ஆனால், நமது பெண்ணியவாதிகள் இதனை தவறாகப் புரிந்துகொண்டதன் பலனையே அசாமில் நடந்த இளம்பெண் மானபங்க நிகழ்வு காட்டுகிறது. சுதந்திரம் என்பது கட்டுப்பாடற்றது என்று புரிந்துகொண்டதால் வந்த வினையே இந்நிகழ்வு. பெண்ணுக்கு உரித்தான தன்னடக்கமும் நாணமும் குறைந்தால் என்ன ஆகும் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம் ஆகி இருக்கிறது.
கடந்த ஜூலை 9 ம் தேதி இரவு 11 மணியளவில், அசாம் மாநிலத்தின் தலைநகர் கௌஹாத்தியில் மதுவிடுதி அருகே நடந்த கொடூர சம்பவத்தில் ஓர் இளம்பெண்ணை 16 பேர் கொண்ட இளைஞர் கும்பல் மானபங்கப்படுத்தியது. இதன்மூலமாக நமது இளைஞர்களின் தறிகெட்ட மனப்பான்மை அம்பலமானது. தனியாக அகப்பட்ட பெண்ணை நிர்வாணப்படுத்தி ஆனந்தம் கொள்ளும் வக்கிரமான இவர்களது மனப்பான்மையால் நாடே அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது.
இந்த விவகாரத்தில் அரசியல்வாதிகளுக்காக பல உண்மைகள் மறைக்கப் பட்டிருக்கின்றன. அதே சமயம், பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகும் பெண்களின் அடையாளத்தையோ பெயரையோ வெளிப்படுத்தக் கூடாது என்ற உச்ச நீதிமன்ற அறிவுரை மீறப்பட்டிருக்கிறது. குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் அக்கறை காட்டாமல் காலம் தாழ்த்திய காவல் துறை, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை அவசர அவசரமாக வெளிப்படுத்த வேண்டிய தேவை என்ன என்ற கேள்வி எழுகிறது.
சம்பவம் நடந்த நாளன்று பிறந்தநாள் விழா பார்ட்டிக்காக மதுவிடுதிக்கு சென்ற அந்த இளம்பெண் (11 ம் வகுப்பு படிக்கும் மாணவி) அங்கிருந்த சிலருடன் போதையில் தகராறில் ஈடுபட்டிருக்கிறார். அதனால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். அவரைப் பின்தொடர்ந்து வந்த சிலர், சாலையில் சென்ற மேலும் சில இளைஞர்களைக் கூட்டி, அந்தப் பெண்ணை தாக்கி இருக்கின்றனர். போதையில் இளம்பெண் இருந்ததைப் பயன்படுத்தி, அவரை பாலியல் பலவந்தம் செய்திருக்கின்றனர். ஒரு பெண் நள்ளிரவு நேரத்தில் மது அருந்தி வந்தால் அவள் மோசமானவளாகத் தான் இருப்பாள் என்ற பொதுப்புத்தியின் அடிப்படையில் அந்த கும்பல் செயல்பட்டிருக்கிறது.
அந்தப் பெண்ணை அடித்து, ஆடைகளை அவிழ்த்து அநாகரிகமாக நடந்துகொண்ட கும்பலைத் தடுக்க அங்கு ஆண்மையுள்ள யாருமே இல்லை என்பது வெட்கக்கேடானது. அதைவிடக் கேவலமானது, அந்த நிகழ்வைப் படம் பிடித்த உள்ளூர் செய்தி சேனல் நிருபர் கௌரவ் ஜோதி நியோகின் செய்கை தான். ஓர் அத்துமீறல் நடக்கும்போது அதுகுறித்து காவல்துறைக்கு தெரிவிக்காமல், அதை தார்மிகரீதியாகத் தடுக்க முனையாமல், அதை படம் பிடிப்பதிலேயே அவர் கவனமாக இருந்திருக்கிறார். அந்த நிகழ்வையே அவர் தான் வடிவமைத்ததாக இப்போது புது குற்றச்சாட்டு கிளம்பி இருக்கிறது. அவர் காவல்துறையால் கைதும் செய்யப்பட்டிருக்கிறார்.
இந்நிகழ்வு ஊடகங்களின் பொறுப்புணர்வு குறித்த விவாதத்தை மீண்டும் எழுப்பி இருக்கிறது. எந்த ஒரு விஷயத்தையும் ஊதிப் பெரிதாக்கி 'டி.ஆர்.பி.ரேட்டிங்'கை உயர்த்துவதில் கவனமாக இருக்கும் நமது 24 மணி நேர செய்தி சேனல்கள் இச்சம்பவத்தையும் தங்களுக்கே உரித்தான வகையில் செய்தி ஆக்கி, மானபங்க நிகழ்வின் 'கிளிப்பிங்க்ஸ்'களை கடன் வாங்கி வெளியிட்டு புண்ணியம் தேடின. அதைவிடக் கொடுமை, இந்த பலவந்த படப்பிடிப்பு காட்சிகள் இணையதளத்தில் உலவச் செய்யப்பட்டது தான்.
தகவல் அறிந்து அங்கு வந்த காவலர்கள் அந்தப் பெண்ணை வக்கிரக் கும்பலிடம் இருந்து கஷ்டப்பட்டு மீட்டு இருக்கின்றனர். காவலரைக் கண்டும் கூட அந்தக் கும்பல் அச்சமின்றி அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிட வேண்டிய தகவல். காரணம், இக்கும்பலில் இருந்த பலர் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் என்பது தான். ஆளும் காங்கிரஸ் கட்சியின் எடுபிடிகள் அல்லவா இவர்கள்? இச் சம்பவத்தில் ஈடுபட்ட கயவர்களை கைது செய்யாமல் காவல்துறை வேடிக்கை பார்க்கவும் இதுவே காரணம்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணே வேறு என்ற மற்றொரு கதையும் உலாவுகிறது. மதுவிடுதியில் தகராறு செய்த காங்கிரஸ் தலைவரின் மனைவி தான் பலாத்காரத்துக்கு உள்ளானதாகவும், அவரைக் காப்பாற்றவே, சம்பந்தமில்லாத ஓர் இளம்பெண்ணின் பெயர் வெளியிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது உண்மையா என்று தெரியவில்லை.
மொத்தத்தில் தருண் கோகோய் தலைமையிலான காங்கிரஸ் அரசு இவ்விஷயத்தில் மிகவும் மோசமாக சொதப்பியது. வீடியோ பதிவில் அனைத்து குற்றவாளிகளின் முகங்களும் தெளிவாகத் தெரிந்த நிலையிலும், குற்றவாளிகள் 11 பேரை கைது செய்யவே காவல் துறைக்கு ஒரு வாரம் ஆகி இருக்கிறது. இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் சிலர் இன்னமும் தலைமறைவாக இருக்கின்றனர். இப்போதைக்கும, பலாத்காரம் நடந்ததை முதலில் ஒப்புக்கொண்ட நகர எஸ்.எஸ்.பி. அபூர்வ சிபான் பரூவா இடம் மாற்றப்பட்டிருக்கிறார். சம்பவத்தை ஆய்வு செய்ய வந்த தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் அல்கா லம்பாவும், பெண்ணின் பெயரை வெளிப்படுத்தியதற்காக நீக்கப்பட்டிருக்கிறார்.
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பரவலாகத் தெரியவரக் காரணமான 'நியூஸ் லைவ்' தொலைக்காட்சியின் ஆசிரியர் அதான்னு பூயனும், படம் பிடித்த நிருபர் கௌரவ் ஜோதி நியோகும் பதவி விலகி இருக்கின்றனர். நாட்டில் நடக்கும் அக்கிரமங்களை வெளிப்படுத்துவதில் ஊடகங்களின் பங்கு அளப்பரியது என்பது உண்மையே. எனினும், ஓர் அக்கிரமம் கண் முன்னால் நடக்கும்போது அதைத் தடுக்க முயற்சிக்காமல், அதை காட்சிப்படுத்துவது மட்டுமே தனது கடமை என்று எந்த ஊடக பணியாளரும் முனையக் கூடாது என்பதை இவர்களது பணிவிலகல் காட்டுகிறது. பாதிக்கப்பட்ட பெண் சம்பந்தப்பட்ட நிருபரின் நெருங்கிய உறவினராக இருந்திருந்தால் அவர் என்ன செய்திருப்பார் - படம் பிடித்திருப்பாரா? அதைத் தடுக்க முயன்றிருப்பாரா?
இதனிடையே, ''இந்த மொத்த நிகழ்வுமே, தருண் கோகோய் அரசுக்கு எதிராக பின்னப்பட்ட சதி'' என்று குற்றம் சாட்டி இருக்கிறார், அண்ணா ஹசாரே குழு உறுப்பினரான அகில் கோகோய். இச்செய்தி வெளியான 'நியூஸ் லைவ்' தொலைகாட்சி, முதல்வருக்கு எதிரான மாநில அமைச்சர் ஒருவருக்கு சொந்தமானது என்றும் அவர் கூறி இருக்கிறார். ஆனால் மாநில காங்கிரஸ் கட்சி மௌனம் காக்கிறது.
''ஒரு பெண் தலைமை தாங்கும் காங்கிரஸ் கட்சியின் வழிகாட்டுதலில் மத்திய அரசும் அசாம் மாநில அரசும் செயலப்டுகையில், ஒரு பெண்ணுக்கு நேர்ந்துள்ள அவமானம் குறித்து உடனடி நடவடிக்கை ஏன் எடுக்கப்படவில்லை?'' என்று பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பி இருக்கிறார். இதற்கும் காங்கிரஸ் கட்சியிடம் சரியான பதில் இல்லை.
மொத்தத்தில், கௌஹாத்தியில் அன்று இரவில் துகில் உரியப்பட்டது அந்த இளம்பெண் மட்டுமல்ல, நமது நாட்டின் மானமும் தான். அதை உணரும் திறன் நமது ஆட்சியாளர்களுக்கோ, ஊடகங்களுக்கோ இல்லை என்பது தான் அதைவிட கவலை அளிப்பதாக உள்ளது.
----------------------------------------------------
பெட்டிச்செய்தி:
சில கேள்விகள்:
11 ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி 'பார்ட்டி' கொண்டாடத்துக்காக இரவு 11 மணியளவில் அந்த மது விடுதிக்கு செல்லலாமா? அவ்வாறு செல்ல அவளை அனுமதித்த பெற்றோரைத் தண்டிக்கக் கூடாதா?
பிறந்தநாள் கொண்டாட்டம் என்றாலே மது அருந்துவது தான் என்ற மேற்கத்திய பண்பாட்டை நாம் நகல் எடுக்க வேண்டுமா? மேற்கத்திய மோகத்தால் நமது பண்பாடு வீழ்ச்சி உறுவது குறித்து எந்த ஊடகமும் இதுவரை கண்டனம் தெயரிவிக்கவிலையே, ஏன்?
ஒரு பெண் மோசமானவளாகவே இருந்தாலும் அவளை கும்பலாக சூழ்ந்து தாக்குவது என்பது எவ்வகையில் சரியானது? அதுவும் போதையில் உள்ள, தன்னைக் காக்க வலிமை இல்லாத ஒரு பெண்ணை பலவந்தப்படுத்தியதை எவ்வாறு சகித்துக் கொள்வது?
அவ்வாறு செய்த கயவர்களை ஒருவார காலம் காத்த அரசியல் நிர்பந்தம் எது? முதல்வரே நேரடியாகத் தலையிட்டு காவலதுறையைக் கண்டித்த பிறகே குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஏன் இந்த இழிநிலைமை?
மதுபோதை கொடிய குற்றங்களை செய்ய வைக்கும் என்பதை இச்சம்பவமும் உறுதிப்படுத்தும் நிலையில், மது விற்பனைக்கு எதிராக சமுதாயம் ஏன் குரல் கொடுக்கவில்லை? எந்த அரசியல் கட்சியும் இந்தக் கண்ணோட்டத்தில் மதுவுக்கு எதிராக குரல் எழுப்பாதது ஏன்?
நமது பண்பாடு பெண்களை போற்றக் கூடியது. ஆனால், படித்த நமது இளைஞர்கள் கொடூரமாகவும் வக்கிரமாகவும் அன்று இரவு மாறியதற்கு என்ன காரணம்? இதை எவ்வாறு சரிப்படுத்தப் போகிறோம்?
----------------------------விஜய பாரதம் (03.08.2012)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக