வெள்ளி, ஏப்ரல் 13, 2012

'ஷாக்' அடிக்கும் மின்கட்டண உயர்வு


மின்சாரத்தைத் தொட்டால் தான் மின்னதிர்ச்சி (ஷாக்) அடிக்கும் என்பதில்லை; தமிழகத்தில் 'மின்சாரம்' என்று சொன்னாலே 'ஷாக்' அடிக்கும் போல இருக்கிறது.

அண்மையில் தான் மின்சாரம் தொடர்பான கூடங்குளம் விவகாரம் ஓரளவுக்கு அமைதியாகி இருக்கிறது. அந்த விவகாரத்தில் வெளியான அதிர்ச்சி அளிக்கும் தகவல்களுக்கு அளவில்லை. கடுமையான மின்வெட்டு, அறிவிப்பற்ற மின்தடைகளால் தமிழகத்தின் தொழில்வளமே நிலைகுலைந்து அந்தரத்தில் நிற்கிறது. அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னமும் தொழில்துறை மீளவில்லை. இந்நிலையில், மாநிலத்தில் மின்கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டிருப்பது மேலும் 'ஷாக்' அடிக்கச் செய்வதாக உள்ளது.

மார்ச் 31 ஆம் தேதி, தமிழக அரசு மின் கட்டண உயர்வு குறித்த அறிக்கையை வெளியிட்டது. மின் கட்டண உயர்வு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டது. மின் கட்டண உயர்வு சராசரியாக 37 % உயர்ந்துள்ளது. இதை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தான் கணக்கிட்டு அறிவித்திருக்கிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பேருந்துக் கட்டணம், பால் விலை உயர்வை தமிழக முதல்வர் அறிவித்த போதே, மின்கட்டணங்களும் ஏப்ரல் முதல் மாறும் என்பதை சுட்டிக்காட்டி இருந்தார். மின்சார வாரியம் ரூ. 42,175 கோடி கடனுடன் பரிதாப நிலையில் இருப்பதாகவும், மின்வாரியத்துக்கு கடனுதவி வழங்க வங்கிகள் தயங்கும் நிலை நேரிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதை அடுத்து, மின்கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு மின்வாரியத்துக்கு சம்மதம் தெரிவித்துவிட்டது.

எனவே இந்த மின்கட்டண உயர்வு எதிர்பார்க்கப்பட்டதே. ஆனால், எதிர்பாராத அளவுக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதைத் தான் ஜீரணிக்க முடியவில்லை. இந்தக் கடும் சுமையை ஒரே நாளில் தூக்கியாக வேண்டிய நிர்பந்த நிலையை ஏற்படுத்தியதில், கடந்த 9 ஆண்டுகளாக மின்கட்டணத்தை அவ்வப்போது அதிகரிக்க அனுமதி அளிக்காமல் இருந்த திமுக, அதிமுக அரசுகளுக்கு பங்குண்டு.

பொருளாதார சூழலுக்கு ஏற்ப, அவ்வப்போது மின்கட்டணத்தை சிறிது சிறிதாக அதிகரித்து வந்திருந்தால், மின்வாரியம் நஷ்டமும் அடைந்திருக்காது; இப்போது, ஒரேயடியாக மின்கட்டணத்தை தலையில் இடி விழுந்தது போல ஏற்றும் அவசர நிலையும் ஏற்பட்டிருக்காது.

9 ஆண்டுகளுக்கு முன்னர் தான் ஜெயலலிதா முதல்வராக இருந்த இரண்டாவது அதிமுக (ஜெ) ஆட்சிக் காலத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்போதும் கூட இப்போது உயர்த்தியுள்ளது போல கடுமையான மின்கட்டண உயர்வு அமலாகவில்லை. மின்வாரியத்தின் மீட்சிக்கு அந்தக் கட்டண உயர்வு ஓரளவுக்கு துணை புரிந்தது. எனினும், அடுத்து வந்த திமுக அரசு வாக்குவங்கி அரசியலில் குளிர் காய்ந்தது. நாட்டு மக்களை வசீகரிக்க, எந்த அதிரடி நடவடிக்கையும் எடுக்காமல் தவிர்த்த கருணாநிதியால், மின்வாரியம் தொடர் நஷ்டத்தில் வீழத் துவங்கியது. அதன் விளைவே தற்போதைய மின்கட்டண உயர்வு.

இதில் வேதனை என்னவென்றால், கருணாநிதி செய்த தவறுகளைத் திருத்தும் ஜெயலலிதாவுக்கு கெட்ட பெயர் தான் ஏற்படுகிறது. இதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. எது எதற்கோ தேவையின்றி இலவசத் திட்டங்களை அறிவித்து மாநில கருவூலத்தை காலி செய்யும் ஜெயலலிதா நினைத்திருந்தால், இந்தக் கட்டண உயர்வை அளவாக கட்டுப்படுத்தி இருக்க முடியும். அதைத்தான் அவர் செய்யவில்லை. இதுவே அவர் மீது அதிருப்தி எழக் காரணமாகிறது.

மாநிலத்தில் உள்ள யாரும் மின்கட்டண உயர்வு தேவையற்றது என்று கூறவில்லை; அவ்வாறு கூறுவதில் நியாயமும் இல்லை. ஆனால், சுமைதாங்கியாக உள்ள தமிழக மக்களை பளு தூக்கும் வீரர்கள் ஆக்க வேண்டுமா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியாது.

பல்வேறு தரப்புகளில் இருந்து எழுந்த எதிர்ப்பை அடுத்து, பெயரளவுக்கு மின்கட்டண உயர்வில் சிறு குறைப்பை முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பால் பலன் ஏதும் இருக்கப்போவதில்லை. மக்களின் சிரமம் போக்க மின்கட்டணத்தில் அளிக்கப்படும் மானியத்தையும் அரசு பட்டியலிட்டுள்ளது. இதிலும் 500 யூனிட்டுக்கு மேற்பட்ட மின் நுகர்வோருக்கு அரசின் மானியம் கிடையாது.

முந்தைய கட்டணத்தில் 100 யூனிட் வரை மின்பயன்பாட்டுக்கு ரூ. 75 கட்டணம்; இப்போது அதுவே ரூ. 100 ஆகி இருக்கிறது. 200 யூனிட் வரை மின்பயன்பாட்டுக்கு ரூ. 150 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ. 250 ஆகி இருக்கிறது. 500 யூனிட் வரை ரூ. 370 ஆக இருந்த கட்டணம் இப்போது சுமார் ரூ. 700 ஆகி இருக்கிறது. அதாவது குறைந்தபட்ச மின்பயன்பாடு உள்ளவர்களுக்கு மின்கட்டண உயர்வால் பாதிப்பில்லை. ஆனால், மின்சாதன பயன்பாடு ஒவ்வொரு வீட்டிலும் அதிகரித்துள்ள நிலையில், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்பயன்பாட்டை கணக்கிடும்போது, பெரும்பாலாரது மின்நுகர்வு 500 யூனிட்டைத் தாண்டிவிடும் என்பது தான் யதார்த்தம். 500 யூனிட்டை தாண்டும் மின் நுகர்வோர் ரூ. 1,500 வரை மின்கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.

தொகுப்பு வீடுகளில் குடியிருப்போரின் நிலை இனிமேல் சிரமம் தான். இது மட்டுமல்ல, சிறு, குறு தொழில் முனைவோரும் இக் கட்டண உயர்வால் கடும் பாதிப்புக்கு இலக்காகி உள்ளனர். விசைத்தறிக் கூடங்கள், தொழிலகங்கள், வர்த்தக நிறுவனங்களின் மின் கட்டண விகிதமும் கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது. இது, விலைவாசி உயர்வுக்கு கண்டிப்பாக வழி வகுக்கும்.

இதுகுறித்து சட்டசபையில் விளக்கம் அளித்த முதல்வர், ''மின்சார உற்பத்திச் செலவு மற்றும் விநியோக வருவாய்க்கு இடையே இடைவெளி இருந்தது. அதனை ஈடுசெய்யும் வகையில் ரூ. 9,741 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில் மின்சார கட்டணத்தை உயர்த்தித் தரக் கோரி தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் விண்ணப்பம் செய்திருந்தது. இதுகுறித்து, நுகர்வோர் கருத்துகள் கேட்கப்பட்டன.

அதன் பின்னர், மின் கட்டண விகித மாற்றம் குறித்த தனது உத்தரவை மின்சார ஒழுங்கு முறை ஆணையம் வெளியிட்டது. இதன்படி, தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு ரூ.7,874 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும். ஆனாலும் இந்தக் கட்டண உயர்வில் ரூ.1,118.44 கோடியை தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு கூடுதல் மானியமாக வழங்க அரசு ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, தமிழக அரசு மின்சார வாரியத்துக்கு வழங்க வேண்டிய மொத்த மானியத் தொகை ஆண்டுக்கு ரூ.4,294.16 கோடியாகும்'' என்றார் (04.04.12).

இந்தப் புள்ளிவிபரங்கள் சாமானிய மக்களால் புரிந்துகொள்ள முடியாதவை. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம், அன்றாட வாழ்க்கைப்பாடு தான். சிறிது சிறிதாக மின்கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தால் யாருக்கும் பெரும் சுமையாகத் தோன்றி இருக்காது; 9 ஆண்டுகளில் விட்டதை ஒரே நாளில் பிடிக்க முயற்சிக்கும்போது தான் மக்கள் அலறுகிறார்கள். ஆனால், அரசியல் லாபங்களுக்காக பொது நிறுவனங்கள் பலியிடப்படுவது நமது நாட்டின் துரதிர்ஷ்டம்.

இப்போது தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்திவிட்டு, ‘கேரளத்தைப் பாருங்கள், ஆந்திரத்தைப் பாருங்கள். அங்கெல்லாம் நம்மை விட அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று கூறுவதால் என்ன பயன் விளையப்போகிறது? நாம் நம்மை ஒப்பிட வேண்டுமானால், நம்மைவிட முன்னேறிய மாநிலங்களுடன் ஒப்பிடுவதுதான் சரியாக இருக்கும்.

உதாரணமாக, இந்தியாவின் முதன்மை மாநிலம் குஜராத்தில், கிராமப் புறங்களுக்கு குறைந்த பட்சமாக யூனிட்டுக்கு ரூ. 2 .30 க்கும், நகர்ப்புறங்களில் யூனிட்டுக்கு ரூ. 2.80 க்கும் மின்சாரம் வழங்கப்படுகிறது. அதிக யூனிட் உபயோகிப்பவர்களுக்கு யூனிட்டுக்கு ரூ. 4.30 க்கு கிராமங்களிலும், ரூ. 4.75 க்கு நகரங்களுக்கும் கட்டணம் விதிக்கப் பட்டுள்ளது. அங்கு மின்கட்டணம் குறித்து மக்களுடன் எந்தப் புகாரும் இல்லை. ஏனெனில், அங்கு மும்முனை மின்சாரம் தடங்கலின்றி 24 மணி நேரமும் கிடைக்கிறது. இந்தியாவில் தேவையைவிட அதிகமான மின்சாரம் உற்பத்தி செய்யும் ஒரே மாநிலம் குஜராத். அண்டை மாநிலங்கள் பலவற்றுக்கு மின்சாரம் விற்கும் மாநிலமும் இதுவே.

தமிழகத்தில் மின்சாரம் கிடைக்கும் தரம் என்ன என்று சிந்தித்துப் பார்த்தால் தான் நமது பலவீனம் புரிகிறது. சர்தார் சரோவர் அனைத் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தபோதும், நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு துணிவான முடிவெடுத்து தயக்கமின்றிச் செயல்பட்ட மோடிக்கும், கூடங்குளத்தில் சொதப்பிய ஜெயலலிதாவுக்கும் இடையிலான வித்யாசம் தான் குஜராத்- தமிழ்நாடு மாநிலங்களிடையிலான வேறுபாடாக வெளிப்படுகிறது.

அரசின் முடிவுகளை எதிர்க்கட்சிகள் கண்டிப்பதில் வியக்க ஒன்றுமில்லை. உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கருணாநிதி, விஜயகாந்த், ராமதாஸ், பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுவும் எதிர்பார்க்கப்பட்டதே. ஆனால், தொழில் துறையினரும், வர்த்தக அமைப்பினரும் சாமானிய மக்களும் இந்த கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பது முக்கியமானது. இதுவரை செலுத்திய மின்கட்டணத்தை போல இரு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்ற அவர்களது அச்சம் நியாயமானது.

மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டியதன் அவசியத்துக்கும், அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கும் இடைப்பட்ட நிலையில் நின்று சிந்தித்து செயல்படுவதுதான் நல்லரசின் பாணியாக இருக்கும். சட்டசபையில் இருக்கும் அதீத பெரும்பான்மையால், மக்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் செயல்படுவது நல்லரசுக்கு அழகல்ல. அதேபோல, புதிய மின்னுற்பத்தி திட்டங்கள் இல்லாமல் வளர்ச்சி சாத்தியமில்லை; அதற்கு கூடுதல் முதலீடு தேவை. இதை மக்கள் புரிந்துகொள்ளத் தக்க வகையில் விளக்கும் சாதுரியமும் அரசுக்குத் தேவை.

நமக்காகத் தான் அரசு இயங்குகிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்தக் கூடிய அரசால்தான் சீர்திருத்தங்களை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியும். இதற்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடியே உதாரணம்.

தரமான சேவை அளிக்கப்பட்டால் அதை அதிக விலை கொடுத்து வாங்கவும் தமிழக மக்கள் தயார். ஆனால், தினசரி 8 மணிநேர மின்வெட்டு இருக்கும் சூழலில், இப்போதைய மின்கட்டண உயர்வு அதிருப்தி அதிகரிக்கவே வழிகோலும். ஏற்கனவே தடுமாறும் தமிழக மக்களின் வாழ்க்கை மேலும் பாதிக்கப்படவே இந்த மின்கட்ட உயர்வு காரணமாகும். இதை தமிழக அரசு உணர்வது நல்லது.

---------------------------

- விஜயபாரதம் (20.04.2012)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக