சனி, ஜூன் 09, 2012

புதுக்கோட்டையும் அரசியல் கட்சிகளும்


அரசியல் களம் சற்றே சூடு குறையும்போதெல்லாம் இடைத்தேர்தல் வந்து உற்சாகப்படுத்தி விடுகிறது. இப்போது புதுக்கோட்டை இடைத்தேர்தல் காலம். கோடைக்காலம் முடிந்தும் பிரசார சூடு பறக்கிறது புதுக்கோட்டையில். தமிழக அமைச்சரவையே அங்கு இடம் பெயர்ந்துவிட்டது போல, எங்கு பார்த்தாலும் அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் வாகனங்கள் பறக்கின்றன. பழைய சாலைகள் புதுப்பிக்கப்படுகின்றன. மக்களின் நெடுநாள் குறைகள் உடனடியாகத் தீர்த்து வைக்கப்படுகின்றன. இடைத்தேர்தல் வாழ்க!

புதுக்கோட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த முத்துக்குமரன் கடந்த மே 1 ம் தேதி நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். அதையடுத்து, அத்தொகுதிக்கு ஜூன் 12 ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. அதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இருந்தபோது அக்கட்சிக்கு அளிக்கப்பட தொகுதி புதுக்கோட்டை. அங்கு முத்துக்குமரன் வென்றார். எனவே, மீண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அதிமுகவே அங்கு போட்டியிடும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்; தனது கட்சி வேட்பாளராக கார்த்திக் தொண்டைமானை அவர் அறிவித்தார்.

இதை எதிர்பார்க்காத கம்யூனிஸ்ட் கட்சி, பிற்பாடு பலத்த விவாதத்துக்குப் பிறகு, இடைத்தேர்தலில் பங்கேற்பதில்லை என்று அறிவித்தது. 'சங்கடங்களைத் தவிர்க்கவே தேர்தல் களத்தில் இருந்து விலகியதாக' அக்கட்சியின் மாநிலச் செயலாளர் த.பாண்டியன் வருத்தத்துடன் தெரிவித்தார்.

சென்ற சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் பலத்த அடி வாங்கியிருந்த திமுக என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி எழுந்தது. திமுகவும் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்தது. எனினும் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை' என்று குறிப்பிடும் ‘49 – ஓ’ பிரிவைப் பயன்படுத்தலாமா என்று ஆலோசிக்கப்பட்டது. இறுதியில் இடைத்தேர்தலை புறக்கணிப்பதே சரியான முடிவாக இருக்கும் என்று திமுக அறிவித்தது.

இடைத்தேர்தலில் ஆளும்கட்சியினரின் அத்துமீறலை எதிர்பார்த்தே இவ்வாறு முடிவெடுத்துள்ளதாக திமுக விளக்கம் அளித்தது. அப்படியானால், திமுக ஆளும்கட்சியாக இருந்தபோது இடைத்தேர்தல்களில் அத்துமீறலில் ஈடுபட்டதை அதன் தலைவர் கருணாநிதி ஒப்புக் கொள்கிறாரா? திருமங்கலத்தில் நடந்த இடைத்தேர்தலில் தானே அகில இந்தியாவுக்கும் ஒரு புதிய தேர்தல் பிரசார முறையை தென் மண்டல செயலாளர் மு.க.அழகிரி அறிமுகப்படுத்தினார்? வீட்டுக்கு வீடு பணப் பட்டுவாடாவைத் துவக்கி வைத்த திமுக, இன்று புதுக்கோட்டை இடைத்தேர்தலைப் புறக்கணிக்கக் கூறும் காரணம் வேடிக்கையாக இருக்கிறது. ஆடத் தெரியாத நாட்டியக்காரி மேடை கோணல் என்று சொன்னாளாம்!

இவ்விஷயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் எவ்வளவோ பரவாயில்லை. தோல்வி உறுதி என்பது தெரிந்தாலும், போர்க்களத்தை விட்டு அவர் ஓடிவிடவில்லை. தேமுதிக சார்பில் ஜாகீர் உசேன் களம் இறக்கப்பட்டிருக்கிறார். புதுக்கோட்டை தொகுதியில் உள்ள இஸ்லாமியர்களை நம்பி இவர் களம் காண்கிறார்.

தேர்தல் களத்தில் 20 வேட்பாளர்கள் இருந்தாலும் அதிமுக, தேமுதிக வேட்பாளர்களே பிரதானமானவர்கள். முக்கிய கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, பாஜக, விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ் ஆகியவையும் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்து விட்டன. இக்கட்சிகள் தங்கள் வாக்குவங்கியை அறியும் உத்தேசம் கூட இல்லாமல் களத்தில் இருந்து ஒதுங்கி இருக்கின்றன.

மார்க்சிஸ்ட் கட்சி மட்டும் தேமுதிக வேட்பாளரை ஆதரிப்பதாக அறிவித்திருக்கிறது. திமுகவும் கூட தேமுதிக வேட்பாளரை மறைமுகமாக ஆதரிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதற்கேற்ப, விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ், தங்களை இடைத்தேர்தலில் ஆதரிக்குமாறு திமுக தலைவர்களுக்கு பகிரங்க அழைப்பு விடுத்திருக்கிறார். சட்டசபையில் ஒன்றிணைந்து செயல்பட இரு கட்சிகளுக்கும் இடையிலான பாலமாக புதுக்கோட்டை இடைத்தேர்தல் மாறக் கூடிய வாய்ப்பு உள்ளது.

எனினும், இடைத்தேர்தலில் அதிமுக வெல்வது உறுதியாகிவிட்டதாகவே அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. அமைச்சர்களும் அதிமுகவின் மக்கள் பிரதிநிதிகளும் பம்பரமாகச் சுழன்று பணியாற்றுவதும், ஆளும்கட்சிக்கு வாக்களித்தால் கிடைக்கும் நன்மைகளை மக்கள் உத்தேசிப்பதும், கார்த்திக் தொண்டைமானுக்கு அனுகூலங்கள்.

ஓராண்டுகால அதிமுக ஆட்சியில் சில துறைகளில் ஏற்பட்டுள்ள அதிருப்தியைப் பயன்படுத்தி அதிமுகவுக்கு எதிராக தேமுதிக பிரசாரம் செய்துவருகிறது. எனினும் இந்த அதிருப்தி அதிமுகவை வெல்லப் போதுமானதல்ல. இந்தத் தேர்தலின் விளைவாக, தேர்தல் முடிந்தவுடன் தேமுதிக பிளவுபடக்கூடும்.

பொதுவாகவே தமிழக வாக்காளர்கள் மிகவும் விவரமானவர்களாக உள்ளனர். இடைத்தேர்தலில் ஆளும்கட்சியைத் தேர்வு செய்வதே நல்லது என்பது பரவலான கருத்தாக உள்ளது. இதற்கு பல காரணிகளும் உள்ளன. எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் தொகுதிக்கு செய்யும் வளர்ச்சிப்பணிகளை விட ஆளும்கட்சி எம்எல்ஏக்கள் செய்யும் பணிகள் அதிகம் என்பதை மக்கள் உணர்ந்தே உள்ளனர். தவிர, தேர்தலுக்கு முன்னதாகவே, அரசு இயந்திரம் இடைத்தேர்தல் நடக்கும் தொகுதியில் நலப்பணிகளை விரைந்து முடித்து மக்களிடம் நற்பெயர் பெற்றுத் தந்துவிடுகிறது. இவை அல்லாமல், திமுக புகார் கூறுவதுபோல பணப்பட்டுவாடாவும் சத்தமின்றி நடக்கிறது.

இத்தனைக்குப் பிறகு இடைத்தேர்தலை பல கோடி செலவில் நடத்த வேண்டிய தேவை என்ன என்ற கேள்வி எழுகிறது. ஒரு கட்சியின் எம்எல்ஏ இறந்துவிட்டால், அதே கட்சியின் உறுப்பினரை கட்சியே தேர்வு செய்து காலியிடத்துக்கு நியமித்துவிட்டால் நன்றாக இருக்கும் என்ற கருத்து சமீபகாலமாக பலரால் முன்வைக்கப்படுகிறது. ஆனால், நமது அரசியல் சாசனமும் தேர்தல் முறைகளும் இந்த யோசனையை நிராகரிக்கின்றன.

இடைத்தேர்தல்கள் ஆளும்கட்சி மீதான அதிருப்தியை அறிய உதவும் அளவுகோல்கள். எனவே, அவை அத்தியாவசியமானவை என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது. எனவே தான், எப்பாடுபட்டும் இடைத்தேர்தலில் வெல்வதை ஆளும் கட்சிகள் கௌரவப் பிரச்னையாகக் கருதுகின்றன. எப்படியோ, இடைத்தேர்தல் நடக்கும் தொகுதியில் உள்ள மக்களுக்கு சில பிரச்னைகளேனும் தீர வாய்ப்பு ஏற்படுகிறதே என்று திருப்தி அடைய வேண்டியது தான்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு நடக்கும் மூன்றாவது இடைத்தேர்தல் இது. முதலில் திருச்சியிலும், அடுத்து சங்கரன்கோவிலிலும் நடந்த தேர்தல்கள் அதிமுகவின் அசைக்க முடியாத பலத்தை பறை சாற்றியுள்ளன. இப்போது புதுக்கோட்டையில் நடக்கும் இடைத்தேர்தலிலும் மாறுபட்ட தீர்ப்பு கிடைக்கப் போவதில்லை. ஆனால், சென்ற தேர்தல்களை விட இம்முறை வாக்கு வித்தியாசம் குறையக் கூடும்.

--------------------------------------------

பெட்டிச் செய்தி

கேப்டனின் ராஜதந்திரம்

புதுக்கோட்டை இடைதேர்தலில் வெல்வது துர்லபம் என்பது விஜயகாந்துக்கு தெரியாமல் இருக்காது. ஆனாலும் அவர் தேர்தலில் போராடக் காரணம், தொடர்ந்து களத்தில் இருப்பவர்களையே மக்கள் மன்றம் நினைவில் வைத்திருக்கும் என்பதை அவர் அறிந்திருப்பதால் தான். இவ்விஷயத்தில் மூத்த தலைவர் கருணாநிதி சறுக்கிவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

புதுக்கோட்டை தொகுதி தங்கள் கையை விட்டுப் போன கோபத்தில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தனைகளை ஆதரிப்பார்கள் என்று அவர் நம்புகிறார். தவிர ஆளும்கட்சி மீது அதிருப்தியில் உள்ள அனைவரது வாக்குகளையும் கவர முடியும் என்பதும் அவரது இலக்காக உள்ளது. அவரது பிரசாரமும் அதை ஒட்டியே உள்ளது. போகும் இடமெல்லாம், மின்வெட்டு பிரச்னை குறித்து அவர் பேசுகிறார். அதற்கு மக்களிடம் ஆதரவு இருப்பதைக் காண முடிகிறது.

பாஜக, திமுக, கட்சியில் உள்ள நடுநிலை வாக்காளர்கள் தேமுதிக வாக்காளரை ஆதரிப்பார்கள் என்பதும் விஜயகாந்தின் கணக்கு. அதற்காகவே, 'தற்போதைய மக்கள் பிரச்னைகளைத் தீர்க்க மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் வேண்டும்' என்று அவர் பேசுவதாகத் தெரிகிறது. அவரது ராஜ தந்திரம் வெல்லுமா என்பதை தேர்தல் நாளில் பதிவாகும் வாக்கு சதவிகிதத்தைக் கொண்டே மதிப்பிட முடியும்.

இத்தேர்தலில் தேமுதிக தோல்வி அடைந்தாலும், அதிமுகவுக்கு எதிரான கட்சி என்ற அடையாளத்தை உறுதியுடன் கைப்பற்றிவிடும் என்று தோன்றுகிறது. இத்தனை நாட்களாக இந்த அடையாளம் திமுக வசம் இருந்தது. தேர்தல் களத்தில் இருந்து ஒதுங்கியதன் மூலமாக விஜயகாந்த்தின் பாதையை ஒழுங்குபடுத்தி உதவி இருக்கிறது திமுக.
Link
-------------------------------------
விஜயபாரதம் (15.06.2012)

காண்க: தமிழ் ஹிந்து
.

வெள்ளி, ஜூன் 01, 2012

பற்றி எரியும் பெட்ரோல் விலை உயர்வு


'எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவது போல' என்ற பழமொழியைக் கேட்டிருப்போம். அதற்கு மிகச் சரியான உதாரணமாக, ஏற்கனவே துவண்டு கிடக்கும் நாட்டு மக்களை பெட்ரோல் விலை உயர்வால் பந்தாடி இருக்கிறது மத்திய அரசு. இதுவரை காணாத வகையில், ஒரே நாளில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 7.50 உயர்த்தி நாட்டு மக்களின் கடும் அதிருப்தியை சம்பாதித்திருக்கிறது மன்மோகன் அரசு. இதைக் கண்டித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, ''மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்'' என்று சரியாகவே சொல்லி இருக்கிறார்.

பெட்ரோல் இல்லாத உலகை இப்போது கற்பனை செய்யவும் இயலாது. போக்குவரத்துக்கு ஆணிவேராக உள்ள பெட்ரோல் தான் உலகப் பொருளாதாரத்தையே கட்டுப்படுத்தும் காரணியாக உள்ளது. இதை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதில் போட்டியே நிலவுகிறது. குறிப்பாக, உலக வல்லரசான அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது பெட்ரோல் வளம் தான்.

பூமிக்கடியில் இருந்து உறிஞ்சி எடுக்கப்படும் இந்த திரவத் தங்கத்தின் இருப்பு ஆண்டுதோறும் குறைந்துகொண்டு வருகிறது. எதிர்காலத்தில் பெட்ரோலிய இருப்பு முற்றிலும் குறைய வாய்ப்புள்ளது என்ற விஞ்ஞானிகளின் எச்சரிக்கை காரணமாக, மாற்று எரிபொருள் குறித்த ஆராய்ச்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தாவர எண்ணெய்களில் பெட்ரோலுக்கு மாற்று கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிரமாகப் பாடுபட்டு வருகின்றனர்.

உலகளாவிய பெட்ரோலிய கச்சா எண்ணெயின் மதிப்பில் ஏற்படும் உயர்வும் சரிவும் நாடுகள் தோறும் எதிரொலிக்கின்றன. பெட்ரோலிய வள நாடுகள் கூட்டமைப்பு (OPEC) அவ்வப்போது கூடி பெட்ரோலிய சந்தையில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டும் விதமான முடிவுகளை எடுக்கிறது. இதுவும் பெட்ரோல் விலையில் எதிரொலிக்கிறது. தவிர, அவ்வப்போது ஏற்படும் ரூபாய் நாணய மதிப்பு வீழ்ச்சியும் பெட்ரோல் விலை உயரக் காரணமாகிறது.

இப்போதைய பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணமாகக் கூறப்படுவது ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி தான். அதாவது, முன்னர் ஒரு அமெரிக்க டாலருக்கு ரூ. 48 கொடுத்தால் போதும் என்றிருந்த நிலைமை மாறி தற்போது ரூ. 55.50 கொடுக்க வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் வாங்க 91.50 டாலர்கள் தர வேண்டும். இது உண்மையில் சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தை விட 8 டாலர்கள் குறைவு. அதாவது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும், நாணய மதிப்பு வீழ்ச்சியால் எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவில் பெட்ரோலிய இறக்குமதி மற்றும் சுத்திகரிப்பு பணிகள் பொதுத்துறை நிறுவனங்கள் வசமே இருந்தன. இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம், கெயில், ஓ.என்.ஜி.சி போன்றவை அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவனங்கள். இவை அல்லாது இப்போது தனியாரும் அனுமதிக்கப்பட்டதன் விளைவாக ரிலையன்ஸ், எஸ்ஸார் போன்ற நிறுவனங்களும் இத்துறையில் ஈடுபடுகின்றன.

மற்ற பொதுத்துறை நிறுவனங்கள் போலவே அரசு சார்ந்த எண்ணெய் நிறுவனங்களும் மட்டற்ற ஊழல், சரியான திட்டமின்மை, அரசின் குறுக்கீடுகள் போன்றவற்றால் தத்தளிக்கின்றன. நாட்டு மக்களின் அடிப்படைத் தேவையான பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றை போதிய அளவில் இருப்பு வைத்து தட்டுப்பாடின்றிக் கிடைக்கச் செய்வதும், அவற்றின் விலையை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதும் எண்ணெய் நிறுவனங்களின் பணி. இதற்காக, ஆண்டுதோறும் பல்லாயிரம் கோடி ரூபாயை அரசு மானியமாக வழங்கி வருகிறது.

குறிப்பாக, உற்பத்தி விலை அதிகமாக இருந்தபோதும், மண்ணெண்ணெய் குறைந்த விலையில் நியாய விலைக்கடைகளில் கிடைப்பதற்காக அரசு மானியத்துடன் அதனை குறைந்த விலையில் தருகின்றன பொதுத்துறை நிறுவனங்கள். அதே போல, சமையல் எரிவாயுவும் உற்பத்தி வியைவிட சரிபாதி விலையில் விநியோகிக்கப்படுகிறது. 2012 -13 நிதியாண்டில் இதுபோன்ற தேவைகளுக்காக மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள மானிய அளவு ரூ. 43,850 கோடி.

எனினும், மானிய அளவை விட அதிகமாக செலவாவதாக பொதுத்துறை நிறுவனங்கள் நீண்ட நாட்களாக புலம்பி வருகின்றன - தாங்கள் பொது நலனுக்கானவை என்பதை மறந்து. இந்நிலையில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி கண்டதும், சர்வதேச அளவில் கொள்முதல் செய்வதற்கான நிதி பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்புள்ளதாக அரசை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் எச்சரித்ததன் விளைவாக, இப்போது பெட்ரோல் விலை மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்து டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விலைகளும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறார்.

உண்மையில், நமது எண்ணெய் நிறுவனங்கள் நல்ல லாபத்தில் இயங்கி வருகின்றன. 2009 -10 ல் இந்தியன் ஆயில் அடைந்த நிகர லாபம் ரூ. 10,200 கோடி; ஓ.என்.ஜி.சி.- 16,700 கோடி; கெயில் 3,140 கோடி; ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் - ரூ. 1,300 கோடி; பாரத் பெட்ரோலியம் – 1,500 கோடி லாபம் ஈட்டி உள்ளன. சென்ற ஆண்டு புள்ளிவிபரங்களைப் பார்த்தால் இதைவிட அதிகமாகவே உள்ளது. ஆனால், தற்போதைய நிலைமை நீடித்தால் நஷ்டம் ஏற்பட்டுவிடும் என்ற எச்சரிக்கை உணர்வின் அடிப்படையில், லாபத்தில் ஏற்படும் நஷ்டத்தைப் பொறுக்காமல் எண்ணெய் நிறுவனங்கள் அளித்த நிர்பந்த்தத்திற்கு அரசு தற்போது அடிபணிந்திருக்கிறது.

பெட்ரோலியப் பொருட்களின் விலையை அரசே கட்டுப்பாட்டில் வைப்பது பத்தாண்டுகளுக்கு முன்னர் வரை நடைமுறையில் இருந்தது, ஆனால், அதில் உள்ள சாதக, பாதகங்களை ஆராய்ந்த பிறகு பொதுத் துறை நிறுவனங்களே அரசு அனுமதியோடு விலையை நிர்ணயிக்கும் உரிமை வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது வழங்கப்பட்டது. ஆயினும், எண்ணெய் நிறுவனங்கள் எடுக்கும் முடிவுக்கு கடிவாளமிடும் வகையில் அரசு செயல்பட்டுவந்தது. அதில் தான் தற்போதைய காங்கிரஸ் அரசு சறுக்கி உள்ளது. இதுவரை எப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் ரூ. 7.50 உயர்த்துவது என்பதை அரசு எப்படி அனுமதித்தது?

பொதுத்துறை நிறுவனங்கள் திவாலாகிவிடக் கூடாது என்பதற்காக செய்யப்பட ஏற்பாட்டை, மக்களை திவாலாக்குவதற்கு அல்லவா ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கையாள்கிறது? கடந்த 2011 நவம்பரில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. அதன்பிறகு பல மாநிலத் தேர்தல்கள் வந்ததால் அடக்கி வாசித்த அரசு, இப்போது சமீபத்தில் தேர்தல் இல்லை என்பதால் துணிவுடன் இந்த விலை உயர்வுக்கு சம்மதம் தெரிவித்திருப்பதாக ஊடகங்கள் கூறுகின்றன. இது அரசின் நிலையை சமாளிக்க ஊடகங்கள் எடுத்துக் கொடுக்கும் வாதம் மட்டுமே.

உண்மையில், தனியார் எண்ணெய் நிறுவனங்கள் வழங்கும் பல்லாயிரம் கோடி கையூட்டுக்காகவே இந்த விலை உயர்வு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், அடுத்த தேர்தலில் தாங்கள் வெல்வது சாத்தியமில்லை என்பதை இப்போதைய ஆளும்கட்சியினர் தெளிவாகவே உணர்ந்திருக்கின்றனர். அதனால் தான், ஆட்சியில் இருக்கப்போகும் இரு ஆண்டுகளுக்குள் எவ்வளவு வசூல் செய்ய முடியுமோ அந்த அளவிற்கு வசூலிக்க அவர்கள் துடிக்கின்றனர்.

அதற்கு அரசு பூசும் முலாம் தான் ‘பொதுத்துறை நிறுவனங்களுக்கு நஷ்டம்’ என்ற பஞ்சப்பாட்டு. அது உண்மையானால், கடந்த ஆறு மாதங்களாக பல நிர்பந்தங்கள் நேரிட்டபோதும் பெட்ரோல் விலை உயர்த்தப்படவில்லையே, ஏன்? இப்போதும் கூட, நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடியும் வரை காத்திருந்து அதன் பின்னரே பெட்ரோல் விலை உயர்வுக்கு அரசு அனுமதி அளித்திருக்கிறது.

நாம் வாங்கும் பெட்ரோலின் விலையில் பெரும்பகுதி வரியினங்களுக்கே செல்வது குறித்தும் அரசின் பார்வை தெளிவானதாக இல்லை. மத்திய அரசு வசூலிக்கும் எக்சைஸ் வரி, கஸ்டம்ஸ் வரி, மதிப்புக் கூட்டு வரி, மாநில அரசுகள் வசூலிக்கும் நுழைவு வரி, கல்வி வரி, சாலை வரி போன்ற இனங்களை தவிர்த்தால், ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ. 35 க்கே விற்க முடியும். ஆனால், இந்த வரியினங்களை நம்பியே மத்திய, மாநில அரசுகள் இயங்குகின்றன. இந்நிலையில், பெட்ரோல் விலை உயர்வை அனுமதித்து விட்டு, மாநில அரசுகள் பெட்ரோல் விலையைக் கட்டுப்படுத்த தங்கள் தரப்பில் வசூலிக்கும் வரியினங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று உபதேசம் செய்திருக்கிறது மத்திய அரசு. இதை தானே முதலில் துவங்கி வைத்து புண்ணியம் கட்டிக் கொள்ளலாமே?

இந்த பெட்ரோல் விலை உயர்வால் நாடு முழுவதும் மக்கள் கொந்தளித்திருக்கிறார்கள். ஏனெனில் அவர்களது அன்றாட வாழ்க்கையில் பெரும் தாக்கத்தையும் இழப்பையும் இது ஏற்படுத்தும் என்பதை அவர்கள் அரசு போலல்லாது உணர்ந்திருக்கிறார்கள். பல இடங்களில் யாரும் அழைப்பு விடுக்காமலே ஆயிரக் கணக்கான மக்கள் தெருக்களில் கூடி ஆர்ப்பாட்டங்களை நடத்தி இருக்கிறார்கள். பாஜக, இடதுசாரி கட்சிகள், அதிமுக, சமாஜ்வாதி, பிஜு ஜனதாதளம் போன்ற மாநிலக் கட்சிகளும் பெட்ரோல் விலை உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

மத்திய அரசின் கூட்டாளிகளான திரிணாமூல் காங்கிரஸ், திமுக போன்றவையும் அரசின் முடிவை எதிர்த்துள்ளன. பெட்ரோல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து பாஜக கூட்டணி கட்சிகள் மே 31 ல் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. அதே நாளில் நாடு முழவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தப்போவதாக இடதுசாரிகள் அறிவித்துள்ளனர். தேசிய அரசியலில் புதிய மாற்றத்துக்கு பெட்ரோல் விலை உயர்வு களம் அமைத்துக் கொடுத்துள்ளது என்றும் கூறலாம்.

ஆயினும் விலை உயர்வில் மாற்றமில்லை என்று கூறி வருகிறது மத்திய அரசு. எனினும் மக்களின் கோபாவேசத்திற்கு அரசு பணிந்தே தீரும் என்பதற்கு சான்றுகள் உள்ளன. மக்களுக்காகத் தான் அரசே ஒழிய, அரசுக்காக மக்கள் அல்ல. இதை மன்மோகன் சிங்கும் அவரது அடிப்பொடிகளும் உணர்வது நல்லது.

-------------------------------------------------------------------

பெட்டிச் செய்தி - 1

ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்

உலகச் சந்தையில் மற்ற நாடுகளெல்லாம் எவ்வளவு ரூபாய்க்கு பெட்ரோலை விற்கிறார்கள் தெரியுமா?

டோகாவில் ரூ. 8.25, சௌதி அரேபியாவில் ரூ 8.53, ஐக்கிய அரபு எமிரேட்டில் ரூ. 18.14 என்று சொன்னால் இவையெல்லாம் பெட்ரோல் உற்பத்தி செய்கின்ற நாடுகள் என்று சொல்லிவிடுவார்கள். இவர்கள் எதற்கெடுத்தாலும் அண்ணாந்து பார்க்கிற
அமெரிக்காவில் கூட 1 லிட்டர் பெட்ரோல் ரூ. 37.31, பக்கத்தில் இருக்கிற பாகிஸ்தானில் ரூ. 35.75, இலங்கையில் ரூ. 47.04 தான்.

உலகச் சந்தையைக் கைகாட்டும் மத்திய நிதியமைச்சர். பிரணாப் முகர்ஜி இவ்வளவு நாடுகளில் பெட்ரோல் விலைகள் குறைவாக இருப்பது ஏன் என விளக்குவாரா? பெட்ரோல் என்பது மக்களின் அன்றாட வாழ்வோடு தொடர்புடையது. இதன் விலை உயர்ந்தால் காய்கறி, பலசரக்கு, பொருட்கள் எல்லாவற்றின் விலைகளும் உயர்ந்துவிடும் என்று அந்த நாட்டு அரசுகள் புரிந்திருக்கின்றன. எனவே தான் பலநாடுகள் பெட்ரோலுக்கு மானியங்கள் தருகின்றன. அதன் மீது வரிகளைக் குறைக்கின்றன.

உதாரணமாக அமெரிக்காவில் 1916 லிருந்து 94 ஆண்டுகளாக பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரு பேரலுக்கு 100 டாலர்களுக்கு மேல் விலை போய்விடக் கூடாதென்பதற்காக இம்மானியங்கள் வழங்கப்பட்டுள்ளன. எனவே பெட்ரோலிய விலை உயர்வை உலகளாவிய போக்கு என சித்தரிப்பது வடிகட்டிய பொய்.

-------------------------------------------------------------------

பெட்டிச் செய்தி - 2

அரசின் பித்தலாட்டம்


பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வுக்கு அரசு கூறும் முக்கியமான காரணம், பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஏற்படுவதாகக் கூறப்படும் இழப்பு. கடந்த நிதியாண்டில் மட்டும் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ரூ. 78 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும், நடப்பு நிதியாண்டில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்து 208 கோடி நஷ்டம் ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டிருப்பதாகவும் அரசு கூறுகிறது. இதன் அடிப்படையில் பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வு நியாயப்படுத்தப்படுகிறது.

இந்த வாதம் மோசடியானது. ஏனெனில், பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஏற்படுவது நஷ்டமே அல்ல. அது அரசின் விலைக்கும், இறக்குமதி விலைக்கும் இடையிலான வேறுபாடு மட்டுமே. (லாபத்தில் ஏற்படும் குறைவு) இதை ரங்கராஜன் கமிட்டி தெளிவாக்கியிருக்கிறது. உண்மையில் எண்ணெய் நிறுவனங்கள் அனைத்தும் லாபத்தில் இயங்குகின்றன என்பதை அந்தந்த நிறுவனங் களின் ஆண்டு அறிக்கையைப் பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும். கடந்த 2006 முதல் 2010 வரையிலான நான்கு நிதியாண்டுகளில் இந்த நிறுவனங்கள் ரூ.1,26,288 கோடி லாபம் ஈட்டியிருப்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

---------------------------
விஜயபாரதம் (08.06.2012)

.