புதன், அக்டோபர் 13, 2010

முரண்பாடுகள் யாரிடம்?

அத்வானி நடத்திய ரத யாத்திரை

அன்புள்ள ஆர்.வி.
தங்கள் விமர்சனத்திற்கு நன்றி.

உங்கள் 'முரண்பாடுகள்' தொடர்பான எனது விளக்கங்கள் இதோ...

//நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தாயிற்று, அதை ஏற்றுக்கொள்வதுதான் சரியான அணுகுமுறை என்று எழுதுகிறீர்கள். மிகவும் சரி. ஆனால் இதே தளத்தில் தீர்ப்பு வருவதற்கு ஓரிரு நாள் முன்பு கூட “ஹிந்துக்களுக்கு” ஆதரவாக தீர்ப்பு வராவிட்டால் அந்த தீர்ப்பை நிராகரிப்போம் என்று நிறைய பேர் பொங்கினார்கள். இந்த அணுகுமுறையை ஒரு சாராருக்கு மட்டும் எடுத்துச் சொன்னால் எப்படி? இன்று கூட “கும்மட்டம் இடிப்பு” வழக்கில் வரும் தீர்ப்பை ஏற்றுக் கொள்வோம் என்ற மனநிலைதான் இந்த தளத்தின் பெரும்பாலான வாசகர்களிடம் இல்லை!//

அன்றும் இன்றும் என்றும் அயோத்தி வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு கூற இயலாது என்றே தன்மானமுள்ள ஒவ்வொரு ஹிந்துவும் கூறுவார். ஏனெனில். இது மத நம்பிக்கை தொடர்பான விஷயம். கடவுள் ராமன் பிறந்த இடத்தை இப்போதைய எத்தகைய ஞானிகளாலும் கேள்வி கேட்க முடியாது. எனவே தான், தமிழ் ஹிந்து வாசகர்கள் பொங்கினார்கள். அதே சமயம், நீதிமன்றத் தீர்ப்பை இப்போது பெரும்பாலோர் ஆதரிக்கக் காரணம், ஹிந்துக்களின் நம்பிக்கைக்கு நீதிபதிகள் மதிப்பளித்திருப்பதே. எனவே தான் மூன்றில் ஒரு பங்கு இடத்தை நீதிமன்றம் தாரை வார்ப்பதாக அறிவித்தும் ஹிந்துக்கள் நிதானம் காக்கிறார்கள்.

இடிக்கப்பட்டது பாபர் மசூதி அல்ல என்பதே ஹிந்துக்களின் நிலை. அடிமைச் சின்னம் அகற்றப்பட்டது தொடர்பான வழக்கில் வரும் தீர்ப்பை விடுதலைப் போராட்டம் தொடர்பான வழக்காகவே காண வேண்டும். அதில் யாரேனும் தண்டிக்கப்பட்டால், தண்டிக்கப்படுபவர்கள் குற்றவாளிகள் அல்ல; உண்மையில் அவர்கள் தன்மானம் காத்த வீரர்கள் என்று வருங்கால வரலாறு பதிவு செய்யும்.

//பாபர் காலத்து விழுமியங்கள் வேறு, இன்றைய விழுமியங்கள் வேறு என்று சொல்ல வேண்டிய அவசியம் இருப்பது துரதிருஷ்டம். சித்தூர் ராணி பத்மினி கணவன் இறந்த பிறகு தற்கொலை செய்துகொள்ளவில்லையா, ரூப் கன்வார் விஷயத்தில் மட்டும் ஏன் குதிக்கிறீர்கள் என்று கேட்பீர்களா?//

சரித்திரத்தின் போக்கை யாராலும் மாற்ற முடியாது. இனி முஸ்லிம்களும், ஆட்சியாளர்களும் நினைத்தாலும் அயோத்தியில் 'குறிப்பிட்ட அந்த இடத்தில்' மீண்டும் மசூதி கட்ட முடியாது. இதை முஸ்லிம்களும் உணர்ந்தே உள்ளனர். நிதர்சனத்தை உணர்ந்தே அலஹாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பாபர் காலத்தில் எந்த விழுமியமுமே இல்லை என்பது தான் இடிப்புக்கு காரணம். அவமானத்தைப் போக்க 1992-ல் நிகழ்ந்த கரசேவையை அத்துடன் ஒப்பிட முடியாது; கூடாது.

தற்போதைய போலி மதச்சார்பற்றவர்கள் நடத்தும் நாடகங்களுக்கு அவர்கள் பாணியிலேயே பதில் சொல்ல வேண்டி இருப்பதால் தான் இந்த ஒப்பீடே எழுந்தது. நாம் இப்போது எழுதிக்கொண்டிருக்கும் தருணம் கூட- மறுநிமிடம் சரித்திரம் தான். சரித்திர உணர்வு என்பது நமது வீழ்ச்சிகளிலிருந்து பாடம் கற்பது; நமது சாதனைகளிலிருந்து பெருமிதம் கொள்வது. உடன்கட்டை ஏறுவதும் கரசேவையும் இரு துருவங்கள். இரண்டையும் ஒப்பிட முடியாது; கூடாது.

// 1992-லேயே இல்லாமலாகிவிட்ட கட்டட இடிப்பு… என்று எழுதி இருப்பதைப் பார்த்து புன்னகைத்தேன். இல்லாத கட்டிடத்தை இழுக்கக் கூடாது என்றால் 1528-இலோ, அதற்கு முன்போ, இடிந்து போன/இடிக்கப்பட்ட “கட்டிடத்தைப்” பற்றி எப்படி வரிந்து கட்டிக்கொண்டு எழுதுகிறீர்கள்? அதை மீண்டும் கட்ட வேண்டும் என்று “பல நூறு ஆண்டுகளாக” என்ன போராட்டம்? முடிந்த வரையில் இந்த மாதிரி inconsistency-களைத் தவிர்க்கலாம்.//

நண்பர் ஆர்.வி, தமிழ் ஹிந்துவை தொடர்ந்து வாசித்து வந்திருந்தால் அவருக்கு இது inconsistency ஆகத் தோன்றி இராது. நமது தன்மானச் சின்னமான கோயில் இடிக்கப்பட்டதும் (1528) அவமானச் சின்னம் இடிக்கப்பட்டதும் (1992) ஒன்றல்ல.

பாபரின் தளபதி தங்கள் ஆதிக்கச் சின்னமாக ராமர் கோயிலை இடித்தார். அங்கு தங்கள் மேலாதிக்கத்தை நிறுவ, பாபர் மசூதி என்ற பெயரில் 'இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு முரணாக' ஒரு கட்டடத்தை எழுப்பினார் மீர்பாகி. அதை நீக்க வேண்டும் என்று அன்று முதல் ஹிந்துக்கள் போராடி வந்துள்ளனர். பல்லாயிரம் பேர் அப்போராட்டத்தில் பலியாகி உள்ளனர். இறுதியாக நடந்துவரும் போராட்டக் காலத்தில் நாம் இருக்கிறோம்.

நம் கண் முன்னால் அவமானச் சின்னம் அகற்றப்பட்டது. அதுவும் எதிர்பாராத கரசேவகர் கொந்தளிப்பால் நடந்தது. (உ.பி. முதல்வர் கல்யாண் சிங் அரசை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்துவிட்டது என்ற தகவல் பரவியதால் ஏற்பட்ட கொந்தளிப்பான சூழலில் தான் அந்தக் கட்டடம் இடிக்கப்பட்டது). அந்த வழிமுறையை நாம் ஏற்கவில்லை. ஆயினும் எது நடந்தாக வேண்டுமோ அது நடந்துவிட்டது. எப்படி இருந்தாலும் ஒருசமயம் அந்தக் கட்டடம் இடிக்கப்பட்டாக வேண்டியது தானே. இதில் எந்த முரண்பாடும் இல்லை. அந்த கரசேவை தான், தற்போதைய தீர்ப்புக்கு அடிநாதம் என்றால் மிகையில்லை.

கரசேவையில் சர்ச்சைக்குரிய கட்டடம் (கும்மட்டம்) இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கு அல்ல, தற்போது அலஹாபாத் நீதிமன்றத்தில் நடந்தது. அது தனியே நடக்கிறது. அது பற்றி எழுத வேண்டுமானால், தனியே ஒரு தொடர் எழுத வேண்டியிருக்கும். அதுவல்ல பிரச்னை. நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்று உபதேசம் செய்துகொண்டே, இடிக்கப்பட்ட கட்டடத்தை பிரதானமாகக் காட்டி (இதில் தான் inconsistency உள்ளது) முஸ்லிம்களை உசுப்பிவிடும் கீழ்த்தரமான தந்திரம் நமது ஊடகங்களுக்கு எதற்கு என்பதே எனது கட்டுரையின் பிரதானக் கேள்வி. நன்கு ஊன்றி கவனித்தால் அது புரியும்.

மற்றபடி, இந்த விளக்கங்களை அளிக்க ஏதுவாக விமர்சனம் செய்த ஆர்.வி.க்கு நன்றி. கட்டுரையின் இறுதிப்பகுதியையும் படித்துவிட்டு அவர் தனது கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும். இது எனது வேண்டுகோள்.

------------------------------------------------

தமிழ் ஹிந்து இணையதளத்தில் வெளியாகியுள்ள ''அயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும் - பகுதி -3''க்கு திரு. ஆர்.வி எழுதிய பின்னூட்ட விமர்சனத்திற்கு அதே இணையதளத்தில் எனது பதில் இது.

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக