சனி, ஆகஸ்ட் 27, 2011

காங்கிரசுக்கு நஷ்டம்... தேசத்திற்கு லாபம்!

சமூக சேவகர் அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதம் நாடு முழுவதும் ஏற்படுத்தியுள்ள ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு, சிலருக்கு பெரும் மன உளைச்சலையும், தேச பக்தர்களுக்கு உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஹசாரே உண்ணாவிரதம் அவர் எதிர்பார்த்த அளவுக்கு ஜன லோக்பால் விஷயத்தில் முழு பலனையும் அளிக்காமல் போனாலும் கூட, நாட்டு மக்களை ஊழலுக்கு எதிராகத் திரட்டியதில் மாபெரும் வெற்றி கண்டுள்ளது.

ஹசாரே உண்ணாவிரதம் துவங்குவதற்கு முன்னர் நாடு முழுவதும் இந்த அளவுக்கு எதிரொலியை ஏற்படுத்தும் என்று மத்திய அரசு கனவிலும் நினைத்திருக்காது. ஹசாரே குழுவினர் குறித்த அவதூறுகளையும் கிண்டலான விமர்சனங்களையும் வெளிப்படுத்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள், நாடாளுமன்றத்தின் அதிகாரத்தில் ஹசாரே குழு அநாவசியமாகத் தலையிடுவதாக குற்றம் சாட்டினார்கள்.

குடிமக்கள் குழுவின் கருத்துக்களைப் புறந்தள்ளும் விதமாக, அரசு சார்பில் சக்கையான ஒரு லோக்பால் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, அது அபிஷேக் மனு சிங்வி தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. எப்படியாவது காலத்தைக் கடத்தி, நடப்பு கூட்டத்தொடரை முடித்து விடும் திட்டத்துடன் காங்கிரஸ் பல முயற்சிகளை மேற்கொண்டது.

ஆனால், நாட்டு மக்களின் பேராதரவு ஹசாரேவுக்கு இருப்பது உறுதியானதும் காங்கிரஸ் கட்சி வழிக்கு வந்தது. ஆரம்பத்தில் ஹசாரேவை வசை பாடிய செய்தித் தொடர்பாளர்களை நிசப்தமாக்கிய காங்கிரஸ், பிறகு முஸ்லிம் மத குரு இமாம் புகாரி, தலித் தலைவர் உதித்ராஜ், போலி அறிவுஜீவி அருந்ததிராய் உள்ளிட்டவர்களை லோக்பாலுக்கு எதிரான பிரசாரத்துக்கு பயன்படுத்திப் பார்த்தது. அதுவும் பயன் தரவில்லை.

சாதிரீதியாகவும் மதரீதியாகவும் மக்களைப் பிளவுபடுத்த நடந்த முயற்சிக்கு மக்களிடம் சிறிய அளவில்கூட ஆதரவு கிடைக்கவில்லை. வேறு வழியின்றி, அனைத்துக்கட்சிக் கூட்டம் கூட்டி, அதன்மீது பழிபோட காங்கிரஸ் முயன்றது; அதிலும் சம்மட்டி அடியே கிடைத்தது. ஊழலுக்கு எதிராக மக்களின் கோபம் பொங்கிப் பிரவகிப்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அனைத்தும் அரசை நிர்பந்தித்தன.

பிற கட்சிகள் லோக்பாலை எதிர்க்கும்; அதைக் காட்டி அரசியல் நடத்தலாம் என்ற கனவும் கலைந்த நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் உணர்ச்சிகரமாக முழங்கினார். ஊழலுக்கு தமது அரசு என்றும் துணைபோகாது என்று வழக்கம் போல முழங்கிய அவர், ஹசாரே உண்ணாவிரதம் பத்து நாட்களைத் தொட்ட நிலையில், வேறு வழியின்றி, ஜன லோக்பால் மசோதா குறித்தும் நாடாளுமன்றம் விவாதிக்கும் என்று அறிவித்தார்.

அதாவது அரசு தரப்பு லோக்பால் மசோதா மட்டுமின்றி ஹசாரே குழு முன்வைக்கும் மசோதா குறித்தும் நாடாளுமன்றம் விவாதித்தது. கூடவே, அருணா ராய் (இவர் சோனியா தலைமையிலான தேசிய ஆலோசனை கவுன்சில் உறுப்பினர்) சமர்ப்பித்த மற்றொரு வடிவமும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதாவது, கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று கூறும் வகையில், மூன்று லோக்பால் மசோதா வடிவங்கள் குறித்தும் மக்களவை உறுப்பினர்கள் விவாதித்தனர்.

காந்தியடிகள் அறிமுகப்படுத்திய உண்ணாவிரதம் போராட்டம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளதை ஹசாரே தனது வைராக்கியத்தால் நிரூபித்தார். ஊழல்மயமான காங்கிரஸ் கட்சி அவர் முன மண்டியிட்டது. அவருக்கு நாடு முழுவதும் பரவலாக கிடைத்த வரவேற்புக்கு அடிப்படை தற்போதைய மத்திய அரசு மீதான அதிருப்தியின் விளைவே என்பதை மன்மோகன் சிங் அரசு உணர்ந்தது. விளைவாக, ஹசாரே வலியுறுத்தியபடி, ஜன லோக்பால் மசோதா விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

‘ஹசாரேவின் உயிர் மேலானது என்று கூறி அவர் தனது உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும்’ என்று பிரதமர் வலியுறுத்தினார். அதற்கு பதில் அளித்த ஹசாரே, ‘இதை உணர பத்து நாட்கள் பிரதமருக்கு தேவைப்பட்டுள்ளன’ என்று சுட்டிக் காட்டினார். எனினும் அவர் தனது உண்ணாவிரதத்தைக் கைவிட மறுத்தார் (ஆக. 26 நிலவரம்). "அனைத்து அரசு அலுவலகங்களிலும் மக்கள் சாசனம் இருக்க வேண்டும்; அனைத்து மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா அமைக்கப்பட வேண்டும்; அனைத்து அரசு ஊழியர்களையும் லோக்பால் வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்'' ஆகிய மூன்று நிபந்தனைகளை அரசு ஏற்காதவரை, உண்ணாவிரதம் தொடரும் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

எதிர்பார்த்தபடியே, ஹசாரே குழுவில் உள்ள காங்கிரஸ் அனுதாபியான அக்னிவேஷ் தனது வேஷத்தைக் கலைத்தார். ஹசாரே தவறாக வழிநடத்தப்படுவதாக அவர் புலம்பினார். பிரதமர் அழைக்கும் உறுதியை ஏற்று ஹசாரே உண்ணாவிரத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஆயினும் ஹசாரே மசியவில்லை.

ஹசாரே குழுவில் உள்ள அரவிந்த் கேஜ்ரிவால், அரசின் பிடிவாதத்துக்கு ப.சி, கபில் சிபல் ஆகியோரே காரணம் என்று குற்றம் சாட்டினார். கிரண் பேடியும், சாந்தி பூஷணும், தந்திரங்களால் தங்கள் போராட்டத்தை உடைக்க முடியாது என்று அறிவித்தனர். இதனிடையே சச்சின் பைலட் போன்ற வாரிசு எம்.பி.களை இளம் காங்கிரஸ் துருக்கியராக முன்னிறுத்தி அவர்கள் ஹசாரேவை ஆதரிப்பதாக ஒரு தோற்றத்தை நிறுவ காங்கிரஸ் ஆதவு ஊடகங்கள் முயன்றன. ஆயினும் மக்களவையில் பேசிய ராகுல் காந்தியின் கருத்துக்கள் காங்கிரஸ் கட்சியின் முகத்தை மீண்டும் தோலுரித்தன.

ஹசாரே உண்ணாவிரதம் நாடு முழுவதும் மக்களை ஒருங்கிணைத்ததைப் பார்த்த பின்னரும், ''இந்தப் போராட்டம் ஜனநாயகத்தை மிரட்டுவதாக உள்ளது'' என்று ராகுல் கூறினார் என்றால், அக்கட்சியின் நிலைப்பாட்டைப் புரிந்துகொள்ள முடியும். ‘’வலிமையான லோக்பால் என்பது ஊழலை எதிர்த்து போராடும் ஒரு அமைப்பாக மட்டுமே இருக்க முடியும். ஒரே ஒரு லோக்பால் மசோதாவால் மட்டும் ஊழலை முற்றிலும் ஒழித்துவிடமுடியாது. அதற்கு பல்வேறு முயற்சிகளும், தொடர் நடவடிக்கைகளும் தேவைப்படுகிறது’’ என ராகுல்காந்தி குறிப்பிட்டார்.

ஆயினும் இப்போதைக்கு மக்கள் கருத்துக்கு அடிபணிவதைத் தவிர காங்கிரஸ் கட்சிக்கு வேறு வழியில்லை. ஆயினும் ஹசாரே கூறுவதுபோன்ற கடுமையான லோக்பால் சட்டம் கொண்டுவருவதற்கும் அரசுக்கு விருப்பமில்லை.

கர்நாடகாவில் லோக் ஆயுக்தாவை உருவாக்கி தன் தலையில் தானே மண்ணைப் போட்டுக்கொண்ட எடியூரப்பா போல செயல்பட காங்கிரஸ் கட்சிக்கு பைத்தியமா பிடித்திருக்கிறது? எனவே தான் பல சால்ஜாப்புகளைக் கூறுகிறார் பிரதமர். இதை உணர்ந்துகொண்டு, எழுத்துப்பூர்வமான உறுதிமொழியை மத்திய அரசிடம் கோரினார்கள் குடிமக்கள் குழுவினர்.

ஹசாரே முன்வைக்கும் ஜன லோக்பால் மசோதாவில் பல குறைபாடுகள் உள்ளன என்பதும் உண்மையே. ஆனால், அரசு நிறைவேற்ற விழையும் 'சர்க்கார்' லோக்பால் மசோதாவை விட அது மேலானது. எனவேதான் எதிர்க்கட்சியான பாஜக, '' ஹசாரே உண்ணாவிரதப் போராட்டத்தை ஆதரிக்கிறோம்; எனினும் ஜன லோக்பால் மசோதாவில் பல முக்கிய திருத்தங்கள் தேவை'' என்று கூறியது.

ஹசாரே உண்ணாவிரதம் அவரது உடலில் சுமார் 7 கிலோ எடை குறையக் காரணமானது. அதே சமயம், நாட்டு மக்களிடம் உறங்கிக் கிடந்த போர்க்குணத்தை வெளிப்படுத்தவும், அவர்களது ஆவேசத்தை வீதிகளில் அரங்கேற்றவும் அமைதியான ஒரு வழிமுறையை உருவாக்கியது.

பெரும்பாலான மக்களுக்கு அண்ணா ஹசாரே யாரென்று தெரியாத போதும், ஊழலுக்கு எதிரான மக்களின் கூட்டு மனநிலை, ஹசாரேவுக்கு ஆதரவாகத் திரண்டது. அதைக் கண்ட எதிர்க்கட்சிகளும் தங்கள் நிலையை அதற்கேற்ப தீர்மானித்துக் கொண்டன. ஆனால், கடைசிவரை காங்கிரஸ் மட்டும் வறட்டுப் பிடிவாதத்தால், தன்மீதான மரியாதையையும் நம்பகத் தன்மையையும் குலைத்துக் கொண்டது.


ஜன லோக்பால் மசோதா நிறைவேறுமா, ஹசாரே கோரும் அம்சங்கள் அனைத்தும் சட்டத்தில் இடம் பெறுமா, ஓட்டைகள் அற்றதாக லோக்பால் சட்டம் வருமா, ஜன லோக்பால் சட்டத்தின் குறைபாடுகள் நீக்கப்படுமா- இவை போன்ற கேள்விகளுக்கு வரும் நாட்கள் பதில் அளிக்கக் கூடும். ஆனால், இந்தப் போராட்டங்கள் ஏற்கனவே மக்கள் மனதில் ஏற்படுத்தியுள்ள தாக்கம், ஊழலுக்கு எதிராகவும் ஊழல்மயமான காங்கிரஸ் அரசுக்கு எதிரானதாகவும் உறுதியான பதிவுகளை ஏற்படுத்திவிட்டது.


மொத்தத்தில், ஹசாரே உண்ணாவிரதம் நாட்டுக்கு ஒரு புத்தெழுச்சியை உருவாக்கியது. ஊழலுக்கு எதிரான போரை அது துவக்கிவைத்து விட்டது. இனி அது லோக்பால் மசோதாவுடன் நிற்கும் என்று தோன்றவில்லை. இந்தப் போராட்டம் மக்களுக்கு தன்னம்பிக்கையை அளித்து, நாட்டுக்கு லாபம் அளித்துள்ளது. ஒட்டுமொத்த நஷ்டமும் மத்திய அரசை நடத்தும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குத் தான். இந்த ஆளும்கட்சியின் நஷ்டத்தை பயன்படுத்தி ஆட்சி மாற்றம் ஏற்பட வழிவகுப்பது எதிர்க்கட்சிகளின் பொறுப்பு.


---------------------------------------------------------
காண்க: ஜன லோக்பால் ஏன் தேவை? (நன்றி: தேசமே தெய்வம்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக