ஞாயிறு, ஜூன் 09, 2013

நானும் காந்தியவாதி தான்!


மகாத்மா காந்தியின் பென்சில் குறித்த கதை உங்களுக்குத் தெரியுமா? காந்திஜி பயன்படுத்திவந்த பென்சில் மிகவும் சிறிதாகிவிட்டதால் அதை அவரது உதவியாளர், அது இனித் தேவையில்லை என்று முடிவு செய்து வீசி எறிந்துவிட்டார். அதை அறிந்த காந்திஜி தனது உதவியாளரை கடிந்துகொண்டார். ''அது சிறிதாக இருந்தாலும் இன்னமும் சில நாட்களுக்கு வருமே. அது பொதுச் சொத்து அல்லா? அதை வீசி எறிய உனக்கு யார் உரிமை அளித்தது?'' என்று கேட்டாராம் காந்திஜி. பிறகு வேகுநேரம் தேடி அதை கொண்டுவந்து கொடுத்தாராம் காந்திஜியின் உதவியாளர்.

இது கதையல்ல நிஜம். பொதுவாழ்க்கையில் இருப்பவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு வாழும் உதாரணமாக அவர் இருந்தார். அதனால் தான் சுதந்திரப் போராட்டக் காலத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் எளிமையை அனுசரிப்பவர்களாகவும், பொதுச் சொத்துக்களின் பாதுகாவலராகவும் இருந்தார்கள். காந்திஜியின் ஒரே வார்த்தைக்காக குடும்பம், சொத்து சுகங்களை துறந்து நாட்டு விடுதலைக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த பல்லாயிரம் பரிசுத்தவான்களை நாம் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் காண முடியும்.

காந்தி கணக்கு என்பது அது தான். அரையணா ஆயினும் பொதுச்சொத்து என்றால் அதற்கு தெளிவான கணக்கு இருக்க வேண்டும். எதையும் விரயம் செய்யும் உரிமை பொதுநல சேவகனுக்கு கிடையாது என்பதே அவர் காட்டிய பாதை. ஆனால் நாம் இன்று 'காந்தி கணக்கு' என்று எதைச் சொல்கிறோம்? கணக்கில் காட்டாமல் மறைக்கும் மோசடிகளுக்கு நாம் செய்யும் நாமகரணம் 'காந்தி கணக்கு' என்றாகி இருக்கிறது. ஊழலால் ஒரு வங்கி திவாலானாலும் அதை 'காந்தி கணக்கு' என்று தான் நமது ஊடகங்கள் எள்ளி நகையாடுகின்றன. நமது தார்மிக வீழ்ச்சியின் அபாயகரமான போக்கிற்கு இது ஒரு சிறு உதாரணம் மட்டுமே

அதுசரி, காந்தியின் உண்மையான வாரிசுகள் பலர் எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி சமூகப்பணிகளில் ஈடுபட்டுவரும் நிலையில், அவர்களையா நாம் காந்தியின் வாரிசுகளாக அங்கீகரித்திருக்கிறோம்? நமக்குத் தெரிந்ததெல்லாம் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வகையறாக்கள் தானே?

முற்காலத்தில் 'மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி' என்று சொல்வார்கள். மக்களாட்சிக் காலத்தில் இதையே 'மக்கள் எவ்வழி மன்னன் அவ்வழி' என்று திருப்பிப் போட்டுக் கொள்ள வேண்டியது தான். மாவுக்குத் தகுந்த பணியாரம் போல மக்களுக்குத் தகுந்த ஆட்சியாளர்கள் தான் கிடைக்கிறார்கள். பிரதமர் என்ற பெயரில் நமது நாட்டை கொள்ளையடிக்கும் காங்கிரஸ் கும்பலின் தலைவராக இருக்கும் மன்னுமோகன் சிங்கை குற்றம் சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்பது உண்மையே.

***

பிரதம மன்னுமோகன் சிங் தனது ஆட்சியின் 9வது ஆண்டு நிறைவை அண்மையில் கொண்டாடி இருக்கிறார். 2004-ல் வாஜ்பாய் தலைமயிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொதுத் தேர்தலில் தோற்று காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது. அன்று முதல் பிரதமராக மன்னும்கன் இருக்கிறார். 2009 வரையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதலாவது ஆட்சிக் காலத்தில் தான் உலகிலேயே மிகப் பெரிய ஊழலாகக் கருதப்பட்ட 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்தேறியது. ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் ஊழலால் காங்கிரஸ் அரசை அசைக்க முடியவில்லை ஏனெனில் ஊழலால் தான் அந்த ஆட்சியே நிலைகொண்டிருந்தது.

1986-1989-நட் ராஜீவ் காந்தி பிரதமாராக இருந்தபோது, வெறும் ரூ. 60 கோடி கமிஷனுக்காக ஆசைப்பட்டு ஆட்சியைப் பறிகொடுத்தார் ராஜீவ். அவரது வழித் தோன்றல்களோ, அரசுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி அதன்மூலமாக ரூ. 60 ஆயிரம் கோடி வரை (இது ஒரு உத்தேச மதிப்பீடு மட்டுமே) லஞ்சம் பெற்றும்கூட எந்த வெட்கமும் இன்றி ஊழல் நடைபெறவே இல்லை என்று செப்பித் திரிந்தனர். மத்திய கணக்கு தணிக்கை ஆணையர் வினோத் ராய், நாடாளுமன்ற பொது கணக்குக் குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷி, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, உச்ச நீதிமன்ற நீதிபதி கோகலே போன்றவர்களின் நெஞ்சுரம் மிக்க செயல்பாடுகள் இல்லாமல் போயிருந்தால் ஸ்பெக்ட்ரம் மோசடியை புதைத்து அதன் மீது நினைவுச் சின்னமே அமைத்திருப்பார்கள் காங்கிரஸ் காரர்கள்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் மட்டுமா? மும்பை ஆதர்ஷ் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் ஊழல், புதுதில்லி காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகளில் ஊழல், அதிகாரத்தரகர் நீரா ராடியா ஊழல், ஐ.பி.எல். ஊழல் எனப் பல ஊழல்கள் அணிவகுத்து காங்கிரஸ் கட்சியின் புகழுக்கு மகுடம் சூட்டின. ஒவ்வொரு ஊழல் வெளிப்ப்படும்போதும் அதை சமத்காரமாக மறைப்பதும் மறுப்பதும் மன்னுமோகன் கும்பலின் வழக்கம். பிறகு பிரச்னை உச்சத்தை எட்டும்போது ஆ.ராசா, சுரேஷ் கல்மாடி, சசி தரூர் போன்ற பலிகடாக்களை படையலிட்டு தப்பிவிடுவதும் காங்கிரஸ் கட்சியின் பழக்கம்.

இத்தனை ஊழல்கள் நடந்த பின்னரும் அதே காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணிக்கு இரண்டாம் முறை நாட்டை ஆளும் பொறுப்பை ஒப்படைத்த மக்களை என்சொல்ல? ஊழலை விட மதச்சார்பின்மை கோஷங்களும் ஜாதி கணக்கீடுகளும் தானே 2009 தேர்தலில் ஆதிக்கம் செலுத்தின? பணபலம் தானே தேர்தல் முடிவுகளை நிர்ணயித்தது? பாஜக தலைமையிலான தே.ஜ.கூட்டணி வென்றுவிடக் கூடாது என்று முனைப்புக் காட்டிய ஊடகவாலாக்கள் முன்னிறுத்தி புளகாங்கிதம் அடைந்தது 'காந்தி' குடும்ப அங்கத்தினர்களை அல்லவா? அதன் விளைவு தானே இப்போதைய இரண்டாம் ஆட்சிகால ஊழல்களின் பெருக்கம்?

***

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் அம்பலமானபோது இதைவிடப் பெரிய ஊழல் நடைபெற வாய்ப்பில்லை என்று நம்பப்பட்டது. அந்த நம்பிக்கையையும் காங்கிரஸ் கட்சியே முறியடித்தது. தனது ஊழல் சாதனையை தானே முறியடித்த கட்சி உலக வரலாற்றில் உண்டென்றால் அது காங்கிரஸ் தான். ரூ. 1.86 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய நிலக்கரி வயல் ஒதுக்கீட்டு ஊழல்கள் சென்ற ஆண்டு அம்பலமானபோது நாட்டுமக்கள் யாரும் அதிர்ச்சி அடையவில்லை; ஏனெனில் அவர்கள் இப்போது ஊழல்களைக் கேட்டு மரத்துப் போக பழகிவிட்டார்கள்.

முந்தைய ஸ்பெக்ட்ரம் ஊழல் போலல்லாது, நிலக்கரி ஊழலில் பிரதமரே நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கிறார். எனினும் அதை மூடி மறைக்க காங்கிரஸ் துடிக்கிறது. இம்முறையும் மத்திய கணக்கு தணிக்கை ஆணையர் வினோத் ராய் தான் இந்த ஊழலை அம்பலப்படுத்தினார். இப்போது அவரது பதவிக்காலமும் மே மாதம் முடிந்துவிட்டது புதிய அதிகாரி என்ன செய்யப் போகிறாரோ தெரியவில்லை.

இதனிடையே பொதுநல வழக்குகள் காரணமாக உச்ச நீதிமன்றத்தில் நிலக்கரி ஊழல் மீதான விசாரணை பெரும் புயலைக் கிளப்பியது. காங்கிரஸ் பெருமூளைகள் வழக்கம்போல இதிலும் தங்கள் திறமையை வெளிப்படுத்தி ஊழலை மறைக்க முயன்றார்கள். மத்திய புலனாய்வு அமைப்பை தங்கள் கைப்பாவையாக்கி, உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஆவணத்திலேயே திருத்தம் செய்தார்கள். கடைசியில் நீதிமன்றக் கண்டிப்புக்கு அஞ்சி மத்திய புலனாய்வு அமைப்பின் இயக்குனரே, இந்த மோசடியை அம்பலப்படுத்தினார். இப்போது பலிகடாவாகி இருக்கிறார் சட்ட அமைச்சராக இருந்த அஸ்வினிகுமார். மத்திய புலனாய்வு அமைப்புக்கும் குட்டு விழுத்திருக்கிறது!

ரயில்வே துறையில் அமைச்சராக இருந்த பவன்குமார் பன்சாலின் உறவினர் நடத்திய ஊழல் வெளியானபோதும் காங்கிரஸ் கட்சி அசரவில்லை. எப்போதும்போல 'ஊழலே நடக்கவில்லை' என்று பிலாக்கனம் தான் பாடினர் காங்கிரஸ் தலைவர்கள். கடைசியில் நாடாளும்றக் கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளில் ஆவேசத்தால் முடங்கி வீணான பிறகு, பதவி விலகினார் பன்சால். சட்டம் தன கடமையைச் செய்யும் என்கிறார் நிதி அமைச்சர் ப.சிதம்பரம். அவர் சிவகங்கையில் எம்.பி. தேர்தலில் ஜெயித்ததே முறைகேடாகத் தான் என்று நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது; சாத்தான் வேதம் ஓதுகிறது! மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சாரதா நிதி நிறுவன மோசடியில் ப.சி.யின் மனைவியாருக்கும் பங்கு இருப்பதாகத் தகவல். அப்படி இல்லாமல் இருந்தால் தானே ஆச்சரியப்பட வேண்டும்?

இந்நிலையில், தனது இரண்டாவது கட்ட ஆட்சியின் நான்காம் ஆண்டு நிறைவை முன்னிட்டு ஆட்சி குறித்த மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் மன்னுமோகன். அறிவுஜீவிகள் என்று கருதிக்கொள்ளும் சிலர் தயாரித்த அறிக்கை இது என்பது, இதிலுள்ள புல்லிவிவரங்களைக் காணும் போதே புரிகிறது; புள்ளிவிவரங்கள சோறு போடுவதில்லை.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் நாட்டில் விலைவாசி மிகக் கடுமையாக உயர்ந்திருக்கிறது. பெட்ரோலியப் பொருட்களின் கட்டுப்பாடற்ற விலை உயர்வால் தொழில்துறை விழி பிதுங்குகிறது. ஊழல்களின் பெருக்கத்தால் நாட்டின் மதிப்பு அதலபாதாளத்துக்கு சரிந்திருக்கிறது. மதச்சார்பின்மை என்ற பெயரில் வாக்குவங்கி அரசியல் நடத்துன் காங்கிரஸ் கட்சியால் மக்களிடையே ஒற்றுமை குலைந்திருக்கிறது.

இலங்கை, சீனா, நேபாளம், மாலத்தீவு, வங்கதேசம் என எந்த அண்டை நாடும் இந்தியாவை மதிப்பதாக தெரியவில்லை; சீனா த்துமீறி ஊடுருவி முகாம்களை அமைக்கிறது; நமது அரசு சீன அதிகாரிகளிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறது. உன்ல்நாட்டுப் பாதுகாப்பிலோ சொல்லவே தேவையில்லை; எங்கு வேண்டுமாயினும் குண்டு வெடிக்கும் நிலைமை தான் நாடு முழுவதும் நிதர்சனம்.

உண்மையில், நமது பிரதமர் மன்னுமோகன் தனது ஆட்சியின் சீரழிவுகள் குறித்த வெள்ளை அறிக்கையைத் தான் வெளியிட்டிருக்க வேண்டும். தன்னை பின்னணியில் இருந்து யக்கும் 'காந்தி' குடும்பத்தின் அட்டூழியங்களை அவர் அறிக்கையாகத் தந்திருக்க வேண்டும். இது அதிகப்படியான ஆசை என்பதில் சந்தேகமில்லை.

இப்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசில் பிரதமராக மன்னுமோகன் வீற்றிருக்கிறார். ஆனால், ஆட்சி அதிகாரம் சோனியா அமம்மையாரின் கரங்களில் இருக்கிறது. நாளைய பிரதமராக வர்ணிக்கப்படும் ராகுல் காந்திக்கு வழித்தடம அமைக்கும் பணியில் எந்த வெட்கமும் இன்றி ஈடுபட்டிருக்கிறார் நமது பொருளாதார மேதை. சோனியா கும்பல் திரை மறைவில் நடத்தும் ஊழல்களின் விளைவை அனுபவித்தபடி, 'கெட்ட பெயர் எனக்கு; லாபமெல்லாம் உனக்கு' என்று சோனியாவிடம் லாவணி பாடியபடி இந்தப் பதவியில் இவர் ஒட்டியிருக்கத் தான் வேண்டுமா? ''சரித்திரம் முக்கியமானது அமைச்சரே'' என்று நடிகர் வடிவேலு 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தில் கூறும் வசனம் தான் நினைவுக்கு வருகிறது!

***

இப்போது நாடாளுமன்றத் தேர்தல் நடந்தால், நரேந்திர மோடியை பாஜக முன்னிறுத்தினால் தே.ஜ. கூட்டணி 220 இடங்களுக்கு மேல் வெல்லும் என்று கருத்துக் கணிப்பு அண்மையில் வெளியாகி இருக்கிறது. இதைத் தடுக்க அனைத்து மாய்மாலங்களிலும் காங்கிராஸ் ஈடுபடத் துவங்கிவிட்டது. மத்தியப் புலனாய்வு அமைப்பை 'கூண்டுக்கிளி'யாக வைத்துக்கொண்டு அரசியல் எதிரிகளை மிரட்டி ஆட்சியில் நீடிக்கும் கலை அறிந்த காங்கிரஸ் கட்சி, பணபலத்தால் யாரையும் விலைபேசத் தயாராகி வருகிறது.

தே. ஜ.கூட்டணியை பலவீனப்படுத்தும் முயற்சிகளை முன்கூட்டியே இறங்கிவிட்ட காங்கிரஸ் தலைவர்கள், மதரீதியாக மக்களின் வாக்குகளைப் பிளக்கவும் பல திட்டங்களை வகுத்து வருகிறார்கள். வகுப்புக் கலவரத் தடுப்பு மசோதா அதற்காக உருவாக்கப்பட்டதே. ஏற்கனவே, மாணவர்களை சிறுபான்மை- பெரும்பான்மை என்று பிரித்து ஒரு கண்ணுக்கு வெண்ணெயும் ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பும் வைத்தாகிவிட்டது.

இவர்கள் தான் இன்று காந்தியத்தை காக்க வந்த மகாத்மாக்களாக உலா வருகிறார்கள். ஆங்கிலேய அரசிடமும் கூட பெருந்தன்மை காட்டிய மகாத்மா காந்தி கட்டிக் காப்பாற்றிய காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலைமை மிகவும் அருவருக்கத் தக்கதாக மாறிவிட்டது.

காந்திஜி வைத்திருந்த குரங்கு பொம்மைகள் குறித்து அனைவரும் அறிவோம். 'தீமையைப் பேசாதே; தீமையைப் பார்க்காதே; தீமையைக் கேட்காதே' என்பதே அந்த குரங்கு பொம்மைகள் சொல்லும் நீதி.

இப்போது நமது பிரதமர் மன்னுமோகன் கிட்டத்தட்ட அதே குரங்கு பொம்மையின் நிலையில் தான் இருக்கிறார். அவருக்கு பின்னால் சாட்டையுடன் நிற்கிறார் சோனியா காந்தி. உடன் நிற்கிறார் ராகுல் காந்தி. அருகில் நிற்கிறார் பிரியங்கா வதேரா காந்தி.

சாட்டைக்குக் கீழ்ப்படியும் சர்க்கஸ் விலங்கு போல, எந்த உண்மையையும் பேசவோ, காணவோ, கேட்கவோ தயாரில்லாத நிலையில் காட்சி அளிக்கிறார் நமது பிரதமர். அநீதி கண்டும் வாய்மூடி மௌனம் சாதிப்பது காந்தியம் என்றால் மன்னுமோகன் காந்தியவாதி தான். அவரை வழிநடத்தும் 'காந்தி' குடும்பம் தான் மகாத்மா காந்தியின் குடும்பம் என்று இன்னமும் நாட்டு மக்கள் எண்ணிக் கொண்டிருந்தால், மன்னுமோகனும் ஒரு மகாத்மா தான்.

-----------------
விஜயபாரதம் (07.06.2013)
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக