போலீசாரால் கைது செய்யப்பட்ட ராமதாஸ் |
பெருங்கடல்களில் பயணிக்கும் கப்பல்கள், தூரத்தில் தெரியும் பனிப்பாறை முகடுகளைக் கொண்டே எச்சரிக்கையாக தங்கள் திசைவழியை மாற்றிக் கொள்கின்றன. ஏனெனில், வெளியில் தெரியும் சிறிய பனிப்பாறை முகடின் ஆழத்தில், அருகில் நெருங்கினால் கப்பலைக் கவிழ்க்கும் பெரிய மலை இருப்பது மாலுமிகளுக்குத் தெரியும்.
அதுபோலவே தான், அண்மையில் நடைபெற்ற மரக்காணம் சாதிக்கலவரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சி தான் இந்தக் கலவரத்துக்கு அடிப்படைக் காரணம் என்றாலும் அக்கட்சியை மட்டும் குறைகூறி, மற்றவர்களை புனிதர்களாக்கிவிட முடியாது.
நமது அரசியல் நடைமுறையே இத்தகைய சாதிரீதியிலான அணிதிரட்டலுக்கு காரணம் என்ற நிதர்சன உண்மையைப் புரிந்துகொண்டால் தான், ஜாதிக் கலவரங்களின் பின்புலமும் அதற்குக் காரணமான சுயநலவாதிகளின் கோர முகமும் நமக்கு தெரியவரும்
தமிழகத்தில் ஜாதிரீதியான அணிதிரட்டல் 1940- களிலேயே துவங்கிவிட்டது. பிராமணர்களுக்கு எதிராக இடைநிலை சாதிகளைத் திரட்டியதால் தான், தமிழக அரசியல் மாறியது. இதில் சமூகநீதி பேசும் திராவிட இயக்கங்களுக்கு பெரும் பங்குண்டு. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சம உரிமை பெற்றுத் தருவதில் இடைநிலை சாதிகளின் ஆதிக்கம் மிகுந்த திராவிட இயக்கங்கள் தோல்வியே கண்டன. அதன் விளைவாக தலித் அமைப்புகளும் தாழத்தப்பட்டோருக்கான புதிய அரசியல் கட்சிகளும் 1980-களில் தோன்றத் துவங்கின.
அந்தச் சமயத்தில் (1989) உருவானது தான் வன்னியரை அடிப்படை வாக்குவங்கியாகக் கொண்ட பாட்டாளி மக்கள் கட்சி. மாநிலத்தில் நிலவிய அரசியல் நிலையற்ற தன்மையால், ஆட்சிக் கனவுகளுடன் இதனை மருத்துவர் ராமதாஸ் துவங்கினார்.
1991-ல் தனித்துப் போட்டியிட்ட பாமக ஓர் இடத்தில் வென்று சட்டசபைக்குள் நுழைந்தது; 1996ல் திவாரி காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டு 4 இடங்களில் வென்றது. அப்போது பாமகவுக்கு வலுவான ஒரு வாக்குவங்கி உருவானது. இதன் விளைவாக திமுக, அதிமுக இரு கட்சிகளும் பாமகவை கூட்டணியில் சேர்க்கத் துடித்தன. திண்டிவனத்தில் சிறந்த மருத்துவர் என்று பெயர் பெற்ற ராமதாஸ் சிறந்த அரசியல் தரகராக மாறிய தருணம் அது.
தொடர்ந்து வந்த சட்டசபை, நாடாளுமன்றத் தேர்தல்களில் திமுக், அதிமுக கட்சிகளோடும் அவை சார்ந்த தேசிய அளவிலான கூட்டணிகளோடும் மாறி மாறி கூட்டணி வைத்து அதிகாரத்தின் சுவையை அனுபவித்தார் ராமதாஸ்.
1998-ல் அதிமுக தலைமையில் தமிழகத்தில் அமைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டு 4 எம்பிக்களைப் பெற்ற பாமக, அதன்மூலமாக மத்திய அரசில் அமைச்சர்களைப் பெற்றது. 1999-ல் அதிமுக பாஜகவுடன் நட்புறவை முறித்துக்கொண்டபோது திமுக தலைமையில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைந்தது. அதிலும் பாமக இடம் பெற்று 5 எம்.பி.களைப் பெற்றது; ஆட்சியிலும் பங்குபெற்றது.
2001 தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று 20 எம்.எல்.ஏக்களைப் பெற்றது. 2004-ல் நாடாளுமன்றத் தேர்தலின்போது கூட்டணி ஜாகையை திமுக தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு மாற்றிக் கொண்டார் சந்தர்ப்பவாதத் திலகமான ராமதாஸ். அப்போது 6 எம்.பி.க்கள் பாமகவுக்கு கிடைத்தன; ஆட்சியிலும் பங்கு கிடைத்தது.
2006-ல் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்ற பாமக 18 எம்.எல்.ஏ.க்களைப் பெற்றது. இதுவரை பாமக நடத்திய சாகசப் பயணம் நின்றது 2009-ல். திமுகவும் அதிமுகவும் பாமகவுக்கு இடமளித்து வளர்த்துவிட்டது போலவே வட மாவட்டங்களில் அக்கட்சிகளும் பலன் பெற்றன என்பது உண்மை. எனினும், கொள்கையற்ற கூட்டணிகளால் தனது சுயநலத்தை அம்பலப்படுத்திய ராமதாசை இரு கழகங்களும் 2009-ல் கழற்றிவிட்டன இதன் விளைவாக நாடாளுமன்றத் தேர்தலில் பாமக தனித்து போட்டியிட்டு பூஜ்யம் பெற்றது. அடுத்து 2011-ல் சட்டசபை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து 3 எம்.எல்.ஏ.க்களைப் பெற்றது பாமக.
ஆக, பாமகவுக்கு தனித்து பெரும்பலம் கிடையாது என்பது அனைவருக்கும் தெரிந்து விட்டது. அதுதான் தற்போதைய சாதிக் கலவரத்தின் அடிப்படை. இதற்கு, சந்தர்ப்பவாதமாக அரசியல் நடத்திய பாமக போலவே, திமுக, அதிமுக கட்சிகளும் காரணம் என்பதை மறுக்க முடியாது.
வட தமிழக மாவட்டங்களில் பாமகவின் வளர்ச்சியால் தாழ்த்தப்பட்டோரின் உரிமைகள் நசுக்கப்பட்டன. அதன் எதிரொலியாக தலித் சாதி சார்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வளரத் துவங்கியது. இக்கட்சியையும் இரு கழகங்களும் மாறி மாறி ஊட்டி வளர்த்தன. இடையே விடுதலைச் சிறுத்தைகளுடன் நட்புப்பாலம் அமைக்க முயன்ற ராமதாசின் கனவு பலிக்கவில்லை.
தற்போதைய அரசியலில் பெரும்பான்மை மதம் சார்ந்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டால் அதற்கு வகுப்புவாத முத்திரை குத்தப்படுகிறது; அதேசமயம் சிறுபான்மை மதங்களைச் சார்ந்தவர்கள் அராஜகம் செய்தாலும் அது நியாயப்படுத்தப்படுகிறது. அதுபோன்ற நிலைமையே தலித் அமைப்புகள் விஷயத்திலும் நமது அரசியல் சாராசரி நிலைபபடாக உள்ளது. உதாரணமாக தலித் மக்கள் பல்லாண்டுகளாக அடிமைப்பட்ட நிலையில் இருந்து தாங்கள் விடுவிக்கப்பட்டதாக உணர்ந்து மேலெழும்போது, அவர்களது வளர்ச்சியை அரசியல் ஆயுதமாக்க முயலும் அரசியல்வாதிகள் அவர்களை தவறாக வழிநடத்திவிடுகிறார்கள். அதற்கு திருமாவளவனும் கிருஷ்ணசாமியும் விதிவிலக்கல்ல.
உதாரணமாக மரக்காணத்தில் பாமகவைச் சார்ந்த ஒருவர் கொல்லப்பட்டதை முதல் 4 நாட்களுக்கு பேருந்து விபத்தாக சித்தரிக்கவே காவல் துறையும் ஊடகங்களும் முயன்றன. இதுபோன்ற தவறான நடவடிக்கைகள், சமூகத்தில் ஏற்கனவே புரையோடியுள்ள கொந்தளிப்பை அதிகப்படுத்திவிடுகின்றன.
இதற்கு முன்னோடியாக ஏப்ரல் 25-ல் மாமல்லபுரத்தில் நடைபெற்ற சித்திரை முழுநிலவு திருவிழா வன்னிய மக்களை உசுப்பேற்றியது. ஏற்கனவே சென்ற ஆண்டு நடைபெற்ற சிதிரைவிழாவின் தாக்கமாக தருமபுரி- நாயக்கன் கோட்டையில் கொடிய நிகழ்வுகள் நடைபெற்றுள்ள நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு அரசு அனுமதி அளித்திருக்கக் கூடாது. ஆனாலும், வன்னியரின் அதிருப்திக்கு அஞ்சி அனுமதி அளித்துவிட்டு, இப்போது பாமக மீது கடும் நடவடிக்கையை எடுக்கிறது அதிமுக அரசு. இதைத் தான் தும்பை விட்டு வாலைப் பிடிப்பது என்பார்கள்!
இந்த நிகழ்ச்சிக்கு சென்ற பாமகவினர் மதுபோதையிலும், கூட்டம் சேர்ந்த தெம்பிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக முழங்கிய கோஷங்கள் கலவரத்தை விதித்துவிட்டன பாமக தொண்டர்கள் தாக்கப்பட்டதும், மரக்காணத்தில் கட்டையன் தெருவில் தலித் குடியிருப்புகள் தீக்கிரையாக்கப்பட்டன. முன்கூட்டியே திட்டமிடாமல் இத்தகைய கொடூரம் அரங்கேற வாய்ப்பில்லை. அடுத்து நடந்த துப்பாக்கிச்சூடு, பாமக தலைவர்கள் கைது ஆகிய நடவடிக்கைகள், வட தமிழக மாவட்டங்களில் ஒரு நிலையற்ற தன்மையை தோற்றுவித்துள்ளன. இப்போதேனும் அரசியல் கணக்கின்றி நடவடிக்கை எடுத்துவரும் அதிமுக அரசைப் பாராட்டலாம். திமுக தலைவர் கருணாநிதியும் இவ்விஷயத்தில் பாமகவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
இப்போது பாமகவுக்கு ஆதரவாக தமிழகத்தின் பிற இடைநிலை சாதிகள் சார்ந்த சாதி அமைப்புகள் குரல்கொடுப்பது அடுத்துவரும் அபாயத்தை வெளிப்படுத்துகிறது இதற்கான முன்களப்பணியை மருத்துவர் ராமதாசே கடந்த ஓராண்டாக செய்துவந்தார். வன்கொடுமை தடுப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு, கலப்புத் திருமணத்துக்கு எதிர்ப்பு ஆகிய அம்சங்களின் அடிப்படையில் தேவர், கவுண்டர், முதலியார், நாடார், நாயக்கர் உள்ளிட்ட இடைநிலை சாதியினரின் (ஆதிக்கக் சாதியினர்) குரலாக ஒலிக்கும் கட்சிகளை ‘சமுதாய பாதுகாப்பு பேரவை’ என்ற பெயரில் திரட்டிவந்தார் ராமதாஸ். இது ஒருவகையில் தமிழகம் முழுவதும் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான கூட்டமைப்பாக மாறிவருகிறது. இதனை மக்கள் ஒற்றுமை விரும்புவோர் ஏற்க முடியாது.
எனினும், இக்கட்சிகள் கொண்டுள்ள தலித் மக்கள் குறித்த கவலைக்கு சில இடங்களில் நியாயம் உள்ளபோது, அது பொதுவான அரசியல் நிலைப்பாடாக மாறிவிடுகிறது. சாதியைக் கொண்டு மக்களைப் பிளந்து ஆட்சியைப் பிடித்த திராவிட இயக்கங்களுக்கு முற்றுப்புள்ளி இதே சாதிய இயக்கங்களால் தான் வருமோ?
நாட்டுநலன் விரும்புவோர் சாதிகளிடையே இணக்கத்திற்காக அமைதியாக பல்லாண்டுகள் பணிபுரிந்துவரும் சூழலில், ஒரே திருவிழாவில் அதனை முற்றிலும் குலைக்கக் கூடியதாக சாதிய அரசியல்வாதிகளின் திருவிளையாடல்கள் அமைந்துவிடுவது தான் வேதனை அளிக்கும் செய்தி. தற்போதைய மரக்காணம் கலவரத்தையும் அதன் தொடர் நிகழ்வுகளையும் பனிப்பாறை முகடாகவே, சமுதாய நலம் விரும்பிகள் காண்கிறார்கள். சமுதாய மாலுமிகள் என்ன செய்யப் போகிறார்கள்? அலைகடலில் தடுமாறுகிறது தமிழகக் கப்பல்.
-----------------------
விஜயபாரதம் (24.05.2013)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக