வெள்ளி, ஏப்ரல் 27, 2012

மீண்டும் சரித்திரம் திரும்புகிறதா?பெரும்பான்மையினரின் கருத்து ஏற்கப்படுவதே ஜனநாயகம் என்று கூறப்படுவதுண்டு. 49 பேர் ஆதரித்தாலும், அதை 51 பேர் எதிர்த்தால் எதிர்ப்பாளருக்கே வெற்றி கிடைக்கும் என்பது தான் வாக்களிக்கும் ஜனநாயகத்தின் அடிப்படை. இதெல்லாம், சிறுபான்மை மயக்கத்தில் ஆழ்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பொருட்டே இல்லை என்பதைத் தான் மத்திய அரசில் அவ்வப்போது மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் தெரியப்படுத்தி வந்திருக்கிறது சோனியா தலைமையிலான காங்கிரஸ். அவரது சிஷ்யரான ஓமன் சாண்டி ஒருபடி மேலே சென்றுவிட்டார். தனது தலைமையிலான 22 பேர் கொண்ட கேரள அமைச்சரவையில் சிறுபான்மையினரின் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்தி, தங்கள் கட்சி யாருக்கு சாதகமானது என்பதை முரசறைந்து அறிவித்திருக்கிறார் அவர்.

கேரளாவில் மொத்தமுள்ள 140 சட்டசபை உறுப்பினர்களில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 72 உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்த்தரப்பில் இடது ஜனநாயக முன்னணிக்கு 67 உறுப்பினர்கள் உள்ளனர் (மா.கம்யூ எம்.எல்.ஏ ஒருவர் பதவி விலகியதால் ஒரு இடம் காலியாக உள்ளது). ஐ.ஜ.முன்னணியில் காங்கிரஸ் கட்சியின் பலம் 38; முஸ்லிம் லீக் கட்சியின் பலம் 20. கூட்டணியில் உள்ள கிறிஸ்தவர்களின் கட்சிகளாக அறியப்படும் கேரள காங்கிரஸ் கட்சிகளின் இரு பிரிவுகளுக்கும் எம்.எல்.ஏக்கள் உண்டு.

அண்மையில் நடந்த பிரவம் இடைத்தேர்தலில் கேரள காங்கிரஸ் (ஜேக்கப்) சார்பில் வென்ற அனுப் ஜேக்கப் அமைச்சரானபோது, சாண்டியின் அமைச்சரவையில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை (அவரையும் சேர்த்து) 6 ஆக உயர்ந்தது. அவருடன் மஞ்சாலம் குழி அலி பதவி ஏற்றபோது, அமைச்சரவையில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. மொத்தத்தில் 22 பேர் கொண்ட சாண்டி அமைச்சரவையில் இப்போது சிறுபான்மையினரின் எண்ணிக்கை 12!

கேரளாவின் மக்கள்தொகை விகிதாசார அடிப்படையில் ஹிந்துக்களின் எண்ணிக்கை 56.2 சதவீதம்; இஸ்லாமியர்கள்- 24.7 சதவீதம்; கிறிஸ்தவர்கள்- 19 சதவீதம். காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் தவிர்த்த நாட்டின் பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டால், கேரளாவில் தான் சிறுபான்மையினரின் எண்ணிக்கை அதிகம். கேரள அரசியலில் மிகவும் செல்வாக்கு செலுத்துபவர்களாக சிறுபான்மையினர் மாறி உள்ளனர். அவர்களது ஒட்டுமொத்த அளவான 44 சதவீதம் வாக்குகளைப் பெறவே காங்கிரஸ் கூட்டணியும் கம்யூனிஸ்ட் கூட்டணியும் போட்டியிடுகின்றன. கேரளாவில் பாஜகவுக்கு கணிசமான செல்வாக்கு இருந்தும் தேர்தலில் வெற்றி பெற இயலாமல் போவதற்கு இந்த மக்கள்தொகை மாறுபாடே காரணம்.

இந்நிலையில் தான், ஏற்கனவே 4 அமைச்சர்களைக் கொண்டிருந்த முஸ்லிம் லீக், அமைச்சரவையில் தனக்கு கூடுதலாக ஓரிடத்தை அளிக்குமாறு நிர்பந்தம் செய்தது; அல்லது ராஜ்யசபைக்கு தங்கள் கட்சியைச் சேர்ந்தவரை அனுப்ப வேண்டும் என்று அக்கட்சி வலியுறுத்தியது. இது தொடர்பாக கேரளா மாநில காங்கிரஸ் கட்சிக்குள் பலத்த விவாதம் நடந்து வந்தது. நூலிழையில் ஊசலாடிக் கொண்டிருக்கும் அரசைக் காக்க முஸ்லிம் லீக் கோரிக்கைக்கு அடிபணிய வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது. பெரும்பாலோர் லீகின் நிர்பந்தத்தை ஏற்கக் கூடாது என்றே கூறினர். ஆயினும், கட்சியினரின் கருத்துக்களை மீறி, இப்போது லீகின் சார்பில் ஐந்தாவதாக ஒருவர் அமைச்சர் ஆகி இருக்கிறார். இது கேரளாவில் பலத்த அதிர்ச்சியையும் சர்ச்சைகளையும் உருவாக்கி இருக்கிறது.

கேரளாவில் சிறுபான்மையினரின் வாக்குகளை நம்பியே காங்கிரஸ் கட்சி இயங்கி வந்துள்ளது. கருணாகரன் இருந்தவரை, அவரால் கட்சிக்குள் சிறுபான்மையினர் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க முடிந்தது. சோனியா வரவுக்குப் பின் அவரது நிலைமையே மோசமாகிவிட்டது. இப்போது அவரும் இல்லை. இன்றைய காங்கிரஸ் கட்சி முன்னாள் முதல்வர் ஏ.கே. அந்தோணி (தற்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர்), முதல்வர் ஓமன் சாண்டி ஆகிய தலைவர்களின் பின்புலத்தில் தான் தாக்குப் பிடிக்கிறது.

அதனால் தான், அரசின் தலைமைக் கொறடாவாக, கூட்டணிக் கட்சியான கேரள காங்கிரஸ் (மானி) பிரிவைச் சேர்ந்த பி.சி.ஜார்ஜ் தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு அமைச்சருக்கு இணையான அந்தஸ்து உண்டு. இக்கட்சி கிறிஸ்தவர்களின் கட்சி என்றே தன்னை அறிவித்துக் கொள்ளும் கட்சி. அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய பி.சி.ஜார்ஜ், ''கேரளாவில் ஹிந்துக்கள் பெரும்பான்மையினர் என்பது வெறும் மாயை'' என்று கூறி இருக்கிறார். உறைக்க வேண்டியவர்களுக்கு உறைத்தால் சரி.

சாண்டி அமைச்சரவையில் இதே கட்சியின் கே.கே.மானி, பி.ஜே.ஜோசப் ஆகியோரும் அமைச்சர்களாக உள்ளனர். இவர்கள் அல்லாது ஆர்.எஸ்.பி (பி) பிரிவின் ஷிபு பேபி ஜான், காங்கிரஸ் கட்சியின் கே.ஜோசப், கேரள காங்கிரஸ் (ஜேக்கப்) பிரிவின் அனுப் ஜேக்கப் ஆகிய கிறிஸ்தவர்கள் அமைச்சர்களாக உள்ளனர். முதலமைச்சர் சாண்டியுடன் சேர்த்தால் அமைச்சரவையில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 6!

வெறும் 19 சதவீதம் உள்ள கிறிஸ்தவர்களுக்கே 6 அமைச்சர்கள் என்றால், 24.7 சதவீதம் உள்ள இஸ்லாமியர்களுக்கு 5 அமைச்சர்கள் தானா? என்று முஸ்லிம் லீக் கேட்டது. அதிலுள்ள நியாயத்தைப் ‘புரிந்துகொண்டு’ தலைவணங்கி இருக்கிறது காங்கிரஸ். இப்போது முஸ்லிம் லீக் சார்பில், பி.கே.குன்னாலி குட்டி, பி.கே.அப்து ரப், வி.கே.இப்ராஹீம் குஞ்சு, எம்.கே. முனீர், மஞ்சாலம் குழி அலி ஆகியோர் (மொத்தம் 5) அமைச்சர்கள் ஆகி உள்ளனர். காங்கிரஸ் சார்பில் அமைச்சராக உள்ள இஸ்லாமியரான ஆர்யாதன் முகமதுவுடன் சேர்த்தால் சாண்டி அமைச்சரவையில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை 6 ஆகிறது!

இதைவிட முக்கியமான விஷயம், தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம், கல்வி, பொதுப்பணி, உள்ளாட்சி நிர்வாகம் உள்ளிட்ட முக்கியமான துறைகள் முஸ்லிம் லீக் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் மீதமுள்ள 10 பேரும் ஹிந்துக்கள். மொத்தத்தில், 56.2 சதவீதம் உள்ள ஹிந்துக்கள் தானே கிள்ளுக்கீரை? இந்த பாரபட்சத்தை எதிர்த்து பாஜக திருவனந்தபுரத்தில் அழைப்பு விடுத்த கடையடைப்புக்கு பெருவாரியான ஆதரவு இருந்தது.

காங்கிரஸ் கட்சியின் இந்த மண்டியிடுதல் கண்டு முன்னாள் முதல்வர் அச்சுவும் கூட வருத்தம் தெரிவித்திருக்கிறார். ''காங்கிரஸ் கட்சி தனது வலிமையை கேரளத்தில் இழந்து வருவதையே இது காட்டுகிறது'' என்று அவர் விமர்சித்திருக்கிறார்.

காங்கிரஸ் கட்சிக்குள்ளும் இந்த மண்டியிடுதல் உட்பூசலைக் கிளப்பி இருக்கிறது. முஸ்லிம் லீகுக்கு ஐந்தாவது அமைச்சர் பதவி அளிக்க எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியின் இஸ்லாமிய அமைச்சர் ஆர்யாதான் முகமது பதவி ஏற்பு விழாவைப் புறக்கணித்தார். ''காங்கிரஸ் முஸ்லிம் லீகிடம் மண்டியிட்டுவிட்டது தவறு'' என்கிறார் இவர். கேரள மாநில முன்னால காங்கிரஸ் தலைவர் முரளிதரனும் தலைமையை கண்டித்திருக்கிறார். ஆனால், சாண்டியோ, எல்லாம் தில்லி தலைமையிடம் கேட்டுத் தான் செய்தேன் என்கிறார்.

முந்தைய அச்சுதானந்தன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசில் இத்தகைய மோசமான போக்கு இல்லை. அப்போது 3 முஸ்லிம் அமைச்சர்களும், 2 கிறிஸ்தவ அமைச்சர்களும், 15 ஹிந்து அமைச்சர்களும் இருந்தனர். மத நம்பிக்கை அற்ற கட்சி என்று கூறிக் கொண்டபோதும், சிறுபான்மையினர் அமைச்சரவையில் ஆதிக்கம் செலுத்த மார்க்சிஸ்ட்கள் விடவில்லை. அத்தகைய நிலைமை அவர்களுக்கு தேர்தல் முடிவுகளிலும் ஏற்படவில்லை.

ஆனால், இன்றைய நிலைமை மிகவும் மோசம். தேர்தல் களத்தில் வெல்பவர்களே மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கிறார்கள். மொத்தமுள்ள 56.2 சதவீத ஹிந்துக்களில் பலரும் ஜாதி, கட்சி பார்த்து வாக்குகளை சிதறடித்துவிடும் நிலையில், பலர் (குறிப்பாக மேட்டுக்குடியினர்) வாக்குச்சாவடிப் பக்கமே வராத நிலையில், சிறுபான்மையினர் திரண்டுவந்து வாக்களித்து தங்கள் சக்தியை நிரூபித்து விடுகிறார்கள். பிறகு புலம்புவதில் என்ன பயன் இருக்கிறது?

இப்போதுதான் காங்கிரஸ் கட்சியின் லட்சணம் நாயர் சேவை சங்கத்துக்கு (என்.எஸ்.எஸ்) தெரிந்திருக்கிறது. ''பெரும்பான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இந்த நாட்டைவிட்டு போய்விட வேண்டுமா?'' என்று, அமைச்சரவை மாற்றத்தால் கொந்தளித்த என்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் சுகுமாரன் நாயர் கேட்டிருக்கிறார். காலம் கடந்த பின்னர் ஞானோதயம். கேரளாவில் தற்போது நிலவும் அரசியல் நிலைமை நீடித்தால், கேரளாவில் இருந்து ஹிந்துக்கள் அகதிகளாக பிற மாநிலங்களுக்கு (காஷ்மீர் ஹிந்துக்கள் போல) படையெடுக்க வேண்டிய நிலைமை வரலாம்.

கேரள அரசியலில் அடுத்த முக்கியமான சக்தியான ஈழவர்கள் சார்ந்த ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் (எஸ்.என்.டி.பி) அமைப்பும் சாண்டியின் விபரீத முடிவை எதிர்த்திருக்கிறது. அதன் பொதுச்செயலாளர் வெள்ளப்பள்ளி நடேசன், ''ஜனநாயகம் என்ற பெயரில் கேரளாவில் ஓமன் சாண்டி தலைமையில் மதவாதிகளின் ஆட்சி நடக்கிறது. காங்கிரஸ் குறித்து வெட்கப்படுவதை தவிர வேறு வழியில்லை'' என்று மனம் புழுங்கி இருக்கிறார்.

இவ்விரு அமைப்புகளும் தான் காலம் காலமாக காங்கிரஸ் கட்சியை கேரளாவில் நிலைநிறுத்தி வந்துள்ளன. சமீபத்திய மாற்றங்களால் இந்த அமைப்புகள் அதிருப்தி அடைந்திருக்கின்றன. இந்த அதிருப்தி, நெய்யாட்டிங்கரா சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் கண்டிப்பாக எதிரொலிக்கும்.

அதைவிட முக்கியமானது, நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு, மதவாதிகளுக்கு மண்டியிடும் காங்கிரஸ் கட்சியின் போக்கை வெளிப்படுத்த இந்நிகழ்வு உதவி இருப்பதுதான். சுதந்திரத்துக்கு முன் முஸ்லிம் லீகிடம் மண்டியிட்ட காங்கிரஸ் கட்சியால் தான் தேசப்பிரிவினை நிகழ்ந்தது. மீண்டும் சரித்திரம் திரும்புகிறதா? நாட்டு மக்கள் முன்னுள்ள கேள்வி இது.

-----------------------------------------------------------

பெட்டிச்செய்தி:

கேரள அமைச்சரவையில் சிறுபான்மையினர் ஆதிக்கம்


கிறிஸ்தவர்கள்: 6 பேர்
1. முதலமைச்சர் ஓமன் சாண்டி
2. கே.ஜோசப் (இருவரும் காங்கிரஸ்)
3. கே.கே.மானி
4. பி.ஜே.ஜோசப் (இருவரும் கேரள காங்கிரஸ் - மானி பிரிவு)
5. அனுப் ஜேக்கப் (கேரள காங்கிரஸ் -ஜேக்கப் பிரிவு)
6 . ஷிபு பேபி ஜான் (ஆர்.எஸ்.பி -பி பிரிவு)

இஸ்லாமியர்கள்: 6 பேர்
1 . ஆர்யாதான் முகமது (காங்கிரஸ்)
2 . பி.கே. குன்னாலி குட்டி
3 . பி.கே.அப்து ரப்
4 . வி.கே.இப்ராஹீம் குஞ்சு
5 . எம்.கே.முனீர்
6 . மஞ்சாலம் குழி அலி (ஐவரும் முஸ்லிம் லீக்)

மக்கள் தொகையுடன் ஒப்பீடு:

மொத்த அமைச்சர்கள்: 22 பேர்.
சிறுபான்மையினர்: 12 பேர்.
பெரும்பான்மையினர்: 10 பேர்.
மக்கள்தொகையில் சிறுபான்மையினர் விகிதம்: 44
அமைச்சரவையில் சிறுபான்மையினர் விகிதம்: 54
மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் விகிதம்: 56
அமைச்சரவையில் பெரும்பான்மையினர் விகிதம்: 46

-------------------------------------------------------------
விஜயபாரதம் (04.05.2012)

காண்க: தமிழ் ஹிந்து

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக