குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும்’ என்பார்கள். அது கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்களுக்கு மிகச் சிறப்பாகப் பொருந்துகிறது. அணுஉலை எதிர்ப்புப் போராட்டங்களுக்கு அமெரிக்க நாட்டின் தன்னார்வ நிறுவனங்கள் நிதி உதவி செய்கின்றன என்ற நமது பிரதமர் மன்மோகன் சிங்கின் கருத்து, 'மோதிரக்கையால் குட்டு' அல்லாமல் வேறென்ன?
சதா சர்வகாலமும் அமெரிக்க முதலாளிகள் சொல்வதையே வேதமாகக் கொண்டு செயல்படும் நமது பிரதமரே கூறி இருப்பதால், இந்தக் கருத்தின் உண்மைத்தன்மையை நாம் சந்தேகிக்க வேண்டியதே இல்லை. இயக்கத்துக்கு தயார்நிலையில் கூடங்குளம் அணுஉலை இருந்தும் மக்களின் வெகுஜனப் போராட்டத்தால் அதை திட்டமிட்டபடி துவக்க முடியாமல் அரசு தவிக்கிறது. இந்த வெகுஜனப் போராட்டத்தின் பின்னணியைத் தான் பிரதமர் பிட்டு வைத்தார். கூடவே ஒரு முக்கியமான, சிக்கலான, இதுவரை அரசு மறைத்துவந்த ஆபத்தான விஷயத்தையும் அம்பலப்படுத்தி இருக்கிறார்.
அது, நம் நாட்டில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் இயங்கும் பல அமைப்புகள் சேவைக்காக என்று கூறி வெளிநாடுகளிலிருந்து பெறும் கோடிக் கணக்கான நிதி வேறு செயல்களில் பயன்படுத்தப்படுவதையும் பிரதமரின் பேட்டி வெளிப்படுத்தி இருப்பது தான். குறிப்பாக மதமாற்ற வியாபாரிகளான கிறிஸ்தவ அமைப்புகள் கிறிஸ்தவ நாடுகளிலிருந்து 'சேவை' என்ற போர்வையில் பெறும் கோடிக் கணக்கான பணம் நமது நாட்டில் சமூகச் சீர்குலைவுக்கு வித்திடும் மதமாற்ற நடவடிக்கைகளில் பெரும்பங்கு வகிப்பதை மறுக்க முடியாது.
இதில் முன்னணி வகிப்பவர் தான் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு இயக்கத்தின் தலைவர் சுப. உதயகுமார். இவர் அடிப்படையில் ஒரு கிறிஸ்தவ மத வெறியர். வெளிநாடுகளில் கல்வி ஆராய்ச்சி செய்வதாக கூறிக்கொண்டு ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க. குறித்து தவறான கருத்துக்களை உருவாக்கும் 'ஆராய்ச்சி' நூல்களை எழுதியவர் தான் உதயகுமார். 'Presenting the Past: Anxious History and Ancient Future in Hindutva India', ‘Om-made’ History: Preparing the Unlettered for the Future Hindu Rashtra', 'Historicizing Myth and Mythologizing History: The Ayodhya Case in India', 'Mapping the ‘Hindu’ Remaking of India', 'Betraying a Futurist: The Misappropriation of Gandhi's Ramarajya' போன்றவை அவர் எழுதிய நூலகளில் சில. இந்த நூல்களை வெளியிட உதவிய வெளிநாடுகளே, தற்போது கூடங்குளம் எதிர்ப்பு போராட்டத்துக்கு நிதி உதவி செய்கின்றன. இதில் வியப்பதற்கு ஏதுமில்லை.
அடிப்படையில் உதயகுமார் ஒரு மத அடிப்படைவாதி. அவர் அறிவுத்துறையில் (Intelectual) கிறிஸ்தவ மதத்தின் தாக்கத்துக்காக பணிபுரிய நியமிக்கப்பட்டவர். அவர் தனது பணிகள் இதுவரை கச்சிதமாகவே செய்து வந்திருக்கிறார். ஆனால் தனக்கு என்று அரசியல் சார்ந்த எண்ணங்கள் இல்லை என்று இப்போது புருடா விடுகிறார். ''1998 ல் வாஜ்பாய் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்தபோது, மத்திய அரசின் செயல்பாடுகளைக் கண்காணிக்க அறிவுஜீவிகள் குழுவை அமைக்க முயன்றதாகவும், அதற்கு மவுன்ட் ரோடு மகாவிஷ்ணு'வான ஹிந்து ராம் ஆதரவளித்ததாகவும்’ அவரே ஒரு இணையக் கட்டுரையில் எழுதி இருக்கிறார். தவிர 'இந்திய பசுமைக் கட்சி' என்ற கட்சியின் நிறுவனராகவும் இவர் இருக்கிறார். இக்கட்சி தேர்தல் அரசியலில் இப்போது ஈடுபடாவிட்டாலும், பாஜகவுக்கு எதிரான சிந்தனைகளைப் பரப்ப தேர்தல் காலத்தில் பயன்படும் என்பது ரகசியமல்ல.
இவரது நூல்கள், ஹிந்துத்துவ வெறுப்பை உமிழும் இவரது ஆழ்மனதை புலப்படுத்தும் அரிய ஆவணங்கள். உண்மையில் இவர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவானவர். ஆனால், இறையருளால், இவரது முகத்திரையை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரதமரே தோலுரித்திருக்கிறார். அதற்கு முன்னதாக, கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் இந்திய தலைமை பீடங்களை அணுகி காங்கிரஸ் தலைவர்கள் சிலர் மேற்கொண்ட சமரச முயற்சி பலரும் அறியாதது.
கூடங்குளம் அணுஉலை திட்டம் ரஷ்ய உதவியுடன் நிறுவப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டது காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது தான். அப்போது கோர்பசேவ் ரஷ்ய அதிபராக இருந்தார். இந்தத் திட்டத்துக்காக ராஜீவுக்கு ரஷ்யா 'அன்பளிப்பு' வழங்கியதாகவும் பேச்சு உண்டு. இன்றும் கூட கோர்பசேவ் ராஜீவ் குடும்பத்தின் ஆப்த நண்பராக உள்ளார். சோனியா குறித்த வாழ்க்கை வரலாறு நூலுக்கு முன்னுரை எழுதியவர் கோர்ப்பசேவ். அப்படிப்பட்ட நிலையில், கூடங்குளம் அணுஉலை முடங்குவதை கௌரவப் பிரச்னையாக காங்கிரஸ் காண்கிறது. எனவே தான், அணுஉலை எதிர்ப்புப் போராளிகளுக்கு எதிராக காங்கிரஸ் களம் இறங்கியது. சோழியன் குடுமி சும்மா ஆடாது என்று சும்மாவா சொன்னார்கள்?
காங்கிரஸ் கட்சியின் அணுஉலை ஆதரவு நிலைப்பாட்டுக்கு என்ன காரணம் இருப்பினும் இருந்துவிட்டுப் போகட்டும். அதை ஆதரிக்கும் பிற கட்சிகள் தேச நலனின் அடிப்படையில் இதைத் துவக்க வேண்டும் என்று கோருகின்றன. உண்மையில் இத்திட்டம் இப்போதுள்ள வடிவுக்கு வர முக்கிய காரணமாக இருந்தது பாஜக தான். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது தான், முடங்கிக் கிடந்த அணுஉலைத் திட்டம் வேகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தான், பல்வேறு கெஞ்சல்களையும் புறந்தள்ளிய உதயகுமார் கும்பல் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கத் துவங்கி இருக்கிறது.
அதற்கு முன்னதாக 'புதுவையின் கபில் சிபல்' நாராயணசாமியை அனுப்பி தனது பிரசாரங்களை மத்திய அரசு முடுக்கிவிட்டது. அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு தெளிவாகவும் உறுதியாகவும் விளக்க வேண்டிய விஷயங்களை நாராயணசாமியின் ஆணவப் பேச்சுக்கள் திசை மாற்றின. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அணு உலைக்கு ஆதரவாகவும், கூடங்குளம் மக்களுக்கு நன்மை அளிப்பதாகவும் முன்வைத்த திட்டங்கள் போலல்லாது, ஆணவப் போக்குடன் மத்திய அரசு நடந்துகொண்டது. அதன் விளைவாக உதயகுமார் கும்பலுக்கு ஆதரவு பெருகியது. மத்திய அரசுடன் ஊடல் கொண்டாடும் தமிழக அரசு எதையும் கண்டுகொள்வதில்லை என்ற முடிவில் உறுதியாக இருக்க, போராட்டக் காரர்களுக்கு வசதியாகிவிட்டது.
இருப்பினும் நாராயணசாமியின் பேச்சு ஒருவிதத்தில் நன்மை அளித்தது. கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் முறைகேடான நிதி உதவி குறித்து அவர்தான் முதலில் புகார் கூறினார். பிற்பாடு அதையே பிரதமரும் உறுதிப்படுத்தினார். இதில் காங்கிரஸ் கட்சி ஆரம்பத்தில் தர்ம சங்கடமான நிலையில் தான் தவித்தது. அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தை முன்னின்று நடத்துவோர் உள்ளூர் கிறிஸ்தவ பாதிரியார்கள் என்பதே காங்கிரஸ் கட்சியின் சங்கடத்துக்கு காரணம். எனவே தான், கத்தோலிக்கர்களின் இந்திய தலைமை குருமார்களுடன் மத்திய அமைச்சர்கள் சிலர் பேச்சு நடத்தினர். அதனால் பயன் பெரிய அளவில் விளையவில்லை. ஏனெனில், மதத்தை விட, இந்தப் போராட்டத்துக்கு நிதி உதவி அளிக்கும் நாடுகளின் சர்வதேச அரசியல் வலுவானது.
அமெரிக்காவும், பிரான்சும் அடிப்படையில் கிறிஸ்தவ ஆதரவு நாடுகளாக இருந்தாலும், ரஷ்யாவுக்கு எதிரானவை. ரஷ்யாவின் வளர்ச்சியை முடக்க அமெரிக்கா பனிப்போர் காலத்திலிருந்தே பல கோடி டாலர்களை செலவிட்டு வருகிறது. அதற்கு உதவும் சாதனங்களாகவே தன்னார்வ நிறுவனங்களை (NGO) உலக நாடுகளில் அமெரிக்க பயன்படுத்தி வருகிறது. சர்வதேச அரசியலில் தனது தாக்கத்தை செலுத்த விரும்பும் நாடுகளின் கைப்பிள்ளைகளாகவே இந்த தன்னாவத் தொண்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன. இது ஒன்றும் பரம ரகசியம் அல்ல.
அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமாரும் கூட, SACCER (South Asian Community Center for Education and Research) என்ற தன்னார்வ நிறுவனத்தை நடத்துபவர் தான். இத்தகைய அமைப்புகளில் நோக்கம் கல்வி, ஊரக வளர்ச்சி, ஏழ்மை ஒழிப்பு என்பது போன்று அறிவிக்கப்பட்டாலும், உள்நோக்கம் வேறாக இருப்பதையே அனுபவத்தில் காண்கிறோம்.
கிறிஸ்தவ அமைப்புகளும் இந்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் போர்வையில் இந்தியாவில் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களுக்கு வரும் கோடிக்கணக்கான நிதி உதவியை தற்போது மத்திய அரசின் நடவடிக்கைகள் ஊர்ஜிதப்படுத்தி இருக்கின்றன. நாடு முழுவதும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவந்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். கூடங்குளம் அனுபவம் ஒருவகையில் மத்திய அரசுக்கு நல்ல புத்தியைக் கொடுத்திருக்கிறது. இறைவனுக்கு நன்றி!
திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளில் இயங்கும் பல தன்னார்வ அமைப்புகள் கிறிஸ்தவர்களால் நடத்தப்படுபவை. அவற்றுக்கு சமூகப் பணிக்கென (உதாரணமாக சுனாமி நிவாரணம் என்ற பெயரில் வரும் பணம்) கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்கள் கட்டப் பயன்படுத்தப்படுவதையும் மதமாற்ற நடவடிக்கைகளில் செலவிடப்படுவதையும் காண முடியும். இது புதிய புகாரல்ல. கடந்த 30 ஆண்டுகளாக தமிழகத்தில் இந்து முன்னணி கூறிவரும் குற்றச்சாட்டு தான். இவ்வாறு கிறிஸ்தவ நிறுவனங்களுக்கு வரும் நிதி அணுஉலை எதிர்ப்பாளர்களுக்கு மடை மாற்றப்பட்டதா என்பது குறித்து அரசு ஆராய்ந்தது. (சமூக வளர்ச்சிப் பணிக்காக என்று கூறி பெறும் நிதியை மதமாற்ற நடவடிக்கைகளுக்கு மட்டும் மடை மாற்றலாமா?)
துவக்கத்தில் ஏழு அமைப்புகளை ஆராய்ந்த உள்துறை அமைச்சகம், தற்போது நான்கு அமைப்புகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. அவை: ஊரக மேம்பாட்டு மையம் (RUC), தூத்துக்குடி டயோசிசன் சங்கம் (TDA), குட் விஷன், ட்ரினிடி ஊரகம் மற்றும் நகர்ப்புற அதிகாரம் அளிக்கும் அமைப்பு (TRUE) ஆகியவை. இதில் மத்தியப் புலனாய்வுத் துறையால் RUC , TDA அமைப்புகள் விசாரிக்கப்படுகின்றன. குட் விஷனும் TRUE அமைப்பும் தமிழக புலனாய்வு அமைப்பால் விசாரிக்கப்படுகின்றன.
இவற்றில் தூத்துக்குடியில் இயங்கும் TDA அமைப்பு கடந்த நிதியாண்டில் பிரான்ஸ் நாட்டிலிருந்து ரூ. 1.43 கோடி பெற்றுள்ளது. ஜெர்மனியிலிருந்து 84 லட்சமும், இத்தாலியிலிருந்து 61 லட்சமும், நெதர்லாந்திலிருந்து 45 லட்சமும் என, 2010 -11 ல் இந்த அமைப்பு பெற்ற மொத்த வெளிநாட்டு நிதி உதவி ரூ. 3.60 கோடிக்கு மேல்! இதேபோல RUC அமைப்பு சென்ற நிதியாண்டில் பெற்ற மொத்த நிதி ரூ. 2.38 கோடி! இந்த நிதி மதமாற்ற நடவடிக்கைகளிலும் அணு உலை எதிர்ப்புப் போராட்டங்களுக்கு உதவும் செயல்பாடுகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இவையல்லாமல், திருநெல்வேலி, தூத்துக்குடியில் அரசின் கண்காணிப்பு வளையத்தில் உள்ள சில தன்னார்வ நிறுவனங்களும், அவற்றுக்கு வந்த வெளிநாட்டு நிதி உதவியும் குறித்த தகவல்கள் இதோ...
1 . சால்வேஷன் ஆர்மி இந்திய சவுத் ஈஸ்டர்ன் டெரிட்டரி (ரூ. 8.45 கோடி)
2 . சோஷியோ எகனாமிக் அண்ட் எஜுகேஷனல் டெவெலப்மென்ட் சென்டர் (ரூ. 4.41 கோடி)
3 . தி காக்ரிகேஷன் ஆப் தி பிரதர்ஸ் ஆப் தி சேக்ரட் ஹார்ட் ஆப் ஜீசஸ் (ரூ. 2.74 கோடி)
4 . பீப்பிள்ஸ் ஆக்ஷன் அண்ட் கம்யுனிட்டி எம்பவர்மென்ட் (ரூ. 2.64 கோடி)
5 . டோனாவூர் பெல்லோஷிப் (ரூ. 2.59 கோடி)
6 . சவுத் இந்தியா அசெம்ப்ளீஸ் ஆப் காட் (ரூ. 2.55 கோடி)
7 . தூத்துக்குடி மல்டி பர்பஸ் சோஷியல் சர்வீஸ் (ரூ. 2.44 கோடி)
-இவ்வாறு பட்டியல் நீள்கிறது. நாடு முழுவதும் இதுபோல 72 தன்னார்வ நிறுவனங்கள் மத்திய அரசின் கழுகுப் பார்வையில் தற்போது சிக்கியுள்ளன. எனினும் இதுகுறித்த மேல் விபரங்களை அரசு வெளிப்படுத்தவில்லை. பொதுவான கண்ணோட்டத்தில், கிறிஸ்தவ நிறுவனங்கள் சேவை நிறுவனங்களின் பெயரில் பல்வேறு வெளிநாடுகளிலிருந்து பணம் பெறுவது உறுதியாகத் தெரிகிறது. இந்தப் பணம் தான், உள்நாட்டில் பல குழப்பங்களுக்கு வித்திடுகிறது.
உதாரணமாக வேல்டு விஷன் என்ற ஒரு அமைப்பு இந்தியாவில் உள்ள ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக பாடுபடுவதாகக் கூறி நன்கொடைகளை உள்நாட்டில் திரட்டுகிறது. இந்த அமைப்பே ஒரு சர்வ தேச அமைப்பு. பல ஆசிய நாடுகளில் இதற்கு கிளைகள் உண்டு. வெளிநாட்டு நிறுவனமான இதற்கு வெளிநாடுகளில் இருந்தும் நிதி குவிகிறது. அதுபோக உள்ளூரிலும் கையேந்துகிறது. எல்லாம், பாவிகளை ரட்சிக்க!
இவ்வாறாக, கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதியாக இருக்கிறது, கிறிஸ்தவ சேவை நிறுவனங்களுக்கு வரும் வெளிநாட்டுப் பணம் குறித்த தகவல்கள். கூடங்குளம் எதிர்ப்பு போராட்டத்துக்கு தலைமை வகிக்கும் இடிந்தகரை மக்களுக்கு இதில் பெரும் பகுதி செலவிடப்படுவதாகக் கூறுகிறார், அதே பகுதியில் வாழும் அணுஉலை ஆதரவு இயக்கத்தின் நிர்வாகி சத்தியசீலன். இந்த விவரம் அனைத்தையும் அறிந்திருக்கும் உள்ளூர் இந்து அமைப்புகள் அப்பகுதிகளில் கடுமையான எதிர்ப்புக்கிடையே அணுஉலை ஆதரவு பிரசாரம் செய்து வருகின்றன. அண்மையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அணுஉலை எதிர்ப்பாளர்களான கிறிஸ்தவர்களுக்கும் இந்து முன்னணியினருக்கும் இடையே நேரிட்ட மோதலை இங்கு குறிப்பிடலாம்.
குமரி, நெல்லை மாவட்டங்களின் அரசியல் களத்தைத் தீர்மானிப்பவர்களாக பாதிரியார்கள் இருப்பதால், சங்கரன்கோவில் இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக தலைவி ஜெயலலிதா அமைதி காத்ததாகக் கருதப்படுகிறது. அவரது கூடங்குளம் அணுஉலை குறித்த குழப்பமான நிலைப்பாடு மாறிவிட்டது. இப்போது உதயகுமார் கும்பல் தமிழக அரசின் முடிவைக் கண்டித்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இப்போதும் கூட அணு உலை எதிர்ப்பாளர்களை கைது செய்ய காவல்துறை சென்றால், சர்ச் மணியை ஒலிக்கச் செய்து மக்களைத் திரட்டி மிரட்டுகின்றனர், உள்ளூர் கிறிஸ்தவர்கள். விரைவில் இந்த அராஜகத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
இந்த அணுஉலை எதிர்ப்பு போராட்டங்களுக்கு அமெரிக்க, பிரெஞ்ச் நாட்டு அமைப்புகள் உதவ வேண்டிய தேவை என்ன என்ற கேள்வி எழுகிறது. காரணம் தெளிவு. இந்தியாவில் அணுஉலை அமைக்கும் ஒப்பந்தத்தைப் பெற முயன்ற இந்நாடுகள் சில காரணங்களால் தோல்வியைத் தழுவின. இந்தியாவின் நண்பனாக இருந்த ரஷ்யா அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது. எனவே தான் ரஷ்ய அணு உலைகள் இயங்குவதை எப்பாடு பட்டாவது தடுக்க அவை முயற்சிக்கின்றன என்பது ஒரு தகவல். இது உண்மையாகவே இருக்கலாம். ஏனெனில் ஆயுத பேரங்களில் ஈடுபடுவதற்காக இத்தகைய தன்னார்வ சேவை அமைப்புகளைப் பயன்படுத்துவது வல்லரசு நாடுகளின் வழக்கமே. கூடங்குளம் அணுஉலை மின்னுற்பத்திக்கு என்று சொல்லப்பட்டாலும் அதன் அணு ஆயுத உபயோகங்கள் முக்கியமானவை. இதனை நாட்டுநலன் கருதி வெளிப்படுத்த முடியாத நிலையில் நமது விஞ்ஞானிகள் உள்ளனர். இதை உணர்ந்தே அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகள் எதிர்க்கின்றன என்று கருதலாம்.
இதை வெளிப்படையாகக் கூற முடியாவிட்டாலும், பிரதமர் அமெரிக்க பத்திரிகைக்கு (Science) அளித்த பேட்டியில் கோடிட்டுக் காட்டி இருக்கிறார். அவர் கூறியது இது தான்:
''நாட்டின் மின்னுற்பத்தியை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் புரிந்துகொள்வதில்லை. இவற்றில் பல, அமெரிக்காவில் உள்ளவை. இதனால் தான் அணுமின் நிலையங்கள் பிரச்னைகளை சந்திக்கின்றன.... எங்கள் நாடு சந்திக்கும் வளர்ச்சி தொடர்பான சவால்களை அமெரிக்காவிலிருந்தும் ஸ்காண்டிநேவிய நாடுகளிலிருந்தும் நிதி உதவி பெறும் இந்திய தன்னார்வ நிறுவனங்களும் புரிந்துகொள்ளவில்லை...''
-இத்தனைக்கும் பிரதமர் மிகவும் பூடகமாகவே கூறி இருக்கிறார். இதற்கே பிரதமர் தனைகளை இழிவு படுத்திவிட்டதாக கூக்குரல் இடுகிறார் உதயகுமார். பிரதமர் மீதே வழக்கு தொடுப்பதாகவும் மிரட்டுகிறார். இதையும் நமது அரசுகள் ஜனநாயகம் என்ற போர்வையில் அனுமதிக்கின்றன.
தமிழ்நாட்டில் உள்ள தன்னார்வ அமைப்புகளுக்கு 2009 -10 ம் ஆண்டில் அந்நிய நாடுகளிலிருந்து வந்த நிதி ரூ. 1663 கோடி. தமிழகத்தில் மட்டும் 3218 தன்னார்வ அமைப்புகள் அயல்நாடுகளிலிருந்து நிதி உதவி பெறுகின்றன' என்கிறது ‘புதிய தலைமுறை’ வார இதழ். இந்த புள்ளிவிபரம் நம்மை எச்சரிக்கிறது. தூத்துக்குடியில் இயங்கும் சில தன்னார்வ அமைப்புகளின் தேசவிரோத நடவடிக்கைகள் அம்பலம் ஆகியுள்ள நிலையில், அந்நியக் கரங்களாக இயங்கும் இத்தகைய அரசுசாரா அமைப்புகளை கண்காணிப்பது அவசியம். அவசியம் ஏற்பட்டால், இவற்றுக்கு வரும் நிதிப் பரிமாற்றத்தை முடக்குவதும் அவசியம். கூடங்குளம் அளித்துள்ள பாடம் இது எனில் மிகை இல்லை.
--------------
காண்க: தமிழ் ஹிந்து
விஜயபாரதம் (30.03.2012)
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக