சனி, ஆகஸ்ட் 23, 2014

உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஒலித்த குரல்




தில்லி செங்கோட்டையிலிருந்து நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இம்முறை பல சம்பிரதாயங்களுக்கு விடைகொடுத்திருக்கிறார். அவருடைய ஒவ்வொரு சொல்லும் முன்னேற்பாடான தயாரிப்பின்றி, உள்ளத்தின் ஆழத்திலிருது வருபவையாக இருந்தன. மிகவும் உணர்ச்சிகரமான முறையில் அமைந்த இந்த உரை, நாட்டின் முன்னேற்றத்தில் மக்களுக்கு உள்ள பங்களிப்பையும் நினைவுபடுத்தியது.

பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக, குண்டு துளைக்காத மேடையிலிருந்து உரையாற்றுவதையே இதுவரை இருந்த பிரதமர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். அந்தப் பாதுகாப்பு ஏற்பாட்டிற்கு இம்முறை விடைகொடுத்திருக்கிறார் மோடி. இதன்மூலமாக, தனது துணிவை மட்டும் பிரதமர் வெளிப்படுத்தவில்லை, நாட்டு மக்களிடமிருத்நு தன்னை அந்நியப்படுத்தும் எதையுயும் தான் விரும்பவில்லை என்பதையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

தனது உரையின் துவக்கத்திலேயே,  “நான் இங்கு பிரதம அமைச்சராக முன்னிற்கவில்லை; நாட்டு மக்களின் பிரதம சேவகனாகவே முன்னிற்கிறேன்” என்று தான் மோடி குறிப்பிட்டார். பதவி என்ற் உயர்பீடத்திலிருந்து பேசாமல், பொறுப்பு என்ற களத்திலிருந்து பேசுவதாக அமைந்திருந்த்து மோடியின் உரை. அதனால் தான், அவரது உரையைக் கேட்ட அனைவரும் அதன் தாக்கத்தை உணர்ந்தனர்.

எப்போதும் பிரதமரின் சுதந்திரதின உரையில் சலுகை அறிவிப்புகள், வார்த்தை ஜாலங்கள், அரசியல் சவடால்கள், கவர்ச்சிகரமான திட்டங்கள் இடம் பெற்றிருக்கும். அந்த வழக்கத்தையும் மோடி மாற்றி இருக்கிறார். அவரது உரை முழுவதும் நாட்டின் முன்னேற்றத்தில் மக்களை ஈடுபடுத்தத் தூண்டுவதாகவே அமைந்திருந்தது.

நாட்டின் பெருமை, தொலைநோக்குப்பார்வையுடன் இந்தியா செயல்படுவதன் சிறப்பு, மகளிர் பாதுகாப்பு, வறுமை ஒழிப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றைப் பற்றியே மோடியின் பேச்சு இருந்தது. எழுதப்பட்ட உரையை வார்த்தைக்கு வார்த்தை இயந்திரகதியில் படிக்காமல், மனதில் இருந்து பேசிய பிரதமரின் சொற்கள் ஒவ்வொன்றும் பல மடங்கு சக்தியுடன் இருந்தன. கடநத பத்தாண்டுகளில் முந்தைய பிரதமர் மன்மோகன் சிங்கின் உயிரற்ற சுதந்திர தின உரையைக் கேட்டு மரத்துப் போயிருந்த செவிகளில் தேன் ஊற்றுவது போலிருந்த்து பிரதமர் மோடியின் செங்கோட்டை முழக்கம்.

பெருந்தன்மையான அணுகுமுறை:

தேர்தல் காலத்தில் மிகக் கடுமையாக எதிர்க்கட்சிகளை விமர்சித்தவர் மோடி. ஆனால், தேர்தல் முடிவடைந்து முடிவுகள் வெளிவரும் முன்னமே, தேர்தல்கால எதிர்ப்பை இனியும் தொடர வேண்டியதில்லை என்றும் அவர் சொன்னார். பிரதமராகப் பொறுப்பேற்றபோதும், எதிர்க்கட்சிகளுடன் இணைந்தே பணிபுரிவேன் என்று அவர் குறிப்பிட்டார். தனது சுதந்திர தின உரையிலும் இதே கருத்தை பிரதமர் வெளிப்படுத்தினார்.

தனது கட்சிக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால் எதிர்க்கட்சிகளை உதாசீனம் செய்ய மாட்டேன் என்பதை அவர் தனது உரையில் தெரிவித்தார். நடந்துமுடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும் கூட பெரும்பான்மை பலத்தை நம்பியிராமல், ஒருமித்த கருத்தின் அடிப்படையில் செயல்பட முயன்ற அரசின் விழைவை அவர் சுட்டிக்காட்டினார்.  “எதிர்க்கட்சிகள், அவற்றைச் சார்ந்த எம்.பி.க்கள் ஆகியோரின் ஒத்துழைப்பால்தான் நம்மால் முக்கிய சட்டங்களை நிறைவேற்றி, வெற்றிகரமாக முதல் பட்ஜெட் கூட்டத்தொடரை நிறைவு செய்ய முடிந்தது” என்று அவர் நினைவுபடுத்தினார்.

ஜனநாயகத்தில் எதிர்க்கட்சியினரின் ஒத்துழைப்பு இன்றி நாட்டின் பிரச்னைகளை எதிர்கொள்ள முடியாது. அதேசமயம், காங்கிரஸ் கட்சிபோல தோல்வியிலிருது மீள முடியாமல் கறுவிக் கொண்டிருக்கவும் கூடாது. இந்திய அரசியலில் மிக நீண்டகாலம் ஆளும்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி, இன்னமும் மக்கள அளித்த படுதோல்வியிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறது. அதனால், மோடியின் நல்லெண்ணச் செயல்பாடுகளை பாராட்டவும் முடியவில்லை. இப்போதும்கூட பிரதமரின் சுதந்திர தின உரை எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று கூறியிருக்கிறார் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணிஷ் திவாரி. காங்கிரஸ் பாடம் கற்றதாகத் தெரியவில்லை.

மாறாக, அதீத வெற்றிபெற்றபோதும், தலைக்கணம் ஏற்படாமல் பெருந்தனமையுடன் பேசி இருக்கிறார் மோடி.  “இந்த நாட்டின் வளர்ச்சிக்காக எனக்கு முன்பு பிரதமராக இருந்தவர்களும் தலைவர்களும் பல நன்மைகளைச் செய்துள்ளனர். அவர்களை இந்த நாளில் நினைவுகூர்ந்து,  நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு மேலும் கொண்டு சென்று புதிய இந்தியாவைப் படைப்போம்” என்று அவர் பேசியதை நாட்டு மக்கள் கவனித்துக் கொண்டிருந்தனர். மணிஷ் திவாரி போன்ற காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து மோடியை அரசியல்ரீதியாக எதிர்ப்பதாக எண்ணிக்கொண்டு தவறிழைத்தால், அதன் பலனை மேலும் அறுவடை செய்வார்கள்.

திட்டக்குழு கலைப்பு:

மோடியின் சுதந்திர தின் உரையில் மிக முக்கியமான அம்சம், மத்திய திட்டக் குழு கலைக்கப்படும் என்பது. நாடின் முதல் பிரதமர் நேருவால் 1950-ல் உருவாக்கப்பட்ட அமைப்பான மத்திய திட்டக்குழு, மத்திய அரசிடமிருந்து மாநில அரசுகளுக்கு திட்ட நிதி ஒதுக்கீடு செய்வதற்கான இடைநிலை அமைப்பாக செயல்படுகிறது. ஆனால், மத்திய ஆளும்கட்சிக்கு எதிரான கட்சிகள் ஆளும் மாநிலங்களை வழிக்குக் கொண்டுவரப் பயன்படும் அரசியல் ஆயுதமாக திட்டக்குழு மாறிவிட்டது.

தவிர, மாறிவரும் உலகச் சூழலில், 60 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட நிர்வாக அமைப்பில் மாற்றம் செய்வதும் தேவையாகி உள்ளது. மோடி பிரதமரான உடனேயே மத்திய திட்டக்குழு கலைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட்து. ஆயினும், தனது ஆட்சிக்காலத்தில் இரண்டு மாத்ங்களை திட்டக்குழுவின் பணிகளை ஆய்வு செய்யப் பயன்படுத்திக்கொண்டு, மிகவும் சிந்தித்த பின்னரே, அதனைக் கலைப்பது என்று முடிவெடுத்திருக்கிறார் மோடி.

அவர தனது உரையில்,  “1950-களில் மத்தியத் திட்டக் குழு உருவாக்கப்பட்டது. அப்போது அத்தகைய அமைப்புக்கு ஓர் அவசியம் இருந்தது. அதன்பிறகு, நம் நாட்டிலும், உலக அளவிலும் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. எனவே, இனி நமக்கு மத்தியத் திட்டக் குழுவே தேவையில்லை. அதற்குப் பதிலாக புதிய அமைப்பு உருவாக்கப்படும்.

புதிய சிந்தனை, யோசனை, நம்பிக்கை ஆகியவற்றை உறுதிப்படுத்தும் அமைப்பாக அது திகழும். பொருளாதாரச் செயல்பாட்டை மட்டும் வைத்துக் கொண்டு ஓர்  அரசின் வளர்ச்சியும், நாடும் கிடையாது. கூட்டாட்சித் தத்துவத்தை வலியுறுத்தும் நம் நாட்டை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்வதில் மாநில அரசுகளின் பங்களிப்பு மிகவும் அவசியம். மத்திய, மாநில அரசுகள் குழுவாகச் செயல்பட வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
எதிர்பார்த்தது போலவே, காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் பிரதமரின் இந்த முடிவை விமர்சித்துள்ளன. ஆனால், அக்கட்சிகள் வசதியாக ஒரு விஷயத்தை மறந்துவிட்டன. மத்திய திட்டக்குழு அரசியல் சாசன அமைப்பு அல்ல; நாடாளுமன்ற அதிகாரத்தில் உருவாக்கப்பட்ட அமைப்பு தான் அது. எனவே அதை பிரதமர் மோடி நீக்க முடிவெடுப்பதில் எந்த தவறையும் அரசியல் சாசன ரீதியாகக் காண முடியாது.
நாட்டு மக்களின் ஏழ்மையைத் தீர்மானிப்பதில் மத்திய திட்டக்குழு துணைத் தலைவராக இருந்த மாண்டேக் சிங் அலுவாலியா எவ்வாறு சொதப்பினார் என்பதை நாடு அறியும்.

2012, மார்ச் 19ஆம் தேதியன்று மத்திய அரசின் திட்டக் குழு புதிய வறுமைக்கோடு குறித்த மதிப்பீட்டை வெளியிட்ட்து. உணவிற்கான உரிமை குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம், வறுமைக்கோட்டை வரையறுக்குமாறு மத்திய அரசைக் கேட்டிருந்தது. அப்போது, மாதமொன்றுக்கு நகர்ப்புறங்களில் ரூ. 4,824 -க்கும்,  கிராமப்புறங்களில் ரூ. 3,905-க்கும் குறைவான வருமானம் கொண்ட 5 பேர் அடங்கிய குடும்பங்கள் அனைத்தும் வறுமைக்கோட்டுக்குள் வருவபவை என்று திட்டக்குழு வரையறை செய்து பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது. அதாவது, ஒரு மனிதன் நாளொன்றுக்கு நகரத்தில் ரூ. 32- க்கும், கிராமப்புறத்தில் ரூ. 26- க்கும் அதிகமாக சம்பாதித்தால், அவன் வறுமைக்கோட்டுக்கு மேலானவன் என்றது,  திட்டக்குழு.

குளிரூட்டப்பட்ட  அதிகாரமைய அறைகளிலிருந்து அனுப்பப்படும் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, குளிரூட்டப்பட்ட அறைகளில் இயங்கும் திட்டக்குழு வேறு எவ்வாறு ஏழ்மையை மதிப்பிட முடியும்? சிவனை உணர வேண்டுமானால் சிவனாகவே ஆக வேண்டும் என்ற சமஸ்கிருதப் பழமொழி உண்டு. அதுபோல, ஏழ்மையை உணர வேண்டுமாயின் அவன் ஏழையாக இருந்தாலே சாத்தியம். அதனால் தான் ஏழை தேநீர்க் கடைக்காரரின் மகனான மோடி ஏழ்மையை ஒழிக்க, முதலில் திட்டக்குழுவை கலைக்க வேண்டும் என்று கண்டுபிடித்திருக்கிறார்.


மகளிர் பாதுகாப்பு:

நாட்டில் ஆங்காங்கே நிகழும் பாலியல் கொடுமைகள் குறித்து தனது சுதந்திர தின உரையில் மிக்வும் உளப்ப்பூர்வமாக கவலை தெரிவித்த மோடி, இதற்கு சட்டம் தீர்வாக இருக்க முடியாது என்பதையிம் சுட்டிக்காட்டினார். ஆன்பிள்ளைகளைக் கண்டிப்புடன் பெற்றோர் வளர்ப்பதே இந்தப் பிரச்னைக்குத் தீர்வு என்று அவர் தெரிவித்துள்ள கருத்து முற்றிலும் உண்மை.

குழந்தை வள்ர்ப்பில் சரியான அணுகுமுறை பின்பற்றப்பட்டால் பாலியல் வன்கொடுமைகள் மட்டுமல்ல, மாவோயிஸ்டுகளும் பயங்கரவாதிகளும் கூட உருவாக முடியாது என்ற பிரதமரின் கருத்து மிக்வும் தீர்க்கமானது. அவரது உரையின் ஒருபகுதி இது....

"நம் நாட்டில் அதிகரித்து வரும் பாலின விகிதத்தை உருவாக்கியது யார்? கடவுளா? கிடையாது. கருவிலேயே பெண் சிசுவைக் கொல்ல எந்தப் பெற்றோரும் துணிய வேண்டாம். பெற்றோரின் அறியாமை அல்லது அலட்சியத்தைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்க மருத்துவர்கள் முயல வேண்டாம் என வேண்டுகிறேன். ஐந்து மகன்கள் தன் குடும்பத்துக்கு செய்ய வேண்டிய நல்லவற்றை ஒரேயொரு மகள் முழுமையாகச் செய்து முடிப்பாள். அதை நான் கண் கூடாகப் பல குடும்பங்களில் பார்த்துள்ளேன்.
நம் நாட்டில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களைப் பற்றியும், அந்தப் பாலியல் குற்றங்களை சிலர் நியாயப்படுத்திப் பேசுவதைக் கேட்கும் போதும் நாம் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

ஒவ்வொரு வீட்டிலும் பெண்ணைப் பார்த்து  ‘எங்கு போகிறாய்? எங்கு வருகிறாய்?’ என்று பெற்றோர் கேள்வி எழுப்புகிறீர்கள். அதே கேள்விகளை ஆண் பிள்ளையைப் பார்த்து நீங்கள் ஏன் கேட்கத் தவறுகிறீர்கள்? பாலியல் வன்முறையில் ஈடுபடுபவரும், வன்முறைப் பாதைக்குச் செல்லும் இளைஞனும் வேறு ஒருவருக்கு மகன்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவருக்கும் பெற்றோர் உண்டு.
அந்த வகையில், மகன்களை பெற்றோர் தட்டிக் கேட்டுக் கட்டுப்பாடாக வளர்க்கத் தொடங்கினால், நம் நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றவாளிகளோ, மாவோயிஸ்டுகளோ, பயங்கரவாதிகளோ உருவாகாமல் நிச்சயம் தடுக்க முடியும். இந்த விஷயத்தில் சட்டம் தனது கடமையைச் செய்தாலும், பெற்றோரும் அவர்களுக்கு உள்ள சமூகப் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்'  என்றார் நரேந்திர மோடி.

 

அதிகாரவர்க்கத்திற்கு கண்டிப்பு:

நாட்டின் ஆட்சியாளராக வரும் எவரும் அரசு ஊழியர்களைப் பகைத்துக்கொள்ள முற்படுவதில்லை. அரசு நிர்வாகத்தின் அச்சாணிகள் அவர்களே என்பதால், முடிந்த அளவிற்கு அரசு சலுகைகள் அவர்களுக்கு வாரி வழங்கப்படும். ஆனாலும், எந்த ஒரு அரசு ஊழியரும் சிரத்தையுடன், மக்கள் வருஇப்பனத்தில் ஊதியம் பெறுகிறோம் என்ற நன்றி உணர்வுடன் பணிபுரிவதில்லை. இந்த நிலைக்கு கடிவாளம் போட முயன்றிருக்கிறார் மோடி. அவரது உரையின் சிறு பகுதி இது...

 “தில்லிக்கு வெளியே, குஜராத்தில் இருந்து நான் வந்தவன். ஆனாலும், இங்கு ஆட்சிக்கு வந்த இரண்டு மாதங்களில் இங்குள்ள அரசுத் துறைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை அனுமானித்துள்ளேன். ஒவ்வொரு துறையும் ஒருங்கிணைப்பு இல்லாமல் போட்டி மனப்பான்மையுடன் செயல்படுகின்றன. ஒவ்வொரு துறைக்குள்ளும் ஒரு டஜன் துறைகள் செயல்படுவது போல உணர்கிறேன். தங்கள் சொந்த விருப்பு, வெறுப்புக்காக அரசுப் பணியை அவர்கள் பயன்படுத்துகின்றனர். இந்த மோதல்கள் உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளன. ஓர் அரசு ஊழியர் சொந்த ஆதாயத்துக்காக கோடிக் கணக்கான ஏழைகளுக்குக் கிடைக்கும் நன்மைக்குத் தடையை ஏற்படுத்தக் கூடாது” என்றார் பிரதமர் மோடி.

தவிர, தீவிரவாதத்தால் நாடு அடையும் பாதிப்பைத் தடுக்க, வன்முறை வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.  ‘சாமபேத்தான தண்டம்’ என்ற அணுகுமுறையில் முதல் படியை பிரதமர் இப்போது பிரயோகித்திருக்கிறார்.

“நம் நாட்டின் வளர்ச்சிக்கு வகுப்புவாதமும், சாதியவாதமும் மிகுந்த தடையாக உள்ளன. இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இதை நாம் சகித்துக் கொள்ள வேண்டும்? இதனால் யாருக்குப் பலன் கிடைக்கிறது? நாம் அடுத்த 10 ஆண்டுகளுக்காவது வன்முறையைப் புறக்கணித்து விட்டு அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றைப் பேணி வாழ வேண்டும். வன்முறையை விட்டு விட்டு, சகோதரத்துவத்துடன் நாம் பழக முனைந்தால், நம் நாடு நிச்சயம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும்” என்ர பிரதமர் மோடியின் பேச்சில் அவரது பக்குவமான செயல்பாடு தெரிகிறது.

இந்த சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்த ஏழைகளுக்கு வங்கிக் கணக்கு துவங்கும் ‘ஜன்தன்’ திட்டம், இந்தியாவை உற்பத்தி கேந்திரமாக்க்கும் ‘புதிய இந்தியா’ திட்டம், சுகாதாரத்தை மேம்படுத்தும் ‘தூய்மை இந்தியா’ திட்டம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் உருவாக்க வேண்டிய ‘மாதிரி கிராமம்’ திட்டம் ஆகியவை குறிப்பிடத் தக்கவை. இவை எதிலும் கவர்ச்சி அரசியல் இல்ல; மாறாக தொலைநோக்க்குச் சிந்தனையே கோலோச்சுகிறது.

மொத்தத்தில் பிரதமர் மோடியின் 2014, ஆகஸ்ட் 15 சுதந்திர தின உரை, பாஜக அரசின் தொலைநோக்குத் திட்ட ஆவணமாகவே தென்படுகிறது. நாடு சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகள் கழிந்த நிலையிலும்கூட கிராமப்புறங்களில் கழிவறை அமைப்பது குறித்து செங்கோட்டையில் பிரதமர் பேச வேண்டிய நிலைமை தொடர்வது நமது துர்பாக்கியம். ஆனால், வரும்காலத்தில் இத்தகைய நிலைமை தொடராது என்பதற்கு கட்டியமாகவே மோடியின் உரையைக் கருத முடிகிறது.


------------
விஜயபாரதம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக