சனி, ஜூன் 09, 2012

புதுக்கோட்டையும் அரசியல் கட்சிகளும்


அரசியல் களம் சற்றே சூடு குறையும்போதெல்லாம் இடைத்தேர்தல் வந்து உற்சாகப்படுத்தி விடுகிறது. இப்போது புதுக்கோட்டை இடைத்தேர்தல் காலம். கோடைக்காலம் முடிந்தும் பிரசார சூடு பறக்கிறது புதுக்கோட்டையில். தமிழக அமைச்சரவையே அங்கு இடம் பெயர்ந்துவிட்டது போல, எங்கு பார்த்தாலும் அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் வாகனங்கள் பறக்கின்றன. பழைய சாலைகள் புதுப்பிக்கப்படுகின்றன. மக்களின் நெடுநாள் குறைகள் உடனடியாகத் தீர்த்து வைக்கப்படுகின்றன. இடைத்தேர்தல் வாழ்க!

புதுக்கோட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த முத்துக்குமரன் கடந்த மே 1 ம் தேதி நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். அதையடுத்து, அத்தொகுதிக்கு ஜூன் 12 ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. அதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இருந்தபோது அக்கட்சிக்கு அளிக்கப்பட தொகுதி புதுக்கோட்டை. அங்கு முத்துக்குமரன் வென்றார். எனவே, மீண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அதிமுகவே அங்கு போட்டியிடும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்; தனது கட்சி வேட்பாளராக கார்த்திக் தொண்டைமானை அவர் அறிவித்தார்.

இதை எதிர்பார்க்காத கம்யூனிஸ்ட் கட்சி, பிற்பாடு பலத்த விவாதத்துக்குப் பிறகு, இடைத்தேர்தலில் பங்கேற்பதில்லை என்று அறிவித்தது. 'சங்கடங்களைத் தவிர்க்கவே தேர்தல் களத்தில் இருந்து விலகியதாக' அக்கட்சியின் மாநிலச் செயலாளர் த.பாண்டியன் வருத்தத்துடன் தெரிவித்தார்.

சென்ற சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் பலத்த அடி வாங்கியிருந்த திமுக என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி எழுந்தது. திமுகவும் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்தது. எனினும் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை' என்று குறிப்பிடும் ‘49 – ஓ’ பிரிவைப் பயன்படுத்தலாமா என்று ஆலோசிக்கப்பட்டது. இறுதியில் இடைத்தேர்தலை புறக்கணிப்பதே சரியான முடிவாக இருக்கும் என்று திமுக அறிவித்தது.

இடைத்தேர்தலில் ஆளும்கட்சியினரின் அத்துமீறலை எதிர்பார்த்தே இவ்வாறு முடிவெடுத்துள்ளதாக திமுக விளக்கம் அளித்தது. அப்படியானால், திமுக ஆளும்கட்சியாக இருந்தபோது இடைத்தேர்தல்களில் அத்துமீறலில் ஈடுபட்டதை அதன் தலைவர் கருணாநிதி ஒப்புக் கொள்கிறாரா? திருமங்கலத்தில் நடந்த இடைத்தேர்தலில் தானே அகில இந்தியாவுக்கும் ஒரு புதிய தேர்தல் பிரசார முறையை தென் மண்டல செயலாளர் மு.க.அழகிரி அறிமுகப்படுத்தினார்? வீட்டுக்கு வீடு பணப் பட்டுவாடாவைத் துவக்கி வைத்த திமுக, இன்று புதுக்கோட்டை இடைத்தேர்தலைப் புறக்கணிக்கக் கூறும் காரணம் வேடிக்கையாக இருக்கிறது. ஆடத் தெரியாத நாட்டியக்காரி மேடை கோணல் என்று சொன்னாளாம்!

இவ்விஷயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் எவ்வளவோ பரவாயில்லை. தோல்வி உறுதி என்பது தெரிந்தாலும், போர்க்களத்தை விட்டு அவர் ஓடிவிடவில்லை. தேமுதிக சார்பில் ஜாகீர் உசேன் களம் இறக்கப்பட்டிருக்கிறார். புதுக்கோட்டை தொகுதியில் உள்ள இஸ்லாமியர்களை நம்பி இவர் களம் காண்கிறார்.

தேர்தல் களத்தில் 20 வேட்பாளர்கள் இருந்தாலும் அதிமுக, தேமுதிக வேட்பாளர்களே பிரதானமானவர்கள். முக்கிய கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, பாஜக, விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ் ஆகியவையும் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்து விட்டன. இக்கட்சிகள் தங்கள் வாக்குவங்கியை அறியும் உத்தேசம் கூட இல்லாமல் களத்தில் இருந்து ஒதுங்கி இருக்கின்றன.

மார்க்சிஸ்ட் கட்சி மட்டும் தேமுதிக வேட்பாளரை ஆதரிப்பதாக அறிவித்திருக்கிறது. திமுகவும் கூட தேமுதிக வேட்பாளரை மறைமுகமாக ஆதரிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதற்கேற்ப, விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ், தங்களை இடைத்தேர்தலில் ஆதரிக்குமாறு திமுக தலைவர்களுக்கு பகிரங்க அழைப்பு விடுத்திருக்கிறார். சட்டசபையில் ஒன்றிணைந்து செயல்பட இரு கட்சிகளுக்கும் இடையிலான பாலமாக புதுக்கோட்டை இடைத்தேர்தல் மாறக் கூடிய வாய்ப்பு உள்ளது.

எனினும், இடைத்தேர்தலில் அதிமுக வெல்வது உறுதியாகிவிட்டதாகவே அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. அமைச்சர்களும் அதிமுகவின் மக்கள் பிரதிநிதிகளும் பம்பரமாகச் சுழன்று பணியாற்றுவதும், ஆளும்கட்சிக்கு வாக்களித்தால் கிடைக்கும் நன்மைகளை மக்கள் உத்தேசிப்பதும், கார்த்திக் தொண்டைமானுக்கு அனுகூலங்கள்.

ஓராண்டுகால அதிமுக ஆட்சியில் சில துறைகளில் ஏற்பட்டுள்ள அதிருப்தியைப் பயன்படுத்தி அதிமுகவுக்கு எதிராக தேமுதிக பிரசாரம் செய்துவருகிறது. எனினும் இந்த அதிருப்தி அதிமுகவை வெல்லப் போதுமானதல்ல. இந்தத் தேர்தலின் விளைவாக, தேர்தல் முடிந்தவுடன் தேமுதிக பிளவுபடக்கூடும்.

பொதுவாகவே தமிழக வாக்காளர்கள் மிகவும் விவரமானவர்களாக உள்ளனர். இடைத்தேர்தலில் ஆளும்கட்சியைத் தேர்வு செய்வதே நல்லது என்பது பரவலான கருத்தாக உள்ளது. இதற்கு பல காரணிகளும் உள்ளன. எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் தொகுதிக்கு செய்யும் வளர்ச்சிப்பணிகளை விட ஆளும்கட்சி எம்எல்ஏக்கள் செய்யும் பணிகள் அதிகம் என்பதை மக்கள் உணர்ந்தே உள்ளனர். தவிர, தேர்தலுக்கு முன்னதாகவே, அரசு இயந்திரம் இடைத்தேர்தல் நடக்கும் தொகுதியில் நலப்பணிகளை விரைந்து முடித்து மக்களிடம் நற்பெயர் பெற்றுத் தந்துவிடுகிறது. இவை அல்லாமல், திமுக புகார் கூறுவதுபோல பணப்பட்டுவாடாவும் சத்தமின்றி நடக்கிறது.

இத்தனைக்குப் பிறகு இடைத்தேர்தலை பல கோடி செலவில் நடத்த வேண்டிய தேவை என்ன என்ற கேள்வி எழுகிறது. ஒரு கட்சியின் எம்எல்ஏ இறந்துவிட்டால், அதே கட்சியின் உறுப்பினரை கட்சியே தேர்வு செய்து காலியிடத்துக்கு நியமித்துவிட்டால் நன்றாக இருக்கும் என்ற கருத்து சமீபகாலமாக பலரால் முன்வைக்கப்படுகிறது. ஆனால், நமது அரசியல் சாசனமும் தேர்தல் முறைகளும் இந்த யோசனையை நிராகரிக்கின்றன.

இடைத்தேர்தல்கள் ஆளும்கட்சி மீதான அதிருப்தியை அறிய உதவும் அளவுகோல்கள். எனவே, அவை அத்தியாவசியமானவை என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது. எனவே தான், எப்பாடுபட்டும் இடைத்தேர்தலில் வெல்வதை ஆளும் கட்சிகள் கௌரவப் பிரச்னையாகக் கருதுகின்றன. எப்படியோ, இடைத்தேர்தல் நடக்கும் தொகுதியில் உள்ள மக்களுக்கு சில பிரச்னைகளேனும் தீர வாய்ப்பு ஏற்படுகிறதே என்று திருப்தி அடைய வேண்டியது தான்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு நடக்கும் மூன்றாவது இடைத்தேர்தல் இது. முதலில் திருச்சியிலும், அடுத்து சங்கரன்கோவிலிலும் நடந்த தேர்தல்கள் அதிமுகவின் அசைக்க முடியாத பலத்தை பறை சாற்றியுள்ளன. இப்போது புதுக்கோட்டையில் நடக்கும் இடைத்தேர்தலிலும் மாறுபட்ட தீர்ப்பு கிடைக்கப் போவதில்லை. ஆனால், சென்ற தேர்தல்களை விட இம்முறை வாக்கு வித்தியாசம் குறையக் கூடும்.

--------------------------------------------

பெட்டிச் செய்தி

கேப்டனின் ராஜதந்திரம்

புதுக்கோட்டை இடைதேர்தலில் வெல்வது துர்லபம் என்பது விஜயகாந்துக்கு தெரியாமல் இருக்காது. ஆனாலும் அவர் தேர்தலில் போராடக் காரணம், தொடர்ந்து களத்தில் இருப்பவர்களையே மக்கள் மன்றம் நினைவில் வைத்திருக்கும் என்பதை அவர் அறிந்திருப்பதால் தான். இவ்விஷயத்தில் மூத்த தலைவர் கருணாநிதி சறுக்கிவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

புதுக்கோட்டை தொகுதி தங்கள் கையை விட்டுப் போன கோபத்தில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தனைகளை ஆதரிப்பார்கள் என்று அவர் நம்புகிறார். தவிர ஆளும்கட்சி மீது அதிருப்தியில் உள்ள அனைவரது வாக்குகளையும் கவர முடியும் என்பதும் அவரது இலக்காக உள்ளது. அவரது பிரசாரமும் அதை ஒட்டியே உள்ளது. போகும் இடமெல்லாம், மின்வெட்டு பிரச்னை குறித்து அவர் பேசுகிறார். அதற்கு மக்களிடம் ஆதரவு இருப்பதைக் காண முடிகிறது.

பாஜக, திமுக, கட்சியில் உள்ள நடுநிலை வாக்காளர்கள் தேமுதிக வாக்காளரை ஆதரிப்பார்கள் என்பதும் விஜயகாந்தின் கணக்கு. அதற்காகவே, 'தற்போதைய மக்கள் பிரச்னைகளைத் தீர்க்க மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் வேண்டும்' என்று அவர் பேசுவதாகத் தெரிகிறது. அவரது ராஜ தந்திரம் வெல்லுமா என்பதை தேர்தல் நாளில் பதிவாகும் வாக்கு சதவிகிதத்தைக் கொண்டே மதிப்பிட முடியும்.

இத்தேர்தலில் தேமுதிக தோல்வி அடைந்தாலும், அதிமுகவுக்கு எதிரான கட்சி என்ற அடையாளத்தை உறுதியுடன் கைப்பற்றிவிடும் என்று தோன்றுகிறது. இத்தனை நாட்களாக இந்த அடையாளம் திமுக வசம் இருந்தது. தேர்தல் களத்தில் இருந்து ஒதுங்கியதன் மூலமாக விஜயகாந்த்தின் பாதையை ஒழுங்குபடுத்தி உதவி இருக்கிறது திமுக.
Link
-------------------------------------
விஜயபாரதம் (15.06.2012)

காண்க: தமிழ் ஹிந்து
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக