திங்கள், பிப்ரவரி 07, 2011

ராசா கைது ஆரம்பமே… இனிதான் இருக்கிறது பூகம்பமே!

நன்றி: மதி/தினமணி/04.02.2011
.
“பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்” என்பது பழமொழி. வானவில் அலைக்கற்றை விநியோகத்தில் தமிழகத்தின் ஆண்டிமுத்து ராசா நிகழ்த்திய வரலாறு காணாத மோசடிக்காக மூன்று ஆண்டுகள் கழிந்த நிலையில் தற்போது (2.2.2011) கைது செய்யப்பட்டிருக்கிறார். இது எதிர்க்கட்சிகள் கூறுவதுபோல கண்துடைப்பு நாடகமாக இருக்க வாய்ப்புகள் இல்லாமல் இல்லை. உச்சநீதி மன்றத்தில் மத்தியப் புலனாய்வுத் துறை (சி.பி.ஐ) பிப். 10 ம் தேதியன்று நடவடிக்கை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிலையில், மத்திய அரசுக்கு ராசா கைதைத் தவிர வேறு வழியில்லை என்பது நிதர்சனம்.

எது எப்படியானாலும், ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் ராசா கைது முக்கியமான ஒரு நடவடிக்கையே. காலம் கடந்த நடவடிக்கையே என்றாலும், மத்திய அரசின் முகமூடியைத் தோலுரிக்கவும், நாட்டு மக்களுக்கு நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் அவசியத்தை உணர்த்தவும் ராசா கைது உதவி இருக்கிறது. ‘பலிகடா’ ராசாவுக்கு நன்றி.

''இத்தனை பெரிய ஊழலை ராசா மட்டும் தனியாக செய்திருக்க முடியுமா?'' என்ற கேள்வியை முதலில் எழுப்பியவர் (5.12.2010), ராசாவின் தானைத் தலைவர் மு.கருணாநிதி தான். அவர்தான் ராசாவுக்கு பின்புலத்தில் இருந்தவர்களை வெளிப்படுத்த வேண்டும். அதன்மூலமாக, ஒரு தலித்தை பலிகடா ஆக்கும் சோனியா குழுமத்தின் (நமது மத்திய அரசு சோனியா (பி) குழுமமாகி மாமாங்கமாகிவிட்டது) சூழ்ச்சியை அவரால்தான் முறியடிக்க முடியும்.

லஞ்சம் மற்றும் ஊழலுக்கு நெருப்பான திருக்குவளை முத்துவேல் கருணாநிதிக்கு இந்த அளப்பரிய கடமை உண்டு. ஆனால் அவரோ, தில்லியில் ஆறு மணிநேரம் காத்திருந்து அன்னை சோனியாவின் தரிசனம் பெற்று வருவதை பூர்வஜன்ம புண்ணியமாகக் கருதிக் கொண்டிருக்கிறார். மொத்தத்தில் ராசா விரைவில் ‘தியாகி’ பட்டம் சுமக்கக் கூடிய நாள் நெருங்கிவிட்டதாகவே தெரிகிறது.

இதே கருணாநிதி, ராசா மீது கடுகளவு குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் உடனே அவரை கட்சியிலிருந்து வெளியேற்றுவோம் என்று சொன்னது பழங்கதை. இன்று அவரே தி.மு.க. பொதுக்குழுவில் ''கைது செய்யப்பட்டதாலோ, குற்றம் சுமத்தப்பட்டதாலோ ஒருவர் குற்றவாளி ஆகிவிட மாட்டார்'' என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார். நாக்கிற்கு நரம்பில்லை என்று சும்மாவா சொன்னார்கள்?

அதே பொதுக்குழுவில் 'ராசா கைது ஓரளவு கலங்கவும் அதிர்ச்சி அடையவும் வைப்பதாக' கருணாநிதி பேசினார். அது என்ன ஓரளவு? ஒருவேளை ராசா கைதுடன் சி.பி.ஐ நின்றுகொண்டதே, அதுவா? அல்லது அடுத்து வரும் வாரங்களில் காங்கிரஸ் எந்த திசையில் நகரும் என்று தெரியாத திகைப்பா? இந்த லட்சணத்தில் பா.ஜ.க. தலைவர் நிதின் காட்கரியைக் கண்டித்து தி.மு.க. பொதுக்குழு தீர்மானம் (3.2.2011) நிறைவேற்றி இருக்கிறது.

''2 ஜி அலைக்கற்றை ஊழல் என்ற திரைப்படத்தில் கதாநாயகன் ராசா என்றால் இயக்குனர் கருணாநிதி தான்'' என்று காட்கரி சென்னை வந்தபோது விமர்சித்தாராம். அதற்காகத் தான் இந்தக் கண்டனத் தீர்மானம். காட்கரி சொன்ன இன்னொரு விஷயத்தைப் பற்றி கருணாநிதி பொதுக்குழுவில் மூச்சே விடவில்லை. அது என்ன தெரியுமா?

''அலைக்கற்றை மோசடியில் ராசாவை பலிகடா ஆக்கி மத்திய அரசு தப்பித்துவிடக் கூடாது. அவருக்கு பின்னணியில் இருந்த அனைவர் மீதும், கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்த பிரதமர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ராசா தனக்குத் தெரிந்த அனைத்து உண்மைகளையும் சி.பி.ஐ.இடம் சொல்லி பலிகடா ஆகாமல் தப்பிக்க வேண்டும்'' என்றும் காட்கரி சொன்னார். உண்மையில் காட்கரியின் கருத்து ராசாவுக்கு ஆதரவானதல்லவா? பிறகு ஏன் கருணாநிதி காட்கரியைக் கண்டித்திருக்கிறார்? அங்கு தான் இருக்கிறது சூட்சுமம்.

முதலாவது, ராசாவைப் பின்னணியில் இயக்கிய பெரு முதலாளிகள் பலர் அதற்கான நன்றிக்கடனைச் செலுத்திவிட்டார்கள். அதில் பெரும் பங்கு தி.மு.க. தலைமைக்கும், காங்கிரஸ் தலைமைக்கும் தான் பட்டுவாடா ஆகியிருக்கிறது. இந்தப் பணம் எந்த நாட்டில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்ற புள்ளிவிபரங்கள் கூட கசிய ஆரம்பித்துவிட்டன. மோசடி முறையில் அலைக்கற்றைகளை தாரை வார்த்த ராசாவுக்கு கிடைத்தது எள்ளுருண்டையாக (இதுவே ஆறாயிரம் கோடி என்கிறார்கள்!) இருக்கலாம். ஆனால், ராசாவை முன்வைத்து பணம் பண்ணியவர்கள் சம்பாதித்தது பல்லாயிரம் கோடி. கோடிகளை ஏப்பம் விட்ட கேடிகள் ராசாவைக் காப்பாற்ற முன்வருவார்களா?

அடுத்ததாக, ராசா மூலமாகக் கிடைத்த லாபப்பணம் தி.மு.க. தலைமைக் குடும்பத்தின் நகராச் சொத்துகளாக மாற்றப்பட்டுவிட்ட நிலையில், மத்தியில் உள்ள சோனியாவை எதிர்ப்பது ஆபத்து என்பது எம்.ஜி.ஆரையே ஏமாற்றிய கருணாநிதிக்குத் தெரியாதா? சர்க்காரியா கமிஷனை அவரால் மறக்கத்தான் முடியுமா? கை கொடுக்கும் கை எப்போது வேண்டுமானாலும் கைவிடத் தயங்காது என்பது, தில்லியில் காத்திருந்தபோதே கருணாநிதிக்கு புரிந்துவிட்டது. எனவே இப்போதைக்கு அன்னை சோனியாவை ஆத்திரமூட்டுவதை கலைஞர் கண்டிப்பாக விரும்ப மாட்டார்.

பொழுது போகாமல் இருக்கும் நேரங்களில் தானே கேள்வி கேட்டு தானே பதில் கூறும் கருணாநிதி, இப்போது ஏன் அமைதி காக்கிறார்? அவரது தலித் பாசம் அவ்வளவு தானா? ராசா கைது குறித்த பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்காததன் மர்மம் என்ன? அடுத்து கனிமொழியையும் ராசாத்தியையும் கைது செய்து விடுவார்கள் என்ற அச்சமா?
எனினும் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக, ''ராசா குற்றவாளி இல்லை'' என்று திமு.க. பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. உச்சநீதி மன்றமும் மத்திய தணிக்கை ஆணையமும் (சி.ஏ.ஜி) சி.பி.ஐ.யும் இந்தத் தீர்மானத்தை சிரமேற்றுச் செயல்படுவதுதான் பாக்கி.
.
வானவில் ஊழல் - ஒரு பின்னோக்கு:

எந்த ஒரு திரைப்படத்திலும் பின்னோக்கு உத்தி (பிளாஷ்பேக்) பயன்படுத்தப்பட்டால் தான் சுவாரசியமாக இருக்கிறது. வானவில் ஊழலிலும் பின்னோக்கு நமக்கு தேவையாக இருக்கிறது. ஏனெனில், திகில் கதையை விஞ்சும் அதிரடியான திருப்பங்கள் நிறைந்தது தான் வானவில் மோசடி கதை.
இந்தக் கதை முதலில் துவங்குவது மதுரையில் தான் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். அங்கிருந்த தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டது (8.5.2007) தான், அப்போதைய தொலைதொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறனின் அமைச்சர் பதவி பறிபோக வித்திட்ட காரணம், அதனால் தான் ஆண்டிமுத்து ராசாவுக்கு அதே துறையின் அமைச்சராக (18.5.2007) முடிந்தது.

அதே நாளில், இரண்டாவது தலைமுறை (2 ஜி) அலைக்கற்றை விநியோகம் தொடர்பான சந்தைவிலை நிர்ணயம் குறித்த பரிந்துரைகளை, மத்திய தொலைதொடர்பு ஆணையம் (டிராய்) ராசாவின் அமைச்சகத்திற்கு அனுப்பியது. அதனை நிராகரித்தார் ராசா (28.5.2007). 2001 ல் கடைபிடிக்கப்பட்ட 'முதலில் வருவோருக்கே முன்னுரிமை' என்ற அடிப்படையில் அலைக்கற்றை விநியோகிக்கப்படும் என்றார் ராசா. அதையும் கூட அவர் ஒழுங்காகச் செய்யவில்லை என்பதும், 2001 ன் விலை 2008 ல் சரியாகுமா என்பதும் வேறு விஷயம் .

மிகவும் அவசரமான, சூழ்ச்சியான முறையில், அதே ஆண்டு செப். 20 - 25 தேதிகளுக்குள், ஸ்வான், யூனிடெக் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அலைக்கற்றைகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டன. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி 2007, அக்.1 என்று தொலைத்தொடர்புத் துறையால் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், திடீரென்று செப். 25ம் தேதியே கடைசித் தேதி என்று, எந்த முன்னறிவிப்பும் இன்றி விண்ணப்பங்கள் பெறுவது நிறுத்தப்பட்டது. பிறகு, முன்கூட்டியே திட்டமிட்ட 9 நிறுவனங்களுக்கு தலா ரூ. 1,650 கோடி விலையில் அலைக்கற்றைகள் விநியோகிக்கப்பட்டன. இதன்மூலமாக அரசுக்கு ரூ. 10 ஆயிரம் கோடி கூட கிடைக்கவில்லை.

இது குறித்து பிரதமர் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டவுடன், அவரும் ராசாவுக்கு அறிவுரை கூறி கடிதம் எழுதினார். நியாயமான முறையில் அலைக்கற்றைகள் விநியோகிக்கப்பட வேண்டும் என்று அதில் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டார். அதை ராசா கண்டுகொள்ளவே இல்லை. மாறாக, பகிரங்க ஏலமுறை சாத்தியம் இல்லை என்று அவர் அறிவித்தார் (25.10.2007). இப்போது பிரதமர் கண்டுகொள்ளவில்லை.
.
ஏலத்தில் பயன் பெற்ற சில நிறுவனங்கள் தங்கள் பங்குகளை பல மடங்கு விலைக்கு விற்று லாபம் பார்த்தன (2008) . இதையடுத்து அரசால் புரசலாக இந்த ஊழல் விவகாரம் வெளிவந்தது. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சி.வி.சி) நடத்திய விசாரணையில், ஊழலின் முகாந்திரம் உறுதியானது. இதையடுத்து பிரதமருக்கு விரிவான அறிக்கை அனுப்பப்பட்டது. ராசாவுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது (15.11.2008). இது குறித்து பதிலளித்த ஆ.ராசா, ''பிரதமருக்குத் தெரிந்துதான் அனைத்தும் நடந்தன'' என்றார்.

இந்நிலையில், சி.ஏ.ஜி அறிக்கை புயலாக வந்தது. அலைக்கற்றை விநியோகத்தில் நடந்த முறைகேடுகளால் மத்திய அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக சி.ஏ.ஜி. அறிவித்தது (17.10.2009). இதனால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், ராசாவும் மன்மோகனும் ஸ்திதப்பிரக்ஞர்களாக காட்சி அளித்தனர்.
.
பல்வேறு தரப்பில் இருந்து வந்த நிர்பந்தங்களை அடுத்து, ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது (21.10.2009). மறுநாள் மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சகத்தில் சோதனையும் நடத்தப்பட்டது. ஆயினும் ராசா கல்லுளிமங்கனாக அமைதி காத்தார்; பிரதமரோ இடிச்சபுளி போல அமைதி காத்தார்.
.
சி.பி.ஐ வழக்கு கண்துடைப்பு நாடகம் என்றுணர்ந்த ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியம் சாமி பிரதமர் மன்மோகனுக்கு பல கடிதங்களை (31.10.2009) எழுதினார். இவர் 2008 நவ. 29 லும் ஒரு கடிதத்தை எழுதி இருந்தார். 2010 லும் மார்ச் 8, 13 தேதிகளில் நினைவூட்டும் கடிதங்களை சாமி எழுதினார். ”தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், அமைச்சர் ராசாவின் தன்னிச்சையான செயல்பாட்டால், அரசுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ராசா மீது வழக்குத் தொடர அனுமதி அளிக்க வேண்டும்” என்று அதில் கூறி இருந்தார். ‘திருவாளர் புனிதமான’ மன்மோகனார் வழக்கம் போலக் கண்டுகொள்ளவே இல்லை.

வேறு வழியின்றி, சாமி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார் (12.4.2010). வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிபி.ஐ, அளித்த பதில், நீதிபதிகளை கோபமூட்டியது. வழக்கு விசாரணையில் இருப்பதாக கூறிய சி.பி.ஐ.யை ''இதேபோலத் தான் அனைத்து வழக்குகளிலும் செயல்படுவீர்களா?'' என்று நீதிபதிகள் கண்டித்தனர் (29.10.2010).

மத்திய நிதி அமைச்சகத்திடம் சி.ஏ.ஜி தனது அறிக்கையை தாக்கல் செய்தது (10.11.2010). அதில் ஸ்பெக்ட்ரம் ஊழலால் இழப்பு ஏற்பட்டதை மீண்டும் சுட்டிக் காட்டியது. மறுநாள் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில், ''2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எந்த முறைகேடும் நடக்கவில்லை; எனவே சி.பி.ஐ விசாரணையும் தேவையில்லை'' என்று பதிலளித்தது.

இதனை பரிசீலித்த நீதிபதிகள் மத்திய அரசை கடுமையாகக் குறை கூறினர் (16.11.2010). உச்சநீதி மன்றத்தின் கண்டனத்திற்கு அஞ்சி, நவ. 14 ல் ராசா பதவி விலகினார்; கபில் சிபல் அந்த துறைக்கு (நவ. 15) பொறுப்பேற்றார்.

இந்த விவகாரம் நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருந்த அதே நேரத்தில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும், ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தால் ஸ்தம்பித்தன (9.11.2010- 13.12.2010). குளிர்காலக் கூட்டத்தொடர் ஒருநாள் கூட நடக்காமல் வீணானது.

ராசா, அவரது நண்பர் (பினாமி?) சாதிக் பாட்சா, கனிமொழியின் நண்பர் (பினாமி?) ஜெகத் கஸ்பர் உள்ளிட்ட பலரின் வீடுகளில் சி.பி.ஐ திடீர் சோதனை நடத்தியது (8.12.2010). ‘ராசாவுக்கு அமைச்சர் பதவி வழங்கிய' அதிகாரத் தரகர் நீரா ராடியா, டிராய் முன்னாள் தலைவர் பிரதீப் பைசால் உள்ளிட்ட பலரது இருப்பிடங்களில் மீண்டும் சி.பி.ஐ. சோதனை நடத்தியது (15.12.2010).

அதைத் தொடர்ந்து டிச, 24, 25, 31 தேதிகளில் ஆ.ராசாவிடம் செல்லமான விசாரணை தில்லி சி.பி,ஐ. அலுவலகத்தில் நடத்தப்பட்டது. இதில் தெரியவந்த விஷயங்களை சி.பி.ஐ வெளிப்படுத்தவில்லை (ராசா என்ன இந்திரேஷ் குமாரா, விசாரிக்கப்படாததையும் கூட கசியவிட?).

பிரச்னையை திசைதிருப்ப நீதிபதி சிவராஜ் பாட்டில் தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை (டிச. 13) சிபல் நியமித்திருந்தார். 2001 முதலான அலைக்கற்றை ஒதுக்கீடுகளை இக்குழு விசாரிக்கும் என்று அவர் சொன்னார். அக்குழுவோ ராசாவிடம் விசாரணை நடத்தப்படாது என்று மறுநாளே அறிவித்தது! இக்குழு தனது 150 பக்க அறிக்கையை கபில் சிபலிடம் வழங்கியது (31.1.2011). இதில் அமைச்சர் ராசா, அவரது துறை அதிகாரிகள் சிலர் மீது மோசடி குற்றம் சாட்டப்பட்டிருப்பதாக தகவல். மத்திய அரசு இதையும் வெளியிடவில்லை.

இதனிடையே, பா.ஜ.க. தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான நாடாளுமன்ற பொது கணக்குக் குழு ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரணையைத் துவக்கியது. ‘ஊழல் நடக்கவில்லை; சி.ஏ.ஜி. அறிக்கை தவறு’ என்று கபில் சிபல் (ஜன. 9) கூறியதை ஜோஷி வன்மையாகக் கண்டித்தார். உச்சநீதி மன்றமும் சிபலைக் கண்டித்தது (ஜன. 11).

நாடு முழுவதும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஸ்பெக்ட்ரம் ஊழலை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு பல வகையான ஆர்ப்பாட்டங்களை நடத்தின. இப்போதும் நடத்துகின்றன. இந்நிலையில் ராசாவிடம் நான்காம் முறையாக சி.பி.ஐ விசாரணை நடத்தியது (1.2.2011). மறுநாள் விசாரணைக்கு வந்த ராசாவை கைது செய்த சி.பி.ஐ. ஐந்துநாள் காவலில் வைத்து விசாரித்தது. ராசாவுடன் மத்திய முன்னாள் தொலைதொடர்புத் துறை செயலர் சித்தார்த்த பெஹூரா, ராசாவின் முன்னாள் தனிச் செயலர் ஆர்.கே.சந்தாலியா ஆகியோரும் கைதாகி உள்ளனர். மேலும் பலர் கைதாக வாய்ப்புள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன.

இப்போது நடப்பது உச்சமா?

திரைப்படத்தின் இறுதியில் வருவது உச்சகட்டம் எனப்படும் ‘கிளைமேக்ஸ்’. அப்படி ராசாவின் கைதைக் கூற முடியுமா? படத்தின் பெரும்பகுதியை பின்னோக்கு விழுங்கிவிட்ட நிலையில், அநேகமாக ராசா கைது, ‘ஸ்பெக்ட்ரம் ஊழல்’ என்ற மாபெரும் கதையின் முதல்பாகத்திற்கு வேண்டுமானால் முடிவாக இருக்கலாம். இதன் அடுத்த பகுதியில் தான் பல ரகசியங்கள் அவிழ வேண்டி இருக்கிறது.

அதாவது ராசா கைது முடிவல்ல; ஆரம்பமே. இத்துடன் நேயர்கள் திருப்தி அடைந்துவிட்டால், ஊழலின் சூத்திரதாரிகள் தப்பிவிட வழி ஏற்பட்டுவிடும்.
எனவே தி.மு.க. பொதுக்குழு தீர்மானத்தின் படி, 'ராசா (மட்டும்) குற்றவாளி இல்லை' என்று நாமும் ஏற்போம். அப்போது தானே யார் குற்றவாளி என்ற கேள்வியை அடுத்து கேட்க முடியும்? கருணாநிதியின் நெருங்கிய நண்பரான வைரமுத்து (இவரது புத்தகத்தை வெளியிடுவதற்காகவே பிரதமரையும் கூட புறக்கணித்தாராம் மு.க!) பாணியில் கேள்விகளால் வேள்விகளை நாம் தொடர்ந்து செய்ய வேண்டியது தான்.

--------------------------------------
முழு கட்டுரையையும் காண்க: தமிழ் ஹிந்து
நன்றி: விஜயபாரதம் (18.02.2011)
.

சனி, பிப்ரவரி 05, 2011

பாடம் கற்குமா பா.ம.க?


புத்திசாலிகள் எப்போதும் புத்திசாலிகளாகவே இருக்க முடியாது என்பதை பாட்டாளி மக்கள் கட்சி தற்போது நிரூபித்து வருகிறது. வன்னியர் வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு துவங்கப்பட்ட பா.ம.க. அதைக் காட்டியே இரு திராவிட கழகங்களை மிரட்டி இதுவரை மீன் பிடித்து வந்தது. ஆறு மாவட்டங்களை மட்டும் நம்பி இருக்கும் பா.ம.க.வை கூட்டணியில் சேர்ப்பதால் அக்கட்சிக்குத் தான் லாபம் என்பதை தாமதமாகவே இரு கழகங்களும் உணர்ந்துள்ளன. அதன் பயன்தான், பா.ம.க.வின் புத்திசாலிதனமான திட்டங்கள் பல்லிளிக்கத் துவங்கி உள்ளன.

எம்.ஜி.ஆர் ஆட்சி இருந்த வரை ராமதாசால் தலையெடுக்க முடியவில்லை. பிறகு ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தைப் பயன்படுத்தி முன்னணிக்கு வந்தது. 1989 முதல் தேர்தலில் போட்டியிட்ட பா.ம.க. 1991 ல் ஒரு எம்.எல்.ஏ.வுடன் தனது கணக்கைத் துவக்கியது. 1996 சட்டசபை தேர்தலில்தான் இது 4 எம்.எல்.ஏக்கள் ஆனது. அதே ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு எம்.பி.யும் கிடைத்தது.
.
பிறகு 1998 ல் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றதன் மூலமாக 4 எம்.பி.க்களைப் பெற்ற பா.ம.க, வாஜ்பாய் தலைமையிலான அரசில் அமைச்சர் பதவியையும் பெற்றது. பிறகு ஜெயலலிதாவின் கைங்கர்யத்தால் வாஜ்பாய் அரசு கவிழ, கூட்டணி மாறியது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், தி.மு.க.வுடன் சேர்ந்து இடம் பெற்ற பா.ம.க., 1999 நாடாளுமன்றத் தேர்தலில் 5 எம்.பி.க்களைப் பெற்றது. வாஜ்பாய் அமைச்சரவையிலும் பா.ம.க மீண்டும் இடம் பெற்றது.

2001 சட்டசபை தேர்தலில் மீண்டும் அணி மாறிய பா.ம.க, அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றது. அப்போது 18 எம்.எல்.ஏக்களைப் பெற்றது. இந்த உறவும் நிலைக்கவில்லை. 2004 நாடாளும்றத் தேர்தலில் மீண்டும் தி.மு.க. அணிக்குத் திரும்பிய பா.ம.க, இம்முறை 6 எம்.பி.க்களைப் பெற்றது. ராஜ்யசபா எம்.பி.யான அன்புமணி ராமதாஸ், காங்கிரஸ் தலைமையிலான மன்மோகன் சிங் அரசில் சுகாதாரத் துறை அமைச்சரானார். (நானோ எனது குடும்பத்தினரோ அரசியல் அதிகார பதவிக்கு வர மாட்டோம். அவ்வாறு வந்தால் என்னை முச்சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடிக்கலாம் என்று சொன்னவர் ராமதாஸ்)
.
2006 சட்டசபை தேர்தலில் அதே அணியில் நீடித்த பா.ம.க, 18 எம்.எல்.ஏக்களைப் பெற்றது. அதன் பிறகு மீண்டும் தி.மு.க.வுடன் உறவு கசந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்குத் தாவிய பா.ம.க, தனது நம்பகத் தன்மையை இழந்தது. இம்முறை, போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோற்று மண்ணைக் கௌவியது பா.ம.க.

இந்தத் தோல்விதான் பா.ம.க.வின் சுயபலத்தை அம்பலப்படுத்தியது. அதன் விளைவே இப்போது இரு கழகங்களாலும் காங்கிரசாலும் புறக்கணிக்கப்படும் நிலையை பா.ம.கவுக்கு ஏற்படுத்தி இருக்கிறது. ஒவ்வொரு தேர்தலுக்கும் அணி மாறி சுயநலனுடன் செயல்பட்ட பா.ம.க தனது நம்பகத் தன்மையை இழந்து, கூட்டணிக்கு ஏங்கும் நிலையில் தற்போது தவிக்கிறது.

தமிழகத்தில் நிலவும் அரசியல் அடிப்படையிலேயே புதுவையிலும் கூட்டணியைத் தீர்மானித்து செயல்படும் பா.ம.க.வுக்கு அங்கு மட்டுமாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற கனவுண்டு. தமிழகத்திலும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பா.ம.க. ஆட்சிதான் என்று மருத்துவர் ராமதாஸ் முழங்கியதுண்டு. எல்லாமே கற்பனைக் கோட்டைகள் தான் என்பதை அக்கட்சியின் சமீபத்திய நடவடிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளன.

கொள்கையற்ற அரசியல், சுயநலம் மிகுந்த செயல்பாடு, ஜாதி வட்டத்தை மீறாமல் நடிக்கும் பாசாங்கு, ஆட்சியதிகாரத்தில் கிடைக்கும் லாபத்தை அடையத் துடிக்கும் அல்பத்தனம் என, பா.ம.க.வின் சுயரூபம் நாள்தோறும் வெளிவந்து, ராமதாசை ‘கோமாளி’ என்ற நிலைக்கு ஆளாக்கி இருக்கிறது.

அவ்வப்போது மதுவிலக்குக் கொள்கை பிரகடனம், திரைநாயகர்கள் மீது தாக்குதல், இலங்கைத் தமிழரின் துயரம் குறித்த கண்ணீர், தனித்தமிழ் குறித்து ஆலாபனை என்று அக்மார்க் திராவிட கட்சியாகத் திகழ்ந்தாலும், பா.ம.கவுக்கென்று உள்ள குறுகிய வட்டத்தை மீறி அக்கட்சியால் வளர முடியவில்லை. இதற்கு, அக்கட்சித் தலைவரின் அதிகார வேட்கையுடன் கூடிய தாவல்களும் காரணம் என்பதை மறுக்க முடியாது.

ஆனாலும் தமிழகத்தில் வாக்குகள் சிதறுவதால் எதிரணியினர் அடையும் லாபத்தைத் தவிர்க்க பா.ம.க.வுக்கு இரு கழகங்களும் வலை வீசுகின்றன. எனவேதான் ராமதாசின் குயுக்தியான மூளையும் வேகமாக வேலை செய்கிறது. இரு கட்சிகளுடனும் இறுதிவரை பேரம் பேசி அதிகபட்ச தொகுதிகளையும் இன்னபிற வசதிகளையும் பெற மருத்துவர் அய்யா திட்டமிட்டு காய் நகர்த்துகிறார்.
.
தில்லி சென்ற தி.மு.க தலைவர் கருணாநிதி, தங்கள் கூட்டணியில் பா.ம.க. இருக்கிறது என்று சொன்ன சில மணி நேரத்தில், '' கூட்டணி குறித்து பா.ம.க. இன்னும் முடிவு செய்யவில்லை'' என்று கூறி மு.க. முகத்தில் கரி பூசினார் ராமதாஸ். இதையடுத்து, அப்படியானால் அப்படித்தான் என்ற பாணியில் வெறுத்துப்போய் அறிவித்தார் தமிழகத்தின் அதிபயங்கர ராஜதந்திரியான மு.க. திருநெல்வேலிக்கே அல்வா கொடுத்தால் கசக்காமல் இருக்குமா?

ஆனாலும் அ.தி.மு.க. வட்டாரத்திலிருந்து பா.ம.க.வுக்கு இன்னும் அழைப்பு வரவில்லை. கருணாநிதியின் அவேச பல்டியால், 'உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா'' என்று இடிந்த்போயிருக்கும் ராமதாசை அ.தி.மு.க.அரவணைக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. ஏனெனில், இப்போது பேரம் பேசுவதற்கான வலுவை பா.ம.க இழந்துவிட்டது.
.
இந்நிலையில், பா.ம.க.வை கூட்டணியில் சேர்க்க சோனியா எதிர்ப்பு தெரிவிப்பதாக வதந்தி பரவி வருவது ராமதாசை குலை நடுங்கச் செய்துள்ளது. (ஒருவேளை, கிடைத்த கமிஷனில் குறிப்பிட்ட சதவிகிதத்தை ஆ.ராசா போல சோனியாவுக்குக் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டாரோ அன்புமணி?)

மத்திய அமைச்சராக அன்புமணி இருந்தபோது நடத்திய திருவிளையாடல்களே சோனியாவின் எதிர்ப்புக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. எனவே அன்புமணி தில்லி சென்று பலரை தாஜா செய்து சோனியாவை அமாதானப்படுத்த முயற்சித்ததாகவும் இதுவரை பலனில்லை என்றும் கூறுகிறார்கள்.

தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் அதிக இடங்களைப் பெறவே காங்கிரஸ் இந்த நாடகத்தை நடத்துவதாகவும் தகவல். இதுவரை கூட்டணி மாற்ற நாடகங்களை நடத்தி பயனடைந்து வந்த பா.ம.க.வுக்கு இது புதுசு. இப்போது மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தத்தளிக்கும் பா.ம.க, அநேகமாக தனித்துப் போட்டியிடும் சூழல் இந்த சட்டசபை தேர்தலில் வைக்கலாம். தனித்து ஆட்சி அமைப்போம் என்ற பா.ம.க.வின் கனவு இப்படி மாறும் என்று மருத்துவர் அய்யா கனவு கண்டிருக்க மாட்டார். என்ன செய்வது, எல்லோரும் எப்போதும் முட்டாள்களாக இருந்து அவரை புத்திசாலி ஆக்க மாட்டார்கள் அல்லவா?

இந்தக் கட்டுரையின் நீதி:
அடுத்தவன் தோளில் சவாரி செய்பவன் அதிகப் பிரசங்கித்தனம் செய்யக் கூடாது.