உவப்பானதாக இல்லை. தமிழகத்தில் தீண்டத் தகாத கட்சி ஒன்று உண்டென்றால், அது காங்கிரஸ் தான்.

இவ்வாறு தமிழக அரசியல் களம் வேகமாக மாறி வருகிறது. தேசிய அளவில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு அதிகரித்துவரும் ஆதரவு தமிழக அரசியல் கட்சிகளையும் யோசிக்கச் செய்கிறது. தேர்தல் கருத்துக் கணிப்புகளும் ஊடகக் கணிப்புகளும் பாஜக தனித்தே 240 இடங்களுக்கு மேல் வென்றுவிடும் என்று காட்டுவதால், மோடிக்கு தமிழகத்திலும் ஆதரவு பெருகி வருகிறது. தினமலருக்கு அளித்த நேர்காணலில் “மோடி எனது நண்பரும் கூட’’ என்று திமுக தலைவர் கூறியிருப்பதன் காரணம் அதுவே. இதே மோடியைக் காரணம் காட்டித் தான் அற்புதமான அரசியல் தலைவர் அடல் பிகாரி வாஜ்பாயின் முதுகில் குத்திவிட்டு காங்கிரஸ் அணிக்கு 2004-ல் தாவினார் கலாகார். இவரது புதிய அவதாரம் கண்டு, பழைய அனுபவத்தை பாஜக மறந்துவிடக் கூடாது.

நாடு முழுவதிலும் பாஜக-வுக்கு சாதகமான அலை வீசத் துவங்கிவிட்டது. இதை தமிழகத்தில் தங்களுக்கு சாதகமாக மாற்றும் பொறுப்பும் கடமையும் பாஜகவுக்கு இருக்கிறது. நாற்பதும் நமதே என்பது தான் தமிழக அரசியல் கட்சிகளின் தேர்தல் கோஷமாக இருப்பது வழக்கம். இம்முறை இந்த 40 தொகுதிகளும் யாருக்கு?

யாரும் ஆசைப்படலாம். அதற்கான வாய்ப்பும் தகுதியும் உள்ள கட்சிகள் எவை என்பது தமிழக மக்களுக்கே தெரியும். இந்த 40 தொகுதிகளில் அதிகமான தொகுதிகளை வெல்ல பாஜக-வும் தே.ஜ.கூட்டணிக் கட்சிகளும் முயன்றால் நிச்சயம் சாதகமான முடிவுகள் கிடைக்கும். அதுவே தேசிய அளவிலும் எதிரொலிக்கும்.



------------ 

விஜயபாரதம் (07.03.2014)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக