வெள்ளி, ஜூலை 13, 2012

ஊழல்களின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா!



கடந்த
மாதம் ''தற்போதைய மத்திய அரசில் உள்ள 34 அமைச்சர்களில் 15 பேர் மீது கடுமையான ஊழல் புகார்கள் இருக்கின்றன. இதுகுறித்து விசாரிக்க சிறப்புக் குழுவை நியமிக்க வேண்டும். அதன் விசாரணையை ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்'' என்று குற்றம் சாட்டினர், அண்ணா ஹசாரே தலைமையிலான ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர். அந்தப் பட்டியலில் பிரதம் மன்மோகன் சிங் பெயரும் இடம் பெற்றிருந்தது கொடுமை தான்.

பிற்பாடு இதனை ஹசாரே திருத்தினார். அதாவது 14 அமைச்சர்கள் மீது மட்டுமே ஊழல் புகார் இருப்பதாகக் கூறினார் அவர். ஆயினும், ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் இணைய தளத்தில் ‘ ஊழல் மன்னர்கள்' என்ற தலைப்பில் பிரதமர் உள்ளிட்ட 15 பேரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. அதில், ஒவ்வொரு அமைச்சரும் செய்த முறைகேடுகள் குறித்த விளக்கமான பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. அதன் அருகிலேயே அமைச்சர்கள் விளக்கம் அளிக்கவும் இடம் விடப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை, சம்பந்தப்பட்ட எவரும் விளக்கம் அளிக்கவில்லை

இது எதிர்பார்க்கப்பட்டதே. திருட்டில் தொடர்புடைய ஒருவரிடம் இருந்து நேர்மையான விளக்கத்தை எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது. அதுவும் நாட்டையே திவாலாக்கும் ஊழல்களில் ஈடுபட்டவர்கள் தன்னிலை விளக்கம் அளிப்பர் என்று எதிர்பார்ப்பது பரிதாபமானது. இதைவிடப் பரிதாபம், இன்னமும், அண்ணா ஹசாரே, ‘’மன்மோகன் சிங் நல்லவர் தான்’’ என்று ஓயாமல் பேசிக் கொண்டிருப்பது. இதையே காங்கிரஸ் ஆதரவு ஊடகங்கள் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, ஹசாரே மீது நம்பிக்கையின்மை ஏற்படும்படியான செய்திகளை வெளியிடுகின்றன.

ஜன லோக்பால் சட்டத்தை நிறைவேற்றக் கோரியும், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர்கள் மீதான விரைவான விசாரணை கோரியும், வரும் ஜூலை 25 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அண்ணா ஹசாரே அறிவித்திருக்கிறார். புதுதில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் உண்ணாவிரதம் இருக்க அவருக்கு அனுமதி வழங்க அரசு மறுத்து வருகிறது. அநேகமாக இம்முறை, யோகா குரு ராம்தேவுக்கு நடத்திக் காட்டிய நாடகத்தை ஹசாரே குழுவினருக்கும் ப.சி. நடத்திக் காட்டக் கூடும். ஏனெனில், ஹசாரே குழுவினர் குற்றம் சாட்டிய அமைச்சர்கள் பட்டியலில் மிக அதிகமான குற்றங்கள் செய்தவராக முதலிடத்தில் இருப்பவர் ப.சி. தான்.

சுதந்திர இந்தியாவில் இருந்த அரசுகளிலேயே மிகவும் ஊழல்மயமான அரசு என்று பெயர் பெற்றுவிட்ட மன்மோகன் சிங் அரசு இப்போது ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜியை முன்னிறுத்தி இருக்கிறது. அவர் மீதும் குற்றம் சாட்டி இருக்கின்றனர் ஹசாரே குழுவினர். இதுதான் இப்போது அதிர்ச்சி அளிக்கும் விஷயம். ஏனெனில், ஜனாதிபதி தேர்தலில் முகர்ஜி வென்றுவிட்டால், அரசியல் சாசனப்படி அவர் மீது எப்போதுமே நடவடிக்கை எடுக்க முடியாது. கடற்படை ரகசியத் தகவல் கசிவு ஊழல், அரிசி ஊழல், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வரிச்சலுகை காட்டிய ஊழல், ஸ்கார்பியன் நீர்மூழ்கிக் கப்பல் வாங்கியதில் ஊழல் என்று முகர்ஜி மீது ஊழல் புகார்கள் சுமத்தப்பட்டிருக்கின்றன. இதை காங்கிரஸ் ஆவேசமாக மறுத்திருக்கிறது. ஆனால், காங்கிரஸ் சொல்வதை நம்பும் நிலையில் மக்கள் இல்லை.

பிரதமர் மன்மோகன் சிங் மீதும் நிலக்கரி ஒதுக்கீடு ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 2006 - 2009 ல் நிலக்கரி அமைச்சகத்தை தன்வசம் அவர் வைத்திருந்தபோது இந்த ஊழல் நடந்திருப்பதாக, சி.ஏ.ஜி அறிக்கையின் அடிப்படையில் ஊழல் எதிர்ப்பு இயக்கம் குற்றம் சாட்டி இருக்கிறது. இதேபோல, இஸ்ரோ -ஆன்ட்ரிக்ஸ் தேவாஸ் ஒப்பந்தமும். பிரதமரின் கட்டுப்பாட்டில் இருந்த அறிவியல் தொழில்நுட்பத் துறையே தான் இதற்கு பொறுப்பு என்று சி.ஏ.ஜி ஏற்கனவே குற்றம் சாட்டி இருக்கிறது.

கார்கில் வீர்கள் பெயரைச் சொல்லி அடுக்குமாடி குடியிருப்பு கட்டி அதில் பல வீடுகளை பினாமி பெயரில் உறவினர்களுக்கு பகிர்ந்துகொண்டதாக, மகாராஷ்டிர முதல்வர்களாக இருந்த விலாஸ்ராவ் தேஷ்முக், அசோக் சவான், சுஷில்குமார் ஷிண்டே ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் தேஷ்முக்கும் ஷிண்டேவும் இப்போது மத்திய அமைச்சர்கள். இப்போது மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக உள்ள தேஷ்முக் மீது திரைப்பட இயக்குனர் சுபாஷ் கைக்கு சாதகமாக குறைந்த விலையில் அரசு நிலத்தை தாரை வார்த்ததாக வழக்கு உண்டு. இவர் முதல்வராக இருந்தபோது (2004 -2008) தனது உறவினரின் அறக்கட்டளைக்கு விதிகளை மீறி குடியிருப்பு ஒதுக்கியதாகவும் சி.ஏ.ஜி அறிக்கை புகார் கூறி இருக்கிறது.

மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் மீது 2007 ம் வருடத்திய கோதுமை இறக்குமதி ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்றவாளியான டி.பி.குழுமத்தின் சாகித் பல்வாவுடன் தொடர்பு, போலி முத்திரைத்தாள் மோசடி மன்னன் அப்துல் கரீம் தேல்கியுடன் தொடர்பு போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளன.

முன்னாள் இமாச்சல் முதல்வராகவும் மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்துறை அமைச்சராக இருந்தவருமான வீரபத்திர சிங் மீது, அரசுப் பணியை முறைகேடாகப் பயன்படுத்தி லஞ்சம் பெற்றதாக புகார் உள்ளது. அண்மையில் இது தொடர்பாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பதை அடுத்து அவர் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகி இருக்கிறார். இவர் முதல்வராக இருந்தபோது (2007) லஞ்சம் கேட்டு தொழில் அதிபர்களுடன் உரையாடியதை உடன் இருந்த அரசியல் எதிரியே பதிவு செய்து மாட்டிவைத்துவிட்டார். முறைகேடான ஊழியர் நியமனம் குறித்த குற்றச்சாட்டுகளும் இவர் மீது உள்ளன.

மத்திய கனரகத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பிரபுல் பட்டேல் விமானப் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது 111 விமானங்கள் வாங்கியதில், தற்போது ஊழல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசுக்கு சுமார் ரூ. 67,000 கோடி இழப்பு நேரிட்டிருப்பதாக மதிப்பிடப்படுகிறது.

மத்திய நகர்ப்புற அமைச்சராக உள்ள கமல்நாத் வர்த்தகத்துறைக்கு பொறுப்பு வகித்தபோது (2007) நடந்த ஊழல் அரிசி ஏற்றுமதி ஊழல். பாசுமதி அல்லாத அரசி ஏற்றுமதிக்கு தடை விதித்து, தனக்கு வேண்டியவர்கள் மட்டும் கள்ளத்தனமாக ஏற்றுமதி செய்ய அனுமதித்து ரூ. 2,500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக கமல்நாத் மீது புகார். இது மட்டுமல்லாது, ‘ஸ்பெக்ட்ரம் ராசா’ புகழ் நீரா ராடியா டேப்பிலும் கமல்நாத் வந்து செல்கிறார். தேசிய நெடுஞ்சாலை- 69 ல் நடந்த ரூ. 10,800 கோடி முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகளை காப்பாற்றியதும் கமல்நாத் மீதான குற்றச்சாட்டு.

மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக உள்ள கபில் சிபல் தனது 'பூஜ்ஜிய நஷ்டம்' கருத்தால் ஸ்பெக்ட்ரம் ஊழலில் பலரது கவனத்தைக் கவர்ந்தவர். ஒருங்கிணைந்த அணுகுசேவை உரிமங்கள் (UASL) வழங்குவதில் இவரும் முறைகேடு செய்துள்ளது அம்பலமாகி இருக்கிறது.

மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராக உள்ள சல்மான் குர்ஷீத், ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய ரிலையன்ஸ் -ஸ்வான், எஸ்ஸார் -லூப் நிறுவனங்களுக்கு சாதகமாக தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியது அம்பலமாகி இருக்கிறது. இவர் கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சராக இருந்தபோதும் சட்டத்துறைக்கு மாறியபோதும், போலி நிறுவனங்களுக்கு வக்காலத்து வாங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தீவிரமாகும்போது சல்மான் குர்ஷீத்தும் குற்றவாளிக் கூண்டில் ஏற வேண்டி இருக்கும்.

வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ள எஸ்.எம்.கிருஷ்ணா, கர்நாடக மாநில முதல்வராக இருந்தபோது (1999 - 2004) 6,832 ஹெக்டேர் பரப்புள்ள கனிமச் சுரங்கங்களை தனியாருக்கு தாரை வார்த்ததாக கர்நாடக லோக் ஆயுக்தா குற்றம் சாட்டி இருக்கிறது. சுரங்க ஊழல் கர்நாடகாவில் துவங்கியதே இவரது காலத்தில் தான் என்பது புகார். இவரால் மாநில அரசுக்கு பெருமளவு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய புதுப்பிக்கத் தக்க ஆற்றல் துறை அமைச்சராக உள்ள பரூக் அப்துலா மீது ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்க ஊழலில் குற்றம் சாட்டப்படுகிறது. இவரது நெருங்கிய சகவான அசன் மிர்சா, காஷ்மீரில் கிரிக்கெட் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட (சுமார் ரூ. 30 கோடி) நிதியை பினாமி கணக்குகள் துவங்கி கபளீகரம் செய்துள்ளார். அவருக்கு உறுதுணை புரிந்த பரூக், இப்போது விசாரணை வளையத்தில் இருக்கிறார்.

மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சரான ஜி.கே.வாசன், துறைமுக நிலத்தை குததகைக்கு கொடுத்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். காண்ட்லா துறைமுகத்துக்கு சொந்தமான 16,000 ஏக்கர் நிலத்தை குறைந்த விலையில் குத்தகைக்கு விட்டதில் அரசுக்கு 2 லட்சம் கோடி இழப்பு நேரிட்டிருப்பதாக அறிக்கை அளிக்கப்பட்டு, அதன்மீது நடவடிக்கை கோரப்பட்ட நிலையில், 2010 ல் மேலும் 38 குத்தகை ஒப்பந்தங்களுக்கு வாசன் அனுமதி அளித்துள்ளதாக ஹசாரே குழுவினர் குற்றம் சாட்டுகின்றனர்.

மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சர் மு.க.அழகிரி மீது 2011 ல் தேர்தல் அதிகாரியை தாக்கியது, 23 ஏக்கர் கோவில் நிலத்தை அபகரித்தது போன்ற குற்றச்சாட்டுகளை ஹசாரே குழு சுமத்தி உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சராக உள்ள ப.சிதம்பரம் தான் இவர்கள் எல்லாரிலும் முதலிடம். ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்தபோது நிதி அமைச்சராக இருந்தவர் இவர். 2004 விலையிலேயே 2009 லும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளை விற்க சம்மதித்தவர் இவர். ஆனால், ஆ.ராசாவை சிக்கவைத்துவிட்டு ஏதும் அறியாத அப்பாவியாக வளம் வருகிறார் என்பது இவர் மீது சுப்பிரமணியன் சுவாமி கூறும் குற்றச்சாட்டு. ஸ்பெக்ட்ரம் வழக்கில் ப.சி.யையும் சேர்க்க வேண்டும் என்று கோரி சாமி தொடர்ந்துள்ள வழக்கு எப்போது வேண்டுமானாலும் பூகம்பத்தைக் கிளப்பத் தயாராக உள்ளது.

ஸ்வான், யுனிடெக் நிறுவனங்கள் தங்கள் பங்குகளை முறைகேடாக விற்க அனுமதி அளித்தவரும் ப.சி.தான். ஹட்ச், வோடபோன் நிறுவனங்களின் அந்நிய முதலீடு அபிவிருத்தி வாரிய அனுமதிக்கு வழி வகுத்த அமைச்சரும் இவரே. இப்போது பரபரப்பாகப் பேசப்படும் ஏர்செல்- மேக்சிஸ் நிறுவன மாற்ற முறைகேட்டில் இவர் மீதும் இவரது மகன் கார்த்தி மீதும் புகார் கூறப்படுகிறது.

இவ்வாறாக, தற்போதைய மத்திய அரசின் ஊழல் முடைநாற்றம் பெருகியபடி வருகிறது. ஊழல்களின் ராஜ்ஜியத்தில் பிரதமராக வீற்றிருக்கும் மன்மோகன் சிங், அவருக்கு ஏற்ற ஜனாதிபதியாகப் போகும் பிரணாப் முகர்ஜி, இவர்கள் இருவரையும் வழிநடத்தும் 'போபர்ஸ்' புகழ் சோனியா என, மொத்த அரசுமே ஊழல்மயமாகக் காட்சி அளிக்கிறது. இவர்கள் ஊழலுக்கு எதிரான ஜன லோக்பால் சட்டத்தைக் கொண்டு வருவார்கள் என்று இன்னமும் ஹசாரே குழுவினர் எண்ணிக் கொண்டிருப்பது எந்த அடிப்படையில் என்பது தான் புரியவில்லை.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 4 ம் தேதி டில்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த பாபா ராம்தேவின் உண்ணாவிரதத்துக்கு இந்த அரசு காட்டிய 'மரியாதை' தான் நினைவில் வருகிறது. அதை மனதில் கொண்டு ஹசாரே குழு செயல்படுவது நல்லது.

-----------------------------------

விஜயபாரதம் (20.07.2012)

காண்க: தமிழ் ஹிந்து
.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக