தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்று மூன்று மாதங்கள் நிறைவடைந்து விட்டன. யாரும் எதிர்பாராத மாபெரும் பெரும்பான்மையுடன் அதிமுக வெற்றி பெற்றபோது, முந்தைய திமுக ஆட்சி மீது மக்கள் கொண்டிருந்த கோபத்தின் வீரியம் தெரியவந்தது. விலைவாசி உயர்வு, ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, அதிகாரபீடங்களின் அத்துமீறல்கள் என, திமுக ஆட்சியை வெளியேற்றுவதற்கான அனைத்துக் காரணங்களும் தெளிவாகவே இருந்தன. அதனை சமயோசிதமாகப் பயன்படுத்திய 'புரட்சித்தலைவி' மூன்றாவது முறையாக தமிழக முதல்வர் ஆனார். ஆனால், தனக்கு மக்கள் அளித்த வாய்ப்பை அவர் இன்னமும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்ற தோற்றத்தை கடந்த மூன்று மாத நடவடிக்கைகள் வாயிலாக உருவாக்கி இருக்கிறார்.
திமுக ஆட்சி மீண்டும் வந்துவிடும் என்ற கருணாநிதியின் கனவுக்கு ஆதாரமாக இருந்தவை இலவசத் திட்டங்கள். அந்த ஆணிவேரிலேயே ஜெயலலிதா கைவைத்தார். அவரும் இலவசத் திட்டங்களை அறிவிக்கவே திமுகவின் கனவு நொறுங்கிப் போனது. தேர்தல் முறைகேடுகள் மூலமாக பின்வாசல் வழியே அதிகாரத்தைக் கைப்பற்ற திமுக தீட்டிய திட்டங்களும் தேர்தல் ஆணையத்தின் கடுமையான நடவடிக்கைகளால் நீர்த்துப் போயின. அதனால்தான் அதீத பலத்துடன் ஜெயலலிதா ஆட்சி அமைத்தார். திமுக, எதிர்க்கட்சி அந்தஸ்தையும் கூட தேமுதிக-விடம் இழந்தது.
புதிய ஆட்சியிடம் தமிழக மக்கள் வெகுவாக எதிர்பார்த்தார்கள். முந்தைய திமுக ஆட்சியின் சீரழிவுகள் அனைத்தும் துடைக்கப்படும் என்று அவர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தார்கள். ஜெயலலிதாவின் நடவடிக்கைகளிலும் சிறிது மாற்றம் தென்பட்டது. எப்போதும் ''எனது அரசு'' என்று சொல்லும் ஜெயலலிதா இம்முறை ''நமது அரசு, அதிமுக அரசு'' என்று கூறியபோது அவர் திருந்திவிட்டதாகவே பத்திரிகைகள் எழுதின. ஆனால், மிக விரைவிலேயே ''நான், எனது'' என்ற சுயவிளம்பரப்பிரியையாக அவர் மாறினார். ஜெயலலிதாவின் பல நடவடிக்கைகள் சிறப்பானவையாக இருந்தாலும், இந்த சுயபிரகடனம் தான் அவரை ஆணவம் பிடித்தவராகக் காட்டியது. அந்நிலை இம்முறையும் மாறாதது, மாநில நலனில் அக்கறை கொண்டோர்க்கு ஏமாற்றமே.
இந்த விஷயத்தில் திமுக தலைவரிடம் அதிமுக தலைவி கற்க வேண்டியது நிறைய இருக்கிறது. அரசியல் என்பது மக்கள் திரளை அடிப்படையாகக் கொண்டது. மக்கள் கருத்தை உருவாக்குவதில் அவர்களது பங்களிப்பும் இருந்தாக வேண்டும். எப்போதுமே ஆணையிடல்கள் மூலமாக மக்களைக் கட்டுப்படுத்த இயலாது. மக்களுடன் மக்களாக தன்னைக் காட்டிக் கொள்பவரால்தான் மக்களின் எண்ணங்களைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்பட முடியும். திமுக தலைவர் கருணாநிதியிடம் இந்த குணம் மிகுதியாக இருப்பதைக் காண முடியும். அவரது எந்த முடிவும் கட்சி முடிவாகவே முன்வைக்கப்படும். ‘பொதுக்குழுவும் செயற்குழுவும்’ கூடியே எந்த முக்கிய முடிவும் அறிவிக்கப்படும். அது நாடகத் தனமாக இருந்தாலும் கூட, ஜனநாயகத்திற்கு அத்தகைய நாடகீயத் தன்மை தேவை என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். தனது சுயநலனுக்கான முடிவையும் கட்சி மீது திணிப்பதில் அவர் கில்லாடி. ஆனால், ஜெயலலிதாவிடம் இத்தகைய நாசூக்கான போக்கைக் காண முடியாது.
மன்னராட்சிக் கால அரசியல் போலவே அவர் அதிமுக-வை நடத்திவருகிறார். அது அவரது கட்சி என்பதால் அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை என்று விட்டுவிட முடியாது. ஏனெனில், அதிமுகவில் எந்த ஒரு முக்கிய முடிவும் மேலிருந்து கீழாகவே பாய்கிறது. முன்னாள் முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் முதற்கொண்டு, கீழ்நிலையிலுள்ள கிளை செயலாளர் வரை, இந்த உத்தரவுகள் மீறப்பட முடியாதவை. அதாவது அதிமுக தொண்டர்கள் ஒவ்வொருவருமே சாவி கொடுக்கப்பட்ட பொம்மைகள் போல இறுக்கமாகவே இயங்க வேண்டியுள்ளது. ஜெயலலிதாவின் அமைச்சரவையில் உள்ள எந்த ஒரு அமைச்சரையும் நாற்காலியில் ஆசுவாசமாக அமர்ந்தபடி நீங்கள் படத்தில்கூடக் காணமுடியாது. அமைச்சர் என்ற பெருமித உணர்வை வெளிப்படுத்தும் ஒருவர் அடுத்த நாளே 'மாஜி' ஆகும் வாய்ப்புள்ளது என்பதுதான் - அந்த நிலையற்ற தன்மைதான் - அமைச்சர்களின் பதற்றமான நிலைக்குக் காரணம. இத்தகைய நிலையில் உள்ள ஒருவரால் எவ்வாறு அதிகாரத்தை நல்லமுறையில் பயன்படுத்த முடியும்?
இதற்கு மாறாக, திமுக-வில் வட்ட செயலாளர் முதல் அமைச்சர் பெருமக்கள் வரையிலும் சுதந்திரமான செயல்பாடு உறுதியாக இருந்தது. அதுவே அக்கட்சியின் வீழ்ச்சிக்கு காரணமானது. தன்னிச்சையான அதிகார துஷ்பிரயோகங்கள், கட்டப் பஞ்சாயத்துகள், நிலப்பறிப்புகள் என்று அத்துமீறல்களில் திமுக-வினர் ஈடுபட அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட அதீத சுதந்திரம் காரணமானது. அதாவது, திமுக-வினர் போல கட்டுப்பாடற்ற சுதந்திரமும் ஆபத்தானது; அதிமுக-வினர் போல அதீதக் கட்டுப்பாடுகளும் ஆபத்தானது. இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட, கட்டுப்படுத்தத் தக்க, சுய கட்டுப்பாடான அரசியல் தொண்டர்களும், அதற்கான அரசியல் தலைமையுமே தமிழகத்தின் தற்போதைய தேவை. இந்த இனிய சூழலை இரு கழகங்களும் சீரழித்துவிட்டன.
ஜெயலலிதா முதல்வரான பிறகு இந்த மூன்று மாதங்களில் மூன்று முறை அமைச்சரவையில் சிறு மாற்றங்களை செய்துவிட்டார். என்ன காரணம் என்று தெரியாமலே பதவி இழந்த அமைச்சர்களும் உண்டு. அதிகாரமட்டத்திலும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பரவலாக மாற்றப்பட்டனர். அங்கும் யாரும் நிரந்தரமாக ஒரு வருடமாவது பணிபுரிவோம் என்ற எண்ணத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. இத்தகைய நிச்சயமற்ற தன்மை மாநில நலனுக்கு உகந்ததல்ல.
எந்த ஒரு முடிவையும் சுயமாக எடுக்க முடியாத அமைச்சர்களுக்கு அதிகாரிகளிடம் நல்ல மரியாதை ஏற்படாது. எந்த ஒரு உயர் அதிகாரியும், ஆடும் நாற்காலியில் அமர்ந்துகொண்டு பணிபுரிகையில் ஊழியர்களின் ஒத்துழைப்பு முழுமையாகக் கிடைக்காது. இந்த நிலையை, ஜெயலலிதாவின் எதேச்சதிகாரமான அணுகுமுறை ஏற்படுத்துகிறது. அவரது துரதிர்ஷ்டம், இதை அவரிடம் எடுத்துச் சொல்லவும், 'துக்ளக்' சோ.ராமசாமியை விட்டால் ஆளில்லை. 'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்- கெடுப்பார் இலானும் கெடும்' என்ற திருக்குறளை (குறள்- 448) தலைமைச் செயலகத்துக்கு எட்டும்படி யாரேனும் முதுகெலும்பு உள்ளவர்கள் செய்தால் அது அதிமுக அரசுக்கு நல்லது.
ஜெயலலிதாவின் மற்றொரு அரசியல் தவறு, இலவசத் திட்ட அறிவிப்புகளால்தான் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது என்று அவர் நம்பிக் கொண்டிருப்பது. தேர்தல் வெற்றியில் இலவசத் திட்டங்களின் பங்களிப்பு இருந்தது உண்மையே என்றாலும், மக்களின் நோக்கம் அது மட்டுமல்ல. ஆட்சி நிர்வாகம் செம்மைப்படுத்தப்பட வேண்டும்; விலைவாசி குறைய வேண்டும் என்ற கனவுடன்தான் ஜெயலலிதாவுக்கு அமோக ஆதரவு அளித்தனர் தமிழக மக்கள். இதை உணராமல், இலவசத் திட்டங்களை நிறைவேற்றுவதால் மட்டுமே மக்களை திருப்திப் படுத்திவிட முடியும் என்று அவர் கருதுவாரானால், கருணாநிதிக்கு நேர்ந்த கதியே அவருக்கும் நேரும்.
இலவச அரிசி, இலவச ஆடு, இலவச மாடு, இலவச கிரைண்டர், இலவச மிக்சி, இலவச மின்விசிறி.. போன்ற இலவசங்களை வழங்குவதன் மூலமாக தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றுவதைத் தவறு என்று யாரும் கூற மாட்டார்கள். ஆனால், இலவச மின்சாதனங்களை இயக்கத் தேவையான மின்சாரம் தடையின்றிக் கிடைக்கவும் இதே அரசுதான் ஏற்பாடு செய்ய வேண்டும். அதுவும் அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி அல்லவா? ''ஆட்சிக்கு வந்தவுடன் மின்வெட்டைக் குறைப்போம்'' என்ற ஜெயலலிதா, மூன்று மாதங்களின் நிறைவில், ''ஓராண்டுக்குள் படிப்படியாக மின்வெட்டு முழுமையாக நீக்கப்படும்'' என்று சட்டசபையில் நடப்பு நிதிநிலை அறிக்கையில் அறிவித்திருக்கிறார். அதனையேனும் அவர் உறுதியாக அமலாக்க வேண்டும்.
இலவசங்களை வழங்குவதை விட, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளே இப்போதைய தேவை. மீன்களை இலவசமாக வழங்கும் வரை மீன்பிடிக்க கடலுக்குள் இறங்கமாட்டான் மீனவன். இறுதியில் மீன்களை வழங்க மீன்களே இருப்பில் இல்லாத நிலை ஏற்பட்டுவிடும். ஒருவருக்கு மீனை இலவசமாக வழங்குவதைவிட, மீன்பிடிக்க கற்றுக் கொடுப்பதும், மீன்வலையை இலவசமாக அளிப்பதும் மட்டுமே புத்திசாலித்தனமாக இருக்க முடியும். இதனை உணர்ந்து, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை ஜெயலலிதா மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், மிகுந்த நம்பிக்கையுடன் அவரைத் தேர்வு செய்த மக்கள், சிறு அதிருப்தியாலும் ஏமாற்றத்தாலும், தலைகீழாக மாற வாய்ப்புள்ளது. இருமுறை எதிர்க்கட்சியிடம் ஆட்சியை இழந்த ஜெயலலிதாவுக்கு இது தெரியாமல் இருக்க நியாயமில்லை.
அதிமுக அரசின் பிரதானத் தவறாக முன்வைக்கப்படுவது சமச்சீர் கல்விக்கு எதிரான தேவையற்ற போராட்டம். முந்தைய திமுக அரசு கொண்டுவந்த திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக, எந்த முன்யோசனையும் இன்றி, எந்த ஆய்வும் இன்றி அத்திட்டத்தை கடாசியதில், இப்போது உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளாக வேண்டிய நிலை அதிமுக அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் பள்ளிக்கல்வியில் நிலவும் சீரற்ற பாடத் திட்டங்களை சரிப்படுத்த முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரனால் பரிந்துரைக்கப்பட்ட திட்டமே சமச்சீர் கல்வித் திட்டம். அதையும் திமுக அரசு முழுமையாக நிறைவேற்றவில்லை என்பது ஒருபுறமிருக்க, அதன் குறைபாடுகளை நீக்க வேண்டிய நிலையிலிருந்த அதிமுக அரசு, ஒட்டுமொத்தமாக அத்திட்டத்தையே நிராகரித்து, இப்போது சிக்கலில் தானாக மாட்டிக் கொண்டுள்ளது. உச்சநீதிமன்றம் மிகத் தெளிவாக முந்தைய ஆண்டு அறிமுகமான சமச்சீர் கல்வியை 'இந்த ஆண்டு தொடர வேண்டும்' என்று உத்தரவிட்டும், அதனை எதிர்த்து காற்றில் கத்தி வீசி சண்டைஇடுகிறது அதிமுக அரசு. 'முந்தைய திமுக அரசு பாடத்திட்டத்தில் திணித்த தேவையற்ற பகுதிகளை நீக்கிக் கொள்ளலாம்' என்று நீதிமன்றம் அளித்த அனுமதியை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக் கொள்ளாமல், பிடிவாதமான நிராகரிப்புடன் நீதிமன்றம் சென்று அதிமுக அரசு பலமுறை குட்டுப் பட்டது. இதனால் மாநிலத்தில் பள்ளி மாணவர்களின் கல்வி பாழானதுதான் மிச்சம்.
ஒவ்வொரு வீட்டிலிருந்தும் பள்ளி செல்லும் மாணவர்கள் எந்தப் பாடமும் பயிற்றுவிக்கப்படாமல் திரும்பி வருவது தொடர்கதையாகி வருவதால், ஒவ்வொரு வீட்டிலும் இந்த விஷயத்தில் அதிமுக அரசு மீது கடும் அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. அதை இன்னும் ஜெயலலிதா புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. இதை அவருக்கு விளக்குவதற்கான திராணியுள்ள கல்வியாளர்கள் எவரும் இருப்பதாகத் தெரியவில்லை.
சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை வழங்குவதற்கான காலக்கெடுவை மூன்று முறை நீதிமன்றம் நீடித்த போதேனும் தமிழக அரசு விழித்துக் கொண்டிருக்க வேண்டும். இப்போது, மிகக் கடுமையான நெருக்கடியில் சிக்கிக்கொண்டு, நீதிமன்றக் கண்டனத்தில் இருந்து விடுபட வழி தெரியாமல் திகைக்கிறது ஜெயலலிதா அரசு. அனேகமாக, விரைவில் கல்வித்துறை அமைச்சர், அரசு வழக்கறிஞர்கள் மாற்றப்படலாம். பாவம் ஓரிடம்; பழைய ஓரிடம்!
இப்போதும் (ஆக. 5 நிலவரம்) ஒன்று குடி முழுகிவிடவில்லை. தவறுகளிலிருந்து பாடம் கற்பவனே சாதனை புரிகிறான். தவறுகளை மழுப்புபவன் மீண்டும் மீண்டும் தவறு செய்து வீணாகப் போவான். திமுக அரசின் சுயவிளம்பரம் மிகுந்த பாடங்களை பாடத்திட்டத்திலிருந்து நீக்குவதாக அறிவித்துவிட்டு, நீதிமன்ற ஆணைப்படி சமச்சீர் கல்வியை உடனே பயிற்றுவிக்க அரசு ஏற்பாடு செய்வது ஜெயலலிதாவின் சரிந்த புகழை மீட்கும்.
அடுத்ததாக, விலைவாசியைக் குறைக்க உறுதியான நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்படவில்லை. குறிப்பாக கட்டுமானப் பொருள்களின் விலை விண்ணை எட்டுவதாக மாறி இருக்கிறது. இதனால் உள்கட்டமைப்புப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மணல், சிமென்ட், இரும்புக் கம்பிகள், செங்கல் போன்றவற்றின் விலையைக் குறைக்க அதிமுக அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
திருப்பூர் சாயஆலை பிரச்னையிலும் தமிழக அரசின் முன்முயற்சிகள் ஊக்கமளிப்பதாக இல்லை. யானைப் பசிக்கு சோளப்பொரி என்பதுபோல ரூ. 200 கோடி நிதி ஒதுக்குவதால் சாயஆலைக் கழிவு பிரச்னையைத் தீர்த்துவிட முடியாது. இப்போதே தொழில்நகரமான திருப்பூர் பாதி காலியான நிலையில் தவிக்கிறது. இப்போதைய தேவை, அரசு உச்சநீதிமன்றத்தில் தெளிவான வாக்குறுதி அளித்து தொழில்துறை பழையபடி இயங்கச் செய்வதே. சமச்சீர் கல்வியில் வீம்புக்கு வேட்டையாடும் அதிமுக அரசு, அதில் ஒரு பங்கை திருப்பூர் சாயஆலை விவகாரத்தில் காட்டி இருக்கலாம்.
தொழில்துறை பாதிக்கப்படுவது வேலையில்லாத் திண்டாட்டம், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு உள்ளிட்டவற்றுக்கே வழிகோலும். சாயக் கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மறுவாழ்வும், உத்தரவாதத்துடன் கூடிய அனுமதியால் தொழில்துறை மீளச் செய்வதுமே தற்போதைய தமிழக அரசிடம் எதிர்பார்க்கப்படுபவை. இதனைச் செய்யாமல், முந்தைய அரசின் குறைபாடுகளை மீண்டும் மீண்டும் ஒப்பித்துக் கொண்டிருப்பது நல்லரசுக்கு அழகல்ல. திமுக அரசின் குறைபாடுகளைப் போக்கவே அதிமுக அரசை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதை ஜெயலலிதா மறந்துவிடக் கூடாது. இந்த விஷயத்தில், குஜராத் மாநிலத்தில் நடைபெறும் சுத்திகரிப்புப் பணிகள் முன்னுதாரணமாக அமையலாம் என்ற எண்ணத்தில் அங்கு ஒரு குழுவை ஜெயலலிதா அனுப்பி இருப்பது பாராட்டுக்குரியது. எது எப்படி இருப்பினும், காலம் தாழ்த்தாத விரைவான நடவடிக்கையே இப்போதைய எதிர்பார்ப்பு.
இதுவரையில் அதிமுக அரசின் குறைபாடுகளைக் கூறிவிட்டு, அதன் நிறைகளைக் கூறாமல் விடுவது நியாயமல்ல. முதலாவதாக, ''புதிய அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை எந்த பாராட்டு விழாவிலும் பங்கேற்பதில்லை'' என்ற ஜெயலலிதாவின் முடிவு மெச்சுவதற்கு உரியது. ''அரசு நலத் திட்டங்களைத் துவக்கிவைக்க ஆடம்பரமான விழாக்கள் தேவையில்லை; அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே நடைமுறை வழக்கப்படி திட்டங்களை துவக்கிவைக்கலாம்'' என்ற அறிவிப்பும் பாராட்டிற்குரியது.
கட்சியின் மிகச் சாதாரணமான தொண்டர்களும் கூட அமைச்சர் ஆக்கப்பட்டிருப்பது ஜனநாயகத்திற்கு வலிமை அளிக்கிறது. 'தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு' என்ற கிறுக்குத்தனமான சலுகைக்கு கடிவாளம் இட்டிருக்கிறார் ஜெயலலிதா. தமிழில் பெயர் இருந்தாலும், வன்முறை, ஆபாசம் இல்லாமல், தமிழ்ப் பண்பாட்டை கேவலப்படுத்தாமல் படம் எடுத்திருந்தால் மட்டுமே தமிழ்த் திரைப்படங்களுக்கு வரிச்சலுகை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அரசின் புத்திசாலித்தனமான முடிவு இது.
திரைத்துறையினர் அரசியல் செல்வாக்கு மிகுந்த குடும்பங்களின் நெருக்குதல்களுக்கு உட்பட்டு விழி பிதுங்கி இருந்த நிலையும் மாறிவிட்டது. சக்சேனா கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் திரைத் துறையினருக்கு புத்துணர்வு அளித்திருக்கின்றன. அரசியல் அத்துமீறல்களால் திரைத்துறையினரை ஆட்டுவித்தவர்கள் இப்போது ஓடி ஒளியும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
அதிகாரபலத்தால் சாமானிய மக்களை மிரட்டி நிலப்பறிப்பில் ஈடுபட்ட முந்தைய அரசின் பிரதிநிதிகள் பலர் சிறைக்குள் செல்லும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கென தனியே ஏற்படுத்தப்பட்டுள்ள விசேஷப் பிரிவில் தினந்தோறும் குவியும் மலை போன்ற புகார்கள், திமுக அரசின் அடாவடித்தனத்தை பறைசாற்றுகின்றன. வீரபாண்டி ஆறுமுகம், என்கேகேபி.ராஜா, அன்பழகன் என, நிலப்பறிப்பு வழக்குகளில் கைதாகும் முன்னாள் பிரமுகர்களின் தற்போதைய இழிநிலையைக் கண்டபிறகாவது, இதுபோன்ற கீழ்த்தரமான செயல்பாடுகளில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை குறையும். இந்த வழக்குகளை நியாயமான முறையில் விசாரித்து நீதியை நிலைநாட்ட வேண்டும். கத்திமீது நடப்பது போன்ற இந்த நடவடிக்கையில் சிறிது பிசகினாலும், ‘பழிவாங்கும் அரசியல்’ என்ற பழிச்சொல்லுக்கு ஆளாக நேரும்.
இந்த அதிரடி நடவடிக்கைகளால் திமுக கலங்கிப் போயிருப்பது அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கோவையில் நடந்த பொதுக்குழுவில் பேசியபோது பட்டவர்த்தனமாகப் புலப்பட்டது. ''திமுக-வின் தோல்வி நமக்கு நாமே தேடிக்கொண்ட முடிவு'' என்று அறிவித்த கலைஞர், ''திமுக-வினரை அரசு தொடர்ந்து கைது செய்தால் அந்தச் செய்திகள் முக்கியத்துவம் பெற்று, உங்களது நல்லாட்சியால் பெறும் புகழ் பத்திரிகைகளில் இடம்பெறாமல் போய்விடும்'' என்று ஜெயலலிதாவுக்கு அனுபவரீதியிலான அறிவுரை வழங்கி இருக்கிறார். திமுகவின் நிலைகுலைந்த தன்மை அதிமுக-வுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்.
இவ்வாறாக, தமிழக அரசின் செயல்பாடுகள் நன்மையையும் தீமையும் கலந்தவையாக உள்ளன. மிகக் குறுகிய காலத்தில் சமச்சீர் கல்வி விவகாரத்தால் கெட்ட பெயர் வாங்கியுள்ள அதிமுக அரசு, நிலப்பறிப்பு வழக்குகள் போன்றவற்றால் நல்ல பெயரையும் பெற்றுள்ளது. 'கடவுள் பாதி, மிருகம் பாதி' கலந்துசெய்த கலவையாக ஜெயலலிதா அரசு காட்சி அளிக்கிறது. இந்த அரசிடம் நூறு சதவிகிதம் ஆக்கப்பூர்வமான ஆட்சியை எதிர்பார்க்க வாக்களித்த குடிமக்களுக்கு உரிமை உள்ளது. அதை நிறைவேற்றுவது தாயுள்ளம் கொண்ட 'அம்மா’ வின் பொறுப்பு.
-------------------------
விஜயபாரதம் (19.08.2011)
.