2012 -13 ஆண்டுக்கான மத்திய ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உடனேயே அதை தாக்கல் செய்த அமைச்சரையே முதல் பலி வாங்கி இருக்கிறது. கடந்த 9 ஆண்டுகளாக உயர்த்தப்படாத பயணிகள் கட்டணத்தை மிக சொற்பமான அளவுக்கே உயர்த்திய ஒரே குற்றத்துக்காக, ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி ராஜினாமா செய்ய நேரிட்டிருக்கிறது. அவர் சார்ந்த திரினாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியின் தன்னிச்சையான செயல்பாடு மீண்டும் ஒருமுறை மத்திய அரசின் முகத்தில் கரியைப் பூசி இருக்கிறது.
கடந்த மார்ச் 14 ம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு ஒருவாரம் முன்னதாகவே, காங்கிரஸ் கலாசாரத்தின் அடிப்படையில்- ரயில்வே சரக்குக் கட்டணங்கள் 20 சதவீதம் முதல் 33 சதவீதம் வரை உயர்த்தப்பட்டிருந்தன. அதாவது நாடாளுமன்றத்தில் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவற்கு முன்னதாகவே கொல்லைப்புற வழியாக சரக்குக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுவிட்டன. இதை குஜராத் முதல்வர் மோடி தவிர வேறெந்த அரசியல் தலைவரும் எதிர்த்ததாகத் தெரியவில்லை.
அப்போதெல்லாம் கண்டுகொள்ளாத மம்தா, ரயில்வே பட்ஜெட்டில் கி.மீ.க்கு 2 காசு முதல் 30 காசு வரை பயணிகள் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்திருப்பது நாடகம் அல்லாமல் வேறென்ன?
இத்தனைக்கும் கடந்த 9 ஆண்டுகளாக அரசியல் காரணங்களுக்காக - தன்னை நல்ல ரயில்வே அமைச்சர் என்று பிறர் பாராட்ட வேண்டும் என்பதற்காக - லாலு, மம்தா ஆகியோர் ரயில்வே அமைச்சராக இருந்தபோது பயணிகள் கட்டணம் உயர்த்தப்படாமல் தவிர்த்து வந்தனர். உலகின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமான இந்தியன் ரயில்வே அதன் வளர்ச்சித் திட்டங்களுக்கு எந்த நிதி ஆதாரமும் இன்றி தவித்து வந்தது.
இந்திய ரயில்வே நாட்டிலுள்ள 1.36 கோடிக்கு மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனம். இதன் வருவாயில் 37 சதவீதம் ஊழியர் சம்பளத்துக்கும், 16 சதவீதம் ஓய்வூதியத்துக்குமே போய்விடுகிறது. எரிபொருள் செலவு 17 சதவீத வருவாயை விழுங்கிவிடுகிறது. இந்த மூன்று செலவினங்களில் மட்டுமே 70௦ சதவீதம் வருவாய் செலவிடப்படும் நிலையில் ரயில்வேத் துறை வளர்ச்சியை அடைவது எப்படி?
ஒவ்வோராண்டும் ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் புதிய திட்டங்கள், புதிய ரயில்கள் என்ன ஆகின என்று யாரும் கேட்பதில்லை. இவ்விஷயத்தில் விழிப்புணர்வோடு இருக்க வேண்டிய ஊடகங்களோ, வழக்கம்போல, அரைத்த மாவையே அரைக்கின்றன. உண்மையில், அறிவிக்கப்படும் பல ரயில்வே திட்டங்கள் போதிய நிதி இன்றி கிடப்பில் போடப்படுகின்றன. அடுத்த பட்ஜெட்டில் அத்திட்டம் புதிய பெயரில் மீண்டும் அறிவிக்கப்படுகிறது. அதேசமயம், பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமல் நல்ல பேர் எடுப்பதில் தான் போட்டி நிலவுகிறது. இந்த நாடகத்துக்கு இந்த ஆண்டின் ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி முற்றுப்புள்ளி வைக்க முயன்றிருக்கிறார். ஆனால், பாவம், அவரது கட்சித் தலைவரே அவரது பதவிக்கு உலை வைத்துவிட்டார்.
நியாயமாகப் பார்த்தால், அமைச்சரவையில் ஒரு அமைச்சரை சேர்ப்பதும் நீக்குவதும் பிரதமரின் பிரத்யேக உரிமைகள். ஆனால், கூட்டணி நிர்பந்தம், செயலற்ற பிரதமர் ஆகிய காரணங்களால் இந்த பிரத்யேக உரிமை பறிபோய் இருக்கிறது. ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த தினேஷ் திரிவேதியை நீக்கிவிட்டு தனது கட்சியின் மற்றொரு அமைச்சர் முகுல் ராயை ரயில்வே அமைச்சராக்குமாறு மிரட்டுகிறார் மம்தா. அதற்கு அடி பணிகிறார் பிரதமர் மன்மோகன் சிங். நல்ல கூத்து. வேடிக்கை பார்க்கும் எதிர்க்கட்சிகளுக்கும் கூட சங்கடமாக இருக்கிறது. ‘மண்ணு’மோகனுக்கு எந்தக் கவலையும் இல்லை.
இத்தனைக்கும் தினேஷ் திரிவேதி சமர்ப்பித்த பட்ஜெட்டில் உயர்த்தப்பட்ட கட்டணம் மிகவும் சொற்பம். புறநகர் ரயில்களிலும் சாதாரண வகுப்பு ரயில்களிலும் கி.மீ.க்கு 2 காசு உயர்த்தப்பட்டுள்ளது; எக்ஸ்பிரஸ் ரயில்களை கி.மீ.க்கு 3 காசும், ஏசி சேர் கார், முதல்வகுப்புக்கு 10 காசும் உய்ரத்தப்பட்டுள்ளன. 2 டயர் ஏசி-க்கு 15 காசும், ஏசி முதல் வகுப்புக்கு 30 காசும் கட்டணம் உயரத்தப்படுள்ளது. இதை பயணத் தூரத்துடன் கணக்கிட்டால், (நூறு கிமீ க்கு) ரூ. 6 முதல் ரூ. 10 வரை கூடுதல் ஆகலாம். இதனால் சாமானிய மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூக்குரலிடுவது மம்தாவின் அறியாமையை மட்டுமல்லாது மமதையையும் காட்டுகிறது.
பட்ஜெட்டுக்கு முன் சத்தமின்றியும், முறையின்றியும் ஏற்றப்பட்ட சரக்குக் கட்டணங்கள் குறித்து கண்டுகொள்ளாமல், பயணிகள் கட்டணத்தைக் குறைக்காமல் விட மாட்டேன் என்று சூளுரைக்கிறார் மம்தா. மத்திய அரசில் காங்கிரசுக்கு அடுத்து இரண்டாவது பெரிய கட்சியான திரிணமூல் காங்கிரஸ் கட்சியை இயல்பாக அரவணைத்து அரசு நடத்த வேண்டிய காங்கிரஸ் அதைச் செய்யத் தவறியதுடன், அக்கட்சித் தலைவியின் மிரட்டலுக்கு ஒவ்வொருமுறை தாளம் போடும்போதும், தன்னைத் தானே கேவலப்படுத்திக் கொள்கிறது. உண்மையில் ராஜினாமா செய்திருக்க வேண்டியவர் பிரதமர் மன்மோகன் சிங் அல்லவா?
இந்த ரயில்வே பட்ஜெட்டில் சரக்கு கட்டணம் வாயிலாக 65 சதவீதமும் பயணிகள் கட்டணம் மூலமாக 27 சதவீதமும் இதர இனங்களில் 8 சதவீதமும் வருவாய் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. பட்ஜெட் ஒப்புதலின்றி உய்ரத்தப்பட்டுள்ள சரக்குக் கட்டணம் காரணமாக, ஏற்கனவே விலைவாசி உயர்வில் தத்தளிக்கும் மக்களின் அவதி மேலும் அதிகரிக்கும். ஏனெனில், நாடு நெடுகிலும் தானியங்கள், மூலப்பொருள்கள், உரங்கள் உள்ளிட்டவை ரயில் மூலமாகவே பல பகுதிகளுக்கும் சென்று சேர்கின்றன. அங்கு சுமத்தப்படும் ஒவ்வொரு சுமையும், அத்தியாவசியப் பொருளின் விலை உயர்வில் வந்துதான் நிற்கும். இதற்காக தினேஷ் திரிவேதி ராஜினாமா செய்திருந்தால் கூட அதில் சற்று நியாயம் இருந்திருக்கும்.
இந்த ரயில்வே பட்ஜெட் வழக்கம் போல எதிர்க்கட்சிகளால் வசைபாடப்பட்டுள்ளது; வழக்கம் போல நாராயணசாமி, திக்விஜய் சிங் போன்ற காங்கிரஸ் ஆசாமிகள் இதுபோன்ற ரயில்வே பட்ஜெட் உலகில் எங்கும் சமர்ப்பிக்கப்பட்டதில்லை என்று முழங்குகிறார்கள். கூட்டணிக்குள் குத்துவெட்டு நடத்தும் மம்தா ‘பயணிகள் கட்டணத்தை குறைப்பேன்’ என்று சபதம் செய்கிறார். அநேகமாக இந்தக் கட்டணத்தில் சில காசுகள் குறையக்கூடும். அதைக் காட்டிக்கொண்டு தனது அரசியல் அதிகாரத்தின் மகிமையை மம்தா பறைசாற்றலாம்.
மம்தாவுக்கும் மன்மோகனுக்கும் இடையே சிக்கிக்கொண்டு காணாமல் போன தினேஷ் திரிவேதியை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது. அவர், 'நாடு தான் முதலில்; பிறகு தான் கட்சி' என்று கூறி இருக்கிறார். இதை சொல்ல வேண்டியவர் பிரதமர் அல்லவா? அவர் மௌனம் காப்பது தான் நமது நாட்டின் தலையெழுத்து.
நாடாளுமன்றத்தில் ஆளும் கூட்டணியின் இந்த குழப்பத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாகக் கண்டித்தன. கூட்டணிக் கட்சியையே கையாளத் தெரியாத அரசு ஆட்சியில் இருக்க வேண்டுமா? என்று கேட்டார் பாஜகவின் வெங்கைய நாயுடு. இவருக்கென சொல்லிச் சென்று விடுவார், மம்தாவின் 19 எம்பிக்களும் ஆதரவை விலக்கிக் கொண்டால் அரசு கவிழ்ந்துவிடுமே? பிறகு இதுவரை செய்த ஊழல்களை மறைக்க முடியாமல் போய்விடுமே? வெளிநாடுகளில் பதுக்கிய கறுப்புப் பணத்தை பாதுகாக்க முடியுமா? மத்தியப் புலனாய்வுத் துறையைப் பயன்படுத்தி மிரட்டி ஊழல் வழக்குகளை மன்னிக்க முடியுமா, தார்மிக நியாயம் பேசினால்?
இதில் வேடிக்கை என்னவென்றால், ஒரே நாள் இரவில் 40 சதவீத அளவுக்கு பேருந்துக் கட்டணங்களை தமிழகத்தில் உயர்த்திய முதல்வர் ஜெயலலிதா, ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம் சிறிதே உயர்த்தப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்திருப்பது தான். ரயில்வே கட்டண ஒழுங்குமுறை ஆணையம் அமைப்பது என்ற பட்ஜெட் அறிவிப்பில் உள்ள ஆபத்தை புரிந்துகொண்டிருக்கிறார் ஜெயலலிதா என்பது ஓரளவு ஆறுதல் அளிக்கிறது. இதனால் வருங்காலத்தில்; அடிக்கடி ரயில் கட்டணங்கள் உயரும் என்ற ஜெயலலிதாவின் அச்சம் நியாயமானதே.
எரிபொருள் விலை உயர்வுடன் ஒப்பிட்டு ரயில் கட்டணங்களை உயர்த்துவது அல்லது குறைப்பது இந்த ஒழுங்குமுறை ஆணையத்தின் பணியாக இருக்கும். கிட்டத்தட்ட மாதம் ஒருமுறை பெட்ரோல் விலை மாறுவதுபோல, இந்த ஆணையம் குறிப்பிட்ட கால இடைவெளியில் கட்டணங்களை மாற்றி அமைக்கும்; அதற்கும் அரசுக்கும் தொடர்பில்லாதது போல மத்திய அரசு நடிக்கும். இந்த ஆலோசனை கண்டிக்கப்பட வேண்டியதே.
அதேபோல, ரயில்வே துறையின் வளர்ச்சித் திட்டங்களில் தனியார் நுழைவுக்கு அனுமதி அளிக்கும் நடவடிக்கைகள் பல இந்த பட்ஜெட்டில் காணக் கிடைக்கின்றன. ‘ரயில் நிலைய மேம்பாட்டுக் கழகம்’ என்ற பெயரில் இத்திட்டம் பவனி வரப்போகிறது. இவை எல்லாம் உலக வங்கியின் முதன்மைச் சீடர் அலுவாலியாவின் அறிவுறுத்தலாக இருக்கலாம்.
ஒவ்வோர் ஆண்டும் சடங்கு போல ரயில்வே பட்ஜெட் தாக்கலாகிறது. ‘தோட்டத்தில் பாதி கிணறு’ என்பது போல, மொத்த வருவாயில் 55 சதவீதம் வரை ஊழியர்களின் செலவுக்கே செல்வதைத் தடுக்க எந்த உருப்படியான யோசனையும் முன்வைக்கப்படுவதில்லை. ஊழியர் சங்கங்களின் ஒட்டுமொத்த சக்திக்கு அஞ்சியோ, அவர்களின் வாக்குகளுக்கு அஞ்சியோ எந்த அரசும் சீர்திருத்த நடவடிக்கைகளை எடுப்பதில்லை. பிறகு கடன் வாங்கி நிர்வாகம் செய்வதால் ஆகப் போகும் லாபம் என்ன?
ரயில்வே துறையை நவீனமாக்க ரூ. 5.60 லட்சம் கோடி தேவை என்கிறார் ரயில்வே அமைச்சர். ஒவ்வோர் ஆண்டும் பொது பட்ஜெட்டிலிருந்து கெஞ்சிப் பெறும் சிறு தொகையில் எத்தனை நாட்களுக்கு இந்தியன் ரயில்வேயை ஓட்ட முடியும்? இந்த ஆண்டுக்கு ரூ. 3,000 கோடியை 8. 55 சதவீத வட்டியில் ரயில்வேக்கு வழங்க நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ‘யானைப்பசிக்கு சோளப்பொரி’ என்ற பழமொழி தான் இங்கு நினைவில் வருகிறது.
ரயில்வே துறையின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றமாக வடிவெடுக்கும், இதை மறந்துவிட்டு, வெற்று அறிவிப்புகளையும், கவர்ச்சிகரமான கோஷங்களையும் எழுப்புவதால் பயனில்லை. இந்த ரயில்வே பட்ஜெட் நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாகவே களபலி வாங்கிவிட்டது. இப்போது ஆட்சியில் உள்ள ஐ.மு.கூட்டணி அரசு இன்னும் எத்தனை தார்மிக நெறிமுறைகளையும் அரசாட்சி லட்சணங்களையும் களபலி இடப்போகிறதோ?
பெட்டிச்செய்தி
இதுவல்லவா அரசு?
பதவி விலக முரண்டு பிடித்த திரிவேதி ஒருவழியாக 'மம்தா' கூறியதால் ராஜினாமா செய்வதாகக் கூறி விலகினார். அவர் ராஜினாமா செய்யும் வரை- 4 நாட்களுக்கு - ரயில்வே அமைச்சரின் நிலை என்ன என்பது குறித்த நிச்சயமற்ற நிலை காணப்பட்டது. 'திரிவேதியே தனது ரயில்வே பட்ஜெட் விவாதத்தில் நாடாளுமன்றத்தில் பதில் அளிப்பார்' என்று சொல்லிவந்த காங்கிரஸ், மம்தாவின் மிரட்டலால் வழிக்கு வந்தது. பிறகு திரிவேதியை கெஞ்சிக் கூத்தாடி ராஜினாமா செய்ய வைத்திருக்கிறார்கள்.
அடுத்து பதவி ஏற்ற திரிணாமூல் காங்கிரஸ் எம்பி முகுல் ராய், தனக்கு முன் பட்ஜெட் தாக்கல் செய்த சகாவின் கட்டண உயர்வுகளை வாபஸ் பெறுவதாக அறிவித்திருக்கிறார். இவ்வாறு நடப்பது சுதந்திர இந்தியாவில் இதுவே முதல்முறை! நாட்டை ஆளும் காங்கிரஸ் கூட்டணியின் தகிடுதத்தங்கள் இன்னும் என்னென்ன கேவலங்களை உருவாக்கப் போகிறதோ தெரியவில்லை.
---------------------
விஜயபாரதம் (30.03.2012)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக