திங்கள், ஜூன் 10, 2013

அந்த ஒரு இடம் யாருக்கு?


'அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தரப் பகைவர்களும் இல்லை' என்ற பொன்மொழி பிரபலமானது. தமிழகத்தில் இந்தப் பொன்மொழிக்கு எப்போதுமே கிராக்கி. சுயநல அரசியல் அறுவடைகளை நியாயப்படுத்த இந்தப் பொன்மொழி போல உதவக் கூடிய வேறு கருவி உண்டா என்ன?

இப்போது ராஜ்யசபை உறுப்பினர் தேர்தல் காலம். தமிழகத்தில் ஜூலை 24-ல் காலியாக உள்ள 6 ராஜ்யசபா உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் வரும் ஜூலை 22-ல் நடைபெறுகிறது. சென்ற முறை தமிழக சட்டசபையில் திமுக அதிக பலம் பெற்றிருந்ததால் அப்போது திமுக கூட்டணியினர் அதிகமாக ராஜ்யசபைக்கு சென்றனர். இப்போது நிலைமை தலைகீழ்.

ராஜ்யசபையில் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 18. இவர்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடக்காது. இதில் குறிப்பிட்ட காலங்களில் பதவிக்காலம் முடிவடைவோருக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டு, காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்படும்.

மே மாத நிலவரப்படி மொத்தமுள்ள 18 எம்.பி.க்களில் திமுக-7, அதிமுக- 5, காங்கிரஸ் 4, மார்க்சிஸ்ட் 1, இந்தியா - கம்யூனிஸ்ட் 1 என பிரதிநிதித்துவம் உள்ளது. இவர்களில் கனிமொழி, திருச்சி சிவா (திமுக), மைத்ரேயன், இளவரசன் (அதிமுக), டி.ராஜா (கம்யூனிஸ்ட்), ஞானதேசிகன் (காங்கிரஸ்) ஆகியோரின் பதவிக்காலம் ஜூலை 24-ல் முடிவடைகிறது. இந்த இடங்களுக்கே தேர்தல் நடைபெற உள்ளது.

ஒரு ராஜ்யசபை உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க, 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. மாறியுள்ள அரசியல் சூழலில் தமிழக சட்டசபையில் அதிமுக மிகுந்த பலத்துடன் உள்ள நிலையில் (150), அக்கட்சி சார்பில் 4 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி. அவர்களின் பெயர்களை கடைசி நேரத்தில் தான் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பார்; யாருக்கும் அதிர்ஷ்டம் வாய்க்கலாம். மீதமுள்ள 14 உறுப்பினர்களின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி உள்ளது.

சென்ற முறை கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த டி.ராஜாவுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்தது; அவரும் வென்றார். இப்போதும் அதிமுக ஆதரவை அக்கட்சி கோரியிருக்கிறது அக்கட்சிக்கு 8 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். தவிர மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏக்கள் 10 பேரின் ஆதரவும் கிடைக்க உள்ளது. இதனிடையே கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியனுக்கும் எம்.பி. பதவி மீது ஒரு கண் இருக்கிறது; ஆசை யாரை விட்டது?

இப்போது உள்ள சிக்கல் இதுவல்ல. அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தவிர்த்த எந்தக் கட்சிக்கும் ஒரு எம்.பி.யைத் தேர்வு செய்யும் பலம் இல்லை. தே.மு.திக- 29, திமுக- 22, காங்கிரஸ்- 5, பாமக - 3 என முக்கிய கட்சிகளின் நிலைமை தவிப்பை உருவாக்குவதாக உள்ளது. விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளின் சில்லறை எண்ணிக்கை அரசியல் பேரங்களுக்கு மட்டுமே உதவிகரமாக இருக்கும்.

இந்த சந்தில் சிந்து பாடுபவர் திமுக தலைவர் கருணா தான். அவருக்கு தனது செல்ல மகளை எப்படியும் ராஜ்யசபைக்கு அனுப்பிவிடுவது ஒரு கனவாகவே இருக்கிறது. கட்சிக்காக மேடைதோறும் முழங்கும் திருச்சி சிவாவுக்கு அவரது இதயத்தில் இடம் இருக்கிறது. கனிமொழி வெல்ல இன்னமும் தேவை 12 பேரின் ஆதரவு. இதற்காகத் தான் அலைபாய்கிறார் ராசதந்திரி.

ராஜ்யசபை தேர்தலைப் பயன்படுத்திக்கொண்டு அரசியல் கூட்டணிகளில் புதிய மாற்றத்தையும் வியூகத்தையும் வகுக்க அவர் துடிக்கிறார். அதற்காக மத்திய அரசிலிருந்து தள்ளாத குறையாக வெளியேற்றிய காங்கிரஸ் கட்சியுடனும் கூட சமரசமாகப் போகவும் அவர் தயார். ஸ்பெக்ட்ரம் ஊழல் மட்டுமல்லாது ஐ.பி.எல். ஊழலும் அவரது வீட்டுக் கதவைத் தட்டும் நிலையில் உள்ளபோது, ராசதந்திரம் மிகவும் தேவை அல்லவா?

காங்கிரஸ் கட்சியின் 5 பேர் ஆதரவு கிடைத்தாலும் கூட கனிமொழி வெற்றிபெறப் போதாது எனவே தான், "நாவடக்கம் ராமதாசுக்கு வேண்டும்" என்று அண்மையில் சொன்ன அதே கலைஞரின் மகள், அதே டாக்டர் ராமதாசை மருத்துவமனையில் சென்று சந்தித்து நலம் விசாரித்திருக்கிறார். அக்கட்சியின் 3 எம்.எல்.ஏ. ஆதரவுக்கு எவ்வளவு மதிப்பு தெரியுமா? இவை மட்டுமல்லாது 4 மேலும் பேரின் ஆதரவுக்காக வலை வீசுகிறது திமுக. அரசியலில் வெற்றி தானே முக்கியம்? வெட்கம், மானம் எல்லாம் பார்க்க முடியுமா?

பாமகவுக்கும் இப்போது ஒரு நிழற்குடை தேவை. தமிழகத்தின் அனைத்து கட்சிகளாலும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் பரிதவிக்கும் ராமதாசுக்கு இப்போது பற்றிக்கொள்ள ஒரு கொழுகொம்பு தேவை. அது திமுகவாக இருந்தால், அக்கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் சேர்ர்ந்தால், டாக்டர் அன்புமணி சந்திக்க உள்ள சி.பி.ஐ. வழக்குகளுக்கும் உதவியாக இருக்கும் அல்லவா?

காங்கிரஸ் கட்சிக்கோ தனித்து ஜெயிக்க முடியாது என்பது தெளிவாகத் தெரியும்,. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பவனுக்கு தர்ம அடி விழும் என்பது அனைவரும் ஒப்புக்கொண்ட உண்மை. அப்படியே யாரேனும் ஆதரவு தெரிவித்தாலும் ஒரு எம்.பி. இடத்துக்கு 20 பேர் போட்டியிடுவார்கள். உள்கட்சி ஜனநாயகம் என்றால் காங்கிரஸ் கட்சியிடம் தான் பாடம் கற்க வேண்டும். எனவே இப்போதைக்கு திமுகவை ஆதரிப்பதே ராசதந்திரம். ஒரே நெருடல், ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய கனிமொழியை ஆதரிப்பது எப்படி என்பது தான். ஸ்பெக்ட்ரம் ஊழலையே விழுங்கி ஏப்பம் விட்ட பிரதமரும் சோனியாவும் இருக்கும் துணிச்சலில் காங்கிரஸ் நல்ல முடிவெடுக்கலாம்.

ஆக மொத்தத்தில், அதிமுக கூட்டணி (?) ஜெயித்தது போக, மீதமுள்ள ஒரு இடத்துக்கு எதிர்க்கட்சிகள் ஆலாய்ப் பறக்கின்றன. இந்த ஓட்டப் போட்டிக்கு தகுதி இருந்தும் தேமுதிக அடக்கி வாசிக்கிறது ஏற்கனவே அக்கட்சியின் 6 எம்.எல்.ஏ.க்கள் தலைமையுடன் பிணங்கி நிற்கும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை க் காப்பதே விஜயகாந்திற்கு சோதனையாக மாறி இருக்கிறது. இனிவரும் நாட்களில் எந்த தேமுதிக எம்.எல்.ஏ. கட்சி மாறப் போகிறாரோ? அம்மாவுக்கே வெளிச்சம்.

எனவே, அவரது ஆதரவைப் பெறவும் கருணா தூண்டில் போடுகிறார். இந்தத் தூண்டிலில் விஜயகாந்த் விழுவாரா? அதற்கு சில நாட்கள் நாம் பொறுத்திருக்கத் தான் வேண்டும். அரசியலில் தான் நிரந்தர நண்பரோ நிரந்தரப் பகைவரோ இல்லையே? அது ஒரு நிரந்தர வியாபாரம் தானே?




----------------------
விஜயபாரதம் (14.06.2013)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக