புதன், நவம்பர் 24, 2010

ரொம்ப நல்ல கட்சி காங்கிரஸ் கட்சி!


வெளிவரும் ஊழல்கள்; வெளிவராத தகவல்கள்...

உப்பு தின்றவன் தண்ணீர் குடித்துத் தான் ஆக வேண்டும்; ஊழல் செய்பவர் கண்டிப்பாக மாட்டித்தான் ஆகவேண்டும். ஆனாலும் மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ளவர்கள், தாங்கள் செய்யும் ஊழல்களுக்கு உடனடியாக மாட்டிக்கொள்ளும் அவசியம் இல்லை. தலையிலேயே இடி விழுந்தாலும் எங்கே இடி விழுந்தது என்று எட்டிப் பார்க்கும் அற்புதமான பொருளாதார மேதை நமக்கு பிரதமராக வாய்த்திருக்கிறார். ஊழல்கறையே படியாதவர் என்ற பெயரை வேறு அவர் கட்டியுள்ள தலைப்பாகையோடு சேர்த்துக் கட்டி இருக்கிறார். இதையும் மீறி பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க. ஏதாவது குரல் எழுப்பினால் இருக்கவே இருக்கிறது மதவாதப் பூச்சாண்டி. காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு சேவகம் செய்யவே பிறப்பெடுத்த ஆங்கில தொலைக்காட்சி ஊடகங்கள் உள்ளவரை மன்மோகன் சிங்கத்திற்கு எந்தக் கவலையும் இல்லை.

ஆனால், இந்த நவம்பர் மாதம், மன்மோகன் நினைத்ததுபோல அவ்வளவு எளிதாக கடக்கவில்லை. அயோத்தி வழக்கில் வெளியான தீர்ப்பு சென்றமாதம் நாடு முழுவதும் ஏற்படுத்திய பரபரப்பை விழுங்கிவிட்டது இந்த நவம்பர் மாதம். எல்லாமே, மத்திய அமைச்சர் திருவாளர் 'தலித்' ராசாவின் உபயம். 2008ல் அவர் நடத்திய ஊழல் உறுத்துவந்து 2010ல் ஊட்டும் என்று அவர் மட்டும் கனவா கண்டார்? கண்ணுக்குத் தெரியாத அலைக்கற்றைகளை விருப்பம்போல விற்று ஏப்பம் விட்டது யாருக்கும் தெரியாது என்று இறுமாந்திருந்த ராசாவுக்கும் அவருக்கு துணைபோன ராணிக்கும் (இந்த ராணி, மத்திய அரசின் சூத்திரதாரியான சோனியாவையே குறிக்கிறது) இந்த நவம்பர் மாதம் கறுப்பு மாதமாக மாறியது அதிர்ச்சி அளித்திருக்கலாம். அதைவிட, நாட்டு மக்களுக்குத் தான் அதிர்ச்சி- அலைக்கற்றை ஏலத்தில் நடந்த ஊழலில் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பின் மதிப்பு ரூ. 17,60,00,00,00,000 (அதாவது ஒரு லட்சத்து 76 ஆயிரம் லட்சம் கோடி!) என்பது தெரியவந்து பேரதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள் மக்கள்!

அது எப்படி கண்ணுக்குத் தெரியாத அலைக்கற்றைகளில் ஊழல் செய்ய முடியும்? கேள்வி கேட்கும் புத்திசாலி பகுத்தறிவாளர்களுக்காக ஒரு விளக்கம்:

இப்போது உலகமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அலைபேசிகள் இயங்குவது வளிமண்டலத்திலுள்ள மின்காந்த அலைகளால்தான். அவற்றை கிரகித்துப் பகிரவே அலைபேசி கோபுரங்கள் எங்கு பார்க்கினும் தட்டுப்படுகின்றன. இந்த மின்காந்த அலைகள், விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள நமது செயற்கைக்கோள்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இவற்றை நிர்வகிப்பது மத்திய அரசின் தொலைதொடர்புத்துறை.

இந்த மின்காந்த அலைக்கற்றைகளை முறைப்படுத்துவதும் வர்த்தக ரீதியாக விநியோகிப்பதும் மத்திய அரசின் கடமை. இதில் மூன்று தலைமுறை அலைக்கற்றைகள் தற்போது புழக்கத்தில் உள்ளன. ஆரம்பகால கம்பிமுறை தொலைபேசிக்கு மாற்றாக முதலில் உருவானது முதல் தலைமுறை அலைக்கற்றைகள். (அதற்கு அவ்வாறு எந்தப் பெயரும் சூட்டப்படவில்லை. வாசகர்கள் குழப்பமின்றி தெரிந்துகொள்ளவே இந்த விளக்கம்). இந்த அலைக்கற்றைகளின் ஆதிக்கம் 2008 வரை நீடித்தது. உலக அளவில் ஏற்பட்ட தொலைதொடர்புப் புரட்சி தாமதமாக வந்தாலும் இந்தியா அதை சிக்கெனப் பிடித்துக் கொண்டது. 1998 முதல் 2009 வரையிலான இந்தக் காலகட்டத்தில்தான் அலைபேசிகளின் எண்ணிக்கை நாட்டில் பல மடங்கு அதிகரித்தது.

1998 காலகட்டம் தொலைபேசியின் இடத்தை அலைபேசிகள் வெற்றி கொள்ளாத காலகட்டம். 'பேஜர்' எனப்படும் சிறு கருவியே அதிசயமாகப் பார்க்கப்பட்ட காலம் அது. ஆரம்பத்தில் நமது நாட்டின் பெரும் தொழில் நிறுவனங்களே புதிய அலைக்கற்றைகளைப் பயன்படுத்துவதில் தயக்கம் காட்டின. அதன் விளைவாக 'முதலில் வருவோருக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில் அந்த அலைக்கற்றைகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. எனினும் இந்த விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய தொலைதொடர்பு ஆணையம் (டிராய்) செயல்பட்டது.

ஆனால், விரைவிலேயே நாடு முழுவதும் அலைபேசிகளின் ஆதிக்கம் பரவிவிட்டது. இந்தியாவில் தற்போதைய அலைபேசி பயனாளிகளின் எண்ணிக்கை 70 கோடி என்கிறது ஒரு புள்ளிவிபரம். பத்து ஆண்டுகளில் நம்ப முடியாத வளர்ச்சி பெற்றது இந்திய தொலைதொடர்புத் துறை. அதன் விளைவாக இரண்டாம் தலைமுறை அலைக்கற்றைகள் கொண்டுவரப்பட்டன. இதனை '2ஜி ஸ்பெக்ட்ரம்' என்று சுருக்கமாக அழைக்கிறார்கள். இந்த அலைக்கற்றைகள் 2008ல் தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டன. இதில்தான் முறைகேடு நிகழ்ந்ததாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தது தான் இந்த ஆண்டு வெளியான மூன்றான் தலைமுறை மின்காந்த அலைக்கற்றைகள் (3ஜி). இதன்மூலமாக அலைபேசி அல்லது தொலைபேசியில் பேசுபவரது முகத்தையும் பார்த்தபடி பேசலாம்.
இப்போது விஷயத்திற்கு வருவோம்... 2ஜி அலைக்கற்றை விநியோகத்தில் எப்படி மோசடி நடந்தது?

அப்போது மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சராக இருந்தவர் தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.ராசா. புதிதாக அறிமுகமாகும் மின்காந்த அலைக்கற்றைகள் வற்றாத சுரங்கம் என்பதைக் கண்டுகொண்ட ராசா, அவற்றை விற்பதில் (2008) தனக்கென ஒரு வட்டத்தை வரைந்துகொண்டு செயல்பட்டார். ஏற்கனவே சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோது அவருக்கு நெருக்கமான பல ரியல் எஸ்டேட் தரகர்கள் உதவியுடன், பினாமி பெயர்களில் உருவாக்கப்பட்ட நிறுவனங்களுக்கு வாரி வழங்கினார்.

இதில் நிலவும் முறைகேடுகள் குறித்து அப்போதே சலசலப்பு எழுந்தது. பகிரங்க ஏல முறையில் 2ஜி அலைக்கற்றைகளை விற்பனை செய்ய வேண்டும் என்ற தொலைதொடர்பு நிறுவனங்களின் கோரிக்கை அரசால் கண்டுகொள்ளப்படவில்லை. இதிலும் ஏலத்திற்கு மிகக் குறைந்த நாட்களே அவகாசம் வழங்கப்பட்டு, கேடு தேதிக்கு முன்னதாகவே அலைக்கற்றைகள் அவரச அவசரமாக விற்பனை செய்யப்பட்டன. இதனால், நாட்டின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு அவை கிடைக்காமல் போயின. தவிர, தொலைதொடர்புத் துறையில் எந்த அனுபவமும் இல்லாத 'லெட்டர்பேடு' நிறுவனங்களுக்கு எல்லா விதிமுறைகளையும் மீறி அலைக்கற்றைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இது குறித்து கேள்வி எழுந்த போதெல்லாம், தனக்கு முன் அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் (அவரும் தி.மு.க. தான்; தாத்தாவுடனான சண்டையால் பதவியிலிருந்து விலக்கப்பட்ட அதே இடத்தில் தான் ராசா அமைச்சராக நியமிக்கப்பட்டார்) கடைபிடித்த 'முதலில் வருவோருக்கு முன்னுரிமை' என்ற விதியின் அடிப்படையிலேயே அலைக்கற்றைகள் விற்கப்பட்டதாக ராசா கூறி வந்தார்.

ஆயினும், சில வடக்கத்திய ஊடகங்களில் வெளியான செய்திகள், 2ஜி அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீட்டில் ஊழல் நடந்துள்ளதை வெளிப்படுத்தின. அதன் பின்னணியில் முந்தைய அமைச்சர் தயாநிதி மாறன் இருப்பதாக அப்போது ராசா குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத் தக்கது. இந்நிலையில் ராசாவால் விற்கப்பட்ட அலைக்கற்றைகளை ஒரே மாதத்தில் வேறு நிறுவனங்களுக்கு பல மடங்கு அதிக விலைக்கு விற்று லாபம் பார்த்தன 'லேட்டேர்பேடு' பினாமி நிறுவனங்கள் (காண்க: பெட்டிச் செய்தி: 1).
அதன்மூலமாக, ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்திருப்பது உறுதியானது. இதனை முதன்முதலில் அம்பலப்படுத்தியது, பயனீர் நாளிதழ். அதன் நிருபர் கோபி கிருஷ்ணன் எழுதிய தொடர் புலனாய்வுக் கட்டுரைகள், ஸ்பெக்ட்ரம் ஊழலை அம்பலப்படுத்தின. தமிழகத்தில் தினமணி நாளிதழும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்சும், ராசாவின் முகத்திரையைக் கிழிப்பதில் முன்னணி வகித்தன.

மதுரை தினகரன் எரிப்பு, அரசு கேபிள் கழகம் ஆகிய அத்தியாயங்களைத் தொடர்ந்து, ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளியானவுடன், மாறன் சகோதரர்களுடன் திமுக. சமரசமானது. அப்போது ''குடும்பங்கள் இணைந்தன; இனி ஊழல் குற்றச்சாட்டுகள் மறையும்'' என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியது அனைவருக்கும் நினைவிருக்கும். அப்போதே ‘குடும்பங்கள் ஒன்றானால் எப்படி ஊழல் மறையும்?’ என்று புத்திசாலிப் பத்திரிகைகள் சில (கண்டிப்பாக தமிழக புலனாய்வுப் பத்திரிகைகள் அல்ல) கேள்வி எழுப்பின. அதாவது, ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசா மட்டுமே பெற்ற பயன் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பங்கிடப்பட்டுவிட்டதால், இனிமேல் மாறனின் தொந்தரவு இருக்காது என்பதுதான் கருணாநிதியின் அறிவிப்புக்கு விளக்கமாக இருக்க முடியும். அப்போது தான், ''முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி (1998- 2004) ஆட்சியில் கடைபிடிக்கப்பட்ட நெறிமுறைகளே ஸ்பெக்ட்ரம் விற்பனையிலும் கடைபிடிக்கப்பட்டன'' என்று தனது முந்தைய கருத்தில் சிறு மாற்றம் செய்து கொண்டார் ராசா.

அப்போதைய தொலைதொடர்புத் துறை அமைச்சரான அருண்ஷோரி, ராசாவின் தற்காப்பு உத்தியான ''முந்தைய அரசு கடைபிடித்த வழிமுறைகளையே தானும் கடைபிடித்தேன்'' என்ற கருத்தைக் கண்டித்திருக்கிறார். தே.ஜ.கூ. ஆட்சியில் டிராய் பரிந்துரையின்றி எந்த வர்த்தகமும் நடைபெறவில்லை என்று அவர் தெரிவித்திருக்கிறார். தவிர, 1998 - 2004 ல் விற்ற விலைக்கே 2008 லும் விற்க முடியாது என்ற சாமானிய அறிவும் கூட இல்லாது பேசும் ராசாவை எப்படி தெளியவைப்பது? பிரச்னை அவரிடம் உள்ள குழப்பமல்ல; செய்த தவறை மறைக்க அவர் போடும் நாடகம் தான்.

1998 - 2004 காலகட்டத்தில் அலைபேசி எண்ணிக்கை பெருகாத காலகட்டத்தில் இருந்த 'முதலில் வருவோருக்கு முன்னுரிமை' என்ற கோட்பாடு, போட்டி மிகுந்த தற்போதைய (2008) காலத்திற்கு எவ்வாறு ஏற்புடையதாகும் என்ற கேள்வியை சமத்காரமாக ராசா தவிர்த்து வந்தார். டிராய் பரிந்துரைகள், பிரதமர் அலுவலக அறிவுரைகள், தொலைதொடர்புத் துறை அமைச்சக அதிகாரிகளின் ஆலோசனைகளை மீறி, தன்னிச்சையான முறையில், 2 ஜி அலைக்கற்றைகளை மூடுமந்திரமான முறையில் பகிரங்க ஏலம் அல்லாது விற்பனை செய்துள்ளார் vராசா. இது குறித்த செய்திகள் வெளிவந்தவுடன் பா.ஜ.க, மற்றும் இடதுசாரி கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தன. ஆனால், ''பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தெரிந்துதான் அனைத்தும் நடந்துள்ளன'' என்று ராசா விளக்கம் அளித்தார். பிரதமரோ, ''ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை விற்பனையில் எந்தத் தவறும் நடக்கவில்லை என்று அந்தத் துறையின் அமைச்சர் ராசாவே கூறிவிட்டார்'' என்று மழுப்பினார். நல்ல பிரதமர்! நல்ல அமைச்சர்! இவரைத்தான் நமது பத்திரிகைகள் தூய்மையானவர் என்று புகழ்ந்து எழுதி மத்திய அரசு விளம்பரங்களைப் பெற்றுக் கொள்கின்றன!

உண்மையில், இந்த முறைகேட்டில் கிடைத்த லஞ்சப் பணம் (பல ஆயிரம் கோடிகள்) முறைப்படி, காங்கிரஸ் தலைமை, தி.மு.க. தலைமை, ராசா குழு மற்றும் சம்பந்தப்பட்ட இதர கூட்டணிக் கட்சிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுவிட்டதாகத் தகவல். கைநீட்டி காசு வாங்கிவிட்டவர்கள், ராசாவின் அமர்த்தலான பதிலை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்துதானே ஆகவேண்டும்?

இந்நிலையில்தான், 2009 நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வந்தது. ஸ்பெக்ட்ரம் ஊழல் தேர்தலில் முக்கிய பிரசார அம்சமானது. ஆயினும் அந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியே மீண்டும் வென்றது. அதையடுத்து மத்திய ஆட்சியில் தி.மு.க.வின். பிடி இறுகியது. தொலைதொடர்பு துறையில் நடந்துவிட்ட ஊழல்களை அடுத்து, ராசாவுக்கு மீண்டும் அதே துறையை ஒதுக்க பிரதமர் மன்மோகன் தயங்கினார். ஆயினும், தில்லிவரை போர்தொடுத்து கூட்டணி உரிமையை நிலைநாட்டிய கழகத் தலைவர் கருணாநிதி, மீண்டும் ராசாவுக்கே தொலைதொடர்புத் துறையைப் பெற்றுத் தந்தார். கைநீட்டி வாங்கிய காசுக்கு நன்றிக்கடன் காட்டித்தானே ஆகவேண்டும்? பிரதமர் மன்மோகன் சிங் நாணயஸ்தர். அவரது கட்சித் தலைவியோ கூட்டணிதர்மம் காக்கவே இத்தாலியிலிருந்து இறக்குமதி ஆனவர். ராசாவின் காட்டில் மீண்டும் மழை பொழியத் துவங்கியது.

இந்நிலையில் தான், மூன்றாம் தலைமுறை (3 ஜி) அலைக்கற்றைகள் மே மாதம் பகிரங்க ஏல முறையில் ஏலம் விடப்பட்டன. இதனையும் மூடுமந்திரமான முறையில் விற்க ராசா முற்பட்டதாகவும், பிரதமர் நேரடியாகத் தலையிட்டதால் பகிரங்க ஏலம் நடப்பதாகவும், ஆங்கில ஊடகங்கள் மன்மோகன் புகழ் பாடின. இதன் விளைவாக அரசுக்கு 67.7 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்தது. இத்தனைக்கும் 3 ஜி அலைக்கற்றைகளின் ஒருபகுதிக்கே இவ்வளவு லாபம்! உடனே மத்திய தணிக்கை ஆணையம் (சி.ஏ.ஜி)விழித்துக் கொண்டது. 2 ஜி அலைக்கற்றை விற்பனையில் நிகழ்ந்த நஷ்டத்தை சி.ஏ.ஜி கணக்கிட்டது. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளை வாங்கி குறுகிய காலத்தில் வேறு நபர்களுக்கு விற்றவர்களை அடிப்படையாகக் கொண்டு, அரசுக்கு தோராயமாக ஏற்பட்டுள்ள இழப்பை சி.ஏ.ஜி கணக்கிட்டது.
.
இம்மாதம் 10ம் தேதி, சி.ஏ.ஜி அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் கொடுக்கப்பட்ட தகவல் தான், ராசா மூலம் ஏற்பட்ட இழப்பை (ரூ. 17,60,00,00,00,000) நாட்டுக்கு விண்டுவைத்தது. ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் ஊழலால் நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பு குறித்து பல்வேறு தரப்பினரும் பலவகையாகக் கூறிவந்தபோதும், சி.ஏ.ஜி அறிக்கை, ஸ்பெக்ட்ரம் ஊழலின் மதிப்பை தெளிவாக வரையறுத்துள்ளது. தவிர அதன்மூலமாக பயன் பெற்றவர்கள் யார் என்பதையும் பட்டியலிட்டு, திருவாளர் புனிதரின் லட்சணத்தையும் தியாக நாயகி லட்சணத்தையும் பிட்டுப் பிட்டு வைத்துவிட்டது.

ஏற்கனவே காமன்வெல்த் விளையாட்டு ஊழல், ஆதர்ஷ் கட்டட ஒதுக்கீடு ஊழலால் கறைப்பட்ட மத்திய அரசுக்கு, ராசாவை நீக்குவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. கனத்த நெஞ்சத்தோடு, ராசாவை பதவி விலகுமாறு கோரினார் (கெஞ்சினார்) பிரதமர். ராசாவோ, பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்றார். தலித் என்பதால் ராசாவை குறி வைக்கிறார்கள் என்று ஏற்கனவே சொன்ன கருணாநிதி வழக்கம்போல, ஸ்பெக்ட்ரம் ஊழலே நடக்கவில்லை என்று சாதித்தார். சீடருக்கு ஏற்ற குரு! இந்நிலையில், ''தி.மு.க.வு.க்கு பயந்து ராசாவை அமைச்சராகத் தொடரச் செய்ய வேண்டாம்; ராசாவுக்காக தி.மு.க. ஆதரவை விலக்கினால், அ.தி.மு.க. ஆதரவளிக்கும்'' என்று சந்தில் சிந்து பாடினார் அதன் தலைவி ஜெயலலிதா.

இதற்கெல்லாம் மயங்குபவரா மன்மோகன்? அவருக்கு, உச்சநீதிமன்றம் (காண்க: பெட்டிச் செய்தி: 2) என்ன சொல்லப் போகிறதோ என்பதுதான் கவலை. அதைவிட, தானைத்தலைவி சோனியா அம்மையார் கண்ணசைவில் சதிராடும் பிரதமாரால் என்னதான் சிந்திக்க முடியும்? மத்தியப் புலனாய்வு அமைப்பின் (சி.பி.ஐ) விசாரணைக்கு உத்தரவிட்டு ராசாவைக் காப்பாற்றலாம் என்றால், அதற்குள், சுப்பிரமணியம் சாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துவிட்டார். உச்சநீதிமன்றம் ஏற்கனவே பிரதமர் மன்மோகனுக்கு காட்டமான அறிவுரையைக் கூறியுள்ள நிலையில், ராசா வேறு வழியின்றி, விருப்பமின்றி (கூட்டணி தர்மத்தைக் காப்பாற்றவும், நாடாளுமன்றத்தை முடக்கும் எதிர்க்கட்சிகளிடமிருந்து ஜனநாயகத்தைக் காக்கவும்!) பதவி விலகினார். காங்கிரஸ் நிம்மதிப் பெருமூச்சு விட்டது.

பிரதமருக்கு மேலும் பேரிடியாக, ஊழலில் தொடர்புடைய 6 நிறுவனங்களின் 69 உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறது டிராய். இந்நிலையில் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு (ஜே.பி.சி) விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி நாடாளுமன்றத்தை பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடக்கின. காங்கிரஸ் கட்சியோ, முரளி மனோகர் ஜோஷி (பா.ஜ.க) தலைமையிலான பொது கணக்குக் குழு விசாரித்த பிறகே ஜே.பி.சி. விசாரணைக்கு செல்ல முடியும் என்று சண்டித்தனம் செய்தது. ‘’தங்கள் தலைவர் மீது பா.ஜ.க.வுக்கு நம்பிக்கை இல்லையா?’’ என்று வேறு கேட்டார் நமது கலாகார். உண்மையில், பொது கணக்குக் குழு வரம்பிற்குள் வராத பல விஷயங்கள் குறித்தும் விசாரிக்க வேண்டி இருக்கிறது என்று முரளி மனோகர் ஜோஷியே கூறி இருக்கிறார். அதை காங்கிரஸ் வசதியாக மறந்துவிட்டது.

தவிர, ஆ.ராசா அமைச்சர் ஆனதன் பின்னணியில் அதிகாரத் தரகர் நீரா ராடியா உடன் ஊடக தரகர்கள் பர்கா தத் (என்.டி.டி.வி), வீர் சாங்க்வி (ஹிந்துஸ்தான் டைம்ஸ்) ஆகியோரும் சம்பந்தப்பட்டிருப்பது வெளிவந்துள்ளது. இவர்கள் இருவரும் பா.ஜ.க எதிரிகளாக தங்களை முன்னிறுத்திக் கொள்பவர்கள் என்பது குறிப்பிடவேண்டிய விஷயம். இவர்கள் தொலைபேசியில் நிகழ்த்திய உரையாடல் உச்சநீதிமன்றத்தில் சாமி தொடர்ந்த வழக்கில் முக்கிய சாட்சியாகி இருப்பது, பத்திரிகையாளர்கள் மீதான நம்பகத் தன்மையையும் கேள்விக் குறி ஆக்கியுள்ளது.

இத்தனைக்கும் பிறகும், காங்கிரஸ் எதுவுமே நடக்காதது போல நடிப்பது தான் வியப்பளிக்கிறது. நடிகர் வடிவேலுவின் 'இவன் ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்க'' நகைச்சுவைதான் நினைவில் வருகிறது. கட்சியின் இளவரசர் ராகுல், ''எனக்கு தெரிந்தவரை, ஸ்பெக்ட்ரம் விவகாரம் பிரதமருக்கு எந்த தர்மசங்கடமும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை'' என்று சான்றிதழ் அளித்திருக்கிறார். பிரதமரின் அமைச்சரவை சகா கபில் சிபலோ, ''பிரதமர் குற்றமற்றவர்'' என்கிறார். பிறகு ஏன் ராசா விவகாரத்தில் முடிவெடுக்காமல் 16 மாதம் காலம் தாழ்த்தினார் என்ற கேள்விக்கு மட்டும் சோனியா முதல் கார்த்தி சிதம்பரம் வரை யாரிடமும் பதிலில்லை.

இந்த நாடகம் என்ன ஆகும்? இந்த ஊழலால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பில் ராசா வகையறாவுக்கு கிடைத்து எத்தனை? கைமாறிய லஞ்சப் பணம் சென்றது எங்கே? இந்த நஷ்டத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை வருமா? குற்றவாளிகளைப் பாதுகாத்தவர்கள் (பிரதமர் உள்பட) மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமா? ஊழலில் பயன் பெற்ற நிறுவனங்கள் உரிமங்களை இழக்குமா? அவற்றிடம் டிராய் பரிந்துரைப்படி கூடுதல் தொகை வசூலிக்கப்படுமா?

ராசா உயிருக்கு உண்மையிலேயே சுப்பிரமணியம் சாமி சொல்வது போல ஆபத்து ஏற்பட்டுள்ளதா? ஸ்பெக்ட்ரம் ஊழலால் அரசு இழந்த 1.76 லட்சம் கோடியும் மீட்கப்பட்டு விடுமா? அப்படியே தொகை மீட்கப்பட்டாலும் இந்திய அரசுக்கு ஏற்பட்ட அவப்பெயர் மறைந்துபோகுமா?

இனிமேலும் 'தலித்' என்ற போர்வையில் ஊழல் செய்வதை நியாயப்படுத்தலாமா? கூட்டணியின் நிர்பந்தத்திற்காக ஊழல்களை கண்டும் காணாமல் இருக்கலாமா? அதிகாரத் தரகர்களாக மாறியுள்ள பத்திரிகையாளர்கள் மீதும் சட்டம் பாயுமா? எல்லாவற்றுக்கும் மேலாக, ஊழல் மலிந்த தற்போதைய 'மதச்சார்பற்ற' காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நாட்டில் தொடரத் தான் வேண்டுமா?

- கேள்விகள் தொடர்கின்றன.

இவற்றுக்கான பதில்கள் எங்கோ இல்லை; இந்த நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் வாக்காளராகிய மக்களிடம் தான் இவற்றுக்கான பதில்கள் கிடைக்கும். அவர்களிடம் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விலாவாரியாக விளக்க வேண்டியது நாட்டுநலனில் அக்கறை கொண்டோரின் கடமை. வெறும் ரூ. 64 கோடி போபர்ஸ் ஊழலுக்காக ராஜீவ் காந்தியை வீட்டுக்கு அனுப்பிய நாட்டுமக்களுக்கு, ரூ. 1.76 லட்சம் கோடி ஊழல் குறித்து (உலக அளவில் மாபெரும் ஊழல் என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம்!) உண்மை நிலையை சொல்ல வேண்டியது தேசபக்தர்களின் கடமை.

பெட்டிச் செய்தி - 1
யாருடைய பினாமிகள்?

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி 2007, அக். 1 என்று தொலைதொடர்புத் துறையால் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், திடீரென்று செப். 25ம் தேதியே கடைசி தேதி என்று எந்த முன்னறிவிப்பும் இன்றி விண்ணப்பங்கள் பெறுவது நிறுத்தப்பட்டது. பிறகு முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்று கூறி, முன்கூட்டியே திட்டமிட்ட 9 நிறுவனங்களுக்கு தலா ரூ. 1,650 கோடி விலையில் அலைக்கற்றைகள் விநியோகிக்கப்பட்டன. இதன்மூலமாக அரசுக்கு ரூ. 20 ஆயிரம் கோடி கூட கிடைக்கவில்லை. ஆனால், ஏலத்தில் பயன் பெற்ற சில நிறுவனங்கள் ஒருமாத காலத்திற்குள் தங்கள் பங்குகளை பல மடங்கு விலைக்கு விற்று லாபம் பார்த்தன.

ராசா மூலம் உரிமத்தை தரைக் கட்டணத்திற்கு வாங்கிய ஒன்பது நிறுவனங்களில் ஸ்வான், யுனிடெக் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு செல்போன் சேவையில் எந்த முன்னனுபவமும் கிடையாது. 13 மண்டலங்களுக்கான உரிமத்தை 1,537 கோடி ரூபாய்க்கு வாங்கிய ஸ்வான் நிறுவனம் அதை வெறுமனே கைமாற்றி ரூ. 4,200 கோடி கொள்ளை லாபம் சம்பாதித்துள்ளது. 22 மண்டலங்களை 1,658 கோடி ரூபாய்க்குப் பெற்ற யூனிடெக் நிறுவனம், தனது 60 சதவீதப் பங்குகளை 6,100 கோடி ரூபாய்க்கு விற்றிருக்கிறது.

தற்போது நடந்துவரும் விசாரணையில் மேலும் பல மர்ம முடிச்சுகள் அவிழ்கின்றன. உதாரணத்திற்கு ஒன்று...

‘ஸ்வான் டெலிகாம்’ என்ற பெயரில், 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு ஏலத்தில் பங்கேற்ற எடிசலாட் டிபி நிறுவனத்திற்கு தமிழகத்தில் நெருங்கிய தொடர்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. 2ஜி ஏலம் நடந்தபோது ஸ்வான் டெலிகாம் நிறுவனமும் அதில் பங்கேற்றது. இது அனில் அம்பானியின் பினாமி நிறுவனமாக முதலில் கருதப்பட்டது. ஆனால் தற்போது இதற்கு தமிழகத்தில் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. தவிர, தன்மீதான புகாரை அனில் அம்பானி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

தற்போது ‘எடிசலாட் டிபி’ என்று பெயர் மாற்றிக் கொண்டு செயல்படுகிறது ஸ்வான் டெலிகாம். சிஏஜி அறிக்கையில் ‘’ஸ்வான் நிறுவனத்திற்கு தேவையே இல்லாமல் அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது’’ என்று கூறப்பட்டுள்ளது. துபாயைச் சேர்ந்த இடிஏ ஸ்டார் நிறுவனத்திற்கும், ஸ்வான் டெலிகாமுக்கும் தொடர்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இடிஏ ஸ்டார் நிறுவனம் தமிழகத்தில் பல்வேறு வர்த்தக முதலீடுகளை மேற்கொண்டுள்ளது.2008, ஜனவரி மாதம் 2ஜி உரிமத்தைப் பெற்றது ஸ்வான் டெலிகாம். அடுத்த 9 மாதங்களில் துபாயைச் சேர்ந்த டெலிகாம் நிறுவனமான எடிசலாட், ஸ்வான் நிறுவனத்தின் 45 சதவீத பங்குகளை வாங்கி நிறுவனத்தின் பெயரை எடிசலாட் டிபி என்று மாற்றியது.

2008, செப். 17ம் தேதி சென்னையில் ‘ஜெனெக்ஸ் எக்ஸிம் வென்சர்ஸ்’ என்ற நிறுவனம் வெறும் ரூ. ஒரு லட்சம் மூலதனத்துடன் தொடங்கப்பட்டது. மூன்று மாதங்கள் கழித்து, டிச. 17ம் தேதி, இந்த ஜெனெக்ஸ் நிறுவனம், எடிசலாட் நிறுவனத்தின் ரூ. 300 கோடி மதிப்புள்ள பங்குளை வாங்கியுள்ளது. வெறும் ரூ. ஒரு லட்சம் மூலதனத்தை மட்டு்மே கொண்டிருந்த ஜெனெக்ஸ் நிறுவனத்திற்கு எப்படி திடீரென ரூ. 300 கோடி அளவுக்கு வசதி வந்தது என்பது குறித்துத் தெரியவில்லை.ஜெனெக்ஸ் எக்ஸிம் நிறுவனத்தின் சார்பில் எடிசலாட் டிபி நிறுவன இயக்குனர் குழுவைச் சேர்ந்தவர் அகமது சையத் சலாஹுதீன். இவர் துபாயைச் சேர்ந்த இடிஏ ஸ்டார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருடைய மகன் ஆவார். இடிஏ ஸ்டார் குழுமம் தி.மு.க.வுக்கு மிகவும் நெருக்கமானதாகக் கருதப்படுகிறது. தமிழகத்தில் பல அரசு திட்டங்களில் இந்நிறுவனம் தொடர்பு கொண்டுள்ளது. இதுகுறித்து ஏற்கனவே அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

தற்போது எடிசலாட் நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்ட 2ஜி உரிமத்தை ரத்து செய்ய மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஸ்வான் டெலிகாம் யாருடைய பினாமியாக செயல்பட்டது என்பது தான் இப்போதைய பலகோடி ரூபாய் கேள்வி. இது குறித்து விசாரிக்க சி.பி.ஐ. விரைவில் நியமிக்கப்படலாம். அப்போதுதானே மூடி மறைக்க முடியும்?


பெட்டிச்செய்தி - 2

எல்லாப் புகழும் சாமிக்கே!

அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் புகார் தொடர்பாக தொலைதொடர்புத் துறை அமைச்சராக இருந்த ராசா மீது வழக்கு தொடர அனுமதி உண்டா, இல்லையா என்பதை முடிவு செய்வதில் பிரதமர் மன்மோகன் மிகவும் காலதாமதம் செய்துவிட்டதாக உச்ச நீதிமன்றம் கண்டித்தது (நவ. 16) அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், ஜனதா கட்சி தலைவருமான சுப்பிரமணியசாமி தாக்கல் செய்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோர், 'மிஸ்டர் கிளீன்' மன்மோகன் சிங்கை கேட்ட கேள்விகள், மிகவும் கூர்மையானவை. ஆனால், மன்மோகன் சிங் எதுவுமே நடக்காதது போல நடமாடுகிறார். மத்திய அரசின் வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியமோ, பிரதமரை உச்சநீதி மன்றம் ஏதும் விமர்சிக்கவில்லை என்று முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்கிறார்.

''தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு இரண்டாம் தலைமுறை மின்காந்த அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீடு செய்யப்பட்டதில், அமைச்சர் ராசாவின் தன்னிச்சையான செயல்பாட்டால், அரசுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே தொலைதொடர்புத்துறை அமைச்சர் ராசா மீது வழக்கு தொடர அனுமதி அளிக்க வேண்டும்'' என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி புகார் மனு அளித்திருந்தார். இந்த மனு 2008, நவ. 29-ம் தேதி அளிக்கப்பட்டது. இந்த மனுவுக்கு இந்த ஆண்டு மார்ச் 19-ம் தேதி தான் பிரதமர் அலுவலகத்தில் இருந்து பதில் அனுப்பப்பட்டது. இந்தப் பதில் கடிதத்தில் ''விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ராசா மீது வழக்கு தொடர அனுமதி அளிக்கப்படாததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் சுப்பிரமணியசாமி. சாமியின் வழக்கு கடந்த நவ. 16ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போதுதான், ஆ. ராசா மீது வழக்கு தொடர அனுமதி உண்டா, இல்லையா என்பதை முடிவு செய்வதில் பிரதமர் மன்மோகன் சிங் மிகவும் காலதாமதம் செய்துவிட்டதாகக் கூறி நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.
.
''வழக்கு தொடர அனுமதிப்பதா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய நல்ல அரசுக்கு மூன்று மாதங்கள் போதுமானது. அமைச்சர் மீது வழக்கு தொடர அனுமதி அளிப்பதற்கான காலவரையறையை (ஏற்கனவே விநீத் நாராயணன் என்பவர் தொடர்ந்த வழக்கில்) உச்ச நீதிமன்றம் வகுத்துள்ளது. தேவைப்பட்டால் இது தொடர்பாக அரசு தலைமை வழக்கறிஞரை ஆலோசித்து முடிவு எடுத்திருக்கலாம். ஆனால் அலைக்கற்றை ஊழல் புகாரில் அரசு 16 மாதங்களுக்கு மேலாக பதில் அளிக்காமல் இருந்துள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது மிகவும் வருத்தத்துக்கு உரியது'' என்ற நீதிபதிகள், ''அலைக்கற்றை ஊழல் தொடர்பாக பிரதமருக்கு எதிராக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அரசு தரப்பு நவ. 20 க்குள் பதிலளிக்க வேண்டும்'' என்றும் உத்தரவிட்டனர்.

சுப்பிரமணியசாமி பிரதமருக்கு அனுப்பிய மனுவில், அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு தொடர்புள்ள `ஸ்வான் டெலிகாம்' நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில் நடந்த முறைகேடு பற்றி குறிப்பிட்டு இருந்தார். ரிலையன்ஸ் குழும நிறுவனத்துக்கு, `ஆர் காம்' மற்றும் `ஸ்வான்' என்ற பெயர்களில் இரு முறை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழங்கப்பட்டு இருப்பதாகவும், ஒதுக்கீடு வழங்கப்பட்ட பின் அவற்றின் பங்குகள் மொரிஷியஸ் நிறுவனம் ஒன்றுக்கு மிக குறைந்த விலையில் விற்கப்பட்டு இருப்பதாகவும் அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.

இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் காட்டும் தீவிரத்தைப் பார்த்தால், கூடிய விரைவில் மத்திய ஊழல் அரசுக்கு மேலும் பல சங்கடங்கள் காத்திருக்கின்றன என்பது தெளிவாகவே தெரிகிறது. உண்மையில், மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் பதவியில் இருந்து ஆ.ராசா அவசர அவரசமாக விலகியதே, சாமி தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தால் அரசுக்கு கேவலமான நிலை ஏற்படும் என்பதால் தான். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தைவிட, மத்திய அரசு அதிகம் பயப்படுவது, சாமி தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் அடுத்து என்ன கேள்வி கேட்டுத் தொலைக்கப் போகிறார்களோ என்பது தான்.

-------------------------------------
நன்றி: விஜயபாரதம் (03.12.2010)
.

1 கருத்து: