பாட்டனாரின் பிணம்
முற்றத்தில் கிடக்கிறது.
கல்லறைக்கா?
சுடுகாட்டுக்கா?
சச்சரவில்
அரைநாள் ஓடிவிட்டது.
மதுரைவீரன் கோயில்
பூசாரியாக இருந்த
மாடசாமி தாத்தாவை
சுடுகாடு கொண்டுசெல்ல
உறவினர்கள் விருப்பம்.
செல்லமுத்துவாக இருந்த
சின்னமகன்
செபாஸ்டியான் தான்
தடுதல்.
'கல்லறைத் தோட்டத்தில்தான்
புதைக்கணுமாம் '
நோட்டம் விடுகிறார் -
பக்கத்தில் நிற்கும்
வெள்ளை அங்கிக்காரர்.
***
ஊர்ப்பெரியவரின்
இறுதி யாத்திரை
நடுவழியில் நிற்கிறது.
'அந்த வழியில் போகக் கூடாதாம்'
சாயபுமார்கள் தடுப்பதாக
போலீஸ் சொன்னது.
பள்ளிவாசல் கட்ட
அனுமதி கேட்ட
முத்தப்ப சாயபுவுக்கு
புறம்போக்கு நிலத்தை
தூக்கிக் கொடுத்த
அதே ஊர்ப் பெரியவர்.
பாடை தூக்கியவர்கள்
பரிதவிக்கிறார்கள்.
.
.
பாலபருவம் முதல்
ஓடி விளையாடிய தெருவில்
'பயணம்' போகும்
பாக்கியம் இல்லையா?
பேரன் பழனியப்பன்
விம்முகிறான்.
பாடை காத்திருக்கிறது.
***
''மதமாற்றத் தடைச் சட்டம்
மனிதாபிமானமற்றது''
முழங்கிக் கொண்டிருக்கிறார்
மதச்சார்பின்மையை
குத்தகைக்கு எடுத்த
அரசியல் தலைவர் ஒருவர்.
அங்கே-
ஊர்ப்பெரியவரின் பாடை
நடுவழியில் நிற்கிறது.
பாட்டனாரின் பிணம்
முற்றத்தில் கிடக்கிறது....
--------------------------
- விஜயபாரதம் (22.11.2002)
..

அருமையான கவிதை நெத்தியடி வரிகள்
பதிலளிநீக்கு