வியாழன், பிப்ரவரி 23, 2012

ஊகங்களில் புரளும் ஊடகங்கள்


அரசியலில் தேநீர் விருந்துகளுக்கு எத்தனை முக்கியத்துவம் என்பது வாஜ்பாய் அரசை (1998) கவிழ்த்த தேநீர் விருந்திலிருந்தே தெரிய வரும். தேநீர்க் கோப்பை தானே பதில் கூற முடியாத அஃறிணைப் பொருள்? அதுபோலவே தற்போது விமானப் பயணங்களும் அரசியல் கூட்டணிகளை மாற்ற வல்லவையாக மாறி வருகின்றன. தமிழகத்தின் அரசியல் நிலவரத்தை மாற்றக் கூடிய ஒரு மாபெரும் அரசியல் சந்திப்பு விமானத்தில் நடந்து விட்டதாக நமது பத்திரிகைகள் புளகாங்கிதத்துடன் எழுதி மகிழ்கின்றன.


இரு வாரங்களுக்கு முன்னர் மதுரையிலிருந்து ஏதோ விஷயமாக தேமுதிக. தலைவர் விஜயகாந்த் விமானத்தில் சென்னை சென்றிருக்கிறார். அதே விமானத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும் வேறு ஏதோ விஷயமாக வந்து சென்றிருக்கிறார். போதாக்குறைக்கு, 'இந்தியாவையே கைக்குள் வைத்திருக்கும்' ப.சி.யின் இளவல் கார்த்தி சிதம்பரமும் அதிலேயே சென்றாராம். இது போதாதா, நமது பத்திரிகைகளுக்கு?


முதன்முதலில் இதை 'ஸ்கூப்' செய்தியாக 'அரசியல் வானில் புதிய கூட்டணி' என்ற தலைப்பில் வெளியிட்டது தினமணி (பிப். 13). அப்போது மூன்று கட்சித் தலைவர்களும் மனம் திறந்து பேசினார்களாம். அப்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் பேசினார்களாம்! (வேறென்ன, கூடன்குளம் அணுமின் நிலையம் குறித்தா பேசுவார்கள்?) இந்தச் செய்தி வந்த மறுநாளே மறுபிரசுரம் செய்யாத பிற பத்திரிகைகள் குறைவு. அந்தந்தப் பத்திரிகைக்கு ஏற்றாற்போல கண், காது, மூக்கு வைத்து புதிய அரசியல் கூட்டணியையே உருவாக்கிவிட்டார்கள் நமது ஊடக வாலாக்கள். புலனாய்வையே முழுமுதல் லட்சியமாகக் கொண்ட நமது வார இதழ்களைக் கேட்கவே வேண்டாம்.


இந்தச் செய்தி குறித்து இந்தக் கட்டுரை எழுதப்படும்வரை, மேற்படி சந்திப்பில் ஈடுபட்ட மூவரிடமிருந்தும் எந்த விளைவும் இல்லை. அவர்கள்தான் எதையும் கூற மறுத்தாலும், ஊடகங்களாவது அவர்களை நேரில் சந்தித்து வாயைப் பிடுங்கி விஷயத்தைக் கறக்க வேண்டியது தானே? உண்மை என்னவென்றால், இந்தச் சந்திப்பை அரசியலாக்கி மகிழ்ந்த ஊடகங்களுக்கே தெரிந்திருக்கிறது, இது கவைக்குதவாத சந்திப்பு என்பது. ஆனாலும் பத்திரிகை விற்றாக வேண்டுமே?


எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்றாகச் சந்திப்பதே அற்புதமான ஒரு சங்கதியாக மாறிவிட்ட தமிழகத்தில், இதுபோன்ற 'ஸ்கூப்' செய்திகளைப் படித்து நாம் ஆறுதல் அடைந்துகொள்ள வேண்டியது தான்.


தமிழகத்தில் கட்சிகளிடையே இருக்கும் அகந்தைப் போக்கை விவரிக்க வேண்டுமானால் தனிக் கட்டுரை தான் எழுத வேண்டும். ஒரு எம்எல்ஏ கூட இல்லாத லெட்டர் பேட் கட்சிகள் போடும் ஆட்டத்தைப் பார்த்தால், தேசிய அளவில் காங்கிரஸ் ஆடும் ஆட்டங்கள் சாதாரணமாகி விடுகின்றன. இந்நிலையில் திடீரென்று பிரதான எதிர்க்கட்சியாகிவிட்ட விஜயகாந்த் கட்சியை சொல்லிக் குற்றமில்லை.


ஸ்பெக்ட்ரம் மோசடியில் தேசிய அளவிலும் நில அபகரிப்பு வழக்குகளில் மாநில அளவிலும் தொடர்ந்து அடி வாங்கிக் கொண்டிருக்கும் திமுகவைக் கண்டால் பாவமாகத் தான் இருக்கிறது. தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட கருணாநிதிக்கு எப்படியாவது இந்த ஐந்தாண்டு காலத்தைக் கடத்தி விட்டால் போதும் என்ற மனநிலை வந்துவிட்டது நன்றாகவே தெரிகிறது. தனது இரு மகன்களும் அடித்துக் கொள்ளும் காட்சிகள் நேரில் மட்டுமல்லாது கனவிலும் அவரை இம்சிக்கின்றன. ஈவெகி.சம்பத் இவரிடம் சிக்கிக் கொண்டு பட்ட பாட்டிற்கு, இப்போது பலன் கிடைக்கிறது. திமுகவைப் பொறுத்த மட்டிலும், அதிமுகவை விட நெருடலாக இருப்பது தேமுதிக தான். தனக்கு வந்திருக்க வேண்டிய எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் பறிபோனதற்கு தேமுதிக தானே காரணம்?


கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக- தேமுதிக - கம்யுனிஸ்ட் கட்சிகளின் கூட்டணி அமைந்திராவிட்டால், இந்த அளவுக்கு திமுக சேதாரம் அடைந்திருக்காது. அப்போதும் அதிமுக வென்றிருக்கும்; ஆனால், விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியிருக்க மாட்டார். பிரமாண்டமான எதிர்க்கட்சிக் கூட்டணியை வேறு வழியின்றி (இதை சட்டசபையில் ஜெயலலிதாவே ஒப்புக் கொண்டிருக்கிறார்) அமைத்து திமுகவை நசுக்கிய பிறகு, பழைய பாதைக்கே சென்றுவிட்டார் ஜெயலலிதா. அதை உள்ளாட்சித் தேர்தலிலும் காட்டிவிட்டார். அவருக்கும் விஜயகாந்தின் திடீர் வளர்ச்சி பொறுக்கவில்லை. அதனால்தான் சட்டசபையில் நடக்கும் விவாதங்களில் தேமுதிக எம்எல்ஏக்கள் பேசிய போதெல்லாம் மட்டம் தட்டி வந்தனர் அதிமுகவினர். அதன் இறுதிக்கட்ட எதிரொலியே, கடைசியாக நடந்த சட்டசபைக் கூட்டத் தொடர் நிகழ்வுகள்.


ஜெயலலிதாவுக்கு என்று சில பிரத்யேக குணங்கள் உண்டு. அவரை எதிர்த்து யாரும் பேசிவிடக் கூடாது; அவருக்கு யாரும் அறிவுரையும் கூறக் கூடாது; ஜெயலலிதாவின் செயல்பாடுகளை விமர்சனம் செய்வதும் கூடாது. இந்த குணத்தால் தான் கட்சியினர் அவரிடமிருந்து தனித்து நிற்கிறார்கள். அதைப் பயன்படுத்திக்கொண்டு ராவணன், சசிகலா கும்பல் அண்மைக்காலம் வரை நடத்திய வசூல் வேட்டையை இப்போது ஜெயலலிதாவே உணர்ந்து விட்டார். ஆனாலும், ஜெயலலிதா மாறுவதில்லை. ஜனநாயகத்தில் விமர்சனங்களுக்கு உள்ள முக்கியமான இடத்தை அவர் ஏற்க மறுப்பதே அவரது வீழ்ச்சிக்கு ஒவ்வொரு முறையும் காரணம் ஆகி வருகிறது. சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் விஜயகாந்த் முழுமையாகப் பேச அனுமதிக்கப்பட்டிருந்தால், இந்த ஸ்கூப்' செய்திக்கே அவசியம் வந்திருக்காது.


தகுதியற்றவர்களிடம் புதிய பதவிகள் வந்தால் என்ன ஆகும் என்று விஜயகாந்தை ஜெயலலிதா விமர்சித்திருப்பதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால், சட்டசபையில் அவர் பேசவே கூடாது என்று முதல்வர் எதிர்பார்ப்பது சற்றும் நியாயமில்லை.


இறுதியில், ‘தேமுதிகவுடன் கூட்டணி வைத்ததற்காக நான் வெட்கப்படுகிறேன் என்று ஜெயலலிதாவும், ‘அதிமுகவுடன் கூட்டணி வைத்ததற்காக நான் தான் வெட்கப்பட வேண்டும் என்று விஜயகாந்தும் முழங்கியபடி, ஏற்கனவே உடைந்திருந்த கூட்டணி மண்பானையை சுக்குநூறாக உடைத்து எறிந்திருக்கிறார்கள். தொடர் அடிகளால் நிலைகுலைந்திருந்த திமுகவுக்கு இப்போது சற்றே ஆசுவாசம் கிடைத்திருக்கிறது. அதிமுகவிடமிருந்து என்ன காரணம் சொல்லி விலகுவது என்று நெளிந்து கொண்டிருந்த கம்யுனிஸ்ட் கட்சிகளும், இதுதான் வாய்ப்பு என தங்களை ஓரம் கட்டிக் கொண்டிருக்கின்றன.


இப்போதைய அரசியல் சூழலில் அதிமுக மட்டும் ஒரு புறத்திலும் மற்ற கட்சிகள் மறுபுறத்திலும் அணி வகுத்திருக்கின்றன. சட்டசபையில் விஜயகாந்த் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, கம்யுனிஸ்ட் கட்சிகள் வெளிநடப்பு செய்திருக்கின்றன. ஆனால். இதையே காரணமாக வைத்து புதிய கூட்டணிக்கு ஊடகங்கள் அவசரப்படுவது, ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள தனிப்பட்ட கணக்கீடுகளை மறந்து செய்யும் அவசரக் குடுக்கைத்தனமாகவே தெரிகிறது. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் இருக்கும் நிலையில் இப்போதே 40 எம்.பி. தொகுதிகளைப் பங்கிட்டுப் பரிமாற்ற வேண்டிய பொறுப்பு பத்திரிகைகளுக்கு இல்லை என்பதும் நிதர்சனம்.


வரும் மார்ச் 18 ம் தேதி சங்கரன் கோவில் சட்டசபைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. அதில் மதிமுக தனித்து களம் இறங்குவது உறுதியாகிவிட்டது. இத்தேர்தலில் தனித்து போட்டியிடத் தயாரா? என்ற ஜெயலலிதாவின் சவாலுக்கு விஜயகாந்த் பதில் அளித்ததாக வேண்டி இருக்கிறது. திமுகவுக்கோ தோல்வி உறுதி என்றாலும் களத்திலிருந்து விலக முடியாத நிர்பந்தம். அவ்வாறு திமுக முடிவெடுப்பது வைகோவுக்கு சாதகமாகிவிடுமோ என்ற கலாகாரின் கவலைக்கு காரணம் இருக்கிறது. கம்யுனிஸ்ட் கட்சிகள் கடைசி வரை பிற கட்சிகளின் மூக்கை சொறிந்துவிட்டு, இறுதியில், பக்கத்தில் நின்று வேடிக்கை பார்க்கவே போகின்றன. இதையெல்லாம் மறந்துவிட்டு புதிய கூட்டணிக்கு அச்சாரம் என்று புல்லரிக்கும் நமது பத்திரிகைகளைப் பார்த்தால் மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.


ஸ்டாலினையும் விஜயகாந்தையும் கூட ஒரு கணக்கில் வைக்கலாம். இந்தப் பட்டியலில் கார்த்தி சிதம்பரம் சேர்ந்ததுதான் புரியாத புதிர். ஒரு ஊராட்சி உறுப்பினராகக் கூட தகுதியல்லாத ஒருவரை அவரது தந்தையின் பதவியைக் கணக்கில் கொண்டு இவ்வளவு உயர்த்திப் பிடிக்கத் தேவையில்லை. இந்த விமானத்தில் இன்னும் நூறு பயணிகள் வந்திருந்தார்களே, அவர்களை ஏன் நமது ஊடகங்கள் புறக்கணித்தன?


காங்கிரசும் புதிய கூட்டணிக்கு தயாராகிறது என்பது உண்மையானால், அதனால் நெருக்கடிக்கு உள்ளாவது திமுகவாகத் தான் இருக்கும். தேசிய அளவில் திமுகவின் முக்கியத்துவம் குறைந்துள்ள நிலையில், காங்கிரசின் மனநிலையை கருணாநிதியை விட வேறு எவராலும் தெளிவாக யூகிக்க முடியாது. பாம்பின் கால் பாம்பறியாததா என்ன? ஆகவே இத்தகைய நம்பகத் தன்மையற்ற யூகச் செய்திகளை தவிர்த்து, மாநில அரசை வழிப்படுத்தும் செய்திகளில் தமிழக ஊடகங்கள் கவனம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.


அதிமுக அரசு ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் நிறைவடைந்துவிட்டன. முந்தைய நிலையை விட அதிகமான மின்வெட்டு மாநிலத்தையே இருளுக்குள் தள்ளி இருக்கிறது. இதில் கட்ட வேண்டிய கரிசனத்தை, முன்னாள் திமுக அமைச்சர்கள் மீது நில அபகரிப்பு வழக்கு தொடுப்பதிலேயே காட்டி வருகிறது ஜெயலலிதா அரசு. செத்த பாம்பை அடிப்பதை விடுத்து, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் இறங்குமாறு ஜெயலலிதாவை நமது ஊடகங்கள் தூண்டலாமே?


அதிமுக அரசின் பல்வேறு தொடர் தவறுகளை மக்கள் பல்லைக் கடித்துக் கொண்டு சகித்திருப்பதற்கு, திமுகவினரின் வானளாவிய ஊழலே காரணம். அதற்காக இசை நாற்காலி விளையாட்டில் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் ஜெயலலிதா தொடர்ந்து ஈடுபடுத்துவது அவருக்கே நஷ்டமாக முடியும். இதை நேரடியாகச் சொல்ல எந்த தமிழ்ப் பத்திரிகைக்கும் திராணியில்லை. மாறாக, புதிய கூட்டணி மலர்வதாக இட்டுக்கட்டும் இவர்களின் கதைகளைப் படித்தால் நமக்கே சிரிப்பு வருகிறது. ஊகங்களில் புரளும் நமது ஊடகங்கள் திருந்துவது எப்போது?


-----------------------------

விஜய பாரதம் (02.03.2012)



செவ்வாய், ஜனவரி 03, 2012

ஹசாரேவை முட்டாள் ஆக்கிய காங்கிரஸ்

மருத்துவமனையில் ஹசாரே


பொதுவாகவே காங்கிரஸ் கட்சிக்காரர்களைப் பற்றிய 'பழம் தின்று கொட்டை போட்டவர்கள்' என்ற சொலவடை ஒன்று உண்டு. அதை மீண்டும் நிரூபித்திருக்கிறது காங்கிரஸ் கட்சி- பயனற்ற லோக்பால் மசோதாவை (காங்கிரஸ் வடிவம்) மக்களவையில் நிறைவேற்றியதுடன், மாநிலங்களவையில் அதையும் ஒத்திவைத்து, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தது காங்கிரஸ்.


முதலாவதாக, ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்டத்தை நிறைவேற்றுவதில் காங்கிரஸ் கட்சிக்கு எந்த மாறுபாடும் இல்லை என்று வரப்போகும் ஐந்து மாநிலத் தேர்தலில் பிரசாரம் செய்ய ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டுவிட்டது காங்கிரஸ் கட்சி. அரசு கொண்டுவந்த லோக்பால் சட்டத்தை கடுமையாக்க எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த திருத்தங்களை உதாசீனப்படுத்தி, தான் நினைத்தபடி பல்லில்லாத ஒரு சட்டத்தை பெயரளவில் கொண்டுவந்தது காங்கிரஸ். இதன்மூலமாக, லோக்பால் சட்டத்துக்காக போராடிவரும் சமூக சேவகர் அண்ணா ஹசாரேவின் முகத்தில் ஒரு வண்டி கரியைப் பூசி இருக்கிறது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு.


இரண்டாவதாக, இந்த மசோதாவை மாநிலங்களவையிலும் நிறைவேற்றினால் தான் செல்லுபடியாகும் என்பதால், விவாதத்தை இழுத்தடித்து, கடைசியில் நேரமின்மை காரணமாக அடுத்த கூட்டத் தொடரில் இதை நிறைவேற்றுவோம் என்று முழங்கி, ஒத்திவைத்தது காங்கிரஸ். உண்மையில் மாநிலங்களவையில் அரசுக்கு பெரும்பான்மை வலு இல்லை; எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த திருத்தங்களை மக்களவையில் நிராகரித்தது போல மாநிலங்களவையில் நிராகரிக்க முடியவில்லை. வாக்கெடுப்புக்கு மசோதா வந்தால் அரசு நிச்சயமாகத் தோல்வியுறும் என்பதால் ஜகா வாங்கியது அரசு.


மொத்தத்தில் லோக்பால் மசோதாவை பாதி நிறைவேற்றிவிட்டு, மீதி நிறைவேறாததற்கு எதிர்க்கட்சிகள் மீது பழி போடுகிறது காங்கிரஸ். காங்கிரஸ் ஆதரவு ஊடகங்கள் இருக்க, மன்மோகன் சிங்கோ, சோனியாவோ கவலைப்பட வேண்டியதில்லை. ஹசாரேவையும் பாஜகவையும் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.


அதாவது காங்கிரசின் திட்டம் தெளிவானது. ஊழலுக்கு எதிராக வலிமையான சட்டம் கொண்டுவருவதென்பது தன் தலையில் தானே கொள்ளிக்கட்டையால் சொரிந்து கொள்வது தான் என்பது அக்கட்சிக்குத் தெரியும். எனவேதான், லோக்பால் சட்டத்துக்காகப் போராடும் ஹசாரே குழுவினர் குறித்த அவதூறுப் பிரசாரத்தில் அக்கட்சி இறங்கியது. ஹசாரே நாடாளுமன்றத்தை விட உயர்ந்தவர் அல்ல என்று காங்கிரஸ் வாயாடிகள் செய்தியாளர் சந்திப்புகளில் முழங்கினர். ஆனால், நாடு நெடுகிலும் ஊழலுக்கு எதிராக, அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவாக ஏற்பட்ட அலையைக் கண்டு மிரண்டது காங்கிரஸ். எனவே, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரிலே லோக்பால் மசோதா கொண்டுவரப்படும் என்று, ஹசாரேவுக்கு அஞ்சி அறிவித்தது மத்திய அரசு. இதற்காக கூட்டத் தொடர் மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.


எனினும், பல்வேறு உபாயங்கள் மூலமாக குளிர்காலக் கூட்டத் தொடரின் நாட்களை திட்டமிட்டு வீணாக்கியது காங்கிரஸ். சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு மசோதாவைக் கொண்டுவர முயன்று தோல்வியுற்றாலும், அதன் மூலமாக அவை நாட்களைக் குறைத்து காங்கிரஸ். பிறகு ப.சி. விவகாரம் அவை நாட்கள் வீணாக உதவியது (2 -ஜிக்கு நன்றி!) மொத்த கூட்டத்தொடரில் பெரும்பாலான நாட்களை வீணடித்துவிட்டு, இறுதியில் தான் லோக்பால் மசோதாவை அரைகுறை மனதுடன் கொண்டுவந்தது அரசு.


எதிர்பார்த்தது போலவே, எந்தச் சத்தும் இல்லாததாக அரசு வடிவமைத்த லோக்பால் மசோதா இருந்தது. மத்தியப் புலனாய்வுத் துறை அதில் இடம் பெறவில்லை. மாநிலங்களில் ‘லோக் ஆயுக்தா’ அமைப்பதில் மத்திய அரசின் தலையீடு, லோக்பால் உறுப்பினர்களின் தேர்வு, லோக்பாலுக்கு கடிவாளம் போல நாடாளுமன்றத்தில் ஏற்பாடு போன்ற அம்சங்களும் ஏற்புடையதாக இல்லை. இவை தொடர்பாக எதிர்க்கட்சிகள் குறிப்பாக பாஜக பல திருத்தங்களைக் கொண்டுவந்தன. ஆனால், அவற்றை அரசு ஒரு பொருட்டாகக் கருதவில்லை. வழக்கம் போல, காங்கிரசுக்கு வால் பிடிக்கும் முலாயமும், லாலுவும், எதிர்ப்பது போல பேசிவிட்டு வெளிநடப்பு செய்ய, ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்த ஒரு தருணத்தில், அதில் பாதி உறுப்பினர்களின் ஆதரவுடன் லோக்பால் மசோதாவை மக்களவையில் நிறைவேற்றிவிட்டது அரசு.


ஆனால், லோக்பால் சட்டத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து வழங்க வேண்டுமானால் மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருந்தாக வேண்டும். அந்தப் பெரும்பான்மை தனக்கு இல்லை என்பது அரசுக்கு நன்றாகவே தெரியும். போதாக்குறைக்கு, கூட்டணிக் கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் லோக் ஆயுக்தா அமைப்பதை மாநிலங்களின் பொறுப்பில் விட்டுவிட வேண்டும் என்று கூறி அரசின் லோக்பால் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. தவிர காங்கிரஸ் உறுப்பினர்கள் 13 பேரும் 'திட்டமிட்டபடி' அவையில் அப்போது இல்லை. எனவே லோக்பால் சட்டத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து வழங்கும் மசோதாவை வாக்கெடுப்புக்கு விட்டபோது, எதிர்பார்த்தபடியே அது தோல்வி அடைந்தது.


காங்கிரசின் நண்பர்களான யாதவ்கள் இருவரும் வெளிநடப்பு செய்த நிலையில், பாஜக, இடதுசாரிகள் நடப்பு வடிவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், 250 வாக்குகளுடன் 542 பேர் கொண்ட மக்களவையில் தோற்கடிக்கப்பட்டது அந்த மசோதா (டிச. 27). குறைந்தபட்சம், அரசின் பெரும்பான்மை வலுவான 272 என்ற எண்ணிக்கையைக் கூட இம்மசோதா ஆதரவாகப் பெறவில்லை. அந்த அளவுக்கு அரசு அலட்சியம் காட்டியது.


ஆக, லோக்பால் சட்டத்தின் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வடிவம் பல் பிடுங்கப்பட்ட பாம்பு போலத் தான் என்பதில் சந்தேகமில்லை. இந்த நிகழ்வுகள் ஹசாரேவுக்கு பெரும்விரக்தியை ஏற்படுத்தியதும் வியப்பில்லை. காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டது என்று வெளிப்படையாகவே குற்றம் சாட்டினார் அண்ணா.


இந்நிலையில், மாநிலங்களவையில் லோக்பால் மசோதாவைக் கொண்டுவந்து விவாதத்தை துவங்கியது அரசு. விவாதத்தின் முடிவில் வாக்கெடுப்பு அவசியம் என்பது நடைமுறை. மாநிலங்களவையிலும் நிறைவேறினால் மட்டுமே, அது செயல்பாட்டுக்கு வர முடியும். ஆனால், மாநிலங்களவையில் அரசுக்கு ஆதரவான உறுப்பினர்களின் எண்ணிக்கை 97 மட்டுமே. அதிலும், திரிணாமூல் காங்கிரசின் 6 உறுப்பினர்கள் நடப்பு வடிவத்தை எதிர்த்தனர்.


மாறாக எதிர்க்கட்சி வரிசையில் பாஜக கூட்டணியின் பலம் 102 ; இடதுசாரிகளின் பலம் 19 . மாநிலங்களவையில் மசோதா வெல்ல வேண்டுமானால், 122 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அந்த பலம் அரசுக்கு இல்லை என்பது ஆரம்பத்திலேயே தெரிந்தது. ஆனாலும் வீம்புக்கு மசோதாவைத் தாக்கல் செய்தது காங்கிரஸ். அதன் நோக்கம் மசோதாவை நிறைவேற்றுவது அல்ல; அதை வைத்து நாடகம் ஆடுவதே என்பதற்காகவே இந்த விளக்கம்.


இந்த மசோதாவுக்கு 24 திருத்தங்களை பாஜகவும் 37 திருத்தங்களை திரிணமூல் காங்கிரசும் கொண்டுவந்தன. அவற்றில் சில மட்டும் ஏற்கப்பட்டன. பிற கட்சிகள் கொண்டுவந்த திருத்தங்கள் நூறுக்கு மேல் இருந்தன. இதன் மீதான விவாதத்தில் பேசிய பாஜக தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான அருண் ஜெட்லி, அரசு கொண்டுவந்துள்ள மசோதாவை எதிர்ப்பதன் காரணங்களை தெளிவாக விளக்கினார்.


''ஊழல் விவகாரங்களை விசாரணை செய்யும் அமைப்புகள் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கின்றன. இதேபோல், லோக்பால் குழுவில் இடம்பெறும் உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் அரசு சார்புடையவர்களாகவே இருக்கிறார்கள். இதனால், லோக்பாலும் மத்திய அரசின் கைப்பாவையாகவே செயல்படும். இந்த மசோதா கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராக உள்ளது. அரசியல் சாசனத்தில் பெரும் குழப்பம் ஏற்படும். லோக்ஆயுக்தா நியமனம் குறித்து மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் அரசியல் சாசனத்துக்கு எதிராக உள்ளன. இதன்மூலம் மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிட முயற்சிக்கிறது. சி.பி.ஐ. அமைப்பை லோக்பால் வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். சி.பி.ஐ. இயக்குநர் தீர்வுக் குழுவில் லோக்பாலும் இடம்பெற வேண்டும்'' என்றார் அவர்.


ஆனால், பாஜக நாடகமாடுவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. 'லோக்பாலுக்கு ஆதரவு என்று ஹசாரே கூட்டத்தில் முழங்கிவிட்டு நாடாளுமன்றத்தில் அதை நிறைவேற்ற விடாமல் எதிர்க்கிறது பாஜக' என்றார் காங்கிரசின் அபிஷேக் சிங்வி. ஹசாரே கோருவது போன்ற வலிமையான லோக்பால் சட்டத்துக்காகவே பாஜக போராடிய நிலையில், அதன் எதிர்ப்பை திசை திருப்ப முயன்றது காங்கிரஸ். எதிர்பார்த்தது போலவே, விவாதம் நீண்டது. அப்போது, கூட்டத் தொடரை மேலும் ஒருநாள் நீடிக்க விருப்பமின்றி, அடுத்த நிதிநிலை கூட்டத்தொடரில் மசோதாவை மீண்டும் கொண்டுவரலாம் என்று கூறி நழுவியது அரசு. அதாவது, மாநிலங்களவையில் வாக்கெடுப்புக்கு முன்னதாகே தனது தோல்வியை அரசு ஒப்புக் கொண்டுவிட்டது. மொத்தத்தில் லோக்பால் மசோதா காங்கிரஸ் விருப்பம் போலவே மாநிலங்களவையில் நிறைவேறவில்லை (டிச. 28).


இப்போது, மசோதா நிறைவேறாததற்கு எதிர்க்கட்சிகளே காரணம் என்று புகார் கூறுகிறது காங்கிரஸ். நல்ல வேளையாக ஹசாரே குழுவினர் அரசின் இந்த பித்தலாட்டத்தை உணர்ந்தே உள்ளனர். ''இந்த அரசை நம்ப முடியாது என்பதை மத்திய அரசு தெளிவாக காட்டியுள்ளது. இம்மசோதாவிற்கான வாக்கெடுப்பை மத்திய அரசு சந்திக்கத் தயாராக இல்லை என்பது ஆரம்பத்திலேயே தெரிந்துவிட்டது. லோக்பால் மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு அரசிடம் இருந்தது. ஆனால் அரசோ தன்னுடைய பணியைச் செய்யத் தவறிவிட்டது. ஒருவருக்கு பற்கள் இல்லாவிடில் எப்படி இருக்குமோ அதேபோல் தற்போது உள்ள மசோதாவுக்கு பற்கள் இல்லை'' என்று ஹசாரே குழுவைச் சேர்ந்த கிரண் பேடி கூறி இருப்பது குறிப்பிடத் தக்கது.


எதிர்க்கட்சிகள் திருத்தம் கொண்டுவருவதைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், கூட்டணிக் கட்சியான திரினாமூல் காங்கிரஸ் மசோதா குறித்த நிலைக்குழு விவாதத்தில் மசோதாவுக்கு ஒப்புக்கொண்டுவிட்டு, சில்லறைக் காரணங்களுக்காக எதிர்த்தது ஏன்? அது தான் காங்கிரஸ் கட்சியின் நாடகம்.


இது மம்தா பானர்ஜியும் பிரணாப் முகர்ஜியும் சேர்ந்து நடத்திய நாடகம். அதே போல, லாலுவையும் முலாயமையும் காங்கிரஸ் அவ்வப்போது மிகச் சிறந்த ஊறுகாயாகப் பயன்படுத்துவதில் வெற்றி கண்டிருக்கிறது. இறுதியில் மசோதாவை நிறைவேற்றாமல் எதிர்க்கட்சிகள் மீது பழி போடும் தனது வழக்கமான நடைமுறையைத் தொடர்கிறது.


இந்த நாடகத்தால் மிகவும் ஏமாற்றப்பட்டிருப்பவர் அண்ணா ஹசாரே. அவரது உண்ணாவிரதப் போராட்டம் வலுவிழந்து போனதற்குப் பின்னணியில், காங்கிரஸ் கட்சியின் தொடர்ந்த அவதூறுப் பிரசாரம் காரணமாக உள்ளது. ஆரம்பம் முதற்கொண்டே அவரிடம் காங்கிரஸ் கட்சியை எதிர்ப்பதில் குழப்பமான மனநிலை இருந்தது. லோக்பால் சட்டத்துக்காக குரல் கொடுப்பதை விட தற்போதைய ஊழல் மயமான மத்திய அரசை வெளியேற்றுவதே சரியான தீர்வாக இருக்கும் என்பதை அவர் உணரவே இல்லை. ஒவ்வொரு முறையும் தனது அழைப்புக்கு லட்சக் கணக்கில் மக்கள் திரள்வார்கள் என்ற அவரது கணக்கு பிசகியதன் பின்னணியில் காங்கிரஸ் ஆதரவு ஊடகங்களும் உள்ளன.


காங்கிரஸ் கட்சி ஏதாவது சதி செய்து லோக்பாலை நிறுத்திவிடும் என்றே பாஜகவும் இடதுசாரிகளும் எதிர்பார்த்தனர். அவர்கள் தாங்கள் எதிர்க்கட்சி என்ற முறையில் நாடாளுமன்ற அவைகளில் திறமையாகவே செயல்பட்டார்கள். ஆனால், மக்களவையில் தனது பெரும்பான்மையால் எதிர்க்கட்சிகளை ஓரம்கட்டிய காங்கிரஸ், மாநிலங்களவையில் தனக்கு பெரும்பான்மை இல்லாததால் ஓட்டம் எடுத்தது. அரசு நினைத்திருந்தால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தை ஏற்பாடு செய்து அதில் தனது பெரும்பான்மையைக் கொண்டு லோக்பால் மசோதாவை நிறைவேற்றி இருக்க முடியும். அதையும் அரசு விரும்பவில்லை. மொத்தத்தில் நாட்டு மக்களுக்கும் நல்ல பாடத்தைக் கற்பித்திருக்கிறது காங்கிரஸ்.


இதற்கு பதிலடியாக ஐந்து மாநிலத் தேர்தலில் 'துரோகிகளுக்கு' எதிராக பிரசாரம் செய்யப்போவதாக கூறி இருக்கிறார், ஹசாரே. அவரிடம் இன்னும் தெளிவு ஏப்ரடா வேண்டும். 'துரோகிகளுக்கு' என்று கூறுவதை விட ‘’காங்கிரசுக்கு எதிராக பிரசாரம்’’ என்று தெளிவாகவே அவர் அறிவிப்பது நாட்டுக்கு மிகவும் நல்லது. இனியாவது நிதர்சனத்தை அவர் உணர்வாரா?


-------------------------
விஜயபாரதம் (13.01.2012)


.