புதன், டிசம்பர் 22, 2010

அருண் ஷோரியின் உபதேசமும் கருணாநிதியின் உபன்யாசமும்


சென்னையில், பல்கிவாலா அமைப்பு மற்றும் சென்னை தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பின் சார்பில், ‘ஊழலின் உண்மையான தாக்கம்' என்ற தலைப்பில் டிச. 17 ல் கருத்தரங்கம் நடந்தது. இதில் கலந்துகொண்ட முன்னாள் மத்திய அமைச்சரும் பத்திரிகையாளருமான அருண் ஷோரி, ''2001 முதல் அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்து விசாரிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை வரவேற்கிறேன். அப்போதுதான், தே.ஜ.கூட்டணி ஆட்சியில் கடைபிடிக்கப்பட்ட 'முதலில் வருவோருக்கு முன்னுரிமை' என்ற கோட்பாட்டையும் ஆ.ராசா கடைபிடிக்கவில்லை என்பது தெரியவரும். இந்த வழக்கில் எப்போது சி.பி.ஐ விசாரணைக்கு அழைத்தாலும் ஆஜராகி உண்மைகளை கூற நான் தயாராக இருக்கிறேன்'' என்றார்.

பிறகு ஊடகங்களின் தற்போதைய போக்கு குறித்து கவலை தெரிவித்த அவர் மேலும் கூறியது:

ஊழல் தொடர்பான செய்திகளை வெளியிடும்போது, ஊடகங்கள் மிகவும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். குறிப்பாக அரசியல்வாதிகள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொண்டு அதனை செய்தியாக்கக் கூடாது. அவ்வாறு செய்வது, ஊழலில் தொடர்புடைய அரசியல்வாதிகள் தப்பிக்க வழி ஏற்படுத்திவிடும். பத்திரிகைகள், அரசியல்வாதிகளின் பேச்சை அப்படியே எழுதாமல், அதில் உள்ள உண்மையை மட்டும் எழுத வேண்டும்.

ஊழல் என்பது புற்றுநோய் போல நாட்டை அரிக்கிறது. ஊழல் செய்தவர்களை பொதுவாழ்வில் இருந்து நீக்குவதுடன், சிறைத் தண்டனை வழங்க வேண்டும். நம் நாட்டில் ஒரு ஊழலை பற்றி விசாரிக்கும் போதே, அதை விட பெரிய ஊழல் பேச்சு ஏற்பட்டால், பழையதை மக்கள் மறந்து விடும் நிலை உள்ளது. சி.பி.ஐ., அமைப்பு, யாருக்கும் அடிபணியாமல் தனித்திறன் வாய்ந்ததாக இருக்க வேண்டும். ஊழல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களின் வழக்கை காலதாமதம் ஏற்படுத்தாமல், விரைந்து முடிக்க வேண்டும்.

தனிநபராக ராசா ஒருவரால் இவ்வளவு பெரிய தொகையை ஊழல் செய்திருக்க முடியாது. அவருக்கு பின்னணியில் இருந்தவர்கள் குறித்து, ராசா அப்ரூவராக மாறி எல்லா உண்மைகளையும் தெரிவிக்க வேண்டும், என்றார்.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடையவர்கள், தங்கள் மீதான அஸ்திரத்தை திசைதிருப்பிவிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், முன்னாள் மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் என்ற முறையில், அருண் ஷோரி துணிவுடன் விசாரணையை எதிர்கொள்வதாக அறிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது. அதே சமயம், 2001 முதல் விசாரணை என்பதைப் பயன்படுத்தி தற்போதைய ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான விசாரணையை இழுத்தடிக்கக் கூடாது என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.

ஆ.ராசா தனது துறை அலுவலகத்தில் கிடப்பில் இருந்த 300 க்கு மேற்பட்ட விண்ணப்பங்களை நிராகரித்து, அவசர அவசரமாக தகுதியற்ற விண்ணப்பங்களை உள்நுழைத்தது ஏன் என்ற கேள்வியையும் அவர் கேட்டிருக்கிறார். உண்மையில் இந்தக் கேள்வியை சி.பி.ஐ ராசாவிடம் கேட்க வேண்டும். அவர்கள் ராசாவிடம் கேட்காவிட்டால், அருண் ஷோரியே இக்கேள்வியை சி.பி.ஐ.இடம் கேட்கும் நிலையும் ஏற்படலாம்.

இந்நிலையில், அருண் ஷோரியின் கருத்துக்களை தமிழக முதல்வர் கருணாநிதி அவருக்கே உரித்த சுயநலத்துடன் தனது ஊடக உபன்யாசத்திற்கு வழக்கம் போலப் பயன்படுத்தி இருக்கிறார்.

கடந்த இரு நாட்களாக பத்திரிகையாளர் சந்திப்புகளில் அருண் ஷோரியின் கருத்துக்களையே கருணாநிதி மேற்கோள் காட்டிவருகிறார். அதிலும் தனக்குத் தேவையான பகுதிகளை மட்டும் வெட்டி எடுத்து பயன்படுத்தி வருகிறார்.

''ஸ்பெக்ட்ரம் ஊழலில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ. 1.76 லட்சம் கோடி இருக்க வாய்ப்பில்லை; அநேகமாக ரூ. 40 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்பது எனது கருத்து'' என்ற ஷோரியின் கருத்தை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்ட கருணாநிதி, 'அருண் ஷோரியே கூறிவிட்டார்' என்று தனது பாதுகாப்பிற்கு அவரை கவசமாகப் பயன்படுத்த முயற்சிக்கிறார்.

இதுவரை, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எந்த ஊழலும் நடக்கவில்லை என்று கூறிவந்த கருணாநிதி, தற்போது, ரூ. 40 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதை ஒப்புக் கொள்கிறாரா? இந்தக் கேள்விக்கான பதிலை மட்டும் அவர் நாசூக்காக தவிர்க்கிறார்.

அடுத்ததாக ''ராசா மட்டும் இவ்வளவு பெரிய ஊழலில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை'' என்ற ஷோரியின் கருத்தை எடுத்துக்கொண்டு, ராசாவை ஷோரி ஆதரிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தவும் கருணாநிதி முயன்றிருக்கிறார். அதே சமயம் 'ராசா ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க வேண்டும்' என்ற ஷோரியின் வேண்டுகோள் குறித்து மஞ்சள்துண்டு மகான் கண்டுகொள்ளவே இல்லை.

ஊடகங்கள் செய்திகளை வெளியிடும்போது, செய்தியின் ஆழத்தைப் புரிந்துகொண்டு வெளியிட வேண்டும். அரசியல்வாதிகள் சொல்வதை அப்படியே வெளியிடாமல் அதனை ஆராய்ந்து வெளியிட வேண்டும் என்று ஊடக வாதிகளுக்கு அறிவுரை கூறிய அருண் ஷோரி, 'அரசியல்வாதிகள் பிறர் கூறுவதன் முழு சாராம்சத்தையும் புரிந்துகொண்டு பேச வேண்டும்' என்றும் கூறியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

ராசாவின் பின்னணியில் இருந்து ஊழல் செய்தவர்களில் சோனியா, கருணாநிதி ஆகியோருக்கு முக்கிய இடம் இருப்பதாக நாட்டு மக்கள் சந்தேகிக்கிறார்கள். எனவேதான், பலிகடா ஆகாமல் 'எல்லா உண்மைகளையும்' கூறுமாறு ராசாவுக்கு ஷோரி அறிவுரை கூறியிருக்கிறார். அதனையே, மூக்கறுந்த முதல்வர் தனக்கு சாட்சியாகப் பயன்படுத்த விழைவது, அவர் எப்படிப்பட்ட சிக்கலில் தவிக்கிறார் என்பதையே வெளிப்படுத்துகிறது.

.

1 கருத்து:

  1. எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.

    அரசிற்கு இழப்பு என்று கணக்காளர்களின் வானளாவிய தொகையையே ஊழல் தொகை என்று மக்கள் நம்பும் படிச் சொன்ன பத்திரிக்கை,எதிர்க்கட்சி அரசியல் இவையெல்லாம் நாட்டிற்குச் சேவையா செய்கின்றன? உண்மை காண்பதறிவு,மற்றது வியாபாரம்,விபச்சாரம்.

    பதிலளிநீக்கு