தமிழகத்தில் ராஜ்யசபா (மாநிலங்களவை) தேர்தலுக்கான ஆயத்தப்பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இம்மாதம் 27-ம் தேதி தேர்தல். கடந்த
14.06.2013 'விஜயபாரதம்' இதழிலேயே இதுகுறித்த விரிவான செய்தியை
வாசகர்கள் படித்திருக்கலாம். இப்போது நிலைமை ஓரளவுக்கு தெளிவாகி இருக்கிறது.
இதில் ஆச்சரியப்பட வைத்திருப்பவர்
அதிமுக தலைவி ஜெயலலிதா தான். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தங்கள் வேட்பாளருக்கு அதிமுக
எப்படியும் ஆதரவு தெரிவித்துவிடும் என்று நம்பி இருந்தது. அதிமுக ஆதரவு இருந்தால் ஜெயித்து
விடலாம் என்பதால் அந்த ஒரு வேட்பாளர் யார் என்பதில் கட்சிக்குள் பலத்த போட்டியும் இருந்தது.
கட்சியின் அகில இந்திய செயலாளர் சுதாகர் ரெட்டி, மாநில செயலாளர் தா.பாண்டியன் கட்சியின் இப்போதைய மாநிலங்களவை உறுப்பினர்
து. ராஜா ஆகியோருக்கு இடையே தான் போட்டி. கடைசியில் அவர்களது திட்டம் பகல் கனவாகி விட்டது.
அதிமுக தலைவி, தங்கள் கட்சி சார்பிலேயே 5 வேட்பாளர்களை அறிவித்து விட்டார். அதிமுகவின்
சட்டசபை பலத்தில் (150) அக்கட்சி 4 எம்பிக்களை பெறுவது திண்ணம். ஐந்தாவது எம்பியை பெற வேண்டுமானால்
அக்கட்சிக்கு இன்னமும் 14 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும். இதை அறிந்தும் மாநிலங்களவைத்
தேர்தலில் போட்டியை உருவாக்கி இருக்கிறார் ஜெயலலிதா.
இதன்மூலமாக இரு செய்திகளை ஜெயலலிதா
மறைமுகமாக வெளிப்படுத்தி இருக்கிறார். அக்கட்சி யாரையும் சார்ந்து இல்லை என்பது அதில்
முதன்மையானது. இரண்டாவது, அதிமுக வேட்பாளர்களின் வெற்றிக்காக எதிர்க்கட்சி வரிசையில் பிளவுகள்
உருவாக்கப்படலாம் என்பது.
ஏற்கனவே, தேமுதிக கட்சியின் 7 உறுப்பினர்கள் (கடைசியாக வந்து சேர்ந்த விருதுநகர்
எம்எல்ஏ மாபா பாண்டியராஜனையும் சேர்த்து) அதிமுகவுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். மேலும் சிலர் தேர்தலில் நிறம்
மாறக்கூடும். இப்போதைக்கு பதைபதைப்பில் இருப்பவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தான்.
அநேகமாக அக்கட்சி மாநிலங்களவைத் தேர்தலைப் புறக்கணிக்கக் கூடும். அவ்வாறு தேமுதிக அறிவித்தால் வெற்றிக்குத்
தேவையான வாக்குகளின் எண்ணிக்கை 34-லிருந்து 33-ஆகக் குறையலாம்.
அப்போதும் அக்கட்சியின் அதிருப்தியாளர்கள்
அதிமுகவுக்கு ஆதரவளிப்பதால், அதிமுகவும் ஐந்தாவது வேட்பாளர்
வெற்றிபெற மேலும் 7 பேரின் ஆதரவு மட்டுமே தேவையாக இருக்கும். இதற்கு சட்டசபை தேர்தலில்
தங்களுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி (2), புதிய தமிழகம் (2), பார்வர்டு பிளாக் (1) கட்சிகளின்
ஆதரவு எதிர்பார்க்கப்படுகிறது. ஆக ஐந்தாவது அதிமுக வேட்பாளரின் வெற்றி கைக்கெட்டும்
தூரத்தில் தான் உள்ளது. தேமுதிகவில் மேலும் உடைசல்கள் ஏற்படுவது திண்ணமாகத் தெரிகிறது.
இந்நிலையில் ஜெயலலிதா புத்திசாலித்தனமாக
மற்றோர் அறிவிப்பை வெளிட்டிருக்கிறார். அடுத்த
மக்களவைத் தேர்தலின் போது அதிமுக எக்கட்சியுடனும் கூட்டணி வைக்காது என்ற அறிவிப்பு
மிகவும் முக்கியமானது. தனித்தே 40 எம்பி இடங்களையும் வெல்வோம் என்றும் அவர் கூறி இருக்கிறார்.
அது நிறைவேறுவது கடினம் எனினும், அதிகப்படியான எம்பிக்களை அதிமுக வெல்லும்
பட்சத்தில் அக்கட்சியின் பேரம் பேசும் சக்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது. தேர்தலுக்குப்
பிறகு அமையும் ஆட்சி எந்தக் கூட்டணியின் ஆட்சியாயினும் அதில் அதிமுக பிரதான இடம் வகிக்க
வேண்டும் எனபதே ஜெயலலிதாவின் திட்டம். அதற்காகவே, இந்திய
கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவளிக்காமல் ஐந்தாவது வேட்பாளரை அவர் அறிவித்தார்.
அதிமுக ஆதரவு கிடைக்காதபோதும்
கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவைத் தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவது உறுதியாகி இருக்கிறது.
அக்கட்சிக்கு உள்ள 8 எம்எல்ஏக்களின் எண்ணிக்கையோடு மார்க்சிஸ்ட் கட்சியின் 10 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. வெற்றி பெற மேலும் 16 பேரின் ஆதரவு
தேவை. இப்போது அக்கட்சி தேமுதிகவுக்கு தூது அனுப்பி இருக்கிறது. முடிவு விஜயகாந்த்
கையில்.
விஜயகாந்துக்கு தனது மைத்துனர்
சுதீஷை மாநிலங்களவைக்கு அனுப்பும் ஆசை இருந்தது. கட்சியில் தொடர்ந்து வெளியேறி 'முதல்வரைச் சந்திக்கும்' தங்கள் கட்சி எம்எல்ஏக்களின் புரட்சியால் அவரது கனவு சிதைந்துவிட்டது. சென்ற
பஞ்சாயத்து தேர்தலில் தங்களைக் கைவிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை எப்படி ஆதரிப்பது
என்று கேப்டன் தயங்குவதாகத் தகவல். பண்ருட்டியார் அவரிடம் அரசியல் பாடம் நடத்திக் கொண்டிருப்பதாகவும்
தகவல்.
தேமுதிக மாநிலங்களைத் தேர்தலைப்
புறக்கணிக்காமல் கம்யூனிஸ்ட் வேட்பாளரை ஆதரிப்பதாக அறிவித்தால், எப்படியும் அக்கட்சியின் 20 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைக்கும் பட்சத்தில், வெற்றி பெற முடியும். மாறாக திமுகவை ஆதரிப்பதாக கேப்டன் அறிவிக்கவும்
வாய்ப்புள்ளது. அவ்வாறு நடந்தால் தேமுதிக பிளவுபடுவது உறுதியாகும்.
தேமுதிகவை நாடுமாறு இந்திய கம்யூனிஸ்ட்
கட்சிக்கு ஜெயலலதாவே அறிவுறுத்தி இருப்பதாகவும் தகவல். ஆறாவது எம்பியாக கம்யூனிஸ்ட்
ஜெயித்தாலும் பரவாயில்லை, திமுக இம்முறை மாநிலங்களவைக்கு ஒரு உறுப்பினரைக்கூட அனுப்பக் கூடாது
என்று விரும்புகிறாராம் ஜெயலலிதா. ராசதந்திரத்தில் அம்மையார் செம்மொழி கொண்டானையே விழுங்கி
விடுவார் போலிருக்கிறது. தேமுதிக கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரிப்பதாக அறிவித்துவிட்டால்
அக்கட்சி சிறிய சேதாரத்துடன் தப்பிவிடும் என்பது அக்கட்சிக்கு புரிய வைக்கப்பட்டுகள்ளது
தவிர, ஊழல் குற்றச்சாட்டுகளால் கலகலத்துள்ள திமுகவை ஆதரித்து தனது அரசியல்
எதிர்காலத்தை நிலைகுலையச் செய்ய வேண்டுமா என்ற கோணத்திலும் விஜயகாந்த் ஆராய்வதாக கூறப்படுகிறது. எது எப்படி இருப்பினும், தேமுதிகவின் நிலைப்பாடு தான் இப்போது
மிக முக்கியமான ஒன்றாக மாறி உள்ளது.
திமுகவிலோ, வெற்றிபெறத் தேவையான 34 என்ற எண்ணிக்கையை நெருங்க இன்னமும் அக்கட்சிக்கு
தேவை 11 பேரின் ஆதரவு. தனது கூட்டணியில் இருந்த, காங்கிரஸ் (5), பாமக (3) ஆகியோரின் ஆதரவைப் பெற்றாலும் வெல்வது கடினம். எனவே சிறு
கட்சிகளுக்கு அக்கட்சி வலை வீசுகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த பணத்துக்கு ஏதாவது செய்தாக வேண்டுமே?
எனவே சில்லறைக் கட்சிகளின் நிலைபாடுகளும்
முக்கியமானவையாக மாறி உள்ளன. அக்கட்சிகள் கடைசி நேரத்தில் பெட்டிகளுக்கு தகுந்தவாறு
கொள்கை விளக்கம் அளிக்கவும் வாய்ப்புள்ளது. பணம் தான் பிரதானம் என்ற அரசியல் உலகில்
கொள்கைகள் காற்றில் பறக்கவிடப்படும் பட்டங்கள் தானே? அநேகமாக
கூட்டணி மாறல்கள் அப்போது தான் தெளிவாகும்.
அடுத்த தேர்தலில் அதிமுக தனித்துப்
போட்டி என்று அறிவித்திருப்பதும், கூட்டணிக் கட்சிகளுக்காக திமுக பரிதவிப்பதும்
தான் இப்போதைய (21.06.2013) நிலை. காங்கிரஸ் கட்சியும் தேமுதிகவும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் மதில்
மேல் பூனைகளாக உள்ளன. எனவே இந்த மாநிலங்களவை
உறுப்பினர் தேர்தல் அரசியல் சதுரங்கத்திலும் ஒரு தெளிவு உண்டாக வழியை உருவாக்கும்.
அதற்கான பாதையை உருவாக்குவதில் பணபலம் பெரும் பங்கு வகிக்கும்.
கடைசியில், வெற்றி பெற்ற 6 உறுப்பினர்களும் ஜனநாயகத்தைக் காக்க டில்லி செல்வார்கள்.
அப்புறம் அவர்கள் என்ன செய்வார்கள் என்பதை நாமும் பார்க்கப்போவதில்லை; செல்பவர்களும் கவனிக்கப்போவதில்லை. நல்ல ஜனநாயகம். வளர்க இதன் புகழ்!
----------------
விஜயபாரதம் (28.06.2013)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக