2003 ல் வெங்கடேச பண்ணையார் என்ற தூத்துக்குடியைச் சேர்ந்த தாதா சென்னை போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டபோது அதை எதிர்த்து திமுக பெரும் பிரச்னையைக் கிளப்பியது. அவரது மனைவி ராதிகா செல்விக்கு எம்பி சீட் கொடுத்து அவரை நாடாளுமன்றத்துக்கும் அனுப்பியது. இதற்கு வெங்கடேச பண்ணையார் சார்ந்திருந்த ஜாதி காரணமாக இருந்திருக்கக் கூடும். தவிர, வெங்கடேச பண்ணையார் கொல்லப்பட்டதில் பல மர்ம முடிசுகளும் இருந்தன.
ஒவ்வொரு என்கவுன்டருக்கும் பின்புலத்தில் இத்தகைய சந்தேகத்துக்கு இடமான கேள்விகள் எழவே செய்யும். ஏனெனில், ஒவ்வொரு என்கவுன்டரின் போதும், சில காவலர்கள் அடிபட்டு மருத்துவமனையில் படுத்துக் கொள்வதும், ரவுடிகள் அல்லது குற்றவாளிகள் மட்டுமே சாவதும் நியதியாக உள்ளன. காவலர்கள் குற்றவாளியைச் சூழ்ந்தவுடன் குற்றவாளி தப்ப முயன்றதாகவும், அப்போது காவலர்களை ஆயுதத்தால் தாக்கியதாகவும் தான் ஒவ்வொரு சமயமும் கதை எழுதப்படுகிறது. இந்தக் கதையை வேறுவிதமாக எழுதவும் கூட காவல்துறைக்குத் தோன்றுவதில்லை.
எனவேதான் காவல்துறையினர் நடத்தும் என்கவுன்டர் கொலைகள் கண்டனத்துக்கு உள்ளாகின்றன. இதில் போலிமோதல்கள் இல்லை என்று சொல்லவும் முடியாது. ஆனால், கொல்லப்பட்ட குற்றவாளியை அதற்காக தியாகியாக்கவும் கூடாது. இந்த விஷயத்தில் இரு பக்கங்களையும் நாம் கவனமாகப் பரிசீலிப்பது அவசியம்.
இதுவரை தமிழகத்தில் நடந்த என்கவுண்டர்களில் 75 க்கு மேற்பட்டோர் கொல்லப் பட்டிருப்பதாக தகவல். இந்த என்கவுன்டர் முறை, காவல்துறை அதிகாரி தேவாரத்தால் தர்மபுரி பகுதியில் 1980 களில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்பகுதியில் நிலைகொண்ட நக்சலைட்களை ஒழிக்க போலீசார் கடுமையான அடக்குமுறைகளைக் கையாண்டனர். நக்சல் என்று சந்தேகிக்கப்பட்டவனை எந்த விசாரணையும் இன்றி சுட்டுக் கொல்ல போலீசார் தயாராக இருந்தனர். அந்த கடும் நடவடிக்கை காரணமாகவே தமிழகத்தில் நக்சல் தீவிரவாதம் வளர முடியாமல் போனது என்பதும் உண்மை.
அடுத்து, நகர்ப்புறங்களில் வன்முறைக் கும்பலாக வளர்ச்சி பெற்ற தாதாக்களால் சட்டம் ஒழுங்கிற்கு சவால் ஏற்பட்டபோது என்கவுன்டர் கொலைகள் மீண்டும் அரங்கேறின. தாதாக்கள் அரசியல் செல்வாக்குடன் ஆள் கடத்தல், கட்டப் பஞ்சாயத்து, கொலைகள், கற்பழிப்பு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும்போது, அவர்களை கைது செய்து தண்டனை பெற்றுத் தர போதிய சாட்சியமின்றி காவல்துறை திண்டாடும் நிலை ஏற்படுவதுண்டு. அத்தகையே சூழலே என்கவுன்டர் கொலைகளுக்கு காரணமாக அமைந்தது.
சமூகத்தில் அமைதியை நிலைநாட்ட காவல்துறை சட்டத்தை தானே கையில் எடுத்துக் கொண்டு குற்றவாளி என்று கருதப்படுபவனுக்கு தண்டனை வழங்குவதாகவே இதைக் காண வேண்டும். ஆனால், இதில் சிக்கல் என்னவென்றால், காவல்துறை அதிகாரிகள், அதிகார பீடத்திலுள்ள அரசியல்வாதிகளின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப இந்த என்கவுன்டர் கொலைகள் நிகழ்த்தப்பட்டு விடலாம். அப்போது இது மனித உரிமை மீறலாகிறது.
காவல்துறையினரை தாக்கும் அளவுக்கு ஒரு குற்றவாளி செல்லும்போது தற்காப்புக்காக காவலர்கள் அவனை தாக்கிக் கொல்ல சட்டம் அனுமதிக்கிறது. எனினும், அந்த நிகழ்வை தகுந்த அதிகாரி முன் பின்னர் நிரூபித்தாக வேண்டும். இதையும் மனித உரிமை ஆர்வலர்கள் ‘கண்துடைப்பு நாடகம்’ என்று ஏசுவது வாடிக்கை. ஆனால், கொல்லப் படுபவர்கள் யாரும் மகான்கள் அல்ல என்பதால்தான் வெகுமக்கள் ஆதரவு இத்தகைய என்கவுன்டர்களுக்குக் கிடைக்கிறது.
ரவுடி ஆசைத்தம்பி (1996), மும்பை ரவுடி சோட்டா ராஜனின் கூட்டாளி சஞ்சய் காடே (2002), இஸ்லாமிய பயங்கரவாதிகள் இமாம் அலி உள்ளிட்ட நால்வர் (பெங்களூர்- 2002), அயோத்தியாக் குப்பம் வீரமணி (2003), சந்தனக் கடத்தல் வீரப்பன் (சத்தி - 2004 ), ரவுடி பங்க்குமார் (2006 ), மணல்மேடு சம்பத் (2007), ரவடி வெள்ளை ரவி, குணா (2007), தஞ்சாவூர் ரவுடி மிதுன் (2008), ரவுடி சண்முகம் (2009), ரவுடி திண்டுக்கல் பாண்டி அவனது கூட்டாளி வேலு (2010), ரவுடி கவியரசு (2010), கோவையில் சிறுவன், சிறுமி இருவரை கடத்தி கொலை செய்த கார் டிரைவர் மோகன்ராஜ் (2010) என என்கவுன்டர் பட்டியல் மிக நீளமாக உள்ளது.
இந்தப் பட்டியலில் உள்ள எவரும் குற்றம் செய்யாதவர்கள் அல்ல. இவர்கள்; மீது கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட கடுமையான குற்றப்பிரிவுகளில் வழக்குகள் உள்ளன. உதாரணமாக கோவையில் சிறுமியைக் கடத்தி பலாத்காரம் செய்து வாய்க்காலில் வீசிய மோகன்ராஜுக்கு அதன் பின்விளைவு தெரியாமல் இருந்திருக்க முடியாது. அத்தகைய கல்மனம் கொண்ட குற்றவாளியைத் தண்டிக்க சாட்சியம் தேடிக் கொண்டிருப்பதும் இயலாதது. இதுபோன்ற சூழலில் தான் காவல்துறை, குற்றவாளிகளுக்கு பாடமாகவும், சமுதாயத்துக்கு அச்சமூட்டும் எச்சரிக்கையாகவும் என்கவுன்டர்களை நடத்துகிறது என்பதே பெரும்பாலோரின் எண்ணமாக உள்ளது. இது ஓரளவு உண்மையே.
பொதுவாக தமிழகத்தில் அதிமுக அரசு இருக்கும்போதுதான் அதிகப்படியான என்கவுன்டர்கள் நடந்திருக்கின்றன. இதற்கு காவல்துறைக்கு அரசு கொடுக்கும் சுதந்திரமும் காரணம். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு என்பது உள்ளூர் வட்டச் செயலாளரால் தீர்மானிக்கப்படுவதாக இருப்பதை பல இடங்களில் காண முடிந்தது. அதிமுக அரசில் அமைச்சரானாலும் காவல்துறையிடம் வாலாட்டுவதில்லை. இந்த சுதந்திரம் சில சமயங்களில் அத்துமீறலுக்கும் வித்திடுவதைக் காண முடிகிறது.
என்கவுன்டர் கொலைகளுக்கு தேசிய அளவில் மனித உரிமை ஆணையமும் நீதிமன்றங்களும் அவ்வப்போது எதிர்ப்பு தெரிவித்தே வந்திருக்கின்றன. குற்றவாளிக்கும் உயிர் வாழ உரிமை உண்டு என்ற அடிப்படையில் அந்த எதிர்ப்பு எழுகிறது. ஆனால், ஆட்டோ சங்கர் போன்ற தொடர் கொலையாளிகளை நமது ஊடகங்கள் கதாநாயகனாக உருவகித்து மகிழ்வதைக் காணும்போது, காவல்துறையினரின் நடவடிக்கையை நியாயப்படுத்தவே தோன்றுகிறது.
சந்தனக் கடத்தல் வீரப்பனும், ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தை தகர்த்த கும்பலைச் சேர்ந்த இமாம் அலியும் நமது ஆமைவேக நீதிமன்ற நடைமுறைகளால் தண்டிக்கப்பட பல பத்தாண்டுகள் ஆகலாம். அதற்குள் அவர்கள் பிணையில் வெளிவந்து தேர்தலில் போட்டியிட்டு மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்வாகவும் வாய்ப்புண்டு. அததகைய மோசமான அரசியல் சூழலில் தான் நாம் வாழ்கிறோம். எனவே மனிதஉரிமை என்ற பெயரில் இததகைய குற்றவாளிகளுக்கு வக்காலத்து வாங்குவதை ஏற்க முடியாது.
சக மனிதனை மனிதனாகக் கருதுபவனே மனிதன். அவனுக்கே மனித உரிமை குறித்து பேசவும் அதை தனக்கு வழங்குமாறு கோரவும் உரிமை உண்டு. துப்பாக்கி காட்டி வங்கியில் கொள்ளை அடித்த கும்பல், அப்போது யாரேனும் எதிர்ப்பு தெரிவித்திருந்தால் அவர்களைக் கொல்லவும் தயங்கி இருக்காது. அப்படிப்பட்ட கொள்ளையர்களுக்கு நமது ஊடகங்கள் காட்டும் கரிசனத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை.
இதே காவல்துறை கொள்ளையரைத் தப்பவிட்டிருந்தாலும், இதே ஊடகங்கள் காவல்துறையை ‘கையால் ஆகாதவர்கள்’ என்று விமர்சித்திருக்கும். சென்னையில் நடந்த இரு வங்கிக் கொள்ளையை அடுத்து, அவ்வாறு தான் ஊடகங்கள் அரசையும் காவல்துறையையும் விமர்சித்தன. இப்போது கொஞ்சம் அதிகப்படியான நடவடிக்கை எடுத்தவுடன் அரசையும் காவல்துறையையும் குறை கூறுகின்றன. எனில், இவர்களிடம் கேட்டுவிட்டுத்தான் எந்த செயலையும் காவல்துறை செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்களா?
சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்தவே காவல்துறை உள்ளது. அதற்காகவே அவர்களுக்கு துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது. அது வேடிக்கை காட்ட அல்ல. அதே சமயம், அப்பாவிகள் தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற கோரிக்கை நியாயமானதே. சென்னையில் கொள்ளையர்கள் கொல்லப்பட்டதைப் பொருத்த வரை, அவர்கள் இரு தினங்களுக்கு முன்னரே பிடிபட்டு விசாரணை செய்யப்பட்டதாகவும், அதன்பிறகு சம்பவ நாளில் நள்ளிரவில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இத்தகைய கொள்ளையர்களுக்கு எச்சரிக்கையாக காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்திருக்கலாம்.
பொதுவாகவே திருடன் ஒருவன் கையில் சிக்கினால் பொதுமக்கள் தர்ம அடி கொடுப்பதைக் காண முடிகிறது. பாடுபட்டு சேர்த்த பணத்தை திருடுவோர் மீது மக்கள் வெகுண்டெழுவது இயற்கையே. இதே கண்ணோட்டத்துடன் தான் காவல்துறையின் என்கவுன்டர்களை மக்கள் ஆதரிக்கின்றனர். அதனால் தான், கடமை கண்ணியம் கட்டுப்பாடு, காக்க காக்க, அஞ்சாதே போன்ற திரைப்படங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறுகின்றன.
சில நேரங்களில் என்கவுன்டர் கொலைகள் அரசியலில் பெரும் புயலைக் கிளப்புவதுண்டு. குஜராத்தில் சொராப்தீன் என்கவுன்டர் விவகாரத்தில் பல காவல்துறை அதிகாரிகளின் தலை உருண்டது. இன்றும் அச்சம்பவம் அம்மாநில அரசுக்கு சிக்கலாகவே உள்ளது. இப்போது பிகார் கொள்ளையர்கள் என்கவுன்டர் விவகாரம் தேசிய மனித உரிமை ஆணையத்தின் கவனத்துக்கு சென்றிருக்கிறது. கொல்லப்பட்டவர்கள் பிகாரிகள் என்ற அடிப்படையில் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் இதுகுறித்து தீர விசாரிக்க உத்தரவிட்டிருக்கிறார். இவ்விஷயத்தில் குற்றவாளிகளை ஒரு மாநிலத்துக்கு அடையாளப்படுத்துவது சரியானதல்ல.
ஏற்கனவே தமிழகத்தில் பிற மாநில மக்களுக்கு எதிரான சிந்தனையை குறுகிய கண்ணோட்டமுள்ள கட்சிகள் வளர்த்துவரும் நிலையில், குற்றவாளிகளை இவ்வாறு அடையாளப்படுத்துவது, தொழில் நிமித்தமாக இடம் பெயர்ந்து வாழும் பல்லாயிரக் கணக்கான பிற மாநில மக்களையே பாதிக்கும். இதையும் அரசியல்வாதிகள் உணர வேண்டும்.
----------------------------
விஜயபாரதம் (16.03.2012)
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக