புதன், ஆகஸ்ட் 25, 2010

இனியவை இருபதும் இன்னா இருபதும் : பகுதி - 1


கடந்த ஆறுமாத காலமாக தமிழகமெங்கும் ஒரே பேச்சு ஒரே மூச்சாக இருந்த, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் கோலாகலமாக நடந்து முடிந்துவிட்டது. மொழியின் மீதான பெருமிதத்தில் உலக அளவில் நடந்தேறிய பிரமாண்டமான மாநாடு இது என்பதில் சந்தேகமில்லை. ஆயினும் அதன் நோக்கங்கள் மற்றும் தாக்கங்கள் குறித்து பரிசீலிக்க வேண்டிய கட்டத்தில் நாம் இருக்கிறோம்.

எந்த ஒரு நிகழ்விலும் ஆக்கப்பூர்வமான அம்சங்களும் எதிர்மறை அம்சங்களும் இணைந்தே இருக்கும்; இது தவிர்க்கவியலாத ஒன்றே. அந்த வகையில், செம்மொழி மாநாட்டுக்கும் சாதக பாதக அம்சங்கள் உள்ளன. அவற்றை சீர்தூக்கி ஆய்வது அவசியம்.

"குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள்
மிகை நாடி மிக்கக் கொளல்''
- என்பது தெய்வப் புலவர் திருவள்ளுவரின் வாக்கு (குறள்- 504).

ஆகவே, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் (ஜூன் 23- 27) சிறப்புக்களையும் (இனியவை இருபது), குற்றங்களையும் (இன்னா இருபது) இங்கு காண்போம்.

இனியவை இருபது:

1. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அறிவிக்கப்பட்டதில் இருந்தே அதை வெற்றிகரமாக நடத்த முதல்வர் மு. கருணாநிதி எடுத்துக் கொண்ட முயற்சிகள் வியக்க வைக்கின்றன. 86 வயதிலும், அனைத்து அரசுத் துறைகளையும் கட்டுக்கோப்பாக இயக்கி, மிக பிரமாண்டமான மாநாட்டை எந்த அசம்பாவிதமும் இன்றி நடத்திக் காட்டியது முதல்வரின் தனிப்பெரும் சாதனை.

2. இம்மாநாட்டில் உலக அளவில் பேராளர்கள் பங்கேற்க வேண்டும் என்பதற்காக, பல விதங்களில் முயற்சி செய்யப்பட்டது. இதன் காரணமாக, 50 நாடுகளைச் சார்ந்த 840 பேர் செம்மொழி மாநாட்டில்பங்கேற்றனர். இவர்களில் 152 பேர் ஆய்வுகளைச் சமர்ப்பித்துள்ளனர். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம், வெளிநாடுகளிலிருந்து வந்த பெரும்பான்மை பேராளர்களும் தமிழை தெய்வீகமானதாகக் கருதியது தான். தவிர, இந்து சமய உணர்வும் பலரிடம் தலைதூக்கி இருந்ததைக் காண முடிந்தது.

3. மாநாட்டின் முதல்நாள் துவக்க நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் பங்கேற்றது சிறப்பு. அரசியல் சார்பற்ற நிலையில் இருப்பவர் என்பதால், கருணாநிதியைப் பாராட்டியதோடு நிறுத்திக் கொண்டு தமிழின் தொன்மையைப் புகழ்ந்து பேசினார். ஜனாதிபதி, தமிழின் அரிய பண்பாட்டுப் பங்களிப்புகளான பரத நாட்டியம், கர்நாடக இசை குறித்து துவக்கவிழாவில் குறிப்பிட்டது அருமை.

4. சிந்துச் சமவெளி நாகரிகத்தைத் தமிழ்ப் பண்பாட்டுடன் ஒப்பாய்வு செய்துவரும் (இது சரியா என்பது இங்கு கேள்வியல்ல) பின்லாந்து நாட்டு அறிஞர் அஸ்கோ பர்போலாவுக்கு 'செம்மொழித் தமிழ்' விருது வழங்கப்பட்டது. சிந்துச் சமவெளி நாகரிகத்தின் பதிவுகளான சைவ இலச்சினைகளை தமிழகத்துடன் அவர் ஒப்பிட்டார். தனது ஆய்வு முழுமை பெறவில்லை என்பதையும் அவர் ஒப்புக் கொண்டார்.

5. துவக்க விழாவில் பேசிய அமெரிக்காவின் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட், இந்தியப் பண்பாட்டின் செழுமைக்கு இந்து மதமும் வடமொழியும் அளித்துள்ள பங்களிப்பு போலவே தமிழும் அரிய பங்களிப்பை நல்கியுள்ளது என்று முதல்வர் முன்னிலையில் பேசினார். மாநாட்டு அமைப்புக்குழு பொறுப்பாளரும் முன்னாள் துணைவேந்தருமான வா.செ.குழந்தைசாமியும் இதே கருத்தை எதிரொலித்தார். 'இந்தியப் பண்பாட்டை வளர்த்தெடுத்தவை வடமொழியும் தமிழுமே. இதில் வடமொழி பெற்ற அங்கீகாரத்தை தமிழும் பெற வேண்டும்' என்றார் அவர்.
ஆய்வரங்க அமர்வில் பேசிய தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவனும் இக்கருத்தை வெளிப்படுத்தினார். 'சிவனின் உடுக்கை ஒலியில், இருபுறமும் பிறந்த மொழிகள் சம்ஸ்க்ருதமும், தமிழும்' என்றார் அவர். முத்தாய்ப்பாக 'வடமொழிக்கு வழங்கப்படும் சிறப்பு சலுகைகளை தமிழுக்கும் வழங்க வேண்டும்' என்று, மற்றொரு நிகழ்வில் கோரினார் முதல்வர் கருணாநிதி.
வடமொழியை தூஷிப்பதையே நோக்கமாகக் கொண்டு வளர்ந்தவர் நடத்திய மாநாட்டில், முதன்முறையாக பிரிவினைக் கண்ணோட்டமின்றி இத்தகைய கருத்துக்கள் வெளிப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

6. துவக்க நாளன்று நடைபெற்ற 'இனியவை நாற்பது' பேரணியில் தமிழின் தொன்மை, தமிழரின் பண்பாட்டு விழுமியங்களைச் சிறப்பிக்கும் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. மனு தர்மத்தை எதிர்ப்பதாக முழங்குபவர் நடத்திய மாநாட்டுப் பேரணியில் இடம் பெற்றவர் மனுநீதிச் சோழன்! தஞ்சைக் கோயிலும் மங்கள நாயகி கண்ணகியும் கிராமிய தெய்வங்களும் அணிவகுத்துவர, இந்துத்துவம் வேறு- தமிழ்ப் பண்பாடு வேறல்ல என்பது தெள்ளத் தெளிவாகப் புரிந்தது.

7. இலங்கைத் தமிழர்கள் ஈழத்தில் அனுபவித்த கொடுமைகளிலிருந்து தமிழகத்தின் கவனத்தை திசை திருப்ப நடத்தப்பட்ட மாநாடு என்றபோதும் ஈழ அறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி, மாநாட்டில் பங்கேற்றார். மேலும் பல இலங்கை அறிஞர்கள் பங்கேற்றபோதும், சிவத்தம்பி வருகை முக்கியத்துவம் பெற்றது. ஏனெனில், தஞ்சையில் (1995) நடந்த எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டில், விடுதலைப்புலி ஆதரவாளர் என்ற காரணம் கூறி, அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
முதலில் செம்மொழி மாநாட்டுக்கு வர மறுத்த அவர், பிற்பாடு தனது கருத்தை மாற்றிக் கொண்டு பங்கேற்றது ஒருவகையில் நன்மையே. இதன் காரணமாகவே ஈழத் தமிழர் நிலை குறித்து கருணாநிதி - மாநாட்டிலும், பிரதமர் மன்மோகன் சிங் - இலங்கை அதிபரிடமும் கண்டிப்பாகப் பேச வேண்டியதாயிற்று. மாநாட்டுத் துவக்க விழாவில், நெற்றியில் திருநீறுடன் சிவத்தம்பி வீற்றிருந்த கோலம் அருமை.

8. செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, கோவையில் "செம்மொழிக் கலைவிழா' என்ற பெயரில், மூன்று நாட்கள் நாட்டுப்புறக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் பத்து இடங்களில் நடத்தப்பட்டன. ஒயிலாட்டம், மயிலாட்டம், காவடியாட்டம், தப்பாட்டம், செண்டைமேளம், பரத நாட்டியம் உள்ளிட்ட பாரம்பரியக் கலைகள் அரங்கேறின. இதன்மூலம் நாட்டுப்புறக் கலைஞர்கள் தெம்படைந்துள்ளனர். மாநாட்டு தினங்களிலும், தினசரி மாலை பாரம்பரியக் கலைகள் அரங்கேறின.

9. மாறிவரும் உலகிற்கு ஏற்ப தமிழும் நவீனமாவது அவசியம். அந்த நோக்குடன், மாநாட்டின் இரண்டாம் நாள் தமிழ் இணையதள கண்காட்சி துவங்கப்பட்டது. இணைய உலகில் தமிழ்மொழி சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ள இக்கண்காட்சி பயனுள்ளதாக இருந்தது. வலைப்பூக்களைத் தொடுக்கும் இளைய தலைமுறைக்கு வழிகாட்டுவதாக இக்கண்காட்சி அமைந்தது. இங்கும் கணினித் தமிழ் குறித்த பல ஆய்வரங்குகள் நடந்தன.
இணைய மாநாட்டு சிறப்பு மலரில் 130 ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இணையத் தமிழைப் பொருத்தமட்டிலும் 'யுனிகோடு' முறையை அரசு ஏற்பதாக இம்மாநாட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது இணையத் தமிழ் தகவல் தொடர்பில் முக்கியமான அறிவிப்பு என்பதில் ஐயமில்லை.

10. மாநாட்டை ஒட்டி, கொடிசியா வளாகம் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டது. அதி நவீன சமையலறை வசதி, குடிநீர், சுகாதார வசதிகள் இவ்வளாகத்தில் செய்யப்பட்டன. சுமார் எட்டு மாதங்களாகச் செய்யப்பட அடிப்படைக் கட்டமைப்புப் பணிகளால் கொடிசியா வளாகம் மெருகேறியுள்ளது. வரும் காலத்தில் இவ்வளாகம் முக்கிய நிகழ்வுகளுக்கு முற்றிலும் தகுதி படைத்ததாகவும், கோவையின் முக்கிய மையமாகவும் மாறியுள்ளது.
மாநாட்டை முன்னிட்டு கோவை நகரில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் சாலை மேம்பாட்டுப் பணிகள் பாராட்டத் தக்கவை. குறிப்பாக, என்.எச்- 45, என்.எச்.47 நெடுஞ்சாலைகள் புது மெருகுடன் காட்சியளிக்கின்றன.
கொடிசியா வளாகத்தில் அமைக்கப்பட்ட ஆய்வரங்கம், கண்காட்சி அரங்கம், தோரண வாயில் ஆகியவற்றிலும் இந்துத்துவ, சைவ வெளிப்பாடுகள் மிளிர்ந்தன. அμங்கைச் சுற்றிலும் அமைக்கப்பட்ட செயற்கைத் தூண்களிலும், நந்தி சிற்பங்களிலும், தமிழின் தொன்மை வெளிப்படுத்தப்பட்டது. அரங்கைச் சுற்றிலும் அமைக்கப்பட்ட செயற்கைத் தூண்களிலும், நந்தி சிற்பங்களிலும் தமிழின் தொன்மை வெளிப்பட்டது.

11. செம்மொழி மாநாட்டை முன்னிட்டு தென்னிந்திய புத்தக விற்பனையாளர் சங்கம் (பபாசி), கோவை தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் புத்தகக் கண்காட்சியை நடத்தியது. முந்தைய உலகத்தமிழ் மாநாடுகளில் நடத்தப்படாத இணைய கண்காட்சியும் புத்தகக் கண்காட்சியும் செம்மொழி மாநாட்டின் சிறப்பாக விளங்கின.
பல பதிப்பகங்கள், மாநாட்டை ஒட்டி புதிய நூல்களை வெளியிட்டன.பல பழமையான நூல்களும் அச்சிடப்பட்டன. ஒவ்வொரு பத்திரிகையும் சிறப்பு மலர்களை வெளியிட்டு வணிகம் பெருக்கின. செம்மொழி மாநாட்டு மலரை தமிழக அரசே வெளியிட்டது. (விலை: ரூ. 600!) இவ்வாறாக பதிப்புத் துறைக்கு புது ரத்தம் பாய்ச்சிய புண்ணியத்தை இம்மாநாடு தேடிக் கொண்டது.

12. செம்மொழி மாநாட்டில் பாமர மக்களும் ஆர்வத்துடன் கண்டு களித்தது, அரும்பொருள் கண்காட்சி. பழமையான கல்வெட்டுக்கள், செப்பேடுகள், பஞ்சலோக சிலைகள், கோயில் கட்டமைப்புகள், மன்னர் கால ஆயுதங்கள், பழங்கால வாழ்க்கை முறையை நினைவுபடுத்தும் அம்சங்கள், நினைவுச் சின்னங்கள், தமிழக இசைக்கருவிகள் என இக்கண்காட்சி, அனைத்துத் தரப்பினரையும் வெகுவாகக் கவர்ந்தது. இதைக் காணவே பல்லாயிரக் கணக்கான மக்கள் மாநாட்டுக்கு வரத் துவங்கினர்.
பலமணிநேரம் 4 கி.மீ. நீல வரிசையில் நின்று இக் கண்காட்சியை மக்களும் மாணவமாணவிகளும் ரசித்தனர். இதற்கு கிடைத்த வரவேற்பால், மாநாடு முடிந்தும் 10 நாட்கள் கண்காட்சி தொடர அரசு ஆணையிட்டது. அப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதேபோல, புத்தகக் கண்காட்சியும் ஜூலை 4 வரை நீட்டிக்கப்பட்டது.

13. மாநாட்டை முன்னிட்டு நான்கு நாட்கள் ஆய்வரங்குகள் நடைபெற்றன. சங்கப் புலவர்களின் பெயர்களில் அமைந்த 23 அரங்குகளில் தமிழ்மொழி தொடர்பான, பிற துறைகளுடன் இயைந்தபொருண்மைகளில் ஆய்வுகள் சமர்ப்பிக்கப்பட்டன. 55 தலைப்புகளில் 913 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இவை ஒன்றாக தொகுக்கப்பட்டு (சுருக்கம்) நூலாகவும் வெளியிடப் பட்டன. இத்தொகுப்பில் ஆய்வாளர்களின் தொடர்பு முகவரிகள் இடம் பெற்றுள்ளது. ஆய்வைத் தொடர விழைவோருக்கு நல்வாய்ப்பு.

14. மாநாட்டில் பொது நிகழ்வாக நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளில் பட்டிமன்றமும் கருத்தரங்கமும் பயனுள்ளவை. பேரா. சத்தியசீலன், அறிவொளி, தெ.ஞானசுந்தரம், சாந்தலிங்க ராமசாமி அடிகளார், வா.செ.குழந்தைசாமி, சரஸ்வதி ராமநாதன், திருப்பூர் கிருஷ்ணன், த.ராமலிங்கம் போன்ற பெரியோர் 'ஜால்ரா' சத்தத்தை மீறி கருத்தரங்குகளிலும் பட்டிமன்றங்களிலும் தமிழ் வளர்த்தனர்.
மூன்றாம் நாள் (ஜுன் 25) நடத்தப்பட்ட "எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்' கருத்தரங்கை முதல்வர் கருணாநிதியே தலைமையேற்று நடத்தினார். இதில் சேதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட்), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்), இல.கணேசன் (பா.ஜ.க), திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள்) உள்ளிட்ட, வெவ்வேறு தளங்களில் இயங்கும் அரசியகட்சித் தலைவர்கள் 20 பேர் பங்கேற்றனர். அரசியலால் மாறுபட்டாலும், ஒரே மேடையில் மொழிக்காக பலர் முழங்கியது வித்தியாசமான காட்சியாக இருந்தது.

15. தினசரி இரவு கொடிசியா வளாகத்திலும் மாநாட்டு வளாகத்திலும் நடந்த கலைநிகழ்ச்சிகள், பாரம்பரியத்துக்கும் நவீனத்துக்கும் பாலமிடுபவையாக இருந்தன. டாக்டர் பத்மா சுப்பிரமணியத்தின் "நிருத்யோதயா' குழுவினர் நிகழ்த்திய பμதநாட்டியம், நடிகை ரோகிணி பங்கேற்ற பாஞ்சாலி சபதம் போன்றவை குறிப்பிடத் தக்கவை. நவீன நாடகங்களும் கவனிப்பைப் பெற்றன.
16. செம்மொழி மாநாட்டுக்குக் கடந்த ஆறு மாதமாகவே பலத்த விளம்பரம் செய்யப்பட்டது. பத்திரிகை, வானொலி, திரையரங்கு, தொலைக்காட்சி, இணையதளம், பொதுக்கூட்டங்கள் என பல வகைகளில் இம்மாநாடு குறித்து விளம்பரப் படுத்தப்பட்டது. இதன் காரணமாகவே, பல லட்சக் கணக்கான மக்களின் பங்கேற்பு சாத்தியமானது. மக்கள் கூட்டம் திரண்டபோதும் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல், தக்க பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காகவே அரசைப் பாராட்டலாம்.

17. செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, பேரணிப் பாதையிலும், பொது இடங்களிலும் உள்ள சுவர்கள், வண்ண ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டன. ஆபாசச் சுவரொட்டிகளையே பார்த்து அருவருத்த கண்களுக்கு இந்த ஓவியங்கள் இனிமை நல்குகின்றன. பாμம்பரியக் கலைகள், பண்பாட்டின் தொன்மையை விளக்கும் இந்த ஓவியங்கள் கோவையை அழகூட்டியுள்ளன.
18. இம்மாநாடு வெற்றிபெற, கடந்த பல மாதங்களாக அனைத்துத் துறை அமைச்சர்களும் அதிகாரிகளும் பம்பரமாகச் சுழன்று பணியாற்றினர். வெளிநாட்டு விருந்தினர்களுக்கான விருந்தோம்பல் குழு, வரவேற்புக் குழு, கண்காட்சி அமைப்புக் குழு, ஆய்வரகுக் குழு உள்ளிட்ட பல குழுக்களை அமைத்த முதல்வர் கருணாநிதி, பணிகளை பங்கீடு செய்தார். அதன் விளைவாக, ஒரே நோக்குடன் அனைவரும் குழு மனப்பான்மையுடன் பணியாற்றினர். அதன் ஒட்டுமொத்தத் வெற்றியே மாநாட்டின் வெற்றி என்றால் மிகையில்லை. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் ம.ராசேந்திரனின் பங்கு அளப்பரியது.

19. மாநாட்டின் நிறைவு நாளில் கால்டுவெல், குமரகுருபர சுவாமிகள், செம்மொழி இலச்சினையில் வள்ளுவர் ஆகிய மூன்று சிறப்பு தபால் தலைகள் வெளியிடப்பட்டன. காசியில் தமிழ் வளர்த்த குமரகுருபரரை தமிழக அரசு புறக்கணிக்க முடியவில்லை. இது மகிழ்ச்சிக்குரிய தகவல். கருணாநிதியிடம் தென்படும் மாற்றம் நம்பிக்கை அளிக்கிறது.

20. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு மற்றொரு தி.மு.க மாநாடாக மாறிவிடுமோ என்ற அச்சம் பலருக்கு இருந்தது. இருப்பினும், தி.மு.கவினர் கட்சிக் கொடிகளைக் கட்டக் கூடாது என்ற முதல்வர் கருணா நிதியின் கட்டளைக்கு 'உடன்பிறப்புக்கள்' கட்டுப்பட்டார்கள். இதன் விளைவாக, கோவையில் எங்கும் தி.மு.கவின் கொடிகளையோ, பிரமாண்ட வμவேற்பு வளைவு கலாசாரத்தையோ காணமுடியவில்லை.
அரசியல் தோற்றம் மாநாட்டுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்ற முதல்வரின் முன்னெச்சரிக்கை நல்ல பலன் அளித்துள்ளது. (மாநாட்டு நிகழுகளின் இடையிடையே எழுந்த 'காக்கை சத்தம்' குறித்து இங்கு எழுத வேண்டாமே!)
கோவையில் எங்கு பார்த்தாலும் திருவள்ளுவர் வானுயர நிற்கும் செம்மொழி மாநாட்டு இலச்சினையுடன் கூடிய கொடிகளே தென்பட்டன. பல மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டபோதும், கட்டுக்கு அடங்காத கூட்டம் கோவையில் அலைமோதியது.

மொத்தத்தில், முதல்வர் கருணாநிதி நிகழ்த்திக் காட்டியுள்ள "அரசியல் சாராத சாதனை' என்று இந்த செம்மொழி மாநாட்டைக் குறிப்பிடலாம்....
('இன்னா இருபது' தொடர்கிறது....)

நன்றி: விஜயபாரதம் (16.07.2010)

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக