தமிழக அரசியலில் ஒரு முக்கியமான வசனம் உண்டு. "நாற்பதும் நமதே”என்பது தான் அது. அதாவது தமிழகத்தில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் தாமே வெல்வோம் என்று ஒவ்வொரு கட்சியும் முழக்கமிடுவது வாடிக்கையான ஒன்று. இதில் வேடிக்கை என்னவென்றால், தமிழகத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 39 மட்டுமே அண்டையில் இருக்கும் புதுச்சேரியையும் உரிமையுடன் சேர்த்துக் கொள்வது தமிழக அரசியல்வாதிகளின் பெருந்தன்மை. அப்போது தானே நாற்பது என்ற முழுமையான எண் கிடைக்கும்?
இப்போது ஒரு புதிய நடைமுறை உருவாகி இருக்கிறது- அதிமுக ஆட்சிக்காலத்தில். அண்மையில் கொண்டாடப்பட்ட தமிழக முதல்வரின் 65-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டங்களின் போது, தங்கள் தலைவியை எதிர்கால பிரதமராகவே கற்பனை செய்து, வர்ணித்து, புகழ்ந்து மகிழ்ந்தார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். அதை மெல்லிய புன்னகையுடன் கடந்து செல்வது ஜெயலலிதாவின் வழக்கமாகி இருக்கிறது.
தான் பிரதமர் பதவிக்கான கோதாவில் இருப்பதாக இதுவரை அதிகாரப்பூர்வமாக ஜெயலலிதா சொல்லவில்லை. ஆனால் கட்சிக்காரர்கள் காரணமில்லாமல் இப்படி கர்ஜித்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பதால், பல்வேறு யூகங்கள், நமது அதிபுத்திசாலி புலனாய்வுப் பத்திரிகைகளில் உலா வரத் துவங்கி இருக்கின்றன.
இரண்டு படங்களில் நடித்தவுடனேயே 'எதிர்கால முதல்வரே' என்று சுவரொட்டி ஒட்டிக் கொள்ளும் பாழாய்ப் போன கலாசாரம் (இதை திமுக ஆட்சியின் போது அதிகமாகவே காண முடியும்) கொண்ட தமிழகத்தில் முதல்வரை உசுப்பேற்றும் சுவரொட்டிகளுக்கும் பஞ்சமில்லை. நேற்று முளைத்த காளான்களுக்கெல்லாம் முதல்வர் ஆசை கொழுந்து விடும்போது, 30 ஆண்டுகளுக்கு மேலாக அரசியலில் இருப்பவருக்கு பிரதமர் கனவு வரக் கூடாதா என்ன?
"இன்றைய தமிழகமே! நாளைய பாரதமே!" என்றெல்லாம் புகழாரம் சூட்டும் பூஜ்ஜியங்களுக்கு (இது எம்ஜிஆர் கால வர்ணனை; இப்போது ஜெயலலிதா மட்டுமே ஒன்று) ஏதாவது நற்பலன் கிடைக்காதா என்ற ஆதங்கம். எது எப்படியோ, குடும்பக் கட்சியான திமுகவை விட அம்மா கட்சியான அதிமுகவில் கட்டுப்பாடு ‘நன்றாகவே’ இருக்கிறது. (கடந்த 20 மாதங்களில் 8 முறை தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றால் சும்மாவா?)
சரி, ஆசை எல்லோருக்கும் தான் இருக்கிறது. அதற்கான சாத்தியங்கள் இருக்கின்றனவா? 'ஆசை இருக்கிறது தாசில் பண்ண அதிர்ஷ்டம் இருக்கிறது கழுதை மேய்க்க' என்ற அற்புதமான பழமொழி தமிழில் உண்டு. தமிழகத்தில் அதிர்ஷ்டம் எப்படி இருக்கிறது?
முதலில், மாநில ஆட்சி குறித்த மக்களின் கருத்து எப்படி இருக்கிறது என்பதே இதற்கு முக்கியமான அடித்தளம். அதிமுக வென்று மூன்றாவது முறையாக ஜெயலலிதா முதல்வரானபோது அவர் ஒரு தனிப்பெரும் தலைவராக இருந்தார் என்பது உண்மையே. அவரிடம் தமிழகம் மிகவும் எதிர்பார்த்தது. முந்தைய கழிசடை ஆட்சியால் கொந்தளித்திருந்த தமிழக மக்கள், தங்கள் மீட்பராகவே ஜெயலலிதாவைக் கண்டனர். அதற்கேற்ப கச்சிதமான தேர்தல் கூட்டணி அமைத்து வென்றார் ஜெயலலிதா.
விலையில்லா (இலவசம் என்று சொல்லக் கூடாதாம்!) பொருள்கள் வழங்கல், நில அபகரிப்பு வழக்குகள், இலங்கை விஷயத்தில் சரியான முடிவு, நதிநீர் விவகாரங்களில் பொருத்தமான் நிலைப்பாடு என்று பல நல்ல நடவடிக்கைகளை ஜெயலலிதா அரசில் காண முடிந்தது. எனினும் தொடர்ச்சியான மின்வெட்டால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டது, ஜெயலலிதா பெற்றிருக்க வேண்டிய மதிப்பெண்களைக் குறைத்துவிட்டது. தவிர, தமிழக அரசு கருவூலம் நிறைவதற்காக கட்டுப்பாடின்றி நடத்தப்படும் டாஸ்மாக் மதுக்கடைகளால் தமிழகமே தள்ளாடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் தான் அவரை நாட்டின் பிரதமராக அவரது கட்சியினர் முன்னிறுத்துகின்றனர். வெறும் பத்து எம்.பி.க்களை வைத்திருக்கும் கட்சி கூட மத்திய அமைச்சரவையில் பேரம் பேசும்போது, நாற்பதும் ஜெயிக்கும் கனவில் இருப்பவர்கள் பிரதமர் நாற்காலியைக் குறித்து ஆசைப்படுவதில் தவறென்ன இருக்கிறது?
தமிழகத்தின் ஜெயலலிதா மட்டுமல்ல, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மாயாவதி, மகாராஷ்டிராவின் சரத் பவார், சசமாஜ்வாதி தலைவர் முலாயம் ஆகியோருக்கும் கூட பிரதமர் கனவு இருக்கவே செய்கிறது. என்ன செய்வது, ஒரு நேரத்தில் ஒருவர் தானே பிரதமராக முடியும்?
இவர்களில்லாமல் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கட்சிக்கு அப்பாற்பட்டு கொம்பு சீவிவிடும் ஊடகங்களும் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் யாரென்று மிகவும் கவலைப்படுகின்றன. காங்கிரஸ் கட்சியிலோ கடைசி வரை பதுங்கி பாயத் தயாராக வளர்க்கப்படுகிறார் ராகுல். இவ்விரு தேசியக் கட்சிகளும் அடக்கி வாசிக்கும் நிலையில், பிராந்தியக் கட்சிகள் நடத்தும் அமர்க்களம் சுவாரசியமாகத் தான் இருக்கிறது. ஆசை யாரை விட்டது?
இன்னமும் மக்களவைத் தேர்தலுக்கு ஓராண்டு காலமே இருக்கிறது. உளவுத்துறை தகவல்களால் முன்கூட்டியே தேர்தல் நாளைக் குறிக்க (அக்டோபரிலோ நவம்பரிலோ தேர்தல் வரலாம் என்று வானிலை அறிக்கைகள் கூறுகின்றன) காங்கிரஸ் முயன்றாலும் வியக்க முடியாது. எனவே வரக்கூடிய மாதங்களில் எதிர்காலப் பிரதமர் போன்ற முழக்கங்கள் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது.
அரசியலில் எதுவும் நடக்கலாம். அரசியல் களத்திலேயே இல்லாத மன்மோகன் பிரதமானபோது யாரும் நம்பி இருக்க மாட்டார்கள்- இவர் 9 ஆண்டு காலம் பிரதமராக இருப்பார் என்று. வாஜ்பாயும் நரசிம்ம ராவும் பிரதமர் ஆனது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த, முன்பு கணிக்கப்படாத சாதனைகள். வி.பி.சிங், சந்திரசேகர், தேவே கவுடா, ஐ.கே.குஜ்ரால் என, வியப்பூட்டும் பட்டியல் நம்மிடம் உண்டு. நாளை நடப்பதை யார் அறிவார்?
எனினும் தமிழக ஆளும் கட்சிக்கு ஒரு முக்கியமான எச்சரிக்கை. கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர் வானம் ஏறி வைகுந்தம் போக முடியாது. (தமிழகத்தில் பழமொழிகளுக்கு பஞ்சமே இல்லை). முதலில், மாநிலத்தில் தாங்கள் இழந்துகொண்டிருக்கும் மக்கள் நம்பிக்கையை மீட்டெடுப்பது அதிமுகவுக்கு நல்லது.
இதுவரை அதிமுகவுக்கு இருந்த காலம் நல்ல காலம் தான். அதை தொடரச் செய்வது தான் முக்கியமானது. ஜால்ராக்ளின் உச்சபட்ச கோஷங்களால் மக்கள் அதிருப்தி அடையக்கூடும் என்பதை, ஏற்கனவே இருமுறை சட்டசபைத் தேர்தலில் தோல்வி கண்ட ஜெயலலிதா மறந்துவிடக் கூடாது.
ஜெயலலிதாவின் மாற்றமும் கட்சிகளின் தடுமாற்றமும்.சமீபகாலமாக ஜெயலலிதாவின் அரசியல் நடவடிக்கைகளில் ஒரு பக்குவம் தென்படுகிறது. நதிநீர் விவகாரங்களில்- முல்லைப் பெரியாறோ, காவிரி நதிநீர்ப் பங்கீடோ - ஜெயலலிதாவின் முடிவுகள் மிகச் சரியானவை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றங்களும் தமிழகத்தின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தி உள்ளன. காவிரி நதிநீர்ப் பங்கீடு குறித்த நடுவர் மன்ற உத்தரவு மத்திய அரசிதழில் வெளியாக ஜெயலலிதா நடத்திய சட்ட யுத்தம் அவருக்கு பெருமை சேர்த்துள்ளது.
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் போர்க் குற்றவாளிளுக்கு எதிராக ஜெயலலிதா முன்வைக்கும் கருத்துக்களால், அவரது அரசியல் எதிரிகள் ஆயுதமிழந்து நிற்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. தமிழையும் இலங்கையையும் காட்டி வயிறு வளர்த்த கூட்டங்கள் இப்போது செய்வதறியாமல் திகைக்கின்றன.
இந்நிலையில் தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பாஜக - இரண்டையுமே காவிரி விவகாரத்தில் கடுமையாகச் சாடி தனது அரசியல் பாதையை தெளிவுபடுத்தி இருக்கிறார் ஜெயலலிதா. கர்நாடகத்தில் ஆட்சியில் உள்ள பாஜகவும் எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரசும் காவிரி விஷயத்தில் ஒருங்கிணைத்து செயல்படுவதை - தமிழகத்து தண்ணீர் வழங்க மறுப்பதை- அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார்.
மேலும் தனது அணியை பலப்படுத்தும் முயற்சிகளிலும் அவர் இறங்கி விட்டார். மதிமுக, பாமக, கொமுக, கம்யூனிஸ்ட், முஸ்லிம் கட்சிகள் கொண்ட அணியை அமைக்கும் பணிகள் திரை மறைவில் நடந்து வருகின்றன. அண்மையில் மதுவுக்கு எதிராக நடைபயணம் மேற்கொண்ட வைகோவை சாலையிலேயே சந்தித்து ஜெயலலிதா அளவளாவியது சாதாரணமான நிகழ்வு அல்ல.
மறுபுறம் தேமுதிக, காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணியை வலுவாக்க திமுக முயன்று வருகிறது. அவர்களுக்கும் 'நாற்பது ஆசை' இருக்கத் தானே செய்யும்? ஆனால், திமுக அணி கதிகலங்கி இருப்பது தெளிவாகவே தெரிகிறது.
இலங்கை விவகாரத்தில் தினசரி வெளிவரும் தகவல்கள் கூட்டணியை உடைத்து விடுமோ என்ற பீதியில் ‘தமிழர் கோமான்’ இருப்பதாகத் தகவல். இவர் கஷ்டப்பட்டு டெசோ காவடி எடுத்துக் கொண்டிருக்கும்போது, காங்கிரஸ் தலைவர்கள் சிலர் தத்துப் பித்தென்று உளறி காரியத்தைக் கெடுப்பது கலகாருக்கு கவலை அளிக்கிறது. அதே சமயம் கூட்டணியில் வெளியேறவும் ‘சிபிஐ மீதான அச்சம்’ தடுக்கிறது.
தமிழக அரசியல் இரு துருவமாக்கப்பட்ட சூழலில், கட்சிகள் தடுமாறுகின்றன. இப்போதைக்கு அதிமுக பக்கமே காற்று சாதகமாக வீசுகிறது. வழக்கம் போல பாஜக தனியே குழலூதிக் கொண்டிருக்கிறது.
-----------------
விஜயபாரதம் (15.03.2013)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக