வெள்ளி, ஆகஸ்ட் 23, 2013

நமது அரசியல் கட்சிகளின் வெளிவேஷம்தகவல் அறியும் உரிமை சட்ட அதிகார வரம்பில் இருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் திருத்த மசோதா கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இது பெரும் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

மத்திய, மாநில அரசுத் துறைகள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் அமைப்புகளின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், தகவல் அறியும் உரிமை சட்டத்தை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்தது. இந்த அரசின் உருப்படியான முயற்சிகளில் இது முக்கியமானது. தற்போது தான் கொண்டுவந்த சட்டத்தையே நீர்த்துப்போகச் செய்யும் முயற்சியில் ஐ.மு.கூட்டணி அரசு இறங்கி இருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய எதிர்க்கட்சிகளும் அரசுடன் இணைந்து நிற்பது தான் காலத்தின் கொடுமை!

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அரசுத் துறைகளில் இருந்து எந்தத் தகவலையும் கேட்டு குறிப்ப்ட்ட காலத்தில் பெற முடியும். இதற்கென அரசு அலுவலகங்களில் தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். தகவல் அறியும் சட்டம் சரியாக அமல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க தகவல் ஆணையமும் அதற்கு ஒரு தலைவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். எனினும், ராணுவம், மத்தியப் புலனாய்வுப் பிரிவு, உளவு துறை என குறிப்பிட்ட சில முக்கிய துறைகளுக்கு தகவல் அறியும் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகளுக்குக் கிடைக்கும் நன்கொடைகள் குறித்த விவரங்களை வெளியிட உத்தரவிட வேண்டும் என்று தில்லியைச் சேர்ந்த சமூகசேவர் ஒருவர் தகவல் ஆணையத்தில் விண்ணப்பித்தார். நன்கொடை விவரங்களை அரசியல் கட்சிகள் வெளியிட மறுத்ததைத் தொடர்ந்து, அவர் இந்தக் கோரிக்கையை தகவல் கமிஷனுக்கு அனுப்பினார்.

அந்த மனுவை தகவல் ஆணையர் கடந்த ஜூன் மாதம் விசாரித்து, தகவல் அறியும் சட்டம் அரசியல் கட்சிகளுக்குப் பொருந்தும் என்று உத்தரவிட்டார். அரசியல் கட்சிகளின் வரவு செலவு, நன்கொடை, கட்சி நிர்வாக நடைமுறை, வேட்பாளர் தேர்வு போன்றவை குறித்து மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு அரசியல் கட்சிகள் பதிலளிக்கப் பொறுப்புள்ளவை என்று மத்திய தகவல் ஆணையர் உத்தரவிட்டார். இதற்கு காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

’கட்சிகளின் நடவடிக்கைகள் குறித்து வேண்டுமென்றே தகவல்களை அறிய இந்தச் சட்டத்தின் மூலம் கோருவது, கட்சிகளின் செயல்பாடுகள், விவாதங்களின் நம்பகத்தன்மை ஆகியவற்றின் மீது கடுமையான பிளவை உண்டாக்கும். அரசியல் கட்சிகளை ஒரு பொது அதிகாரிகளாகக் கருதி அவற்றை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டுவருவதை ஏற்கமுடியாது...

’அரசியல் கட்சிகளின் எதிரிகள் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி கட்சிகளின் செயல்பாட்டினைச் சீர்குலைக்க இதை ஒரு கருவியாகப் பயன்படுத்தமுடியும். நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகளின் பங்கின் மீது ஒரு அடிப்படையான தவறான கண்ணோட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது...

’சட்டப்படி அரசியல் கட்சிகளின் கணக்குகள் வருமான வரித்துறைக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் மட்டும் காட்டப்பட வேண்டும். தகவல் அறியும் சட்டப்படி தேர்தல் கமிஷனிடமிருந்து தான் அரசியல் கட்சிகளின் நிதிகள் மற்றும் கணக்குகள் குறித்த விவரங்களை எவரும் பெற முடியும்’ - இதுவே அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு. இது தொடர்பாக நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பெரும்பாலான கட்சிகள் இதே கருத்தை எதிரொலித்தன.

இதையடுத்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்கும் வகையில், இந்தச் சட்டத்தின் இரண்டாவது பிரிவில் திருத்தம் செய்யும் மசோதாவை சட்டத் துறை அமைச்சகம் தயார் செய்தது.

இந்த்த் திருத்த மசோதா ஆகஸ்ட் 8-ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. தெலுங்கானா பிரச்னை, எல்லையில் இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரம் போன்ற பிரச்னைகளால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடர்ந்து முடக்கப்பட்டு வந்தபோதும், இந்த மசோதாவைத் தாக்கல் செய்ய எந்தக் கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. வருகிறது. தகவல் அறியும் உரிமை திருத்த மசோதாவுக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருப்பதால், இந்த மசோதாவைத் தாக்கல் செய்வதில் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. இந்த மசோதா அனைத்துக் கட்சியினரின் ஆதரவுடன் நிறைவேறுவது உறுதியாகி உள்ளது.

இவ்வாறு, அரசியல் கட்சிகள் அனைத்தும் இணைந்து செயல்படுவது மிகவும் அதிசயமான ஒன்று. தங்கள் நிதி நிலவரம் குறித்து வெளிப்படையாக அறிவிக்க கட்சிகள் தயாரில்லை என்பது அதிர்ச்சி அளிக்கும் நிகழ்வாகும். மடியில் கனமில்லாதவனுக்கு வழியில் பயமில்லை. நமது அரசியல் கட்சிகளின் அச்சத்துக்கு என்ன காரணம் என்பது, இந்த மசோதா அவசரகதியில் நிறைவேற்றப்படுவதில் இருந்தே தெரியவருகிறது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத் திருத்தம் ஜனநாயகத்திற்கு விரோதமானது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு விதிவிலக்கு அளிக்கும் சட்டத் திருத்தம் ஜனநாயக உரிமையைப் பறிப்பதாகும் என்று சமூகவியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.

மத்திய, மாநில அரசுத் துறைகளின் செயல்பாடு மற்றும் அரசுத் திட்டங்கள், முடிவுகள் ஆகியன பற்றி மக்கள் எவரும் உண்மையறிந்து கொள்ள வகை செய்யும் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இருந்து, தேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கும் சட்டத் திருத்தம், உண்மையை அறிந்துகொள்ள மக்களுக்கு இச்சட்டத்தின் வாயிலாக கிடைத்துள்ள ஜனநாயக உரிமையை பறிப்பதாகும்- இதுவே நாட்டுநலனில் அக்கறை கொண்ட அறிஞர்களின் கருத்து.

தேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான காங்கிரஸ், பாரதிய ஜனதா, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுக்கு இச்சட்ட்த்தில் இருந்து தற்போது விலக்கு அளிக்கப்பட உள்ளது. இந்தக் கட்சிகள் தான் நாட்டின் தலைவிதியை நிர்னயிப்பதில் பெரும் பங்காற்றுபவை என்ற நிலையில், அவர்கள் நாட்டிற்கு முன்னுதாரணமகச் செயல்பட வேண்டாமா?

கட்சிகள் வசூலிக்கும் நிதி நேர்மையானதாக இருந்தால் அதனை மறைக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? இந்திய பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, அரசியல் கட்சிகள் வசூலிக்கும் நிதிகளுக்கு வருமான வரி விலக்கு இருக்கிறது. அப்படியிருக்க, நிதி எவ்வாறு பெறப்படுகிறது என்பதை ஏன் மறைக்க வேண்டும்?

இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்றால், அதன் அரசியல் அங்கங்களாக இருக்கும் கட்சிகளின் அனைத்து செயல்பாடுகளும் வெளி்ப்படையாகத் தானே இருக்க வேண்டும்? இப்படிப்பட்ட மக்கள் உரிமை காக்கும் ஒரு சட்டத்தை நிறைவேற்றிய கட்சிகளே, இப்போது அதன் பல்லைப் பிடுங்க முயற்சிப்பது நியாயம் தானா? ஒரு நாட்டில் வெளிப்படைத்தன்மை கட்டிக் காக்கப்படாவிட்டால், அது சர்வாதிகாரத்திற்கும், ஊழலிற்கும் தானே வழிவகுக்கும்?

இப்படிப்பட்ட ஒரு ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்றத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவிப்பது மிகுந்த கவலை அளிக்கும் நிகழ்வாகும்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலும் திருத்தம்


"குற்ற வழக்குகளில், தண்டனை பெற்ற எம்.பி, எம்.எல்.ஏ.,க்களை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும்; போலீஸ் காவலில் அல்லது சிறையில் இருப்பவர்கள், தேர்தலில் போட்டியிட முடியாது' என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செல்லாததாக்கும் வகையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் செய்யவும் அனைத்து அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து முயன்று வருகின்றன. இதுவும் நமது மக்கள் பிரதிநிதிகளின் வெளிவேஷத்தை அமபலப்படுத்தி இருக்கிறது.

கொள்கைகளில் எதிரெதிர்த் துருவங்களான காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்பட அனைத்துக் கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். இதன்மூலம தாங்கள் எவரும் யோகியமானவர்கள் அல்ல என்பதை அவர்களே அமபலப்படுத்தி இருக்கிறார்கள்.

குற்றவழக்கில் சிக்கியவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை வருமானால், அதனை ஆளும் கட்சிகள் துஷ்பிரயோகம் செய்ய வாய்ப்புள்ளது என்பதே கட்சிகளின் அச்சம். இதை மறுக்க முடியாது. ஆனால், அதைத் தடுக்கத் தேவையான அம்சங்களை மக்கள் பிரதிநிதுத்துவ சட்டத்தில் கூடுதலாகச் சேர்ப்பது தான் தேவையே ஒழிய, எந்தக் கட்டுப்பாடும் இருக்கக் கூடாது என்று கூறுவது எந்த வகையில் சரியானது?

’குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். தண்டனையை எதிர்த்து அவர்கள் மேல் நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்து இடைக்காலத் தடை பெற முடியாது’ என்று, ஜூலை 10-ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்தது. அதே சமயம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகள் ஏற்கனவே மேல் முறையீடு செய்திருந்திருந்தால் அவர்களை இந்த்த் தீர்ப்பு கட்டுப்படுத்தாது எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் செல்லாததாக்கும் வகையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில், திருத்தம் செய்ய, தில்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

அனைத்துக் கட்சி கூட்டத்தை, ஆகஸ்ட் 13-ஆம் தேதி மத்திய அரசு கூட்டியிருந்தது. நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், கமல்நாத், கபில் சிபல், பா.ஜ.க.வைச் சேர்ந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண்ஜெட்லி, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத்யாதவ் உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய தலைவர்கள் அனைவரும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செல்லாததாக்கும் வகையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஆதரவு தெரிவித்தனர். இதன்மூலமாக, ஜனநாயகத்தில் நீதிமன்றங்களைவிட மக்கள் மன்றத்தின் அதிகாரமே இறுதியானது என்பதை நிரூபிக்க அவர்கள் முயன்றனர்.

மக்களவையில் உள்ள 543 உறுப்பினர்களில் சுமார் 150 பேருக்கு எதிராக குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் அனைத்துக் கட்சியினரும் அடக்கம். ஜனநாயக சீர்திருத்த கழகம் (ஏ.டி.ஆர்.) மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் (என்.இ.டபிள்யூ.) ஆகிய இரு அரசு சாரா அமைப்புக்கள் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. தேர்த‌ல் அறிக்கை குறிப்பின்படி சுமார் 15 எம்.பி.,க்கள் மீது குறைந்தது ஒரு கொலை வழக்காவது பதிவு செய்யப்பட்டுள்ளதும், இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனவே தான் அரசியல் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்க்கின்றன.

ஜூலை 10-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த மற்றொரு தீர்ப்பில், தண்டனை பெற்று சிறையில் இருக்கும்போதோ அல்லது போலீஸ் விசாரணை காவலில் இருக்கும்போதோ, மக்கள் பிரதிநிதிகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்று தெரிவித்திருந்தது. இதுவும் அரசியல் கட்சியினரின் அச்சத்திற்குக் காரணம்.

குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவர் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு மத்திய அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அதற்கு அனைத்து அரசியல் கட்சியினரின் ஆதரவையும், சாமர்த்தியமாகப் பெற்றுவிட்டது. அரசின் இந்த நாடகத்தில் ஒத்துழைக்காமல் இருந்து தங்கள் பரிசுத்தத்தை நிருப்பிக்க கிடைத்த வாய்ப்பை, பாஜக-வும் இடதுசாரிக் கட்சிகளும் இழந்துவிட்டன. ஜனநாயகம் மீது நம்பிக்கை கொண்டோருக்கு இது நிச்சயம் வேதனை அளித்திருக்கும்.

உச்ச நீதிமன்றத்தின் இவ்விரு தீர்ப்புக்களையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி, மத்திய அரசு சார்பில் ஆகஸ்ட் 12-ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவைப் பின்பற்றினால் அரசின் பெரும்பாலான மக்கள் பிரதிநிதி இடங்கள் காலியாகும் என்ற உண்மை மத்திய அரசின் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீதான விசாரணை செப்டம்பர் 4-ஆம் தேதியன்று நடைபெற உள்ளது.

மொத்ததில், மக்கள் பிரதிநிதிகளும், அரசியல் கட்சிகளும் தங்களை சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாகக் கருதுவது மேற்படி இரு நிகழ்வுகளிலும் தெளிவாகி இருக்கிறது. பல்வேறு முறைகேடு புகார்களிலும் ஊழல்களிலும் சிக்கித் தவிக்கும் மத்திய அரசும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் கொஞம் ஆசுவாசமாக மூச்சுவிட எதிர்க்கட்சிகள் இதன்மூலமாக வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துவிட்டன. இது நமது ஜனநாயகத்திற்கு கண்டிப்பாக நல்லதல்ல.

------------------------------

விஜயபாரதம் (30.08.2013)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக